அத்தியாயம் – 7
தென்னதோப்பின் நிழலில் கார் நிற்க இதமாக வீசிய தென்றல் அவனை வருடிக் குளிர்விக்க நினைத்தது. அவனின் மனதிற்கு கொதிக்க அவளைத் திரும்பிப் பார்த்தான். அவளோ வெளியே வேடிக்கைப் பார்த்துகொண்டு மெளனமாக இருந்தாள்
அவளின் பக்கம் திரும்பிய முகிலன், “வர்ஷா உனக்கு என்னதான் பிரச்சனை..” என்று அவளிடம் நேரடியாகக் கேட்டான்.
அவளிடம் அசைவு இல்லாமல் இருக்க வலுக்கட்டாயமாக அவளின் முகத்தைத் தன்பக்கம் திருப்பிய முகிலனின் பொறுமைக் காற்றில் பறந்தது.
“உன்னோட மனசில் என்னதான் நினைச்சிட்டு இருக்க? நீ பேசற பேச்சு செய்யும் செயல் இந்த இரண்டிலும் கொஞ்சமாவது மனசாட்சின்னு ஒன்னு இருக்கா இல்லையா?” என்று வெறுப்புடன் கேட்ட முகிலன் வெளியே வேடிக்கை பார்த்தான்.
“நான் என்ன பொம்மையா?” என்றவளின் கண்கள் கலங்க தயாராக இருந்தது. அவளின் ‘பொம்மையா?’ என்ற வார்த்தைகளுக்கு உள்ளர்த்தம் புரியாமல் அவளின் பக்கம் திரும்பினான் முகிலன்.
“என்னை என்னவோ உங்க எல்லோரோட இஷ்டத்திற்கு ஆட்டி வெக்கிறீங்க..” என்ற மேகா தொடர்ந்து, “என்ன கேட்டீங்க எனக்கு மனசாட்சி இருக்கான்னா? உங்களுக்கு அது முதலில் இருக்கா?” அவள் இளக்காரமாகத் திரும்பக் கேட்க அவனின் முகம் சிவந்தது.
“ஏன் எனக்கு மனசாட்சி இல்லன்னு சொல்றீயா?” என்று எரிச்சலோடு அவன் கேட்க, “ஆமா..” என்றாள் அழுத்தமாகவே.
“அது உனக்குத்தான் இல்லடி..” என்றான் அவனும் வெறுப்புடன்.
“என்னை உங்களுக்கு எத்தனை மாசமாகத் தெரியும்?” என்று சம்மதமே இல்லாமல் கேட்டவளின் முகத்தைப் புரியாத பார்வை பார்த்தவன்,
“இப்போ எதுக்கு அதுபற்றிக் கேட்கிற..” என்றான் அவள் எரிச்சலோடு.
“இல்ல சொல்லுங்க எனக்குத் தெரியனும்..” என்றாள் அவள் பிடிவாதமாக.
“ஒரு ஏழு மாசமாக உன்னைத் தெரியும்..” அவன் எங்கோ பார்த்தபடியே சொல்ல அவனின் மீது பார்வையைப் படரவிட்டாள் மேகா
“இந்த ஏழு மாசத்தில் நீங்க என்னோட விருப்பம் பற்றியோ இல்ல, என்னோட ஆசைப் பற்றியோ என்னைக்காவது ஒருநாள் நினைச்சு பார்த்தீங்களா?” என்று கேட்க அவனின் புருவம் கேள்வியாகச் சுருங்கியது.
மேகவர்ஷினி தன்னுடைய மனைவி என்பது தவிர மற்ற எதுவுமே இன்றுவரை அவனுக்குத் தெரியாது என்று அவனின் உள்ளம் உண்மையை உரைக்க ஊமையானான் முகிலன்.
“உங்களைப் பற்றி நான் சொல்லவா. நீங்கப் பெரிய பிஸ்னஸ்மேன். பணம் என்ற சாம்ராஜ்ஜியத்தின் அதிபதி. கெட்ட நண்பர்களின் சாவகாசமாகத் திசைமாறியவர். உங்களுக்கு இல்லாத கெட்ட பழக்கம் இல்ல. நீங்க டீல் பேசினால் அந்த இடத்தில் நீங்க நினைப்பது மட்டும்தான் நடக்கும். தன்னைச் சுற்றி இருக்கும் யாருடைய மனம் பற்றியும் அறிய நினைக்காமல் சுயநலமாக இருப்பது நீங்க மட்டும்தான்..” என்று அவனைப் பற்றிய முழு விவரங்களையும் அறை நொடியில் சொல்லிவிட்டாள்.
தன்னைப் பற்றி அனைத்து விவரத்தையும் அரைநொடியில் சொல்லிவிட்ட தன்னுடைய மனையாளைத் திரும்பிப் பார்த்துவிட்டு அமைதியானான் முகிலன்.
அவனைத் திரும்பிப் பார்த்த மேகா, “இன்னைக்கு வரைக்கும் உன்னோட குணத்தை மாற்றிக்க நினைக்காமல் இருக்கிற. உனக்குக் குழந்தை வேண்டும் என்று ஆசை வேற..” என்று ஏளனமாக உதட்டை வளைத்தவளைப் பார்க்கப் பார்க்க அவனின் கோபம் அதிகரித்தது.
“ஒரு நாள் கூட நீ என்னைப் பற்றி யோசிக்கல. அதுகூட பரவல்ல உன்னைப் பெற்ற உங்கம்மா பற்றி யோசிச்சியா?” என்று நிறுத்தி நிதானமாகக் கேட்ட அவளின் கேள்விக்கு அவனிடம் பதிலில்லை.
அவளின் ஒவ்வொரு கேள்வியும் சரியாக அதற்குப் பதிலடிக் கொடுக்க முடியாமல் தடுமாறினான் முகிலன். மேகா இந்த அளவுக்கு யோசிக்கும் பெண் என்று அவனுக்கு இன்றுதான் தெரியும்.
பெண்கள் பலகினமானவர்கள் என்று சொல்றாங்க. அவளைப் பார்க்கும்போது மட்டும் அது பொய் என்று கத்த வேண்டும் என்று தோன்றியது முகிலனுக்கு.
“உன்னை மாதிரி இன்னொரு ஆண் இந்தப் பூமிக்கு என் வழியாக வர வேண்டான்னு தான் இப்படியொரு முடிவெடுத்தேன்..” என்று வேறு எங்கோ முகத்தைத் திருப்பிய மேகாவின் முகத்தை வலுக்கட்டாயமாகத் தன்பக்கம் திருப்பிய முகிலன் அவளின் விழிகளில் ஊடுருவிப் பார்த்தான்.
“அதெல்லாம் நீ முடிவு பண்ணாத. எனக்கு இந்தக் குழந்தை வேணும். அதையும் நீதான் பெற்றுக் கொடுக்கணும்..” என்று தெளிவாக அதே நேரத்தில் அழுத்தமாகக் கூறியவனின் கையைத் தட்டிவிட்டாள்.
அவனின் பார்வையை தாங்கி நின்றவள், “இதுக்கு..” என்று தொடங்க மேகா எங்கே வந்து முடிப்பாள் என்று தெளிவாகத் தெரிந்து வைத்திருந்த முகிலன் அவனை முந்திக்கொண்டான்.
“ஏய் இது என்னோட குழந்தை இதுக்கு நீ ரெட் பேசின நான் உன்னைக் கொலைச் செய்ய கூடத் தயங்க மாட்டேன்..” என்று அவளை மிரட்டியவனுக்குள் ஏற்படும் மாற்றத்தை அவன் உணராமல் இருந்தான் என்றுதான் சொல்ல வேண்டும்.
அவன் குழந்தைக்காக அவளைக் கொலை செய்வேன் என்று சொல்லும் பொழுதே அவளின் மனம் வலித்தது. அவளைத் துடிக்கத் துடிக்கக் கொன்றுவிட்டு அவன் இப்பொழுது பேசும் வார்த்தைகளில் அவளின் மனதை வருந்தியது.
அதே நேரத்தில் அவனை மனதார ஏற்க முடியவில்லை. இந்த மாதிரி சிந்தனையில் அவளின் மனம் உழன்றது.
“யாரோ ஒருத்தன் உன்னை ரெட் பேசியதும் உன்னோட மனசு செத்துப் போச்சா? நான் செஞ்சது தப்புதான். அப்போ அது தப்புன்னு சொல்ல யாரும் இல்ல. இப்போ நீ என்னோட இருக்கிற. ஆனா நீ ஏன் உன்னையும் வருத்தி என்னையும் வருத்திற..” என்று நொந்துபோய் கேட்டவன் வேறுபுறம் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
இருவரின் மனதிலும் காயங்கள் ஏற்பட அதை எப்படி சரி செய்வது என்று தெரியாதவர்கள் இருவரும் பேசிப் பேசியே அந்தப் பிரச்சனையை வளர்த்தனர். இருவரும் வளர்ந்த குழந்தைகள் என்று அவர்களைப் பார்த்தும் புரிந்திருக்கும்.
அவனின் கேள்வியில் நியாயம் இருக்க, “இப்போகூட என்னைத் தூக்கி எறிஞ்சவனை நான் நினைக்கல. அதே நேரத்தில் உங்களை என்னால் மனபூர்வமாக ஏத்துக்க முடியல. நான் யாருக்கும் துரோகம் செய்யல. ஆனா எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது? நான் இப்படியொரு வாழ்க்கையைக் கேட்கல..” என்றவளின் விரக்தி அவனின் மனதை அசைத்தது.
அவ்வளவு பெரிய பணக்காரனைத் துச்சமாக நினைத்தவளின் மனநிம்மதி எதில் கிடைக்குமென்று புரியாமல் அவளின் பக்கம் திரும்பிய முகில், “உனக்கு நிம்மதி எதில் இருக்கு மேகா?” என்று கேட்க அவளிடம் பதில் இல்லை.
“என்னோட மன உணர்வுகளை என்னால் புரிஞ்சிக்க முடியல முகில். நான் நானாக இல்ல. என்னை மாதிரிப் பெண்கள் எல்லாம் காதலிக்கக் கூடாது. கல்யாணம் பண்ணிக்கவும் கூடாது. மின்மினிபூச்சி மாதிரி மின்னி மறையும் வாழ்க்கையில் ஆசை அறவே இருக்கக் கூடாது..” என்று வான்வெளியில் எங்கோ பறந்து சென்ற மேகக்கூட்டத்தை பார்த்தவண்ணம் கூறினாள்.
அவளின் மனதில் இருப்பது என்னவென்று புரியாமல் தடுமாறுவதைவிட அவளிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாமே என்ற முடிவுடன் நிமிர்ந்த முகிலன், “உன்னோட ஆசைகளை நான் நிறைவேற்றி வைக்கிறேன் என்னிடம் சொல்லு மேகா..” என்றான்.
அவனை நிராசையுடன் பார்த்த மேகா, “இதை நீங்க முன்னாடியே கேட்டிருக்கலாம்..” என்றவளின் கண்கள் கலங்கியதோ என்ற சந்தேகம் அவனின் மனதில் உருவானது. அவளிடம் பேசுவதும் சுவற்றில் முட்டிக் கொள்வதும் ஒன்று என்று தோன்றியது முகிலனுக்கு.
அவளின் மனதின் பாரத்தை அவள் பகிராமல் இருக்கும்போது அவனும் தான் என்ன செய்ய முடியும். தவறு அவனின் மேல் இருக்க அவளின் மீது குற்றம் சுமத்த அவனுக்கு மனம் வரவில்லை.
காருக்குள் அமைதி நிலவிட அதை முதலில் கலைத்தது மேகாதான்.
“எங்கோ காட்டுக்குள் கொண்டுபோய் விட்ட மாதிரி இருக்கு. நான் திரும்பிப்போக வழி தெரியல. ப்ளீஸ் என்னை விட்டுடுங்க என்னால முடியல..” அவனைப் பார்த்து வருத்ததுடன் பேசியவளின் கண்களில் வலியை உணர்ந்து இவனின் உள்ளம் பதறியது.
அவள் பேசும்போது முகிலன் ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்துகொண்டான். சிறுவயதிலிருந்து தனிமையில் வளர்ந்த மேகாவின் ஆழ்மனம் காயங்களைத் தாங்கித் தாங்கி அது புண்ணாகி இருப்பதை உணர்ந்தது.
“இப்போ கடைசியா என்ன சொல்ல வர..” என்று அவனின் பிடிவாதத்தில் கொஞ்சம் இறங்கிவர அவனைத் திரும்பிப் பார்த்தாள் மேகா.
“உங்களோட விருப்பப்படி இந்தக் குழந்தையைப் பெற்றுக் கொடுத்து விடுகிறேன். என்னை இந்த வீட்டைவிட்டு நிரந்தரமா அனுப்பி வெச்சிருங்க..” என்று கையெடுத்து கும்பிட்டு கண்ணீரோடு கேட்டவளுக்கு அவனால் மறுப்பு சொல்ல முடியாமல் தவித்தது முகிலனின் மனம்!
“சரி இந்தக் குழந்தை பிறந்தபிறகு நான் உன்னை அனுப்பி வைக்கிறேன்..” என்று மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு காரை எடுத்தான்.
அவளை மீண்டும் ஹாஸ்பிட்டல் அழைத்துச்சென்று செக்கப் முடித்துவிட்டு இருவரும் வீட்டிற்கு வந்து சேர்த்தனர்.
அவளை அறைக்கு அனுப்பிவிட்டு தன்னறைக்கு வந்த முகிலனின் மனம் வலிக்க, ‘இவள மாதிரி ஒரு பொண்ணு வாழ்க்கையில் வருவான்னு தெரிஞ்சிருந்தா நான் தப்பே பண்ணிருக்க மாட்டேன். அவ என்னைக் காயப்படுத்தி பார்க்கல. நான்தான் தவறுதலா அவளைக் காயப்படுத்தி பார்த்துட்டு இருக்கேன்..’ என்று கரங்களில் முகம் புதைத்துக் கொண்டான்.
இது நாள்வரை முகிலன் அவனைச்சுற்றி இருக்கும் யாருக்கும் மதிப்பு கொடுத்தில்லை. இன்று அவள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அவனின் மனதில் காயத்தை ஏற்படுத்தியது. அந்தக்காயம் அவனின் புண்பட்ட மனதை ஆற்றும் மருந்தாக மாறுவதை ரணத்துடன் உணர்ந்தான்.
இருவரின் மனதில் ஏன் இந்தக் காயம் உருவானது என்று இருவரும் உணராமல் அந்தக் காயத்தைச் சரி செய்ய மருந்து என்னவென்று தெரியாமல் குழந்தைப்போல தங்களுகளின் மனதிற்குள் போட்டு புதைத்துக்கொண்டு உயிரற்ற உடலாக நடமாடத் தொடங்கினர்.
இருவரின் மனம் மாறுமா?
அன்றைய நாளுக்கு பிறகு மேகாவிடம் சிறிது மாற்றம் வந்தது. அவனோடு இயல்பாகப் பேசுவதில்லை என்ற போதும் அவனைக் காயப்படுத்தி பேசும் சூழ்நிலை அமைந்தால் அவள் எழுந்து சென்றுவிட இருவரின் வாழ்க்கைச் சீராகச் சென்றது.
அன்று வழக்கம்போலத் தன்னுடைய கேபினில் அமர்ந்து வேலை செய்த முகிலனின் செல்போன் சிணுங்கியது.
அதன் திரையில் ஒளிர்ந்த நம்பரைப் பார்த்த கார்முகிலன், “வர்ஷாகுட்டி இன்னும் ஒரு ஒன் ஹேவர் மா.. நான் வீட்டுக்கு வந்துவிடுவேன்..” என்றான் புன்னகை முகம் மாறாமல்.
“பாருடா குட்டி உங்க அப்பாவுக்கு உன்மேல் அக்கறையே இல்ல..” என்று வயிற்றுக்குள் இருந்த மகளிடம் குற்றச்சாட்டிய மனையாளின் குழந்தை மனமறிந்து அவனின் உதட்டில் புன்னகை விரிந்தது.
“சரி சரி என்னோட மகளிடம் குற்றபத்திரிக்கை வாசிக்காமல் அமைதியாகத் தோட்டத்தில் நடந்துட்டே இரும்மா. நான் வந்துட்டே இருக்கேன்..” என்று போனை வைத்தவன் நிமிர,
“குட்டிமா உன்னோட அப்பா இன்னும் கொஞ்சநேரத்தில் வந்துவிடுவார்..” என்றவள் சோபாவில் அமர்ந்துக் குழந்தையுடன் பேசிக்கொண்டிருந்தாள் மேகா.
அதேநேரம் கேபினின் கதவுகளைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான் சுரேஷ்.
“ஸார் இன்னைக்கு நைட் இருந்த மீட்டிங் நாளைக்கு காலையில் மாறிட்டேன். நம்ம கம்பெனி சார்பாக ஒரு கொட்டேஷன் அனுப்பனும் டைப் பண்ண சொன்னீங்க. அதுவும் டைப் பண்ணிட்டேன் கொஞ்சம் சரியான்னு பாருங்க சார்..” என்றவன் லெட்டரை அவனின் முன்னாடி வைக்கச் செக் செய்தபிறகு சைன் பண்ணி கொடுத்தான் முகிலன்.
முதல் மாதிரி விளையாட்டாக இல்லாமல் வேலையைக் கவனமாகச் செய்யும் கார்முகிலனுக்கு யார் யார் சின்ஸியராக வொர்க் பண்றாங்க யாரெல்லாம் டைம் பாஸ்க்கு கம்பெனிக்கு வந்து போறாங்க என்ற அனைத்து விஷயத்தையும் அவனின் கைவசம் வைத்திருந்தான்.
“நம்ம ஸ்டாப்ஸ் யார் எல்லாம் சின்சியாராக வொர்க் பண்றாங்களோ அவங்களுக்கு இன்கிரிமென்ட் அதிகமாகக் கொடுக்கப் போறோம். அதை நாளைக்கு மீட்டிங்ல நான் சொல்லப் போறேன். அதன்பிறகும் வேலை செய்யாதவங்க இருந்தா சொல்லு ஆளை மாத்திவிடலாம்..” என்ற முகிலன் ஃபைலை மூடி வைத்துவிட்டு வீட்டிற்கு கிளம்பினான்.
“என்ன சார் சீக்கிரம் கிளம்பிட்டீங்க..” என்று இயல்பாகக் கேட்ட சுரேஷ் மீது பார்வையைப் பதித்தவன், “நீங்கச் சொன்னது எவ்வளவு உண்மைன்னு அனுபவிக்கும்போது புரியுது சுரேஷ். எனிவே தேங்க்ஸ் எ லாட்..” என்றான் முகிலன் புன்னகையுடன்.
அவன் சென்றதும் தன்னுடைய கேபினுக்கு வந்த சுரேஷின் நினைவுகள் நான்கு மாதம் பின்னோக்கிச் சென்றது.
திடீரென்று ஒருநாள் போன் செய்து இந்தக் கெட்ட பழக்கத்திலிருந்து வெளிவர ஏதாவது வழி சொல்லு என்றதும் சைக்கார்ட்டிஸ்ட் நம்பரை அனுப்பி வைத்தான் சுரேஷ். அதன்பிறகு தொடர்ந்து சிகிச்சைப் பெற்றது சுரேஷ் மனம் மட்டும் அறிந்த உண்மை.
முதலில் மற்றதை நினைத்துத் தன் கவனத்தைச் சிதறவிடும் முகிலன் வேலையில் தன் கவனத்தைத் திருப்பினான்.
அன்று சுரேஷ் ஒரு விஷயத்தை அவனிடம் இயல்பாகக் கவனித்தான். அவன் எப்பொழுதும் ஒரு கையில் சிகரெட் மற்றொரு கையில் பேனாவுடன் இருப்பான்.
அன்று சிகரெட் என்ற ஒன்றை மறந்து வேலையில் முழு கவனம் செலுத்திய முகிலன் அவனின் கண்களுக்குப் புதிதாகத் தெரிந்தான்.
“சார் இன்னைக்கு நீங்கச் சிகரெட் பிடிக்கல..” அது அவனே உணராத ஒரு விஷயத்தைச் சுரேஷ் இயல்பாகக் கேட்டான்.
அதே முதலில் இருந்த முகிலனாக இருந்தால் கட்டுக் கத்தி இருப்பான். ஆனால் இப்பொழுது உள்ள முகிலன் கொஞ்சம் மாறியிருக்க,
“எனக்குக் குடும்பம் இருக்கு. அவங்களுக்காக நான் என்னோட ஹெல்த் மேல் கேர் எடுத்துக்கணும் சுரேஷ்..” என்று அதே புன்னகையுடன் கூறிய முகிலனின் முகம் இப்பொழுதும் அவனின் மனத்திரையில் வந்து போனது.
அத்தியாயம் – 8
அவனிடம் தெரிந்த மாற்றமே சொன்னது அவனின் வாழ்க்கை பயணத்தில் வந்த பெண்ணின் குணத்தைப் பற்றி. முகிலனிடம் யார் வந்து கேட்டாலும் கண்ணை மூடிக்கொண்டு சொல்வான் என்னிடம் ஏற்பட்ட மாற்றங்கள் அனைத்தும் என் மனைவியால் வந்தது என்று.
அவனின் சிகரெட் வாசனை மற்றும் சாராய வாடை இரண்டும் முதலில் மேகாவிற்கு பிடிக்கவில்லை என்பதைவிட கருவில் இருக்கும் குழந்தைக்குச் சேரவில்லை என்று அவற்றை விட்டுவிட்டான். அடுத்த கெட்ட பழக்கம் மேகாவை என்று தொட்டானோ அன்றோடு அதற்கு முற்றுபுள்ளி வைத்துவிட்டான்.
அவன் கொஞ்சம் கொஞ்சமாகத் திருந்தி ஒரு புது மனிதனாக வலம் வந்த முகிலனின் மதிப்புத் தொழில் வட்டராத்தில் அவனுக்கொரு நல்ல பெயரைப் பெற்று தந்தது. அதுவும் அந்தக் கெட்ட நண்பர்கள் சகவாசத்தை முற்றிலும் நிறுத்தியபிறகு அவனைக் கண்டு எல்லோரும் ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தனர்.
அவனைத் திருந்து என்று மேகா ஒரு நாளும் சொல்லவில்லை. ஆனால் அவள் வந்தபிறகுதான் அவனிடம் இப்படியொரு மாற்றம் வந்தது என்று எல்லோரும் சொல்லும் அளவிற்கு திருந்திய முகிலனின் மனம் மேகாவின் பக்கம் முழுதாகச் சாய்ந்தது.
முகிலனின் மனமாற்றம் பற்றிய சிந்தனையிலிருந்து மீண்ட சுரேஷ் அவனின் வேலையைக் கவனித்தான். இந்த நான்கு மாதத்தில் தான் மாறியிருக்கிறோம் என்று உணர்ந்த முகிலனின் மனமோ, ‘இந்த மாற்றத்தைக் கண்டு மேகா விருப்புவாளா?’ என்று கேட்டது.
அவனுக்கும் இந்தச் சந்தேகம் அடிக்கடி வருவதுண்டு. ஆனால் மேகாவிடம் பேசிப் பேசி இப்பொழுதுதான் அவர்களின் உறவு நண்பர்கள் என்ற நிலைக்கு வந்து நின்றது. அவர்கள் இருவரும் அறியாத வண்ணம் ஒரு விதமான நூலிழையில் அவர்களைப் பாசம் என்ற கூட்டில் கட்டிப்போட்டது.
அதன்பிறகு வந்த நாட்களில் முகிலன் தான் கேர் எடுத்து மேகாவைப் பார்த்துக் கொண்டான். காலை முழுவதும் மாலைவரை மட்டும் கம்பெனி வேலையைப் பார்த்து அவளைப் பார்க்கவே ஓடி வருவான்.
ஒவ்வொரு மாதமும் தவறாமல் அவளைச் செக்கப் கூட்டிப் போவதிலிருந்து வாக்கிங் கூட்டிச் செல்வது என்று அவளைச்சுற்றி அவனின் வாழ்க்கைச் சக்கரம் சுழன்றது. ஒருப்பக்கம் அவனின் வேலை மறுப்பக்கம் மேகாவைக் கவனிப்பது என்று அவனின் நாட்கள் இனிமையாக நகர்ந்தது.
வீட்டின் முன்னாடி கார் வந்து நிற்கும் சத்தம்கேட்டு, “குட்டிமா உங்கப்பா வந்துட்டார்..” என்றாள் மேகா.
“வர்ஷா..” என்ற அழைப்புடன் வீட்டிற்குள் நுழைந்தவன்,
“இன்னைக்கு வாங்கிங் போயிட்டு வந்தியா?” என்று கேட்க, “ம்ம் இப்போதான் ஐந்து ரவுண்டு போயிட்டு வந்தேன்..” என்றாள் அவள் சோகமாகவே.
மேகாவின் முகத்தைப் பார்த்தும் அவனுக்குச் சிரிப்பு வந்துவிட, “உன்னிடம் நான் கேள்விதானே கேட்டேன் அதுக்கு எதுக்கு இப்படி முகத்தைத் தூக்கிற..” என்று கேட்டான்.
“ஏன் இவ்வளவு நேரம்?” என்று இயல்பாகக் கேட்டபடி அவனின் எதிரே அமர்ந்து ஒரு கப் காபியை அவனிடம் கொடுத்துவிட்டு அவளும் ஒரு கப்பைக் கையில் எடுத்தாள்.
“கொஞ்சம் வொர்க் அதிகம் வர்ஷா..” என்ற முகிலன் கழுத்தில் கட்டியிருந்த டையை லூஸ் பண்ணிவிட்டு சோபாவில் சாய்ந்து விழி மூடினான்.
அதன்பிறகு குழந்தை அவளின் வயிற்றுக்குள் செய்யும் சேட்டைகளை மனையாள் சொல்ல, “இத்தனையும் செய்யுதா என்னோட குட்டிம்மா..” அவளைப் பார்வையால் வருடியபடியே கதை கேட்பான்.
அவளோடு இருக்கும் நேரத்தில் தன்னைமறந்து ஒரு குழந்தைப் போல மாறிய முகிலனின் மாற்றம் கண்டு அவளின் மனம் இளக மறுத்தது. மெல்ல கூட்டிற்குள் இருக்கும் பறவை வெளியே தலைகாட்டுவது போல அவளின் உள்ளத்திலும் கொஞ்சம் அவனின் மீது அக்கறை வரவே செய்தது.
மாலை நேரம் அவன் வீடு திரும்பும் வேளையில் இயல்பாக அவனோடு உட்காந்து பேசுவது என்று ஆரம்பித்து இரவு உணவை முடித்துவிட்டு அறைக்குச் செல்லும் வரையில் அவள் பேசுவதை எல்லாம் புன்னகையுடன் கேட்டுகொண்டிருப்பான்.
இந்தமாதிரி சின்ன சின்ன விஷயங்கள் அவள் பகிரும் நினைவுகளை எல்லாம் தன் மனபெட்டக்கத்தில் பொக்கிஷமாகச் சேகரித்தான். அவளிடம் மாற்றம் வர வேண்டும் என்று அவனின் மனம் மட்டும் எதிர்பார்த்தது.
அந்த மாற்றம் வரவே வராது என்று ஒவ்வொரு நாளும் அவனுக்கு உணர்த்தினாள் மேகா.
அன்று காலை வேலைக்குச் சென்ற முகிலன் திடீரென்று மதியம் வீடு வந்து சேர்ந்தான். அந்த நேரத்தில் அவன் வீட்டிற்கு வருவதில்லை என்பதாலோ என்னவோ அவளின் மனம் படபடவென்று அடித்துக் கொண்டது.
“என்ன முகில் இந்த நேரத்திற்கு வீட்டுக்கு வந்திருக்கீங்க..” என்ற கேள்வியுடன் வாசலை நோக்கிச் சென்றவள்,
“அத்தை..” என்று ஓடி வந்த அருணையும், தருணையும் பார்த்து அவளின் முகம் பூவாக மலர்ந்தது.
“ஹே குட்டி வாண்டுகளா? என்னடா இன்னைக்குதான் உங்களுக்கு அத்தையோட நினைப்பு வந்துச்சா..” என்று அவர்களை வாரி அணைத்து இருவரின் நெற்றியில் முத்தமிட அதை ஏக்கத்துடன் பார்த்தான் முகிலன்.
அவனோடு அவள் இயல்பாகப் பேசும்பொழுது அவனின் மனதில் கிளர்ந்து எழும் உணர்வுகளைத் தனக்குள் போட்டுப் புதைத்துகொண்டு அவளின் முன்னே சாதாரணமாக நடமாடினான்.
அந்தக் குழந்தைகளுக்கு அவள் முத்தமிடவே, ‘இவள் மனம் மாறினால் நல்ல இருக்குமே..’ என்ற எண்ணம் அவனின் மனதில் தோன்றியது. அவனின் பார்வை தன்மீது படிவத்தைக் கண்டும் காணாமல் அங்கிருந்து நகர நினைத்தாள்.
அப்போதுதான் அவனின் பின்னோடு வீட்டிற்குள் நுழைந்த தமையனின் முகம் கண்டதும், “வாங்கண்ணா..” என்று அழைத்தபடி வீட்டின் உள்ளே சென்றாள்.
இருவரும் இயல்பாகச் சோபாவில் அமரவே, “மேகாவுக்கு எப்போ வளைக்காப்பு வைக்கலாம்..” என்று பேச இருவருக்கும் காபி போட்டு எடுத்து வந்தாள்.
“அண்ணா அண்ணி எப்படி இருக்காங்க..” என்று கேட்டுகொண்டே முகிலனின் அருகே அமர்ந்தாள் மேகா.
“ம்ம் நல்லா இருக்கிற..” என்றவன் காபியைப் பருகியபடி யோசித்துவிட்டு முகிலனின் பக்கம் திரும்பி, “அடுத்த வருகின்ற பதினைந்தாம் தேதி வளைக்காப்பு வெச்சுக்கலாம்..” என்று கூறினார்.
அவர் சொன்ன தேதியில் ஏதாவது முக்கியமான மீட்டிங் இருக்கிறதா என்று சிந்தித்த முகிலனின் புருவங்கள் கேள்வியாகக் சுருங்கியது. மேகா அண்ணனிடம் பேசிக்கொண்டே அருகே அமர்ந்திருந்த குட்டி வாண்டுகளை வம்பிற்கு இழுத்தாள்.
சேதுராமன் முகிலனின் பதிலுக்காகக் காத்திருப்பதை உணர்ந்து, “ம்ம் சரி..” என்று சம்மதம் சொல்லிவிட்டு மனையாளைத் திரும்பிப் பார்த்தான்.
இரண்டு வாண்டுகளும் அத்தையுடன் ஐக்கியம் ஆகியிருக்க குழந்தையோடு சேர்ந்த மறுநொடி குழந்தையாக மாறிய மனையாளை பார்வையால் பருகியவண்ணம் சேதுராமனின் எதிரே அமர்ந்திருந்தான் முகிலன்.
அவனின் பார்வையை தன்னை மீறி ரசித்த சேதுராமன், “ம்ஹும்..” என்று தொண்டையை செருமிய சத்தத்தில் அவனின் கவனம் கலைந்தது.
“சரி அப்போ நான் அடுத்த மாதம் வந்து வளைக்காப்பு போட்டு அவளை எங்க வீட்டிக்கு கூட்டிட்டு போறேன். எனக்குப் பெங்களூரில் வேலைக் கிடைச்சிருக்கு. மேகாவுக்கு பிரசவம் அங்கே பார்க்கலாம்னு ஒரு முடிவில் இருக்கேன்..” என்ற சேதுராமன் அவனிடம் பிரசவம் பற்றிப் பேசினார்.
அவன் சொன்னதும் முகிலன் என்ன நினைத்தானோ, “அதெல்லாம் வேண்டாம் மச்சான். உங்களோட அவளை அனுப்ப எனக்கு மனசு வரல. ப்ளீஸ் அவ இங்கேயே இருக்கட்டும்..” என்றவனின் பார்வை நொடிக்கு ஒரு முறை மனையாளின் மீது படிந்து மீண்டது.
“அப்போ சரி..” என்று எதையோ நினைத்து மனதிற்குள் சிரித்துகொண்டு எழுந்த சேதுராமன், “அவளைப் பார்த்துக்க நீங்க இருக்கும்போது எனக்கு என்ன கவலை..” என்றவர் குறும்புடன் புன்னகைக்க பின்னதலையைத் தடவியபடியே அவரின் முன்னே நின்றான் முகிலன்.
“சரி அப்போ நாங்க கிளம்பறேன்..” சொல்லிவிட்டு பசங்களை அழைத்துக்கொண்டு கிளம்பினான் சேதுராமன்.
அவன் குறிப்பிட்ட நாளில் வந்து வளைக்காப்புப் போட்டு சம்பிராதயத்திற்கு ஒருநாள் அவளை வீட்டிற்கு அழைத்துச் சென்றவர், மறுநாளே மேகாவைக் கொண்டுவந்து விடவே நிம்மதியாக உணர்ந்தான் முகிலன்.
அவள் இல்லாத வீடு எப்படி இருக்குமென்று ஒருநாள் பிரிவே அவனுக்குக் கற்றுக் கொடுத்தது. அவள் நிரந்தரமாக தன்னைவிட்டுப் பிரியும் நேரமும் வந்துகொண்டே இருக்கிறது என்ற உண்மையை அவன் உணர்ந்தாலும் அவனின் மனம் அதை ஏற்க மறுத்தது.
அவன் பயத்துடன் எதிர்ப்பார்த்த அந்த நாளும் வந்தது.
காலையில் ஐந்து மணிபோல மேகாவிற்கு வலிபிடிக்க அவளைக் கொண்டுபோய் ஹாஸ்பிட்டலில் சேர்த்த முகிலனின் மனம் மேகாவிற்காகத் துடித்தது. சீதா வருவதாகச் சொல்ல அவரை வர வேண்டாம் என்று தடுத்துவிட்டான்.
அவள் மீண்டும் வர வேண்டுமென்று இறைவனுக்கு பல வேண்டுதல்களை வைத்துவிட்டு பிரசவவார்டுக்கு வெளியே காத்திருந்தான் முகிலன்.
அப்பொழுது ஒரு ஆக்சிடெண்ட்டில் தலையில் அடிபட்ட சேதுராமனை அந்த மருத்துவமனையில் அட்மிட் செய்ய, “ஐயோ என்னோட கணவனின் உயிரைக் காப்பாத்துங்க..” என்று கண்ணிருடன் நின்ற நீலாம்பரியைப் பார்த்தவனுக்கு அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் முழித்தான்.
“அவருக்கு நிறைய பிளட் லாஸ் ஆகிருக்கு. அவருக்கு ஆப்ரேஷன் பண்ணினால் மட்டுமே உயிர் பிழைப்பார்..” என்று கூறிய டாக்டரையும் கதறலோடு நின்ற நீலாம்பரியையும் பார்த்தவன்,
“டாக்டர் நான் பணத்தைக் கட்டிவிடுகிறேன். நீங்க உங்களிட டிரீட்மெண்ட்டை கவனிங்க..” என்று டாக்டரை அனுப்பி வைத்துவிட்டு சுரேஷ்க்கு போன் செய்து பணத்தைக் கொண்டுவந்து கட்ட சொன்னான்.
முகிலன் சென்ற சிறிதுநேரத்தில் மெகாவிற்கு பெண் குழந்தை பிறந்தது.
அவள் அரை மயக்கத்திற்கு செல்லும்போது, “இந்த பொண்ணுக்கு இருக்கும் பிரச்சனை அவளுக்கே தெரியாது போல. அவ இனிமேல் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபட்டா அது இவளோட உயிருக்கே ஆபத்து..” என்று நர்ஸிடன் சொன்னதைக்கேட்டு இவளின் கண்கள் கலங்கியது.
அங்கே சேதுராமனுக்கு ஆபரேசன் நடக்க இங்கே மேகாவிற்கு பெண் குழந்தை பிறக்கவே மற்றத்தை மறந்த முகிலன் துணியில் சுற்றப்பட்ட பூக்குவியலை தன் கரத்தில் வாங்கிய நொடி அவனையும் மீறி அவனின் கண்கள் கலங்கியது.
பன்னீர் ரோஜா நிறத்தில் இருந்த மகள் கையும் காலையும் ஆட்டிட, “குட்டிம்மா..” என்ற முகிலன் குட்டியாக இருந்த குழந்தையை மெல்ல வருடிய மறுநொடி அவனின் உடல் சிலிர்த்தது..
“ங்..ங்..” என்ற குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டு நிமிர்ந்த பார்க்க, “சார் உங்க மனைவி கண்விழிச்சிட்டாங்க..” என்றார்.
அவன் அறையின் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழையப் படுக்கையில் சோர்ந்து படுத்திருந்த மேகாவின் அருகே சென்று அமர்ந்து, “வர்ஷா..” என்றழைத்த முகிலன் அவளின் நெற்றியில் முத்தமிட்டான்.
அவள் விழிதிறந்து அவனைப் பார்த்து, “குட்டிப்பாப்பா தான் பிறந்திருக்கிறாளா..” என்று சோர்வுடன் கேட்க, “ம்ம் இங்கே பாரு நம்ம குழந்தை..” என்று அவளின் அருகே படுக்க வைத்தான்.
அவன் சொன்னதுக்கு மறுப்பாகத் தலையசைத்த மேகா, “நம்ம குழந்தை இல்ல.. உங்க குழந்தை..” என்று திருத்திட அவளின் அருகே இருந்து எழுந்து விட்டான்.
இருவரின் இடையே பலத்த அமைதி நிலவியது.
அந்த நேரத்தில் கதவைத்திறந்து உள்ளே நுழைந்த நீலாம்பரி, “என்ன குழந்தை பிறந்திருக்கு..” என்று கேட்க இருவரும் திரும்பிப் பார்க்க, “பெண் குழந்தை அண்ணி..” என்றாள் மேகா.
“அடடே முதலில் பெண் குழந்தையா பிறந்திருக்கு..” என்று குழந்தையைத் தூக்கிக் கொஞ்சிய நீலாம்பரிடன் கணவன், மனைவி இருவரும் மௌனமாகவே இருந்தனர்.
முகிலனுக்கோ அவள் மாறவே மாட்டாளா என்று தோன்றிட மேகாவிற்கோ கடமை முடிந்தது போல இருந்தது. அவளுக்காக அவன் மாறியதை அவள் உணர்ந்தாலும் மனதளவில் அவனை ஏற்க முடியாமல் தவித்தாள் அவள்.
இதுவரை நிகழ்ந்தவற்றை மறந்துவிட்டதாக நினைத்துக் காலம் தள்ளிவிடப் பலர் இருந்தாலும் மேகாவால் அப்படியிருக்க முடியவில்லை.
உள்மனதில் வெறுப்பை வைத்துகொண்டு வெளியே பொய்யாக நடிக்க அவளுக்கு விருப்பமில்லை. அவனுடைய அன்பை சோதித்துப் பார்க்கவும் அவள் நினைக்கவில்லை. அவனை நேரில் காணும் நேரத்தில் எல்லாம் அவளின் மனம் வலித்தது.
அந்த வலியை மனதிற்குள் மறைத்துக்கொண்டு, ‘நான் உன்னைக் காதலிக்கிறேன். நம்ம இனி சேர்ந்து வாழலாம். நம்ம குழந்தையின் எதிர்காலத்திற்காக என்று சொல்லி அவளை ஏமாற்றிக்கொள்ள தயாராக இல்லை..’ என்று அவள் உறுதியாக இருந்தாள்.
“அண்ணாவுக்கு ஆக்சிடெண்ட் ஆகிருச்சு மேகா. உன்னோட வீட்டுகாரர் மட்டும் இல்லன்னா நம்ம அவரை உயிரோடு பார்க்க முடியாது..” என்றாள் அவள் கலங்கிய கண்களைத் துடைத்துக்கொண்டு.
அவர் சொன்னதும் கணவனைத் திரும்பிப் பார்த்துவிட்டு, “கூட்டி கழிச்சு பார்த்த கணக்கு சரியா வருது..” என்று கசந்த புன்னகையுடன் கூற அந்த வார்த்தையில் அவனின் மனம் வலித்தது.
“சரிங்க அண்ணி நீங்க அண்ணாவைப் பார்த்துகோங்க..” அக்கறையுடன் கூறினாள்.
“ம்ம் சரி மேகா..” என்று நகர்ந்துவிட்டார் நீலாம்பரி.
அதன்பிறகு அவள் நல்லபடியாக வீடு வந்து சேரும் வரை அவளோடு பேசுவதை தவிர்த்தான் முகிலன். அந்த இடைப்பட்ட நாளில் மேகா தன்னை பற்றிய முழு உண்மையையும் தெரிந்து கொண்டு தெளிவானதொரு முடிவை எடுத்தாள்.
அவளை வீட்டிற்கு அழைத்து வந்தபிறகு மீண்டும் பேச்சை எடுத்தான்.
தன்னறையில் துணிகளை எடுத்து வைத்துகொண்டே சிந்தனையில் நின்றிருந்தவளின் செவியைத் தீண்டியது அவனின் அழுத்தமான காலடி ஓசை அவளை நெருங்கியது.
அவன்தான் வருகின்றான் என்று அறிந்தும் அவள் திரும்பிப் பார்க்காமல் நின்றவளின் முன்னே வந்தவன், “மேகா நீ என்ன முடிவெடுத்து இருக்கிற..” என்று நேரடியாக அவளிடம் கேட்டான்.
அவனின் விழிகளில் தன் பார்வையைக் கலக்கவிட்டு, “இப்போவே இந்த வீட்டைவிட்டு போகணும் என்ற முடிவில் இருக்கேன்..” என்றாள் தெளிவாகக் கூற அவனின் மனதில் வலியால் துடித்தது.
அவனின் பார்வையை வைத்தே அவனின் மனதைப் படித்த மேகா முதல் முறையாக அவனின் பார்வையைத் தவிர்க்க மெல்ல தலைகுனிந்து நின்றாள்.
அவளை அங்கிருந்து அனுப்ப மனமில்லாத முகிலன் தன்னுடைய கடைசி அஸ்திரத்தையும் அவளை நோக்கி எய்தான்.
“சரி டைவர்ஸ் பேப்பரில் கையெழுத்துப் போட்டுகொடு..” அவன் மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு கேட்டான். அவன் தன்னைத் தடுக்கத்தான் டைவர்ஸ் கேட்கிறான் என்றுணர்ந்தவளின் பார்வை அவனின் மீது படிந்தது.
“நீங்க ஆல்ரெடி வாங்கிட்டு வந்த பேப்பரைக் கொடுங்க. நான் கையெழுத்துப் போட்டுத் தரேன்..” என்றாள் தீர்க்கமான பார்வையுடன்.
அவன் அவளிடம் டைவர்ஸ் பேப்பர் கொடுக்க அதை தெளிவாகப் படித்துப் பார்த்தாள்.
பிறகு அவனின் பக்கம் திரும்பிய மேகா, “நான் உங்ககிட்ட ஜீவனாம்சம் கேட்கல. உங்க பணம் எனக்கு வேண்டாம்..” என்றவளின் மீது வலியுடன் படர்ந்தது அவனின் பார்வை.
இருவரும் மியூச்சுவலாகப் பிரிவதாக டிக் செய்து கையெழுத்துப் போட்டு அவனிடம் கொடுத்துவிட்டு நிம்மதியாகப் புன்னகைத்த மேகா, “தேங்க்ஸ் முகில்..” என்று சொல்லி படுக்கையில் படுத்திருந்த குழந்தையைத் தூக்கி மடியில் வைத்துகொண்டு சிறிதுநேரம் அமைதியாக அமர்ந்திருந்தாள்.