Manmo 4

முழங்காலைத் தொட்ட கறுப்பு நிற உடையில் இருந்தாள் மித்ரமதி. அவள் நிறத்திற்குக் கறுப்பு எப்போதுமே எடுப்பாக இருக்கும்.

வெல்வெட்டால் ஆன உடை அவள் வளைவு நெளிவுகளுக்கு ஏற்றாற் போல் வளைந்து கொடுத்திருந்தது. கொஞ்சம் சிரத்தை எடுத்து அலங்காரம் பண்ணி இருந்தாள்.

ஒரு கையில் ஒற்றை வரிசையில் கற்கள் பதித்த மெல்லிய பிரேஸிலெட். கழுத்திலும் காதிலும் கூட மெல்லிய நகைகள். அவள் அசையும் போது மட்டும் தங்கள் இருப்பைக் காட்டின.

முகத்திலும் லேசான ஒப்பனை. ஒரு சில நொடிகள் பார்த்தாலும் மனதில் ஒட்டிக் கொள்ளும் அந்த முகம்.

காரை ஸ்டார்ட் செய்தாள் பெண். பார்கவியின் குரலுக்காக மனம் ஏங்கியது. ரேடியோவை உயிர்ப்பிக்க ஏதோ ஒரு பாடல் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. இன்று பத்து நிமிடங்கள் இவள் தாமதம் என்பதால் நிகழ்ச்சி ஏற்கெனவே ஆரம்பமாகி இருந்தது.

மனதின் சோர்வு உடம்பைப் பாதித்ததோ என்னவோ, இன்றைக்கு மித்ரமதி ஸ்லோ மோஷனில் தான் ரெடியாகினாள். தேவகிக்கும் என்ன புரிந்ததோ, மகளை எதுவும் கேட்கவில்லை.

இன்று அவர்கள் கம்பெனி கைமாறுகிறது. புது முதலாளி இன்றைக்குத் தான் முதல்முதலாகக் கம்பெனிக்கு வருகிறார்.
உத்தியோக பூர்வமாக எல்லாம் நடந்தேறிவிட்டது. பத்திரங்களும் கையெழுத்திடப்பட்டு கைமாறியாகிவிட்டது.
இன்று முதல் மித்ரமதி எஸ் டி கன்ஸ்ட்ரக்ஷனில் ஒரு தொழிலாளி.

‘கார்த்திக் ஹரிகிருஷ்ணா’ வாம். சக்திவேல் மாமா சொல்லி இருந்தார். திவாகர் மாமா மூலமாக அறிமுகம் நடந்திருந்தாலும் அனைத்தையும் சக்திவேலே முன்னின்று செய்தார்.

பங்குதாரர்களில் மித்ரமதியும் ஒருவர் என்பதாலும் அவள் இந்த ஏற்பாட்டிற்கு முற்று முழுதாகச் சம்மதிக்கவில்லை என்பதாலும் திவாகரை எந்த இடத்திலும் சக்திவேல் முன்னிறுத்தவில்லை.

திவாகரின் கூரிய நாக்கு மித்ரமதியைப் பதம் பார்த்துவிடும் என்பதால் ஒவ்வொரு அடியையும் சக்திவேலே எடுத்து வைத்தார்.

மித்ரமதிக்கும் எத்தனையோ ஆறுதல் சொன்னார். தினகரும் கொஞ்சம் கவலையோடேயே தான் நடமாடினார். ஆனால் திவாகர் மட்டும் முதலுக்கு மோசம் வராதவரை சந்தோஷம் என்பது போலவே நடந்து கொண்டார்.

“கிட்டாதாயின் வெட்டென மற ன்னு நம்ம ஊர்ல எல்லாம் ஒரு பழமொழி சொல்லுவாங்க நேயர்களே! அது ஔவையோட மொழி.”

திடீரெனப் பாடல் நின்று பார்கவி பேச ஆரம்பிக்கவும் கவனம் கலைந்தாள் மித்ரமதி.

“ஒரு விஷயம் நமக்கு இல்லைன்னு முடிவாகிருச்சுன்னா அதைச் சட்டுன்னு தூக்கித் தூரப்போட்டிருங்க. இந்த உலகத்துல ஏதோ ஒன்னு நமக்குக் கிடைக்கணும்னு விதிச்சிருந்தா அதைத் தடுக்கிறவங்க யாரும் கிடையாது. அது எப்படியாவது நம்ம கிட்ட வந்து சேரும். அது மாதிரித்தான் போறதும். அதையும் தடுக்க முடியாது.”

மித்ரமதிக்கு லேசாக நடுங்கியது. இதுபோல சந்தர்ப்பங்கள் அமைவது அரிது. நமக்கு ஏதாவது பிரச்சினையோ கவலையோ இருக்கும் போது நாம் பார்க்கும் கேட்கும் ஏதாவது ஒரு விஷயத்தில் அதற்கான தீர்வு இருக்கும்.

அமைதிக்கு அலையும் சந்தர்ப்பங்களில் ஒரு புத்தகத்தைப் புரட்டினால் நமக்கென்றே எழுதியது போல நான்கு வரிகள் இருக்கும். இப்போதும் அப்படித்தான் உணர்ந்தாள் மித்ரமதி.

என் சஞ்சலம் இதுதான் என்று இத்தனை மைல்களுக்கு அப்பால் இருக்கும் பார்கவிக்கு யார் சொன்னது? என்னைத் தேற்றுவது போலவே இந்தப் பெண்ணுக்கு இன்றைக்குப் பேசச் சொல்லி யார் கட்டளை போட்டது?

“ஒரு மனுஷன் கிட்ட இருக்கிற ஐஷ்வர்யங்களுக்கு ஏன் ‘செல்வம்’ ன்னு பெயர் வந்தது தெரியுமா நேயர்களே? அது சதா நம்மை விட்டுட்டுச் ‘செல்வோம்’ ‘செல்வோம்’ ன்னு சொல்லிக்கிட்டே இருக்குமாம். நான் நிலையில்லாத பொருள் ன்னு அது நமக்கிட்ட சொல்லுது. ஆனா நாம தான் அதைப் புரிஞ்சுக்கிறதே இல்லை.”

இதைப் பார்கவி சொல்லும் போது மித்ரமதி விக்கித்துப் போனாள். எத்தனை தெளிவு இந்தப் பெண்ணிடம்!
“அதனால இப்போ இந்த நிமிஷம் என்னோட இணைஞ்சிருக்கிற என்னோட நேயர்கள் யாரா இருந்தாலும் உலகத்துல எந்த மூலையில இருந்தாலும் கவலைகளைத் தூக்கித் தூரப் போட்டுட்டு அழகான ஒரு புன்னகையோட உங்க வேலைகளைத் தொடருங்க. இப்போ வரப்போற பாட்டும் உங்களுக்குப் புதுத் தெம்பைக் குடுக்கும் நேயர்களே. தொடர்ந்து என்னோட இணைஞ்சிருங்க. இதோ உங்களுக்காகப் பாடல் வருகிறது. இது நூற்றியிரண்டு புள்ளி ஐந்து தென்றல் எஃப் எம்.’
பெண் பேசி முடிக்க ‘படையப்பா’ திரைப்படத்திலிருந்து ‘வெற்றிக் கொடி கட்டு’ பாடல் ஒலிபரப்பாகியது. மித்ரமதி நிமிர்ந்து உட்கார்ந்தாள்.

அன்று ஆஃபீஸே கொஞ்சம் பரபரப்பாகப் தான் இருந்தது. ரிச்சர்ட்டும் அன்று ஃபுல் ஃபோர்மல் ட்ரெஸ்ஸில் வந்திருந்தான். அவன் கட்டுமஸ்தான தேகத்திற்கு அந்த ஆடைத் தெரிவு சூப்பராகத்தான் இருந்தது.

மித்ரமதி முயன்று தன்னை இயல்பாகக் காட்டிக் கொண்டிருந்தாள். எல்லோரையும் ஏமாற்ற முடிந்தவளால் ரிச்சர்ட்டை ஏமாற்ற முடியவில்லை.

“மேடம் காஃபி.” அவள் முன் காஃபியை வைத்தவன் அந்தக் கண்களை ஆழ்ந்து பார்த்தான். செயற்கையாகப் புன்னகைத்தாள் மித்ரமதி. அவன் தன்னைக் கண்டு கொண்டது இதமாக இருந்தது.

“ரிச்சர்ட்…”

“திஸ் இஸ் லைஃப் மேடம். ஏத்துக்கோங்க. இன்னும் பார்க்க நிறைய இருக்கு. இதுக்கே சோர்ந்து போனா எப்படி?”

“எனக்கும் புரியுது… ரிச்சர்ட்…”

“காஃபியைக் குடிச்சிட்டு ஃப்ரெஷ்ஷா வாங்க மேடம். இன்னும் கொஞ்ச நேரத்துல எல்லாரும் வந்திடுவாங்க.”

“ம்…” மித்ரமதி பானத்தை அருந்த ஆரம்பிக்க அவளையே ஒரு கணம் பார்த்த ரிச்சர்ட் வெளியே போனான்.
கான்ஃபரென்ஸ் ஹாலில் எல்லோரும் கூடியிருந்தார்கள். சக்திவேல், தினகர், திவாகர், அத்தோடு ஊழியர்கள் என எல்லோரும் அழைக்கப்பட்டிருந்தார்கள்.

சரியாகப் பத்து மணிக்கு கார்த்திக் ஹரிகிருஷ்ணா அந்த ஹாலுக்குள் மார்க் சகிதம் நுழைந்தான். சக்திவேல் தான் வாசல் வரை சென்று வரவேற்று அழைத்து வந்திருந்தார்.

இவர்கள் கம்பெனியில் வேலை செய்யும் பெண் ஒருத்தி அழகானதொரு பூமாலை அணிவித்து இந்தியக் கலாச்சார முறைப்படி கார்த்திக்கை வரவேற்றிருந்தாள்.

புன்னகை முகமாக ஹாலின் உள்ளே நுழைந்தவனை தினகரும் திவாகரும் வரவேற்றார்கள்.‌ கை குலுக்கி அவர்கள் வரவேற்பை ஏற்றுக் கொண்டவன் பக்கத்தில் நின்றிருந்த மித்ரமதிக்காகப் பார்வையைத் திருப்பினான்.

“மிஸ் மித்ரமதி சந்திரசேகர்.‌ இந்தக் கம்பெனியை இது நாள் வரைக்கும் இவங்க தான் பார்த்துக்கிட்டாங்க.” சக்திவேல் அவளை அறிமுகப் படுத்தவும் அழகாகப் புன்னகைத்தான் கார்த்திக்.

“இனியும் அவங்க தான் பார்த்துக்கப் போறாங்க.” சொன்னபடியே அவன் கை இயல்பாக நீள அந்தக் கையைப் பற்றிக் குலுக்கினாள் மித்ரமதி.

அவன் சிரிப்பு மிகவும் இயல்பாக இருக்க மித்ரமதியும் புன்னகைத்தாள். ஒரு கணம் அவன் பார்வை அவள் முகத்தில் படிந்து மீண்டது.

அதன்பிறகு அறிமுகங்கள் அனைத்தும் இனிதாக நிறைவு பெற கார்த்திக் உரையாற்றினான். கம்பெனி வேலைகள் வழமைபோல் தொடர வேண்டும் என்று விண்ணப்பம் வைத்தவன் புதிய நிர்வாகத்தில் எந்த ஆட்குறைப்பும் நடைபெறாது என்று சொன்னபோது ஊழியர்கள் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

மித்ரமதி அனைத்தையும் அமைதியாக வேடிக்கை பார்த்தபடி இருந்தாள். பேச்சு பேச்சாக இருந்த போதும் அவன் கண்கள் தன்னை அடிக்கடி அளவெடுப்பதை அவள் உணர்ந்து கொள்ளவில்லை.

ஆனால்… அதைச் சக்திவேலும் தினகரும் கண்டு கொண்டார்கள்.

மதிய உணவும் புதிய முதலாளியின் தலைமையில் தடபுடலாக வழங்கப்பட்டது. ஒரு வித அச்ச பாவத்தோடு அமர்ந்திருந்த ஊழியர்கள் தங்கள் புதிய முதலாளியின் ஸ்னேக பாவத்தில் மகிழ்ந்து போனார்கள்.

பாரபட்சம் பார்க்காமல் எல்லா ஊழியர்களோடும் கார்த்திக் உரையாடினான். ரிச்சர்ட் கண்களில் கூட கார்த்திக்கைப் பார்க்கும் போது ஒரு மரியாதை தோன்றி இருந்தது.

ஒரு மூன்று மணிபோல அந்த இடமே ஓய்ந்து போனது. அத்தனை பேரும் விடைபெற்றுக் கொண்டார்கள். திவாகர் எப்போதோ இடத்தைக் காலி பண்ணி இருந்தார்.

போகும்போது தினகர் ஒன்றிரண்டு வார்த்தைகள் மித்ரமதியோடு பேசினார்.

“மித்ரா! உங்கூட நாங்க எப்பவுமே இருப்போம். கவலைப்படாதே.”

“ம்…” இதைத் தவிர வேறெதுவும் பேசவில்லை பெண்.

ஆனால் சக்திவேல் அதுகூடப் பேசவில்லை. ஆதரவாக அவள் தலையை மட்டும் தடவிக் கொடுத்தார். அந்தச் செய்கையில் கண்கள் கலங்கியது பெண்ணிற்கு.

தன் குழந்தையை ஹாஸ்டலில் விட்டுச் செல்லும் தந்தையைப் போலத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி நகர்ந்தார். கார்த்திக் அனைத்தையும் மௌனமாகப் பார்த்திருந்தான்.

* * * * *

அந்த ரூமிற்குள் கார்த்திக்கும் மித்ரமதியும் மாத்திரம் அமர்ந்திருந்தார்கள். ரிச்சர்ட்டைக் கூடக் கார்த்திக் உள்ளே அனுமதித்திருக்கவில்லை.

“சொல்லுங்க மிஸ். மித்ரமதி. யார் மேலயாவது உங்களுக்கு சந்தேகம் இருக்கா?”

“சார்?”

“என்னைத் தப்பா எடுக்காதீங்க. தவறு எங்கன்னு கண்டு பிடிக்கணும் இல்லையா? அதனால தான் கேக்குறேன்.”

“இல்லை சார், எனக்குத் தெரிஞ்சு இங்க இருக்கிற யாரையும் என்னால சந்தேகிக்க முடியலை. அப்பாவோட நண்பர்கள். நான் அவங்களுக்குப் பொண்ணு மாதிரி.”

“எந்தக் காலத்துல இருக்கீங்க மித்ரமதி?‌ சரி அதை விடுங்க, ரிச்சர்ட் எப்படி?”

“சேச்சே… சான்ஸே இல்லை.” அவள் சொன்ன வேகத்தில் கார்த்திக்கின் இதழோரம் ஒரு இளநகை பூத்தது. அந்தப் புன்னகை சொன்ன சேதி அத்தனை நல்லதாகத் தோன்றவில்லை மித்ரமதிக்கு.

“நம்பிக்கைக்குரிய ஊழியன், மரியாதைக்குரிய தோழன்.”

“ம்ஹூம்… நான் எதுவுமே சொல்லலையே மித்ரமதி!”

“ஆனா எனக்குச் சொல்லணும்னு தோணிச்சு சார்.” அவள் பதிலில் இப்போது மீண்டும் ஒரு புன்னகை அவன் முகத்தில். கொஞ்சம் வசீகரமாகத்தான் தெரிந்தது பெண்ணுக்கு.

“கார்த்திக் ன்னு கூப்பிடலாமே.” அவன் நீட்டிய நட்புக்கரத்தைப் பற்றிக் கொள்ள வெகுவாக யோசித்தது அவள் இளமை. அவனும் வற்புறுத்தவில்லை.

“இனிப் பண்ணப்போற எல்லா ப்ராஜெக்ட்டும் ரொம்ப சீக்ரெட்டா இருக்கணும் மித்ரமதி. எல்லா வேலையும் முடிஞ்சதுக்கு அப்புறம் ஃபைனல் டிஸிஷன் என்னோடதாத்தான் இருக்கும்.”

“ஓகே சார்.”

“இந்தத் தொழில்ல எனக்கு அத்தனை முன் அனுபவம் கிடையாது மித்ரமதி. ஸோ… உங்க சப்போர்ட்டை நான் முழுமையா எதிர்பார்க்கிறேன்.”

“ஷ்யூர் சார்.”

“ம்… நம்ம ரெண்டு பேரையும் தாண்டி ஃபைனல் அமௌன்ட் வேற யாருக்கும் தெரியாம பார்த்துக்கோங்க. இன்க்ளூடிங் ரிச்சர்ட்.”

“ஓகே சார்.”

“அப்புறம்… சொல்லுங்க மித்ரமதி, வீட்டுல வேற யாரெல்லாம் இருக்காங்க?”

“நானும் அம்மாவும் தான் சார்.”

“ஓ… ஒரே பொண்ணா?”

“ம்…” லேசான புன்னகையோடு தலையாட்டினாள்.

“இங்கேயும் அதே கோலம் தான். ரொம்பச் செல்லமோ?”

“இல்லையில்லை… அம்மா ரொம்ப ஸ்ட்ரிக்ட். பாட்டி கொஞ்சம் செல்லம்தான்.”

“ஓ… உங்க கூட இருக்காங்களா?”

“இல்லை… இந்தியா ல இருக்காங்க. அப்பாவோட அம்மா.”

“அப்போ அடிக்கடி இந்தியா போவீங்களா?”

“அப்படீன்னு இல்லை… அம்மா போவாங்க. நான் ரெண்டு மூனு முறைதான் போயிருக்கேன்.”

“நானும் அப்படித்தான்.”

“ஓ… அம்மா அப்பா எல்லாம் இப்போ அமெரிக்கா வுல தான் இருக்காங்களா சார்?”

“ஆமா. ஆனா கூடிய சீக்கிரமே வருவாங்க. என்னை விட்டுட்டு அவங்களால் இருக்க முடியாது.” அவன் சிரித்துக் கொண்டே சொல்ல அவளையும் அந்தச் சிரிப்பு தொற்றிக்கொண்டது.

“இப்போதைக்கு ஹோட்டல் வாசம் தான். ஜஸ்ட் ஒன் வீக் எங்கிறதால சமாளிச்சிடலாம். என்ன… இன்டியன் ஃபூட் எங்கிற பெயர் ல ஹோட்டல்ல என்னத்தையோ குடுக்கிறான். சகிக்கலை…”

“ஐயையோ!”

“மார்க் செமையா என்ஜாய் பண்ணுறான். நமக்குத் தான் நாக்கு கொஞ்சம் நீளம். இந்த ரெண்டு நாள்லயே நாக்கு செத்துப் போச்சு.” அவன் இத்தனை இயல்பாகப் பேசவும் மித்ரமதி முதலில் கொஞ்சம் ஆச்சரியப்பட்டுப் போனாள்.

“அம்மா சூப்பரா சமைப்பாங்க. அப்பா நார்த் இன்டியன். ஆனாலும் இப்போல்லாம் அம்மா சமையல் இல்லைன்னா… ம்ஹூம்…” அவன் சொன்ன விதத்தில் சட்டென்று சிரித்தது பெண். அவனும் கூடச் சிரித்தான்.

“நல்ல இன்டியன் ரெஸ்டாரன்ட்ஸ் இருக்கு சார். ஆனா… நீங்க போவீங்களான்னு…”

“ஏன்? நாங்க போறதுக்கு என்ன? நீங்க தாராளமாச் சொல்லுங்க. சாப்பாடு முக்கியம் ம்மா.”

“அப்போச் சரி.” சிரித்தபடியே சொன்னவள், இந்தியர்கள் செறிந்து வாழும் ஒன்றிரண்டு இடங்களைச் சொல்ல அதைப் பத்திரமாகக் குறித்துக் கொண்டான்.

“இப்போ ஃப்ரீயா ஃபீல் பண்ணுறீங்களா மித்ரமதி?” அவன் குரல் ஆழ்ந்து ஒலித்தது.

“சார்?”

“காலையில உங்க முகத்துல ஒரு டென்ஷனைப் பார்த்தேன். இந்தக் கண்ணுல ஒரு பயம் தெரிஞ்சுது. என்னைப் பார்க்கிறப்போ எல்லாம் ஏதோ ஒரு கலக்கம் தெரிஞ்சுது. பயப்படாதீங்க. ரிச்சர்ட் மாதிரி நானும் ஒரு நல்ல ஃப்ரெண்ட். அவ்வளவுதான்.”

அவன் பேசப் பேச மித்ரமதி திகைத்துப் போனாள். அவன் இத்தனை தூரம் தன்னைக் கவனித்திருப்பான் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.

உண்மையிலேயே காலையில் இருந்து அவள் ஏதோ ஒரு அழுத்தத்தில் தான் நடமாடிக் கொண்டிருந்தாள். அதை ரிச்சர்ட் புரிந்து கொள்வது இயற்கை. ஆனால்… இந்தக் கார்த்திக்கும் அதைப் புரிந்து கொண்டது…

அவள் கண்கள் காட்டிய பாவத்தில் அவன் புன்னகைத்தான்.

“ரொம்ப நாளா பிஸினஸ் பண்ணுறேன். மனுஷங்களை ஓரளவு என்னால படிக்க முடியும். கூட வேலை செய்யுறவங்களோட எப்பவுமே நல்ல ஒரு ரிலேஷன்ஷிப் வேணும் மித்ரமதி. இல்லைன்னா வண்டி ஓடாது.”

சிரித்தபடி தலையைக் குனிந்து கொண்டாள் பெண். அவன் முகத்தில் ஒரு கனிவு தோன்றியது.

“இது நல்லாருக்கு. இப்படி சிரிச்சுக்கிட்டே வேலை பண்ணுங்க. இன்னைக்கு ஒரு நாள் ஹாப்பியா கொஞ்சம் சீக்கிரமா வீட்டுக்குப் போங்க.”

“தான்க் யூ சார்.”

“இன்னைக்கு ஒரு நாள் தான் அந்தச் சீக்கிரம்.”

“ஹா… ஹா…” தன்னையும் அறியாமல் வாய்விட்டுச் சிரித்தவள் அத்தோடு விடைபெற்றுக் கொண்டாள். மனது லேசாக இருந்தது.

போகும் அந்தப் பெண்ணையே இமைக்காமல் பார்த்திருந்தான் கார்த்திக். இது அவனுக்குப் புதிது. வேலை செய்பவர்களோடு நல்லதொரு உறவைப் பேணுவது அவனது வழக்கம் தான். ஆனால் இத்தனை தூரம் அவன் இறங்கியது கிடையாது.
இந்தக் கட்டடத்திற்குள் வந்தது முதல் அவளை அவதானித்திருந்தான். ஏதோ ஒரு கலக்கத்தோடேயே அவனைப் பார்த்திருந்தாள். பார்த்ததை விட அவனை அவள் தவிர்த்தது தான் அதிகம்.

கார்த்திக்கை அவளது நடவடிக்கைகள் ஏனோ பாதித்தது. தொழிலை இத்தனை காலமும் நடத்தியவள் என்ற வகையில் அவளோடு ஒரு பேச்சுவார்த்தை ஏற்கனவே அவன் திட்டமிட்டதுதான். ஆனால் அத்தோடு நிறுத்தி இருக்கலாம்.
அவன் நிறுத்த நினைத்த போதும் வார்த்தைகள் அவனையும் மீறி வந்து விழுந்திருந்தன. இருந்தாலும் மனதுக்குள் நிம்மதியாக உணர்ந்தான் கார்த்திக்.

அந்த ஆடி டிடி வேக எல்லையை மீறாமல் வேகமாகப் போய்க் கொண்டிருந்தது. ரிச்சர்ட் ட்ரைவ் பண்ணிக் கொண்டிருந்தான். பக்கத்தில் மித்ரமதி.

“என்ன மேடம், ரொம்ப அமைதியா வர்றீங்க?”

“ரொம்பவே கலக்கமா இருந்தது ரிச்சர்ட். எல்லாரையும் போல அப்பா போட்ட முதலைக் கைல வாங்கிட்டுப் போகலாமான்னு தான் முதல்ல யோசிச்சேன்.” சொன்னவளை ஆச்சரியமாகப் பார்த்தான் ரிச்சர்ட்.

“முடியலை ரிச்சர்ட். புதுசா வர்றவங்க எப்படி இருப்பாங்கன்னு தெரியாது. மனசு இருக்கிற நிலைமையில இதை எல்லாம் என்னால சமாளிக்க முடியுமா ன்னும் சந்தேகமா இருந்தது.”

“ம்…”

“ஆனா இப்போ அப்படித் தோணலை.”

“என்னாச்சு மேடம்?”

“மனுஷனோட வேலை பார்க்கிறது அவ்வளவு கஷ்டமா இருக்கும்னு தோணலை ரிச்சர்ட். கொஞ்சம் அனுசரணையா நடந்துக்கிறார்.”

“ஓ…”

“இன்னைக்குப் பேசின வரைக்கும் சமாளிக்கலாம்னு தான் தோணுது.”

“எதுக்கும் கொஞ்சம் கவனமா இருங்க மேடம்.” ரிச்சர்ட் சொல்லவும் அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள் மித்ரமதி.

“ஏன் ரிச்சர்ட்?”

“சொல்லத் தெரியலை மேடம். கம்பெனியே கை மாறி இருக்கு. ஆனா இன்னை வரைக்கும் அதுக்கு யாரு காரணம்னு தெரியலை. எதைப் பார்த்தாலும் இப்போ சந்தேகம் தான் வருது.”

ரிச்சர்ட்டின் வார்த்தைகளில் மித்ரமதியும் மௌனமாகிப் போனாள். அவன் சொல்வதிலும் நியாயம் இருந்தது.
* * * * * *

அந்த ஹோட்டல் வளாகத்தின் தோட்டத்தில் அமர்ந்திருந்தார்கள் நந்தகுமாரும் பார்கவியும். அவன் தன் காதலை மனம் திறந்து சொன்ன பிறகு இன்றுதான் சந்திக்கிறார்கள்.

மேசையின் எதிர்ப்புறமாக ஒருவரை ஒருவர் பார்த்த படி அமர்ந்திருந்தாலும் நீட்டியிருந்த அவன் கரத்தைப் பற்றிய படி இருந்தாள் பார்கவி.

இப்போதெல்லாம் நந்தகுமார் கொஞ்சம் பிஸி. வாழ்க்கையில் நடந்த கசப்புகளுக்குப் பிறகு முடியும் தறுவாயில் தான் தொலைத்த படிப்பை இப்போது மீண்டும் ஆரம்பித்திருந்தான்.

வீட்டிலிருந்த அனைவரும் அவனுக்கு உறுதுணையாக இருந்ததால் பெரிதாகக் கஷ்டம் தெரியவில்லை. வேலை நேரம் போக பார்கவியும் இணைந்து கொள்வாள்.

பார்கவி அவன் ஸ்நேகத்தை விரும்பிய காலம் போய் இப்போதெல்லாம் பார்கவிக்காக அவன் ஏங்க ஆரம்பித்திருந்தான். அதில் பெண்ணுக்கு அத்தனை மயக்கம். ஏதோ, உலகமே தன் வசப்பட்டாற் போல உணருவாள்.

“பாகி…”

“சொல்லுங்க நந்தா.”

“என்ன வந்ததுல இருந்து எதுவுமே பேச மாட்டேங்கிற?”

“பேசணும்னு தோணலை நந்தா.”

“ஏன்டா?”

“நீங்க என்னோட இப்படி உட்காரணும்னு ரொம்ப நாள் ஏங்கி இருக்கேன். கனவாவே போயிடுமோ ன்னு நினைச்சது இன்னைக்கு நிஜத்துல நடக்கும் போது பேசத் தோணலை நந்தா.” அந்தக் குரலில் அத்தனை நெகிழ்ச்சி.

“எம் பக்கத்துல வா பாகி.”

“ம்…” சொன்னவள் எழுந்து அவன் பக்கத்தில் போய் அமர்ந்து கொண்டாள். இயல்பாய் அவள் தலை அவன் தோள் சாய்ந்தது. அந்த நெருக்கத்தை இருவருமே ரசித்தார்கள்.

“பாகி…”

“ம்…”

“நீ சந்தோஷமா இருக்கியா?”

“இந்தக் கேள்வியை இப்போ அடிக்கடி கேக்குறீங்க நந்தா. எனக்கு அது பிடிக்கலை.”

“ஓ… சாரிடா. இனிக் கேக்கலை.”

“ம்…”

“அப்போ என்ன கேக்கட்டும் பாகி? இந்த நந்தா என்ன கேட்டாலும் கிடைக்குமா?” அவன் கரகரப்பான குரலில் கேட்க பார்கவி சிரித்தாள்.

“கிடைக்கும்… ஆனா நந்தா தான் கேக்க மாட்டேங்கிறாரே!” அவள் சொல்ல, இப்போது அவன் சிரித்தான்.

“எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம் பாகி?”

“நந்தா!” இருக்கும் இடத்தையும் மறந்து கூவினாள் பார்கவி.

“என்னாச்சு பார்கவி? எதுக்கு இத்தனை ஆச்சரியம்?”

“நீங்க… நீங்க உண்மையாத்தான் கேக்குறீங்களா?”

“ம்… ஆமா.”

“நந்தா… நந்தா அப்புறம் பேச்சு மாறக்கூடாது.” அவள் திக்கித் திணறிப் பேச அவள் கரத்தை எடுத்தவன் அதில் முத்தம் வைத்தான்.

“ம்ஹூம்… நான் நிஜமாத்தான் கேக்குறேன்.”

“இன்னைக்கே பண்ணிக்கலாம் நந்தா.” குதூகலக் குரலில் சொன்னவள் எம்பி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.

“ஏய் பாகி! பப்ளிக் ப்ளேஸ்.”

“எனக்கு அதைப்பத்திக் கவலையில்லை.”

“அப்படியா?” சரசமாகக் கேட்டவன் அவள் இடை வளைத்திருந்தான். பார்கவி எதுவும் பேசவில்லை. அவனோடு முடிந்தமட்டும் ஒன்றிக் கொண்டாள்.

“நந்தா…”

“ம்…”

“வீட்டுல பேசிட்டீங்களா?”

“அம்மாக்கிட்ட சொல்லிட்டேன். மீதியை அவங்க பார்த்துக்குவாங்க. அண்ணாக்கிட்ட நாளைக்குப் பேசணும்.”
“யாரு? கார்த்திக் அண்ணாவா?”

“ம்…”

“சம்மதிப்பாங்களா?”

“கண்டிப்பா.”

“அம்மா என்ன சொன்னாங்க?”

“பார்கவியை ஒரு வார்த்தை கேளுன்னு சொன்னாங்க.”

“எதுக்காம்?”

“பொண்ணு சம்மதிக்கணும் இல்லை.” சொல்லும் போதே சிரித்தான் நந்தகுமார்.

“நந்தா… நீங்க என்னைக் கேலி பண்ணுறீங்க…” சிணுங்கியவள் அவனை விட்டு விலக, அதை அனுமதிக்காதவன் அவளை இன்னும் தன்னோடு இறுக்கிக் கொண்டான்.

இருவருக்குமே சுற்றுப்புறம் மறந்து போனது.