Manmo-19

Manmo-19

“ரிச்சர்ட்…. கிளம்பலாமா?” மித்ரா கேட்டுக் கொண்டிருக்கும் போதே கார்த்திக்கின் கார் அவர்கள் வீட்டின் முன் வந்து நின்றது.

“ஆ… ரெடி மேடம். போகலாம்.” ரிச்சர்ட்டும் வாசலுக்கு வந்தான். அப்போதுதான் கார்த்திக் உள்ளே நுழைந்து கொண்டிருந்தான்.

“வாங்க சார்.”

“ஹாஸ்பிடலுக்கா ரிச்சர்ட்?”

“ஆமா சார்… மேடமுக்கு இன்னைக்கு மன்த்லி செக்கப் இருக்கு.” அது வரை கலகலப்பாகப் பேசிக் கொண்டிருந்த மித்ரமதி கார்த்திக்கைக் காணவும் அமைதியாகி விட்டாள்.

“நானும் கூட வரட்டுமா ரிச்சர்ட்?”

“ரிச்சர்ட்… சீக்கிரமா வா. லேட் ஆகுது.” இது மித்ரமதி.

ரிச்சர்ட்டுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. அவன் கார்த்திக்கைச் சங்கடமாகப் பார்க்க, கார்த்திக் ‘போ’ என்பது போல் தலையை அசைத்தான்.

ரிச்சர்ட் நகர பாட்டி வீட்டு அம்பாசிடர் நகர்ந்து விட்டது. பாட்டி கோபமாக வீட்டினுள் இருந்து வெளியே வந்தார்.

“நீங்க கூடப் போகலையா பாட்டி?”

“நான் எதுக்கு? அவளுக்குத் தான் இப்போ எல்லாத்துக்கும் அந்த வெள்ளைக்காரன் இருக்கானே. மாசமா இருக்கிற பொண்ணு, கூட ஒரு மனுஷனைக் கூட்டிட்டு ஹாஸ்பிடல் போனா பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க? இது அவ புருஷன் ன்னு நினைக்க மாட்டாங்க?” இப்போது கார்த்திக்கின் முகம் கசங்கியது.

“நீங்க ரொம்ப இடம் குடுக்குறீங்க கார்த்திக். அது தான் அவ ஆடிப் பார்க்கிறா.”

“பாட்டி ப்ளீஸ்… கொஞ்சம் அமைதியா இருங்க. டாக்டர் சொன்னது மறந்து போச்சா? மித்ராவோட ப்ளட் ப்ரஷர் ஜாஸ்தியாகுதாம். இப்போ அப்படியாகுறது நல்லதில்லை பாட்டி. அவளை அவ போக்குலயே விட்டுருங்க. அவளுக்குப் புடிச்ச மாதிரி அவ இருக்கட்டும்.”

“கார்த்திக்! நீங்க பேசாம இங்கேயே வந்து தங்குங்களேன்.” பாட்டியின் கண்கள் கலங்கியது.

“வேணாம் பாட்டி. என்னைப் பார்த்தா மித்ரா கோபப்படுவா. அது அவளுக்கு நல்லதில்லை.”

“இன்னும் எத்தனை நாளைக்கு கார்த்திக்?”

“குழந்தை நல்லபடியா பொறக்கட்டும் பாட்டி. அப்புறமாப் பார்த்துக்கலாம்.” அதன்பிறகு பாட்டி எதுவும் பேசவில்லை. அமைதியாகிவிட்டார்.

டாக்டர் ஏற்கனவே இவர்களை எச்சரித்திருந்தார். மித்ரமதியின் இரத்த அழுத்தம் நாளுக்கு நாள் லேசாக ஏறிக்கொண்டிருந்தது. கர்ப்பமாக இருக்கும் நிலைமையில் அது அத்தனை நல்லது அல்ல என்பதால் கார்த்திக்கையும் அழைத்துப் பேசி இருந்தார்.

மித்ராவைக் கஷ்டப்படுத்தும் எதையும் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தி இருந்தார். அவள் மனது அமைதியாக இருக்க வேண்டும். அதுதான் இப்போது கார்த்திக் ற்கு முக்கியம்.

இது இங்கே இப்படி இருக்க… அங்கே அம்பாசிடரில் மித்ரமதி ரிச்சர்ட்டை எச்சரித்துக் கொண்டிருந்தாள்.

“கொஞ்சம் கவனமா இரு ரிச்சர்ட்.”

“ஏன் மேடம்?”

“உங்கூட நான் பேசினாலே உன்னோட கார்த்திக் சாருக்கு அவ்வளவு கோபம் வருது. இதுல அவர் வரட்டுமா ன்னு கேட்டும் நான் கண்டுக்காம உன்னோட வந்திருக்கேன். அவர் கோபமெல்லாம் உம்மேல தான் பாயும்.”

மித்ரமதி எச்சரிக்க ரிச்சர்ட் அமைதியாக இருந்தான். கொஞ்ச நேரம் போன பின் அவன் முகத்தில் லேசாக ஒரு புன்னகை மலர்ந்தது.

“என்ன ரிச்சர்ட் சிரிக்கற நீ?”

“மேடம்…” அவன் தயங்கினான்.

“சொல்லு ரிச்சர்ட்…‌ எதுக்குத் தயங்குற?”

“நம்ம கம்பெனியில இப்போ ரெண்டு ப்ராஜெக்ட் போய்க்கிட்டு இருக்கு.”

“ம்…”

“அமெரிக்கால இருக்கிற சாரோட பிஸினஸ் கூட ஏதோ சூடு பிடிச்சிருக்குன்னு கேள்விப்பட்டேன்.” ரிச்சர்ட் சொல்ல… இதையெல்லாம் என்னிடம் ஏன் சொல்கிறாய் என்பது போல பாத்திருந்தாள் மிர்தமதி.

“இது எதுக்குமே சம்பந்தம் இல்லாம இன்டியால வந்து உக்காந்திருக்காங்க கார்த்திக் சார்.”

“இங்க அவரை யாரும் கூப்பிடலை ரிச்சர்ட்.” கோபமாக அவள் சொல்ல ரிச்சர்ட் கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தான்.

“அமெரிக்கால இருக்கறதை மார்க் பாத்துக்கிறார் போல. நம்ம கம்பெனியை நான் தான் பார்த்துக்கிறேன் மேடம்.” இப்போது மித்ரமதி எதுவும் பேசவில்லை. ரிச்சர்ட் ஏதோ சொல்ல வருவது புரிந்தது. அமைதியாகி விட்டாள்.

“உங்க இன்விடேஷன் வந்தப்போ… எனக்கு லண்டனை விட்டு அசையுற ஐடியாவே இல்லை மேடம்.” மித்ரமதியின் நெற்றி இப்போது சுருங்கியது.

“ஆனா கார்த்திக் சார் விடலை.”

“என்ன பண்ணினார்?” அவசரமாக வந்தது அவள் குரல்.

“எனக்கு டிக்கெட் போட்டு… வீசா ஏற்பாடு பண்ணி… எல்லாமே பண்ணினாங்க.”

“ஏன்?” ஒற்றைக் கேள்வி. ஆனால் ஓராயிரம் எதிர்பார்ப்புகள் அதில் இருந்தது. இதுவரை கைவிரல் நகங்களை ஆராய்ந்த படி பேசிக் கொண்டிருந்த ரிச்சர்ட் மித்ரமதியை நிமிர்ந்து பார்த்தான்.

“தெரியலை… நீ கண்டிப்பா போ ரிச்சர்ட் ன்னு சொன்னாங்க. மித்ரா தனியா இருக்கா. ஃப்ரெண்ட்ஸ் யாருமே அங்க இல்லை அவளுக்கு. நீ போனா அவளுக்கு ஆறுதலா இருக்கும் ன்னு சொன்னாங்க.”

“இப்போ என்னால நகர முடியாதே சார் ன்னு கூடச் சொன்னேன்.” மித்ரா பேசும் ரிச்சர்ட்டையே பார்த்திருந்தாள்.

“இப்போ எனக்கு இது முக்கியமில்லை. நான் சொல்லுறதை நீ செய் ன்னு கோபமாச் சொன்னாங்க.” அதற்கு மேல் ரிச்சர்ட் எதுவும் பேசவில்லை.

மித்ரமதி சிந்தனையில் ஆழ்ந்து போனாள். இந்தக் கார்த்திக் எப்போதிருந்து இத்தனை நல்லவன் ஆனான். நம்ப முடியவில்லையே! குழந்தை என்று வந்து விட்டால் முள்ளும் மலராகுமோ!

இல்லையென்றால் தொழில் அத்தனையையும் அங்கே போட்டு விட்டு எப்படி இவனால் இங்கே உட்கார்ந்திருக்க முடிகிறது?

அதுவும்… அமெரிக்க நேரம், லண்டன் நேரம், இந்திய நேரம்… எப்படி இவனால் இந்த மூன்றிற்கும் ஈடு கொடுக்க முடிகிறது?

ஒருவேளை குழந்தை பிறந்து விட்டால் பழிவாங்கும் படலத்தை மீண்டும் ஆரம்பிப்பானோ?

ஆனால் மித்ரமதி டாக்டரிடம் போன போது கார்த்திக்கைப் பிடி பிடியென்று பிடித்து விட்டார் டாக்டர்.

“கார்த்திக் வரலையா மித்ரா?” டாக்டர் சாவித்திரிப் பாட்டிக்கு வேண்டப்பட்டவர் என்பதால் உரிமையாகக் கண்டித்தார்.

“அது டாக்டர்… கொஞ்சம் வேலை இருந்தது…”

“அப்படி என்ன வேலை அவருக்கு? பொண்டாட்டியை விட முக்கியமா? அன்னைக்கு மெனக்கெட்டுக் கூப்பிட்டு அவ்வளவு பேசி இருக்கேன் புரிய வேணாம்?” டாக்டர் கார்த்திக் மேல் பாய மித்ரமதிக்குச் சங்கடமாகப் போய்விட்டது.

‘அதுதான் இன்னைக்கு ஓடி வந்தானா? அடேங்கப்பா! ரொம்பவே அக்கறையுள்ள புருஷன் மாதிரி நல்ல நடிப்புத்தான்!’ மித்ரமதி யோசனையாக ரிச்சர்ட்டைப் பார்க்க உன் சிந்தனையின் போக்கு தவறு என்பது போல மித்ராவைப் பார்த்திருந்தான் ரிச்சர்ட்.

******

அத்தனை பேரும் ஹாஸ்பிடலில் கூடி இருந்தார்கள். லதா சித்தி முகத்தில் பதட்டம் குமிந்து கிடந்தது. பார்கவி அமைதியாகவே நின்றிருந்தாள்.

அன்று நந்தகுமாருக்குக் கண் ஆபரேஷன். ஆறு மாதங்கள் கழித்துப் பண்ணலாம் என்று சொல்லியிருந்த டாக்டர் அவசர அவசரமாகத் தேதியைக் குறித்து விட்டார்.

ஒரு பிரபல மருத்துவரின் இந்திய விஜயம் இவர்களுக்குச் சாதகமாக அமைய நந்தகுமாரின் குடும்பமும் மகிழ்ந்து போனது. இது ஆண்டவனின் அனுக்ரஹம் இல்லையா!

கார்த்திக்கின் ஃபோன் சிணுங்கியது. பாட்டி அழைத்துக் கொண்டிருந்தார். அவசரமாக அழைப்பை ஏற்றான். இவன் பேசும் முன்பே பாட்டியின் குரல் வந்தது.

“கார்த்திக்… உங்க பொண்டாட்டியை என்னால சமாளிக்க முடியலை. நீங்களாச்சு… அவளாச்சு… என்னை விடுங்க.”

“என்னாச்சு பாட்டி?”

“ஹாஸ்பிடலுக்கு அவளும் கிளம்பி வரப்போறாளாம்.”

“ஐயையோ! எதுக்கு? இங்க லதாச்சித்தி எல்லாரும் இருக்காங்க பாட்டி.”

“எனக்கு அது புரியுது. இந்த முட்டாளுக்குப் புரியலையே. என்னாலதான் அந்தப் பையனுக்குப் பார்வை போச்சு ன்னு எல்லாரும் என்னோட வாழ்க்கையைப் பந்தாடினாங்க ன்னு என்னென்னமோ பினாத்துறா.”

கார்த்திக் கண்களை ஒரு கணம் இறுக மூடிக் கொண்டான். தான் விதைத்தது தன்னைத் தொடர்கிறது என்று புரிந்து கொண்டான்.

“நான் இதோ கிளம்பி வர்றேன் பாட்டி.” அவன் சொல்லிவிட்டு அவசரமாகக் கிளம்பவும் ஹாஸ்பிடலில் நின்றிருந்த அத்தனை பேரும் இவனை ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.

பத்தே நிமிடத்தில் மித்ரமதியின் முன்னால் நின்றான் கார்த்திக். தன் பெரிய வயிற்றைக் கையால் அணைத்தபடி கிளம்பிக் கொண்டிருந்தாள் பெண்.

“ரிச்சர்ட்… நீ எங்கூட வர்றியா இல்லையா?”

“ஏன்டீ… நான் இவ்வளவு சொல்லுறேன்… நீ எங்க கிளம்புறே?” பாட்டியின் கோபக் குரல் காரலிருந்து இறங்கும் போதே கார்த்திக் ற்குக் கேட்டிருந்தது.

பாட்டியும் பேத்தியும் பெரிய வாக்குவாதத்தில் இருக்கிறார்கள் என்று நினைத்தடி தான் உள்ளே வந்தான் கார்த்திக்.

“மித்ரா! இப்போ எங்க கிளம்புற?”

“ரிச்சர்ட் நீ வா.” இவனை அலட்சியப் படுத்தியபடி ரிச்சர்ட்டை அழைத்தவளைக் கைப்பிடித்துத் தடுத்தான் கார்த்திக்.

“சொன்னாப் புரிஞ்சுக்கோ. இப்போ நீ அங்க போனா வீணான வாக்குவாதங்கள் வரும். உம் மனசு காயப்படும்.”

“நீங்க காயப்படுத்தினதை விடவா மிஸ்டர்.கார்த்திக்?” நேருக்கு நேராக அவன் கண்களைப் பார்த்து அவள் கேட்ட போது அவன் கண்கள் பளிச்சிட்டது.

‘பேசு… திட்டினாலும் பரவாயில்லை. அதற்காகவாவது என்னோடு பேசு. அடிக்கத் தோன்றினால் என்னை நாலு அடி போடு. நீயாகக் கொடுக்கும் உன் ஸ்பரிசம் என்னை அத்தனை மகிழ்விக்கிறது.’ மனதோடு பேசிக் கொண்டான் கார்த்திக்.

“தப்புதான் மித்ரா. அதுக்காக நான் இப்போ என்ன பண்ணணும் மித்ரா? உங்கால்ல விழுந்து மன்னிப்புக் கேக்கட்டுமா?” சொன்னதோடு நிறுத்தாமல் யாரும் எதிர்பாராத படி மித்ராவின் காலில் விழுந்தான் கார்த்திக்.

பாட்டியும் ரிச்சர்ட்டும் பதறிப் போனார்கள். தேவகி கண்ணீர் விட்டார். ஆனால் கார்த்திக் எதையும் பொருட்படுத்தவில்லை.

“என்னை மன்னிச்சிடு. நான் பண்ணினது எல்லாமே தப்புத் தான். எனக்குப் புரியுது. அதுக்காக என்னை இப்போ பழிவாங்க நினைக்காத மித்ரா. நம்ம குழந்தை நல்லபடியாப் பொறக்கணும். அதுக்கப்புறமா நீ என்ன தண்டனை வேணும்னாலும் எனக்குக் குடு. நான் தாங்கிக்கிறேன். ஆனா இப்போ நான் சொல்லுறதைக் கேளு.”

“பா…ட்டி…” கார்த்திக் பேசிக் கொண்டிருக்கும் போதே மித்ராவின் குரல் நலிந்த படி வந்தது.

“என்னாச்சு மித்ரா?” பாட்டியும் தேவகியும் பதறியபடி ஓடி வர… கார்த்திக் ஸ்தம்பித்துப் போனான்.

“லேசா… வலிக்குது…” இடுப்பைப் பிடித்தபடி மித்ரா தடுமாறினாள்.

“இப்படி முதல்ல நீ உக்காரு. தேவகி, போய்க் கொஞ்சம் கஷாயம் போடு. வாய்வுக் கோளாறா இருக்கப் போகுது. நீ ஒன்னும் வித்தியாசமாச் சாப்பிடல்லையே தங்கம்.” பாட்டி பேசிக் கொண்டிருக்கும் போதே மித்ராவின் முகம் மீண்டும் வலியைக் காட்டியது.

“பாட்டி, ஹாஸ்பிடல் போகலாம். மித்ரா முகம் அவ்வளவு நல்லா இல்லை.”

“தேவையில்லை கார்த்திக். இப்போ தானே எட்டாவது மாசம் ஆரம்பிச்சிருக்கு. இது சும்மா வர்ற வலிதான். நீங்க பயப்படாதீங்க.”

ஆனால் சாவித்திரி சொன்னதைப் போல வலி அத்தனை சீக்கிரத்தில் நிற்கவில்லை. மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே போக பாட்டியே பயந்து விட்டார்.

மித்ராவால் எழுந்து நடக்கக் கூட முடியவில்லை. அவள் வேதனை பார்த்து கார்த்திக் அவளைத் தாங்கிக் கொண்டான். அவன் ஷர்ட் காலரை அவள் பற்றிய விதமே அவள் அனுபவித்துக் கொண்டிருக்கும் வலியின் அளவைக் கணவனுக்குச் சொன்னது.

“ரிச்சர்ட்! காரை எடு!” கார்த்திக் காரின் கீயைத் தூக்கிப் போட அந்த ப்ளாக் ஆடி ஹாஸ்பிடல் நோக்கிப் பறந்தது.

பாட்டி ரிச்சர்ட்டுக்கு வழிகாட்டியபடி முன்னால் இருக்க, மித்ரமதியோடு பின் சீட்டில் அமர்ந்திருந்தான் கார்த்திக். மனைவியை மார்போடு அணைத்தபடி அவன் இருக்க மகளின் கால்களை மடிதாங்கிக் கொண்டார் தேவகி.

ஹாஸ்பிடலில் இவர்களைப் பார்த்த டாக்டர் திகைத்துப் போனார்.

“என்னாச்சு சாவித்திரி?”

“திடீர்னு வலிக்குது ன்னு சொல்றா டாக்டர்.” பாட்டி அழவும் டாக்டர் எதுவும் வாக்குவாதம் பண்ணவில்லை. மித்ராவின் ஃபைலைப் புரட்டியவர் வாரங்களின் எண்ணிக்கையைத் தான் முதலில் பார்த்தார். முப்பத்திரெண்டு என்றது.

நேரடியாக லேபர் ரூமிற்கே மித்ரமதி கொண்டு செல்லப்பட்டாள். எல்லோருக்கும் அதிர்ச்சியாகிப் போனது. இப்போது தானே எட்டாவது மாதம்? அப்படியென்றால்… மேலே சிந்திக்க யாருக்கும் தைரியம் இருக்கவில்லை.

சிறிது நேரம் கழித்து ரூமை விட்டு வெளியே வந்த டாக்டர் இவர்கள் மீது தான் பாய்ந்தார்.

“ப்ரஷர் ஹை ல இருக்கு. எத்தனை தடவை உங்க கிட்டச் சொன்னேன் சாவித்திரி. உங்களுக்கு அப்படியென்ன பிஸினஸ் கார்த்திக், பொண்டாட்டியை விட முக்கியமா?”

“டாக்டர்… நீங்க என்ன சொல்றீங்க? இப்போ தானே எட்டாவது மாசம் ஆரம்பிச்சிருக்கு?”

“ஒரு சில விஷயங்கள் சிக்கலாகும் போது பத்து மாசம் வரைக்கும் குழத்தை பொறுமையா உள்ளேயே இருக்காது சாவித்திரி.”

“அப்படீன்னா…” பாட்டி உறைந்து போக தேவகி அழவே ஆரம்பித்து விட்டார்.

“இப்போ அழுது எந்தப் பிரயோஜனமும் இல்லை. கார்த்திக்… நீங்க எங்கூட வாங்க.” டாக்டர் கார்த்திக்கை கையோடு மித்ரா இருந்த ரூமிற்கு அழைத்துச் சென்றார்.

ஹாஸ்பிடல் உடைக்கு அவளை மாற்றி இருந்தார்கள். கொஞ்சம் இடைவெளி விட்டு விட்டு வலி வந்து கொண்டிருந்தது. அவள் கோலம் பார்த்துக் கார்த்திக் அழுது விட்டான்.

“ஹேய் கார்த்திக்! என்ன இது?” டாக்டர் சிரிக்கவும் கண்களைத் துடைத்துக் கொண்டான்.

“என்ன டாக்டர் இப்படி கஷ்டப்படுறா?”

“பின்னே… நீங்க பெருமையாப் பொண்டாட்டி மார்க்கிட்ட ‘என்னோட வாரிசு டீ’ ன்னு பீத்திக்கிற புள்ளையை அவங்க இவ்வளவு கஷ்டப்பட்டுத் தான் பெத்துக் குடுக்கிறாங்க.”

“டாக்டர்!”

“அதை விடுங்க கார்த்திக். இப்போ நிலைமை என்னன்னா… தெர்ட்டி டூ வீக்ஸ் லயே பெயின் வந்திருக்கு.”

“அதான் எப்படி டாக்டர்?”

“ப்ரெக்னன்ட்டா இருக்கும் போது எங்கேயாவது விழுந்தா, இல்லைன்னா அம்னியோன் இன்ஃபெக்ஷன் ஆச்சுதுன்னா… வீட்டுல ஏதாவது பிரச்சினை… லைக் ஸ்ட்ரெஸ்… ஹை ப்ளட் ப்ரஷர்… இதெல்லாம் ப்ரிமேச்சருக்குக் காரணம்.”

“டாக்டர்!”

“பேஷன்ட்ஸ் கிட்ட நான் எதையும் மறைக்க விரும்புறதில்லை கார்த்திக். இதுதான் இப்போதைய சிட்டுவேஷன்.”

“எனக்கு மித்ரா முக்கியம் டாக்டர்!” கார்த்திக் மீண்டும் அழுதான்.

“அப்போ பேபி வேணாமா?” டாக்டர் இப்போது சிரித்தார்.

“வேணாம் டாக்டர். எனக்கு மித்ரா மட்டும் போதும். டாக்டர் ப்ளீஸ்…”

“ஐயோ கார்த்திக்! நீங்க பயப்படுற அளவுக்கு ஒன்னுமே இல்லை.” இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே குழந்தையின் ஹார்ட் பீட் மானிட்டரில் லேசாக இறங்கியது.

“டாக்டர்… பேபியோட ஹார்ட் பீட்டைப் பாருங்க.” பக்கத்தில் நின்றிருந்த நர்ஸ் சொல்லவும் டாக்டர் கொஞ்சம் பதட்டமானார்.

“டாக்டர்… எனக்கு… பேபி தான்… முக்கியம்.” திக்கித் திணறினாள் மித்ரமதி.

“கார்த்திக்… நான் மேக்ஸிமம் நார்மல் டெலிவரிக்குத் தான் ட்ர்ரை பண்ணுவேன். ஆனா பேபியோட ஹார்ட் பீட் வித்தியாசமா இருக்கு. இன்னும் கொஞ்ச நேரம் பார்க்கலாம். திருப்தியா இல்லைன்னா சி செக்ஷன் தான். உங்களுக்கு ஓகே வா?”

“டாக்டர் என்ன வேணும்னாலும் பண்ணுங்க. எனக்கு என்னோட மித்ரா முக்கியம்.”

“டாக்டர்… பேபி…” அவள் ஆரம்பிக்கும் போதே இன்னுமொரு வலி வர…

“கா…ர்த்தி…க்” அவள் குரல் அரற்றியது… அந்தக் கை அவனுக்காக நீண்ட நாட்களுக்குப் பிறகு நீண்டது.

பற்றிக் கொண்டான். அந்தக் கையைப் பற்றிக் கொண்டான் கணவன்.

“கார்த்திக்… எனக்குப் பயமா இருக்கு…” அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது.

“ஒன்னுமில்லை டா… ஒன்னும் ப்ராப்ளம் இல்லை…” கார்த்திக் அவளைச் சமாதானப் படுத்த, பக்கத்தில் நின்றிருந்த நர்ஸ் புன்னகைத்தார்.

‘இது போல நான் எத்தனை பார்த்திருப்பேன்.’ என்றது அவர் முகம். கார்த்திக்கும் பெயருக்குப் புன்னகைத்தான்.

“கார்த்திக்… இதுல ஒரு சைன் பண்ணுங்க.”

“என்ன டாக்டர் இது?” கார்த்திக்கின் முகம் பயத்தில் வெளுத்துப் போனது.

“உங்க வொய்ஃபையும் குழந்தையையும் பத்திரமா உங்ககிட்டத் திருப்பிக் குடுத்தா, உங்க சொத்து முழுசும் எனக்கு. என்ன கார்த்திக்? டீல் ஓகே வா?” டாக்டர் கேலி பண்ண நர்ஸ் சிரித்தார்.

மேலோட்டமாகப் படித்த கார்த்திக் மளமளவென்று கையொப்பம் இட்டான். ஹாஸ்பிடல் விதிமுறைகள் பற்றிய பத்திரம்.

“மித்ரா… நீங்க வொர்ரி பண்ணிக்கிற மாதிரி ஒன்னும் இல்லை. அட்லீஸ்ட் தெர்ட்டி சிக்ஸ் வீக்ஸ் ன்னாக் கூட ஓகே. இப்போ தெர்ட்டி டூ ங்கிறதால உடனேயே நீங்க பேபியை வீட்டுக்குக் கொண்டு போக முடியாது. கொஞ்ச நாள் ஹாஸ்பிடல்ல தான் இருக்க வேண்டி வரும். பேபி நல்ல கன்டிஷனுக்கு வந்துடுச்சு ன்னு டாக்டர்ஸ் சொன்னதுக்கு அப்புறமா தாராளமா நீங்க வீட்டுக்கு பேபியைக் கொண்டு போகலாம்… சரியா?”

“ம்…” மித்ராவின் குரல் ஹீனமாக வந்தது.

“கார்…த்திக்… நந்த… குமார்…” அவள் திணறவும் அவள் வாயைத் தன் கையால் மூடினான் கார்த்திக். அதை விலக்கிவிட்டு மீண்டும் அவள் பேச ஆரம்பிக்க… அப்போது இன்னொரு வலி அவளைத் தாக்கியது.

“நீங்க… அங்க போங்க. இப்போ… நீங்க அங்க… இருக்கணும்…”

“நான் எங்க இருக்கணும்னு எனக்குத் தெரியும் மித்ரா… ப்ளீஸ்…”

“இல்லை… கார்த்திக்… நீங்க…”

“எனக்கு உன்னை விட அந்த நந்தகுமார் பெரிசில்லை. நீ கொஞ்சம் நிறுத்துறியா!” கார்த்திக் தன்னை மறந்து வெடித்திருந்தான்.

“எனக்கு யாருமே வேணாம். நீ மட்டும் போதும். ஜென்மத்துக்கும் இனி இன்னொரு குழந்தை வேணாம். பட்டது எல்லாம் போதும்!” அவன் மீண்டும் வெடிக்க மித்ரா அமைதியாகி விட்டாள். மேலே பேச டாக்டரும் அனுமதிக்கவில்லை.

“கார்த்திக்! இதுக்கு மேலயும் நான் தாமதிக்க விரும்பலை. அது பேபிக்கு ஆபத்தா முடிஞ்சிரும். சிசேரியன் தான் பெட்டர் ன்னு எனக்குத் தோணுது.” டாக்டர் சொல்லி முடிக்க அவர் கைகளைப் பிடித்துக் கொண்டான் கார்த்திக்.

“டாக்டர்! இப்பவும் சொல்றேன். எனக்கு மித்ரா தான் முக்கியம். எந்த சிட்டுவேஷன்லயும் இதை மறந்திடாதீங்க.” கார்த்திக் இப்போது குலங்கி அழுதான். டாக்டர் ஒரு புன்னகையோடு அவனைத் தட்டிக் கொடுத்தார்.

“அதுக்கு வாய்ப்பே இல்லை கார்த்திக். ப்ரிமேச்சர் இப்போ சாதாரணமா ஆகிப்போச்சு கார்த்திக். நத்திங் டு வொர்ரி.”

“டாக்டர்…”

“சொல்லுங்க மித்ரா.”

“கார்த்… திக்… எங்கூ…டவே…”

“ஐயையோ! தியேட்டருக்கா? நோ வே!” அவர் சிரிக்க, கார்த்திக்கும் சங்கடமாக மனைவியைப் பார்த்தான். அவள் கண்கள் அவனைத்தான் பார்த்தபடி இருந்தது.

தியேட்டருக்கு அவளை அழைத்துச் செல்ல அனைத்து ஆயத்தங்களும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. கார்த்திக் மனைவியின் அருகே வந்தான்.

“பேபி…” அவள் முகத்துக்கு அருகே அவன் குனிந்து சொல்ல, அவள் கண்களை மூடிக் கொண்டாள்.

தன் மீது காதலை அள்ளிக் கொட்டிய குரல். போதையாகத் தன்னை அழைத்த அதே குரல். இன்று அன்பை மட்டுமே தாங்கி நின்றது.

அவள் மூடிய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. அதைத் தன் உதடுகளால் ஒற்றினான் கார்த்திக்.

“பேபி… நான் வெளியே வெயிட் பண்ணுறேன். எங்கிட்ட நீ முழுசா வந்து சேரணும். உனக்கு எம்மேல என்ன கோபம் இருந்தாலும்…” அதற்கு மேல் கார்த்திக்கும் பேசவில்லை. மித்ரமதியும் பேசவில்லை.

“அவங்களை விடுங்க கார்த்திக்.” தியேட்டர் வரை அவள் கையைப் பற்றிய படியே வந்தவனை நிறுத்தினார் டாக்டர்.

கார்த்திக் அவளையே பார்த்தபடி நின்றிருந்தான். அவள் கண்களும் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தது.

அந்தக் கதவுகள் மூடிக்கொள்ள உடைந்து உட்கார்ந்தான் கார்த்திக். தன்னிடமிருந்து யாரோ எதையோ மொத்தமாய் உருவிக் கொண்டது போல ஒரு உணர்வு.

குழந்தை மறந்து போனது. குழந்தை போல தன்னை ஒட்டிக் கொள்ளும் அவள் மட்டுமே இப்போது நினைவை நிறைத்திருந்தாள்.

இவள் இல்லாமல் தனக்கொரு வாழ்க்கையா? இந்தப் பெண்ணையா அன்றொரு நாள் அத்தனை உதாசீனமாக நான் பார்த்தேன்!

எப்போது எனக்குள் முக்காலி போட்டு உட்கார்ந்தாள் இவள்? மனம் முழுவதும் முகாமிட்டு அமர்நது கொண்டாளே!

காரணமே தெரியாமல் அவன் கண்கள் கண்ணீர் வடிக்கக் குலுங்கி அழுதான் கார்த்திக். ஒரு கை அவன் தோள் தொட சட்டென்று நிமிர்ந்து பார்த்தான். பத்மா நின்றிருந்தார்.

error: Content is protected !!