m11

m11

மகிழம்பூ மனம்

மனம்-11

கண்களை மூடிப்படுத்திருந்தவன், அறைக்கதவு திறக்கும் சத்தத்தில் கண்திறந்தான்.

குண்டக்க, மண்டக்க கீழே விழுந்ததில், ஒருபக்க தோள்பட்டை மூட்டு விலகியிருக்க, அதை பழையபடி சரி செய்து,  கட்டுப் போட்டிருந்தனர்.

தாய் அல்லது தந்தையை அங்கு எதிர்பார்த்தவன், கண்டதோ, மனதின் கோபம், துன்பம், அத்துனையும் வதனத்தில் வந்து வாகாகக் குடியேறியிருக்க, உக்கிரமாக  வந்த யாழினியைத்தான். அவளை, அங்கு நிச்சயமாக அவன் எதிர்பார்க்கவில்லை. 

யாழினியின் உடல்மொழி இயல்பாக இல்லாததைக் கண்டு கொண்டவன், படுக்கையில் இருந்து எழ சிரமமாக இருந்தாலும், ஒருவழியாக சமாளித்து, எழுந்து அமர்ந்தான்.

வந்தவள், கையில் எடுத்து வந்திருந்த உணவுக் கூடையை அங்கியிருந்த டேபிளின் மீது வைத்தாள். 

பார்வையை அறைக்குள் உலாவ விட்டவளைப் பார்த்தவன், “ஏம்மா! இந்த வெயில்ல நீ எதுக்கு அலையிற? தம்பிகிட்ட சாப்பாடைக் குடுத்து விட்டுருக்கலாம்ல!”, என மிகவும் நலிந்த குரலில், முதன்முறையாக யாழினியிடம் நீண்டதொரு வார்த்தைகளைப் பேசியிருந்தான்.

அமைதியான அந்த அறையில், மிகத் துல்லியமாகக் கேட்ட, தேவாவின் வார்த்தைகளைச் செவியுற்றவள், ‘நீயா பேசியது’, எனத் தோன்றியதை விலக்கியவள், ‘தொம்பி சரியான லூசனா இருக்கிறதால, தொம்பி பொண்டாட்டி வந்திருக்கேன்’, என வாய் வரை வந்த வார்த்தையை, தனக்குள் தண்ணீர் இல்லாமலேயே விழுங்கியள், “வெளியே எங்கயோ போனவரு திரும்பிவர இன்னும் நேரமாகும்னு சொன்னதால, நானே எடுத்துட்டு வந்துட்டேன்”, என கணவனை, அங்கு விட்டுக்கொடுக்க இயலாத தன்மனத்தால், பொய்யுரைத்திருந்தாள் பெண்.

பிள்ளைகளுக்கு முன்புகூட தன், மனக் கசப்புகளையோ, விவாதங்களையோ, ஊடலையோ, கணவனிடம் இதுவரை வைத்துக் கொள்ளாதவள்.

மாமி, மாமனார், பிள்ளைகள் இல்லாத நேரங்களில், சண்டையாகட்டும், சமாதானமாகட்டும், ஊடலாகட்டும், கூடாலாகட்டும், அங்கு களைகட்டும் அளவிற்கு நடந்தேறும்.

இதுவரை அந்த கொள்கைகளைக் கடைப்பிடித்து வந்ததால், கணவனின் செயல்களை எங்கும், யாரிடமும், விமர்சிக்க அவளுக்குப் பிரியமில்லை.

தனது தாயை அங்கு காணாததால், யாழினியின் கண்கள் அவரைத் தேடுவதை உணர்ந்த தேவா, “அம்மா, ரிப்போர்ட்ஸ் வாங்க போயிருக்காங்க! கொஞ்ச நேரம் நீ அந்தச் சேருல உக்காரும்மா!  அம்மா வந்தவுடனே நாங்க ரெண்டு பேரும் சேந்து சாப்பிடறோம்”, என்றான்.

“ம்…”, என்றவள் அதற்குமேல் பேச ஒன்றுமில்லை எனும்படியாக, அமைதியாக அங்கிருந்த நாற்காலியில் போய் அமர்ந்து கொண்டாள்.

அமர்ந்த சற்றுநேரத்தில், அறையின் அமைதியால், பேசாதவன் பேசிய ஆச்சர்யத்தால், கொதித்தபடியே வந்த மனமும், சற்றே ஆசுவாசமடைந்திருந்தது.

அறைக்குள் வந்த சற்று நேரத்தில், ‘என்ன இந்த அத்தையை இன்னும் காணோம்’, என எண்ணியவளாய், இருமுறை அறைவாசலில் நின்று, வராண்டாவின் இருபுறத்திலும் நோட்டமிட்டவள், நாற்காலியில் மீண்டும் வந்து அமர்ந்திருந்தாள்.

ஒற்றைக் கையில் ஏதோ நாளிதழை எடுத்து, மடியில் வைத்து, அதில் தன்னை மூழ்கடித்துக் கொண்டவனைப் பார்த்தவள், தன்னை சற்று நிதானப்படுத்திக் கொண்டு, நினைத்ததை தேவாவிடம் கேட்கத் துவங்கினாள்.

“உங்களைத்தான்… உங்களுக்கு உடம்பில என்ன பிராப்ளம்?”, என்ற யாழினியின் கேள்வியில்

யாழினியை நிமிர்ந்து பார்த்து, வறட்டுச் சிரிப்பை இதழில் கொண்டு வந்தவன், “அது… இப்போ எதுக்கும்மா?”, என்ற தேவாவின் நயமான குரலில் ‘உன் எல்லையைத் தாண்டி, என்னைப் பற்றிய அறிந்து கொள்ள விழையாதே’, எனும் செய்தியை உணர்ந்தாலும், அத்தோடு விட்டுவிடும் எண்ணமில்லை யாழினிக்கு.

“இவ்வளவு நாள் கழிச்சி வந்திருக்கீங்க!”, என ஒரு நொடி தயங்கியள்

தேவா எதுவும் கூறாமல் இருக்கவே, “இப்ப இங்க நீங்க திரும்பி வந்ததில், எதாவது உள்நோக்கம் இருக்கா உங்களுக்கு?”, என்று நேரடியாகவே கேட்டிருந்தாள்.

சற்று நேரம் அமைதியாகவே இருந்தவன், செருமிக்கொண்டு பேசத் துவங்கினான், “என் குடும்பத்தை, நான் சாகறதுக்குள்ள ஒரு முறை பாக்கணும்னு ஆசையா இருந்தது… அதான் வந்தேன்..!”, என்று தேவா கூறி முடித்தவுடன்,

இந்தப் பதிலை எதிர்பாராதவள், ‘அதென்ன தத்துபித்துன்னு’ என மனம் சாடியதை, அவனிடம் பேச முடியாமல், “சாகறதுக்கு, அதுக்குள்ள என்ன அவசரம் உங்களுக்கு?”, சட்டென்று அவளையும் மீறிக் கேட்டிருந்தாள்.

“எனக்கு அவசரமில்லை.  அதுக்குத்தான் அவசரம்”, என்றவனைப் புரியாத பார்வை பார்த்தவளிடம்

“முடிஞ்சு போனதைப் பத்தி பேசி, இனி எதுவும் ஆகப்போறது இல்லை, நேரத்தை எதுக்கு வீணடிச்சுட்டு!”, என்ற விட்டேற்றியான பதிலைக் கேட்டவள்,

“அத்தைக்கு இதைப் பற்றித் தெரியுமா?” 

“தெரியாது! இப்போதான், எனக்கு உடம்புக்கு என்னனு, டாக்டர்கிட்ட கேக்க போயிருக்காங்க!”

“அப்ப உங்களுக்கு மட்டும் இப்ப யாரு சொன்னா?”

“நான் தங்கியிருந்த இடத்திலயே செக் பண்ணித் தெரிஞ்சுட்டதுதான்!”, எந்தச் சலனமும் மனதில் இன்றிக் கூறினான்.

“எப்டி இப்டி ஆச்சு?”, என்று தயக்கமாகக் கேட்டவளிடம்

“எல்லாம் என் கேர்லெஸ்னாலே வந்தது.  என்னைய நான் கேர் பண்ணாம இருந்ததால, இப்டி ஆகிருச்சு!”, என்று முடித்துவிட்டான்.

“அதையேதான், நான் கேக்கும் போதெல்லாம் சொல்லுறான்மா!  நானும் வந்த நாளுல இருந்து தலைகீழா நின்னு கேட்டுப் பாத்துட்டேன்.  வாயத் துறக்க மாட்டிங்கறான்!”, என்றபடியே கையில் கவருடன் வந்த அம்பிகா பேசியபடி வந்து அமரவும்,

“வாங்கத்தை!”, என்றவள், அமர்ந்திருந்த நாற்காலியை விட்டு எழுந்து, “நேரமாச்சு அத்தை, சாப்பிடுங்க முதல்ல”, என்றபடியே, எடுத்து வந்திருந்த உணவை, உண்ண எடுத்து வந்து கொடுத்தாள் யாழினி.

அம்மாவும், மகனும் உண்டு முடிக்கும் வரை, மாமியார் வாங்கி வந்திருந்த கவருக்குள் இருந்த எக்ஸ்ரேஸ்ஸை எடுத்துப் பார்த்துவிட்டு, அதுபற்றி அவளுக்கு பெரிய அளவில் ஞானம் இல்லாததால், ‘ஒன்னியும் புரியல.  டாக்டரு டாக்கும்போது, கேட்டு தெரிஞ்சிப்போம்’, என எண்ணியவள், அதே கவருக்குள் அதை வைத்திருந்தாள்.

“ஏம்மா, ஆக்குனதை எல்லாம் இங்க எடுத்துட்டு வந்திட்டியா?”, என்ற மாமியாரின் கேள்வியில்,

மாமனாரின் நினைவு வந்தவளாக, “மாமா, எங்க அத்தை போயிருக்காங்க?  நான் இங்க வந்திருக்காங்கனு நினைச்சு, அவங்களுக்கும் சேத்து எடுத்துட்டு வந்தேன்”, என்று யாழினி கூறினாள்.

“காலையில இங்க வந்து பாத்துட்டு, உடனே கிராமத்துக்கு போயிட்டு வரேன்னு கிளம்பிட்டாரும்மா!”, என்றார் அம்பிகா.

“நீ சாப்பிட்டியா? புள்ளைக என்ன செய்யுதுக?”, என்று கேட்க

“நான் வீட்ல போயி சாப்பிட்டுக்குவேன் அத்தை.  அதுகளுக்கு என்ன?  சம்மர் ஹாலிடேஸ்னால நாள் முழுக்க விளையாட்டு, டிவின்னு ஜாலியா பொழுது போகுது!”, என்று கூறினாள்.

“ஏம்மா!

இங்க என்ன அவசரம்!

நீ சாப்டுட்டே, இங்க சாப்பட்டை மெதுவா எடுத்துட்டு வந்திருக்கலாம்!

இல்லைனா, எங்ககூடவே சேந்து சாப்பிட்டுருக்கலாம்!

இதுல இருக்கிற சாப்பாட்டைனா சாப்பிடுவேன்”, என்று அம்பிகா வருத்தமாகக் கூற

“எனக்கு வீட்டில இருந்து கிளம்பும்போது பசியில்லத்தை, அதான் வந்துட்டேன்”, என்று யாழினி கூறியவள், “இன்னும் பசிக்கலை அத்தை”, என உணவை மறுத்திருந்தாள்.

“நல்ல புள்ளைம்மா, நீ கௌம்பு, நான் இங்க பாத்துக்கறேன்”, என்று அம்பிகா கூறியதைக் கேட்காமல்

உண்ட பாத்திரங்களை கழுவி எடுத்து வைத்தவள், கிளம்ப எத்தனிக்க, அதேநேரம் அம்பிகாவும் உடன் கிளம்ப,

“எங்கத்தை இப்ப போகணும்?, என்று கேட்டாள்.

“கொஞ்ச நேரங்கழிச்சு வந்து, MRI ரிப்போர்ட் எல்லாம் வாங்கிக்க சொன்னாங்க.  அதை வாங்கிட்டுப் போயி டாக்டரைப் பாத்துட்டு வரணும்.  நீ கிளம்பு”, என உண்ணாமல் இருந்த மருமகளை அங்கிருந்து விரட்டுவதிலேயே குறியாக இருந்தார் அம்பிகா.

“அத்தை, இப்பதானே சாப்டீங்க, நீங்க கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க, நான் போயி ரிப்போர்ட் வாங்கிட்டு வந்து, ரெண்டு பேருமா டாக்டர்கிட்ட போயி என்னனு கேக்கலாம்”, யாழினி பிடிவாதமாகக் கூறினாள்.

அம்பிகா எவ்வளவோ மறுத்தும் யாழினி கேட்கவில்லை.

நினைத்ததுபோலவே அனைத்தையும், வாங்கிக் கொண்டு, மருத்துவரின் அறையில், மாமியாருடன் சென்று நின்றிருந்தாள், யாழினி.

கைமூட்டு சரியாகற வரை, வயிட் எதுவும் தூக்காம இருக்கணும்.

அதுதவிர, நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத தேவாவின் உடம்பில், தண்டுவடத்தை (ட்டிபி) காசநோய் தாக்கியிருப்பதால், நோய் முற்றிய நிலையில் தேவா தற்போது இருப்பதாகவும், டாட்ஸ்(DOTS) சிகிச்சையை தவறாமல் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாவது பின்பற்ற வேண்டும் எனவும், அந்த வீரியமான மாத்திரைகளை உட்கொள்வதால், சத்தான ஆகாரங்களைத் தந்து, கவனித்தால், நூற்றில் நாற்பது சதவீதம் உயிரைக் காப்பற்றலாம் எனவும், மருத்துவர் கூறியிருந்தார்.

மேலும், லோ பீபியும் தேவாவிற்கு இருப்பதால், அன்று மயங்கி விழுந்திருப்பதாகவும், கூறினார்.

“நாப்பது வயசு கூட எம்புள்ளைக்கு இன்னும் ஆகலையே டாக்டர்? இம்பூட்டு வியாதி சொல்றீங்க? எங்க குடும்பத்துல யாருக்கும் இந்த வியாதி இல்லையே?”, என அம்பிகா புலம்ப,

“வயசு பாத்து எல்லாம் இந்த வியாதி வராதும்மா.  நோய் எதிர்ப்பு சக்தியில்லாத, சோம்பலான பழக்க வழக்கம் இருக்கறவங்களுக்கு, காசநோய் தொற்று பெரும்பாலும் வர வாய்ப்பு இருக்கு,  இது பரம்பரை வியாதி கிடையாதும்மா.  லோ பீப்பியும், வேளைக்கு உடம்புக்கு தேவையான ஆகாராம் எடுக்காம இருக்கிறதால, சுகர் அளவு இரத்தத்தில குறைஞ்சுரும்.  அதோட போதிய நீரையும், அருந்தாம இருந்தா,  வரதுக்கு அதிக வாய்ப்பிருக்கு”, மருத்துவர்

“இவங்களுக்கு இருமல் அந்த மாதிரி எந்த சிம்டம்சும் இல்லையே?  இது ஏர்ல பரவும்னு சொல்லுவாங்களே டாக்டர், அப்ப ஒரே வீட்டில இருக்கிற வயசானவங்க, குழந்தைகளுக்கு பரவ அதிக வாய்ப்பு இருக்கில்ல?”, என்று யாழினி கேட்க

“ஆஃப்கோர்ஸ், வாய்மூடாமல் தும்மினாலோ அல்லது இருமினாலோ காசநோய் ஏற்படுத்தும் கிருமிகள் காற்றில் வெளிப்படும். இப்படி பாதிக்கப்பட்ட காற்றை சுவாசிக்கும் யாரை வேண்டுமானாலும் பாதிக்கும்.

 ஒருவரின் உடலில் சென்ற காச நோய் கிருமி காசநோயை ஏற்படுத்தாது. உடலில் செயல் இழந்த காசநோய் கிருமி உள்ளோர் உடனே நோய்வாய்படுவதில்லை.

அவர்களுக்கு காசநோய்க்கான அறிகுறிகள் எதுவும் இருக்காது. மேலும், நோய் எதிர்ப்பு சக்தி குறையும் பொழுது செயலிழந்து இருக்கும், காசநோய் கிருமிகள் செயல்படத் தொடங்கிவிடும்.

அப்டி வீட்டுல இருக்கிறவங்களுக்கு தொடர்ச்சியா மூனு வாரத்திற்கு மேல இருமல் வந்தா, கண்டிப்பாக ஸ்பூட்டம் டெஸ்ட் பண்ணனும்.

மெடிசன் ஸ்கிப் பண்ணாம இருந்தா மட்டுமே, அவர் இம்புரூவ் ஆக ஹோப் இருக்கு”, என்று கூறினார் மருத்துவர்.

“உயிருக்கு இதுனால எந்த பாதிப்பும் இல்லைல டாக்டர்?”, அம்பிகா.

“ட்ரீட்மெண்ட் கோஆப்ரேட் பண்ணா ஃபார்ட்டி பெர்சன்ட், அவரை படிப்படியா குணமாக்கலாம்.  இதுக்கு முன்ன ரெண்டு முறை மெடிசின் ஸ்டார்ட் பண்ணி, கொஞ்ச நாள்ல ஸ்கிப் பண்ணதாலதான், இந்தளவு ஹெல்த் மோசமாகியிருக்கார்.

இனியும் அதே மாதிரி செய்தா, நிச்சயமா எங்களால எதுவும் சொல்லமுடியாது” என்று கூறி அனுப்பியிருந்தார் மருத்துவர்.

———————-

அத்தோடு, தனது மாமியாரிடம் விடைபெற்றவள், “ரிப்போர்ட் பத்தியெல்லாம் அவங்ககிட்ட எதுவும் இப்ப சொல்லிக்காதிங்க அத்தை, பாத்துக்கங்க, இப்ப நான் கிளம்பறேன்”, என்று வீட்டிற்கு திரும்பியிருந்தாள்.

அடுத்து வந்த இருநாட்களும் மாமனாரே மருத்துவமனைக்கு உணவை எடுத்துச் சென்றிருந்தார்.

நான்கு நாட்களுக்குப்பின், மீண்டும் மருத்துவமனைக்கு உணவெடுத்து வந்தவளைக் கண்ட தேவா,

“அன்னிக்கே சொன்னேன்ல!”, என கோபமாக கேட்க,

“…”, யாழினி.

“ஒரு வேளை சாப்டாம இருந்தா என்னாகிரும்?, இல்லைனா, இங்க பக்கத்துல எதாவது வாங்கி சாப்பிட்டுக்கப் போறோம். 

எதுக்கு நீ இங்க வர?”, என்று சற்று கோபமாகவே பேசியிருந்தான்.

தேவாவின் திடீர் கோபத்தைக் கண்ட, அம்பிகா எதுவும் பேசாமல், இருவரையும் மாறி மாறிப் பார்த்தபடியே, ‘என்னடா இவன் இப்டி திடீர்னு துர்வாசர் கணக்கா ஆரம்பிக்கறான்’, என எண்ணியவாறே, எதுவும் பேசாமல் இருந்தார்.

தேவாவின் வார்த்தைகளைக் கேட்டு கோபம் வந்தாலும், அதைக் காட்டிக்கொள்ளாமல், தனது மாமியாரைப் பார்த்தபடியே, உணவுக் கூடையை அவரருகில் கொண்டு வந்து வைத்தவள்,

“அத்தை, மாமா கிராமத்துல வரச் சொன்னாங்கனு அவசரமா கிளம்பிட்டாங்க. அபி அப்பா இன்னும் வரக் காணோம்”, என்று தான் வந்ததற்கான காரணத்தை மாமியிடம் விளக்கினாள் பெண்.

யாழினியின் நடவடிக்கையை கவனித்தபடியே அமர்ந்திருந்த தேவா,

“நான் வந்ததுல, உங்களுக்கு இடையில ஏதோ சரியில்லைனு, எனக்கு தோணினதாலதான், இதைச் சொல்றேன்.  நீ தப்பா எடுத்துக்க கூடாது!”, என்று பீடிகையுடன் பேச ஆரம்பித்தவனை,

ஆச்சர்யமாகத் திரும்பி நோக்கியவள், ‘ம்.. உங்களுக்கே விசயம் தெரிய வந்திருச்சா…? இல்ல, கண்ணை மூடிட்டே வீட்டுல இருந்தீங்களேனு, ஒரு டவுட்டுதான், வேற ஒன்னுமில்ல!’, என நினைத்தாள். 

மேலும், ‘சரியான முரட்டு ஊமைன்னு நினைச்சிட்டு இருந்த மனுசன், இப்பல்லாம் பட்டிமன்ற ராசா கணக்கா பாயிண்ட், பாயிண்டா பேசுறாரு!

கண்ணு மூடிக் கிடந்தவருக்கு, முக்காலமும் தெரியுதோ என்னவோ!

துரை முறைச்சதைப் பத்தி எல்லாம் டிப் ஆஃப் த ஃபிங்கரு அப்டேட்டடா வச்சிருக்குறாரு போலவே!

…ம்ஹூம்’, என மனதில் தோன்ற,

‘என்ன?’ என்பதுபோல தேவாவைப் பார்த்தாள் யாழினி.

“நீ சமைச்சதுல நாலு வாயி, நான் சாப்பிடறதே எனக்குப் பாவம், இதுல எனக்காக இவ்வளவு தூரம் சாப்பாடெல்லாம் எடுத்துட்டு வந்தா, என் பாவக் கணக்கு இன்னும் கூடத்தான் செய்யும்!”, தேவா

‘என்னது?’

‘நான் சமைச்சத சாப்டா பாவமா?’

‘பாவத்துக்கு தனி அக்கௌண்ட் எல்லாமா இருக்கு?  பள்ளிக்கூடத்துல ஒரு வாத்திகூட எனக்குச் சொல்லிக் குடுக்கலையே!’, என நினைத்தவள்,

“இப்போ என்ன சொல்ல வரீங்க?”, என்று கடினக்குரலில் கேட்டிருந்தாள்.

யாழினியும் சற்று குரலை உயர்த்த, அம்பிகா மனதில் பதறத் துவங்கியிருந்தார்.

யாழினியின் குரலில் அவளின் கோபத்தை உணர்ந்தவன், “சொல்லுறேன்!”, என்றவன்,

“உன்னய நிர்க்கதியா அம்போன்னு விட்டுட்டு… சுயநலமா என் சந்தோசம் மட்டுமே பெருசுன்னு, யாரோட கஷ்டத்தையும் புரிஞ்சிக்காம, எனக்கென்னனு ஓடுனவன் நான்!”, தேவா

‘எம்புள்ளை காலங்கடந்து திருந்திட்டான்’, என மனதில் எண்ணியபடியே

“இப்போ எதுக்கு முடிஞ்சு போனதெல்லாம் தேவையில்லாம பேசிக்கிட்டு, விடு தேவா”, என்று அம்பிகா அவசரமாக இடைவெட்டிக் கூற

‘ம்.. அதுக்கு?’, என யாழினி மனம் கேட்க, கண்கள் தேவாவைப் பார்த்திருந்தது.

“தயவா, வேண்டிக்கூட, உங்கிட்ட எதையும் கேட்க, எனக்கு, எந்த உரிமையும் இல்ல…!”, தேவா

‘அது சரி! இது உங்களுக்குத் தெரியுது’

‘ஆனா, தொம்பி துரைக்கு மட்டும் எப்டித் தெரியாமப் போச்சு!’, யாழினி

‘இவன் வேற, உரிமை, கிரிமைனு அந்தப் புள்ளைகிட்ட போயி உளறிட்டு இருக்கானே!’, என அம்பிகா நினைக்க.

“அப்டியிருக்க, ஆஸ்பத்திரில வந்து சேக்க, அன்னிக்கு நீ எடுத்துக்கிட்ட முயற்சியே, ரொம்பப் பெரிசு!

அதுக்கும்மேல உன்னைக் கஷ்டப்படுத்தினா… எனக்கு சரியாப்படலை!”, தேவா

“வீட்டுல யாருக்காவது ஒன்னுன்னா பாத்துட்டு சும்மாவா தம்பி இருக்க முடியும்,  அதுதான் அன்னிக்கு விவரம் தெரிஞ்ச புள்ளைங்கறதால, அந்தப் புள்ளை சொல்லி, உடனே அம்புலன்ஸ்ல இங்க கொண்டு வந்து சேத்தோம்”, அம்பிகா

‘இம்பூட்டு நல்லவரா நீங்க? எனக்கு இத்தனை நாளா தெரியாம போச்சே!’, யாழினி

“அதனால, நீ இங்க தினசரி சாப்பாடு எடுத்துட்டு வர வேணாம்!

அப்பா இல்லைனா, தம்பிட்ட சாப்பாடு குடுத்துவிடு…!

இல்லையா, குடுத்துவிடத் தோதில்லைனு சொல்லிட்டா, இங்கயே வாங்கிச் சாப்பிட்டுக்குவோம்!

இனி இங்கல்லாம் நீ வராத…!”, என்று தீர்க்கமாகச் சொன்னவனைப் பார்த்திருந்தவள்,

‘அப்ப தினசரி பட்டினிதான்.  யாரு சொல்றதுக்காகவும் நான் வரலை.  எனக்கே கஷ்டமா இருக்கும். வயசானவங்க ரெண்டு பேரு, நோயாளி ஒரு ஆளுன்னு, மூனு பேரும் பட்டினி கிடந்தா, எம்மனசு கேக்காது, தாங்காது’, என நினைத்தபடியே யாழினி இருக்க,

“என்னிக்காது ஒரு நாளு தான தேவா, இன்னும் ரெண்டு நாள்ல வீட்டுக்குப் போகப் போறோம்”, என்று அம்பிகா இடைவெட்டிப் பேச, தாயை முறைத்து ஒரு பார்வை பார்த்துவிட்டு,

வெகுநேரம் எதுவும் பேசாமல் இருந்தவளைக் கண்டவன்,

“என்னடா ரொம்ப நல்லவன் வேசம் போடுறவன், எதுக்கு இப்ப ஊருக்கு திரும்பி வந்தான்னு யோசிக்கிறியா…!”, தேவா

‘அப்டியும் ஒரு கேள்வி மனசுல இருக்கு?  ஆனா அதை எப்டிக் கேக்கணுதான் தெரியாம, இப்டியே திரியறேன்’

“…”, எதுவும் பேசும் நிலையில் இல்லாமல் அமைதியாகவே தேவாவைப் பார்த்திருந்தாள்., யாழினி.

இல்லையெனத் தலையாட்டியவள், “நீங்க எனக்காக ஒரு உண்மையை மறைக்காமச் சொல்லுங்க,  அதுபோதும், இப்ப ரெண்டு பேரும் சாப்பிட்டு முடிங்க”, என்று உத்தரவு குரலில் கூறியவள்

உணவை எடுத்து இருவருக்கும் உண்ணக் கொடுத்திருந்தாள்.

உண்டு முடித்து, இதர பணிகளை முடித்துவிட்டு, தேவாவின் எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்தவள்,

“ம் சொல்லுங்க, நீங்க இங்க இருந்து கிளம்பி போனதுக்கு பின்ன என்ன நடந்துச்சு?”, என்று விடாக்குரலில் கேட்க

இதை எதிர்பாராத அம்பிகா, “எதுக்கும்மா இப்ப அது! விடு”, என்று மருமகளை அதட்ட

“அத்தை தயவுசெய்து இதுக்கு மட்டும் எனக்கு அனுமதி கொடுங்க!”

“வந்தவுடனே இவரு என்ன சொன்னாரு, உங்க சின்ன மகனுக்கும், எனக்கும் இடையிலே எதோ சரியில்லைன்னு.

அதைச் சரி பண்ண, எனக்கு சில விசயம் தெரிஞ்சாக வேண்டியிருக்கு.

அதனால, அவரை நீங்களே எதுவும் மறைக்காம இப்போ சொல்லச் சொல்லுங்க”, என்று மாமியாரிடமும், தனது விண்ணப்பத்தினை வைத்திருந்தாள்.

இதை முற்றிலும் எதிர்பார்த்திராத தேவாவோ,

“அது நான் மறக்க நினைச்சு, மனசுல இருந்து அப்புறப் படுத்தின விசயம்”, என நிதானித்தவன்

“அது எதுக்கு உனக்கு?”, என்று யாழினியிடம் கேட்க

“அது, உங்களவில உண்மையா இருக்கலாம்.  ஆனா அந்த சம்பவத்தோட நேரடியா சம்பந்தப் பட்டவ, பயங்கரமா பாதிக்கப்பட்டதும், நான் மட்டுந்தான்.”

“அன்னிக்கும் சரி, இன்னிக்கும் சரி அதனால வந்த பின்விளைவுகளை நான் மட்டுமே அனுபவிக்கிறேன்”

“முதல்ல நடந்த சம்பவத்துல இருந்து மீண்டு வந்தா, திரும்பவும் அதே சுழல்ல மாட்டற மாதிரி, இப்ப சில விசயம் நடக்குது!”

“என்னோட எல்லா கஷ்டங்களுக்கும் பிள்ளையார் சுழியா இருந்த நிகழ்ச்சிதான் அது” 

“அதனால, அதை நான் கண்டிப்பா தெரிஞ்சிக்க ஆசைப்படறேன்”, என்று தீர்க்கம் குறையாத குரலில் கூறியிருந்தாள்.

மருமகளின் நியாயமான வேண்டுதலை, அவளின் வாய்மொழியாக அறிந்த அம்பிகா, அதற்குமேல் மறுப்புக் கூறாமல்,

“சொல்லு தேவா, அந்தப் புள்ளை சொல்ற மாதிரி, நீ வீட்டுக்கு வந்ததில இருந்து, சின்னவன் போக்கே சரியில்லை, இதைக் கேட்டு, எதாவது அந்தப் புள்ளை அது வாழ்க்கைய சரி செய்ய என்ன செய்யலாம்னு, அது யோசிக்குமில்ல!

நீ செஞ்ச மகா பாவத்தை கழுவ, ஒரு சந்தர்ப்பமா நினைச்சு, அங்க என்ன நடந்துச்சு, இப்ப நீ இந்த நிலைக்கு வரக் காரணம் என்னங்கறதை மறைக்காம சொல்லு!”, என்று மகனிடம் அம்பிகாவும் தயவாகக் கேட்டிருந்தார்.

/////////

பத்து ஆண்டுகளுக்கு முன்….

 

தேவா தன் காதலி சம்யுக்தாவைத் தேடி நேராக, பங்களூர் வந்திருந்தான். 

தனது பழைய அலைபேசி எண்ணுக்குரிய சிம்மை எடுத்துவிட்டு, புதியதாக வாங்கிய சிம்மை முந்தைய தினம் இரவே ஆக்டிவேட் செய்திருந்தான்.

இயன்றளவு, எதிர்கால வாழ்விற்கான திட்டமிடலோடு பங்களூர் வந்திருந்தான், தேவேந்திரன்.

தன்னவளுடன் முதலில் திருமணம், பிறகு ஐதராபாத் கிளையில் சென்று பணியைத் தொடர்வது, சில மாதங்களுக்குப் பிறகு, சம்யுக்தாவையும் அதே கிளைக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு, தன்னோடு அழைத்துக் கொள்வது, என எண்ணிக் கிளம்பி வந்திருந்தான்.

பங்களூர் கிளையில் பணிபுரிந்த போது சம்யுக்தாவுடன் மலர்ந்திருந்த காதலை, தனது திருமணத்திற்குப் பிறகு… உரம் போட்டு வளர்க்க உறவுகள் தடையாக இருக்க, ஓடோடி வராமல், நிதானமாகவே ஓடி வந்திருந்தான், தேவா.

அலுவலகத்தில் இருப்பவளைச் சென்று சந்திக்க பிரியமில்லாமல், மாலையில் அவள் தங்கியிருந்த பிஜியில் சென்று சந்திக்க காத்திருந்தான், அந்தக் காதலன்.

நண்பகலுக்கு மேல் பங்களுர் வந்தடைந்தவன், மாலையில்

நேராக தன் காதலி தங்கியிருக்கும் பிஜிக்குச் சென்றான்.

தேவேந்திரனின் திருமணம் பற்றி எதையும் அறியாதவளை, அவள் தன் மீது கொண்ட காதலைக் கொண்டு, வெளியே அழைக்கவும், மகிழ்ச்சியாகவே உடன் கிளம்பியிருந்தாள், சம்யுக்தா.

நீண்ட நாட்களுக்குப் பின் நேரில் வந்தவனைக் கண்டவள், தேவா அழைத்ததும், மறுக்காமல் உடன் வந்திருந்தாள், சம்யுக்தா.

மூன்று மாதங்களாக தொடர்பு கொள்ளாமல் இருந்தவன், நேரில் வந்ததில் மனம் சற்று ஆசுவாசமாகி இருந்தாள், பெண்.

சம்யுக்தாவின் பூர்விகம் கோவை.  சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து, கிறித்துவ அமைப்பொன்றில் தனிமையில் வளர்ந்தவள்.

கண்டதும், எதிர்பாலினத்தை வயது வரம்பின்றித் திரும்பிப் பார்க்கச் சொல்லும் அளவு சாந்தமான அழகு.  

இருவரும் ஒரே அலுவலகத்தில், இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்த போது உண்டான பழக்கம்… காதலாக மாறியிருந்தது.

காதலைக் கூறத் தயங்கியவனின், உடல் மொழியினை உள்வாங்கி… தானே முன்வந்து பேசி… காதலை உறுதி செய்திருந்தாள், சம்யுக்தா.

உண்ண விரும்பியதை ஆர்டர் செய்துவிட்டு, இருவரும் பொதுவான அலுவலக விடயம் முதலில் பகிர்ந்தார்கள்.

அதன்பின் தேவேந்திரன், தான் வந்த காரணத்தை கூற ஆயத்தமானான்.

பெண்களின் சைக்காலஜி பல நேரங்களில் எதிர்பார்த்தது போலில்லாமல்… டேமேஜாகக்கூடிய கலிகாலத்தில், தனது திருமணச் செய்தியை மறையாது சம்யுக்தாவிடம் முதலிலேயே பகிர்ந்திருந்தான், தேவேந்திரன்.

சம்யுக்தா, தன் கனவிலும் எண்ணாத விடயம்… நனவில்… காரணமான தன் காதலனே பகிர்ந்ததால், உலகம் தட்டாமாலை சுற்றியதாக உணர்ந்தாள். மயக்கமே சம்யுக்தாவிற்கு வந்து போயிருந்தது.

காதலனைக் கண்டதும் இருந்த மனநிலை, அவன் திருமணம் பற்றிக் கூறிய செய்தியைக் கேட்டதும் மாறியிருந்தது.

நிதானமாக நீண்டநேரம் பேசாமல் யோசித்தாள்.

எடுத்தவுடன் எந்த மறுப்பும் சொல்லாமல், அவன் வாய்மொழியாக சில விடயங்களை விபரமாகக் கேட்டறிந்தாள் சம்மு.

பிறகு, “நாளைக்கு நான் ஆஃபீஸ்கு லீவு போடறேன் தேவா, இப்போ கிளம்புவோம்.  எனக்கு இதுபத்தி ரொம்ப யோசிக்க வேண்டியிருக்கு!”, என்று அத்தோடு தேவாவிடம் விடைபெற்றிருந்தாள்.

அதற்குமேல் வற்புறுத்தாமல், “நல்ல முடிவை எடுக்க நாள் கடத்தக்கூடாது”, என்று கூறி விடைபெற்றிருந்தான்.

செல்லும்போது, அடுத்தநாள், எங்கு எப்போது சந்திக்கலாம்? என்பதை பிங்க் செய்வதாகக் கூறிச் சென்றிருந்தாள்.

///////////////

காலையிலிருந்து, மகப்பேறு வலியில் பிரசவ வார்டில் வலியோடு இருக்கும் பெண்போல, அங்குமிங்கும் அறைக்குள் நடைபயின்றவனை, பத்து மணியளவில் அழைத்திருந்தாள் சம்மு.

தேவாவை அழைத்தவள், பன்னிரெண்டு மணியளவில் குறிப்பிட்ட இடத்தில் சந்திக்கலாம் எனக் கூறி வைத்திருந்தாள்.

பூங்கா ஒன்றில் சந்திப்பை உறுதி செய்து, சொன்னபடி, சரியான நேரத்திற்கு இருவரும் வந்திருந்தனர்.

மனதில் சம்யுக்தா என்ன சொல்லுவாளோ? என்ற எதிர்பார்ப்பையும் மீறிய பயம் இருக்க, அதை மறைத்தபடியே

“எப்போ, நாம்ம மேரேஜ் செய்துக்கலாம் சம்மு?”, குழைவான குரலில் தேவா

“ஆதரவில்லாம வளர்ந்த நான், மேரேஜ்கு பின்னாடியாவது ஒரு நல்ல பேமிலிக்குள்ள வாழற ஆசையோடதான், உங்களை லவ் பண்ணேன் தேவா”

“வேணுனா நாம கல்யாணம் முடிஞ்சு, குழந்தையெல்லாம் வந்தபின்ன, அம்மா, அப்பாவைப் போயி பாப்போம் சம்மு!”

தேவாவின் பேச்சைக் கேட்டு, கேவலமான பார்வை ஒன்றை அவன்மீது விசியவள்,

“இப்போ உங்களை வளர்த்து ஆளாக்கின குடும்பத்தை விட்டே, சொல்லாம கிளம்பி வந்திருக்கீங்க.

தனியா வந்திருந்தாகூட நம்ம மேரேஜ் பத்தி யோசிச்சிருப்பேன்.

ஆனா, கல்யாணம் பண்ணி, ஒரு பொண்ணை அம்போன்னு விட்டுட்டு வந்திருக்கீங்க?”, சம்யுக்தா

சம்முவின் வார்த்தைகளைக் கேட்டவனுக்கு சம்மட்டியால் அடி வாங்கியதுபோல உணர்ந்திருந்தான்.

யாழினியின் நினைவு வந்துபோக, சற்று வருத்தம் மட்டுமே வந்து போனது.

“எல்லாம் உன்னோட வாழணும்னுதான் சம்மு, இவ்வளவு ரிஸ்க் எடுத்திருக்கேன்!”, பரிதவிப்போடு கூற

“இதை நீங்க கல்யாணத்துக்கு முன்னாடியே செய்திருக்கணும் தேவா, காலங்கடந்து எடுக்கற எந்த முடிவுக்கும் வால்யூ கிடையாது!”, சம்மு

“ஆமா, என்னை மீறி அப்டி நடந்துருச்சு!  நான் செய்ததெல்லாம் தப்புதான்!  ஆனா இனி எல்லாம் யோசிச்சு செய்யறேன் சம்மு!”, என கெஞ்சினான்.

“இட்ஸ் டூ லேட் தேவா”, சம்மு கோபமாகவே பேசினாள். 

“எனக்குத் தெரியுது சம்மு! ஆனா, வேற வழி, அப்போ எனக்கு தெரியல! 

இப்போதான், எனக்கே என்னைப் பத்தி ஒரு கிளாரிட்டி கிடைச்சுது!”, மறையாது கூறினான்.

“நீ மட்டுந்தான் என்னைய நல்லா வச்சுக்க முடியும்.  இதுவரை நடந்ததை விட்ருவோம்.

எப்ப நாம மேரேஜ் பண்ணிக்கலாம்னு மட்டும் சொல்லு!”, என்று, கொக்கிற்கு ஒன்றே மதி என்பது போல, இருவரது திருமணத்தில் வந்து நின்றவனை

“காலம் கடந்த கனிவும், வருத்தமும் எதுக்கும் உதவாது தேவா! 

இத்தன நாளா உங்களுக்கு எத்தனை கால் பண்ணியிருப்பேன்! 

கால் அட்டெண்ட் பண்ணலன்னாலும் ஒரு மெசேஜ் பண்ணிருக்கலாம்!

அதுக்கு கூட தயக்கம்… இல்ல பயம்னா… உங்கள நம்பி வந்து, காலம் முழுவதும், நான் என்ன செய்ய முடியும்…!

இப்போ எதுக்கு அந்த தேவையில்லாத பேச்சு…”, என்றவள்

“இந்த ரெண்டு மாசமா எதுக்காக நீங்க என் கால் அட்டெண்ட் பண்ணலன்னு நினச்சு, பதறி… உங்களுக்கு எதுவும் ஆயிருச்சோனு நினைச்சு, துடிச்சு…

சே…!”, என தனது தலையில் அடித்துக் கொண்டவள்,

“இதுக்கெல்லாம் நீங்க வர்த்தானவரானு உங்கள நீங்களே முதல்ல கேட்டுக்கங்க…!

இப்பதான் எனக்கு, அங்க என்ன நடந்திருக்கும்னு புரியுது!

வீட்ல யாருக்கும் தெரியாமத்தான் இப்பவும் கிளம்பி வந்திருக்கீங்க!”, என்று கேட்க

“சொன்னா புரிஞ்சுக்குவாங்களா அப்டிங்கறதைவிட, என்னால அவங்ககிட்ட இதப்பத்தி பேச முடியல!”, என்று தன்னிலையை பகிர்ந்தவனை

பூச்சியைப் பார்ப்பதுபோல பார்த்து வைத்தாள், சம்மு.  அத்தோடு, 

“இத்தனை வருசம் வளத்த பெத்தவங்களுக்கும் உண்மையா இல்லை.  கல்யாணம் பண்ண பொண்ணுக்கும் உண்மையா இல்லை. காதலிக்கும் உண்மையா இல்லை.

ஒரு அப்பாவிப் பொண்ணோட வாழ்க்கைய நாசமாக்க, நான் காரணமா இருக்க எனக்கு விருப்பமில்லை…!

நீங்க உங்க வையிஃப்போட போயி… லைஃப்பை கண்டினியூ பண்ணுங்க தேவா..!”, என்று கூறினாள்.

“இனி அதுக்கு வாய்ப்பே இல்லை சம்மு, நீதான் பெரிய மனசு வைக்கணும்”, மன்றாடல் தொடர்ந்தது.

“மனசு வைக்க எதுவும் இனி இல்லை.

என்னைய மறந்திருங்க..!

அதான் நம்ம ரெண்டு பேருக்குமே நல்லது.

இனி என்னைய… எங்கயும் வந்து தொந்திரவு பண்ணாதீங்க…!”, என்று தனது முடிவை தேவாவிடம் முடிவாகத் தெரிவித்திருந்தாள் சம்யுக்தா.

“சம்மு, புரிஞ்சிக்க என்னைய, உனக்காகத்தான் எல்லாத்தையும் விட்டுட்டு வந்திருக்கேன்.  பெத்தவங்களையே வேணானு விட்டுட்டு வந்ததுக்கும், உம்மேல இருக்கிற காதல் மட்டுமே காரணம்”, என்று பதறினவனை

“உங்களைப் பத்தி மட்டுமே யோசிச்சிருக்கீங்க, மத்தவங்களை பத்தி எந்த அக்கறையும் இல்லாம இருக்கீங்க!

இனிமேலாவது அந்தப் பொண்ணுகிட்ட போயி மன்னிப்பு கேட்டு, அதோட சேந்து வாழற வழியப் பாருங்க!

நல்ல கணவனாக இருக்க ட்ரை பண்ணுங்க!”, சம்யுக்தா

“என்னால அது முடியாது சம்மு!”

“நானும் இந்த ரெண்டு மாசமா, என்னை நானே கேட்டுப் பாத்துட்டேன்.  அந்தப் பொண்ணை என்னால வயிஃபா ஏத்துக்க முடியாது,  இதுக்குமேல அந்தப் பொண்ணு வாழ்க்கைய வீணாக்ககூடாதுனுதான் லெட்டர் எழுதி வச்சிட்டு கிளம்பி வந்துட்டேன்”

“சோ வாட்?  நீங்க செய்த தவறை நீங்கதான் போயி சரி பண்ணணும்”

“சரி பண்ணுற கட்டத்தைத் தாண்டிட்டேன் சம்மு, அப்டியே அந்தப் பொண்ணை ஏத்துக்கிட்டாலும் என்னால அவகூட சேந்து வாழமுடியாது”

“ஏன் முடியாது? முடியாதுன்னு தாலி கட்டறதுக்கு முன்ன தெரியலையா?  கல்யாணங்கிறது உங்களுக்கு என்ன விளையாட்டா?, முடியாதுன்னா அதுக்கு நான் எதுவும் செய்ய முடியும்?”

“நடந்ததை இனி மாத்த வேணாம் சம்மு, நாம இனி நம்ம வாழ்க்கையப் பத்தி மட்டும் யோசிக்கலாம் ப்ளீஸ்டா”, என்ற தேவாவின் கெஞ்சல், சம்மு எனும் சம்யுக்தாவால் கேட்கப்படாமல், அலட்சியப்படுத்தப்பட்டது. 

“என்ன நீங்க சமாதானம் சொன்னாலும், இன்னொரு பொண்ணு வாழ்க்கை மூழ்கின இடத்தில, என் வாழ்க்கைய ஆரம்பிக்க எனக்குப் பிரியமில்லை.

அவங்கவங்க பாதை, பயணம் மாறிருச்சு…!

அததுல பயணிச்சாதான், அவங்கவங்க போற இடத்துக்கு சேஃபா, நேரமே போய்ச் சேர முடியும்…!

பை…!

நான் கிளம்பறேன்”, என நீளமாகப் பேசியவள், அதற்கு மேல் அங்கிருக்காமல் கிளம்பியிருந்தாள்.

அத்தோடு, தேவா எவ்வளவு தடுத்தும் கேளாமல் கிளம்பியவளை, பரிதாபமாகப் பார்த்தபடியே இருந்தான்.

பின்னோடு கெஞ்சியபடியே வந்தவனை, சட்டை செய்யாமல், திரும்பிப் பார்க்காமல் அங்கிருந்து அகன்றிருந்தாள்.

அடுத்தடுத்த இரண்டு நாட்கள் சந்திக்க முயன்றும், முயற்சி தோல்வியுற்றிருந்தது.

கால் செய்தாலும் அழைப்பைத் துண்டித்து, தேவாவை தண்டித்தாள்.

அடாவடியாக செய்யும் துணிச்சல் இல்லாதவன், இறுதி முயற்சியாக சம்யுக்தாவை மீண்டும் காண பிஜிக்கு தேடிப் போனான்.

————————

சம்யுக்தாவிடம், தேவாவின் யுக்தி பலித்ததா?

அடுத்த அத்தியாத்தில்…

error: Content is protected !!