MT 3
MT 3
மாடி வீடு – 3
ஆலமரத்தான் வருகைக்காக அந்த ஊர் மக்கள் கோவில் ஆலமரத்தின் அடியில் கூடி இருந்தனர்.“ஜல்ஜல்” என்ற மாட்டுவண்டியின் மணி ஓசை கேட்கவும் “எல்லாரும் அமைதியா இருங்கப்பு, ஐயா வந்துட்டாக” அங்குச் சலசலவெனப் பேசிய மக்களை அடைக்கினார் அந்த ஊர் பெரியவர்.
வண்டியை விட்டு இறங்கிய அழகு, ஆலமரத்தானுக்குப் பின் கம்பியை திறந்து விட, சட்டையைக் கழட்டி வண்டியில் வைத்து, துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டே வேகநடையிட்டு அங்கிருந்தவர்களை நோக்கி வந்தார்.
அங்கு சாமி என்று, மக்கள் வைத்திருந்த சிறு கல்லில் விழுந்து வணங்கியவர், அங்கு விரித்திருந்த விரிப்பில் அமரவும் அவர் முன் செம்பும், வெத்தலை டப்பாவும் கொண்டு வைத்தனர்.
அவரின் பின்னே ஏழு பேர் கொண்டு குழு குழுமி இருந்தது. அந்த ஊரின் தலைவர், துணை தலைவர், கோவில் தர்மகர்த்தா, செயலாளர், பொருளாளர் என்று ஏழு பெரிய மீசை கொண்டவர்கள் அமர்ந்திருந்தனர்.
டப்பாவில் இருந்த வெத்தலையை எடுத்து, சுண்ணாம்பு தேய்த்து வாயில் வைத்து சுவைத்தபடியே அங்கிருந்தவர்களை சுற்றி நோக்கினார் ஆலமரத்தான்.
பஞ்சாயத்துக் கூட்டியிருந்த பெண்ணைப் பெற்றவர்கள் ஆலமரத்தான் முகத்தையே பார்த்திருந்தனர்.
“எல்லாரும் உட்காருங்கப்பு”
ஒரு முறை எல்லாரையும் சுற்றிப் பார்த்தார் அவர். தவறு செய்தவன் வெள்ளை சட்டை அணிந்து தலை நிமிர்ந்து நிற்க, பெண்ணைப் பெற்றவர்களோ, சட்டை இல்லாமல் டவலை இடையில் கட்டியபடி, கையைக் கட்டி தலை குனிந்து நின்றனர்.
ஒரு காலை, இன்னொரு கால் மீது எடுத்து வைத்து கம்பீரமாக அமர்ந்து, மீசையை முறுக்கி விட்டபடி பஞ்சாயத்தை ஆரம்பித்தார் ஆலமரத்தான்.
“ஐயா… எம்பொண்ணு இங்கனதேன் பள்ளிக் கூடம் படிக்குதுங்க… பள்ளி கொடத்துக்கு போயிட்டு எங்க ஊரு ஐயா வயக்காட்டு வழியா வரச்ச… எங்க ஐயாவோட தம்பி பையன் தப்பா நடக்க பாத்திருக்கானுங்க” பெண்ணை பெற்றவர் சிறு விசும்பலுடன் பஞ்சாயத்தை வைத்தார்.
“காலம் கெட்டுபோச்சு, அதேன் இப்படி ஒரு தப்பு இந்த ஊருக்குள்ளார நடந்திருக்கு. இல்லன்னா உன் வயல்ல வேலைக்கு வந்த ஒரு சின்னப் புள்ள கையைப் பிடிச்சு நீ இழுத்திருப்பியா?” அவனைப் பார்த்து முறைத்தார்.
“பாத்திரம் பார்த்து பிச்சை போடு, கோத்ரம் பார்த்து கோலாடை பண்ணுன்னு சும்மாவா சொன்னான் உன் பாட்டனும், என் பாட்டனும். இப்படி ஒண்ணு நம்ம இனத்துக்குள்ள நடக்க கூடாதுன்னுத்தேன் அப்பவே இப்படி சொல்லிவச்சான். ஆனா நீ என்ன பண்ணிருக்க?
“நீ நடந்து வந்தா எஜமான்னு கையெடுத்து கும்பிடுற இனம்டா, அந்த இனமே உன்னை இன்னைக்கு இப்படிப் பஞ்சாயத்துக்கு முன்னாடி கொண்டு விட்டிருகுன்னா, நீ நடந்திருக்கிற முறை அப்படி. காலம் காலமா நம்ம வீட்டு வாச படியை தாண்டி உள்ள வராம கட்டுப்பாட்டோட கண்ணியமா நடந்துகுறான்னா நாம அந்தக் கண்ணியத்தைக் காப்பாத்திக்க வேண்டாமா? நீ என்ன பண்ணிருக்க, காலம் காலமா நாம காப்பாத்திட்டு வந்த கலாசாரத்தை கெடுத்திருக்க.
இதையே அவன் இனக்காரன் ஒருத்தன் நம்ம இனக்கார புள்ள கையைப் பிடிச்சு இழுத்தா நாம சும்மா இருப்போமா? மீசையை முறுக்கி விட்டுகிட்டு, அருவாளை தூக்கிட்டு கிளம்பிருக்கமாட்டோம், அவனைப் பாரு பரம்பரை பரம்பரையா கட்டி காத்த கண்ணியம் மாறாம கைகட்டி நின்னு நியாயம் கேட்குறான். இப்போ என்ன பண்ண சொல்லுற?”
வெற்றிலையை, இரு விரல்களுக்கிடையில் வெளியே துப்பியபடி, அவனை அழுத்தமாகப் பார்த்தார் ஆலமரத்தான்.
“நீ என் இனக்கார பயனு உனக்காகவும் நான் பேசமுடியாது, அதுக்குப் பேரு பஞ்சாயத்தும் இல்ல. யாருக்கும் தெரியாம எந்தப் புள்ள கையைப் பிடிச்சு இழுத்தியோ, இப்போ எல்லார் முன்னாடியும் அந்தப் புள்ள காலில் விழுந்து மன்னிப்பு கேட்கோணும், அப்போ தான் இனி எந்தப் பையனும் இப்படிப் பண்ணமாட்டான். இது தான் இந்தப் பஞ்சாயத்தோட தீர்ப்பு” கோபத்துடன் பஞ்சாயத்து முடிந்ததுப்போல் எழுந்து கொண்டார் ஆலமரத்தான்.
அந்தச் சிறு பெண் தலையைக் குனிந்து அழுது கொண்டிருக்க,
அவள் முன் சென்றவர் “நீ எதுக்குக் கண்ணு அழுவுற, கண்ணைத் துடைச்சுக்கோ நீ எந்தத் தப்பும் பண்ணல, ஏன் தலையைக் குனியுற, தப்பு செய்த அவன் தலையைக் குனிந்து உன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பான். அப்படி இல்லன்னா இந்த ஊரை விட்டு வெளியே போவான். நீ எந்தத் தப்பும் செய்யல கண்ணு, தைரியமா இரு கண்ணு” அவளின் கண்ணீரை துடைத்தவர் அவள் தோளில் தட்டிக் கொடுத்தார்.
“இதுக்கு மேலையும் உம்பொண்ணுக்கு இந்த ஊர்ல பாதுக்காப்பு இல்லைன்னு உனக்கு தோணிச்சுன்னா, எதையும், யாரை பத்தியும் யோசிக்காம என்கூருகுக்கு வந்திரு, உனக்கு எல்லா விதத்திலையும் பாதுக்காப்பு எங்கூருல உனக்கு கிடைக்கும்” அவளை பெற்றவர்களிடம் கூறினார் அவர்.
கையெடுத்து வணங்கினார் அந்த பெரியவர்.
“என்னய்யா இது அநியாயமான தீர்ப்பா இருக்கு” அவர் இனக்காரன் ஒருவன் வேகமாக குரல் கொடுத்தான்.
“ஏய், பேசாம இருடா” கூடியிருந்தோர் அவனைத் திட்ட,
“பேசாம இருக்கப்பு” கூடியிருந்தோரை பார்த்து கூறியபடி ‘நீ பேசு’ என்னும் விதமாக அவனைப் பார்த்து நின்றார் ஆலமரத்தான்.
“யார் காலில் யாரு விழுறது, ஒரு கீழ் ஜாதிக்காரன் காலில் மேல் ஜாதிக்காரன் விழுந்தா அவன் மானம், மருவாதை என்னாவுறது? இது நம்ம இனத்துக்கே கேவலம் தானுங்க… ஜாதியை மதிக்கும் நீங்களே இப்படிப் பேசிப்புட்டா எப்படி?” மீசையை நீவிவிட்டுக் கொண்டே அவனே கேட்டான்.
கைகளைப் பின்னால் கட்டி அவன் சொல்வதை அமைதியாகக் கேட்ட ஆலமரத்தான், தோளில் கிடந்த துண்டை கையில் எடுத்து உதறி மீண்டும் போட்டுக் கொண்டே “என்னடா சொன்ன? ஆரு மேல்ஜாதிக்காரன்? சொல்லுடா? இன்னா நிற்கிறானே இவனா? த்தூ…
“கீழ் ஜாதிக்காரன் பொண்ணு கையை பிடிச்சு இழுக்க மட்டும் இனிக்குதோ உம்மவனுக்கு, அப்போ தெரியலியாக்கும் அவ கீழ் ஜாதின்னு. ஏதோ இந்த புள்ள கொஞ்சம் சத்தம் போட்டதுல பிரச்னை இல்லாம போச்சு, இல்லன்னா என்ன ஆகியிருக்கும்?
வயசு பொண்ணு ஆபத்துல இருந்தா எதித்து வரவன் நூறுபேரோ, ஆயிரம் பேரோ அவனை எதித்து நின்னு, அந்தப் பொண்ணு மானத்தைக் காப்பாத்துகிறவன் நம்ம இனக்காரன்டா, ஆனா? உன் மவன், அவ கற்புக்கே களங்கம் ஏற்படுத்த பார்தவண்டா?
மானம், மருவாதையில என்னடா மேல் ஜாதி, கீழ் சாதி மானம், மருவாதை அல்லாருக்கும் ஒன்னுதேன். அது உனக்கும் இருக்கு, அவகளுக்கும் இருக்கு. ஏன் கையை கட்டி தலை குனிஞ்சு இன்னா நிக்கானே இவனுக்கு அதிகமாத்தேன் இருக்கு…
கட்டுன பொண்டாட்டியை தவிர மத்தவங்களை எல்லாம் ஆத்தான்னு வாய் நிறையக் கூப்டுறவன் நம்ம இனக்காரன்டா…
எந்த பொண்ணுக்கு நீ தாலி காட்டுறியோ அதுக்கு பிறகு தாண்டா அவளை பார்த்தா உனக்கு மனசு மாறோணும், அதுக்கு முன்ன நீ எந்த பொண்ணை பார்த்தாலும், அவளை நீ உன் ஆத்தாளா பார்க்கணும்டா? அவந்தேன் ஆம்பள. அவனை மட்டுந்தேன் நம்ம சாதிசனம் ஆம்பளையா பாக்கும்.
நீயே ரோசனை பண்ணு உம் மவன் ஆம்பள தானான்னு. பெருசா பேசவந்துட்டான். நம்ம இனத்தை பத்தி உனக்கு என்னடா தெரியும்…
நம்ம இனக்காரன் இருந்த அந்தக் காலத்திலேயே நல்லது, கெட்டதுக்கு நாலு இனக்காரன் வேணுமேன்னு தான் இவங்களைக் கொண்டு வந்து, சாப்டதுக்கும், தங்கிறதுக்கும், பார்க்க வேலையும் கொடுத்து அவங்க முகத்துல வர சந்தோசத்தை பார்த்து, ரசித்து, மருவாதையா நடத்துனானே உன் பாட்டனும், என் பாட்டனும் அவன் மேல்ஜாதிகாரன்டா.
விவசாயம் முடிஞ்ச உடனே உனக்கு லாபம் வருதோ இல்லையோ, உழைக்கிறவங்களுக்குக் கூலியை கொடுத்து அவங்க முகத்தில் வரும் சந்தோசத்தைப் பார்த்து தான் சந்தோசமா நினைச்சானே அவன் முதலாளி வம்சத்துல மேல்ஜாதிகாரன்டா” மீசையைக் கர்வமாக முறுக்கி விட்டுக் கொண்டார்.
“வருசா வருசம் பொங்கலுக்கும், திருவிழாவுக்கும் புதுத் துணி கொடுத்து, வயிறார உணவும் கொடுத்து, படியும் கொடுத்து அவங்க முகத்தில் வரும் மகிழ்ச்சியைக் கண்டு தான் சந்தோசபடுவானே அவன் மேல்ஜாதிக்காரன்டா” மீசையை முறுக்கிவிட்டுக் கொண்டார்.
“நம்மையே நம்பி இருகிறவங்களைக் காலம் பூரா சந்தோசமா பாத்துகிறவன் மேல்ஜாதிகாரன்டா,
ஆனா நம்ம இனத்தாலையே இன்னொரு இனத்துக்கு துயரத்தைக் கொண்டு வந்து நம்ம இனத்தையே கெடுக்க வந்த நாயி நீ, நீ மேல்ஜாதியை பத்தி பேசுறியா?” கோபமாக அவனை உறுத்து விழித்தவர்,
கையைப் பிடித்து இழுத்தவன் முன் வந்து “மருவாதையா அவ காலில் விழுந்து மன்னிப்பு கேளு, இல்லன்னா இந்த ஊரை விட்டே ஓடி போயிரு… இம்புட்டுத்தேன் உனக்கு மருவாதை” தோளில் கிடந்த துண்டை எடுத்து உதறி மீண்டும் போட்டுக் கொண்டவர்,
“அழகு வண்டியை கட்டு” அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். இதற்கு மேல் அந்த ஊர் காரர்களின் விருப்பம். அவர் இன பாட்டனும். முப்பாட்டனும் என்ன சொல்லி கொடுத்தனரோ அதையே தீர்ப்பாக கூறி வந்தார் அவர்.
ஜல்ஜல் என்ற ஓசையுடன் அவர் வண்டி கிளம்ப,
“அவ காலில் விழுடா” என்றபடி ஊரார் அவனைத் தள்ளி விட நேராக அவள் காலை பிடித்தபடி வந்து விழுந்தான் அவன்.
“உன்னை விட நான் எதிலும் குறைந்தவள் இல்லைடா!” கம்பீர பார்வை பார்த்து சென்றாள் அவள்.
இனி எந்த பெண்ணை பார்த்தாலும், காலில் விழுந்த நினைவு வரும். யாரையும் ஏறெடுத்து பார்க்கும் எண்ணம் அவனுக்கு இனி ஜென்மத்திலும் வராது, இது அந்த ஊர் தலைவர்களின் எண்ணம்.
“என்னடா அமைதியா வர?” அழகைப் பார்த்துக் கேட்டார் ஆலமரத்தான்.
“சொல்லுங்கய்யா”
“ஒன்னுமே சொல்லாம வரியே அதேன்”
“நான் என்னத்தய்யா சொல்லட்டும்” தலையைச் சொறிந்து கொண்டான் அழகு. உண்மையாவே அவனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
அவனைப் பொறுத்தவரை ஆலமரத்தான் சாமி மாதிரி. எப்பொழுதும் சாமி தவறு செய்யாது. அவர் எது செய்தாலும், சொன்னாலும் சரியாக இருக்கும். கண்மூடி தனமான நம்பிக்கை அது.
‘நீ உயிரை விடு அது தான் இந்த ஐயாவுக்கு பிடிக்கும் என்று கூறினால் உடனே தன் உயிரை மாய்த்துக் கொள்வான் அழகு. தன் உயிர் போனால் தன் தங்கை என்ன செய்வாள் எதுவும் மனதில் இருக்காது. அந்த நேரம் ஐயா வாக்கு வேத வாக்கு’ இதான் அழகுவுக்கு, ஐயா மேல் இருக்கும் விசுவாசம். இதை தான் அவனின் அப்பா அவனுக்கு கற்றுக் கொடுத்தார்.
“அவனவன் அந்ததந்த இடத்தில் சரியா இருந்தா எந்தப் பஞ்சாயத்தும் வேண்டாம். என்னடா?”
“ஆமாங்கய்யா, நீங்க சொன்னா சரியாதேன் இருக்கும்”
“ஐயா தீர்ப்பு சரிதானே?”
“ஆமாங்கய்யா, அவனவன், அவனவன் இடத்தில் இருந்தா சரியாதேன் இருக்கும்”
“ம்ம்ம்” கர்வமாக மீசையை நீவி கொண்டார். கொஞ்ச தூரம் வண்டி அமைதியாக சென்றது.
“அழகு”
“ஐயா”
“வண்டியை கொஞ்சம் ஓரம் கட்டு”
“சரிங்கையா”
ஏன், எதற்கு என்ற கேள்வியே கேட்காமல் வண்டியை ஓரம்கட்டி நிறுத்தி விட்டிருந்தான்.
வண்டியை விட்டு இறங்கிய ஆலமரத்தான் தூரத்தில் வந்துக் கொண்டிருந்த சைக்கிளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
“அழகு, அங்கன சைக்கிளு தானே வருது?”
“ஆமங்கைய்யா, சைக்கிளுத்தேன்… ஆனா நம்மூருக்குள்ள ஆரு வாறது?”
“தெரிலையே?” யோசனையாக அவர்களையே பார்த்திருந்தார் ஆலமரத்தான்.
இருவரும் நிற்பதைக் கண்ட சைக்கிள்காரர் தன் சைக்கிளை நிறுத்தி அதிலிருந்து இறங்கி இவர்களை நோக்கி சைக்கிளை உருட்டிக் கொண்டு வந்தார்.
ஐயா முன் சைக்கிளை நிறுத்தி விட்டு “கும்பிடுறேனுங்க சாமி” என வணங்கி நின்றார் ஒருவர்.
“கும்பிடுறேனுங்க” அவர்களையே யோசனையாக பார்த்தார் ஆலமரத்தான்.
“சாமி, நான் தாங்க உங்க ஊருக்கு வந்திருக்க மாட்டு டாக்டருங்க, அரசாங்க ஆசுபத்திரில இருந்து அனுப்பிருக்காக” மெதுவாக கூறினார்.
”அடடே… வாங்க டாட்டரூ… உங்களுக்காத்தேன் நெம்ப நாளா காத்துட்டு இருந்தேணுங்க, மாட்டுக்கு அடிக்கடி சுகமில்லாம வருதுங்க, கொஞ்சம் என்னணு பாத்திருங்க சாமி”
“அதுக்குத்தேனுங்க வந்திருக்கேன் சாமி”
“நல்லது… நல்லது சாமி” கூறியவர்,
”டேய் அழகு டாட்டரு ஐயாவை பள்ளிக்கொடதுக்கு கூட்டிட்டு போ, சாமி நீங்க அவன் கூட போங்க, நான் வயக்காட்டு வரைக்கும் போயிட்டு வரேனுங்க”
“சரிங்க சாமி” என்றவர் தன் சைக்கிளில் ஏறிக் கொண்டார். அழகு அவர் முன்னே மாட்டு வண்டியை செலுத்த, அவனை தொடர்ந்து சென்றது சைக்கிள்.
கொஞ்ச நேரம் அவர்களையே பார்த்திருந்த ஆலமரத்தான், வயலில் இறங்கி நடந்தார்.
பள்ளிக்கூடத்தில் டாக்டரை விட்ட அழகு, ஐயா வீட்டு மாட்டை அவிழ்க சென்றான். போகும் வழியில் அப்படியே மாடு இருக்கும் எல்லார் வீட்டுக்கும் போய் டாக்டர் வந்திருக்கும் செய்தியைக் கூறினான். அதன் பிறகு அப்படியே அவன் நேரம் சென்றது.