Alaikadal 15

Alaikadal 15

அலைகடல் – 15

அடிக்க ஓங்கியவாறு திரும்பிய பிறகே உணர்ந்தாள் தன்னை அணைத்தது சிறுவனுக்கும் இளைஞனுக்கும் இடைப்பட்ட வயதில் இருப்பவன் என்று. கூடவே அவன் அழுத கண்களோடு தன்னை நோக்க தானாகவே சற்று நிதானம் வந்து கைகளின் வேகம் குறைந்ததுதான். ஆனாலும் முற்றிலும் நிறுத்தும் முன் தன் கையை யாரோ இறுகப்பற்ற யாரென பார்த்தவளுக்கு அது ஆரவ் என்றதும் வந்த நிதானம் பறந்து சுறுசுறுவென பற்றிக்கொண்டு வந்தது.

ஒரே உதறலில் அவன் கையை தட்டிவிட்டவள் வெறுப்பை அப்பட்டமாய் உமிழும் கண்களோடு சுட்டுவிரல் நீட்டியவாறு இருவருக்கும் பொதுவான எச்சரிக்கையுடன், “டோன்ட்… டச்… மீ” என்றாள் வெகுஅழுத்தமாய்.

தமக்கையின் இந்த ஆளுமையில் பூவேந்தன் வாயடைத்து நிற்க ‘என்னைத் தெரியவில்லையா அடையாளம் தெரியாத அளவா மாறிட்டோம்’ என்ற சந்தேகத்துடன் ஏக்கத்தை கண்களில் தேக்கி பரிதாபமாய் நோக்கினான் அவன்.

அந்த பார்வை ஏனோ பாவையவளுக்கு சிறிது படபடப்பை ஏற்படுத்த தன்னைவிட ஒரு அங்குலம் குறைவாக அரும்பு மீசையுடன் தலைமுடி நெற்றியில் புரள எதையோ சொல்ல துடித்து தொண்டையை செருமிக்கொண்டிருந்தவன் மேல் பூங்குழலியின் கவனம் அவளை மீறிச் சென்றது.

தன்னையே பார்ப்பதை உணர்ந்த பூவேந்தன், “எ… என்னைத் தெரியலையா…” பூமா என்று அழைக்கும் முன், தன் கரத்தை தட்டிவிட்டு தெனாவட்டாய் நிற்பவள் மீது கோபம் பெருக, “அப்போதும் சரி இப்போதும் சரி உன் அவசரகுடுக்கைத்தனம் ஒன்னு மட்டும் குறையவேயில்லைல” என்ற ஆரவ்வின் எரிச்சல் குரல் இடையிட்டது.

தன்னிடத்தில் வந்து நின்றதும் இல்லாமல் தன்னையே குத்தம் சொல்பவனை தூக்கிபோட்டு மிதிக்கும் அளவு வரும் கோபத்தைத் தள்ளி வைத்தவள் இத்தனை நாள் படித்த அலட்சியத்தைக் கையில் எடுத்தாள்.

“அதை பத்தி நீ பேசாத, நீ… நீ மட்டும் ரொம்ப ஒழுங்கோ? வந்துட்டான் பெருசா சொல்ல” என்றாள் ஏகவசனத்தில்.

நினைவு தெரிந்ததிலிருந்து தன்னை இந்தளவு யாரும் மரியாதையின்றி பேசாததில் அவளின் மீது வந்த எரிச்சல் ஆத்திரமாக மாறிக்கொண்டிருந்தது ஆரவ்விற்கு.

“ஏய்… உனக்கெல்லாம் மரியா…” என்று கர்ஜித்தவனிடம் பூவேந்தன், “அண்ணா சாரி சாரி” என்றவாறு கெஞ்சலோடு பார்க்க

அதில் கோபத்தை கட்டுப்படுத்த முயன்று முடியாமல் நகன்று சென்றான் ஆரவ். ‘இவளை இப்படியே ஒத்தையில இருன்னு விட்ருக்கணும் தம்பிய கூட்டிட்டு வந்தேன்ல எனக்கு இதெல்லாம் வேணும்தான். அதை கூட கண்டுபிடிக்க முடியாம கத்துறதைப் பாரு…’ மனமோ அவளை வறுத்தெடுத்தது.

“பூமா… பூமா நான்…” என்று திக்கித்திணற

அவ்வளவுதான் அவ்வளவு நேரம் மூளையை அடைத்திருந்த ஆரவ்வை மறந்தாள். முன்னால் இருந்த வேந்தனின் கரத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டவளுக்கு இப்போது உடலே நடுங்கியது. காதில் விழுந்ததை இன்னமும் நம்பமுடியாமல் தெளிவுபடுத்த, “என்ன சொன்ன? இப்போ என்ன சொல்லி கூப்பிட்ட?” என்றாள் மெலிதாய்.

மூளை அப்படியும் இருக்குமோ என யோசித்து மனதைத் தூண்ட கண்களோ மூளை சொல்வதை பரிட்சித்துப் பார்த்தது. இடைவரை இருந்தவன் முகமே மனதெல்லாம் இருக்க எதிரில் தன் கழுத்தளவு இருக்கும் முகம், குரல் அனைத்தும் அதனோடு சிறிதும் ஒத்துப்போகவில்லைதான்.

ஆனால் பார்க்க பார்க்க சற்றே வளர்ந்தாற்போன்ற பூவேந்தனின் முகம் தோன்ற நிதர்சனத்தை அவளால் தாங்கவே முடியவில்லை.

“பூமா நான்தான் குட்டா… உன்னோட குட்டா என்னைத் தெரியலையா” தொண்டையடைக்க கேட்டவனுக்கும் அதற்கு மேல்முடியாமல் போக அவளைக் கட்டிக்கொண்டான். “மிஸ் யூ க்கா… மிஸ் யூ” என்ற முனுமுனுப்புடன்.

சந்தோசம் துக்கம் என்ற இருவேறு எதிர்பத உணர்ச்சிகள் ஒரேநேரத்தில தாக்க நீண்ட நெடிய ஏழு ஆண்டுகளுக்கு பின்னான தம்பியின் ஸ்பரிசத்தை உள்வாங்கி அணைத்துக்கொண்டவளுக்கு கண்கள் கலங்கி கண்ணீரைச் சிந்த, கிடைக்காது என்று ஆணித்தரமாக நம்பியது கிடைத்ததில் மயக்கம்வரும் போல் இருந்தது.

கண்ணீரிலோ மயக்கத்திலோ சுற்றுப்புறம் மங்கலாக தெரிய பின்னால் தடுமாறியவளை பூவேந்தன் விலகி பிடிக்க முயல அவனாலும் முடியவில்லை.

கண்முன்னே இருவரும் தடுமாற பூங்குழலி மேல் கோபத்தில் இருந்தவனோ அவளைத்தொடாமல் பூவேந்தனை மற்றும் இழுத்துப்பிடிக்க அதில் சமாளித்து சுவரைப் பற்றினாள் பூங்குழலி. ஒரு கை சுவரைப் பிடித்திருக்க மற்றொரு கை தலையைப்பிடித்தது.

“ஹே… பூமா என்ன பண்ணுது? இங்க பாரு” என்று பதறியவனிடம் நன்றாக சுவரில் முதுகு சாய்த்து நின்றவள் தலையை உலுக்கி, “ஒன்னும் இல்லை… ஒன்னும் இல்லை” என்றவாறு அவனையே சற்றுநேரம் கண்டு அமைதியாய் கலைந்திருந்த தம்பியின் முடியை மேல்நோக்கி கோதிவிட இருவருக்கும் அதற்கு மேல் பேச்சு வரவில்லை.

அப்போதுதான் இவன் மட்டும் வந்திருக்கிறான் தாயைக் காணோமே என்று தோன்ற மனதினுள் அரித்த கேள்வியை கேட்டேவிட்டாள், “அம்மா எங்கேடா?” என.

இரண்டடி தள்ளியிருந்த ஆரவ்வின் காதிலும் இக்கேள்வி விழுந்தது. ‘என்ன சொல்ல போகிறான்? இவள் எப்படி எடுத்துக்கொள்ளப் போகிறாள்?’ என்றெண்ணி இருவரையும் வெறித்தான்.

“அம்மா… அம்மாவ ஆபரேஷன் பண்ணியும் காப்பாத்த முடியலக்கா” என விக்க முதலில் கோபம், பின் தம்பியோ என்ற தவிப்பு, அவன்தான் என்ற மகிழ்ச்சி, இத்தனைநாள் விட்டுட்டோமே என்ற துக்கம், தாயைத் தேடிய எதிர்பார்ப்பு, அது நிறைவேறாத ஏமாற்றம், வலி என்று உலகத்தின் ஒட்டுமொத்த உணர்ச்சியும் ஒருசேர சரமாரியாக தாக்கியதில் நடுநடுங்கி சாய்ந்திருந்த உடல் நழுவி சாய அவ்வளவு நேரம் இழுத்து பிடித்த நினைவு தப்பியதில் தொடாதே என்றவனின் கரங்களிலே மயங்கிச் சரிந்திருந்தாள் பூங்குழலி.

“சடன்னா பீபி ட்ராப் ஆகிருக்கு அதான் இப்படி மயக்கமாகிருக்காங்க மத்தபடி ஷி இஸ் ஆல்வேஸ் ஹெல்த்தி. க்ளுகோஸ் ட்ரிப்ஸ் போட்டிருக்கு சோ சீக்கிரம் எழுந்திருவாங்க டோன்ட் வோரி” அங்கிருந்த பெண் மருத்துவர் கலக்கத்துடன் அருகிலிருந்த பூவேந்தனிடம் தெளிவுபடுத்திக் கொண்டிருந்தார்.

ஆரவ் கட்டிலின் மறுபுற ஓரத்தில் போட்டிருந்த நீள் இருக்கையில் அமர்ந்திருக்க பூங்குழலி கையில் ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருந்தது.

மயங்கிய அடுத்த நிமிடமே ஆரவ் சொன்னதுபோல் பூவேந்தன் அருகில் இருந்த உணவுகூடத்தில் நுழைந்து இருவரை அழைத்து அவர்கள் மூலம் அதே தளத்தில் இருந்த மருத்துவ டிபார்ட்மெண்ட்டில் சேர்த்திருந்தனர்.

வெளியே மலபார் இன்னமும் நடந்துக்கொண்டிருப்பதால் மேல் அதிகாரிகளுக்கு இன்னும் விசயம் செல்லவில்லை. முக்கிய விருந்தினர் என்பதால் தயக்கத்தோடே உள்ளே அனுமதிக்க மறுத்தவர்களிடம் எளிதாக அவளது தம்பி பூவேந்தன் என்றும் இன்று மாலை கிளம்புவதற்குள் சிறிதுநேரம் இருக்கட்டும் என்றும் கூற அனுமதி வாங்கியிருந்தான் ஆரவ்.

எப்போது இங்கிருந்து போவோம் என்று கேட்ட வேந்தனுக்கோ இப்போது மாலை கிளம்பவேண்டுமா என்றிருந்தது. அதை நினைத்தவாறு தமக்கை நினைவு திரும்பக் காத்திருந்தான்.

அரைமணி நேரத்திற்கும் குறைவாகவே சென்றிருக்கும் விரைவில் எழுந்துவிட்டாள் பூங்குழலி. ஆரவ் வலப்புறம் அமர்ந்திருக்க அதுவே அவளை அவன் முன்பு படுத்திருக்கவிடவில்லை. எழுந்ததும் இடப்புற நாற்காலியிலிருந்த தம்பியை சைகையில் தன்னருகே அமரச் சொல்ல அதன்படி செய்தான் பூவேந்தன். ஆனால் கேள்வி கேட்பதில் தமக்கையை முந்திக்கொண்டான்.

“ஏன்க்கா இப்படி சொல்லாம கொள்ளாம போயிட்ட… நான் உனக்கு வேணாமா கண்ணு முழிச்சதும் உன்னை எவ்ளோ தேடுனேன் தெரியுமா?” என குறைப்பட

என்ன சொல்வாள் அவள்? எதை சொல்ல எங்கிருந்து சொல்ல என்றே தெரியாமல் மௌனமாய் அவனை பார்த்திருந்தாள். அதை கண்டுக்கொள்ளாமல் தன் மனதை கொட்டிக்கொண்டிருந்தான் இளையவன்.

“யாருமே இல்லையா… என்னை ரெண்டு பேர் மாத்தி மாத்தி பார்த்துக்கிட்டாங்க அவங்கதான் அம்மா செத்துப்போச்சின்னு சொன்னாங்க. நான் அழுதேன் ரொம்ப அழுதேன் உன்னையும் காணோமா பயந்தேபோயிட்டேன்… நான் நல்லானதும் அவங்க என்னை ஒரு ஹோம்ல சேர்த்துவிட்டாங்க” தாயைப் பற்றி கூறுகையில்தான் குரல் நலிந்தது அதன் பிறகு தன்னைக் பற்றி சொல்லும்போதெல்லாம் ஏதோ ஒரு கதை சொல்லும் பாவனைதான் அவனிடம். கேட்டுக்கொண்டிருந்த இருவருக்கும்தான் அது இதயத்தில் சுருக்கென்று குத்தியது.

தான் உயிரோடு இருக்க யாருமில்லாமல் ஆசிரமத்தில் வளர்ந்தானா என்று பூங்குழலி மருகினாள் என்றால் ஆரவ் பூங்குழலி கிடைக்கும்வரை ஹோமில் இருக்கட்டும் என்றெண்ணி அதில் சேர்த்துவிட்ட தன் மடைமையை நொந்தான்.

ஆம் கிட்டதட்ட ஒரு மாதமாகியும் பூங்குழலியை காணவில்லை என்ற பின்பே ஏதோ ஒரு உணர்வு உந்த அன்று அவனைக் காண ஆசிரமம் சென்றான் ஆரவ்.

ஆபிஸ் சென்று பூவேந்தனை பார்க்கணும் என்றுவிட்டு அவர்கள் அழைத்து வந்தவனைப் பார்த்தவனால் தான் ஆக்ஸிடென்ட் செய்த சிறுவன் இவன் தானென நம்பவேமுடியவில்லை. முன்பைவிட நன்கு மெலிந்து கண்களில் சோகமும் அதனை சுற்றி கருவளையமும் சூழ பரிதாபமாய் வந்தவன் ஆரவ்வைக் கண்டதும் விழிகளில் சோகத்தையும் மீறி மின்னல் தெறித்தது.

அதுவரை தொலைக்காட்சியில் மட்டுமே காட்சியளித்தவனை நேரில் கண்டால் அந்த வயதில் வருமே ஒரு பிரமிப்பு அதுதான் அந்த மின்னலுக்கு காரணம்.

“ஹை… ஆரவண்ணா” என்று சிறிது மகிழ்ச்சியுடன் அழைத்தவனை அதன்பின்பு அங்கே விடவில்லை. அன்றே மனதளவில் தம்பியாக தத்தெடுத்தான் ஆரவ்.

“சாரிடா… ரொம்ப சாரிடா என்னாலதானே நீ ஆசிரமத்துல வளர்ந்த” நடந்ததென்ன என்றறியாமல் கலங்கியவளின் கையைப்பற்றியவன்

“அய்யைய… இல்லக்கா அப்புறம் ஒருநாள் ஆரவண்ணா வந்தாங்க அவங்களோடையே என்னை கூட்டிட்டு போய் உங்கக்காவை கண்டுபிடிக்குறவரை உன்னை நான் பார்த்துக்குறேன்னு சொல்லி என்னை நல்லா பார்த்துக்கிட்டாங்க. இதோ உன்கிட்ட கூட்டீட்டும் வந்துட்டாங்க பார்த்தியா” என பெருமை பேச

பூங்குழலிக்கு தம்பி ஆசிரமத்தில் வளரவில்லை என்று சந்தோசப்படுவதா அல்ல ஆரவ் போன்ற ஒருவனின் நிழலில் வளர்ந்திருக்கிறான் என்று துக்கப்படுவதா என்றே தெரியவில்லை.

சட்டென்று ஆரவ் முன்பே அவனை தப்பு சொல்லவும் முடியாமல், “உன்னை ஆக்ஸிடென்ட் பண்ணுனது யாருன்னு தெரியுமா?” என்று ஒருமாதிரி குரலில் கேட்கும்போதே முதுகைத் துளைக்கும் பார்வையை உணர்ந்தாள்.

“ஒஹ் தெரியுமே ஆரவண்ணாதான் பண்ணுனது” என்றான் இளையவன் இதெல்லாம் ஒரு விசயமா என்பதுபோல். அதில் ஆரவ்வின் உதடு லேசான புன்னகையைச் சிந்தியதென்றால் இதனை எதிர்பார்க்காத பூங்குழலி முகமோ அஷ்டகோணலானது.

“பிரேக் பிடிக்கலையாம்க்கா ஒருநாள் அவங்களே சொன்னாங்க… இல்லைன்னா யாராது வேணும்னே ஆக்ஸிடென்ட் பண்ணுவாங்களா? நானும் கொஞ்சம் பார்த்து வந்திருக்கணும்ல” என்று வக்காலத்து வாங்கியவன் மீண்டும் முதல் கேள்விகே வந்தான்.

“சரி நீ எதுக்குக்கா காணாம போன?”

அக்கேள்வி அவளினுள் அமிழ்ந்திருந்த ஆத்திரத்தைக்கிளப்ப பதில் சொல்லும்முன்

“வேந்தா இன்னும் அரைமணி நேரம்தான் இருக்கு நாம சென்னைக்கு கிளம்ப. உங்க அக்கா என்ன முடிவு எடுத்திருக்காங்க என்று கேளு” என்றான் இவர்கள் முன் நின்று

“என்ன நல்லவன் வேஷம் கலைஞ்சிருமோன்னு பயமா?” நக்கலுடன் தன்னைப் பார்த்து வந்த பூங்குழலியின் கேள்வியில் ‘இவ ஆயுசுக்கும் இப்படிதான் அலையுவா போலவே இப்படி எடுத்ததுக்கெல்லாம் கோபப்பட்டா எனக்கும் பீபி வந்து இவளை மாதிரி படுக்கவேண்டியதுதான் இக்னோர் இட் ஆரவ்’ என்று தோன்றிவிட என்னவேண்டும் என்றாலும் நினைத்துக்கொள் என்பதுபோல் தோளைக்குலுக்கினான் ஆரவ்.

அது அவளிற்கு அலட்சியமாய் தெரிய கொந்தளித்து, “யூ…” என்றவாறு கையில் ஏதாவது கிடைக்கிறதா என்று தேட

“பூமா… பூமா… உன்னோட” என்று கையில் ஒரு அடியைக் கொடுத்த பூவேந்தன், “நீ சொன்னாலும் சொல்லாட்டாலும் ஆரவண்ணா நல்லவங்கதான்” என

இப்படி கண்மூடித்தனமாய் அவனை நம்பும் தம்பியை எண்ணி மனதைப்பிசைந்தது பூங்குழலிக்கு. பெருமூச்சோடு அதனை ஒதுக்கியவள் தான்வரும் வரை அவனுடன்தான் இருக்கவேண்டும் என்பதால் மேலும் வாதம் செய்யவில்லை.

தனக்கு தேவையான தகவல்களாக இருக்குமிடம், படிப்பு, பள்ளி போன்றவற்றை விசாரித்தவள் கடைசியாக, “நான் இங்கிருக்கேன்னு எப்படி தெரிஞ்சது?” என

பதில் தெரியாமல் ஆரவ்வை நோக்கினான் பூவேந்தன். அதிலேயே தம்பிக்கு தெரியாது என்று உணர்ந்தவள் ஆரவ்விடம் கேட்க விருப்பமின்றி, “சரி விடு நல்லா படி குட்டா” என்று வேறு பேச்சிற்கு தாவ

“இரு பூமா நானே கேட்கணும்ன்னு இருந்தேன் எப்படிண்ணா கண்டுபிடிச்சீங்க” என

“கண்டிப்பா சொல்லனுமா?” கண்களாலேயே அவனிடம் கேட்க

“ப்ளீஸ்” என்றான் இளையவன்.

இவர்களின் விளையாட்டு கூட அவனின் முகம் பார்க்காததால் பூங்குழலிக்கு தெரியவில்லை. காமாலை கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பதுபோல் ‘இப்படிதான் இத்தனை வருசம் கெஞ்சவிட்டு கெஞ்சவிட்டு வளர்த்தானோ?’ என்றெண்ணி வெறுத்தது மனது.

அதற்குள் பதில் கூறியிருந்தான் ஆரவ், “ரியாஸ்…” என்ற ஒற்றை வார்த்தையில். அதிலேயே புரிந்துவிட்டது பூங்குழலிக்கு புரியாத பூவேந்தனோ தோண்டிதுருவி புரிந்த பின்பே ஓய்ந்தான்.

அடுத்து பேச்சு எப்போது வருகிறாள் என்ற பக்கம் போக மூன்று மாதம் கழித்தே லீவ் கிடைக்கும் என்றவளிடம் “சூப்பர்… எனக்கும் மூணு மாசத்துல பப்ளிக் எக்ஸாம் முடியுது. சீக்கிரம் சென்னைக்கு வாக்கா உனக்காக நான் வெயிட் பண்ணுவேன். இன்னும் நிறைய நிறைய பேசணும். மறந்தே போயிட்டேன் உன் போன் நம்பர் தா” என்றவனிடம்

“இங்கெல்லாம் போன் பேசக்கூடாது குட்டா… லீவ் எடுக்கும்போதுதான் போன் தருவாங்க நோட் பண்ணிக்கோ” என்றுவிட்டு நம்பரை தந்தாள். அதற்குள் அரைமணி ஆக பேச்சு மட்டும் தீருவதுபோல் தெரியவில்லை அத்தனை வருடத்து கதையை ஒரே நாளில் சில மணித்துளிகளில் திருக்குறள் போல் கூறுவது சாத்தியமா என்ன?

“பூமா இன்னொன்னும் சொல்ல மறந்துட்டேன். நீ சூப்பரா ஹெலிகாப்டர் ஓட்டுற… நான் காலையில் உன்னையே பார்த்துட்டு இருந்தேன் தெரியுமா? என்னையும் ஒருநாள் கூட்டிட்டு போய் ஓட்டி காமிப்பியா?”

பல காலம் கழித்து அப்போதுதான் அவளின் உதட்டில் சிரிப்பு வந்தது. அது முகம் முழுக்க பரவ மலர்ந்த முகத்துடன், “அதுக்கு நாம சொந்தமா ஹெலிகாப்டர் வச்சிருக்கணும் குட்டா” என்றாள் குறும்புடன்.

“ஹா வாங்கிருவோம் நமக்கில்லாததா… இல்லைனா ஒன்னு பண்ணு பேசாம அடுத்து ஓட்டுற ஹெலிகாப்டரை லவட்டிகிட்டு சென்னை வந்து என்னை பிக் அப் பண்ணேன்” பதிலுக்கு தமக்கையிடம் வம்பு வளர்க்க

“வரலாம்…” என்று இழுத்தவள், “ஆனா அதுக்கப்புறம் என்னை நீ ஜெயில்லதான் பார்க்கணும் பரவால்லையா?” என

கலகலத்து சிரித்தான் பூவேந்தன். தன்னையறியாமல் இருவரையும் ரசித்துக்கொண்டிருந்தான் ஆரவ்.

பூங்குழலிக்கு மிகுந்த ஆச்சரியம் தானா இப்படியெல்லாம் பேசுவது என்று. கிட்டதட்ட பேச்சே மறந்தவளிடம் மீண்டும் பேச வைத்துக்கொண்டிருந்தான் பூவேந்தன். அதுவே புதுவித அனுபவமாய் மனதினுள் சில்லென இறங்கி மயிலிறகால் அவளின் காயத்தை வருடியது.

இளையவனுக்குதான் தமக்கை மனதால் இறுகி மாறியது தெரியாதே அதனால் அவள் எப்போதும்போல் இருக்கிறாள் முதலில் மிரட்டியது கூட கோபத்தில்தான் என்றெண்ணிக்கொண்டான்.

உடன்பிறப்புகள் இருவரும் மனமின்றி சூழ்நிலை கருதி விடைபெற்றுக்கொள்ள அவர்கள் தலை மறைந்ததும் அதுவரை இருந்த மலர்ச்சியை தொலைத்து யோசனையை தத்தெடுத்தது பூங்குழலியின் முகம்.

மலபாரில் பல்வேறு முக்கிய பயிற்சிகளை முடித்து பத்தாம் நாள் மாலையில் ஆடல், பாடல் என்று ஒருபக்கம் கொண்டாடிக்கொண்டிருக்க மற்றொரு பக்கம் மூன்று நாட்டின் அட்மிரல், ஆபிசர் பேட்டி, விருந்து என்று களைகட்டியது.

என்றுமே தான் இருப்பது வெளியே தெரிந்துவிடக்கூடாது என்று கவனமாய் இதில் இருந்து ஒதுங்கிய பூங்குழலியால் இன்று அந்த அவசியம் இல்லையென்றாலும் அந்த பழக்கத்தை விட முயலவில்லை. என்ன ஒன்று, அந்த கவனத்தை கைவிட்டு இயல்பாய் இருந்தாள் அவள்.

வெற்றிக்கரமாக மலபாரும் முடிந்த பின் நாட்கள் அதன் போக்கில் இயல்பாய் நகர இருமாத விடுப்பு முடிந்து ரியாஸ் ஜான்சியுடன் வீடு சென்ற வீரர்கள் விக்ரமாதித்யா கப்பலுக்கு மீண்டும் செல்ல கொச்சி வந்தடைந்து கப்பல் ஏறிக்கொண்டிருந்தனர்.

ஜான்சியை பார்த்ததும் ஆவலாய், “ஹே… ஜான்சி என்னை மிஸ் பண்ணுனியா?” என்றவாறுதான் வந்தான் ரியாஸ்.

கடைசி நாளில் கண்சிமிட்டி உதடு குவித்ததே அடிக்கடி நியாபகம் வந்து படபடக்க செய்தாலும் ‘தன்னிடம் விளையாடுகிறானோ இவன்?’ என்ற சந்தேகத்தில் முயன்று அதை மறந்திருந்தாள்.

அதைக்கூறாமல், “நினைப்புதான்…” என்று கழுத்தை நொடிக்க

அவளைப்போலவே கழுத்தை நொடித்து “என் நினைப்புத்தானே” என கேலி செய்தவனிடம் தனது அக்மார்க் முறைப்பை வழங்கினாள் ஜான்சி.

“நான் கூட இந்த லீவ்ல உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன்னு நினைச்சேன் ஆனா பாரு போனதும் எனக்கு கிடைச்ச ஷாக்ல நான் என்னையே மறந்துட்டேன் அப்புறம் எங்கிருந்து உன்னை மிஸ் பண்ண”

‘இதான் நீ மிஸ் பண்ற லட்சணமா’ என்று ஏளனமாக பார்த்தவளிடம், “ ஆனா அப்புறம் மிஸ் பண்ணுனேன்” என்று பளிச்சென சிரித்தவன், “அதான் உன்கிட்ட ஒன்னு கேட்க வந்தேன். நீ சொல்லு… நாம லவ் பண்ணலாமா ஜான்சி?” என்றான் பட்டென.

“என்ன?” என அதிர்ந்தவளிடம்

“லவ்மா லவ்… காதல்… தெரியாதா?” என்றான் பதிலுக்கு அவளைப்போல் போலியாக அதிர்ந்து.

“ரியாஸ்… வேணாம் விளையாடாத”

“ஐ அம் சீரியஸ்யா… எனக்கு வேணுமே… ஒன்னும் அவசரமில்லை நீ பொறுமையா யோசிச்சே அடுத்த வருசம் லீவ்க்குள்ள ஓகே சொன்னா போதும். ஓகே அதுக்காக வேலை செய்யாம யோசிச்சு மேடம்கிட்ட திட்டு வாங்கிறாத என்ன? பை பை” என்று அவளைப் பேசவேவிடாமல் படபடவென கொட்டி அவ்விடத்தைவிட்டு ஓடினான்.

விக்ரமாதித்யா கப்பலை அடைந்து ஆபிஸ் சென்று லாக்கர் சாவியை வாங்கியவர்கள் அங்கிருந்து அவரவர் அறை நோக்கி நகர இவர்கள் வந்ததை அறிந்து ரியாஸை தேடி வந்தாள் பூங்குழலி.

அவளைப் பார்த்ததும் விஷ் செய்தவனிடம், “தேங்க் யூ ரியாஸ்” என்றாள் ஆழ்ந்த குரலில். எதற்கென்று புரிந்தவனும் மகிழ்ச்சியுடன், “இட்ஸ் மை ப்ளசர் மேம்” என தலையைச் சிறிது தாழ்த்தி சொல்ல அதில் சன்னமாய் புன்னகைத்தவாறு தலையசைத்து சென்றாள் அவள்.

பின்னால் வந்துக்கொண்டிருந்த ஜான்சி இதனைக் கேட்டு ஒன்றும் புரியாமல் பூங்குழலி சென்றவுடன் அவசரமாய் ரியாஸை வழிமறித்தவாறு என்னவென வினவ, “அதெல்லாம் சீக்ரெட் வெளி ஆளுங்க கிட்ட சொல்ல முடியாது. நீ என் ப்ரொபோசலுக்கு இன்னும் பதிலே சொல்லலியே… சொன்னா தானே வெளி ஆளா இல்லை என் ஆளான்னு தெரியும். எங்கே ஓகே சொல்லு நான் சொல்றேன்” என சீண்ட

அதனால் வந்த கடுப்பில், “போடா லூசு” என்றுவிட்டு கோப எட்டுக்கள் எடுத்துவைத்து தனதறைக்கு சென்றாள் அவள்.

பூங்குழலியைப் பற்றி அறிந்துக்கொள்ள பலர் ஆவலாக இருப்பதை ரியாஸ் அறிவான் ஏன் இவனே முதலில் சபரியிடம் அவளைக் குறித்து விசாரித்து நச்சரித்தவன்தானே! ஆனால் ஏனோ இப்போது அனைத்தும் தெரிந்தாலும் யாரிடமும் அதைக்குறித்து மூச்சுக்கூடவிடவில்லை இவன்.

இதோ வேலைக்கு சேர்ந்ததில் இருந்து முதல்முறையாக விடுமுறை எடுத்து நாளை கிளம்புகிறாள் பூங்குழலி. தம்பியின் பரிட்சை முடியும் நாள் சென்னையில் இருக்கும்படி பார்த்து விடுமுறைக்கு விண்ணப்பிக்க அதில் கமாண்டரில் இருந்து அவளை எதிரியாக பாவிக்கும் அபிஷேக் வரை மூக்கின் மீது விரல் வைக்காத குறை. ஆனால் அவளிடம் கேட்கத்தான் ஒருவராலும் முடியவில்லை.

ஒன்று எப்போதும் மற்றவர்களைச் சற்றுத்தள்ளி நிறுத்தியே பழகியதால் உரிமையுடன் கேட்க யாருமில்லை என்றால் இன்னொன்று ரியாஸிடம் அன்று நன்றி சொல்லியதோடு சரி அதைத்தவிர அவளிடம் பெரிதாக எதுவும் மாற்றம் தெரியவில்லை.

வெளியில் அப்படியே காண்பித்துக்கொண்டாலும் உள்ளுக்குள் ஒரு நிறைவும் கூடவே சதாசர்வ காலமும் ஒருவித யோசனையிலும் கழிந்தது அவளிற்கு.

அந்த யோசனையின் விளைவாக அவள் எடுத்த முடிவின்படி சென்னையில் கால் பதித்த ஒருசில மணிநேரத்தில் நடந்துக்கொள்ள இதை சற்றும் எதிர்பார்க்காததால் திகைத்துதான் போனான் ஆரவ்.

அலைகடல் ஆர்ப்பரிக்கும்…

error: Content is protected !!