LogicillaMagic17

மேஜிக் 17

 

நிச்சயதார்த்தம் நெருங்கி விட்ட நிலையில் நந்தனா நிரஞ்சனை அழைத்தாள்

“சார்!”

“சொல்லுமா”

“ஒரு விஷயம்”

“ம்ம்”

“எவ்வளவு முயற்சி பண்ணியும் என்னால வீட்ல சமாளிக்க முடியலை, நிச்சயத்தை நிறுத்த முடியுமுன்னு எனக்கு தோணலை” நந்தனாவிற்கு இதில் சந்தோஷமா சோகமா அவளுக்கே புரியவில்லை

“ம்ம் புரியுது. நான் முயற்சி பண்ணேன்னு பொய் சொல்லமாட்டேன்! இதை பத்தி யோசிக்க எனக்கு நேரமே இல்லை. ஒரு சர்ஜெரி அதுக்கான ஏற்பாடு அது இதுன்னு சுத்தமா எனக்கு நேரமே பத்தலை. அதான்…சாரி டா”

“என்ன விஷயம் ஏன் உங்க குரல் ஒருமாதிரி இருக்கு ?”

“ம்ம் நான் வழக்கமா என் நோயாளிகள் பற்றி யார்கிட்டயும் சொல்லமாட்டேன். நீ ரொம்ப மென்மையான பொண்ணு. விடு வேண்டாம்…” தயக்கம் அவனைத் தடுத்தது

“ப்ளீஸ் சொல்லுங்க சார் பரவால்ல. என் கிட்ட சொன்னா உங்க மனசு கொஞ்சம் லேசாகலாம் இல்லையா”

“பேபி ப்ளீஸ் முதல்ல சார் சார் னு கூப்பிடாதே. அம்மா ஏற்கனவே கேட்டுட்டாங்க, ஏன் நந்து உன்னை சார்ன்னு கூப்பிடுறானு. நான் அவ விளையாடுறானு சொல்லி வச்சுருக்கேன்”

“ம்ம் கூப்பிடலை”

“தேங்க்ஸ்”

“சரி சொல்லுங்க”

“யார் சொல்லணும்?” அவன் குரலில் முதல் முறை குறும்பு வெளிப்பட வெட்க சிறப்புடன்,

“நிரஞ்சன் சொல்லணும்…”, ஒரு வழியாகப் பெயரைச் சொல்லிவிட்டாள்.

அவள் முதல் முறை தன்னை பெயர் சொல்லி அழைத்ததாலோ, இல்லை அவளின் வெட்கம் கலந்த குரலில், தன் பெயரைக் கேட்டதாலோ, ஏனோ தன்னை அறியாமல் உடலில் ஒரு சிலிர்ப்பை உணர்ந்தான்.

“ரஞ்சன்…”

“ம்ம்” கிரக்கமாக அவன் குரல் வர, நந்தனா மீண்டும் வெட்கத்துடன் மௌனமானாள்

சில நொடி மௌனம் நீள,

“சார்” நந்தனா வேண்டுமென்றே சிரிப்புடன் அவனை அழைக்க, கனவுலகை நோக்கி நகரத் துவங்கியவன் நொடியில் சுதாரித்துக்கொண்டவன், “ச்ச் என்ன பேபி திரும்ப?” கடிந்து கொண்டான்

“ஹா ஹா சும்மா. நான் ஏற்கனவே உங்களை ரஞ்சன்னு கூப்பிட்டுருக்கேன் தெரியுமா?” சிரிப்புடன் கேட்டாள்

“எப்போ ? எப்போ ?” அவன் எவ்வளவு யோசித்தும் அவனுக்குப் புலப்படவில்லை

“உங்கம்மா மயக்கமாகி ஃபோன் வந்து, நாம போனப்ப…”

“சாரி மா, எனக்கு அப்போ இருந்த பதட்டத்துல உணரக் கூட முடியலை”

“சரி சரி நீங்க எதோ சொல்ல வந்தீர்கள் எங்கயோ போகுது டாபிக்” அவள் நினைவு படுத்த

“ம்ம் ஒரு பொண்ணுக்கு ரீகன்ஸ்ட்ரக்ஷன் பண்ணனும் (சீரமைப்பு) முகம் மட்டும் இல்லை கழுத்து மார்புன்னு”

“என்னாச்சு?” ஆதங்கம் நந்தனாவை தொற்றிக்கொள்ள

“திராவகம்…” குரல் உடைந்தது அவனுக்கு

“ஐயோ எப்படி?”

“காதலுன்ற பேருல ஒரு *** பண்ண வேலை. பாவம் ரொம்ப பாதிப்பு, மனசளவுலயும் பயம், உலகைப் பார்க்கத் தயக்கம், தன் மேலையே நம்பிக்கை குறைஞ்சு, நொடிஞ்சு இருக்கா, சின்ன வயசுதான். பார்த்ததும் மனசு நொறுங்கி போச்சு. நான் பல கேஸ் பார்த்திருக்கேன்.

ஆனா இதுதான் முதல் முறை இந்தமாதிரி, அந்த ஆபரேஷன்க்கான ஏற்பாடுகள் தான் நடக்குது.”என்று மௌனமான்னவன் மூச்சொலி மட்டுமே கேட்க, நந்தனாவுக்கு கண்கள் கலங்கி விட, கோவமாக, “சே அந்த *** என்ன ஆனான்?”

கோவமாகப் பதில் வந்தது “அவன் செத்துட்டான்! இந்த பாதகத்தைப் பண்ணிட்டு பைக்குல தப்பிக்க ஸ்பீடா போயி பஸ்சுல அடிபட்டுச் செத்துட்டானாம். ***”

இருவருக்கும் கோவம், ஆதங்கம் எல்லாம் சூழ்ந்து கொள்ள, அவர்கள் மீதி உரையாடல் சமுதாயம், மருத்துவம் என்று திசைமாற நிச்சயதார்த்தம் என்ற ஒன்றையே மறந்தனர்.

அடுத்து வந்த நாட்களில் நந்தனா அவனைத் தொந்தரவு செய்ய விரும்பாமல் அமைதியாக இருக்க, நிச்சயம் நடக்கும் நாளும் வந்தது

நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்ட மேடையில் பெரியோர்கள் கூடியிருக்க, ஒரு அறையில் பெண்கள் மூவரும் தயாராகிக் கொண்டிருந்தனர்.

தோழிகள் கேலி பேச, முகத்தில் வெட்க சிரிப்பிருந்தாலும், மனதில் தனக்கு நடக்கும் நிச்சயம் மட்டும் நிச்சயமற்றது என்ற எண்ணம் ஒரு முள்ளாய் நந்தனாவை தைத்துக் கொண்டிருந்தது.

“நந்து, உன் ஆளு செம்ம ஹேண்ட்ஸம் டி. நீ மட்டும் வேண்டாம்னு சொல்லு, நான் தூக்கிட்டு ஓடிடுவேன்.” மயூரா கண்ணடிக்க,

நிவியோ “தூக்குவே தூக்குவே ! எனக்கு அண்ணினா என் செல்லாக் குட்டி நந்து தான். வேற யார் வந்தாலும் அடிச்சு கடித்துத் துரத்தி விட்ருவேன் ! நிரஞ்சனுக்கு நந்தனா தான். இதை அவனோ, இவளோ நெனச்சாலும் நான் மாற்ற விடமாட்டேன்.”

விளையாட்டாய் சொன்னாலும் அவள் குரலிலிருந்த உறுதி நந்தனாவிற்கு ஏனோ சந்தோஷம் பொங்கச் செய்தது.

பெரியோர்கள் தட்டை மாற்றிக்கொண்டு, மோதிரம் மாற்றும் நிகழ்வு வர, நிரஞ்சன் அவன் கையை நீட்டிய நொடி, நந்தனா மனம் தாறுமாறாய் துடிக்கத் துவங்கியது.

ஏறெடுத்து அவன் முகத்தைப் பார்த்தாள். அவன் முகத்தில் புன்னகை இருக்க, அவன் உதடுகள் மெல்ல ஓசையின்றி அசைந்தது. கூர்ந்து கவனித்தவள்,

“நான் இருக்கேன், மோதிரத்தைப் போடு பேபி!” மிகவும் பிரயத்தனப்பட்டுப் பட்டுப் புரிந்து கொண்டவள்.

எங்கிருந்தோ வந்து ஒட்டிக்கொண்ட வெட்கத்துடன் அவன் விரலில் மோதிரத்தை அணிவிக்கும் நொடி

‘உன் மனசில் எனக்கு இடம் இருக்கா தெரியாது. ஆனா இனி என் மனசில் உன்னைத்தவிர யாருக்குமே இடமில்லை!’ மனம் அவள் , அவன்மேல் தன்னை அறியாமல் கொண்ட காதலை அவளுக்கு உணர்த்த, மனதார மோதிரத்தை அணிவித்தாள்.

அவள் கையை நீட்ட, அவள் கரத்தை மென்மையாகப் பற்றியவன்

‘ எங்கிருந்தோ வந்து, இப்போ எனக்காக இவ்வளவு செய்யும் நீ என் மனதுக்கு ரொம்ப நெருக்கமானவள். இனி உன் சந்தோஷத்துக்காக, நல்லதுக்காக நான் எதுவும் செய்வேன். அதற்கு அடையாளம் இந்த மோதிரம்! ‘ மனதில் உறுதி எடுத்துக்கொண்டவன் புன்னையுடன் அவள் விரலில் மோதிரத்தை அணிவித்தான்.

பெரியோர்கள், வந்தோர்கள் ஆசீர்வதிக்கச் சுபயோக சுபதினத்தில் மூன்று ஜோடிகளுக்குத் திருமணம் நடத்த லக்கின பத்திரிக்கை வாசிக்கப் பட்டது.

ஜோடியாய் அமர்ந்து உணவருந்தும் நேரம் நந்தனாவின் காதில் நிரஞ்சன் “கல்யாண தேதியை 3 மாசம் தள்ளி வைக்கும் படி செஞ்சுருக்கேன். அதுக்குள்ளே என்ன பண்ண முடியுதுன்னு பார்ப்போம்” என்று சொல்ல

“ம்ம்” என்று மட்டும் பதில் தந்தவள் ‘ இந்த 3 மாசத்துல ஏதாவது மாயம் நடந்து நாம ஒன்னு சேர்ந்தால் நல்லா இருக்கும். ஆண்டவா எங்களை சேர்த்துவைப்பா’ என்று மனமுருக இறைவனை வேண்டிக்கொண்டாள்

‘அடியே அவனுக்கு உதவறேன்னு சொல்லி இப்போ நிஜமா கல்யாணம் செய்துக்க நினைக்கறியே, இது தப்பில்லையா?’ மனம் கேட்க

‘நானா ஏதும் செய்யப் போவதில்லை, தானா நடந்தா மறுக்கவும் போவதில்லை’ தன்னை தானே சமாதானம் சொல்லிக்கொண்டாள்.

***

நிரஞ்சனின் நண்பன் ஒருவன் அவனிடம் தன் திருமண அழைப்பிதழைக் கொடுத்துவிட்டுச் செல்ல, அதைப் பார்த்தபடி

‘காதல் கல்யாணமாம்! என்ன காதலோ கன்றாவியோ! எப்படி தான் மனுஷனுக்குக் காதல் வருதோ? அவன் அவன் இருக்க வேலையைப் பார்க்கவே நேரமில்லாம சுத்துறான். இதுல தேவையில்லாம காதல் அப்புறம் டேட்டிங், மீட்டிங்ன்னு நேரத்தை விரயம் பண்ணிக்கிட்டு சுத்துறாங்க.’

“மறந்தும் இந்தக் காதல் கல்யாணம்னு சிக்கிக்க கூடாதுடா கூடாது!” தனுக்குத் தானே சொல்லிக்கொண்டான்.

திராவக வீச்சினால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அறுவைசிகிச்சை முடித்துவிட்டுச் சோர்வாய் தன் அறையில் அமர்ந்திருந்தான்.

ஏனோ அந்தப் பெண்ணினால் மன அழுத்தத்தில் இருந்தவன் நந்தனாவிடம் பேசினால் மாறுதலாக இருக்குமென எண்ணி அவளுக்கு கால் செய்தான்.

அழைப்பை ஏற்றது என்னமோ காஞ்சனா தான்.

“சொல்லுங்க நிரஞ்சன், நான் காஞ்சனா. நந்தனா டாக்டர் பார்க்க போயிருக்கா. நான் வெளியில் உட்கார்ந்து இருக்கேன்.”

“எந்த ஹாஸ்பிடல்?” பதட்டத்துடன் அவன் கேட்கவும்,

“வீட்டுக்குப் பக்கத்துல…” காஞ்சனா மருத்துவமனை விபரங்களைச் சொல்லிமுடிக்க, நிரஞ்சன் அழைப்பைத் துண்டித்துவிட்டான்.

மின்னல் வேகத்தில் அந்த மருத்துவமனையை அடைந்தவன் காஞ்சனாவின் கண்முன்னே சென்று நிற்க, திகைத்தவளோ

“என்ன எதுக்கு இப்படி விழுத்தடிச்சுக்கிட்டு ஓடி வந்தீங்க?”

காஞ்சனா கேட்டது நிரஞ்சனின் காதில் விழுந்ததை போலத் தெரியவில்லை. பதட்டமாக “நந்து எங்க?” என்றவன், காஞ்சனா கைகாட்ட, கதவைத் தட்டி உள்ளே சென்றுவிட்டான்.

‘அடராமா! இவ்வளவு அன்பா எங்க நந்துமேல?’ காஞ்சனா அதிசயிக்க ‘ஆனா பாவம் நீ வாங்கப்போற பல்புக்கு நான் பொறுப்பில்லை’ எண்ணிக் கொண்டவள் வாய்விட்டுச் சிரித்துவிட்டாள்.

உள்ளே மருத்துவரின் அறையில் நந்தனா மருத்துவரின் முன் அமர்ந்திருக்க, மருத்துவர் கோவமாய் “சார்! யார் நீங்க? எதுக்கு இப்படி நேரா உள்ள வரீங்க?”

“நான் உங்க பேஷண்டை கல்யாணம் செய்துக்க போறவன்!”

“என்னது?” டாக்டர் கண்கள் விரிய

அவனை அங்கே எதிர்பாராத நந்தனா, அவன் கையைப் பிடித்து, இழுத்து “நீங்கத் தப்பா…” என்று துவங்க,

“இரு மா!” அவளை அடக்கியவன், மருத்துவரை நோக்கி “நானும் டாக்டர் தான், எதுவானாலும் என்கிட்ட சொல்லுங்க! என்னாச்சு என் பேபிக்கு?” அவன் பதற்றமாய் கேட்க,

நம்பமுடியாமல் அவனைப் பார்த்த டாக்டர், “இதோ பாருங்க சார், நீங்க அவசர படுறீங்க”

“இட்ஸ் ஓகே! ப்ளீஸ்…நீங்க சொல்லுங்க” அவன் விடாப்பிடியாய் கேட்க

“ரஞ்சன் ப்ளீஸ் நான் சொல்றதை கேளுங்க” நந்தனா கெஞ்ச

அவளைக் கண்டுகொள்ளாமல் மருத்துவரைப் பார்த்தவன் “சொல்லுங்க!”

“நீங்க சொல்றது மொதல்ல உண்மையா? எப்படி நீங்க அவங்களை கல்யாணம் செய்ய முடியும்?” சந்தேகமாய் கேட்க

“நீங்க மொதல்ல சொல்லுங்க ப்ளீஸ்!” நிரஞ்சன் வாதாட

“ஒன்னும் இல்லை சார்! அவங்களுக்கு மெனோபாஸ் (மாதவிடாய் நிறுத்தம்) அதான், மத்தபடி ஒன்னும் இல்லை”

“ஐயோ சின்ன வயசுல எப்படி இப்படி ஆகும்?” பதறி, அதிர்ச்சியாய் நந்தனாவை பார்த்தவன் கண்ணில் அத்தனை ஆதங்கம்!

‘சுத்தம்! உன்னை வச்சுக்கிட்டு நான் படுற பாடு…ஸபா இப்போவே கண்ணைக் கட்டுதே!’ கண்களை மூடிக்கொண்டவள்

“நான்…” அவள் துவங்கும் நேரம் அவள் கையைப் பற்றி அடக்கியவன்,

“இந்த சின்ன பொண்ணுக்கு மெனோபாஸ்? எப்படி நீங்க ஒண்ணுமில்லைன்னு சொல்றீங்க?” கோவமாக மருத்துவரை முறைதான்.

டாக்டர் இன்னும் கோவமாக “சின்ன வயசா? அவங்களுக்கு வயசு 50க்கு மேல!”

“என்ன?” நிரஞ்சன் புருவம் சுருக்க

“என்னை பேச விட்டாத் தானே? நான் வந்தது எனக்கு இல்லை!” அவசரமாகச் சொல்லி முடித்தாள் நந்தனா.

“என்ன? என்ன சொல்றே?”

“சார் நீங்க வெளியில போய்ப் பேசிக்கோங்க!” கோவமாய் டாக்டர் சொல்ல இருவரும் வெளியே வந்தனர்.

“என்ன நடக்குது?” நிரஞ்சன் நந்தனாவிடம் எறிந்துவிழ

உரக்கச் சிரித்தவளோ “நான் வந்தது எங்க பக்கத்துவீட்டு ஆண்ட்டி ரிப்போர்ட் வாங்க! அவங்க ஊருக்குப் போயிருக்காங்க, அதான் நான் வாங்க வந்தேன்”

“அதெப்படி உன்கிட்ட அவங்க ரிப்போர்ட் கொடுப்பாங்க?”

“இவங்க எங்களுக்கு நல்லா தெரிஞ்ச டாக்டர். அவங்க ஒப்புதல் கொடுத்துட்டு போனதால நான் ரிப்போர்ட் வாங்க வந்தேன். இத போய் அவங்களுக்கு ஈமெயில் அனுப்பனும். இதை சொல்லுறதுக்குள்ள…” வாயைப் பொத்திக்கொண்டு சிரிக்க

காஞ்சனா நடந்ததை யூகித்துக் கொண்டு சிரிக்க “இதுக்கா இப்படி விழுத்தடிச்சு ஓடிவந்தீங்க? போன்ல அறையும் குறையுமா கேட்டுட்டு வச்சா இப்படித்தான்! நான் எதோ பேஷண்ட் வந்ததால கட் பண்ணதா நெனச்சேன்” பெண்கள் இருவரும் சிரிக்க,

‘சொதப்பி தொலைச்சுட்டியே டா!’

“அதெல்லாம் ஒண்ணுமில்ல என்னமோன்னு நெனச்சு…” நிரஞ்சன் தலையைக் கோதிக்கொண்டு சிரிப்பைக் கட்டுப்படுத்த மிகவும் சிரமப்பட்டான்.

“இது கூட புரியாத மக்கில்லை நான். நீங்க பேசிட்டு வாங்க நான் முன்னாடி வீட்டுக்குப் போறேன்” காஞ்சனா புறப்பட

“இல்லை நானும் கிளம்பனும் காஞ்சுமா. வேலை இருக்கு” என்றவன் நந்தனாவை பார்த்து “போன் பண்றேன். பை” நொடியும் நில்லாது தன் மருத்துவமனைக்குத் திரும்பினான்.

நந்தனாவின் வீட்டில் நடந்ததைச் சொல்லிச் சொல்லிக் காஞ்சனா சிரிக்க, சரஸ்வதியோ தன் மகள்மேல் நிரஞ்சன் கொண்டிருந்த அக்கறையை நினைத்துக் கண்கலங்கிவிட,

“அய்ய என்ன இது? ஆனந்தக் கண்ணீரா? நான் கூட பக்கோடாக்கு வெங்காயம் வெட்டினதால கண்ணு கலங்குதுன்னு நெனச்சேன்” காஞ்சனா சரஸ்வதியை கிண்டல் செய்தபடி பகோடாவைச் சாப்பிட

“அடிப்போடி…” புன்னகைத்தபடி சமையல் வேலையே தொடர்ந்தார் சரஸ்வதி .

மருத்துவமனைக்குச் சென்ற நிரஞ்சன் குழப்பத்தில் கண்களை மூடி அமர்ந்திருந்தான்.

‘லூசு லூசு இப்படியா அவசரப்பட்டு ஓடுவே ? நந்து டாக்டர் கிட்ட இருக்கான்னா நீ எதுக்கு இப்படி அலறி அடிச்சுகிட்டு ஓடணும் ?’ மனம் கேட்கும் கேள்விக்கு அவனிடத்தில் பதில் இல்லை.

அவன் சிந்தனையைக் கலைத்தது செவிலியரின் குரல் “அந்த பொண்ணுக்கு கான்ஷியஸ் (சுய நினைவு) வந்தாச்ச்சு. நீங்க வரீங்களா டாக்?”

“ம்ம் வரேன், அவங்க அம்மா அப்பாக்கு சொல்லிடுங்க. செக் பண்ண அப்பறம்.” எழுந்து சென்றவன் அதன் பிறகு இந்த விஷயத்தை நினைக்க நேரம் இல்லாமல் இரவுவரை தன் பணிகளை மேற்கொண்டான்.

அன்றிரவு நந்தனாவிற்கு போன் செய்தவன் “ஹாய் பேபி!”

“சொல்லுங்க. இன்னிக்கி வழக்கத்தை விட சீக்கிரம் வீட்டுக்குப் போயாச்சா?”

“ஆமா. நீ என்ன பண்றே? “

“படிக்கிறேன். செமஸ்டர் வருது. ஆமா எதுக்கு அப்படி அலறி அடிச்சுகிட்டு ஓடி வந்தீங்க?” சிரிப்பை அடக்கிக் கொண்டு கேட்க

‘அதையே பிடிச்சுக்கிட்டு தொங்குறதை பார். தெரிஞ்சா சொல்ல மாட்டேனா?’

“இல்லை எதோ அவசரம்னு நெனச்சேன். ஏற்கனவே ஆபரேஷன் முடிச்சு அப்போ தான் உட்கார்ந்தேன் அதான் களைப்புல யோசிக்காம…” அவளுக்குச் சொல்வதைப் போல தனக்கே சமாதானம் சொல்லிக்கொண்டான்.

‘ச்சே நான் எதோ நீ காதல்ல கசிந்துருகி, அன்பு பெருகி ஓடி வந்ததா நெனச்சேன். இந்தப் பல்பு தேவையா எனக்கு ?’

“ஓஹோ. ரொம்ப சிக்கலான ஆபரேஷனா ?”

“ம்ம் சொன்னேனே அந்த பெண்ணுக்குத்தான் இன்னிக்கி…” அதன் பின் பேச்சு அதைப் பற்றித் தொடர, சரஸ்வதி இரவு உணவிற்கு நந்தனாவாய் அழைக்கும் வரை அவர்கள் உரையாடல் தொடர்ந்தது.

படுத்தபடி விட்டதைப் பார்த்துக்கொண்டிருந்த நிரஞ்சன்,

‘இது சரி இல்லை! மொதல்ல நந்துவை பத்தி நினைக்கிறதை தவிர்க்கணும். அவ பாதை வேற என் குறிக்கோள் வேற. கூடிய சீக்கிரம் ஏதாவது செஞ்சு தானா எங்க கல்யாணம் நிற்கும்படி செய்யணும்’ வழிகளைத் தேடித் தேடி களைத்தவன் விழி மூடி உறங்கிவிட்டான்.

நந்தனாவோ தன் கையில் நிரஞ்சன் அணிவித்த மோதிரத்தைப் பார்த்துப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.

‘நீ எனக்காக ஓடி வந்தேன்னு பார்த்தா, இல்லைன்னு சொல்லி இப்படி மனசை ஒடைச்சுட்டே! பரவால்ல எதோ ஒன்னு எனக்காக வரணும்னு உனக்கே தோணினதே போதும்.

உனக்கு என்னை பத்தி ஏதாவது தோணுமா?… தோணாதா ?… ஐயோ இப்படி தனியா புலம்ப விட்டானே.’

புதியதாய் தொற்றிக்கொண்ட காதல் அவளைப் பாடாய்ப் படுத்தி தூக்கத்தை கெடுத்தது.

***

கல்லூரியில் நந்தனா ஏதோ போல இருக்க, மயூரா “ஹே நந்து ! என்னடி ஒரு மாதிரி இருக்க ?”

“இல்லடி ஒண்ணுமில்லை” நந்தனா விட்டேற்றியாகப் பதில் தந்தாள்

“நான் சொல்றதெல்லாம் உனக்கு இருக்கானு சொல்லு”

“பசி எடுக்காம, தூக்கம் இல்லாம, யார் கிட்டவும் பேச பிடிக்காம, எப்போவும் வயித்துக்குள்ள ஏதாவது உருளுற மாதிரி இருக்கா ?” மயூரா புருவத்தைச் சுருக்க

நந்தனவோ ஆர்வமாய் “அப்படி இருந்தா?”

மயூரா விஷம புன்னகையுடன் “அப்படினா என்ன அர்த்தம் தெரியுமா?”

“ம்ம் எதோ பெரிய வியாதி இருக்குன்னு அர்த்தம்” மயூராவின் தலையில் குட்டினாள் சுகன்யா.

“இல்லடி காதல்னு அர்த்தம்!” பெரிய அறிய விஷயத்தைக் கண்டுபிடித்ததை போல மயூரா சட்டை காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டாள்.

‘இதுங்க தொல்லை தாங்கலயே. நான் காதலிக்கிறது இவளுக்கு தெரிஞ்சு என்ன ஆகப்போகுது? தெரிய வேண்டிய மட சாம்பிராணிக்குத் தெரியலை’ உள்ளுக்குள் அலுத்துக்கொண்டாள்.

***
வகுப்பில் தீவிரமாய் ஆசிரியர் திரைப்படம் எடுப்பதை பற்றிய பாடம் எடுத்துக்கொண்டிருக்க, மயூரா நந்தனாவின் குர்தாவை பிடித்து இழுக்க, ரகசிய குரலில் நந்தனா “என்னடி ?” என்று கேட்க

“சனிக்கிழமை நாம சினிமாக்கு போகலாம்னு பிளான் போட்டோம்ல…” மயூரா கிசுகிசுக்க

“ஆமா அதுக்கென்ன?”

“உன் ஆளையும் கூட்டிகிட்டு வாடி!” மயூரா ஆர்வமாய் சொல்ல

‘அடியே ஏண்டி உனக்கிந்த விபரீத ஆசை ?’
“ஹே அவர் எதுக்கு? நாம மட்டும் போயிட்டு வருவோம்” கடுகடுத்தாள்

“ஹே இல்லை நிச்சயம் ஆனபிறகு நீ எங்க கூட சுத்தினா மாப்பிள்ளை சார் ஏங்கிப் போவார் பாவம். அவரையும் கூட்டிகிட்டு வா” மயூரா அடம்பிடிக்க

‘லூசு லூசு அவனை சினிமாக்கு கூப்பிட்டா என்னை பத்தி என்ன நினைப்பான்?’
“அதெல்லாம் முடியாதுடி, அவர் பிசியா இருப்பார்” கடிந்துகொண்டவள், அதன் பிறகு பலமுறை மயூரா அழைத்தும் அவள் புறம் திரும்ப வில்லை.

மயூராவின் குரல் கேட்டு அவளை அழைத்தார் ப்ரொபெஸர்

“மயூரா என்ன அங்க”

“ஒன்னும் இல்ல சார்”

“சொல்றியா கிளாஸை விட்டு வெள்ள அனுப்பவா?” ஆசிரியரின் முகம் கோவத்தில் சிவக்க

‘ஆஹா இவர் சும்மாவே அறிவுரை திலகம். ஏதான பிட்டைப் போடுவோம்’
“நந்து கிட்ட ஒரு சந்தேகம் கேட்டேன்” அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டு சொல்ல, நந்தனாவிற்கு திக்கென்று இருந்தது.

‘அடியே என்னை எதுக்கு கோர்த்து விடுறே?’ தோழியை முறைத்தாள் நந்தனா

“அப்படி என்ன சந்தேகம் ? என் கிட்ட கேட்காம ?” ஆசிரியர் விடுவதாய் இல்லை போலும்

“பெரிசா ஒன்னும் இல்லை சார். சின்ன சந்தேகம் தான். உங்களை ஏன் தொல்லை பண்ணுவானேன்னு …”

“ஒரு தொந்தரவும் இல்லை ! எதுல சந்தேகம் ?”

‘உங்க விதி நான் என்ன செய்ய?’

“ போன வாரம் பார்த்த ரெண்டு படத்துலயும் ஒரு ஒரு டவுட்…”

“கேளு,”

“டைட்டானிக் படத்துல ஒரு டவுட்”

“வெரி குட் ! எதுல டவுட் ? ஸ்க்ரீன்பிளே? டைரெக்க்ஷன்? சினிமெட்டோகிராபி (ஒளிப்பதிவு) எதுல சந்தேகம்?”

“ரோஸ் மேல சார்” அப்பாவியாக முகத்தை வைக்கொண்டு அவள் கேட்க, ப்ரொபெஸரோ குழப்பமாய்,

“என்னது ரோஸ் மேலையா?”என்று புருவம் விரிய

“ஆமா சார்! கிளைமேக்ஸுல ரோஸ் இருந்த கதவுல ஏன் அவ ஜேக்குக்கு இடம் கொடுக்கலை?” மயூரா கேட்டதுதான் தாமதம் வகுப்பே சிரிப்பலையில் மூழ்க

“நான்சென்ஸ் இது தான் உன் சந்தேகமா ? “ ஆசிரியர் சீற

‘இதுக்கே இப்படின்னா, இதுக்கு என்ன சொல்லப்போறாரோ?’

“அதை விடுங்க சார். நாம நாயகன் படம் பார்த்தோமே! அதுல கமல் நல்லவரா கெட்டவரா?” முகத்தைப் பாவமாய் வைத்துக்கொண்டு அவள் கேட்க, ஆசிரியருக்கே ஒருகணம் சிரிப்பு வந்துவிட, அதை மறைத்துக்கொண்டு

“ம்ம் அவருக்கு ஃபோன் போட்டுத் தரேன் நீயே கேளேன்!” நக்கலாய் பதில் தந்தார்

“ம்ம்சரி சார் சூப்பர்!”

“அப்படியே உங்க அப்பாக்கும் ஃபோன் போட்டுத் தரேன்”

“எதுக்கு சார் ?”

“உன்னை சஸ்பெண்ட் பண்ண போறதை சொல்லிடத்தான்” ஆசிரியர் சிரிப்புடன் சொல்ல

பதறிய மயூரா , பெருந்தன்மையாய் “ஆஹா வேண்டாம் சார்! எனக்கு இப்போ சந்தேகமே இல்லை. அவர் நல்லவரோ கெட்டவரோ எனக்கென்ன வந்தது. நீங்க பாடத்தைத் தொடருங்க சார்” சொல்லிவிட்டு , ஈ என்று இளிக்க வகுப்பே மீண்டும் சிரிப்பலையில் மூழ்க

ஆசிரியரோ சிரிப்புடன் “இனி எதாவது சந்தேகம் வந்த சொல்லு, நாம ப்ரின்சிபாலை நேராவே போய்க் கேட்டுப்போம்” என்றுவிட்டு மீண்டும் பாடத்தைத் தொடர்ந்தார்.