manam3
manam3
மகிழம்பூ மனம்
மனம்-3
ஐந்தே முக்கால் மணிக்கு, பஞ்ச, கர்ம இந்திரியங்களின் உந்துதலில் வழமைபோல கண்விழித்தாள், யாழினி.
எதேச்சையாக படுக்கையை கவனித்தவள், என்றும்… தான் துயில் எழும்போது… உறங்கிக் கொண்டிருக்கும் கணவன்… முதன் முறையாக அவள் எழும் வேளையில் படுக்கையில் இல்லாததை பார்த்தவள்…
‘அதிசயமாவுல்ல இருக்கு…! அதுக்குள்ள வாயில்லாப் பூச்சி எழுந்தாச்சா? இல்ல உச்சா போயிட்டு, திரும்பி வந்து படுத்து, பச்சா உறக்கம் கன்ட்டினியூ பண்ணுவாரானு தெரியலயே!’, என புன்முறுவலோடு யோசித்தபடியே, கணவன் கழிவறையில் இருப்பதாக தானாக எண்ணிக்கொண்டு, குளியலுக்கு இடைவெளி தந்து, அறையை விட்டு வெளியே வந்திருந்தாள்.
அவசரக் கடன்களை முடித்துவிட்டு, அடுக்களைப் பணிகளை துவங்கினாள். அடுத்து வந்த பதினைந்து நிமிடங்களுக்குப்பின் குளிக்க எண்ணி அறைக்குள் வந்தாள் யாழினி.
படுக்கையில் இல்லாத கணவனை, தங்களது அறையோடு இணைந்திருக்கும் குளியல் மற்றும் கழிவறையில் இருக்கிறானா? எனத் தேடத் துவங்கியவாறு, ‘இவ்வளவு நேரமா அங்க என்ன பண்ணுறாறு?’, என கேள்வி எழுப்பியவாறே சென்று பார்த்தவளுக்கு, ஏமாற்றமே எஞ்சியது.
அடுத்த ஐந்து நிமிடங்களுக்குள், கணவன் வீட்டிற்குள் எங்கும் இல்லாததை உறுதி செய்தவள், யோசனையோடு சென்று குளியல் முடித்தாள்.
குளியலின்போது என்றுமில்லாமல் தேவாவைப் பற்றிய சிந்தனையோடே குளித்திருந்தாள். ‘அவருபாட்டுக்கு கிளம்பி போறாரு, வராரு… இதென்ன சத்திரமா… எதுவும் சொல்லாம போறதும், வரதுமா இருக்க… இன்னிக்கு இதுக்கு ஒரு முடிவு தெரியனும். இதை இப்டியே விடக்கூடாது.’ என்று எண்ணியவளாய் குளித்திருந்தாள்.
மேலும், ‘இனியும் நாள் நட்சத்திரம் பாத்திட்டே நாளைக் கடத்தாம, அம்மாகிட்ட சொல்லற வாய்ப்பு இல்லைனாலும், இவரப் பத்தி அத்தை காதுல லைட்டா போட்டு வைக்கனும். இன்னும் நாளைக் கடத்தினா நாசமா போறது நானாத்தான் இருப்பேன்’, என்று தனக்குள் தீர்க்கமான ஒரு முடிவோடு இருந்தாள்.
‘இத்தனை நாள்ல இவ்வளவு சீக்கிரம் எழுந்து அவரைப் பார்த்தது இல்லை. இன்னிக்கு என்னன்னா… அவரு எழுந்து கிளம்புனது கூட தெரியாம… அப்டி அசந்து தூங்கியிருக்கேன் போல’, என தன் செயலை நொந்தாள்.
‘இல்லைனாலும் அப்டியே இவரு கிளம்பிப்போறதைப் பாத்திருந்தா என்ன பண்ணிருப்பாரு…! குத்தவச்சவ(பருவமெய்திய) கணக்கா குனிஞ்ச தலை நிமிராம… கம்முனு பேசாம போயிருப்பாரா இருக்கும். எங்கிட்ட சொல்லிட்டுப் போனா ஏழுலகமும் என்னாத்துக்கு ஆகிறது’, என்று எண்ணியபடியே, தான் தயாரித்த தேநீரை எடுத்துக் கொண்டு ஹாலில் அமர்ந்திருந்த பெரியவர்களுக்கு கொடுக்க வந்தாள்.
ஹாலில் இருந்த தனது மாமியார்… அம்பிகாவிடம் தேநீரைக் கொடுத்தபடியே,
“அத்தை, அவர ரூமுல நான் எழுந்ததுல இருந்து ஆளக் காணோம். வெளிய எதுவும் வேலையா போயிருக்காரா?”, எனத் தயங்கிவாறே தனது மாமியாரிடம் கேட்டாள் யாழினி.
முதலில் அசட்டையாக மருமகளின் பேச்சைக் கேட்கத் துவங்கிய அம்பிகா, அடுத்து ‘ஆளக் காணோம்’ எனும் தனது மருமகளின் வார்த்தையைக் கேட்டபின், மருமகளின் வார்த்தைகளில் கவனத்தைக் கொண்டு வந்திருந்தார்.
“யாரு தேவாவா…! உங்கிட்ட எதுவும் சொல்லிட்டுப் போகமாட்டானா?”, என்ற மாமியாரின் கேள்வியில் தடுமாறி நின்றிருந்தாள்.
“எங்கிட்ட இதுவரை ஒன்னும் சொன்னதில்லையே அத்தை”, என்ற யாழினியின் பதிலில்,
“நல்லா புருசன் பொண்டாட்டி…!
இதுவரை அவங்கிட்ட என்ன ஏதுன்னு கேட்டமாதிரி இனிமேலும் நாங்கேட்டா நல்லாவா இருக்கும்!
நீ வந்தவுடனே அவனை உன்னை நம்பி ஒப்படைச்ச திருப்தியில இருக்கோம்.
இப்டியா அவம்போக்குல விடுவ?
பொம்பிளைதான் சூதனமா இருக்கனும். ஆம்பிளைக்கு சம்பாதிக்க மட்டுந்தான் தெரியும். நாமதான் என்ன ஏதுன்னு கருத்தா கேட்டு, குடும்பத்தை காபந்து பண்ணனும்”, என்று மருமகளிடம் நீண்ட அறிவுரை கூறிவிட்டு, நிமிடத்திற்கும் குறைவாக தனக்குள் யோசித்தவர், “எங்கிட்ட எதுவும் தேவா சொல்லிட்டுப் போகலயேம்மா!”, என முந்தைய நாளில் மூத்த மகனோடுடனான தனது பேச்சுகளை மனதில் அசை போட்டவாறே பதிலுரைத்தார்.
மாமியாரின் பேச்சைக் கேட்டவளுக்கு இத்தனை நாள், தேவாவைப் பற்றிக் கூறாத தனது மடத்தனத்தை நொந்தபடியே அமைதியாக நின்றிருந்தாள் யாழினி.
குறிப்பாக எதையும் கூறிச் சென்றிறாத மகனின் சம்பாசனைகளை நினைவு கூர்ந்து அலசியறிந்தவர், “நானும் சீக்கிரமாவே இன்னிக்கு எழுந்துட்டேனே…! ஆனா… அவன நான் எந்திரிச்சதுல இருந்து பாக்கலயேம்மா…! இவ்வளவு சீக்கிரமா… எப்பவும் எழவும் மாட்டானே…!”, என ஹாலில் மாட்டப்பட்டிருந்த வால் கிளாக்கில் நேரம் பார்த்தார்.
நேரம், ஆறரை மணி என கடிகாரம் காட்டியிருக்க, “..ஏங்க…”, என ஹாலில் தனக்கு எதிரே இருந்த சோஃபாவில் அமர்ந்து தினசரியை படித்தபடி இருந்த கணவனைப் பார்த்து அழைத்தார்.
கையில் இருந்த தினசரியை முகத்திற்கு கீழே இறக்கி மனைவியைப் பார்த்தவரிடம், “பெரியவன நீங்க வெளிய எதுவும் வாங்க அனுப்பிச்சிங்களா?”, அம்பிகா.
“இல்லையேம்மா…”, முருகானந்தம்
“அவன் வேற வேல விசயமா வெளிய போறதா உங்ககிட்ட எதுவும் சொல்லிட்டுப் போனானா?”, என அடுத்த தனது கேள்வியைக் கணவனிடம் கேட்டார்.
“அப்டி எதுவா இருந்தாலும், உங்கிட்டதான் சொல்லிட்டுப் போவான். என்னைக்கு எங்கிட்ட தொடந்தாப்புல நாலு வார்த்தை நல்லா பேசிருக்கான்?”, என்று முருகானந்தம் இதுநாள் வரை தனக்குள் பூட்டி வைத்திருந்த மனக்குறையை, வெளியிட ஏதுவான நேரமாக எண்ணி மனைவியிடம் கூறியிருந்தார்.
“அவன் பேச ஆரம்பிச்சதுல இருந்தே அப்படியே பழகிட்டான். அவனைப் பத்தி ஆராய்ச்சி பண்ற நேரமா இது!”, என்று தன்னிடம் சலித்துக் கொண்ட மனைவியிடம் சற்றுநேர யோசனைக்குப்பின்,
“காலையிலே… நான் எழுந்தப்பவே வெளிக்கதவு திறந்துதான் இருந்தது! நானும் இவ்வளவு சீக்கிரம் எழுந்து யாரு தொறந்திருப்பானு யோசிச்சிட்டே உள்ள வந்தேன்…!”, என்றார்.
அதுவரை மனையாள் மற்றும் மருமகளின் சம்பாசணைகளைக் கேட்டவாறே பத்திரிக்கையினை படித்திருந்தவர், “யுகேந்திரா…!”, என அறைக்குள் கிளம்பிக் கொண்டிருக்கும், தனது இளைய மகனை அழைத்தார் முருகானந்தம்.
தந்தையின் அழைப்பைக் கேட்டு, அறைக்கு வெளியே வந்தபடியே… என்னவெனக் கேள்வியாக தந்தையை நோக்கி வந்து, “அப்பா…”, என்றவாறு தன்முன் வந்துநின்ற இளைய மகனிடம்,
“இந்த தேவா பய காலையில வெளிய கிளம்பிப் போனத… பாத்தியா? உங்கிட்ட எதுவும் இன்னிக்கு சீக்கிரமா கிளம்பறதப் பத்தி சொன்னானா?”, எனக் கேட்டார்.
“இல்லயேப்பா…”, என்றவன், “நேத்து டிவி பாக்கும்போது சும்மா எங்கூட உக்காந்து பாத்துட்டு இருந்தான். ஆனா எதுவும் வெளியே கிளம்பறதப் பத்தி சொல்லலையேப்பா”, என்றபடியே பணிக்கு கிளம்பியவாறு பதிலளித்தான்.
இருவரும் பேசியதைக் கேட்ட அம்பிகா, “வருவான்…! இந்த நேரத்தில எங்க போகப் போறான். பக்கத்திலே எங்காவது வேலையாப் போயிருப்பான்!”, என்றபடியே மருமகளுக்கு காய்கறி நறுக்குவதில் உதவி செய்தார்.
அடுத்தடுத்த அடுக்களைப் பணிகள் இழுக்க, மும்முரமாக அதனோடு ஐக்கியமாகியிருந்தாள் யாழினி.
காலை நேர ஆகார நேரம் நெருங்க, தாயை அழைத்த யுகேந்திரன், “அம்மா நேரமாகுது… சாப்பாடு வையும்மா!”, என்று நேரமானதை தாயிக்கு நினைவுறுத்த
“இந்தா வரேன்பா…”, என்றவாறு மருமகள் சமைத்து வைத்திருந்ததை எடுத்து வந்து டைனிங்கில் வைத்தார் அம்பிகா.
நேரம் எட்டரை என்று வால்கிளாக் காட்டியதைப் பார்த்த அம்பிகா, “என்னங்க… இந்த தேவா சாப்பாடு எதுவும் எடுக்காம போயிட்டான்… அங்க கேண்டீன்ல எதுவும் சாப்பிட்டுக்குவானா?”, என்று தனது கணவரைப் பார்த்து அடுத்த கட்ட கேள்வியை எழுப்பியிருந்தார்.
“எதுக்கு இவ்ளோ யோசிச்சிக்கிட்டு…!”, என தனக்குள் கேட்டபடியே தனது அலைபேசியை எடுத்த முருகானந்தம், ‘போன போட்டு கேக்க வேண்டியது தான!’, என்றபடியே தேவாவின் அலைபேசிக்கு, தன்னுடைய அலைபேசியிலிருந்து அழைத்திருந்தார்,
சுவிட்சு ஆஃப் செய்யப்பட்டுள்ளதாக… ரெக்கார்டட் வாய்ஸ் வர, மீண்டும் இருமுறை தொடர்பு கொண்டவருக்கு, அதே பதில் வரவே, காலை ஆகாரத்தை உண்டு கொண்டிருந்த யுகேந்திரனிடம் தேவாவின் எண்ணைச் சரிபார்க்கச் சொன்னார்.
யுகேந்திரனும் எண்ணைச் சரிபார்த்துவிட்டு, “சார்ஜ் இல்லாம கூட ஆஃப் ஆயிருக்கலப்பா!”, என்றபடியே தனது பேசியில் இருந்து தேவாவிற்கு ஒருமுறை அழைத்துப் பார்த்தான். பாரபட்சமின்றி ஒரே பதில் யுகேந்திரனுக்கும் வந்தது.
தேவாவின், அலுவலகம் சார்ந்த… வேறு யாருடைய எண்ணும் வீட்டில் உள்ளவர்களிடம் இல்லாமல் இருக்க… இப்டி ஒரு இக்கட்டான சூழலை எதிர்பார்த்திராத குடும்பம், முதன் முதலில் அவனுடைய அலுவலக மற்றும் நண்பர்களது அலைபேசி எண் எதனையும் வாங்காமல் இருந்த தங்களது செயலை எண்ணி மிகவும் வருந்தினர்.
என்ன செய்வதென யோசித்தபடியே, தொய்வில்லாமல் அவரவர் செய்த பணிகளில் கவனமாக இருந்தனர்.
“அவங்க ஆபீஸ்ல எதாவது அவசர வேலயா வரச் சொல்லி… அண்ணன் போயிருப்பான்…!
வேல முடிஞ்சுட்டா… அவனே வீட்டுக்கு வருவான்!”, எனக் கூறிய யுகேந்திரன், காலை உணவிற்குப் பின் அவனது பணி மையத்திற்கு கிளம்பிச் சென்றிருந்தான்.
செல்லும்முன்பு, “எனக்கு சென்டர் போனபின்னதான் எங்க, என்ன வேலைங்கறது தெரியும். வேலையை சீக்கிரம் முடிச்சிட்டா… அவன் ஆஃபீஸ்கு நேருல போயி பார்த்துட்டு உங்களுக்கு கூப்பிடறேன்பா”, என்று பெரியவர்களிடம் கூறிவிட்டே கிளம்பியிருந்தான்.
இளைய மகனின் இதமான வார்த்தைகளில் இளைப்பாறிய பெரியவர்கள், அடுத்து தங்களது அன்றாட வேலைகளில் கவனத்தை திசை திருப்பியிருந்தனர்.
———————
யுகேந்திரன் பணிக்குச் சென்றபின், பெரியவர்களுக்கு காலை ஆகாரத்தைக் கொடுத்து, தானும் உண்டுவிட்டு, மதிய ஆகாரத்திற்கான பணிகளை ஆரம்பிக்கும்முன்பு, வீட்டை பெருக்கும் பணியைத் துவங்கினாள் யாழினி.
ஒவ்வொரு இடமாக துப்புரவு செய்து, இறுதியாக தங்களது அறைக்குள் நுழைந்தவளுக்கு, வழக்கத்திற்கு மாறாக கீழே கிடந்த புதிய வெள்ளைத்தாள் அனைவருக்குமான அத்தியாவசிய செய்தியோடு இருந்தது.
அதில் இருக்கும் விடயம் அறியாதவளாகையால், அலட்சியமாக எடுத்து, ‘என்ன பேப்பரு இது’, என்ற எண்ணத்தோடு பார்வையைப் பதித்தவளுக்கு அதிலிருந்த செய்தியை படித்தவளுக்கு, அதற்குமேல் அவளை செயல்படவிடாமல் புலன்களை நிறுத்தம் செய்திருந்தது.
மீண்டும், மீண்டும் படித்தவளுக்கு, அதல பாதாளத்தில் விழும் உணர்வு தோன்றியிருந்தது. உடம்பெல்லாம் கூசியது.
உலகமே இருண்டாற் போன்ற நிலையில் தான் மட்டும் ஆதரவற்ற நிலையில் தனித்து நிற்பது போன்ற உணர்வு தோன்றியது.
நெஞ்சில் உண்டான எதிர்பாரா, மிகுதியான அழுத்தத்தில் தலை சுற்றும் உணர்வு வந்திருந்தது.
“அத்த…”, என்ற அவளின் அழைப்பு அவளின் குரல்வளையை விட்டு வெளிவராமல் சண்டித்தனம் செய்திருந்தது.
தன் முழுசக்தியையும் கூட்டி மீண்டும் அழைத்தவளின் சத்தம் தொண்டைக் குழிக்குள் இருந்து வெளிவராமல் போயிருந்தது.
நடக்க எத்தனித்தவளுக்கு நடையில் இருந்த தள்ளாட்டம் புதியதாகத் தோன்றி, பயத்தைத் தந்திருந்து. ‘என்ன நடக்கிறது’, என்பதை யூகிக்க முடியாமல் ஒருவாராக நடந்து அறையிலிருந்து பதினைந்து அடி தூரத்தில் அமர்ந்து தொலைக்காட்சியில் கவனம் பதித்திருந்த மாமியாரை அணுகுவதற்குள், ஆயாசமாக உணர்ந்திருந்தாள் யாழினி.
அறைக்குள்ளிருந்து கையில் பேப்பருடன் வியர்க்க, விறுவிறுக்க, தன் முன் வந்து நின்று மூச்சு வாங்க, ஸ்திரத்தன்மை இல்லாமல் நின்றிருந்த மருமகள் யாழினியை, ‘என்னவோ… ஏதோ’, என்று பயத்துடன் அம்பிகா நிமிர்ந்து, யாழினியின் முகம் பார்த்து யோசித்திருக்க,
“அத்த… அத்த…
அவரு… உங்க மகன்… மகன்…
என்..ன..வோ.. இதுல எழுதி.. வச்..சிட்டு போயி..ரு..க்..கா..ரு…!”, என தளர்ந்த குரலில், உலர்ந்த உதடுகளுக்கிடையே, வறண்டிருந்த வாயில் உள்நாக்கு இழுக்க, இலகுவாக பேசவிடாமல் நா தடுக்க, இடைவெளியுடன் கூடிய எழுத்துக்களை உச்சரித்ததைக் கேட்டு… மனம் சற்று ஆட்டம் காண… பேப்பரில் இருந்ததை திகிலுடன் வாங்கி கண்களை பேப்பரில் படியவைத்து, படிக்க ஆயத்தமானார், அம்பிகா.
அதற்குள், அம்பிகாவின் அருகில் அமர்ந்து, தொலைக்காட்சியில் செய்தியைப் பார்த்துக் கொண்டிருந்த முருகானந்தம், கையில் நடுக்கத்துடன் தனது மனைவி பிடித்திருந்த வெள்ளைத்தாளை, அவரின் கையில் இருந்து தன்னிச்சையாக வாங்கியிருந்தார்.
தேவேந்திரனின் கையெழுத்தில் இருந்த விடயத்தை மனதிற்குள் படிக்க ஆரம்பித்தார் முருகானந்தம்.
‘எல்லாரும் என்னை மன்னிச்சிருங்க.
என்னை இனி யாரும் தேட வேண்டாம்.
என் சம்யுக்தாவோடு சந்தோசமாக வாழ, கிளம்பிவிட்டேன். எனது நிலையை நேரில் பேச முயன்றும் முடியவில்லை. இனி ஒருபோதும் என்னைத் தொந்திரவு செய்ய வேண்டாம். என்னை மன்னித்து விடை கொடுங்கள்.
- தேவேந்திரன்’
என்ற மூன்று வரிகளில் இருந்த வாசகத்தைத் தவிர வேறேதும் அந்த தாளில் இல்லை.
கடிதத்தைப் படித்த பெரியவர்கள் இருவரும் எதிர்பாரா அதிர்ச்சியில் உறைந்திருந்தனர்.
கடிதத்தை சேர்ப்பிக்க வேண்டிய இடத்தில் சேர்த்து விட்டு, தங்களது அறைக்குள் எவ்வாறு நடந்து வந்தாள் என்றே அவளறியாமல் வந்து, கதவைத் தாழிட்டபின், முடங்கியவள் தனக்குள் அழுது கரைந்திருந்தாள்.
தனது பெற்றோர் எந்த மாதிரியான சூழலில் கடன்பட்டு தனது திருமணத்தை நடத்தியிருந்தனர் என்பதை அறிந்தவளுக்கு, இனி தன்னிலை என்பதைவிட பெற்றோர்களின் நிலை என்ன? என்பதை யோசிக்கவே பயமாக இருந்தது.
இப்படி இவன் சொல்லாமல் ஓடிப்போகவா தன் பெற்றோர் இவ்வளவு சிரத்தை எடுத்தார்கள் என்று நினைக்கும்போதே நெஞ்சில் வாள் கொண்டு அறுத்தது போல எரிந்தது.
‘யாரைக் குற்றம் சொல்லி என்ன செய்ய? எல்லாம் தன் விதி!’, என்று ஒதுக்க இயலாத நிலையில், தேவாவின் குடும்பத்தின் மீதும், தேவாவின் பொறுப்பற்ற தனத்தால் உண்டான தற்போதைய நிலையை எண்ணி, அவன் மீதும் மலையளவு வெறுப்பு உண்டாகியிருந்தது.
‘உண்ட வீட்டுக்கு இரண்டகம் பண்ணற மாதிரியான பேடிக்கு, மாசம் முழுக்க வடிச்சி போட்ட மடைச்சி நானாத்தான் இருப்பேன் போலயே…!
இப்படி ஒரு விசயம் இருக்கும்னு நான் யோசிக்கலையே! இதை கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த ஆளு அவங்க வீட்ல சொல்ல முடியலன்னாலும், எங்கிட்டயாவது போனைப் போட்டு சொல்லியிருக்கலாமே…! நானாவது எம்மேல எதாவது பழிய போட்டுக்கூட கல்யாணத்தை நிறுத்தியிருப்பேனே…!
இப்டி என்னைய அசிங்கப்படுத்திட்டு போயிட்டாரே! இம்புட்டு செலவு பண்ணி கல்யாணத்தையும் பண்ணி, இரண்டு மாசம் ஆகப்போகற நிலையில… விட்டுட்டுப் போனவன் எப்டி மனுசனா இருக்க முடியும்?
இரண்டு மாசங்கழிச்சு ஓடிப்போற புத்தி வந்தவனுக்கு, ரெண்டு மாசம் முன்னுக்கு, புத்திய கடனாவா வெளியே கொடுத்திருந்திப்பான்!
மடச் சாம்பிராணி!
ஊமை ஊரக் கெடுக்கும்னு சொல்லுவாங்க… இந்த ஊமை என் எதிர்காலத்தையே காவு வாங்கிட்டானே பாவி!
கடவுளே, இல்லாத ஏழைஎளிய மக்களான எங்களை ஏனிப்படி கஷ்டப்படுத்திப் பாக்கறே!
இந்த விசயம் தெரிஞ்சா அவங்க ரெண்டுபேரும்(பெற்றவர்கள்) உசுரயே விட்ருவாங்களே…!’ என்று தனது பெற்றோரை எண்ணி மருகியவள், தேவாவின் மீது அளவு கடந்த சினத்தோடு அழுது கரைந்தாள்.
பெரியவர்கள் இருவருக்கும் உண்டான அதிர்ச்சி விலகவே, இரண்டு மணித் தியாலம் திவாலாகியிருந்தது.
ஆளுக்கொரு பக்கமாக அமர்ந்து தங்களுக்குள் புலம்பித் தீர்த்திருந்தனர்.
/////////////
யுகேந்திரன் இயன்றவரை தனது பணிகளை துரிதமாக முடித்துக் கொண்டு, ஓரிருமுறை தனது பேச்சுவாக்கில் அலுவலகம் பற்றி தேவா பேசியதை வைத்து, அவனது கம்பெனிக்கு மதிய இடைவேளையின்போது தேடி வந்திருந்தான்.
தேவா சொல்லாமல் காலையில் அலுவலகம் வந்தது சற்றே உறுத்தலாக இருந்ததால், அலுவலகம் சென்றவன், ‘தேவாவின் ஊரிலிருந்து தான் சென்னை வந்திருப்பதாகவும், தற்போது தேவாவை நேரில் சந்திக்க விரும்புவதாகவும், தகவல் தெரிவித்து, தேவாவை வரவழைத்து உதவி செய்யுமாறு’, வரவேற்பில் கூறியிருந்தான்.
சொந்த சகோதரன் என்று எதையும் கூறாமல், சென்னை வந்தால், சந்திக்க கூறினார் என்று அங்கே கூற, அவர்களும், இரண்டு நாட்களுக்கு முன்பு ஹைதராபாத் கிளைக்கு அவர் கேட்டிருந்த மாறுதல் காரணமாக, முந்தைய தினம் இங்கிருந்து விடைபெற்றிருந்த தகவலை யுகேந்திரனிடம் மறையாது கூறியிருந்தனர்.
தேவாவின் அலுவலக அலைபேசி எண் இன்னும் அலுவலகத்திற்குப் பகிரப்படாமையால், ஹைதராபாத் அலுவலக தொடர்பு எண்ணை மட்டும் வாங்கிக் கொண்டவன், அதற்குமேல் எதுவும் பேசாமல், தனது சகோதரனின் செயலில் உண்டான குழப்பத்தோடு அங்கிருந்து அவனது மையத்திற்குக் கிளம்பியிருந்தான் யுகேந்திரன்.
///////////////
தாளில் இருந்த விடயத்தின் தாக்கத்தால், தாழிட்ட கதவைத் திறக்காமல் தனது குடும்பத்தை எண்ணியும், இனி தனது நிலையையும் யோசித்தவளாய் அறைக்குள் முடங்கியிருந்தாள் யாழினி.
மருமகள் அருகில் இல்லாததால், அம்பிகா, முருகானந்தம் இருவரும் மனதில் உள்ளதை கலந்து, பேசி யோசித்திருந்தனர்.
தங்களுக்குள் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தவர்கள், நீண்ட நேரம் யாழினியைக் காணாததை யோசித்து,
“ஏய் அந்தப் புள்ளைய முதல்ல போயி ஆறுதல்படுத்து… அதுபாட்டுக்கு எதாவது தப்பான முடிவுக்கு வந்திரப்போகுது. ரொம்ப நேரமா ஆளக் காணோம். போயி பாரு”, என்று மருமகளைக் காணுமாறு கூறி மனைவியை விரட்டினார், முருகானந்தம்.
அப்போதுதான் நினைவு வந்தவராக, எழுந்து சென்று யாழினி இருந்த அறைக்கதவைத் தட்டினார் அம்பிகா.
“அம்மாடி… கதவைப் பூட்டிட்டு என்னம்மா செய்யிற, வந்து கதவைத் தொறம்மா”, என்று அழைத்தார்.
நீண்ட நேரம் கதவைத் திறவாமல் பித்துப் பிடித்தார்போன்று அமர்ந்திருந்தவள், தடதடவென்ற கதவின் தட்டல் ஒலியில் நடப்பிற்கு வந்தாள், யாழினி.
இதற்கிடையில் பயந்துபோன முருகானந்தமும், அறைவாயிலில் நின்றபடி, “அம்மா… யாழினி வந்து கதவைத் திறம்மா”, என்று அழைக்கவே, இறுதியாக… கதவைத் திறந்திருந்தாள் யாழினி.
யாழினியின் நிலையைக் கண்ட அம்பிகா, அவளிடம் ஓடிச்சென்று அணைத்தபடியே, “இப்டி ஒரு தேவதையை விட்டுட்டுப் போன மடையனை நினைச்சு வருத்தப்படாத தாயி… முட்டாப் பய.. அவன் தலையில அவனே மண்ணை அள்ளிப் போட்டுக்கிட்டான். எங்கே போயிறான்னு பாப்போம். இந்த அத்தை உனக்கு ஒரு நல்லது செய்யாம ஓய மாட்டேன். அதுவரை கொஞ்சம் அமைதியா இரு தாயி… வரட்டும் அந்தப்பய வந்து எதுனா உங்கிட்ட குறைனு ஒரு வார்த்தை சொல்லட்டும். அப்புறம் இருக்கு அவனுக்கு. இந்த மடப்பயலைப் பெத்ததுக்கு எங்களை மன்னிச்சிரும்மா”, என்று தனது மருமகளைக் கட்டிக்கொண்டு ஒரு பாட்டம் அழுதிருந்தார்.
மாமியாரின் வார்த்தைகளைக் கேட்டவளுக்கு சற்றே தெம்பு வந்திருக்க, “அத்தை, அவரு செஞ்ச தப்புக்கு பெரியவங்க என்ன பண்ணுவீங்க… நீங்க அழுகாதிங்க!”, என்று அம்பிகாவிற்கு ஆறுதல் கூறியவளை கட்டிக்கொண்டு,
“குணத்துல குபேரனாட்டம் இருக்கிற உன்னை மாதிரி ஒரு புள்ளைய விட்டுட்டுப் போறானே! மனுசனா அவன்? ஊருல உலகத்தில இல்லாத அழகிய தேடி தேவதாஸாட்டம் நினைச்சுக்கிட்டு கிளம்பிபோன முட்டாள எங்கனாலும் தேடிக் கண்டுபிடிச்சு உனக்கு ஒரு நல்லது செய்யல…! என்னைப் பெத்தவ காத்தாயி இல்ல!”, என்று மருமகளுக்கு நியாயம் கிடைக்க தான் எந்தளவும் செல்லத் தயார் என்பதைக் கூறி சூலுரைத்து மருமகளைத் தேற்றினார்.
இருவரும் மாற்றி மாற்றி அழுவதைக் கண்ட முருகானந்தம், “உன்னைய அந்தப் புள்ளைய அழுக விடாம ஆறுதல் சொல்லச் சொன்னா, அதுகூடச் சேந்து நீயும் அழுகுற… போ… அந்தப் புள்ளைய விட்டு…”, என்று மனைவியைச் சத்தம் போட்டவர்,
“அம்மாடி… நடந்த விசயம் மன்னிக்க முடியாதது. நீ எதுக்கும் பயப்படாத. நாங்கல்லாம் எதுக்கு இருக்கோம். அதனால உங்கண்ணுல வர கண்ணீரைத் தொடச்சிக்கோ… உனக்கு நடந்த கெட்டதை சரிசெய்ய, உனக்கு நல்லது நடத்தி உம்மனசை குளிரவைக்கிறவரை எங்குலமே உனக்கு கடமைப் பட்டுருக்கு. உனக்கு ஒரு நல்லது நடக்காம இந்த மாமன் ஓயமாட்டேன். அதுவரை கொஞ்சம் பொறுமையா இரும்மா…!”, என்றவர்,
அடுத்து யாழினியின் பெற்றோருக்கு அழைத்து… இன்றே நேரில் சென்னை வருமாறு அலைபேசியில் தகவல் கூறினர்.
எதிர்பாரா அழைப்பு என்பதைவிட, தன் மகளுக்கு எதுவும் நேர்ந்து விட்டதோ?, பெரியவர்களிடம் ஏதும் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டாளோ? என்ற பதற்றம் யாழினியின் பெற்றோருக்கு வந்திருந்தது.
விடயத்தை பகிராமல், கிளம்பி உடனே வரவும் என்ற சொல்லில், பதற்றத்துடன் வீட்டிலிருந்த பணிகளை அப்படியே அறைகுறையாக விட்டுவிட்டு கிளம்ப உத்தேசித்தனர்.
விடயம் எத்தகையது என்று தெரியாததால், தங்களின் இரு இளைய மகள்களையும் அன்றிரவு தங்களது உறவுகளின் பாதுகாப்பில் ஒப்படைத்துவிட்டு கிளம்பியிருந்தனர்.
விபரம் அறியாதவர்கள் என்னவோ ஏதோ என்று பதறிய மனநிலையோடு, பேருந்து பயணம் முழுமைக்கும் மனதிற்குள் குழம்பிய நிலையில் பயணித்திருந்தனர்.
வந்தவர்கள் தனது மருமகன் பற்றிய விடயம் அறிந்து, எந்த மாதிரி நடந்து கொண்டார்கள். அடுத்து என்ன நடக்கும் என்பதை அடுத்த அத்தியாயத்தில் காணலாம்