ponnunjal22

ponnunjal22

ஊஞ்சல் – 22

 

உன்மீது நான்

கொண்ட கோபம்

கானல் நீராக

காற்றில் கரையுதே…

ஒவ்வொரு முறையும்

நீ என்னை நெருங்கி

வரும் போதும்…

நான் அடங்கிபோவதும்

அடிபணிவதும்

உன் அன்பிற்கு மட்டுமே…

 

விஸ்வாவிடம் இருந்து வம்படியாக தன் கைகளை உதறிக்கொண்டு உள்ளே சென்ற பொம்மியை, மாடி பால்கனியிலிருந்து அஜுவும் அசலாட்சியும் பார்த்து விட்டனர். இவர்களை பொம்மி கவனிக்கவில்லை.

மகளின் முகவாட்டத்திற்கான காரணத்தை தேடிக் கொண்டிருந்தவளுக்கு, அவளின் முகத்திருப்பலும் பிடிக்காத பாவனையும் மேலும் துணுக்குறச் செய்தது.

அதே சமயத்தில் அஜுவும் இருவருக்கிடையே நடக்கும் வீம்புச் சண்டையை அசலாட்சியிடம் கூறிவிட்டாள். ஏற்கனவே பல குழப்பங்களை தாங்கிக்கொண்டு பயணித்த தாயின் மனம் மேலும் இன்னல்களை சந்திக்க திராணியற்ற நிலையில், ரிஷபனிடம் கொட்டித்தீர்த்து விட்டாள்.

“ஒன்னுமில்லாத சின்ன விசயத்துக்குரெண்டு பேரும் இத்தன பிடிவாதம்பிடிச்சா, நாளபின்ன பொம்மி பத்திதெரிய வரும்போது எப்படி எடுத்துப்பாங்கன்னு தெரியலயே பாவா? எதுக்கும் மாப்பிள்ளைகிட்ட பக்குவமா எடுத்துச் சொல்லி புரிய வைச்சுடுவோமா?” சொல்ல விருப்பமில்லை என்றாலும் மகளின் நல்வாழ்விற்க்கென எதையும் முயன்று பார் என மனம் ஆணையிட, தட்டாமல் கணவனிடம் கோரிக்கை வைத்தாள்.

“முடிஞ்சு போனத பத்தி பேசுறத நிப்பாட்டு சாலா! மொத உன் பொண்ணு பிரச்சனைய கவனிப்போம்?” தனது வழக்கமான அதட்டலை மனைவியிடம் காட்டினான் ரிஷபன்.

“தன்னோட விருப்பத்த மறைக்கிற அளவுக்கு பெரிய மனுஷி ஆகிட்டாளா அவ? வளர்த்த பாசத்த காமிக்க நான் சொன்னதுக்கு ஒத்துக்கிட்டாளா? கூப்பிடு அவள…” என்றவனின் முகமெங்கும் கோபஅலைகள் விரவிக் கிடந்தது.

“கூப்பிட்டீங்களா சீனிப்பா?” எப்பொழுதும் போல் செல்லம் கொஞ்சியபடியே வந்த பொம்மியை பார்த்து,

“உனக்கு விஸ்வாவை பிடிக்காதா? நான் சொன்னதால மட்டும்தான் சரின்னு தலையாட்டுனியா?” எடுத்த எடுப்பிலேயே கண்டனத்துடன் முறைத்தபடி கேட்க, பொம்மி விதிர்விதித்துப் போனாள்.

இத்தனை வருடங்களில் தன்னிடம் காட்டாத சினந்த முகத்தை, கண்டவளுக்கு உடலெங்கும் நடுக்க அலைகள் பரவ,

“இல்ல… அப்படியில்ல சீனிப்பா” வார்த்தைகள் தடுமாறியே வந்தன.

“பொய் சொல்றியா பத்மாக்ஷினி? உனக்கும் அவனுக்கும் என்ன பிரச்சன?” கேட்கும்போதே அவன் கண்களின் சிவப்பு மகளுக்கு அச்சத்தைக் கொடுக்க,

“எது… எதுவுமில்ல நாணா? அவன் சும்மா வம்பிழுக்கிறான்” மென்று முழுங்கியபடியே சொல்வதற்குள் வியர்த்து விட்டாள்.

தன்னைப் பேர் சொல்லி அழைத்ததில் அத்தனை அதிர்ச்சி அடைந்திருந்தாள். தன் முழுப்பெயரை முதன்முதலில் தந்தை சொல்லிக் கேட்பது, இதுதான் அவளுக்கு முதன்முறை. அதுவும் கோபத்தில் என்றென்னும் போது பொம்மிக்கு சகலமும் தந்தியடிக்க ஆரம்பித்திருந்தது.

“அவன், உன்கிட்ட சும்மா சொல்றதயெல்லாம், அஜுகிட்ட புலம்புனியா? அவனை பிடிக்கலன்னு சொன்னியா?” பல்லைக் கடித்துக்கொண்டு, கோபத்தை கட்டுப் படுத்தியவாறே கேட்ட தந்தையின் கேள்வியில் ஊமையாகிப் போனாள் பொம்மி.

தன்தங்கையிடம் சொன்னதையெல்லாம் தந்தை சுட்டிக்காட்டும் போதுதான், தனது நிலையை சின்னப்பெண்ணிடம் அறியாமல் கடைவிரித்த தவறு இவளுக்கு நன்றாக புலப்பட்டது.

இவள் தங்கையும் இவளின் தவிப்பை பார்க்க சகியாமல்தானே பெற்றோர்களிடம் வெளிச்சப்படுத்தியது. எங்கே போய் சொல்லி யாரை நோவது என்று தெரியவில்லை. இதற்கு என்ன பதில் சொல்வதென்றும் புரியவில்லை.

விஸ்வாவிடம் ஆணித்தரமாக ‘உன்னைப் பிடிக்கவில்லை’ என்று கூறியதை தந்தையிடம் கூறிட அந்த சமயத்தில் மனம் வரவில்லை. இத்தனை நாட்களாக அவனது வீம்பிற்கு மட்டும்தானே அணைகட்டிக் கொண்டிருந்தாள் என்பதை இவளே அறியாதபோது வேறுயார் தெரிந்து கொள்வது.

“நான் சொன்னதுக்காக மட்டுமே நீ இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னியா? உனக்கானத முடிவெடுக்குற உரிமைய நான் உனக்கு குடுத்ததில்லையா?” அத்தனை ஆற்றாமையுடன் கேட்டான் ரிஷபன்.

இதற்கு ஆம், இல்லை என்று எது சொன்னாலும் தவறாக போய்விடும் வாய்ப்பு பொம்மிக்கு தோன்ற வாயடைத்துப் போனாள்.

“தைரியமா தன்னம்பிக்கையா வளர்த்த என்னோட வளர்ப்பு பொய்யா போச்சா? என் பேச்சக்கு மறுப்பு சொல்லாம இருக்கதான்உனக்கு வாய்பூட்ட போட்டுகிட்டியா?” ஆதங்கமாக சொன்னவனின் மனதில் தந்தையாக தோற்றுப் போய்விட்டோமோ என்ற தவிப்பு நிறைந்திருந்தது.

அடுக்கடுக்காய் அவளைத் தாக்கி வந்த கேள்விகளை மூளைக்குள் பதிய வைக்கவும் முடியாமல் முகமெங்கும் வெளிறிப்போய், அதிர்ச்சியில் அங்கேயே உறைந்து விட்டாள் பொம்மி.

“கொஞ்சம் பொறுமையா பேசுங்க பாவா! என்னை சொல்லிட்டு நீங்கதான் கோபப்படுறீங்க” மனைவி எடுத்துச் சொல்லியும் கேட்கும் மனநிலையில் கணவன் இல்லை.

கோபமும் ஆதங்கமும் மாறிமாறிப் படையெடுக்க, தானும் என்ன சொல்கிறோம் என்பதை மறந்தே ரிஷபன் வார்த்தைகளை கொட்டிக் கொண்டு இருந்தான்.

“நேத்து உன் பையன் இப்படிதான் இருந்தான், நாளைக்கு சின்னவளும் இப்படி மாறுவா… அதையெல்லாம் நீ ஏத்துப்பியா சாலா? தனக்கு எது பிடிக்கும், பிடிக்காதுன்னு தெரிஞ்சுக்க கூடிய பக்குவம் இல்லையா? நம்ம பிள்ளைங்களுக்கு” என்று அசலாவிடம் கோபத்துடன் கேட்க,கணவன் சொல்வதில் தவறொன்றும் இல்லையே என்றேதான்மனைவிக்கும்தோன்றியது.

“அவங்க நினைப்பு எல்லாம் நம்ம அளவுல மட்டுமே நின்னுடுச்சு… சொல்லிப் புரிய வைப்போம் பாவா! கொஞ்சம் நிதானமா இருங்க” என்றவளின் பேச்சை காற்றில் விட்டவன்,

“நீங்க நினைக்கிற நினைப்புக்கும் செய்ற காரியத்துக்கும் கோபப்படாம, இன்னும் கொஞ்சச் சொல்றியா? உங்க யாருக்கும் என்னோட பாசம் தெரியல? என்னோட கடமையா இதையெல்லாம் செய்றேன்னு, இவளும் நன்றிகடன் செய்ற அளவுக்கு பெரிய மனுஷியா வளர்ந்துட்டா… அப்படித்தானே?”

அதிர வைக்கும் வார்த்தைகளை கோர்த்துச் சொன்னவனின் குரல் கோபத்தில் கட்டுக்கடங்காமல் தெறித்தது. தன்னிடம் யாரும் உரிமை பாராட்டவில்லைஎன்று நினைக்கும்போது ரிஷபனும் ஏனோ உள்ளம் குமைந்து போனான்.

“பெத்தவங்களுக்கான மரியாதை மனசுல இருந்தா போதும், தனக்கு வேண்டியதை கூட தடுத்து வைக்கிற அளவுக்கு எங்கள உசரத்துல வச்சு பாக்க வேண்டாம். குழந்தைகளோட சந்தோசமான வாழ்க்கையிலதான் நாம வாழ்ந்ததுக்குரிய அர்த்தம் இருக்கு” என்று நிதர்சனத்தை உரைத்தவன்,

“எப்படி பார்த்தாலும் இவளோட பேச்சுல எனக்கு கொஞ்சமும் விருப்பம் இல்ல” வார்த்தைகள் சற்றே நிதானப்பட்டு வந்தன.

“என்ன தைரியம் இருந்தா என் பொண்ணுகிட்டேயே அவன் வம்பை வளர்த்திருப்பான்? இவளும் அத சொல்லாம மறைச்சு அவனுக்கு வக்காலத்து வாங்கிட்டு இருக்கா… இந்த அழகுல இவளுக்கு பிடிக்கலன்னு சால்ஜாப்பு வேற…” என்றே மகளை உறுத்து விழிக்க, பொம்மிக்கு சகலமும் ஆட்டம் கண்டது. தந்தையின் ஒவ்வொரு பேச்சிற்கும் என்ன பதில் சொல்வதென்று தெரியாத பேசாமடந்தை ஆகியிருந்தாள்.

“இன்னும் ஒரு மாசத்துல கல்யாணத்த முடிக்கிறேன். என்பொண்ணுகிட்ட சொல்ற காரணத்த என்கிட்டே சொல்லட்டும் அந்த ஆபீசர்” என்று முடிவாய் அறிவித்து அடுத்தடுத்த காரியங்களில் இறங்கி விட்டான்.

பெண்ணைப் பெற்றவனாக, நேரடியாக விஸ்வாவின் பெற்றோரை அழைத்துப் பேசிவிட்டான்.

“இது கிராமம் ஸ்ரீதர்சார்! பரிசம் போட்டு நாலுமாசம் ஆச்சு, ஏன் இன்னும் கல்யாணத்த தள்ளிப் போடுறீங்கன்னு ஊர்க்காரங்க கேக்குற கேள்விக்கு பதில் சொல்ல முடியல… மாப்பிள்ளைக்கு மாற்றல் வரலன்னா என்ன?பொண்ணுக்கு வேலை இருக்குறப்போ இங்கே வந்துட்டுப் போகட்டும். இனியும் நாள் கடத்த வேணாம்”இயல்பை எடுத்துச் சொல்ல, மகனை பெற்றவர்களுக்கும் மறுக்க முடியவில்லை.

எக்காரணம் கொண்டும் விஸ்வாவிடம் எந்தவொரு விசாரணையையும் மேற்கொள்ளவில்லை. அவனும் அத்தனை சீக்கிரத்தில் திருமணத்தை நடத்த சம்மதிக்கவில்லை. இடமாற்றம் என்பதையே சொல்லித் தடுக்க நினைக்க, அதற்கும் பதில் அளித்தான் ரிஷபன்.

“தம்பி… உங்க அப்பா நினைச்சா இப்பவே இடமாற்றல் வாங்க முடியும். அவர் செய்யாம போனாலும் என்னால செய்ய முடியும். உங்க வயச விட அதிக வருஷம் எனக்கு டிபார்ட்மெண்ட்ல பழக்கம் இருக்கு.” என்று யதார்த்தத்தை சொல்லிவிட, ஸ்ரீதரும் அதற்கு தலையசைத்து விட, இவன்தான் அமைதியாக இருக்க வேண்டியிருந்தது.

பெரியவர்களிடம் காட்டிய அமைதியை எல்லாம் ஒன்று சேர்த்து பொம்மியிடம் தெறிக்க விட, அவளும் சளைக்காமல் அவனுடன் மௌனவிரதம் அனுஷ்டிக்க ஆரம்பித்தாள்.

தனது விருப்பம் நிறைவேறாமல் திருமண ஏற்பாடுகள் நடந்து வருவதை கண்ட விஸ்வாவும் தாங்க முடியாத ஆற்றாமையில் தன்மனம் கவர்ந்தவளை சொல்லால் வதைத்தே நோகவைத்தான்.

“கடைசி வரையிலும் நீ சொன்னதுதான் நடக்குது. ரொம்ப சந்தோசமா உனக்கு?”விஸ்வா சண்டைக்கு நிற்க,

“இது பெரியவங்க எடுத்த முடிவு விஸ்வா. இதுல நான் எதுவும் சொல்ல முடியாது.”

“நீ என்ன சமாதானம் சொன்னாலும் அது எனக்கு தேவையில்லை. உங்க நாணா என்கிட்டே பேசுற விதமே சொல்லுதே? அவர் ஒரு முடிவோடதான் கல்யாண ஏற்பாட்டை ஆரம்பிச்சிருக்கார்னு… சிரிச்சுக்கிட்டே என்னை மிரட்டவும் செய்றார். போலீஸ்காரனுக்கு தெரியாதா? யார் எப்படின்னு?” என்று நடந்ததை சரியாக யூகித்து சொல்ல,

“உனக்கே தெரியுது தானே? திரும்ப ஏன் என்னை குத்தம் சொல்ற விஸ்வா?”

“என்னோட நியாயமான ஆசை நிறைவேறலையே பொம்மி? எப்படியோ நம்ம வாழ்க்கை ஏதோ ஒரு சுணக்கத்தோடதான் ஆரம்பிக்கப் போகுது. நானும் உன்கிட்ட இருந்து ரொம்பவே விலகிப் போகப்போறேன்” என்று சொல்லம்புகளால் தாக்கிட, பொம்மிக்கும் வாழ்க்கை ஆரம்பிக்கும் முன்பே இப்படி நிராசையாக பேசி வைக்கிறானே என்று கோபமும் வந்து சேர,

“ஓ… அந்த அளவுக்கு எம்மேல கோபமா விஸ்வா? உன்னை நினைச்சே நான் கஷ்டப்படணும்னு நீ நெனைக்கிற.அதுவே சக்சஸ் ஆகட்டும். உன் சந்தோசத்த நான் ஏன் கெடுப்பானேன்? ஆல் த பெஸ்ட்”என்று விரக்தியான மனநிலையில் வாழ்த்தும் கூற,

“நீ என்னை ஒதுக்குறத விடவா? நான் உனக்கு செய்யபோறேன்”காட்டமாகச் சொன்னவன் கோபத்தில் அவளது அலைபேசி எண்ணை பிளாக் செய்தும் விட்டான்.

“நல்ல காரியம் செஞ்சேரா… நானும் நிம்மதியா இருப்பேன்” என்று ஆசுவாசப் பெருமூச்சில் வெளியே பேசினாலும் மனம் அத்தனை அசதியாய் உணர்ந்தது.

நடக்கப் போகும் திருமணத்தை எண்ணி பொம்மிக்கு இப்பொழுதில் இருந்தே மனதில் ஒருவித வெறுமையே ஏற்பட்டது. தந்தையின் முகத்திருப்பலும் விஸ்வாவின் அசிரத்தையான பேச்சும் தாயிடமிருந்து எந்நேரமும் வரும் அறிவுரையும் அவளை ஒருவித ஆற்றாமையில் உழலச் செய்ய, தனக்கு இந்த திருமணம் தேவையில்லை என்ற மனநிலைக்கே வந்து விட்டாள். ஆனால் அதை தந்தையிடம் சொல்லத்தான் தைரியம் வரவில்லை.

தனது ஒவ்வொரு செயலும் தந்தையவனைச் சார்ந்தே இருக்க, அவனோ மகளின் திருமண ஏற்பாட்டில் தன்னை பிணைத்துக் கொண்டு, மகளிடம் இன்னமும் சமாதானம் ஆகாமல், அவளையும் பார்க்காமல் தன்வேலைகளை செய்துகொண்டு இருந்தான்.

மகளைக் கண்டித்தவன் அடுத்தடுத்த காரியங்களை கவனிக்கும் தீவிரத்தில் மகளிடம் பேசுவதையும் தவிர்த்திருக்க, பொம்மி மனதளவில் மிகவும் நொறுங்கிப் போனாள்.

ஏற்கனவே தந்தையின் கண்டிப்பில் உள்ளம் சோர்ந்திருந்தவள், பேசுவதையும் குறைத்துக் கொண்ட தந்தையின் நடவடிக்கையில் சிந்தை முழுவதும் கலக்கம் கொள்ள, அதன் வெளிப்பாடு உடலில் காட்டி அவளை படுத்தி வைத்து.

உலகமே சூனியமானது போல் தன்அறையிலேயே முடங்கிக் கொண்டவளை அசலாட்சியும் தனது மனஉளைச்சலில் கவனிக்கவில்லை.திருமண வேலைகளை ஆரம்பித்த பிறகு விஸ்வாவின் அழைப்பு அந்த வீட்டில் அறவே நின்றுபோய் இருந்தது.

அசலாட்சியின் மனம் முழுவதும் விஸ்வாவிடம் இங்கே நடப்பதையும் பொம்மியைப் பற்றிய விஷயங்களையும் பகிர்ந்து விடவேண்டும் என்ற சிந்தனையே ஓடிக் கொண்டிருக்க, ரிஷபனிடம் அதற்காகவே தர்க்கமும் செய்து கொண்டிருந்தாள்.

“ஒருதடவ மாப்பிள்ளைய பார்த்து பேசிட்டு வந்துருவோம் பாவா!இல்லன்னா ரெண்டு பேரும் இதுக்குன்னு தனியா சண்டைபோட்டாலும் ஆச்சரியம் இல்ல” என்று இருவரையும் சரியாக கணித்துச் சொல்ல, ரிஷபனோ வீம்பு பிடித்தான்.

“எனக்கு கல்யாண வேலை ஊர் வேலைன்னு வரிசை கட்டிட்டு நிக்குது. உன் மாப்பிளைய நீயே போய் சமாதானம் பண்ணிக்கோ” என்று விட்டேற்றியாய்பேசினான்.

“உங்கள அங்கே வந்து பேச சொல்லல, எனக்கு துணையாதான் வரச் சொல்றேன்” இவளும் வாக்குவாதம் செய்ய,

“உன் பிள்ளைய கூட்டிட்டு போ! என்னை இதுல எல்லாம் கூட்டு சேர்க்காதே”ரிஷபன் பிடிகொடுக்காமல் நழுவினாலும் மனைவி அவனை விடவில்லை.

“மாப்ள கூட சமாதானமா பேசுன்னு உங்க பொண்ணுக்கு புத்தி சொல்லத் தெரியல, என்கூட சண்டைக்கு நிக்கிறீங்க. மகளோட சுத்தின சகவாசதோஷம் என்கிட்டயும் உங்கள தர்க்கம் பண்ணச் சொல்லுது” என்று விடாமல் பேசிவைக்க, இறுதியில் மனைவியுடன் சென்னைக்கு கிளம்பி விட்டான் ரிஷபன்.

ஏறக்குறைய பதினெட்டு வருடங்கள் கழித்து தன்னை அலைகழித்த மண்ணில் தடம் பதித்தவளுக்கு ஏனோ அன்றைய நாளின் தாக்கங்கள் மனதோடு உலாவர முயன்று அவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்தாள்.

எந்த மகளுக்காக இங்கிருந்து சென்றாளோ மீண்டும் அவளுக்காகவே இங்கு வந்திறங்கினாள். பேதையாய் அன்று சென்றவள், இன்றுகணவனின் துணையோடு எதையும் எதிர்கொள்ளும் மனத்துணிவோடுதான் விஸ்வாவை எதிர் கொண்டாள்.

அசலாட்சியின் எண்ணமெல்லாம் மகளுக்காக, தான்செய்த குற்றத்தையும் பொம்மியின் நிலையையும் சொல்லிவிடவேண்டும் என்பதே! அவள் என்னவென்று சொல்ல ஆரம்பிக்கும்போதே விஸ்வா அவளை தடுத்து,

“என்னை சமாதானப் படுத்தனும்னு இவ்ளோ தூரம் வந்திருக்க வேண்டிய அவசியமில்ல ஆண்ட்டி… என்னை பெத்தவங்கள எப்படி பாக்குறேனோ அத மாதிரிதான் உங்களையும் பாக்குறேன். சின்ன வயசுல பொம்மிக்கு எது நடந்திருந்தாலும் அது எனக்கு தேவையில்ல… இத நான் அன்னிக்கே அங்கிள்கிட்ட தெளிவு படுத்திட்டேன்” என்று சொல்லி ரிஷபனைப் பார்க்க,இருவரும் பூடகமாய் சிரித்தார்கள். அசலாவிற்கு இது புதிய செய்தி.

“பொம்மிய இவருக்குதான் குடுக்கபோறோம்னு முடிவெடுத்த உடனேயே நான், மாப்பிள்ளைய பார்த்து நடந்தத சொல்ல வந்தேன் சாலா… கொஞ்சநாள் தொடர்ந்து மனஉளைச்சலுக்கு மருந்து சாப்பிட்டுகிட்டு இருந்தான்னு சொல்லிட்டு அதுக்கான காரணத்தை சொல்ல நினைச்சேன். ஆனா இவர் அதெல்லாம் எனக்கு தேவையே இல்ல… உங்க பொம்மிய விட என்னோட பத்மி எதையும் சமாளிக்கிற தைரியசாலி. அப்படியிருக்க அவளோட கருப்பு பக்கம் அவளுக்கு மட்டுமில்ல எனக்குமே தெரியாம இருக்குறதுதான் எங்க எதிர்காலத்துக்கு நல்லதுன்னு ஒரே மூச்சில சொல்லி என்னை வாயடைக்க வச்சுட்டார்” என்று விஸ்வாவைப் பற்றி சிலாகித்துக் கூறினான் ரிஷபன்.

இதை கேட்டதும் அசலாட்சி அனுபவித்தது எல்லாம்  வரையறுக்க முடியாத ஆனந்தத்தைதான் எனலாம். இன்னதென்று தெரியாத உணர்ச்சிக் களிப்பில் உள்ளம் கூத்தாட ஆனந்தக் கண்ணீருடன் தன் இருகைகளை குவித்தே நன்றியை விஸ்வாவிற்கு தெரிவித்தாள்.

“இப்படியெல்லாம் செஞ்சு என்னை ஒதுக்கி வைக்க முடியாது ஆண்ட்டி. எப்போவும் அவகூட வம்பு வளர்த்தாவது சந்தோசமா வாழ நினைக்கிறேன் அதுக்கு உங்க ஆசீர்வாதமும் ஆதரவும் நிறையவே தேவைப்படுது உங்க மாப்பிள்ளைக்கு”சூழ்நிலையை இலகுவாய் மாற்றவென விஸ்வா பேசிட,

“நீங்க வளக்குற வம்பு ரொம்ப நல்லாவே வேலை செய்யுது தம்பி… எந்த நேரமும் அவ எதையோ பறிகொடுத்தவ மாதிரி தனக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறா. அதையெல்லாம் பாக்க எங்களுக்கு சக்தி இல்லை” என்று மகளின் நிலையை அசலாட்சி தெளிவாக விளக்கினாள்.

“இத்தனை வீம்பு அவகிட்ட எதுக்கு விஸ்வா?” என்று ரிஷபனும் பதிலுக்கு கேட்க,

“என் மனைவியா அவ வரும்போது எந்தவொரு தயக்குமும் அவளுக்கு இருக்ககூடாதுன்னுதான் கொஞ்சம் அடாவடியா அவக்கூட பழக ஆரம்பிச்சேன். நீங்க சொல்லாமலேயே அவளுக்கு என்ன நடந்திருக்கும்ன்னு என்னால யூகிக்க முடிஞ்சது. அது பத்தி பேசகூட நான் விரும்பல. ஆனா இந்த மாதிரி பெண்களுக்கு குடும்ப வாழ்க்கைன்னு வரும்போது பெருமளவு தயக்கமும் பயமும் வரும். அதையெல்லாம் என் பத்மிகிட்ட இருக்க கூடாதுன்னு நினைச்சுதான் அவள என்கூட நிறைய பேசவச்சேன். உடனே என் லவ் அக்செப்ட் பண்ணியிருந்தா காதல் வசனம் பேசி அவள என்னோட பத்மியா மாத்தியிருப்பேன். எங்கே? அவதான் எப்போவும் அப்பா அம்மா அண்ணன்னு சொல்லி என்னை இன்னமும் தூரமா வச்சுருக்காளே” என்று இயலாமையில் தளர்ந்தே தங்களின் நிலையை விளக்கி விட்டான் விஸ்வேந்தர்.

பொம்மி தன்னிடம் சொன்ன அத்தனை விளக்கத்தையும் அவள் பெற்றவர்களிடம் கூறிட, ஒரு தந்தையாய் ரிஷபனுக்கு தன்மகளை நினைத்து அத்தனை பெருமையாய் இருந்தது.

“என் பொண்ணு மனச அத்தன சீக்கிரத்தில ஜெயிக்க முடியுமா?” தந்தையாக மீசையை முறுக்கிக் கொள்ள,

“நான் ஜெயிச்சுட்டேன் அங்கிள். அவ மனசுல நான் இருக்குறதாலதானே அவ மனச என்கிட்ட வெளிச்சம் போட்டு காட்டியிருக்கா… இதுவும் ஒரு விதமான ப்ரோபோசல்தான். அவளோட நம்பிக்கைக்கு உரியவனா என்னை பாக்க ஆரம்பிச்சுட்டா. எனக்கு இதுவே போதும்”தன் வெற்றியை சுட்டிக் காட்டினான்.

விஸ்வா சொன்னதை ரிஷபனின் மனம் ஏற்றுக் கொண்டாலும் மகளை தவிக்க வைத்துக் கொண்டிருப்பவன் என்ற முறையில் அவன் மீது சற்றே கோபம் கொள்ள,“அப்புறம் எதுக்கு இன்னும் வம்ப வளர்த்து அவள கஷ்டபடுத்தணும்”ஒரு தந்தையாக அவனை கரித்துக் கொண்டே இருந்தவன், இறுதியில் கேட்டே விட்டான்.

“நான் உங்க பொண்ணு கிட்ட என் விருப்பத்த சொல்லியிருக்கேன், பதிலுக்கு அவள சொல்ல வைக்க வேணாமா?” என விஸ்வா சொல்ல,

“நீங்க இப்படியெல்லாம் பண்ணுவீங்கன்னு நான் நெனைக்கவே இல்ல தம்பி” என கலக்கமாக அசலா பேச,

“அதனால என்ன? இப்போ நினைங்க” தோள்களை குலுக்கி இலகுவாய் சொன்னான்.

“அவளுக்கு உங்கள பிடிக்கலன்னா கட்டாயப்படுத்தக்கூடாது அது தப்பு” பதிலுக்கு அசலாட்சியும் நியாயம் பேச,

“இது எங்க ரெண்டு பேருக்கும் இடையில நடக்குற விஷயம். எனக்கு பிடிச்ச பொண்ணுகிட்ட இருந்து ப்ரோபோசல் வரணும்னு எனக்கு ஆசை இருக்காதா?” என்று தன் உள்ளக் கிடக்கையை சொல்லிவிட,

‘அய்யோடா இவன் எதையும் லேசுல விடமாட்டான் போல, என் பொண்ணு கொஞ்சம் பாவம்தான்’ என்று நினைத்தது ரிஷபனே.

“ரொம்ப சந்தோஷம் தம்பி… ஆனாலும் நீங்க ஒரு முடிவுக்கு சீக்கிரம் வாங்க… கல்யாணத்தை பக்கத்தில வச்சுக்கிட்டு இப்படி ரெண்டு பெரும் முரண்டு பிடிக்கிறது நல்லதில்ல”என்று அசலாட்சியும் அறிவுரை கூறிவிட்டு, இருவரும் கிளம்பினர்.

 

கோபமும் ஒரு வகை

அன்பு தான்

அதை அனைவரிடமும்

காட்ட முடியாது…

நெருங்கியவரிடம் மட்டுமே

காட்ட முடியும்…

error: Content is protected !!