madiveedu – 19

மாடிவீடு – 19

அந்த பிரபல மருத்துவமனையில் இரண்டு நாட்களுக்கு மேலாகியும், கண்களை திறக்காமல் அட்மிட் ஆகி இருந்தனர் அமுதனும், பாண்டியும்.

ஆலமரத்தானிடம் ஏற்பட்ட கடும்வாக்குவாதத்தின் பின் ஒரு முடிவெடுத்தவராக, டவுண் நோக்கிச் சென்றனர் அமுதனும் பாண்டியும்.

‘எப்படியாவது இருவருக்கும் திருமணத்தை முடித்து, பட்டணத்துக்கு அழைத்து செல்லவேண்டும்’ என்பது பாண்டியின் எண்ணம்.

‘அன்பை திருமணம் செய்தபின் இதே ஊரில் இருந்து, ஆலமரத்தானின் முன் வாழ்ந்துக் காட்ட வேண்டும்’ என்பது அமுதனின் எண்ணம்.

இருவரின் எண்ணமும் திருமணத்தில் இருக்க, கல்யாணத்திற்கு வேண்டியவை, முக்கியமாக தாலி வாங்கவே இருவரும் டவுண் நோக்கி சென்றனர்.

‘ஆலமரத்தான் ஏதாவது பிரச்சனை செய்தால், அந்த இடத்திலேயே அன்பு கழுத்தில் தாலியை கட்டச்‌ சொல்லவேண்டும்’ என்பது பாண்டியின் எண்ணம்.

‘பாண்டி காதலித்த அன்றே இதே செயலை செய்திருந்தால், தன் காதல் பிரிந்தே இருக்காது’ அடிக்கடி எண்ணிக்கொள்வார்.

‘அதே நிலை தன் மகனுக்கும் வரக்கூடாது’ என்று தான் எச்சரிக்கையாக இருக்கிறார்.

இருவரும் ஏதேதோ எண்ணமிட்டபடியே கடையோரமாய் நடந்து சென்றனர்.

இருவருக்கும் பின்னால் மெதுவாக வந்துக் கொண்டிருந்த லாரியை இருவருமே கவனிக்கவில்லை.

அந்த லாரிக்காரனும், இவர்களை குறிவைத்தும் வரவில்லை. அவன் போக்கில் அவன் வந்துக் கொண்டிருந்தான்.

இருவருக்கும் முன்னே பஸ் ஒன்று வர, அதற்கு வழி விட, இருவரும் கரையோரமாய் ஏறினர்.

வேறு ஏதோ வண்டிக்காய் வழிவிட்டு லாரி ரோட்டின் மேலே ஏற, இவர்கள் இருவரையும் கவனிக்காமல் இடித்து சென்றது.

இடித்த வேகத்தில் பாண்டி இன்னொரு வண்டியில் மோதி விழ, அமுதன் லாரியில் மோதி விழுந்தான்.

இருவரையும் உடனே அங்கிருந்த மருத்துவமனையில் சேர்க்க, ஆலமரத்தானுக்கு செய்தி பறந்தது.

கை, கால், தலையில் கட்டுபோட்ட நிலையில் மயங்கி இருந்தார் பாண்டி.

தலை, கைகளில் கட்டுப்போட்ட நிலையில் மயங்கியிருந்தான் அமுதன்.

இருவரையும் பார்த்த அலமரத்தான், இன்னும் ஒரு வாரம் மயக்கநிலையில் வைத்திருக்கும்படி மருத்துவரிடம் கூறி, அங்கு தங்கி இருக்கும் நாள் வரைக்குமான பணத்தைச்‌ செலுத்தி, ஒன்றும் அறியாதவர் போல் அன்புவுக்கு மாப்பிள்ளையை கொண்டு வந்தார்.

அவர் எண்ணம்படி எல்லாம் நல்ல படியாக நடந்துக் கொண்டிருக்கிறது.

*****************************************************

அன்புவுக்கு மனது மிகவும் பாரமாக இருந்தது. வேலைக்குக் கிளம்பியவள் அப்படியே அமர்ந்துவிட்டாள்.

‘அப்பாவுடன் உன் வீட்டுக்கு வருகிறேன்’ என்று கூறிய அமுதனையும் இன்னும் காணவில்லை.

‘கையில் மாப்பிள்ளையுடன் அண்ணன்.’

‘கல்யாணத்தைச் சீக்கிரமே முடிக்க வேண்டும்’ என்ற எண்ணத்துடன் ஆலமரத்தான்.

‘என்ன தான் செய்வது’ அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. அமுதன் இப்பொழுது அவளுடன் இருந்தாலாவது தைரியமாக பேசலாம், அவனையும் காணவில்லை.

அவன் வீடுவரைக்கும் சென்று பார்த்தாகி விட்டது, வீட்டு கதவில் பெரிய பூட்டு தொங்கியது.

‘ஏமாற்றிவிட்டானா?’ ஒரு மனம் சிந்திக்க,

‘இல்லையில்லை, என்னை விட அதிக காதலை கொண்டவர் என்னை அவர் ஏமாற்றமாட்டார்’ உடனே காதல் மனம் அடித்துக் கூறியது.

‘என்ன வேலை இருந்தாலும், என்னை பார்க்க அவர் குளத்து பக்கம் எப்படியும் வருவார்’ என்ற நம்பிக்கைப் பிறக்க, சின்னச் சின்ன வேலையை செய்ய ஆரம்பித்தாள்.

மாலைநேரம்,

கண்ணாடி முன் நின்றுத் தலையை வாரிக்கொண்டிருந்தாள் அன்பு.

வெளியில் சென்ற அழகு, அப்பொழுது தான் வீட்டின் உள்ளே வந்தான். தலை வாரிக்கொண்டிருப்பதைக் கண்ட அழகு,

“எங்கன கிளம்புத அன்பு?”

“வயலுக்குண்ணே”

“ஊரில் நாலு பேர் நாலு விதமா பேச நாம இடம் கொடுக்கக்கூடாது அன்பு, அது உனக்கு நல்லதும் இல்ல”

“நாலு பேர் நாலு விதமா பேச நானும் இடம் கொடுக்கமாட்டேண்ணே, அவர்கிட்ட பேசி இன்னைக்கு ஒரு முடிவோடு வாரேன், அதுக்கு பிறகு நீங்க என்ன சொன்னாலும் நான் கேக்குதேன்” அவனின் பதிலை எதிர் பார்க்காமல் நடந்தாள்.

நேராக அவர்கள் எப்பொழுதும் சந்திக்கும் வயலுக்கு சென்றாள்.

அங்கு அவளுக்காக அமுதன் காத்துக்கொண்டிருந்தான்.

அவளைபார்த்தவன் “அன்பு” என்று ஓடி வந்தான்.

அவள் கண்கள் அவனையே நோக்கின, விழிகள் லேசாக கலங்கின.

“அன்பு” என்றபடி அவளின் கையை பிடிக்க வர,

சட்டென்று அவனை விட்டு விலகினாள். அதன் பிறகு தான் அவளது கண்கள் அவனது காயத்தில் நிலைத்தன, அவனை முழுதாக ஆராய்ந்தாள்.

தலையில் கட்டு, கையை அங்கும் இங்கும் அசைக்காதபடி தொட்டில்.

”என்ன ஆச்சு அமுதன்” பதட்டத்துடன் வினவினாள்.

“ஒரு சின்ன விபத்து, அதை விடு, நீ ஏன் ஒரு மாதிரி இருக்க?”

“நம் காதல் அண்ணனுக்கு தெரிஞ்சிட்டு”

“எப்படி?”

“ஐயா வீட்டுல வேலை செய்யுறவக சொல்லிட்டாக?”

“உன் அண்ணன் என்ன சொன்னாங்க?”

“ஒன்னும்  சொல்லலை, ஆனா, எனக்கு கல்யாணத்துக்கு நாள் குறிச்‌சுட்டாக? ஒரு வாராதுல கல்யாணம்”

“அன்பு என்ன சொல்லுற?” பதட்டமானான்.

“ஐயாத்தேன் எல்லாம் செய்யுறாக, அவகத்தேன் சட்டை போட்ட மனுசனை கொண்டாந்திருக்கார்”

‘அங்கிளா!’ அதிர்ச்சி அவனிடம், ஆனாலும் அதை மறைத்துக் கொண்டு “நீ என்ன சொன்ன?” என்றான்.

“என் முடிவு இந்த கையிடம் இருக்கு, இந்த கையை நம்பி வந்திருக்கிறேன்” உணர்ச்சிப்பெருக்குடன் அவன் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.

“இந்த கை எப்பொழுதும் உன்னை கைவிடாது அன்பு” அவள் கைகளை மெல்லமாய் அழுத்திக் கொடுத்தான்.

“எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு, அதேன் உங்களுக்காக காத்திருக்கேன்”

அவள் கைகளைப் பற்றி தன் இதழைப் பதித்தான். சூடான இருதுளி கண்ணீர் அவள் கைகளில் பட்டு தெறித்தன.

“என்னைக்கு உங்களை என் உயிராய் நினைச்சேனோ அப்பவே இதெல்லாம் நடக்கும்னு எதிர்பார்தேன், என்ன ஆனாலும் நான் உங்களை விட்டு போமாட்டேன் அமுதன்”

கலங்கிய கண்களை மெதுவாக உயர்த்தி அவனைப் பார்த்தாள். அவள் கண்கள் கலங்கின,

“நானும் அப்படிதான் அன்பு, நீ இல்லாமல் எனக்கு வாழ்க்கையே இல்லை… நான் முதலாளி வர்க்கமாம், நீ…”

“வேண்டாம் அமுதன், விடுங்க இதேன் ஊரே சொல்லுதே”

“அதுக்கு தான் நான் ஒரு முடிவெடுத்திருக்கேன்”

“உங்க கூடவே இருக்கதா இருந்தா எதுனாலும் சொல்லுங்க கேக்குதேன்”

“அப்படி பட்ட முடிவுதான் அன்பு. யாருக்கும் தெரியாம நாம ரகசியமா கல்யாணம் பண்ணுவோம் அன்பு”

“முடியாது இது ரொம்ப தப்பு”

“ஏன்? என் மேல நம்பிக்கை இல்லையா? ரகசியமா கல்யாணம் கட்டிக்கிட்டு உன்னை விட்டிருவேன்னு பயப்படுறியா?”

“அப்படி இல்லை அமுதன், நம்பிக்கை இல்லன்னா உங்கட்ட இருந்து பேசிருக்கவேமாட்டேன்”

“பின்ன என்ன அன்பு?”

“ஊரைவிட்டு ஓடிப் போறது நாமதேன், ஆனா ஊர்க்காரங்க என்ன சொல்லுவாக, என் அண்ணனையும், உங்க அப்பாவையும் தப்பா சொல்லுவாக, என்ன லட்சணதுல அன்புவை வளத்தானோ தெரியலே அதேன் எவனையோ இழுத்துட்டு ஓடிட்டான்னு சொல்லுவாக, என் அண்ணன் இதெல்லாம் கேட்டா செத்தே போயிரும்…

உங்கப்பாரும் உங்களை எப்படி வளத்திருப்பாக, நாம இப்படி பண்ணினா, உங்கப்பாரையும்தேன் தப்பா சொல்லுவாக, பையனை வளக்க தெரியாம வளத்திருக்காகன்னு சொல்லுவாக”

அது மட்டும் இல்லாம நாளைக்கு நமக்கு பிள்ளைங்க பொறந்தா அவகளையும் இந்த பழி சொல் தொடரும் ஓடுகாலி புள்ளன்னு சொல்லுவாக அது நமக்கு தேவையா அமுதன்”

“உண்மைதான் அன்பு, ஆனா நாம என்ன தான் செய்யுறது”

“சொல்லுதேன், சொல்லுதேன்… இப்போ சொல்லுங்க உங்களுக்கு என்ன ஆச்சு, மாமா எங்கே? வீட்டுக்கு வாரேன்னு சொல்லிட்டு இத்தனை நாள் எங்க போனீக?”

சுருக்கமாய் நடந்ததை கூறினான்.

“எல்லாம் சரியாகும் அன்பு. அப்பா இன்னும் ரெண்டு நாள்ல கண் முழிச்சிடுவாங்க… உன் வீட்டுக்கே பெண் கேட்டு வாரோம். நீ எதை பத்தியும் யாரை பத்தியும் நினைக்காதே”

“ஏன் அமுதன் பாத்துவரமாட்டீகளா, உங்க வீட்டுல பூட்டை பார்த்ததும் நான் எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா?”

“ஏன்? உன்னை விட்டு எங்கியோ போட்டேன்னா?”

முறைத்தவள் “உங்களை காணுமே என்ன ஆச்சோ, ஏதாசோன்னு நினைச்சா, நீங்க கிண்டல் பண்ணுரீக”

“அதெல்லாம் எதுவும் ஆகாது எங்களுக்கு… நாங்க நல்லா இருக்கோம் எதுக்கும் பயப்படாத… உனக்கு ஏதாவது அவசரமா என்கிட்ட பேசணும்னா ஹாஸ்பிட்டல் வா” என்றவன் ஹாஸ்பிட்டல் அட்ரஸ் கொடுத்து, சிறிது நேரம் பேசி சென்றான்.

அவன் சென்ற சிறிது நேரத்தில் சந்தோஷ முகத்துடன் வீட்டை நோக்கி சென்றாள் அவள்.

அவளின் அமுதன் வந்துவிட்டான், இனி என்ன கவலை அவளுக்கு.

செல்லும் அவனை யோசனை பொங்க பார்திருந்தார் ஆலமரத்தான்.

error: Content is protected !!