உயிரின் வேட்டை…

இருள் சரிவர பிரிந்திராத அதிகாலைப் பொழுது. மின் விளக்குகளில் உபயத்தால் சாலைகள் சோபையாக காட்சி தந்து கொண்டிருந்தன. அந்தச் சாலையோர பூங்கா ஒன்றின் நீண்ட நடை பாதையில் ஓட்டப் பயிற்சியை செய்து கொண்டிருந்தான் சரண்.

அங்கிருந்து சற்றே தூரத்தில் விதான் சௌதா கம்பீரமாக காட்சியளித்தது. பெங்களூரு நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள விதான் சௌதா, கர்நாடக சட்டமன்றம் நடைபெறும் இடமாகும். இந்தியாவிலேயே மிகப் பெரிய சட்டமன்ற வளாகமும் அதுதான்.

அந்த அதிகாலையிலேயே பனியில் நனைந்திருந்த கட்டிடத்தை சுற்றிலும் காவலர்கள் பாதுகாப்புக்காக நின்றிருந்தனர்.

சட்டசபை கூடும் நாள் இல்லை என்பதால் வளாகம் சற்றே வெறிச்சோடிக் கிடந்தது…

ஓட்டத்தை முடித்துவிட்டு, அங்கிருந்த இருக்கையில் நடைபயிற்சியை முடித்துவிட்டு அமர்ந்திருந்த தனது தந்தை தீரனின் அருகே வந்தமர்ந்தான் சரண். அந்தப் பனியிலும் அவனது உடல் முழுக்க வியர்த்திருந்தது. கையில்லாத அந்த இறுக்கமான டீசர்ட் அவனை சற்று முரட்டுத்தனமாகக் காட்டியது.
சற்று நேர ஆசுவாசத்திற்கு பின்,

“முடிச்சாச்சா? வீட்டுக்கு கிளம்பலாமா?”
சரியென்று தலையசைத்தவன் எழுந்து நடக்க, தானும் உடன் இணைந்து கொண்டார் தீரன் சக்ரவர்த்தி. விதான் சௌதாவிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் அவர்களது வீடு அமைந்துள்ளதால் தினமும் உடற்பயிற்சியும் ஓட்டப்பயிற்சியும் இங்கேதான்.

“அடுத்த வாரம் சட்டசபை கூடியதும் எதிர்கட்சிகள் கண்டிப்பா கலெக்டர் கொலையைப் பற்றி கேள்வி எழுப்புவாங்க. நாம அதுக்குள்ள எல்லாரையும் சமாதனப்படுத்தற மாதிரி பாசிட்டிவா பதில் ரெடி பண்ணி வைக்கனும் சரண்.”

“இன்னைக்கு காலையில கலெக்டர் வீட்டுக்குப் போய் விசாரணை பண்ணப் போறேன். மதியத்துக்கு மேல ஹரிணியப் போய் பார்க்கனும். நாளைக்கு உங்களுக்கு ரிப்போர்ட் கொடுத்திடுவேன் பா.”

“ஓகே… ஹரிணி ராகுலைப் பார்த்து பயந்துட்டதா சொன்னான். செக்யூரிட்டீஸ் இல்லாம இருக்கவும் ஹாஸ்டல் வாசல்ல போய் பாதுகாப்புக்கு நின்னுருக்கான்.

அந்த நேரம் அந்த பொண்ணு அவனைப் பார்த்திருக்கு போல. மறுபடி ஷாப்பிங் போன இடத்துல பார்க்கவும் பயந்துட்டா போல.”
அந்த நொடி நினைவுகளில் சிலிர்த்துக் கொண்டவன்,

“நல்ல வேளை நான் அங்கே போனது. இல்லைன்னா என்னால யோசிக்கவே முடியல. இன்னைக்கு அவளை மீட் பண்ணி எல்லாத்தையும் தெளிவா பேசிடறேன்பா.”
பேசிக்கொண்டே நடந்து வந்து அவர்கள் வீட்டினுள் நுழைந்தனர்.

அந்த அதிகாலையிலேயே வீட்டில் மெல்லியதாகக் கேட்ட சுப்ரபாதமும் சாம்பிராணி வாசமும் புத்துணர்ச்சியை அளித்தது.

இருவரின் அரவம் கேட்டதும் பூஜையறையில் இருந்து வெளியே வந்தார் திலகவதி.

“ஹாய் ம்மா, குட்மார்னிங்.” அவனது வாழ்த்துக்கு பதில் வாழ்த்து சொன்னவர் இருவருக்கும் காபி கலக்க சமையறைக்குள் சென்றார்.

நாற்பதுகளின் இறுதியில் இருந்த அவர் பார்ப்பதற்கு சரணுக்கு தமக்கை போலதான் இருந்தார்.

எளிமையான காட்டன் சுடிதார் அணிந்து கூந்தலை ஒற்றை கிளிப்பில் அடக்கியிருந்தவர், பூஜையை முடித்ததற்கு அடையாளமாக சந்தனமும் குங்குமமும் நெற்றியில் தீற்றியிருந்தார். பிரபலமான பல்கலைக்கழகம் ஒன்றில் விரிவுரையாளராக பணிபுரிகிறார்.

கீழே விஸ்தாரமான ஹாலும் இரண்டு படுக்கையறை, சமையலறை, பூஜையறையோடு, வீட்டுக்குள்ளே மாடிப்படிகளை அமைத்து மாடியில் ஒரு ஹாலும், இரண்டு படுக்கையறைகள் மற்றும் பால்கனியோடு கூடிய டியூப்ளக்ஸ் வகையிலான கச்சிதமான பங்களா அது.

வீட்டின் முன்புறம் போர்டிகோவும் சிறிய அளவிலான லானும் இருந்தது. பூஜை முடிந்த அடையாளத்தோடு தொட்டியில் இருந்த துளசிச் செடி சிரித்தது.
சரணும் அவனது தந்தையும் உள்ளே நுழைந்து, காபியை கையில் வாங்கிய பின்னும் அவர்களது ஆபீஸ் விஷயங்களைப் பேசிக்கொண்டிருக்க கடுப்பானவர்,

“இது வீடு. உங்க ஆபீஸ் இல்லை. ஆபீஸ்ல அபீஷியலா மட்டும் பேசனும். அதே மாதிரி ஆபீஸ் விஷயத்தை வீட்ல பேசக்கூடாது.”
இரு கைகளை உயர்த்தி சரண்டர் என்பது போல சைகை செய்த தீரன்,

“ஒத்துக்கறேன் இனி பேசலை.”

“காலையில மட்டும்தான் அப்பாவையும் மகனையும் பிடிக்க முடியுது. மத்த நேரம் பிசியோ பிசி. இந்த நேரத்துலயும் அந்த கேஸ் இந்த கேஸ்னு பேசனுமா?” சற்று ஆற்றாமையோடு வந்தது குரல்.

“ஓகே… ம்மா. இந்த நேரம் முழுக்க உங்களுக்கானது. என்ன பேசனும் சொல்லுங்க.?”

“வேற என்ன பேசப் போறேன். உனக்கும் ஹரிணிக்கும் ஜாதகம் நல்லா பொருந்தியிருக்காம். அவங்க எல்லாருக்குமே இந்த சம்பந்தம் ரொம்ப பிடிச்சிருக்காம். ஹரிணிகிட்ட ஒரு வார்த்தை பேசிட்டு பொண்ணு பார்க்க வர்ற தேதியை சொல்றோம்னு சொல்லியிருக்காங்க. அநேகமா பேசியிருப்பாங்க. இன்னைக்கு ஃபோன் வரும்னு நினைக்கிறேன்.”

“ம்மா… இன்னும் உங்க மருமகளுக்கு விஷயம் போகலை. அவளுக்கு எதுவுமே தெரியாது. என்னையும் யார்னு தெரியல.”

“அவளைப் பார்த்து பேசிட்டியா சரண்?” ஆவலோடு வந்தது குரல்.

“ம்ப்ச்… இல்லை.”
கேள்வியோடு நோக்கியவரிடம் ஆதியோடு அந்தமாக இந்த மூன்று நாட்களில் நடந்த நிகழ்வுகளைக் கூற, மிகுந்த பதட்டமாகிப் போனார்.

“ஹரிணி அப்பாவி பொண்ணு. இங்க பாரு சரண் என் மருமகளுக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது. ஒருத்தருக்கு இரண்டு பேர் போலீசா இருந்து என்னத்துக்கு? எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அவளை நம்ம வீட்டுக்கு மருமகளா கூட்டி வந்துட்டா போதும். அதுக்கப்புறம் எது வந்தாலும் நாம சமாளிச்சிடலாம்.”

“இப்பவும் அவளை விட்டுடுவோமா. அவளோட பாதுகாப்புக்கு என்ன செய்யனுமோ எல்லாம் செய்திருக்கோம். எந்த பிரச்சனையும் வராது திலகா.” கணவரின் கூற்று நிம்மதியளித்தாலும்,

“இருந்தாலும் ஹாஸ்டல்ல தனியா தங்கி படிக்கிற பொண்ணு பயந்துடப் போறா.”

“ம்ம்… இப்ப கொஞ்சம் பயந்துதான் இருக்கறா. ஆனா அவ இயல்புல தைரியமான பொண்ணுதான்.”

“சரண் இன்னைக்கு கண்டிப்பா அவளைப் பார்த்து பேசிடு. நானும் உன்கூட வரவா?”

“வேண்டாம்ம்மா… நானே பார்த்துக்குறேன். ஓகே டைம் ஆகிடுச்சி. நான் கிளம்பி வர்றேன் டிபன் ரெடி பண்ணுங்கம்மா.”

“ம்ம். எனக்கும் முக்கியமான மீட்டிங் இருக்கு. நானும் கிளம்பி வர்றேன்” தீரனும் சென்றுவிட,
அடுத்த பரபரப்பான சில நிமிடங்களுக்குப் பிறகு அவரவர் அவரவரது பணிக்கு கிளம்பினர்.

*****

பரபரப்பான காலைப் போக்குவரத்து நிறைந்த சாலை. கடும்பனி விலகி நன்றாகவே சூரியன் முகத்தைக் காட்டிக் கொண்டிருந்தது. பசுமையான இலைகளில் இரவெல்லாம் உறைந்திருந்த பனி, நீராக உருமாறி முத்து முத்தாக பூத்திருந்தது.

கலெக்டர் பங்களாவிலிருந்து வெளியே வந்தான் சரண். அவரவர்க்கு அவரவரது வேலைகள்.

இதில் யார் இறந்தால் என்ன? யார் இருந்தால் என்ன? மூன்று நாட்களிலேயே கலெக்டர் வீடும், அவரது வீடு இருந்த ரோடும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியிருந்தது.
இறந்து போன கலெக்டர் கிஷோரின் இல்லத்தில் அனைவரும் துக்கத்தோடு இருப்பார்கள் என்பதால், கொலை நடந்த அன்று மேலோட்டமாக மட்டுமே ஆரம்பகட்ட விசாரணை நடத்தியிருந்தான் சரண்.

இன்று முழுமையானதொரு விசாரணையை முடித்தாயிற்று. கிஷோரின் இளமைப் பருவத்திலிருந்து கொலை செய்யப்படுவதற்கு முன்பு வீட்டில் குடித்த காபி வரை அனைத்து தகவல்களும் திரட்டியாயிற்று.
சந்தேகத்திற்கிடமாக நெருடலாக தோன்றியவற்றை மனதில் குறித்துக் கொண்டான். அரசியல் ரீதியாக கொலை நடந்திருக்க வாய்ப்பு குறைவுதான். சமீபத்தில் அரசியல்வாதி ஒருவர் சர்ச்சையில் சிக்கிய வழக்கில்கூட கலெக்டர் அந்த அரசியல்வாதிக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகத்தான் கூறப்பட்டுள்ளது.

எந்த அரசியல்வாதியையும் பெரிதாக பகைத்துக் கொண்டதுபோலத் தெரியவில்லை. கர்நாடக மாநிலத்தில் முக்கிய மாபியாவான சுரங்க மாபியாவுடன்கூட கலெக்டருக்கு நல்ல பிணைப்பே இருந்துள்ளது. அவரைக் கொல்ல வேண்டிய அவசியம் அவர்களுக்கு இருந்ததுபோலத் தெரியவில்லை.
வெளி வட்டாரங்களில் விசாரித்தவரை கலெக்டர் ஒன்றும் சொக்கத்தங்கம் இல்லை என்பதும் புலனாகிறது. கிடைக்கும் திசைகளிலெல்லாம் அவரது கரங்கள் நீண்டிருக்கின்றன.

பாதிக்கப்பட்ட எவனோ ஒருவன் வைத்து செய்திருக்கிறான். இதில் யாரை எதிரியெனக் கொள்வது. கேஸ் இடியாப்பச் சிக்கல் போல இழுக்கும் என்று தோன்றியது.
கொலைக்கான தடயம் என்று ஒன்றுகூடக் கிடைக்காமல், கொலைக்கான காரணமும் பிடிபடாமல் மண்டை காய வைக்கிறது இந்த கேஸ் என்று வெகுவாக சலித்துக் கொண்டது மனது. ஆனால் எந்த ஒரு குற்றவாளியும் தடயங்களை விடாமல் செல்வதில்லை என்று படித்த போலீஸ் பாலபாடம் மனதில் வந்து மணியடிக்க,

இருசக்கர வாகனத்தில் பயணித்து அவனது அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தவன், இதுவரை திரட்டிய தகவல்கள் அனைத்தையும் மீண்டும் ஒருமுறை நிதானமாகப் படிக்கலானான். நொடிக்கு நொடி மூளை பல கணக்குகளைப் போட்டவாறு இருந்தது.

பிரேதப் பரிசோதனை அறிக்கையும் கொலையாளியின் உருவ அமைப்பும் சற்று குழப்பம் தருவது போல இருந்தது.

கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட ஆயுதம் கலெக்டர் உடலில் அவ்வளவு ஆழமாக இறங்கவில்லை. ஆனால் உடலின் முக்கிய உறுப்புகளான கல்லீரல் கணையம் ஆகியவற்றை சேதப்படுத்தி முக்கிய நரம்புகளை வெட்டியிருக்கிறது.

கொலையாளி மனித உடல் உள்ளுருப்புகளைப் பற்றி நன்கு தெரிந்தவனாக இருக்க வேண்டும். மருத்துவம் படித்தவனாகக்கூட இருக்கக்கூடும். பதட்டமில்லாத நிதானமான அவனது அனுகுமுறை,

வெகு நாட்களாக அவன் திட்டமிட்டு இதனை நிகழ்த்தியிருக்கக்கூடும் என்று தெளிவாகக் காட்டுகிறது.
மீண்டும் மீண்டும் சிசிடிவி பதிவுகளை உன்னிப்பாக பார்த்து வந்தவனின் புருவங்கள் லேசாகச் சுருங்கின… கொலையாளியின் நிதானமான நடை வித்தியாசமாக இருந்தது. ஒரு பெண்ணின் நடை போல மெதுவாக கால்கள் லேசாகப் பின்ன நடை போடுவது போலத் தோன்றியது.

பொருத்தமில்லாத காலணிகளை அணிந்திருப்பவன் நடப்பது போல… சட்டென்று மனதில் ஒன்று தோன்றியது. கொலையாளி ஏன் ஒரு பெண்ணாக இருக்கக்கூடாது?
ஒரு குறிப்பேட்டை எடுத்தவன் மளமளவென்று மனதில் தோன்றிய சந்தேகங்கள் அனைத்தையும் எழுதத் தொடங்கினான்.

கொலையாளியின் உருவம் தலைமுதல் கால் வரை வெளியே தெரியாதவாறு மூடப்பட்டுள்ளது. ஆண்களுக்குப் பொருந்தாத மெதுவான நடை. ஆழமில்லாத அதே நேரம் முக்கிய பகுதிகளை சேதப்படுத்திய ஆயுதப் பிரயோகம். நிதானமான அனுகுமுறை.

கொலையாளி பெண்ணாக இருக்கக்கூடும் என்பதற்கான சந்தேகங்களாகப் பட்டியலிட்டான்.

கலெக்டர் பெண்கள் விஷயத்திலும் படுமோசம் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. பெரிய வீடு, சிறிய வீடு, நடு வீடு, கடைசி வீடு என்று ஏகப்பட்ட வீடுகளை வைத்திருந்திருக்கிறான்.

கணவர் இறந்துவிட்ட சோகம் மெலிதாக கலெக்டர் மனைவியின் கண்களில் தெரிந்தாலும் விடுதலை உணர்வும் மிளிர்ந்ததை அறிய முடிந்தது.

கணவர் இறந்த அன்றுகூட அந்தப் பெண் பெரியதாக அழுது புலம்பிப் பார்க்கவில்லை. லேசாகக் கண்கள் கலங்கி நின்றிருந்தார் அவ்வளவுதான். சில கேள்விகளுக்கு பதில் சொல்கையில் கணவர் மீதான அவரது வெறுப்பு அப்பட்டமாகத் தெரிந்தது.

கலெக்டரின் அன்றாட நடவடிக்கைகளைப் பற்றி நன்கு தெரிந்தவர் ஆதலால், வாக்கிங் வந்த கலெக்டரைத் தொடர்ந்து வந்து கொலையை நிகழ்த்தியிருக்கக்கூடும். அவரும் ஒரு மருத்துவரே. கலெக்டர் மனைவியின் மீதான சந்தேக வட்டம் சற்று பெரிதானது.

கணவனின் கல்யாண குணங்களைப் பொருத்துக் கொள்ள முடியாமல் கொலை நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ளது. ஹரிணியிடம் பேசினால் ஒரு முடிவுக்கு வர முடியும். நேரில் பார்த்த அவளால் பல சந்தேகங்களைத் தீர்க்க முடியும்.
ஹரிணியை நினைத்த மாத்திரத்தில் மனம் கனிந்து லேசானது. எவ்வளவு மென்மையான பெண்.

எதிர்பாராதவிதமாக கொலையைப் பார்க்க நேர்ந்தது அவளுக்கு எவ்வளவு பெரிய அதிர்ச்சி என்பது நன்கு புரிந்தது அவனுக்கு.
‘எந்த அளவுக்கு பயந்தும் குழம்பியும் போயிருக்கிறாள் என்பதற்கு நேற்று நடந்த சம்பவமே சாட்சி. ஒரு நொடியில் உயிரையே உருவி எடுத்தது போல என்னைப் பதற வைத்துவிட்டாள். நேற்று என்னைச் சந்தித்ததையும் எண்ணிக் குழம்பிக் கொண்டிருப்பாள். அவள் என்னைப் பார்த்த பரிட்சையமற்ற பார்வையே தெளிவாக சொல்லிவிட்டது, அவளுக்கு நான் யார் என்பது தெரியாது என்று.

அவளைச் சந்தித்து என்னைப் பற்றிக்கூறி முறையாக அறிமுகம் செய்துகொண்ட பிறகு, நான் அவளுக்குத் துணையிருப்பேன் என்ற தைரியத்தையும் அளிக்க வேண்டும்’ என்று மனதில் எண்ணிக் கொண்டவன்,
மதியம் முக்கியமான கலந்தாலோசனைக் கூட்டம் ஒன்று இருப்பதால் மாலை அவளைச் சென்று சந்தித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து, மீண்டும் கலெக்டரின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் மூழ்கினான்.

*****
இரவு முழுவதும் பயத்தில் அனத்தி காய்ச்சலை வரவழைத்துக்கொண்ட ஹரிணியை அருகில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள் சுஜி. அருகில் உள்ள டிஸ்பென்சரிக்குச் சென்று காட்டி மாத்திரை வாங்கி வந்தாயிற்று.

அரை இட்லியை வற்புறுத்தி உண்ண வைத்து மாத்திரை போட வைத்திருந்தாள் சுஜி. கண்களும் முகமும் இதழ்களும் சிவந்து போய் ஒரே நாளில் பாதியானது போலத் தெரிந்தாள் ஹரிணி. ஹரிணியைத் தனியே விட்டுக் கல்லூரிக்குப் போக மனமில்லாமல் சுஜியும் அன்று விடுதியில்தான் இருந்தாள்.

வெளியே செல்லும் போது கவனித்தவரையில் யாரும் கண்காணிப்பது போலவோ பின்தொடர்வது போலவோ தோன்றாததால் நடந்தவை அனைத்தும் ஹரிணியின் அதிகப்படியான கற்பனையோ சாதாரணமாக நிகழ்ந்த நிகழ்வுகளை எண்ணி பயந்து கிடக்கிறாளோ என்றும் எண்ணத் தோன்றியது அவளுக்கு.

ஆனால் பயத்தில் வெடவெடத்துக் கிடப்பவளைப் பார்த்தாலும் பாவமாக இருந்தது. அப்படி சாதாரணமான நிகழ்வுகளுக்கெல்லாம் பயப்படுபவள் அல்ல என்பதும் புரிந்தது. எதுவாக இருந்தாலும் இப்போதைக்கு அவளுக்கு ஓய்வு தேவை. நன்கு தூங்கட்டும்.
மாலையில் ரேணுவின் அண்ணனைப் பார்த்து நடந்தது அனைத்தையும் ஆதி முதல் அந்தமாக சொல்லிவிட்டால் மீதியை அவர் பார்த்துக் கொள்வார். மனதில் எண்ணியபடி வெளியே கிளம்பினாள்.

காலையில் கைதவறி கீழே விழுந்த அலைபேசியின் தொடுதிரை லேசாக சேதமானதில் அதனை சர்வீஸ் சென்டருக்குச் சென்று பழுது நீக்கக் கொடுக்கும் வேலையிருந்தது சுஜிக்கு. ரேணுவின் எண் ரேணுவின் அண்ணன் எண் மற்றும் சில முக்கியமான எண்களைக் குறித்துக் கொண்டவள் அலைபேசியை பழுதுநீக்கக் கொடுத்து வந்தாள்.

நன்கு தூங்கி எழுந்த ஹரிணியின் முகம் மாலையில் சற்று தெளிவாக காணப்பட்டது. இதழ்களின் சிவப்பும் கண்களில் லேசான சிவப்பும் தவிர ஜுரம் வந்த சுவடு ஏதுமின்றி முகம் பளிச்சென்று இருந்தது. இருவரும் ரேணுவின் அண்ணனைப் பார்க்க மால் செல்வதற்கு கிளம்பித் தயாராகினர்.

ஹரிணி காலர் வைத்த முழுக்கை குர்தி ஒன்றை அணிந்து அதற்குத் தோதாக லெக்கிங்ஸ் அணிந்திருந்தாள். சுஜி வழக்கம் போல ஜீன்ஸ் உடன் சற்று லூசான டாப் ஒன்றை அணிந்திருந்தாள்.
ஆட்டோ ஒன்றை புக் செய்து, விடுதி வாயிலிலேயே ஏறிக்கொண்டவர்களின் பார்வை சுற்றுப் புறத்தையே அலசியபடி வந்தது. சந்தேகத்திற்கிடமாக ஒருவரும் பின் தொடரவில்லை என்பதை உறுதி செய்து கொண்ட பிறகே இருவருக்கும் ஆசுவாசமாக இருந்தது.

“தேவையில்லாம நேத்து பயந்துட்டன்னு நினைக்கிறேன் ஹரி. எதேர்ச்சையா நடந்ததை குழப்பிக்கிட்டியோன்னு தோனுது.”

“கண்டிப்பா இல்லை சுஜி. நேத்து வந்தவன் என்னை ஃபாலோ பண்ணது உண்மை. இன்னோருத்தன் யார்னே தெரியல, ஆனா அவன் என்னைக் காப்பாத்துனதும் உண்மை.

அவனுமே கொஞ்சம் பயந்திருக்கனும், அதனாலதான் என்னை அப்படி இறுக்கிப் பிடிச்சி வச்சிருந்தான்னு நினைக்கிறேன்.
அப்புறம் அவன் நான் யாருன்னு ஹாஸ்டல்ல போய் யோசின்னான். நானும் நேத்துல இருந்து மண்டைய உடைச்சிக்கிறேன், அவன் யாருன்னு சத்தியமா எனக்குத் தெரியல.

ஆனா இரண்டு பேருமே எனக்கு கெடுதல் பண்ண வரலைங்கற அளவுக்கு புரியுது. ஒருத்தன் நான் சேஃபா ஹாஸ்டல் வர்றவரை கூடவே ஃபாலோ பண்ணி வந்தான்னா, இன்னோருத்தன் நான் அங்க தவறவிட்ட எல்லா பொருளையும் எடுத்து வந்து தந்துட்டு போறான்.”

“சரி விடு ரொம்ப குழப்பிக்காத… இப்ப ரேணு அண்ணனப் போய் பார்த்து அவர்கிட்ட நடந்ததை எல்லாம் சொல்லிட்டோம்னா நாம ஃபிரியாகிடலாம்.” பயத்தில் குளிர்ந்திருந்த ஹரிணியின் கரங்களை அழுந்தப் பற்றிக் கொண்டு ஆறுதல் கூறினாள் சுஜி.

ஃபோரம் மால்… ஹோசூர் ரோடில் கோரமங்களா என்னும் இடத்தில் அமைந்துள்ள ஐந்தடுக்கு வணிக வளாகமாகும். இங்கு கிடைக்காத பொருட்களே இல்லை எனும் வகையில் குண்டூசி முதல் கார் வரை தேவையான அனைத்தும் வாங்க தனித்தனி கடைகள் ஒரே வளாகத்தில் அமந்திருந்தது.
பன்னிரண்டு திரையரங்குகள் அந்த வணிக வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஒரு மாடி முழுவதும் வித விதமான பல்வேறு நாட்டு உணவு வகைகளைத் தயாரித்துத் தரும் உணவகங்கள் இருந்தன. நான்கு புறமும் உள் நுழையும் வசதி கொண்ட இது சற்று பழமையான வணிக வளாகமாகும்.
சுஜியும் ஹரிணியும் பயணித்த ஆட்டோ அவர்களை ஃபோரம் மாலில் கிழக்கு புற வாசலில் உதிர்த்துவிட்டுச் சென்றது. விளக்கு வெளிச்சத்தில் ஜொலி ஜொலித்தது மால். இருவரும் உள்ளே நுழைந்து அமர்ந்து பேசுவதற்கு ஏதுவான இடமாக உணவகம் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அங்கே சென்று அமர்ந்தனர்.

“அந்த அண்ணா எத்தனை மணிக்கு வர்றதா சொன்னாரு சுஜி?”

“ஆறு மணிக்கு வந்துடுவேன்னு சொன்னாரு. இன்னும் கால் மணிநேரம் டைம் இருக்குல்ல. வந்துடுவாரு.”
தலை வலிப்பது போல இருக்கவும், தனக்கு சூடாக ஒரு காபியை வாங்கி வந்தவள், சுஜிக்கு ஐஸ்க்ரீம் ஒன்றையும் வாங்கி வந்து தரவும், இருவரும் அமைதியாக அமர்ந்து சுற்றுப்புறத்தை கண்களால் அளந்தவாறு உண்டு கொண்டிருந்தனர்.

வார வேலை நாட்கள் ஆதலால் மாலில் அவ்வளவு கூட்டமில்லாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக மனிதத்தலைகள் தென்பட்டது. விடுமுறை நாட்களாக இருந்திருந்தால்,எள் போட்டால் எண்ணெய்யாகிவிடும் அளவுக்கு கூட்டம் இருக்கும்.

சுஜியின் கையிலிருந்த ஐஸ்க்ரீம் பாதி காலியாகியிருந்தது. ஹரிணி கையில் இருந்த காபி முழுவதும் காலியாகியிருந்தது. மேலும் சில நிமிடங்கள் ஓடிப்போக, டி எஸ் பி. வரும் வழியைக் காணோம்.

“ஏய் சுஜி, ரேணு அண்ணுக்கு ஒரு கால் பண்ணேன். அவர் பேர் என்ன?”

“இந்தா நம்பர். உன்னோட ஃபோன்ல இருந்து போடு. என்னோட மொபைல் சர்வீசுக்கு கொடுத்திருக்கேன். அவர் பேர் ஜனார்த்தனன்.”
நம்பரை வாங்கி தனது மொபைலில் டையல் செய்தவளுக்கு, முதலில் முழுதாக ஒரு அழைப்பு சென்று யாரும் எடுக்காமல் கட் ஆனது.

“என்னடி ஃபுல் ரிங் போய் கட் ஆகுது. யாரும் எடுக்கல.”

“திரும்பப் போடு ஹரிணி.”
சரி என்றபடி மறுமுறை அழைக்க, இம்முறை சற்று நேரம் கழித்து அழைப்பு ஏற்கப்பட்டது.

“ஹலோ, சார்… நாங்க ஹரிணி சுஜி, உங்கள பார்க்க அப்பாயிண்மென்ட் வாங்கியிருந்தோமே…”

“ஓ… ஓகேம்மா. ட்ராவல்ல இருந்ததால ஃபோன் எடுக்க முடியல. நானும் மாலுக்கு வந்துட்டேன். எங்க இருக்கீங்க? நான் கார் பார்க் பண்ணிட்டு அஞ்சு நிமிஷத்துல வந்துடறேன். இது புது நம்பரா இருக்கே.”

“இது என்னோட நம்பர் சார். நான் ஹரிணி. நாங்க ஃபுட் கோர்ட்ல வெயிட் பண்றோம் நீங்க வந்துடுங்க சார்.”

“ஓகேம்மா” என்றபடி எதிர்புறம் அலைபேசி அணைக்கப்படவும்,

“கார் பார்க் பண்ணிட்டு அஞ்சு நிமிஷத்துல வந்துடறாராம். நாம இங்கயே வெயிட் பண்ணுவோம்.”
மீண்டும் காத்திருப்பு ஆரம்பமானது. இப்பொழுது ஐஸ்க்ரீமும் முடிந்திருக்க, இடத்தையும் தன்னையும் சுத்தப் படுத்திவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தனர்.
ஐந்து நிமிடம் பத்து நிமிடமானது.

பத்து நிமிடம் பதினைந்து நிமிடமானது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டும் வாட்சைப் பார்த்துக் கொண்டும் அமர்ந்திருக்க இருபது நிமிடங்கள் ஓடிப் போனது.

“என்னடி இவ்ளோ நேரமாகிடுச்சி. கார் பார்க் பண்ணிட்டு வர இவ்ளோ நேரமா? இன்னும் காணோம்.”

“அவருக்கு கால் பண்ணிப் பாரு.”
அலைபேசியை எடுத்து ரேணுவின் அண்ணனுடைய எண்ணிற்கு முயற்சிக்க, ரிங் சென்றதே ஒழிய அழைப்பு ஏற்கப்படவேயில்லை. மீண்டும் மீண்டும் முயற்சித்தும் அலைபேசி அழைப்பு ஏற்கபடாமல் போக,

“என்னடி ஃபோனை எடுக்கவே மாட்டேங்குறாரு.”

“தெரியலையே, பார்க்கிங்ல போய் பார்க்கலாமா?”

“எந்த வழியா வந்தாருன்னும் தெரியலையே? அவரை உனக்கு அடையாளம் தெரியுமா?” ஹரிணியின் கேள்விக்கு உதட்டைப் பிதுக்கினாள் சுஜி.

“சுத்தம்… அடையாளம் தெரியாம எங்க போய் தேடறது?”
இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் மேலும் பத்து நிமிடங்கள் ஓடிப்போக…

“ரேணுவுக்கு ஃபோன் பண்ணி அவ அண்ணன் ஃபோட்டோவ அனுப்ப சொல்லுவோம். வரேன்னு சொல்லி அரைமணிநேரம் ஆகிடுச்சி… இன்னும் காணோம். கீழ போய் கார்பார்க்கிங்ல கொஞ்சம் தேடிப் பார்ப்போம். யாரையாவது தெரிஞ்சவங்களப் பார்த்து பேசிகிட்டு கூட இருக்கலாம்.”
முடிவெடுத்தவர்கள் ரேணுவுக்கு அழைத்து அவளது அண்ணன் புகைப்படத்தை அனுப்பச் சொல்லிவிட்டு காத்திருக்க, சில நொடிகளில் அவளது அண்ணனின் புகைப்படம் ஹரிணியின் மொபைலுக்கு வந்து சேர்ந்தது.

புகைப்படத்தைப் பார்த்ததும் அங்கிருந்து கிளம்பி, எஸ்கலேட்டர் வழியாக மாலைச் சுற்றி எங்காவது ரேணுவின் அண்ணன் தென்படுகிறாரா என பார்வையை சுழற்றியபடியே இறங்கினர்.

*****
இரைச்சலான வாகனச் சத்தங்களுக்கு இடையே ட்ராபிக்கில் மெதுவாக ஊர்ந்த வாகனங்களுக்கு இடையே ஜீப்பில் அமர்ந்திருந்தான் சரண். அவனது அலைபேசி இசைக்க, ப்ளூடூத் மூலமாக இணைப்பை எடுத்தவன், “சொல்லு ராகுல். நான் ஃபோரம் மால் வர இன்னும் அரைமணி நேரமாவது ஆகும்.”

“சார் நான் ஃபோரம் மால்ல இருந்துதான் பேசறேன். மேடமும் அவங்க ஃபிரெண்டும் இங்க வந்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆகப்போகுது.

ஆனா யாரையும் மீட் பண்ணல சார். மூன்று முறை யாருக்கோ ஃபோன் செய்து பேசினாங்க. ஆனா யாருக்குன்னு தெரியல. இப்ப இரண்டு பேரும் கிளம்பிட்டாங்க சார்.

மேடம் காபி குடிச்சாங்க. அவங்க ஃபிரெண்டு ஐஸ்க்ரீம் சாப்பிட்டாங்க.” கடைசியாக முடிக்கும் போது அவனுக்கே சிரிப்பு வந்துவிட…

“டேய் உன் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா…?” என்று நகைத்தவன்,

“அவங்க பார்வையில படாமதான இருக்க? உன்னைப் பார்த்து பயத்துல படியில உருண்டுட போறா…”

“இல்ல சார் மேடம் பார்வையில படாத தூரத்துலதான் இருக்கேன் சார்.”

“ஓகே… நான் அங்க வர்றதுக்கு எப்படியும் அரை மணி நேரத்திற்கு மேல ஆகும். நான் அவளை ஹாஸ்டல்ல போய் மீட் பண்ணிக்கிறேன். அவங்க சேஃப்பா ஹாஸ்டல் போனதும் இன்ஃபார்ம் பண்ணு.”

“ஓகே. சார்.”

—வேட்டை தொடரும்.

error: Content is protected !!