PunnagaiMannan-11final

புன்னகை மன்னன்

அத்தியாயம் – 11

அந்தப் பழமையான கிராமத்தில் அத்தனை பேரும் கூடி இருந்தார்கள். அர்ஜூனின் பூர்வீகம் அந்தக் கிராமம் தானாம். தன் முன்னோர்கள் வாழ்ந்த மண்ணில்தான் தனது மகனின் திருமணம் நடக்கவேண்டும் என்று பார்த்தசாரதி ஒரு பிடியாக நின்றுவிட்டார்.

மனிதரைக் கையில் பிடிக்க முடியவில்லை. மருமகளையும் பேத்தியையும் தாங்கு தாங்கென்று தாங்கினார். ஆனால் தான் பெற்றதைத்தான் கண்டுகொள்ளவே இல்லை.

இந்த ஒரு வாரத்தில் குழந்தையும் நன்றாக எல்லோரோடும் ஒட்டிக்கொண்டது. உதய நாராயணன் கூடக் கல்யாணத்திற்கு வந்திருந்தார். ஆனால் யாரோடும் பெரிதாக உறவாடவில்லை. அந்தக் குறையை மலர் தீர்த்து வைத்தார்.

எந்தப் பந்தாவும் இல்லாமல் அந்தச் சாமான்ய மனிதர்களோடு ஐக்கியமாகிப் போனார் மலர். அபிராமியும் மலரும் பம்பரம் போல சுழன்று கொண்டிருந்தார்கள்.‌ இன்னும் சிறிது நேரத்தில் முகூர்த்த நேரம் வந்துவிடும். எல்லா ஆயத்தங்களையும் கடைசியாக ஒரு முறை சரிபார்த்துக் கொண்டிருந்தார்கள்.

“ராமு ண்ணா… சாப்பாடு வந்திருச்சா?”

“அம்மா… எல்லாம் ரெடியா இருக்கு. பொண்ணை அழைச்சுக்கிட்டு வரப்போறாங்க. நீங்க ரெண்டு பேரும் அங்க போங்க. நான் இதையெல்லாம் பார்த்துக்கிறேன்.”

“எந்தக் குறையும் வந்திடக் கூடாது ண்ணா.”

“அதெல்லாம் எனக்கும் தெரியும்.‌ நீங்க முதல்ல போங்கம்மா.” ராமு விரட்டவும் அபிராமியும் மலரும் மணப்பெண்ணின் அறைக்குப் போனார்கள்.

ஏற்கனவே மாப்பிள்ளை மந்திரங்கள் சொல்ல ஆரம்பித்திருந்தான். பட்டு வேஷ்டி சட்டையில் மாலையும் கழுத்துமாக உட்கார்ந்திருந்த அர்ஜூனை ஒரு எட்டுப் போய் பார்த்துவிட்டுத் தான் வந்திருந்தார் அபிராமி.

பார்த்தசாரதி ஏற்கனவே பார்க்க இளமையாகத் தான் இருப்பார். இப்போது இன்னும் கொஞ்சம் மினுமினுப்பு சேர்ந்து கொண்டது. அபிராமி கூட அன்று அர்ஜூன் புததாக வாங்கிக் கொடுத்திருந்த பட்டுப்புடவை, நகைகளைத்தான் அணிந்திருந்தார்.

‘புடவை மட்டும் போதும் அர்ஜூன். எதுக்கு நகையெல்லாம் புதுசா வாங்குறே? எங்கிட்டத்தான் நிறைய இருக்கே?’

‘என்னோட கல்யாணத்துக்கு நீங்க எல்லாம் புதுசாத்தான் போடணும். எதுவும் பேசக் கூடாது.’ அபிராமியை இப்படித்தான் அடக்கி இருந்தான் அர்ஜூன்.

முகூர்த்த நேரம் நெருங்கவும் பெண்ணை அழைத்து வரச் சொன்னார்கள். செம்பட்டுச் சேலை கட்டி, ஆதி முதல் அந்தம் வரை ஆபரணங்கள் அணிந்து பூந்தேர் போல நடந்து வந்தாள் மதுரா. அம்மாவையும் அப்பாவையும் கல்யாணக் கோலத்தில் பார்த்த குழந்தை கைகொட்டிச் சிரித்தது.

அர்ஜூன் நிறைவாக உணர்ந்தான். அன்று ‘ஐஸியூ’ல் வைத்து மதுராவைப் பார்த்துப் பேசியதுதான். அதன் பிறகு பெரிதாகப் பேசச் சந்தர்ப்பங்கள் கிடைக்கவில்லை. பிற்பாடு வந்த இந்த ஒருவார காலப் பொழுதைப் பெரியவர்கள் தங்கள் கையில் எடுத்துக் கொண்டார்கள்.

அபிராமிக்கும் பார்த்தசாரதிக்கும் விஷயம் ஓரளவு ஏற்கனவே பிடிபட்டிருந்தது. அன்று ஹாஸ்பிடலுக்கு மதுரா வந்த கோலம் அனைத்தையும் ஊர்ஜிதப்படுத்த பெரியவர்கள் சூழ்நிலையைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்டார்கள்.

முறையாக மதுரா வீட்டிற்கு இவர்கள் பெண் கேட்டுப் போக, அவர்கள் சம்மதிக்க என்று அனைத்தும் சிறப்பாக நடைபெற்றிருந்தது. அன்னபூரணி மட்டும் திருமணத்திற்கு வரவில்லை. கணவரும், மகனும் சிறையில் இருக்கும் போது எப்படி அவரால் இங்கெல்லாம் வர முடியும்? அதோடு… எந்த முகத்தை வைத்துக் கொண்டு வருவது?

தன் பக்கத்தில் அமர்ந்திருந்தவளைத் திரும்பிப் பார்த்தான் அர்ஜூன். இவன் பார்வை புரிந்து அவளும் திரும்பிப் பார்த்தாள். அனைத்தும் அறிந்தவன் தான். இருந்தாலும் இன்று புதிதாகப் பார்ப்பது போலப் பார்த்தான்.

ஐயர் தாலியை அர்ஜூனின் கையில் கொடுக்க அதை வாங்கியவன் மதுராவை ஒரு முறைப் பார்த்துவிட்டு அதை அவள் கழுத்தில் கட்டினான். தாலி கட்டிய கையோடு அவள் காதில் கிசுகிசுத்தான்.

“செர்ரி… இது லாக்கர்ல வைக்குற தாலி இல்லை… புரியுதா?’

“அர்ஜூன்…” சிணுங்கியது பெண்.

“பெரியவாக்கிட்ட ஆசீர்வாதம் வாங்கிக்கங்கோ.” ஐயரின் ஆணையில் மதுராவோடு எழுந்த அர்ஜூன் அங்கு நின்றிருந்த தன் பெரியப்பா முறைக்காரரைப் பார்த்தான். அவரும் தலையை ஆட்டிக் கொண்டார்.

“பார்த்தசாரதி… இப்போ நீ போய் மனையில உக்காரு.” அந்த ஆணையில் பார்த்தசாரதி திடுக்கிட்டுப் போனார்.

“அண்ணே! என்ன சொல்றீங்க நீங்க?”

“நல்லநேரம் முடியப் போகுது. உம் பையன் ரெண்டு கல்யாணத்துக்குத் தான் ஏற்பாடு பண்ணி இருக்கான். நேரத்தைக் கடத்தாதே. சீக்கிரமா வந்து உக்காரு.” சொன்னதோடு நிற்காமல் பார்த்தசாரதியின் கையிலிருந்த ஆதர்ஷினியை அர்ஜூனிடம் கொடுத்துவிட்டு அவரை மனையில் கூட்டிவந்து உட்கார வைத்தார்.

மலரும் தாமதிக்காது அபிராமியை அழைத்து வந்து மனையில் உட்கார வைக்க இரண்டு பேரும் திகைத்துப் போனார்கள்.

ஆனால் ஐயருக்கு ஏற்கனவே விஷயம் தெரியும் என்பதால் நேரத்தை வீணடிக்காமல் மந்திரங்களை மீண்டும் ஓதி பார்த்தசாரதியின் கையில் தாலியைக் கொடுத்தார்.

பார்த்தசாரதி ஸ்தம்பித்துப் போய் நிற்க அபிராமியின் கண்கள் கலங்கிப் போனது. கலங்கிய அந்த விழிகள் சொன்ன சேதி பார்த்தசாரதிக்கு இருந்த கொஞ்ச நஞ்சத் தயக்கத்தையும் துடைத்தெறிய சட்டென்று அபிராமி கழுத்தில் மூன்று முடிச்சுப் போட்டார்.

“சாதிச்சுட்டீங்க தம்பி.” இது வடிவேல்.

“என்னோட எத்தனை நாள் கனவு மாமா இது!”

“ம்… அபிராமி அம்மா முகத்தைப் பாருங்க தம்பி. எவ்வளவு சந்தோஷம்.”

“என்னாலயும் இனிமேல்தான் நிம்மதியா இருக்க முடியும் மாமா.”

“அதுவும் சரிதான்.”

“மாமா… நாளைக்கு ரிசப்ஷனுக்கு எல்லாம் ரெடிதானே?”

“அதெல்லாம் பக்காவா ரெடி பண்ணியாச்சு. விட்டா இன்னைக்கே எல்லாரும் இங்க வந்திருப்பாங்க. நாளைக்கு நீங்க ஏற்பாடு பண்ணி இருக்கிறதால தான் அமைதியா இருக்காங்க. ஆஃபீஸ்ல இன்னைக்கு இதுதான் பேச்சா இருக்கும்.” வடிவேல் சொல்லிச் சிரிக்க அர்ஜூனும் புன்னகைத்தான்.

சம்பிரதாயங்கள் அனைத்தையும் முடித்துக் கொண்டு அன்று அந்தக் கிராமத்தில் தான் அனைவரும் தங்கினார்கள். கோவிலில் வைத்தே விருந்தும் பரிமாறப்பட்டது. ஊருக்கே விருந்து வைத்திருந்தார் பார்த்தசாரதி.

கொஞ்சம் பழைய வீடுதான். இருந்தாலும் பெரிதாக இருந்தது. நிறைய ரூம்கள் இருந்ததால் எந்தப் பிரச்சனையும் இருக்கவில்லை. வீட்டுக்கு வந்த விருந்தாளிகளைச் சமாளிக்கவே நேரம் சரியாக இருந்தது எல்லோருக்கும்.

தயாளனும் கல்யாணத்திற்கு வந்திருந்தான். ஆனால் அங்கேயே தங்கவில்லை. உடனேயே கிளம்பி விட்டான். அடிக்கடி அர்ஜூனின் காதில் ஏதோ சொல்லியபடியே இருந்தான்.

“என்ன அர்ஜூன்? ஏதாவது பிரச்சனையா?” மதுரா கலவரமாகக் கேட்டாள்.

“இல்லை செர்ரி. நிலைமை எப்படி இருக்குன்னு தயாளன் கிட்டக் கேட்டுக்கிட்டு இருந்தேன். அவ்வளவுதான்.” நம்பாத பார்வை பார்த்த மனைவியைப் பார்த்துச் சிரித்தான் அர்ஜூன்.

“சத்தியமா ஒன்னுமே இல்லை செர்ரி… நம்புடீ…”

“ம்…” உறுமி விட்டுக் கோபமாகப் போய்விட்டாள் பெண். எதையும் அவளிடம் சொல்லாமல் பண்ணிய கோபம் அவளுக்கு. இன்னும் தனிமையில் வசமாக மாட்டவில்லை அர்ஜூன் அவளிடம்!

இரவு ஏற ஏற விருந்தினர்கள் வருகை நின்று போனது. நெருங்கிய சொந்தங்கள் மட்டும் வீட்டிலிருக்க இரவு உணவு பரிமாறப்பட்டிருந்தது.

மதுராவிற்குச் சேலையில் தொடர்ந்து இருப்பது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால் அர்ஜூன் உடைமாற்ற அனுமதிக்கவில்லை.

“புடவை கஷ்டமா இருக்கு அர்ஜூன். எனக்குப் பழக்கமில்லை பி.எம்.”

“பழகிக்கோ செர்ரி. பார்க்க செமையா இருக்கே. இனி அடிக்கடி புடவை கட்டப் பழகிக்கோ.” மனைவியின் முகம் போன போக்கைப் பார்த்த அர்ஜூன் திகைத்துப் போனான்.

“என்ன செர்ரி?”

“ஒன்னுமில்லை.”

“ரொம்பக் கஷ்டமா இருந்தா சேன்ஞ் பண்ணுடா.”

“இல்லை பரவாயில்லை… இருக்கட்டும்.” அவன் ஆசையாகச் சொன்ன பிறகு எப்படி அவளால் மறுக்க முடியும்.

இரவு உணவை முடித்துக்கொண்டு விட்டால் போதுமென்று அவளுக்குக் கொடுத்திருந்த ரூமிற்குள் போய்விட்டாள் மதுரா. பின்னோடு வந்த அர்ஜூனை அவள் கவனிக்கவில்லை.

ரூமிற்குள் போன பிறகுதான் அங்கு பாத்ரூம் இல்லை என்பது ஞாபகம் வந்தது பெண்ணிற்கு.

“என்ன தேடுற செர்ரி?”

“அர்ஜூன்… இங்க எப்படிக் குளிக்கிறது? பாத்ரூம் இல்லையே?”

“இங்கெல்லாம் பாத்ரூம் இருக்காது செர்ரி.”

“அப்போ இவங்கெல்லாம் குளிக்கமாட்டாங்களா?”

“ஏய்! என்ன கேலியா?”

“உண்மையாத்தான் கேக்குறேன் அர்ஜூன். எப்படிடா?” கிராமப்புறம் அவளுக்குப் புதிது என்பதால் அங்கிருந்த பழக்கவழக்கங்கள் அவளுக்குப் புதிதாகத் தான் இருந்தது.

“வெளியே தான் குளிக்கணும். உனக்குத் தேவையான ட்ரெஸ்ஸை எடுத்துக்கிட்டு வா. டவல் எல்லாம் எடுத்துக்கோ.”

“நைட் ட்ரெஸ் ஓகேவா பி.எம்?”

“அடிதான் வாங்கப் போற நீ. நைட் ட்ரெஸ் போட்டுக்கிட்டு எப்படி எல்லார் முன்னாடியும் வருவே?”

“ஓ…‌ அப்போ சுடிதார் எடுத்துக்கிறேன்.”

“ம்… ஜ்வெல்ஸ் எல்லாத்தையும் இங்கேயே கழட்டி வச்சிட்டு வா.”

“ம்…”

மனைவியை அழைத்துக்கொண்டு வீட்டின் பின் புறமாக வந்தான் அர்ஜூன். குழந்தை அபிராமி, பார்த்தசாரதியின் பொறுப்பில் இருந்ததால் இவர்கள் இயல்பாக இருந்தார்கள்.

“இங்க தான் குளிக்கணும் செர்ரி.” அவன் காட்டிய இடத்தை வினோதமாகப் பார்த்தாள் மதுரா.

அந்தப் பெரிய வீட்டின் கொல்லைப்புறம் அது. நல்ல விசாலமாக இருந்தது. சுற்றி வர வாழை மரங்கள் சூழ்ந்திருக்க நடுவில் பெரிய கிணறு இருந்தது.

ஓரிடத்தில் வாழை மரங்கள் இல்லாததால் அந்த இடத்தை மறைக்க வேலி போட்டிருந்தார்கள். தென்னை ஓலையால் பின்னப்பட்ட கிடுகுகள் சுற்றிவர வேயப்பட்டிருந்தது.

“அர்ஜூன்! இங்க எப்படிக் குளிக்கிறது?” மனைவியின் பார்வையில் புன்னகைத்தான் அர்ஜூன். அவனுக்குத் தெரியும். இப்படியான இடங்களை அவள் டீவியில் கூடப் பார்த்திருக்க மாட்டாள் என்று.

“கிணறு இருக்கு… வாளி இருக்கு. தண்ணியை அள்ளிக் குளிக்கணும் செர்ரி.” அவன் சிரிக்காமல் சொன்னான்.

“அந்த மெக்கானிஸம் எனக்கும் புரியுது அர்ஜூன்.”

“கிணத்துல தண்ணி அள்ளுறது மெக்கானிஸமா?” இப்போது அர்ஜூன் வாயைப் பிளந்தான்.

“இப்படி ஓபன் ஸ்பேஸ்ல எப்படிக் குளிக்கிறது?”

“இல்லையே… சுத்திவர வேலி போட்டிருக்கு இல்லை?” அவனுக்குப் புரியவில்லை.

“இருந்தாலும்…‌ எனக்குப் பழக்கமில்லை அர்ஜூன். யாராவது வந்திடுவாங்களோன்னு இருக்கும்.”

“யாரும் வரமாட்டாங்க. அதான் நான் இருக்கேன் இல்லை?”

“நான் உன்னையும் சேர்த்துத் தான் சொல்லுறேன்.” சொன்னவளை இப்போது அர்ஜூன் முறைத்தான்.

“உனக்கே இது கொஞ்சம் ஓவராத் தெரியலையா செர்ரி!”

“இல்லை தெரியலை… அதுக்கிப்போ என்னாங்குற? விட்டா வீடு வீடாப் போய்ச் சொல்லுவ போல இருக்கு. இவளோட நான் ஏற்கெனவே குடித்தனம் பண்ணி இருக்கேன்னு.”

“அதை நான் எதுக்குடீ சொல்லணும். சாட்சியே இருக்கில்லை.”

“ஆ… போதும் போதும். பக்கெட்டை ஃபில் பண்ணிட்டுப் போய் வெளியே நில்லு. நான் முடிச்சதும் கூப்பிடுறேன். அதுக்கு முன்னாடி இந்த லைட்டை ஆஃப் பண்ணச் சொல்லு.”

“அது எதுக்கு? இருட்டுல என்ன பண்ணுவ?”

“சொன்னதை செய் பி.எம். யாரோ பார்க்கிற மாதிரியே இருக்கு. நான் சமாளிச்சுக்குவேன். லைட்டை ஆஃப் பண்ணச் சொல்லு.”

“நேரந்தான்.” சொல்லிவிட்டு அந்தப் பெரிய பக்கெட்டில் நீரை நிரப்பிக் கொடுத்தவன் வேலிக்கு அப்பால் போய் நின்று கொண்டான்.

“தலையை நனைக்காத செர்ரி.” வெளியே இருந்து கொண்டு குரல் கொடுத்தான் அர்ஜூன்.

“ம்… சரி சரி.” அவள் குளிக்கும் சத்தம் கேட்டது.

“அர்ஜூன்…”

“ம்…”

“எனக்கு உங்க ஊரை ரொம்பப் பிடிச்சிருக்கு.”

“நம்ம ஊர்.”

“சரி… நம்ம ஊர்.”

“உண்மையாவே பிடிச்சிருக்கா? இங்க உனக்கு ஒரு பாத்ரூம் கூட இல்லை?”

“அது கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு. ஆனாப் பிடிச்சிருக்கு அர்ஜூன்.” உள்ளிருந்து கொண்டு அவள் குளித்தபடி பேச வெளியே வேஷ்டியை மடித்துக் கட்டிக்கொண்டு பதில் சொல்லிக் கொண்டிருந்தான் அர்ஜூன். நிலா காய்ந்து கொண்டிருந்தது.

“அதான் இங்க வரப்போறோம்னு தெரியுமில்லை. சிம்பிளா ஏற்பாடு பண்ணி இருக்கலாமே?”

“எனக்கு இங்க வரப்போறோங்கிறது கடைசியில தான் தெரியும் செர்ரி. கோயில் ஏற்பாடு எல்லாம் அப்பாதான் பார்த்துக்கிட்டார். நான் ரிசப்ஷன் வேலைகளைப் பார்த்தேன். பார்த்தா மனுஷன் கிராமத்துல தான் கல்யாணம்னு ஒரு பிடியா நின்னுட்டார்.”

“ஓ… இன்னைக்கு ஆன்ட்டி முகத்துல எவ்வளவு சந்தோஷம்… இல்லை அர்ஜூன்?”

“ம்… இத்தனை நாளும் இருந்த உறுத்தல் இன்னைக்குத்தான் தீர்ந்துச்சு. உன்னைத் தேடுறது ஒரு பக்கம்… கம்பெனி வேலைகள் இன்னொரு பக்கம்… போதாததுக்கு இவங்க ரெண்டு பேரு! ம்…” அர்ஜூன் பெருமூச்செறிந்தான்.

“அர்ஜூன்… என்னால ரொம்பக் கஷ்டப்பட்டுட்ட இல்லை?”

“அதெல்லாம் இல்லை… நீ குளிச்சு முடிச்சாச்சா?”

“ம்… சேன்ஞ் பண்ணிட்டு வர்றேன்.”

“எனி ஹெல்ப் செர்ரி?”

“வந்தேன்னா உதைப்பேன்.”

“உண்மையாத்தான் கேக்குறேன் செர்ரி. லைட்டை வேற ஆஃப் பண்ணி வெச்சிருக்கே?” அவன் பேசிக் கொண்டிருக்கும்போதே அவள் வெளியே வந்தாள். கையில் ஏற்கெனவே அவள் உடுத்திருந்த புடவை, டவல் என அனைத்தும் இருந்தது.

“அக்கா… இதை மதுராவோட அம்மாக்கிட்டக் குடுத்திடுங்க. நாங்க வெளியே கொஞ்சம் போயிட்டு வந்திர்றோம்.”

“சரிங்க தம்பி.” வேலை செய்யும் பெண்ணிடம் அனைத்தையும் ஒப்படைத்துவிட்டு மதுராவை வீதிக்கு அழைத்து வந்தான் அர்ஜூன்.

“எங்க போறோம் அர்ஜூன்?”

“ஆத்துக்கு.”

“ஓ… இங்க ஆறு இருக்கா? சூப்பர்!” இரவு ஒன்பதைத் தாண்டி இருந்தும் ஊர் அடங்கி இருக்கவில்லை. ஆங்காங்கே நின்றிருந்த மனிதர்கள் அர்ஜூனிடம் முறை வைத்துப் பேசுவதும் அதற்கு அவன் பதில் சொல்வதும் பார்க்க அத்தனை அழகாக இருந்தது.

மதுரா எல்லாவற்றையும் ஆர்வமாகப் பார்த்துக்கொண்டு வந்தாள். சென்னையில் பக்கத்து வீதியில் வசிப்பவர் யாரென்று நமக்குத் தெரியாதே!

தூரத்தில் ஆறு தெரிந்தது. அத்தனை பெரிது என்று சொல்லமுடியாது. ஆனால் நீர் நன்றாகவே இருந்தது. இறங்கிக் கால் நனைக்க அர்ஜூன் அனுமதிக்கவில்லை.

“இருட்டா இருக்கு மதுரா. ரிஸ்க் எடுக்க வேணாம். காலையில வேணா இன்னொரு தரம் வரலாம்.” கரையில் இருவரும் கால்நீட்டி அமர்ந்து கொண்டார்கள்.

இரவு… நிலவு…‌ உறவு… என அனைத்தும் மலர்ந்து கிடந்தது.

“அர்ஜூன்… இப்போ நீ வயலின் வாசிச்சா எப்படி இருக்கும்!” அவள் கேட்கவும் அர்ஜூன் சிரித்தான்.

“எல்லாத்துக்கும் சிரி. இதுவரைக்கும் நடந்தது என்னன்னு உனக்கு எங்கிட்ட இன்னும் சொல்லத் தோணலை இல்லை?” கேட்டவளின் முன்னுச்சி மயிரை ஒதுக்கிவிட்டான் அர்ஜூன்.

“எதுக்கு செர்ரி… விடு. அதான் எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன் இல்லை?”

“சஞ்சுவை என்ன பண்ணினே?” இந்த ஒரு வாரமாக அவள் மனதைக் குடைந்து கொண்டிருந்த கேள்வியைக் கேட்டாள் மதுரா.

“போலீஸ் அரெஸ்ட் பண்ணி இருக்காங்க மதுரா. நான் என்ன பண்ணினேன்?”

“ஆக்ஸிடென்ட்டுக்கு அவன் தான் காரணமா?”

“ம்… அன்னைக்கு உங்கிட்ட ஒரு வீடியோ காட்டினேன் இல்லை?”

“ம்…”

“அது நடந்தப்போ நான் தான் அவனை ஹோட்டலுக்குக் கூப்பிட்டிருந்தேன்.”

“எதுக்கு?”

“டிவோர்ஸ் பேப்பர்ஸ்ல கையெழுத்து வாங்க… அப்போ ரொம்பவே கோபப்பட்டான். மதுரா எனக்குத்தான் சொந்தம்னு ஏதேதோ பேசினான்.”

“………….”

“அப்பவே புரிஞ்சுது… இவன் சும்மா இருக்க மாட்டான்னு. மதிநிலவனுக்கு உங்க சொத்துதான் முக்கியம். கேக்கிறதைக் குடுத்திடுங்கன்னு உங்கம்மாக்கிட்டச் சொல்லிட்டேன். அதனால அவரால பிரச்சனை வராதுங்கிறது நிச்சயம். ஆனா… சஞ்சீவை அப்படி விட முடியாது மதுரா.”

“என்ன பண்ணினே அர்ஜூன்?”

“போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணினேன்.”

“என்னன்னு?”

“எனக்கு ஏதாவது ஆச்சுன்னா அதுக்குக் காரணம் சஞ்சீவ்தான்னு.”

“ஓ…”

“தயாளன் ஃபுல்லா ஃபீல்ட்டுல நின்னு ஆளுங்களைப் போட்டு அப்பனையும் பையனையும் வாட்ச் பண்ணினான். மதிநிலவன் மேல எந்த சந்தேகமும் வரலை. ஆனா சஞ்சீவ் ஆடிப்பார்த்தான்.”

“என்ன பண்ணினான்?” இப்போது மதுராவிற்குக் குரலே எழும்பவில்லை.

“ஆளுங்களை வெச்சு என்னைத் தூக்க ஏற்பாடு பண்ணினான்.”

“அர்ஜூன்! தெரிஞ்சிக்கிட்டும் ஏன் சும்மா இருந்த அர்ஜூன்?”

“எவிடன்ஸ் எதுவுமே இல்லையே மதுரா. போலீஸுக்குப் போனா நான் எதுவுமே பண்ணலைன்னு விவாதிப்பான். அதனாலதான் அவன் போக்குலேயே விட்டோம். ஆனா ஒவ்வொரு மூவும் எங்களுக்குத் தெரிஞ்சுதான் நடந்தது.”

“ஏதாவது ஏடாகூடமா நடந்திருந்தா?”

“வாய்ப்புகள் இருந்ததுதான்… இல்லேங்கலை. ஆனா வேற வழி இல்லையேடா?”

“அர்ஜூன்…” அவன் மார்பில் கண்கலங்கச் சாய்ந்து கொண்டாள் பெண். அவனும் அணைத்துக் கொண்டான்.

“அன்னைக்கு எனக்குப் பின்னால அந்த லாரி என்னை ஃபாலோ பண்ணினது எனக்கு நல்லாவே தெரியும். லாரியைச் சமாளிக்க இன்னும் ரெண்டு லாரியை தயாளன் ஏற்பாடு பண்ணி இருந்தான். இருந்தாலும் கடைசி நேரத்துல ப்ளான் கொஞ்சம் மிஸ்ஸாகி அந்த லாரி கொஞ்சம் வேகமா வந்து மோதிடுச்சு.”

“ஆண்டவா!”

“அதான் லேசான அடி. அதுகூட நல்லதுக்குத்தான்.”

“என்ன பேசுறே அர்ஜூன்?”

“போலீஸ் அப்போதானே நம்பும் செர்ரி?”

“முட்டாளா நீ? ஏதாவது உனக்கு நடந்திருந்தா என்னோட நிலைமையை யோசிச்சுப் பார்த்தியா?”

“அதான் ஒன்னும் நடக்கலையே… விடேன்.” அணைப்பை இன்னும் இறுக்கி இருவரும் மௌனமாக இருந்தார்கள்.

“டாக்டர் தயாளனோட ஃப்ரெண்ட். அதனாலதான் ஒரு நாள் ‘ஐஸியூ’ல வெக்கலாம்னு ப்ளான் பண்ணினாங்க. அப்போதான் கேஸ் இன்னும் கொஞ்சம் ஸ்ட்ராங் ஆகுமுன்னு தயா சொன்னான்.”

“ஓ… அதான் அன்னைக்கு சொல்லவும் முடியாம மெல்லவும் முடியாம முழிச்சுக்கிட்டு நின்னாரா?”

“ம்…”

“மாமாக்கு என்ன ஆச்சு?”

“பிஸினஸ்ல அவ்வளவு குளறுபடி.‌ அத்தனையும் இல்லீகல்.”

“………….”

“இதுல வருத்தம் என்னன்னா…” அர்ஜூன் மேலே தொடரவில்லை.

“பரவாயில்லை சொல்லு… எங்கப்பாக்கும் சம்பந்தம் உண்டா?”

“இருந்திருக்கு. ஆனா சமீப காலமா என்னாச்சுன்னு தெரியலை. உங்கப்பா எதுலயும் சம்பந்தப்படலை. அதனால ரெண்டு பேருக்குள்ளயும ஏதோ மனஸ்தாபம் வந்தருக்கு. ஹார்ட் அட்டாக் வந்ததுக்கும் அதுதான் காரணமா இருக்கும்னு நான் நினைக்கிறேன்.”

“ஓ… மாமனாரைக் காட்டிக் குடுக்கலையா?”

“மனசு வரலை. அதான் இப்போ அவர் எதுவும் பண்ணலையே.”

“ஆனா உனக்கு நிறையப் பண்ணி இருக்காரே அர்ஜூன்.”

“குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை மதுரா. மன்னிச்சிடலாம். எல்லாத்தையும் மறந்திடலாம்.”

“அர்ஜூன்… நான் ஒன்னு சொல்லுவேன்… நீ தப்பா…” அவள் இப்போது திணறினாள்.

“தெரியும் செர்ரி. நீ என்ன சொல்ல வர்றேன்னு எனக்குத் தெரியும். ஆனா எனக்கு அதுக்குச் சரியான உத்தரவாதம் வேணும். இவன் எப்போ என்ன பண்ணுவான்னு எனக்கு சதா காவல் போட்டுக்கிட்டுத் திரிய முடியாது.”

“நான் அத்தைக்கிட்டப் பேசுறேன். அவங்க சொன்னா சஞ்சு கேப்பான். என்னால ஒருத்தன் கஷ்டப்படுறதை என்னால பார்க்க முடியலை அர்ஜூன்.”

“நான் கஷ்டப்பட்டப்போ பார்த்துக்கிட்டுச் சும்மா தானே இருந்த?”

“நீ நல்லா இருக்கணும். எனக்கு அதுதான் அப்போ முக்கியமாப் பட்டுச்சு.”

“நீயில்லாம நான் எப்படி நல்லா இருப்பேன் செர்ரி?”

“ஏன்? உனக்குத்தான் அந்த ப்ரீத்தி இருக்காளே.” இப்போது அவள் நொடித்துக் கொண்டாள்.

“அட ஆமாமில்லை…” அவனும் அனைத்தும் மறந்து சிரித்தான்.

“ம்… என்னை விட அவ அழகா, கலரா வேற இருப்பா.”

“அப்படியா சொல்றே?”

“ம்… அதுதான் எனக்கு வயித்துல புளியைக் கரைக்கும். மத்தது எல்லாம் எங்கிட்ட நிக்கக் கூட முடியாது.”

“ஓ… ஆனாலும் நீ அநியாயத்துக்கு உண்மைகளை ஒத்துக்கிறே செர்ரி.”

“ஏன் அர்ஜூன்? ப்ரீத்தியை அதுக்கப்புறம் நீ பார்க்கவே இல்லையா?” அவள் கேலி அவனைக் கோபப்படுத்தியது.

“நீ இப்போ அடிதான் வாங்கப் போறே.”

“நல்ல பொண்ணுதான்… அதுக்காக என்னோட பி.எம் ஐத் தூக்கிக் குடுக்க முடியுமா?”

“அதானே…”

“நீதானே புன்னகை மன்னன்… உன் ராணி நானே…” அவள் மெதுவாகப் பாடினாள்.

“அதென்ன புன்னகை மன்னன்?” தெரிந்தும் வேண்டுமென்றே கேட்டான் அர்ஜூன்.

“நீ சிரிக்கும் போது அவ்வளவு அழகு அர்ஜூன். பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கும். அப்படியே உங்கிட்ட சுண்டி இழுக்கும் தெரியுமா உன்னோட சிரிப்பு.” அவள் ரசித்துச் சொல்ல அவன் அனுபவித்துச் சிரித்தான்.

“திரும்பத் திரும்ப மயக்குறயே பி.எம்.” எட்டி அந்த உதடுகளில் முத்தம் வைத்தாள் பெண். அவள் ஆரம்பித்ததை அவன் இன்னும் கொஞ்ச நேரம் நீடித்தான். அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் மதுரா.

“நீலங்கொண்ட கண்ணும் நேசங்கொண்ட நெஞ்சும்… காலந்தோறும் என்னைச் சேரும் கண்மணி… பூவையிங்கு சூடும் பூவும் பொட்டும் யாவும்… மன்னன் எந்தன் பேரைச் சொல்லும் பொன்மணி…”

ஆற்றின் சலசலப்போடு அந்தப் புன்னகை மன்னனின் குரலும் சேர்ந்து கொண்டது. மயங்கிப் போன இரு உயிர்களும் புதுவாழ்வை எதிர்நோக்கும் ஆவலில் இமைக்க மறந்து இணைந்திருந்தன.

error: Content is protected !!