13

ஸ்பாட் லைட்ஸ் வெள்ளமென பாய்ந்து அந்த அரங்கை பிரகாசப்படுத்தி இருந்தது. நகரின் பிரதானமான ஆடம்பர ஹோட்டலில் மிஸ் சென்னை போட்டிகள் நடந்துக்கொண்டிருந்தது.

கடந்த இரண்டு மாதமாகவே இதற்கான அத்தனை பயிற்சிகளிலும் மது கலந்துக் கொண்டு இருந்தாள்.

நடன பயிற்சிகளோடு, மேக் அப் செஷன், கேட் வாக் செஷன், யோகா, தியானம், ஜும்பா என அனைத்துப் பயிற்சிகளும் முடிந்திருந்தது. பயிற்சிகளின் முடிவின் போது தான் பார்த்திபனுக்கும் ரதீஷ் சஞ்சய்க்கும் பிரச்சனை முளைத்திருந்தது.

அவளுக்கு இந்த மிஸ் சென்னை ஷோ மிகவும் முக்கியம்!

அவளது வெகு நாளைய கனவு!

அதிலும் சஞ்சயுடன் தனக்கே பிணக்கிருக்கும் வேளையில் பார்த்திபன் வேறு அவனையே அழைத்து சமாதானப்படுத்தும் அளவு செய்து விட்டதால் அது வேறு அப்போது அவளுக்கு எரிச்சலாக இருந்தது.

ஆனால் ரொம்பவும் வேலை வைக்காமல் இருவருமே சுலபமாக சமாதானமாகியிருந்தனர். அதாவது சஞ்சய் ரதீஷை சமாதானப்படுத்தி இருந்தான்.

சஞ்சய்க்கும் ரதீஷ் நடந்து கொண்ட விதத்தில் சற்று கோபமிருந்தது போல. ஆனால் மற்றவர்கள் முன்னால் நண்பனை விட்டுத்தர முடியாதே என்று அவன் புலம்பியபோது மதுவுக்கும் மனதுக்குள் ஏதோ ஒரு உணர்வு!

அப்படியென்றால் தன்னை விட்டுக் கொடுக்கலாமா என்றும் கேட்டு விட்டாள் பேச்சோடு பேச்சாக.

“இல்ல ஹனி… என்னை நீ இன்னும் புரிஞ்சுக்கலை… உன் மாமா நடுவில் வரலைன்னா நான் அவனை தனியா வார்ன் பண்ணிருப்பேன்… கண்டிப்பா விட்டிருக்க மாட்டேன்… அதுவுமில்லாம டான்ஸ் ப்ராக்டிஸ் பண்ணும் போது அங்கங்க கை படறதுதானே… இதை பெரிய விஷயமாக்கனுமான்னு எனக்கு தோன்ற கூடாதா?” என்று அவன் கேட்டது அவளுக்கு நியாயமாகத்தான் தோன்றியது.

“அதோட ரதீஷ் ரொம்ப கோபமாத்தான் இருந்தான்… உன் மாமா மேல… அவன் என்கிட்டே நடந்துகிட்ட முறையை வெச்சு… அந்த கோபத்துல ஏதாவது பேசி இருக்கலாம்… அதுக்காக அவனை எங்கயும் நான் விட்டுத்தர முடியாதுல்லையா?”

அவன் நியாயமாக கேட்டாலும் அவனது நேர்மை குறித்து அவளது மனதுக்குள் இருவேறு கருத்துக்கள் நிலவிக்கொண்டிருப்பதுதான் உண்மை.

ஆனால் இதுவரைக்கும் பரவாயில்லை என்று அவளுக்கு தோன்றியது.

அதுவும் சஞ்சய், “உனக்காக மட்டும் தான் அன்னைக்கு அவனை விட்டேன் பேபி… பட் யூ டோன்ட் அண்டர்ஸ்டான்ட் மீ…” என்று குரலில் கனம் கூடி கூறிய போது அவளுக்குமே கண்கள் கலங்கியது. ஆனால் பார்த்திபனை ‘அவன்’ என்றே சஞ்சய் விளித்துக் கொண்டிருந்தது தான் அவளுக்குமே உள்ளுக்குள் உறுத்தியது.

“ஐ ட்ரஸ்ட் யூ சஞ்சு… நமக்குள்ள மிஸ்அண்டர்ஸ்டாண்டிங் வரலாம்… ஆனா என்னை நீயோ, உன்னை நானோ விட்டுக் கொடுக்க மாட்டோம் இல்லையா?” என்று மது கூற, மறுபுறத்தில் ஒரு பெருமூச்சோடு, “எஸ் மது… யூ ஆர் ரைட்… ஆனா அவனுக்கு ஏன் இவ்வளவு கோபம் என் மேல?” என்று அவன் கேட்க,

“மாமா நல்லவங்க தான் சஞ்சு… ஆனா நான் தப்பா போய்ட கூடாதுங்கறதுல கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்டா இருக்காங்க… அவ்வளவுதான்… உன்னை பற்றி புரிஞ்சுக்கிட்டா கண்டிப்பா இந்த மாதிரி இருக்க மாட்டாங்க…” என்று அவள் அவனுக்கு எப்படியாவது புரிய வைத்து விடும் நோக்கில் கூற,

“ப்ளீஸ் மது… அவனுக்காக என்கிட்டே தயவு செஞ்சு சப்போர்ட் பண்ணாதே… அவன் மேல எனக்கு இன்னும் கொலைவெறியாத் தான் இருக்கு… ஆனா அப்பா கிட்ட கூட நான் சொல்லலை… உனக்காக…”

மதுவுக்கு மனதுக்குள் நன்றி மழை!

அவளை பொறுத்தமட்டில் ரதீஷ் வேறு! சஞ்சு வேறு!

ரதீஷ் முரடன், அவன் சரியானவன் இல்லை என்பதில் அவளுக்கு சந்தேகம் இல்லை.

ஆனால் சஞ்சு அவளைப் பொறுத்தவரை நல்லவன், நாசுக்கானவன், நாகரிகம் தெரிந்தவன், என்ன… சற்று பொசெசிவ்னஸ் அதிகம்!

அவனையும் சேர்த்து பார்த்திபன் அடித்தபோது தான் அவளுக்கு சற்று கோபம் அதிகமாக வந்தது.

ஆனால் தனக்காக பொறுத்துக்கொண்டு, தந்தையிடம் கூட தெரிவிக்காமல் விட்ட சஞ்சயின் பெருந்தன்மை மதுவை நன்றியுணர்வில் ஆழ்த்தியது.

“தேங்க்ஸ் சஞ்சு… ஆனா அவரையும் கொஞ்சம் புரிஞ்சுக்க முயற்சி செய்… பியுச்சர்ல அவர் உனக்கு முக்கியமான ரிலேஷனாக போகிறவர்… அந்த அடிப்படைலையாவது கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் போ சஞ்சு… ப்ளீஸ் எனக்காக…” என்று மது கெஞ்சவும், அவனால் மறுத்துப் பேச முடியவில்லை.

“ஹே பேபி… நீ இவ்வளவு இறங்கிப் போய் சொல்லனுமா? ஐ ல் டேக் கேர்… ஆனா ரதீஷ் கிட்ட கொஞ்சம் பார்த்து நடந்துக்க சொல்லு… அவன் தான் இன்னும் செம காண்டுல இருக்கான்…” என்று அவனறிந்த வரையும் கூட எச்சரிக்கை செய்தான்.

“அதை நான் பார்த்துக்கறேன் சஞ்சு… யூ டேக் கேர் ஆப் யுவர் ஹெல்த்!” என்றவள், அப்போதைக்கு பேசியை வைத்திருந்தாள். ரதீஷை கூட சஞ்சய்யே சமாதானப்படுத்தி விட்டு இவளுக்கு அழைத்தும் கூறியிருந்தான்.

“நான் அவனை முடிஞ்ச அளவு சமாதானப்படுத்திட்டேன் பேபி… யூ ரிலாக்ஸ் அண்ட் உன்னோட ப்ராக்டிஸ் செஷன்ஸ்ல கான்சன்ட்ரேட் பண்ணு…”

அவனது புரிதலை எண்ணி உள்ளுக்குள் பூரிப்பாக இருந்தது மதுவுக்கு.

“தேங்க்ஸ் சஞ்சு… தேங்க்ஸ் எ லாட்…” மனமுவந்து நன்றி தெரிவித்தவள், தனது பயிற்சிகளில் ஆழ்ந்தாள்.

அதன்பின் அவளை அழகிப் போட்டி வேலைகள் மொத்தமாக உள்ளிழுத்துக் கொண்டன.

தன்னுடைய டிசைனருடன் சேர்ந்து உடைகளை டிசைன் செய்வதிலிருந்து, ஒவ்வொரு அணிகலனாக பார்த்துப் பார்த்து வாங்குவதிலிருந்து அவளது நேரம் மொத்தமும் இதற்காகவே செலவழித்தாள்.

நேரம் மட்டுமல்ல… பணமும் கூட!

கணக்கே இல்லாமல்!

தற்போது அவ்வப்போது சிறு சிறு மாடலிங் வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன என்றாலும் அவையெல்லாம் அவளுடைய யானைப் பசிக்கு சோளப் பொறிதான்.

ஒரு நாள் செலவுக்குக் கூட தாக்குப்பிடிப்பதில்லை. இதற்காக தாயை ரொம்பவும் அதிகமாக ஐஸ் வைத்து பார்த்தவள், ஒரு அளவுக்கு மேல் அவர் இடம் தராமல் போக, தனது ஜாகையை தந்தையிடம் மாற்றினாள்.

அவரது கிரெடிட் கார்டை கைப்பற்றியவள், செலவுகளை ஜமாய்க்க, தகவல் யாருக்கு பறந்ததோ இல்லையோ அவ்வப்போது பார்த்திபனுக்கு பறந்து கொண்டுதான் இருந்தது.

அவன் பிடியை சற்று லேசாக்கி இருந்தான்.

பின்? எவ்வளவுதான் இறுக்குவது? அவள் அதனாலேயே ப்ரேக் தி ரூல்ஸ் என்று உடைப்பதாக பட்டது அவனுக்கு.

அறிவுரைகள் அவளிடம் எடுபடாது என்பதை மிகவும் தாமதமாகத்தான் புரிந்து கொண்டான் பார்த்திபன்.

அதனால் அவளிடம் பேசாமல், மறைமுகமாக தமக்கையை கண்ட்ரோல் செய்ய துவங்கியிருந்தான். அவளுடைய செலவுகளுக்கு பணம் கொடுக்க விடாமல் இருக்க முயற்சித்தாலும், அவள் தான் அடுத்ததாக வினோதகனிடம் தாவி விட்டாளே என்று சலித்துக் கொண்டார் அவர்.

“அக்கா… உன் பொண்னை எந்த நேரத்துல தான் பெத்தியோ? இப்படி படுத்தி எடுக்கறா…” என்று தமக்கையிடம் சலித்துக் கொள்ள,

“என்ன பண்றது? அவளோட மாமன் ஒரு கிரகம்ன்னா இவ ஒரு கிரகம்… ரெண்டு கிரகமும் எங்களை படுத்தலையா? நாங்க என்ன சொல்லிட்டா திரியறோம்?” என்று சிரிக்காமல் கூற, அவன் அந்தப் பக்கம் கடுப்பானான்.

“உனக்கு நான் கிரகமாத்தான் தெரிவேன்… பொண்ணு கண்ட்ரோல் பண்ண தெரியல… ஆனா உனக்கும் உன் வீட்டுக்காரருக்கும் வெட்டி பந்தாக்கு ஒன்னும் குறைச்சலில்லை…” என்று நங்கென்று தலையில் கொட்டுவது போன்ற பாவனையில் அவன் கூற, பானுமதி சிரித்தார்.

“என் வீட்டுக்காரரை இழுக்கலைன்னா உனக்கு தூக்கம் வராதே…”

“வேண்டாம்ன்னு நான் ஒதுக்கினவங்களோட என்னை கம்பேர் பண்ணாத…” அதுவரை இருந்த மனநிலை மாறி இறுக்கமான குரலில் கூறியதை கேட்டவருக்குத்தான் சும்மா இருந்தவனை நாமே சீண்டி விட்டு விட்டோம் போலேயே என்று நொந்துக் கொண்டார்.

இருக்காதா பின்னே?

எட்டு வருடங்கள் கழித்து ஒருவாறாக ஏதோ சற்று மலையிறங்கி பேசிக்கொண்டிருக்கிறான். அதையும் கெடுத்து கொள்ள வேண்டுமா என்று அவரது மனசாட்சியே கூச்சலிட, ‘ஐயோ ஆண்டவா’ என்று அவரும் அரண்டு போய் விட்டார்.

“டேய் விடுடா தம்பி… என்ன இருந்தாலும் அவர் உனக்கு மாமா இல்லைன்னு ஆகிடுமா… நீதான் அவருக்கு மச்சான் இல்லைன்னு ஆகிடுமா? நடுக்கடலுக்கு மீன் பிடிக்க போறவங்க கூட, தண்ணில குதிக்கறதுக்கு முன்னாடி, தன்னை காப்பாத்த கட்டின கயிறை மச்சான் கிட்ட தான் கொடுத்துட்டு கடல்ல குதிப்பாங்களாம்… ஏன்னா அவங்கதான் தன்னோட உடன் பொறந்தவ நல்லா இருக்கனும்ன்னு அந்த கயிறை விட்டுட மாட்டாங்களாம்… அதுதான் மாமன் மச்சான் உறவு பார்த்தி… சின்ன சின்ன பிரச்சனை எல்லார் குடும்பத்திலும் இருக்கறதுதான்… அதுக்காக இத்தனை வருஷம் கழிச்சும் அதை பிடிச்சுட்டு தொங்கனுமா?”

நடுநிலைவாதியாகத்தான் அவர் கேட்டது. ஆனால் அவனது கசந்த மனது அதை எதையும் ஒப்புக்கொள்ளவில்லை.

“நீ சொல்ற கதையெல்லாம் சரிதான்… ஆனா இங்க என்னை நடுக்கடல்ல தள்ளி விட்டது உன்னோட வீட்டுக்காரர்… அப்பா இறந்த டைம்ல எதுவும் புரியாம இருந்த என்னை ஏமாத்தினதை எல்லாம் நான் மறக்க மாட்டேன் மதிக்கா… இப்ப நான் ஓரளவு உன்னோட வேண்ணா சமாதானம் ஆகலாம்… ஆனா அவரோட கிடையாது… உன் வீட்டுகாரர் அவரா பீல் பண்ணுவார்… அந்த நாளும் வரும் பார்…” வெகு உறுதியாக அவன் கூறிவிட்டு வைக்க, பானுமதிக்கு பெருமூச்சோடு பேசியை வைத்தார்.

இவனையும் மாற்ற முடியாது… கணவனின் இயல்பையும் மாற்ற முடியாது. பானுமதிக்கும் அந்த விஷயம் எல்லாம் தெரிந்து இருந்தாலும் அவரால் பிறந்த வீட்டில் கணவனை விட்டுக் கொடுக்க முடியவில்லை, எல்லா பெண்களைப் போலவும்!

தந்தை இறந்த நேரத்தில் கணவனது செய்கை பானுமதிக்கும் சற்றும் பிடிக்கவில்லை. ஆனால் என்ன செய்வது என்று புரியவில்லை.

காரமடை ரோலிங் மில் இனி இல்லை என்பது போல ஒரு பிம்பத்தை உருவாக்கி, அவர்களது ஆர்டர்களை எல்லாம் தனக்கு வருமாறு செய்த அந்த நரித்தந்திரத்தை என்னவென்று சொல்வது?

துக்கத்திலிருந்த சகுந்தலாவுக்கு இந்த வியாபார நுணுக்கங்கள் எதுவும் பிடிபடவில்லை.

மகனோ அமெரிக்கா தான் தன்னுடைய ஆசை, லட்சியம் என்று ஒரே எண்ணத்தில் இருக்க, அவர் தான் தவித்துப் போனார்.

காலம் காலமாக கட்டிக் காத்து வந்த கௌரவம் என்னாவது என்ற பயம்!

ஒளியத் தெரியாதவன் தலையாரி வீட்டில் ஒளிந்த கதையாக, காரமடை ரோலிங் மில்லின் பொறுப்பை வினோதகனிடமே ஒப்படைத்தார், தன்னுடைய மாப்பிள்ளை தனக்கு துரோகம் செய்து விடுவாரா என்ற பெரும் நம்பிக்கையில்!

அதன் பின் நடந்தவை எல்லாம் திரும்பி பார்க்க விரும்பாத துரோக சரித்திரமாகி விட்டது.

பார்த்திபனின் கோபத்தில் உள்ள நியாயத்திற்காகத்தான் பானுமதி வெகுவாக விட்டுக் கொடுத்துப் போவதும்.

ஆனால் அத்தனையையும் தூக்கி சாப்பிடுவது போல, பார்த்திபனின் வாழ்வை கேள்விக்குரியதாக்கியதும் வினோதகன் தான் என்பதை அவர்கள் இருவரையும் தவிர வேறு யாரும் அறியவில்லை.

பார்த்திபனின் கோபம் வெறும் பணப் பிரச்சனைக்காகவோ, தனது அதிகார அத்துமீறலுக்காகவோ இல்லை என்பதை வினோதகன் மிகவும் தெளிவாக அறிந்திருந்தார்.

காலம் அவரை வெகுவாக பண்படுத்தி இருந்தது. தான் செய்த தவறின் வீரியம் புரிய ஆரம்பித்தபோது பார்த்திபன் அவரை விட்டு வெகு தூரமாக சென்றிருந்தான்.

தீராப் பகையும் அவனது மனதுக்குள் மூண்டிருந்தது.

ஏனென்றால் திரிந்த பால் திரிந்தது தான்! கறந்த பால் மீண்டும் மடி சேராது!

அதை மாற்ற முடியுமா?

ஒரு வகையில் அது மீளா தாக்கம் அல்லவா? மீளும் வகையினை அறிய முடியா மீளா தாக்கம்!

மனதுக்குள் பலவித எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தாலும் அழகிப் போட்டிகள் நடக்கும் அரங்கில் முதல் வரிசையில் பானுமதி, சகுந்தலா மற்றும் வினோதகனுடன் உடன் அமர்ந்திருந்தான் பார்த்திபன்.

நிகழ்ச்சியை பார்க்க வந்தேயாக வேண்டும் என்ற மதுவின் பிடிவாதத்திற்காக சகுந்தலா காரமடையிலிருந்து பார்த்திபனோடு வந்திருந்தார்.

“பார்த்தி உனக்கொன்னும் பிரச்சனை இல்லதான?” சும்மாவே ஆடுபவன், இப்போது இத்தகைய நிகழ்ச்சியில் மதுவை கண்டால் என்ன சொல்வானோ என்ற பயம் பானுமதிக்கு உள்ளுக்குள் இருந்தது உண்மைதான்.

ஆனால் அவனோ, “ஏன் மதிக்கா? என்னை நீ இவ்வளவுதான்னே முடிவு பண்ணிட்டியா?” என்று கேலியாக கேட்க,

“அட இல்லடா… உன்னை பத்தி எனக்கு தெரியாதா? மதுவுக்கு நீ என்ன கெட்டதா சொல்லிட போற? ஆனா அந்தப் பொண்ணு தான் ரொம்ப பயந்துகிட்டு இருந்தா… நீ வர்றன்னு சொன்னவுடனே!” என்று அவரும் இலகுவாகவே கூற,

“அடடா… உன் பொண்ணு பயப்பட்டாளா? அதிசயம் தான் போ…” என்று அவன் சிரிக்க, அருகில் அமர்ந்திருந்த வினோதகன் எதிலுமே கலந்துக் கொள்ளவில்லை.

“பார்த்தி… உன்கிட்ட மட்டும் தான் கொஞ்சம் அந்த பயம் இருக்கு அவளுக்கு…” என்று பதிலுக்கு பானுமதி சிரிக்க,

“பிள்ளைங்களுக்கு யாராவது ஒருத்தர் கிட்டயாவது கட்டாயம் பயம் இருக்கணும் பானுமதி…” என்று சகுந்தலாவும் கூற,

“அதுக்கென்னமா? பார்த்திக்கு உரிமை இல்லைன்னு யார் சொல்ல முடியும்? அவனுக்கு தான் முதல் உரிமை…” ஓரப்பார்வையாக தனது கணவனை பார்த்துக் கொண்டே கூற, வினோதகனிடம் எந்தவித மாறுதலும் தெரியவில்லை.

“சரி விடு மதிக்கா… கலர்புல் ஃபங்கஷனுக்கு வந்துட்டும், பிரச்சனையையே பேசிட்டு இருக்காதே…” என்றவன், ஹாலை நோட்டமிட்டான்.

அவனை சற்று தொலைவிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த ஷாலினிக்கு உள்ளுக்குள் எதுவோ நகர்ந்து கொண்டிருந்தது.

அந்த மேக் அப் அறையிலிருந்து பார்த்தால் ஹாலின் நடு மையத்தில் அமர்ந்திருந்த பார்த்திபனை நன்றாகவே பார்க்க முடியும். மது நிகழ்ச்சி ஆரம்பிக்க போகும் டென்ஷனில் இருக்க, ஷாலினி தனது மேக் அப்பை ஒருவாறாக முடித்து விட்டிருந்தாள்.

அங்கு அந்த போட்டியில் கலந்துக் கொள்ள இருக்கும் அனைவரும் தத்தமது மேக் ஓவரை செய்து கொண்டிருந்தனர். அழகிகளும் அவர்களது ஹேர் ட்ரெசர், மேக் அப் அசிஸ்டன்ட், ட்ரெஸ் டிசைனர் என்று அந்த இடமே களை கட்டியிருக்க, சற்று அமைதியாக நிற்கலாம் என்று தள்ளி வந்தவள் பார்த்திபனை பார்த்து விட்டிருந்தாள்.

இப்போதெல்லாம் அடிக்கடி பார்த்திபன் அழைத்து அவளையும் மதுவையும் விசாரிப்பது வாடிக்கையான ஒன்றாகியிருந்தது.

அதற்கு காரணம், ரதீஷுடன் ஏற்பட்ட பிரச்சனை தான் என்றாலும், தன்னை பெரிய ஆளாக மதித்து மதுவின் பாதுகாப்பை பற்றி கேட்பது ஷாலினிக்கு எதையோ சாதித்தது போன்ற உணர்வை கொடுத்தது.

அதனாலேயே மதுவை அவள் எப்போதும் தனித்து விடவே இல்லை.

“என்ன நீ… எப்ப பாரு அவ வாலை பிடிச்சுட்டே போற?” என்று ஷிவானி கூட நிறைய முறை அவளிடம் வள்ளென்று விழுந்தாள்.

ஆனால் அதையெல்லாம் கண்டுக்கொண்டால் பார்த்திபன் தன்னிடம் ஸ்பெஷலாக பேச மாட்டானே என்கிற எண்ணம் வந்து அவளை சற்றும் கண்டுக்கொள்ளாமல் போக செய்தது.

அதை பார்க்கும் ஷிவானி, ஷாலினியை முறைத்துக் கொண்டே போவதும் வாடிக்கையாகி இருந்தது.

இப்போதும் பார்த்திபனை பார்த்தவள், கண்களால் நிரப்பிக் கொண்டாள்.

பானுமதி ஏதோ சொல்ல, அதற்கு அவன் சிரித்துக் கொண்டே எதையோ சொல்வதை பார்த்தவளுக்கு இதயம் இடம் மாறியது.

இதயம் இடம் மாறியதே விழிகள் வழி மாறியதே!

இது தானே காதல் என்று அசரீரி கேட்கின்றதே!

மனதுக்குள் ‘நம்தன நம்தன நம்தன…’ என்று இளையராஜா இசைக்கத் துவங்கியிருந்தார்.

“ஏய் ஷால்… என்னடி பண்ணிட்டு இருக்க?” மது சற்று எரிச்சலாக அழைக்க, அது ஷாலின் காதில் விழுந்தால் அல்லவா? அவள்தான் பார்த்திபனுடன் டுயட் பாடிக் கொண்டிருந்தாளே!

“ஏய் எருமை…” என்று மது பாசமாக கத்த, ஷாலினி அவசரம் அவசரமாக சென்னையில் உள்ள அந்த நட்சத்திர ஹோட்டலில் லேண்ட் ஆனாள்.

“லூசே… ஏன்டீ இப்படி கத்தற?” எதுவுமே நடக்காதது போல ஷாலினி கேட்டு வைக்க, மது கடுப்பின் உச்சிக்கு சென்றாள்.

“அட பிசாசே… எவ்வளவு நேரமா கூப்பிட்டுட்டு இருக்கேன்… காதே கேக்காத மாதிரி ட்ரீம்ல யார் கூட டி டுயட் பாடிட்டு இருந்த?”

இடையில் கை வைத்தபடி தோழியை மிரட்ட, அவளோ மாட்டிக்கொண்ட உணர்வுடன்,

“ம்ம்ம்… விஜேடி முடிஞ்சு, துல்ஹரோட டுயட் பாடிட்டு இருந்தேன்… அதைத்தான் கெடுத்து விட்டுட்டல்ல… சொல்ல வந்ததை சொல்லு…” என்றாள், இனிய கனவு கலைந்ததில் எரிச்சலாக இருந்தது அவளுக்கு.

“நம்ம ரேஞ்சுக்கு குமரிமுத்தே அதிகம்டி… இதுல உனக்கு துல்ஹர் கேக்குதா?” அருகிலிருந்த ஷிவானி கிண்டலாக கேட்க,

“அது உன் ரேஞ்சு ஷிவா… என் ரேஞ்சுக்கு துல்ஹரெல்லாம் கம்மிதான்…” என்று கண்ணடிக்க, அவள் உதட்டை சுளித்து விட்டு சென்றாள்.

ஷிவானியின் தற்போதைய போக்கு ஷாலினிக்கு புதிராகத்தான் இருந்தது. இதுவரையில் எந்தவொரு கல்மிஷமும் இல்லாமல் தான் சென்று கொண்டிருந்தது அவர்களது நட்பு. ஆனால் ஷாலினியின் மனதுக்கு ஏதோ ஒன்று தவறாக போய்க்கொண்டிருப்பதாக பட்டது. ஷிவானியிடம் தவறிருப்பதாக முழுவதுமாக சொல்ல முடியவில்லை. ஆனாலும் முழுவதுமாக அப்படியே விட்டுவிடவும் முடியவில்லை

அது அவளது உள்ளுணர்வு!

தினம் பார்த்திபனிடம் பேசி, அவளறியாமலே அவன் கொடுத்த பயிற்சியினால் உந்தப்பட்ட உள்ளுணர்வு!

ஆனால் மதுவுக்கு எதுவுமே வேறுபாடாக தெரியவில்லை. ஒருவேளை அவள் அந்த கோணத்தில் எதையும் பார்க்கவில்லையோ என்னவோ!

“மது… இந்த ஷிவ் ஏன்டீ இப்படி போறா? சம்திங் ராங்…” என்று புருவத்தை நெரித்துக் கொண்டே கூற,

“இதுக்குத்தான் மாம்ஸ் கிட்ட ரொம்ப பேசாதன்னு சொன்னேன்… அவருக்குத்தான் யாரைப் பார்த்தாலும் கெட்டவனா தோணும்…” என்று அவள் சிரிக்க, அதற்கு அவள் பதிலளிக்கவில்லை.

ஷாலினியின் செல்பேசி ஒலித்தது.

பார்த்திபன் தான் அழைத்திருந்தான். ‘ஹப்பா ஹன்ட்ரெட் இயர்ஸ்’ என்று நினைத்துக் கொண்டே எடுத்தாள்.

“என்னம்மா? அந்த மேடம் என்ன பண்றாங்க?” எப்போதும் போல எடுத்த எடுப்பிலேயே மதுவை விசாரிக்க, ஏன்? எங்களை எல்லாம் கண்ணுக்கு தெரியாதா என்று கேட்க தோன்றியது.

“இப்பத்தான் ஒரு ஆர்கியுமென்ட் முடிச்சுட்டு மேக் அப் பண்ணிட்டு இருக்கா…” என்று மெல்லிய சிரிப்போடு கூற,

“எப்படியும் இந்த பங்க்ஷன் முடியறதுக்குள்ள மேக் அப்பை முடிச்சுடுவா… இல்லையா?” என்று கிண்டலாக அவன் கேட்க,

“அதை நீங்க உங்க அக்கா பொண்ணு கிட்டேயே கேட்டுக்கங்க… அப்ப கூட முடியாது போல…” என்று அவள் சிரித்தபடியே பேசியை மதுவிடம் கொடுத்தாள்.

“ஹாய் மாம்ஸ்… என்ன ஷாலினி கிட்ட நிஜமாவே கடலை விவசாயம் பண்ணிட்டு இருப்பீங்க போல இருக்கே…”

“அஃப்கோர்ஸ்… இன்னும் யார் யாரெல்லாம் மாமனை சைட் அடிக்கறாங்கன்னு பார்த்து அவங்க நம்பரையும் வாங்கிக் கொடு மதுக்குட்டி…” மெல்லிய சிரிப்போடு அவன் கூற, இவள் தாங்கமாட்டாமல் சிரித்தாள்.

“ஹலோ… நானென்ன உங்களுக்கு மாமி வேலை பார்த்துட்டு இருக்கேனா?” பெரிதாக மிரட்டுவது போல அவள் கூற,

“இதை கூட இந்த மாமனுக்காக பண்ண மாட்டியா?”

“மாட்டேன்…” அவன் கிண்டலாக கேட்க, இவளும் அதே போல பதில் கொடுத்தாள்.

“சோ சேட் மதுக்குட்டி…” சிரித்தான்.

அவனது அந்த ஆழ்ந்த சிரிப்பை கேட்டபோது அவளது மனதுக்குள் சந்தோஷப் பூ!

“மாமா… உங்களை பார்க்கணும் போல இருக்கு…” சற்று சிறிய குரலில் அவள் கூற,

“இங்க தான் டா இருக்கேன்…”

“தேங்க்ஸ் மாமா…”

“பெரிய மனுஷி… தேங்க்ஸ் சொன்னதெல்லாம் போதும்… வேலைய பாரு…” அவனது வார்த்தைகளில் கேலி இருந்தாலும், குரலில் அனைத்தையும் தாண்டிய அக்கறை இருக்க, அதை முழுவதுமாக உள்வாங்கியவள், புன்னகைத்தபடி,

“வின் பண்ணிட்டு முன்னாடி வரேன் பாருங்க… உங்களுக்கு தான் நம்ம ரேஞ்சே தெரியல… நீங்க வேண்ணா பாருங்க… நம்ம புகழ் இந்தியாவை தாண்டி அப்படியே உச்சியை தொடப் போகுது… அப்ப நீங்கள்லாம் என்கிட்டே ஆட்டோக்ராப் வாங்க கியூல தான் நிற்க போறீங்க…” வேடிக்கையாக பேசினாலும் தன்னம்பிக்கை தெறித்தது அவளது குரலில்.

“வெயிட்டிங் மதுக்குட்டி வெயிட்டிங்…” என்று சிரித்தவன், பேசியை வைத்தான்.

செல்பேசியை மேஜை மேல் வைத்து விட்டு நிமிர்ந்தவளின் முன் ரதீஷ் நின்றிருந்தான், உடன் இன்னொருவரோடு. அருகிலேயே சஞ்சயும் நின்றிருக்க, என்னவென்று பார்வையால் அவனை கேட்டாள்.

“மது… இவர் ***** யோட எம்டி… மிஸ்டர் சுபாஷ் கோயல்…” என்று உடனிருந்தவரை அறிமுகப்படுத்தினான் ரதீஷ்.

அவன் கூறிய நிறுவனம் தான் அந்த நிகழ்ச்சியை பெரிய அளவில் ஸ்பான்சர் செய்திருந்தது. அதோடு வெற்றி பெறுபவர்கள் அந்த நிறுவனத்தின் பிரான்ட் அம்பாசிடராக ஒரு வருடம் நியமிக்கப் படுவார்கள் என்பது கூடுதல் தகவல்.

தகுதி சுற்றுக்கள் அனைத்தும் முடிந்த நிலையில், இந்த பைனலில் வெற்றி பெறுபவரே அந்த வருடத்தின் அழகியாக அறிவிக்கப்படுவார்.

அப்படி இருக்கும் போது இப்போது ஸ்பான்சர் எதற்காக தன்னை பார்க்க வர வேண்டும்? மனம் படபடவென அடித்துக் கொண்டது.

“ஹலோ சர்…” என்று அவள் அந்த மனிதருக்கு கை கொடுக்க, இறுக்கமாக பிடித்தார் அந்த சுபாஷ் கோயல். அந்த பிடியில் அழுத்தத்தோடு அடக்கி ஆளும் தன்மையும் இருப்பதாக தோன்றியது மதுவுக்கு.

சுபாஷ் கோயல் தனிப்பட்ட முறையில் மதுவை பார்க்க வந்ததை பார்த்த மற்ற பெண்களுக்கு கண்களில் பொறாமை தென்பட்டது.

அதிலும் ஷிவானியின் முகம் தக்காளிப் பழமாக சிவந்து போனது.

“வாழ்த்துகள் மது… உங்களைப் பற்றி ரதீஷ் கூறினார். எங்களுக்கும் உங்களை தேர்ந்தெடுப்பதில் மிகவும் மகிழ்ச்சி…” என்று அவர் ஆங்கிலத்தில் கூற, மதுவினால் அந்த வார்த்தைகளின் கனத்தை தாள முடியவில்லை.

எந்த மேற்பூச்சும் இல்லாமல் நேரடியாக அந்த சுபாஷ் கோயல் சொன்ன செய்தி அவளை ரெக்கை இல்லாமலே பறக்க வைத்தது. அதற்கு காரணம் ரதீஷா? அவளால் மகிழ்ச்சியை வெளிப்படுத்தக் கூட முடியவில்லை.

ஆனால் எப்படி? இன்னும் இறுதிச்சுற்று நடக்கவே இல்லையே? அதற்குள் எப்படி இப்படி செய்ய முடியும்? இது தவறல்லவா?

பல கேள்விகள் அவளுக்கு முன் சுழன்றடிக்க, சுற்றி நின்றவர்களை குழப்பமாக பார்த்தாள்.

“ஆனா ரதீஷ் இன்னும் பைனல்ஸ் நடக்கவே இல்லையே… அப்புறம் எப்படி?” என்று ரதீஷை பார்த்து மது கேட்க, அவன் அலட்சியமாக சிரித்தான்.

“மத்தவங்களுக்கு தான் மது இது போட்டி… ஆனா இது பிக்ஸட்… நீ தான் வரணும்ன்னு நாங்க முதல்லையே டிசைட் பண்ணிட்டோம்…” யாருக்கும் கேட்காமல் குரலை சற்று குறைத்து அவன் கூற, ஒரு நிமிடம் அவளுக்கு எதுவும் புரியவில்லை.

மற்றவர்களுடன் போட்டியிட்டு தேர்ந்தெடுத்தால் அதில் மகிழ்ச்சி இருக்கும். ஆனால் இதில்?

ஒரு மனம் ஒப்பாமல் தத்தளித்தாலும் மறு மனம் அந்தரத்தில் பறந்து கொண்டிருந்தது.

மகிழ்ச்சியில்!

எதுவும் கூறாமல் சஞ்சய்யை பார்த்தாள்.

அவனது முகம் ஏனோ சற்று குழப்பமாக இருந்தாலும் எதுவும் சொல்லவில்லை. அதை காட்டிலும் அவனுக்கும் மகிழ்ச்சிதான் என்பது போலத்தான் நின்றிருந்தான்.

இது மிகப் பெரிய வாய்ப்பல்லவா!

எத்தனை நாட்களாக மதுவுக்காக எத்தனை இடங்களில் லாபி செய்திருப்பார்கள். கடைசியாகத்தானே சுபாஷ் கோயலை சம்மதிக்க வைக்க முடிந்தது.

எதற்காக?

மதுவுக்காக!

அவளது காதலுக்காக!

சற்று சுணங்கிய ரதீஷும் கடைசி நாட்களில் வெகு தீவிர லாபியில் இறங்கியிருந்தானே, தனக்காக!

“ஆனா…” என்று மூவரையும் பார்த்து இழுத்தவளை பார்த்து முறைத்த ரதீஷ், அவளது கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு சற்று தள்ளி சென்றான்.

“மது… நீ மிஸ் சென்னை ஆகறது ஜஸ்ட் ஸ்டார்ட் மட்டும் தான்… அதுக்கப்புறம் இவங்க உன்னை மிகப்பெரிய அளவுல ப்ரொமோட் பண்ணிடுவாங்க… நீ மிஸ் இந்தியா போகணும்ன்னு விருப்பப்பட்டா இவங்க தயவு ரொம்ப ரொம்ப அவசியம்… பாலிவுட்ல மிகப் பெரிய ஸ்டார்ஸ் எல்லாரையும் ப்ரொமோட் பண்ணி, லாபி பண்ணி எக்ஸ்ட்ரீம் லெவலுக்கு கொண்டு போனது இவங்க தான்… அதை ஞாபகம் வெச்சுக்க…”

மிகவும் கண்டிப்பான குரலில் அவன் கூற, அவளால் சட்டென்று எதையும் உள்வாங்கவே முடியவில்லை. அந்த அளவு மூளை வேலைநிறுத்தம் செய்திருந்தது.

சஞ்சயும் வந்து உடன் நின்றான்.

கையை பற்றியவன், மென்மையாக அழுத்திக் கொடுத்தான். என்னவோ மனதுக்குள் யானை பலம் வந்ததது போல உணர்ந்தாள்!

“இங்க பார்… அவர் கிட்ட வந்து எனக்கு எல்லாத்துக்கும் ஓகேன்னு மட்டும் சொல்லு… அது போதும்… மற்ற அத்தனையும் நாங்க பார்த்துக்கறோம்…” என்று கூறியதும் கூட பாதிதான் காதில் விழுந்தது.

மனமெல்லாம், “இந்த வருடத்தின் மிஸ் இந்தியா…. மிஸ் மதுவந்தி வினோதகன்…” என்று அறிவிப்பாளர் அறிவிக்கும் சொற்களே சுழன்று கொண்டிருந்தது.

லட்சியத்தை அடைவதற்கு ஒரு வார்த்தை மட்டுமே அல்லவா இடைவெளி!

ஆனால் இதற்காக தன்னிடம் என்ன இவர்கள் எதிர்பார்க்கக் கூடும்?

மெளனமாக ரதீஷையும் சஞ்சயையும் பார்த்தவள், சுபாஷ் கோயலை பார்க்க, அவர் வெகு தீவிரமாக அவளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

பார்வையால் அவளை கபளீகரம் செய்து கொண்டிருந்தார்.

அவரது பார்வையின் அர்த்தத்தை உணர்ந்தவளுக்கு உள்ளுக்குள் குளிர் பிறந்தது. மேடையின் இடைவெளியில் தெரிந்த பார்த்திபனின் முகத்தை பார்த்தாள்.

உடல் நடுங்கியது!

அந்த ஒரு வார்த்தையை கூறி வெற்றிக்கும் அவளுக்குமான இடைவெளியை உடைத்து விடலாம்… ஆனால் அதற்கு பின்?

விளைவுகளை எண்ணி மொத்தமும் அருவருத்தது!

ஆனால் லட்சியம்? புகழ்? பெயர்?

இரண்டு பக்கங்களுக்கு இடையில் ஊசலாடிக் கொண்டிருந்தாள் மது!

நீண்டதொரு பெருமூச்சை இழுத்து விட்டவள்,

“அதுக்காக அவங்க என்கிட்டே என்ன எதிர்பார்க்கறாங்க ரதீஷ்?” வெகு இயல்பாக கேட்பது போலக் காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் நடுக்கம்.

“அக்ரீமென்ட்ல சைன் பண்ணனும் மது… அவங்க சொல்ற பங்க்ஷன்ஸ் அட்டென்ட் பண்ணனும்… யார் கூட கம்பெனி கொடுக்க சொன்னாலும் மறுக்காம கொடுக்கணும்… இது ஹிட்டன் க்ளாஸ்…” எதுவுமே ஒன்றுமில்லை என்பது போல சஞ்சய் கூற, மது அதிர்ந்து நின்றாள்.

Written by

Ardent reader, kirukkufying something, want to travel with characters around me.

error: Content is protected !!