MA – 3

அத்தியாயம் – 3

அவள் காலையில் கண்விழிக்கும் பொழுதே ஹாலில் நின்று கத்திக்கொண்டு இருந்த நீலாம்பரியின் குரல்தான் கேட்டது.

‘என்ன அண்ணி காலையிலேயே இந்தக் கத்து கத்திறாங்க..’ என்ற கேள்வியுடன் எழுந்து சென்று படிக்கட்டின் ஓரமாக நின்று ஹாலில் நடப்பதைக் கவனித்தாள்.

“இன்னைக்கு மாப்பிள்ளை வீடு வரேன்னு சொல்லிட்டு இருந்தாங்க. இப்போ ஒரு முக்கியமான மீட்டிங் விஷயமாக வெளியே போவதால் வர முடியலன்னு போன் பண்றாங்க..” என்ற விஷயத்தை ரொம்பவே கோபமாகக் கூறினாள் நீலாம்பரி.

அவளின் பேச்சுக்கு எல்லாம் செவிசாய்த்து எதுவும் நடவாதது போல ஹாலில் அமர்ந்து பேப்பர் படித்த அண்ணனின் நிலையைக் கண்டு வாய்விட்டுச் சிரித்தவள்,

‘அண்ணிக்கு மட்டும் என்னோட சிரிப்புச் சத்தம் கேட்டுச்சு நான் அம்பேல்..’ என்ற நினைவுடன் அவள் நகர நினைக்கும்போது மீண்டும் நீலாம்பரியின் குரல் அவளின் செவியைத் தீண்டியது.

“நேற்றே மாப்பிள்ளை வீட்டிலிருந்து வராங்கன்னு உங்க தங்கச்சிட்ட சொல்லிட்டேன். இப்போ வரலன்னு சொன்னா பாவம் அவளோட மனசு என்ன தவி தவிக்கும்..” என்று கேட்ட நீலாம்பரியின் குரலில் வருத்தம் வெளிப்படையாகவே தெரிந்தது.

மாப்பிள்ளை வீடு வரவில்லை என்ற  விஷயம் அவளுக்குக் கசக்குமா என்ன?

‘இதில் நான் வருத்தப்பட என்ன இருக்கு. சோ இன்னைக்கு மாப்பிள்ளை வரல. அவனுக்குச் செய்து வைத்த பஜ்ஜி எல்லாம் நம்மாலே சாப்பிட்டுவிட்டு வந்து கதவைச் சாத்திவிட்டு நிம்மதியாக தூங்கணும்..’ என்ற திட்டத்துடன் குளிக்கச் சென்றாள் மேகா.

அதன்பிறகு போட்ட திட்டத்திபடி அனைத்தையும் சாப்பிட்டுவிட்டு, ‘ஹப்பாடா இன்று மட்டும் அல்ல மகனே. இனி என்றுமே நீ என்னைப் பெண்பார்க்க வராமல் இரு அதுதான் எனக்கு நிம்மதி..’ என்று தன்னறைக்குள் நுழைந்தவளைப் பார்த்து அந்தக் கவர் சிரித்தது.

‘இவனோட போட்டோவை வேற பாக்கல. அண்ணாவுக்கு தெரிஞ்சா திட்டுவான்..’ என்று அவளின் மனம் சொன்னதை இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுவிட்டு வழக்கம்போல நிம்மதியாக வலம்வந்தாள் மேகா.

அவ்வளவு சீக்கிரம் உன்னை நிம்மதியாக விடுவேனா என்ற விதி அதன் விளையாட்டைத் தொடங்கியது. அடுத்த வாரத்தில் ஒரு நல்ல நாளில் மேகாவைப் பெண்பார்க்க வருவதாகத் தகவல் வரவே இவளுக்கோ தலைவலி அதிகரித்தது.

அவர்கள் சொன்னது போலவே ஒரு சுபமுகூர்த்த தினத்தில் அவளைப் பெண்பார்க்க வந்தது கார்முகிலனின் குடும்பம். கார்முகிலனுக்கு தாய், தந்தை இல்லை. அவனை வளர்த்தது எல்லாம் அவனின் சித்திதான். சித்தி என்றதும் தவறாக நினைக்க வேண்டாம்.  அவனின் அம்மாவின் தங்கை சீதாலட்சுமி தான். அவர்தான் இப்பொழுது கார்முகிலனுக்கு பெண்கேட்டு வந்திருந்தார்.

நடுஹாலின் சோபாவில் அமர்ந்து அவர்கள் பேசிக்கொண்டு இருக்க மேகாவின் கையில் காபியைக் கொடுத்து, “ம்ம் போய் எல்லோருக்கும் கொடு..” அனுப்பினாள் நீலாம்பரி.

“அவனுக்கு அம்மா, அப்பா எல்லாமே நான்தான். என்னோடப் பேச்சை தட்டவே மாட்டான்..” சீதா பெருமையாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.

அப்போது பதுமை போல கையில் காபியுடன் அவர்களின் அருகே சென்ற மேகா குனிந்த தலை நிமிராமல் அனைவருக்கும் காபியைக் கொடுத்தாள்.

சிவப்பு நிற புடவையில் தலை நிறைய பூவுடன் வந்து பதுமை போல நின்றவளைப் பார்த்ததும் அசந்துதான் போனார் சீதா. அப்படியொரு அமைதியான பெண்ணையும், விளக்கின் ஒளிக்கு ஈடாக மின்னிய அவளின் அழகை அவர் இதுவரை நேரில் கண்டதில்லை.

தன்னருகே அமைந்திருந்த கணவனைத் திரும்பிப் பார்த்தவர், “பொண்ணு ரொம்ப அமைதியான குணம் போல. நம்ம முகிலனுக்கு சரியான ஜோடி..” என்றார்.

“ம்ஹும் ஆமா இவளைப் பார்த்தும் நம்ம முகிலன் மாறிவிடுவான்..” என்ற வேதாசலத்திற்கு முகிலன் மாறுவான் என்ற நம்பிக்கை துளியும் இல்லை. ஒரு பெண்ணின் வாழ்க்கையை வீணாக்கின்றோமோ என்ற வருத்தம் தான் அதிகம் இருந்தது.

“அதெல்லாம் வீட்டுக்கு போய்ப் பேசிக்கலாம். இப்போ நீங்க வாய் திறக்காதீங்க. அப்புறம் எனக்குக் கெட்ட கோபம் வரும்..” கணவனை மிரட்டிவிட்டு இயல்பாகப் புன்னகைத்தார் சீதா

“மாப்பிள்ளை வரவில்லையா?” என்று ஆர்வமாகக் கேட்ட, ‘இவங்க இப்படியெல்லாம் கேட்கிற ஆள் இல்லையே. என்மேல் இவங்களுக்கு இவ்வளவு பாசமா நம்ப முடியலயே..’ அண்ணியின் முகம் பார்த்து அவளுக்குள் குழப்பம் அதிகரித்தது.

இவர் எதற்காகக் காரணமே இல்லாமல் மாப்பிள்ளை பையனைத் தேடுகிறார் என்ற குழப்பத்துடன் நின்றவளின் பார்வை அவளின் மீது நிலைக்க நீலாம்பரியோ வேறுப்பக்கம் முகத்தைத் திருப்பினார்.

அப்பொழுதுதான் அவன் ஏன் பெண்பார்க்க வரவில்லை என்ற கேள்வி அவளின் மனதில் விஸ்வரூபம் எடுத்து நின்றது. எந்தவிதமான காரணமும் இல்லாமல் தன்னை பாழும் குழியில் பிடித்துத் தள்ள ஒரு கூட்டமே காத்துக் கொண்டிருப்பது அறியாத பேதைமனம் நடப்பதை ஏற்றுகொள்ள முயற்சித்தது.

அனைவருக்கும் காபி கொடுத்துவிட்டு ஓரமாக வந்து நின்றவளின் அருகே வந்த நீலாம்பரி, “நீ ரூமிற்கு போ மேகா..” என்று அவளை அனுப்பி வைத்துவிட்டு கணவனின் அருகே வந்து நின்றாள்.

அவர் சொன்னதுதான் சாக்கு என்று அவ்விடம் விட்டு அகன்றாள் மேகா. நேராகத் தன்னறைக்கு சென்று அமர்ந்தவளின் செவிகளைத் தீண்டியது சீதாவின் குரல்.

“எத்தனை சவரன் நகைப் போடுவீங்க? பொண்ணுக்கு என்னென்ன செய்யப் போறீங்க என்று சபையில் சொல்லுங்க” என்றார் சீதாலட்சுமி கறாராகவே.

தன்னருகே நின்ற மனைவியைப் பார்த்தவன், “என்னோட சக்திக்குத் தகுந்ததை செய்கிறேன். என்னோட தங்கைக்கு பத்து பவுன் நகை, கையில் ஐம்பதாயிரம் ரொக்கம் அதுகூட கட்டில், பீரோ, மெத்தை எல்லாம் வாங்கி தரேன்..” என்று சபையில் பேசி முடிவானது.

அதுவரை பொறுமையை இழுத்துபிடித்து அமர்ந்த மேகாவின் உள்ளம் துடிக்க, ‘நான் என்ன கடையில் விற்கும் பொருளா? என்னைப் பெண் பார்க்க வந்துவிட்டு விலைபேசிட்டு போறாங்க..’ என்று நினைத்தவளின் கோபம் முழுவதும் கார்முகிலனின் மீது திரும்பியது.

அதேநேரத்தில்..

காலையில் வழக்கம்போல நிறுவனத்தின் உள்ளே நுழைந்தவனுக்கு அனைவரும் வணக்கம் சொல்ல ஒரு தலையசைப்புடன் அவர்களைக் கடந்தவன் தன்னுடைய கேபினுக்குள் நுழைந்தவன் தன்னுடைய ஸீட்டில் அமர்ந்து வேலையைக் கவனிக்க கதவு தட்டும் ஓசையில் அவனின் கவனம் கலைந்தது.

“யெஸ் கமின்..” என்றதும் கேபினின் உள்ளே நுழைந்தவனைப் பார்த்தும்,

“என்ன சுரேஷ் எனிதிங் சீரியஸ்..”என்று கேட்க,

“நோ ஸார்..” என்றான்.

“ஓகே இன்னைக்கு என்ன என்ன வொர்க்..” என்றவனின் பார்வை பைல் மீது இருக்கவே,

“இன்னைக்கு இவினிங் அமெரிக்கன் கம்பெனி ப்ராஜெக்ட் பற்றிய ஒரு மீட்டிங் இருக்கு சார்..” என்றான் அவன் தடுமாற்றத்துடன்.

“கேன்சல் பண்ணிரு. நான் இவினிங் ப்ரீ இல்ல..” என்று முடித்துவிட்டவே அவனிடம் பதில் பேச முடியாமல் வழக்கம் போலவே ஊமையாகச் சென்றான்.

கார்முகிலன் பெரிய பிஸ்னஸ்மேன் என்றாலும் கூட அவன் நல்லவன் இல்லை. அவன் நிறுவனத்தின் உள்ளிருக்கும் வரைதான் அவனின் ஒழுக்கம். நிறுவனத்தின் வெளியே அவனின் பெயரே வேறு.

கார்முகிலன் கொஞ்சம் கொஞ்சமாகக் கஷ்டப்பட்டுதான் இந்த இடத்திற்கு வந்தான். ஆனால் ஆயிரம் கஷ்டப்பட்டு மேலே வந்தவனையும் நொடியில் கீழே விழ வைப்பது அவனிடம் இருக்கும் ஒரு கெட்ட பழக்கம்தான்.

ஒரு கட்டடத்தில் குடும்பத்தை இழந்து தட்டுதடுமாறி படிப்பை முடித்து நிறுவனத்தில் வேலை செய்து, அவனின் அயராத உழைப்பில் உருவான கம்பெனிதான் கே.எம். கன்ஸ்ட்ரக்ஷன்.

அவன் மேலே வந்தும் அவனைத் தவறான பாதைக்கு வழிநடத்திச் சென்றனர் அவனின் நண்பர்கள். நல்லது கெட்டது சொல்லித் தரவென்று ஆளில்லாத நிலையில் தவறான வழியில் வழிநடத்திய நண்பர்களால் சிகரெட், மது, மாது அனைத்திலும் கைதேர்ந்து இருந்தான்.

அதற்கும் ஒரு எல்லையை அவன் வகுத்ததுதான் வைத்திருந்தான். அவனுடைய நிறுவனத்தை உயர்த்த அவன் எவ்வளவு பாடுபடுகிறானோ அதைக் கட்டிக்காப்பற்ற தன்னுடைய உடல்நிலையும் மிக முக்கியம் என்பதை உணர்ந்திருந்தான்.

அதுவும் மண், பொன், பெண்மீது பித்து கொண்டவர்கள் இறுதியில் என்ன ஆனார்கள் என்று அவன் அறிந்தவன் என்பதாலோ என்னவோ மாது மீது அதிகம் பற்று இல்லவிட்டாலும் கூட, அந்தத் தவறைச் செய்யவும் அவன் தயங்கியதில்லை.

இருபத்தி ஒன்பது வயதில் ஒரு பொருளை உருவாக்கவும், அதை அழிக்கவும் தன்னால் முடியுமென்று அவன் டீல் பேசும் பொழுதே மற்றவர்கள் உணர்ந்து விலகி நிற்பார்கள். கார்முகிலன் பெயருக்கும் அவனுக்குச் சம்மதமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு வித்தியாசமாக இருந்தான்.

மதியம் வேலையை முடித்துவிட்டு காரில் ஏறியவன் நேராக பாருக்கு வண்டியைத் திருப்பிய முகிலன்  நன்றாகக் குடித்துவிட்டு ஃபாரிலிருந்து வெளியே வந்தான்.

அதே நேரத்தில் திருமணத்திற்கு துணியெடுக்க வந்த இடத்தில் அவன் இப்படி குடித்துவிட்டு நிற்பதைப்பார்த்து சீதாவிற்கு கதிகலங்கியது.

அனைவரும் ஜவுளி எடுக்கச் சென்ற கடைக்கு எதிரே இருந்த பார் ஒன்றினைப் பார்த்துக்கொண்டே கடையின் உள்ளே நுழைந்த சீதாவின் பார்வையை யாரும் கவனிக்கவில்லை.

“ஐயோ மதியமே பாருக்கு வந்து மானத்தை வாங்கறான். இவனை என்ன பண்றதுன்னு தெரியல..” புலம்பிக்கொண்டே ஜவுளிக்கடையின் உள்ளே நுழைந்தார் சீதா.

“அதெல்லாம் அவனுக்குப் பொண்ணு பார்ப்பதற்கு முன்னாடி நீ யோசிச்சு இருக்கணும்..” என்று மனைவியைக் கண்டித்துவிட்டு அவரைக் கடந்து சென்றார் வேதாசலம்.

‘இவனை மட்டும் பொண்ணு வீட்டில் யாராவது பார்த்தா என்ன நடக்குமோ..’ என்றவரின் பார்வையில் பதட்டம் நிலவியது. நீலாம்பரி, சேதுராமன், சீதாலட்சுமி, வேதாசலம் நால்வரும் திருமணத்திற்கு தேவையான துணிகளைச் செலக்ட் பண்ணவே எரிச்சலோடு அவர்களின் அருகே அமர்ந்து வேடிக்கைப் பார்த்தாள் மேகா.

.அருணும், தருணும் மேகாவின் அருகே வந்து, “அத்தை எனக்குச் சாக்லேட் வாங்கி தாங்க. அம்மா கடைக்குள் சேலை எடுத்துட்டு இருக்காங்க..” என்றனர்.

“சரி வாங்கடா. அவங்க எடுக்கட்டும். நம்ம ஒரு ரவுண்டு அடிச்சிட்டு வருவோம்..” என்று சொல்லி இரண்டு வாண்டுகளையும் அழைத்துக்கொண்டு ரோடு கிராஸ் பண்ணி எதிர்புறம் சென்றனர்.

அங்கே கடையில் இருந்த 5 ஸ்டார் சாக்லேட் இரண்டு வாங்கி வாண்டுகளின் கைகளில் கொடுத்துவிட்டு, “வாங்கடா.. அண்ணி மட்டும் இந்தக் கண்கொள்ளா காட்சியைப் பார்த்தா என்ன ஆகுன்னு தெரியுமா?”

“எங்களுக்கா தெரியாது.” என்று வருண் ஆரம்பிக்க,

“உன்னோட தோலை உரிச்சு உப்புகண்டம் போட்டுவிடுமே..” என்று ராகம் இழுத்தான் அருண்.

“ஆகமொத்தம் என்னைச் சாகடிக்க முடிவெடுத்துட்டீங்க..” என்று அவள் சிரித்துக்கொண்டே நடந்த மேகா இருவரிடமும் வம்பு வளர்ப்பதில் கவனமாக இருந்தாள்.

அதே நேரத்தில்  சிகரெட் வாங்கவென்று எதிரே இருக்கும் பெட்டிக் கடைக்குச் செல்ல தள்ளாடியவண்ணம் நடந்தான் முகிலன். அப்படியொரு எதிர்பாராத சூழ்நிலையில் அவனை நேரில் சந்தித்தாள் மேகா.

கார்முகிலன் அந்தப் பெட்டிகடையை நோக்கி செல்ல அவனின் எதிரே வந்த பெண்ணின் மீது மோதியதும் தடுமாறி கீழே விழப் போனவளைக் கண்டு கொள்ளாமல் நடந்தவனோ,  “சாரி கவனிக்கல..” என்று அவளைக் கடந்து சென்றுவிட்டான்.

அதற்குள் சுதாரிந்து கால் ஊன்றி நின்றவள் திரும்பிப் பார்க்க, “ஒரு கிங்க்ஸ்..” என்று போதையில் தள்ளாடியபடியே நின்றவனை கோபத்துடன் முறைத்தாள்.

“காலையில் தண்ணியடித்துவிட்டு சுத்தறான். எங்கே விழுந்துச் சாக போறானோ..” என்று அவனுக்குச் சாபத்தை வாரி வழங்கிய வள்ளலைப் பார்த்து வாய்விட்டுச் சிரித்தது வாண்டுகள் இரண்டும்!

“டேய் எதுக்குடா இப்படி சிரிக்கிறீங்க..” என்று கடுப்புடன் அவர்களிடம் கேட்டாள்.

“அத்த உனக்கு அது யாருன்னு தெரியலயா?” என்று குறுஞ்சிரிப்புடன் கேட்ட தருணை அவள் கேள்வியாக நோக்கிட,

“உன்னைக் கட்டிக்க அம்மா பார்த்த மாப்பிள்ளை அவருதான்..” என்று அருண் சொன்னதைக்கேட்டு வெடுக்கென்று திரும்பிப் பார்த்தாள் மேகா.

ஆறடிக்கும் சற்று குறைவான உயரம், திரண்ட தோள்கள், மாநிறம் கொண்டவனின் ஒரு கையில் சிகரெட்டுடன் அரை போதையில் தள்ளாடி நின்றவனைப் பார்த்து, “கா..ர்..மு..கி..ல..ன்..” என்று அதிர்ச்சியுடன் கூறினாள்.

“அதுதான் அவரோட பேரு..” என்று அண்ணன் பசங்க இருவரும் ஹை – பைக் கொடுத்தனர்.

‘உயிரோட புதைக்க முடிவெடுத்து எல்லாமே செஞ்சி முடிச்சாச்சு. இனி நான் யாரிடம் சொல்லி என்ன பண்ண எல்லாம் தலைவிதி..’ என்று நினைத்தவள் திரும்பித் தன்வழியே நடந்தாள்.

ஜவுளி கடையிலிருந்து துணிஎடுத்துவிட்டு வீடு திரும்பிய மேகா, “அண்ணா எனக்கு இந்த திருமணத்தில் இஷ்டம் இல்ல..” தன்னுடைய மறுப்பை தெரிவித்தாள்.

“நீதான் அவரைத் திருத்தி நல்ல வழிக்கு கொண்டு வரணும்..” என்று அந்த பேச்சிற்கு முற்றுபுள்ளி வைத்துவிட்டு எழுந்துச் சென்றவனைப் பார்த்தபடியே சோபாவில் சாய்ந்தாள்.

‘அவனைத் திருத்த அவன் என்ன ஆன்சர் பேப்பரா?’ என்று மனதிற்குள் எரிச்சல் மண்டியது. காலமும் நேரமும் யாருக்காகவும் காத்திருக்காமல் சென்று மறைய திருமண நாளும் அழகாக விடிந்தது.

அவரவர்களின் கடமையை முடிக்க அவளை மணமேடைக்கு அனுப்பினர்.  பட்டுச்சேலையில் வலம்வரும் அண்ணியின் முகமும், கடமை முடிந்தது என்று முதல் வரிசையில் மண்டபத்திற்கு வந்தவர்களை வரவேற்று அமர வைத்த தமையனின் முகமுகமும், எந்தவிதமான கவலையும் இல்லாமல் அங்கும் இங்கும் ஓடிகொண்டிருக்கும் அண்ணன் பசங்களின் சந்தோசம் அனைத்தையும் கண்டாள்.

அவளின் கண்கள் லேசாகக் கலங்கியதோ? இங்கே கடமைக்குத் திருமணம் நடக்கிறதா? என்று அவளின் மனதிற்குள் ஒரு கேள்வி!

கார்முகிலனின் அருகே அமர்ந்த மேகாவைப் பார்த்தவனின் பார்வையில் அவள் என்ன மாதிரி உணர்கிறாள் என்று அவளுக்கே தெரியவில்லை.

அவன் ஐயர் சொல்லும் மந்திரங்களைச் சொல்ல அவன் அதைக் கடமை தவறாத சிகாமணி போலச் சொல்லிக் கொண்டிருந்தான்.

சிறிதும் சலனமே இல்லாத அவனின் முகத்தை மிக அருகில் பார்த்து, ‘இவனை நான் திருத்தணுமா?’ என்று மனதிற்குள் பெருமூச்சுவிட்டு நிமிர்ந்தாள்.

அவனின் பார்வை அவளை வருடிக்கொண்டிருக்க இவளுக்கோ பயம் தொற்றிக் கொண்டது.

அவனின் முகம் கண்டதும் முதலில் கொஞ்சம் திகைப்புடன் தான் அவனை ஊடுருவியது அவளின் பார்வை.

அலையலையாகக் கேசமும், தடித்த புருவங்கள், சிவந்த கண்கள், நேரான நாசி, அளவான மீசை, சிகரெட் தடம்பதிந்த அவனின் உதடுகள். வேட்டி, சட்டையில் கம்பீரமாக அமர்ந்திருந்தவனும் கடமைக்கு மந்திரம் சொல்வதைக் கவனித்து அவளின் மனமும் வலித்தது.

“கெட்டிமேளம் கெட்டிமேளம்” ஐயர் மாங்கல்யத்தை அவனின் கையில் எடுத்துக் கொடுக்க, அதை அவளின் கழுத்தில் கட்டி அவளைத் தன்னில் சரிபாதியாக ஏற்றுகொண்டான் கார்முகிலன்.