Puthu Kavithai 6

Puthu Kavithai 6

  • admin
  • January 21, 2020
  • 0 comments

6

“வாங்க… வாங்க….” பெரிய கூட்டமொன்று கூடியிருந்தது, பெண் வீட்டில்.

சகுந்தலாவின் முகத்தில் அப்படியொரு சந்தோஷம். தன் மகன் இப்போதாவது தனது சொல்பேச்சு கேட்டுப் பெண் பார்ப்பதற்கு ஒப்புக்கொண்டானே என்ற மகிழ்ச்சி அவரது முகத்தில் வெளிப்படையாகத் தெரிந்தது.

பார்க்கும் பெண்ணையெல்லாம், இவள் தன் மகனுக்குப் பொருத்தமாக இருப்பாளா என்று ஆசைப்படுபவர் சகுந்தலா. அனைவரையுமே அவன் திருமணம் செய்ய முடியாது என்றாலுமே, இவளாவது தன் மருமகளாக வந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணாத நாளில்லை, கணக்கிடாத அழகான பெண்கள் இல்லை. திருமண வயதில் பிள்ளைகளை வீட்டில் வைத்திருப்பவர்களின் பொதுவான ஆசை தானிது.

ஆனால் அவனோ, அவரது அத்தனை முயற்சிகளையும் விழுங்கி ஏப்பம் விடும் எமகாதகனல்லவா! இத்தனை நாட்களாயிற்று, அவன் ஓரளவு இசைவு தெரிவிக்க.

அப்போதும் அவன் ஆசையோடு வரவில்லை. கடமைக்காக வந்திருக்கிறான் என்பதை அவர் உணர்ந்து தான் இருந்தார். ஆனால் தன் மகன் எப்போதும் இப்படி இல்லையே!

அவனது சந்தோஷமான காலங்களை எல்லாம் நினைத்துப் பார்த்தவருக்கு வருத்தமாக இருந்தது.

யாரைச் சொல்லி நோக? தன் குடும்பத்தினரே முள்ளாக இருந்து அவனது வாழ்க்கையில் விளையாடியதை நோகவா? அவனாக ஆசைப்பட்டதும் அவனது வாழ்க்கையில் விளையாடிவிட்டுச் சென்றதை நோகவா?

ஒரு சிலரின் பிராப்தம் அப்படியாகி விடுகின்றது போலும். ஆசைப்பட்ட எதுவும் ஓட்டக்கூடாது என்று!

வரவேற்றவர்களுக்குப் புன்னகையைப் பதிலாகக் கொடுத்து விட்டு ஓரக்கண்ணில் மகனைப் பார்த்தார்.

பகீரென்றது!

கிஞ்சிற்றும் மலர்ச்சியின்றி, இறுக்கத்திலும் இறுக்கமாக, கிட்டத்தட்டக் கல்லாக இறுகிக் கொண்டு தன்னருகே நின்றிருந்தவனைப் பார்க்க அவரது மனம் பதறியது.

அழைப்பவர்களுக்கு மரியாதைக்காகவேனும் இவன் சிரித்து வைக்கக் கூடாதா?

சிரிப்பதாக நடிக்கவாவது கூடாதா?

அதற்குக் கூடவா பஞ்சமாகிவிட்டது?

“டேய் தம்பி… கொஞ்சம் சிரிடா…!”

பெண்ணின் தந்தை ‘வாங்கத் தம்பி’ என்று அழைத்ததைக் கூட உணராமல் நின்று கொண்டிருந்த தனது மகனிடம் கிசுகிசுப்பாகக் கூற, அதையும் அவன் கேட்கவில்லை.

கேட்பதாகத் தெரியவில்லை.

“பார்த்தி…. அம்மா சொல்றாங்க பார்…” பானுமதி தனது சகோதரனிடம் குனிந்து கொண்டு கூற, அவரை உணர்வற்ற பார்வை பார்த்தவன், திரும்பி தன் தாயைப் பார்த்தான்.

அவனது அந்தச் செய்கை, ‘என்னை விட்டுவிடேன்’ என்று அவரிடம் கெஞ்சியதை போல இருந்தது.

ஆனால் இப்போது விட்டால் இவனைப் பிடிக்க முடியாது என்பதை உணர்ந்தவர், அதைக் கண்டுகொள்ளவில்லை.

“கொஞ்சமா சிரி பார்த்தி…” மேம்போக்கான புன்னகையுடன் இவனிடம் கிசுகிசுத்த சகுந்தலா, பெண்ணின் தந்தையிடம் திரும்பி,

“நல்லா இருக்கீங்களா?” என்று கேட்க, அவரது வாயெல்லாம் பல்.

“ரொம்ப நல்லா இருக்கேன்மா…” என்றவருக்குத் தலைகால் புரியவில்லை.

தன் மகளுக்குக் கிடைத்திருக்கும் அதிர்ஷ்டம் மிகவும் பெரியது என்பது அவருக்குத் தெரியாதா என்ன?

காலம் காலமாகப் பெயர் பெற்ற காரமடை அயர்ன் அன்ட் ஸ்டீல் ரோலிங் மில்லின் சொந்தக்காரனுக்குப் பெண்ணைக் கொடுக்கக் கசக்கிறதா என்ன? அதிலும் கேஎம் முறுக்குக் கம்பிகள் என்றால் அகில இந்திய அளவில் பிரசித்தமாயிற்றே.

அதோடு பானுமதி அயர்ன் அன்ட் ஸ்டீல் ரோலிங் மில்லுக்கு வினோதகன் உரிமையாளராயிற்றே. இருவருமே பெயர் பெற்றவர்கள். சமநிலையில் அதாவது இந்தத் துறையில் முதல்நிலையில் இருப்பவர்கள். இவர்களது வீட்டுச் சம்பந்தம் என்பது அவர் நினைத்தும் பார்த்திடாத ஒன்று!

அதிலும் கம்பீரமாக, ஆண்மையின் முழு உருவமாக இருக்கும் பார்த்திபனுக்கு பெண் கொடுக்க அத்தனை பேர் போட்டி போட, தனது பெண்ணுக்கு இந்த அதிர்ஷ்டம் வாய்க்குமா என்று காத்திருந்தவர் இந்த சக்ரவர்த்தி.

இவர்கள் பெண் பார்க்க வந்ததே, உறவினர்கள் முன்னிலையில் சக்ரவர்த்தியின் அந்தஸ்தைப் பல மடங்கு உயர்த்தியிருந்தது, அத்தனை பேரையும் அழைத்துத் தனது உறவினர்கள் முன் பெருமைப்பட்டும் கொண்டார் அவர்!

சகுந்தலாவை பொறுத்தவரை வசதியான வீட்டுப் பெண்ணைத் தேடவில்லை. பார்த்திபனுக்குப் பொருத்தமான, அன்பான, அறிவான, சூழ்நிலைகளைப் புரிந்து கொள்ளும் புத்திசாலியான பெண்ணைத் தான் தேடினார்.

ஏனென்றால் பார்த்திபனை சமாளிப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை! ஆனானப்பட்ட வினோதகனையே தலையால் தண்ணீர் குடிக்க வைத்தவன் அவன்.

கட்டாயப்படுத்தி அவனை எதுவொன்றுமே செய்ய வைக்க முடியாது. அதற்கு ஒரே விதிவிலக்கு சகுந்தலா மட்டுமே.

இந்தப் பிடிவாதத்திலும் முரட்டுத்தனத்திலும் அப்படியே தந்தையைக் கொண்டிருப்பவனைச் சமாளிக்க, அழகு மட்டும் போதாது. நிறைய அறிவும் புத்திசாலித்தனமும் தேவை என்பதை மிகவும் தெளிவாக உணர்ந்திருந்தார். தன் கணவனைத் தான் சமாளித்தது போல, தன் மகனை வருபவள் அல்லவா சமாளிக்க வேண்டும்.

இந்தப் பெண்ணால் அதைச் செய்ய முடியுமா என்ற கேள்வியோடு அந்த வீட்டை அளந்தார் கண்களால்!

ஓரளவு வசதியானவர்கள் போல என்று நினைத்துக் கொண்டு, தன் மகனைத் திரும்பிப் பார்க்க, அவன் அந்த இறுக்கம் சற்றும் தளராமல் அமர்ந்திருந்தான். அருகில் வினோதகன், கணக்கெடுக்கும் பார்வையோடு அந்த வீட்டை ஆராய்ச்சியாகப் பார்த்தார்.

பானுமதியோ இவர்கள் இருவரும் வீடு போய்ச் சேரும் வரை எதுவும் முட்டிக்கொள்ளக் கூடாது என்று கடவுளிடம் வேண்டுதல் வைத்துக் கொண்டிருந்தார்.

இவர்களைக் கண்ணெடுக்காமல் கவனித்துக் கொண்டிருந்தாள் மதுவந்தி. அவ்வப்போது அவளது பார்வை அவனைத் தொட்டு மீண்டது. பட்டுக் குர்த்தியில் மெழுகு பொம்மை போல இருந்தவள், பார்த்திபனோடு அமர்ந்து கொண்டாள், பெரிய சோபாவில்.

சகுந்தலா மற்றும் பானுமதியின் தவிப்பு அவளுக்குப் புரிந்திருந்தது. அதோடு பார்த்திபனின் மனமும் எப்படிப்பட்ட எரிச்சலில் இருக்கிறது என்பதை முழுதாக அறிந்திருந்தாள்.

“மாமா…” அவன் புறம் குனிந்து அவள் அழைக்க, என்னவென்று அவளைப் பார்த்து முறைத்தான். அவள் மேலிருந்த கோபத்தில்! ஆனால் அதையும் தாண்டி அந்தப் பார்வையில் அவ்வளவு வேதனையிருந்தது.

“ப்ச்… கொஞ்சம் ரிலாக்ஸா உட்காருங்க மாமா. எல்லாரும் தப்பா நினைக்கப் போறாங்க.” என்றவள், அவனது தோளோடு அவனது இடக் கைக்குள் அவளது கையையும் சேர்த்துக் கொண்டு கூற, மெளனமாக அவளது கையைப் பார்த்தான்.

‘கையை எடு’ என்று அந்தப் பார்வை சொல்லாமல் சொல்ல, அதைப் பற்றிக் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளவில்லை அவள். ‘நீ என்ன வேண்டுமானாலும் மிரட்டிக்கொள்’ என்பது போல இருந்தது அவளது தோரணை.

“கையை எடு மது…!” மற்றவர்களுக்குக் கேட்காதவாறு அவளது காதுக்கு அருகில் குனிந்து அவன் முணுமுணுக்க,

“கொஞ்சம் சிரிச்ச மாதிரி உட்காருங்க கை எடுக்கறேன்…!” எத்தனுக்கு எத்தியாக அவள் பதில் கொடுக்க, அவன் நறநறவெனப் பல்லை கடிப்பது அவளுக்கும் கேட்டது.

“என்ன மதுக்குட்டி? என்னாச்சு?” அருகில் ஒற்றைச் சோபாவில் அமர்ந்திருந்த சகுந்தலா இருவரையும் பார்த்து மெல்லிய குரலில் கேட்க,

“ஒண்ணுமில்ல அம்மாச்சி. கண்டுக்காதே. இந்தத் துர்வாச முனிவரை மலையிறக்க வேண்டாமா?” மற்றவர்கள் கண்டுகொள்ள முடியாத சிறு புன்னகையோடு சகுந்தலாவிடம் சொன்னவள், அவன் புறம் திரும்பி புருவத்தை உயர்த்திக் கேட்க, அவனையும் அறியாமல் அவனது முகம் மென்மையைத் தத்தெடுத்தது.

மெல்லிய புன்னகை படர்ந்த அவனது முகம் அவ்வளவு வசீகரமாக இருக்க,

“இப்பத்தான் அழகா இருக்கீங்க மாமா. இதையே பொண்ணு வர்ற வரைக்கும் மெய்ன்டெயின் பண்ணுங்க.” என்று கண்ணைச் சிமிட்ட, அவளது அந்தக் குறும்புத்தனம் அவனது புன்னகையை இன்னமும் விரியச் செய்தது.

‘குறும்புக்காரி…’

நல்ல பெண் தான், ஆனால் தேவையில்லாத பழக்கங்கள். தேவையில்லாத நட்புகள்.

தேவையில்லாத நட்புகள் என்று நினைக்கும் போதே, மது யாரோ ஒருவனின் கையைப் பிடித்துத் தொங்கிக்கொண்டு நின்ற காட்சி தோன்ற, அதைத் தொடர்ந்த கசப்பான காட்சிகளும் நினைவுக்கு வந்தது.

உடல் விரைத்தது. மீண்டும் இறுக்கமாக அமர்ந்திருந்தவனைப் பார்த்தாள் மதுவந்தி.

‘ஒரு நிமிஷத்துக்கு ஒன்பது தடவை மலை ஏறுதே இந்தப் பிசாசு…’ என்று மனதுக்குள் திட்டிக்கொண்டாலும் அவனது அந்த முரட்டுத் தோற்றத்துக்குள் ஒளிந்திருக்கும் அந்த மென்மையான மனதைக் கண்டவளால் அவனைத் தவறாக நினைக்க முடியவில்லை.

அதிலும் மதியம்…

அவளது மனம் அந்த சம்பவத்தை மனதுக்குள் ரீவைண்ட் செய்து கொண்டிருந்தது.

****

அப்போது அவன் முறைத்த முறைப்பில் நடுங்கிப் போன மது, மெதுவாகச் சஞ்சய்யின் கையை விடுத்து நிற்க, அவன் ‘திடீரென்று இவளுக்கு என்னவாயிற்று’ என்று எண்ணிக்கொண்டு,

“ஹேய் மது… வாட் ஹேப்பன்ட்?” என்று அவளது இடையைப் பற்ற முயல, நடுங்கிக்கொண்டே அவனைத் தட்டி விட்டாள். அவள் தட்டி விட்டதில் கடுப்பான சஞ்சய், “மது… என்ன பண்றே நீ? என்னாச்சு?” என்று கேட்க,

“மா…மா சஞ்சு….” என்று கிசுகிசுத்தவள், அவனிடம் அதற்கும் மேல் எதையும் பேசாமல், பார்த்திபன் அருகில் சென்றாள்.

உடன் அமர்ந்திருந்த மேகநாதனை பார்த்து, “ஹலோ அங்கிள்…” அவளுக்கு அவர் தெரிந்தவரே என்பதால் வணக்கம் தெரிவித்தாள்.

“என்ன மது? எந்த காலேஜ்ல ஜாயின் பண்ண போற?” சாதரணமாக அவர் கேட்க,

“ரிசல்ட் வர்றதை பொறுத்துப் பார்த்துக்கலாம் அங்கிள். எல்லாத்துக்குமே என்ட்ரன்ஸ் எழுதி வெச்சிருக்கேன். இனிமே தான் டிசைட் பண்ணனும்….!” என்று புன்னகையோடு கூற, சஞ்சய்யை புருவத்தைச் சுருக்கிக்கொண்டு பார்த்தவர்,

“கல்வி அமைச்சரோட சன் சஞ்சய் தானே?” என்று அவரே கேட்க, கேட்டுக்கொண்டிருந்த பார்த்திபனுக்கு தூக்கி வாரிப்போட்டது.

இந்தச் செய்தி அவன் அறியாதது ஆயிற்றே. அவள் அந்த சஞ்சயுடன் நின்று கொண்டிருந்த தோரணை அவனுக்குச் சரியாகப் படவில்லை. அதிலும் அரசியல்வாதியின் வாரிசு வேறு எனும் போது?

அவனது அந்த எரிச்சல் முகத்தில் வெளிப்படையாகத் தெரிய, அதைப் பார்த்துப் பயத்தில் எச்சில் விழுங்கியபடியே, “ஆமா அங்கிள்… என்னுடைய டான்ஸ் மாஸ்டர்…” என்று கூற, அவளை இழுத்து வைத்து அரையும் ஆத்திரம் வந்தது பார்த்திபனுக்கு.

டான்ஸ் மாஸ்டர் என்றால் கைப்பிடித்துத் தொங்கிக்கொண்டு வரவேண்டிய கட்டாயம் என்ன? அதைத் தாண்டி எத்தகைய பழக்கம் இது? பானுமதி இதையெல்லாம் கண்டுகொள்வதே இல்லையா?

அவள் அறிமுகப்படுத்த, சற்று முன்னே வந்த சஞ்சய், பார்த்திபனிடம்,

“ஹாய்…” என்று கைக்கொடுக்க, அவனை முறைத்தான். சத்தியமாக அவனை அங்கு வரவேற்கும் பார்வையல்ல அது. தள்ளி நிறுத்தும் பார்வை.

அதற்கு மாறாக மேகநாதன் அவனுக்குக் கைக்கொடுத்து அந்தச் சூழ்நிலையைச் சமன் செய்யப் பார்த்தார். ஆனாலும் பார்த்திபனின் கோபத்தை அவராலும் குறைக்க முடியவில்லை. நிலைமை சங்கடத்தைத் தர,

“பார்த்தி… ஐ ல் கால் யூ பேக். சி யூ…” என்றபடி விடைபெற, பார்த்திபனின் பார்வை இன்னமும் கூர்மையடைந்தது. எதுவும் பேசாமல் மதுவை பார்த்தான் சஞ்சய். பார்வையால் அவனைக் கெஞ்சினாள் அவள், தயவு செய்து எதையும் பேசிவிடாதே என்று. அவன் கேட்டால் தானே?

“ஹலோ சர்…” என்று அவனிடம் மீண்டும் பேச்சு கொடுக்க,

“உன் அப்பாவுடைய நம்பர் கொடு…” முகத்தில் அடித்தார் போல நெற்றியடியாக சஞ்சயிடம் கேட்ட பார்த்திபனை பயத்தோடு பார்த்தாள் மது.

“எதுக்கு அப்பா நம்பர்?” சஞ்சய்க்கு சுறுசுறுவெனக் கோபம் வந்தது.

“ம்ம்ம்… நாட்டுப் பொருளாதாரத்தை டிஸ்கஸ் பண்ண…” என்று கிண்டலாகக் கூறியவன், மதுவை பார்த்து,

“இது எத்தனை நாளா பழக்கம்?” இடக்காக அவன் கேட்ட தொனி அவளுக்குக் கோபத்தை ஏற்படுத்தினாலும், சுற்றுப்புறத்தை கணக்கில் கொண்டு கோபத்தை மென்று விழுங்கினாள்.

“மா… மா…” அவளுடைய குரல் எழும்பவில்லை.

“சரி… நீ கிளம்பு…” என்று சஞ்சய்யை பார்த்து அவன் கூற,

“எதுக்கு நான் கிளம்பனும்?” கோபமாக அவன் கேட்க,

“இப்ப கிளம்பலைன்னா செவுலு பிஞ்சுடும். என்னைப் பத்தி தெரியாது. என் கோபத்தைக் கிளறாத.” அவன் முறைத்த முறைப்பில் அவனுக்குச் சகலமும் ஆடியது.

“நீங்க ரொம்ப ஓவரா பண்றீங்க. இவளை அடிச்சா மாதிரி என் மேலையும் கை வைக்கலாம்ன்னு நினைக்கறீங்களா? மரியாதை கெட்டுடும். எங்க அப்பா பத்தி உங்களுக்குத் தெரியாது..” பதிலுக்கு அவன் எகிற, மதுவுக்கு பயம் மேலும் அதிகமாகியது. பொது இடத்தில் ரசாபாசமாகிவிடக் கூடாதே!

“சஞ்சு… ப்ளீஸ்…. நீ இப்ப கிளம்பு…” என்று நடுவில் அவள் தடுக்க, அவளை முறைத்தான் பார்த்திபன். அடித்ததைச் சொல்லுமளவு பழக்கமா என்ற கோபம்!

“நான் எதற்குக் கிளம்பனும் மது? ஐ ஹேவ் எவ்ரி ரைட் டூ ஸ்டே ஹியர். நீ வா… நாம போகலாம்…” என்று அவளது கையைப் பிடிக்கப் போனவனின் கையைச் சட்டெனப் பற்றினான் பார்த்திபன்.

கைகளில் இரும்பின் தன்மை. இரும்படிப்பவனிடம் வேறெந்த தன்மையை எதிர்பார்க்க முடியும்?

முகத்தில் கோபத்தின் ஜ்வலிப்பு!

சஞ்சயின் வலக்கையைப் பற்றியவன், எலும்பை நெரிக்க, முதலில் சமாளித்த சஞ்சய், பின் அதைக் காட்டிக்கொள்ளாமலிருக்கப் படாத பாடு பட்டான்.

“ஹேய்…இடியட்… என்னை விடு….” தாங்கமுடியாமலும் கத்த முடியாமலும் திணறினான் சஞ்சய். வன்மையை அறியாத அவனது அந்தத் தன்மையைக் கண்டு அவளுக்குப் பாவமாக இருந்தது. பார்த்திபன் அவனது கையை உடைத்து விடப் போகிறானோ என்ற பயம் பிடித்துக் கொண்டது.

“மாமா… ப்ளீஸ்… அவனை விட்டுடுங்க… ப்ளீஸ்….” சப்தமில்லாமல் அவனைக் கெஞ்சினாள் மது.

இவை அனைத்தும் மற்றவர்களின் கவனத்தைக் கவராமல் அவர்களுக்குள்ளாக, கொஞ்சம் சப்தமும் வெளியே வராமலே நிகழ்ந்தது.

அவள் புறம் திரும்பவும் இல்லை அவன். அவனது பார்வை அனைத்தும் சஞ்சய் மேல் மட்டுமே இருந்தது.

“கேர்ள் ப்ரென்ட், அது இதுன்னு இன்னொரு தடவை என் வீட்டு பெண் மேல உன் கை இல்ல, கண்ணு பட்டா கூட வெட்டிப் போட்டுடுவேன். பார்த்துக்க.” அடக்கப்பட்ட ரவுத்திரத்தோடு அவன் கூறிய தொனி அவனைத் தடதடக்க வைத்தது.

“நான் செய்ய மாட்டேன்னா நினைக்கற? இல்ல உங்க அப்பாவுக்குப் பயந்துக்குவேன்னு நினைச்சியா? ஜெயச்சந்திரன் பையன்னா என்ன கொம்பா? காரமடை பார்த்தின்னு உங்க அப்பா கிட்ட சொல்லிப் பார். அப்ப தெரியும்.”

வார்த்தைகளின் வீரியம் குறையாமல் அவன் கூறிமுடிக்க, சஞ்சய்க்கு அவமானமாக இருந்தது. தன்னுடைய மதுவின் முன் அவளது மாமனை எதுவும் செய்ய முடியாமல், அவனிடம் அடிவாங்குவது போல வாங்கிக்கட்டிக் கொண்டது அவனை உள்ளுக்குள் கொதிக்கச் செய்தது.

கிட்டத்தட்ட உடையும் நிலையிலிருந்த கையைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு மதுவை பார்க்க, அவளது முகத்தில் கோபம். முகம் செக்க செவேலெனச் சிவந்திருக்க, பார்த்திபனை முறைத்துக் கொண்டிருந்தாள்.

தன்னுடைய நண்பனை பார்த்திபன் நடத்தும் விதத்தை அவளால் ஏற்கவே முடியவில்லை.

எதையும் பேசாமல் ஆத்திரத்தை அடக்க முடியாமல் சஞ்சய் முறைத்துக்கொண்டே செல்ல, அவன் பின்னால் செல்ல முயன்றாள் மது.

நகரப்போனவளை இழுத்துப் பிடித்து அமர வைத்தான் பார்த்திபன்.

“விடுங்க மாமா….” அவளது கையை விடுவித்துக் கொள்ள அவள் முயல,

“எதுக்கு? அவன் பின்னாடி ஓடவா?” குரலில் இருந்த எகத்தாளம் அவளது கோபத்தை ஏற்றியது.

“ஆமா… அதுக்கென்ன?” இவனுக்கு இப்படிப் பதில் கொடுத்தால் தான் அடங்குவான் போல. சுறுசுறுவென வந்த கோபத்தோடு அவள் கூற, அவனுக்கு இன்னமும் கோபத்தை தூண்டி விட்டது போலானது.

“அதுக்கென்னவா? அடி ராஸ்கல்… எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்டவே இப்படிச் சொல்லுவ? உன்னையெல்லாம் அடிச்சு வளர்க்க ஆளில்ல. அதான் ரொம்பத் துள்ளிட்டு இருக்க.”

“மாமா… பப்ளிக் பிளேஸ்ல அசிங்கம் பண்ணாதீங்க..” அவளுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. குரலை உயர்த்தவும் முடியவில்லை அங்கே. மேல் தட்டு மக்கள் வந்து போகும் இடம்.

அதை உணர்ந்து அவனும் குரலை உயர்த்தவில்லை. ஆனால் உயர்த்தாமலே திணற வைத்துக் கொண்டிருந்தான்.

“பப்ளிக் பிளேஸ்…. அசிங்கம்ம்ம்ம்ம்…. ஆனா நீ போட்டு இருக்க ட்ரெஸ் ரொம்ப அழகு? இல்லையா? உன்னை சொல்லி பிரயோசனமில்ல. இப்படி அரையும் குறையுமா திரிய விடற உங்கம்மாவை சொல்லணும்…” கடுப்பில் வார்த்தைகளை மென்று துப்பிக்கொண்டிருந்தவனை எரிச்சலாகப் பார்த்தாள்.

“ஏன்? இந்த டிரஸ்ஸுக்கு என்ன குறைச்சல்?”

தன்னுடைய உடையைக் குறைவாகச் சொன்னவனை மண்டையில் நாலு தட்டுத் தட்டினால் என்னவென யோசித்தாள்.

“ம்ம்ம்… என்ன குறைச்சலா?” சற்று தள்ளி அமர்ந்து அவளை மேலிருந்து கீழாகப் பார்க்க, அவளுக்குத்தான் கூசியது. அவளது அந்த உணர்வையும் புரிந்துகொண்டவன்,

“தெரியுதா? எவ்வளவு குறைச்சல்ன்னு…” என்று கடுப்பேற்ற,

“மா… மா…” என்றாள் பல்லை கடித்துக்கொண்டு அவள் கூறினாலும், அந்த கண்கள் லேசாக கலங்க முயன்றது. பார்த்திபனை அவளால் எப்படி முயன்றாலும் சமாளிக்க முடியவில்லையே என்ற ஆற்றாமை அவளுக்குள் சொல்ல முடியாத பயத்தை ஏற்படுத்த, அது கண்களில் கண்ணீரை உற்பத்தி செய்ய பார்க்க, அவனுக்குள் சற்றே இளக்கம்.

கண்களை இறுக்கமாக மூடி தன்னைத் தானே சமன் படுத்திக் கொள்ள முயன்றான். மெல்ல அவனது கோபம் அவனது கட்டுக்குள் வந்தது. சற்று அமைதியடைந்தது. வன்மையாக கூறாமல், வளர்ந்தும் வளராதவளிடம் மென்மையாக சொல்லிப் பார்த்தால் என்னவென்று தோன்றியது!

“மது… நாம எவ்வளவுதான் மேல மேல போனாலும், நம்ம வேரை விட்டுட கூடாது. நம்ம வேர் நம்மோட கலாசாரம் தான்…” என்று சற்று மென்மையாகச் சொல்ல முயன்றான். ஆனாலும் அந்த வார்த்தைகளும் ஏனோ சற்று கோபமாகவே வெளிவந்தது போல இருந்தது.

“ஏன் இந்த ட்ரெஸ்ஸுக்கு என்ன? என்னுடைய பாய் ப்ரெண்டுக்கு என்ன? என்னுடைய விஷயத்தை முடிவு செய்ய எனக்கு உரிமை இருக்கு. நீங்க என்னுடைய ரிலேடிவ். அதுக்காக என்னுடைய விஷயத்தில் அளவுக்கு மீறி மூக்கை நுழைக்கிறதை நான் எப்படி அக்செப்ட் பண்ணுவேன்?”

மூக்கை உறிந்து கொண்டு, விடுவேனா என்று வரிந்து கட்டிக்கொண்டு அவனிடம் மல்லுக்கு நிற்க,

“பாய் ப்ரென்ட்னா வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கியா?” அவளைக் கூர்மையாகப் பார்த்தபடி அவன் கேட்க, மது தடுமாறினாள்.

எதுவும் வேண்டுமா என்று சர்வர் வந்து கேட்க, போதுமென்று கூறி பில்லை வாங்கி, கார்டை அதில் வைத்துக் கொடுத்துவிட்டு மதுவின் முகத்தை நேராகப் பார்த்தான்

“அது… வந்து…. அது….அப்பா….”

“உன்னால் என்கிட்ட பதில் சொல்ல முடியலை, வீட்டுக்கு கூட்டிட்டு வர முடியலை, இவன் என்னுடைய பாய் ப்ரென்ட்ன்னு அறிமுகப்படுத்தத் தைரியமில்லை. அப்படி இருக்கும் போது இந்த ரிலேஷன்ஷிப்ல என்ன உண்மை இருக்கிறதா நீ நினைக்கற மது?”

உண்மையை அவளுக்கு எடுத்துச் சொல்ல அவன் முயன்றான். அதாவது அவன் முயன்றான் அவ்வளவே! ஆனாலும் வார்த்தைகளில் இருந்த சூட்டை அவனாலும் குறைக்க முடியவில்லை. அவளாலும் அதை ஏற்க முடியவில்லை.

“அவன் என்னுடைய கேரியர்க்கு ஹெல்ப் பண்ணுவான். மாடலிங்ல இவனுக்கு நிறையக் காண்டாக்ட்ஸ் இருக்கு மாமா. அதோடு சேம் வேவ்லென்த். இப்படி நிறைய ப்ளஸ் இருக்கு அவன்கிட்ட.”

தன்னுடைய பக்கத்தை நியாயப்படுத்த அவள் முயற்சித்தாள். அதாவது அவளும் முயற்சித்தாள் அவ்வளவே!

பார்த்திபனுக்கு சுருக்கென்றது!

“என்னுடைய ஆம்பிஷனே யூஎஸ் தான் எஸ்பி. இப்ப நீ அதுக்கு செட் ஆவமாட்ட. என்னுடைய கேரியரை நான் ஸ்பாயில் பண்ணிக்க முடியாது. லெட் அஸ் ப்ரேக் அப்.” என்றோ ஒருநாள் ஒருத்தி கூறிவிட்டுப் போனது இப்போதும் அவனது காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது.

பெண்களெல்லாம் இப்படிக் கணக்குப் போட்டுத்தான் காதலிப்பார்கள் போல, உண்மையான அன்பிற்கு பானுமதிப்பில்லையா?

மனதுக்குள் சூறாவளி!

“லவ் பண்றேன்னு கூடத் தைரியமா சொல்லு மது. அது உண்மைன்னா நான் உனக்குக் கண்டிப்பா சப்போர்ட்டா இருப்பேன். ஆனால் இப்படி ஒரு கேவலமான கணக்கு போட்டு பழகாதே. அது அசிங்கம்.” முகத்தைக் கல்லென வைத்துக்கொண்டு அவன் கூற, அவள் அதிர்ந்து அவனைப் பார்த்தாள்.

தான் கூறியதில் தவறு என்ன என்பது அந்தப் பதினேழு வயது பருவ மங்கைக்கு தெரியவில்லை. அவன் கூறிய தொனியில் மேலும் கோபம் வந்தது.

“எல்லாத்தையும் தப்பாவே பார்க்காதீங்க மாமா. சைக்கோ மாதிரி பிஹேவ் பண்றீங்க.” சூடாகக் கூறியவளை உறுத்துப் பார்த்தான்.

“இருக்கட்டும்… நான் சைக்கோவாவே இருந்துட்டு போறேன். ஆனா நீ இந்த மாதிரி அவுட்ஃபிட்ஸ்ல இருக்கிறதை பார்க்க சகிக்கலை. மரியாதையா கிளம்பு.” என்று அவனும் எழுந்து கொள்ள, மதுவுக்கு கோபம் தலைக்கேறியது.

தான் எது செய்தாலும் தவறு! எதை உடுத்தினாலும் தவறு! என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறான் இந்தப் பட்டிக்காட்டான்?

“மைன்ட் யுவர் பிசினஸ் மாமா. எனக்கு எப்படி ட்ரெஸ் பண்ணனும்ன்னு தெரியும். நீங்க அதுல மூக்கை நுழைக்க நினைக்காதீங்க. ஆஃப்டர் ஆல் நீங்க என்னுடைய ரிலேடிவ். அவ்வளவுதான்.” என்றவள் அவனது முகத்தைப் பார்க்காமல் கிளம்ப முயல, அவளது கையை இறுக்கமாகப் பிடித்தவன், கிட்டத்தட்ட இழுத்துக்கொண்டு நடந்தான்.

அதுவரை அவர்களைக் கவனிக்காதவர்கள், இப்போது வெளிப்படையாகக் கவனிக்க, மதுவால் தலை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. அவ்வளவு அவமானமாக இருந்தது.

அவளால் கையை உதறவும் முடியவில்லை. பார்த்திபன் நடந்து கொள்ளும் முறையைத் தட்டிக்கேட்கவும் முடியவில்லை. அதை அங்கீகரிக்க முடியவே இல்லை. கொந்தளித்துக் கொண்டிருந்த கோபத்தை வேடிக்கை பார்த்தவர்களின் பொருட்டு முயன்று அடக்கினாள்.

கண்களில் துளிர்த்த நீரை உள்ளிழுத்துக் கொண்டவள், அவன் இழுத்த இழுப்பிற்கு எதிர்ப்புக் காட்டாமல் நடந்தாள். எதிர்ப்பு காட்டி, அதை ஒரு காட்சியாக்க அவளுக்குப் பிடிக்கவில்லை.

கார் பார்க்கிங் வரையிலுமே அவளது கையை விடாமல் பற்றிக் கொண்டிருந்தவனின் நடையின் வேகம், கார் ஏறுவதற்குச் சற்று முன் தேய்ந்து, பின் நின்றது!

அவனது பார்வை போகும் திசையைப் பார்த்தாள்.

அங்கே ஒரு பெண்!

பார்த்திபனை நோக்கிய வெறித்த பார்வையுடன்!

கையில் ஒரு குழந்தை!

அவ்வளவு அழகான குழந்தை!

அவளது கண்கள் லேசாகக் கலங்கியிருந்ததோ?

பார்த்திபனின் மேலேயே அவளது பார்வை மொய்த்தது. வெகு நாட்கள் கழித்து பார்ப்பது போல…

ஆனால் அவனது கண்களில் அது என்ன பாவம்? அவளால் சற்றும் கணிக்க முடியவில்லை. ஆனால் அதில் சற்றும் நட்புணர்வு இல்லையென்பது மட்டும் நிச்சயம்!

error: Content is protected !!