Manmo1

Manmo1

ஸ்லோன் ஸ்கொயார் (sloan square) லண்டன், காலை 8:30 மணி, இன்று.’

கோடை கால விடுமுறை என்பதால் அந்த இடமே அந்தக் காலைப் பொழுதில் அத்தனை அமைதியாக இருந்தது. கோடீஸ்வரச் சீமான்களும், சீமாட்டிகளும் வாழும் பகுதி.

வெள்ளை யானைகளைப் பக்கவாட்டில் ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி வைத்தாற் போல வீடுகள். ஒவ்வொரு வீட்டிற்கு முன்னாலும் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் அந்த வீட்டாரின் செல்வச் செழிப்பை இன்னும் கொஞ்சம் எடுத்துக் காட்டின.

“அம்மா! நான் கிளம்புறேன்.” அந்த ஏரியாவிற்கே சம்பந்தமில்லாத பாஷையில் சொல்லிவிட்டு வீட்டின் கதவை மூடினாள் மித்ரமதி.

இதயங்களின் ராணி ‘டயானா’ வின் சாயல். என்ன… பெற்றோர்கள் இந்தியர்கள் என்பதால் அந்த நிறம் மட்டும் அத்தனை துல்லியமாக வரவில்லை. மற்றபடி அந்த நீலக் கண்களும் இன்னும் கொஞ்சம் கூராக இருந்திருக்கலாமோ என்று சொல்ல நினக்க வைக்கும் மூக்கும், சின்னஞ் சிறு இதழ்களும்… பிரம்மன் திறமை சாலிதான்!

ப்ளாக் கலரில் லெதர் டைட் ஸ்கேர்ட், வொயிட் ஷர்ட், இரண்டு இன்ச் உயரத்தில் ஹீல் வைத்த ப்ளாக் ஷூஸ். கழுத்தில் வெள்ளையும் கறுப்புமாக அழகிய மணிகள் கோர்த்த முத்து மாலை, அவள் வனப்புகளையும் தாண்டி இரட்டை வடம் போல தொங்கிக் கொண்டிருந்தது.

அவள் குரலுக்காகவே காத்திருந்தாற் போல பக்கத்து வீட்டு இளவட்டம் ஒன்று பால்கனிக்கு வந்திருந்தது. இது வழமை. தவிர்க்க முடியாமல் ஒரு புன்னகையைச் சிந்திவிட்டு தனது ப்ளாக் ஆடி டிடி (Audi TT) ஐ நோக்கிப் போனாள் மித்ரமதி.

காலைப்பொழுது மனதுக்கு இதமாக இருக்க கை தானாக ரேடியோ வை ஆன் பண்ணியது.

லண்டனில் காலை எட்டு முப்பது என்றால் இந்தியாவில் இப்போது சரியாக மணி பிற்பகல் ஒன்று. மனம் வேகமாகக் கணக்குப் போட்டது. எந்தப் பரபரப்பும் இல்லாமல் அந்தக் குரலை அந்தக் காலை வேளையில் கேட்பது அவளுக்கு மிகவும் பிடிக்கும்.

“கலர்க் கலர்க் கனவுகளை நனவாக்கி வந்தாரை வாழவைக்கும் சென்னை மாநகரத்தின் 102.5 FM தென்றல் வானொலியில் உங்களைச் சந்திப்பது, உங்கள் மனதிற்கினிய தோழி பார்கவி.”

இளமை ததும்பும் அந்தத் துள்ளல்க் குரல் உற்சாகமாக ஒலிக்க சீட் பெல்ட்டை மாட்டிக் கொண்டு காரை ஸ்டார்ட் செய்தாள் மித்ரமதி.

“குட்மார்னிங் பார்கவி.” தன்னிச்சையாக லண்டனில் இருந்த பெண்ணின் குரல் இந்தியக் குரலுக்குக் காலை வணக்கம் வைத்தது.

எட்டு முப்பதிலிருந்து ஒன்பது மணி வரை மித்ரமதியின் பொழுது ட்ரைவிங் இல் கழிவதால் அந்த நேரத்தை பார்கவி யோடு செலவழிப்பது பெண்ணின் வழக்கம்.

அந்தக் குரலின் உற்சாகம் இவளையும் தொற்றிக் கொள்ளும். இனிமையான பாடல் தெரிவுகளோடு ஒலிக்கும் அந்த வானொலி நிகழ்ச்சி மித்ரமதி யை வெகுவாகக் கவரும்.

“உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்பார்கள். இன்னைக்கு சென்னை வெதர் கூட சும்மா சூப்பரா இருக்கு. நேற்று வரைக்கும் சுட்டெரித்த சூரியன் விடைபெற்றிருக்க இன்னைக்கு வருண பகவான் கொஞ்சம் கருணை காட்டி இருக்கார். அதால நம்ம நேயர்கள் எல்லாம் லேசா சாஞ்சிட்டாங்க போல இருக்கு. யாரும் லைனுக்கு வரலை இன்னும். அதுவரை குளுகுளு ன்னு நாம இந்தப் பாடலைக் கேட்போம் நேயர்களே. இது உங்கள் அபிமான தென்றல் வானொலி, நூற்றி ரெண்டு புள்ளி ஐந்து எஃப் எம்.”

கலகலப்பாக அந்தக் குரல் பேசி முடிக்க ‘ராஜ பார்வை’ படத்தில் இருந்து ‘அந்தி மழை பொழிகிறது’ பாடல் ஒலித்தது.

ஸ்டியரிங் கில் தாளம் போட்டபடி காரை ஓட்டிக் கொண்டிருந்தாள் மித்ரமதி. அவள் அம்மா காலத்துப் பாடல். ஆனால் இன்றும் ரசிக்கக் கூடியதாக இருந்தது.

கார் ‘லிவர்பூல் ஸ்ட்ரீட்’ ஐ நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. லண்டனின் பரபரப்பான வீதிகளில் அதுவும் ஒன்று. எத்தனை பிரபல்யமான கம்பெனிகளை தன்னுள் அடக்க முடியுமோ அத்தனையையும் தன்னகத்தே அடக்கிக் கொண்ட வீதி அது.

மித்ரமதி யின் அப்பா சந்திரசேகர் இப்போது உயிரோடு இல்லை. அம்மா தேவகி மட்டும்தான். ஆனால் அப்பா இந்தியாவிலேயே பெரும் பணக்காரர்.

நண்பர்களின் அறிவுரையின் பேரில் தனது மனைவி, நான்கு வயதுக் குழந்தை மித்ரமதியோடு இங்கிலாந்து வந்து சேர்ந்தார் சந்திரசேகர்.

நண்பர்கள் நான்கு பேரும் பணம் போட்டு ஆரம்பித்தது தான் இந்தக் கன்ஸ்ட்ரக்ஷன் தொழில். லிவர்பூல் ஸ்ட்ரீட்டில் ஆஃபீஸ் வைத்து நடத்தும் அளவிற்கு இன்று வளர்ந்து நிற்கிறது.

‘எஸ் டீ கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்’ என்றால் இங்கு மிகவும் பிரசித்தம். மூத்த தலைமுறைக்கு ஓய்வு அவசியமானதால் மித்ரமதி இன் வசம் தொழில் ஒப்படைக்கப்பட்டது.

சந்திரசேகர் மகளைத் தன் தொழிலுக்கு ஏற்ற படிப்பைத் தான் தெரிவு செய்து படிக்க வைத்திருந்தார். அவர் சொத்துக்கள் அத்தனைக்கும் அவள் தான் வாரிசு என்பதால் நிர்வாகத்துறையில் தேர்ச்சி பெற வைத்திருந்தார்.

மித்ரமதி யும் சளைத்தவள் அல்ல. ஆக்ஸ்போர்டு யூனிவர்ஸிட்டி. படிப்பில் படு சுட்டியாக இருந்தவளுக்கு இந்தக் கல்யாணங்களில் மட்டும் தான் இன்னும் நாட்டம் சிறிதும் வரவில்லை.

அதனால் எப்போதும் பாட்டியோடும் அம்மாவோடும் மல்லுக்கு நிற்பாள் பெண்.

பிறந்து நான்கு வயது வரை வளர்ந்தது இந்தியா என்றாலும் அதன் பிறகு முற்று முழுதாக லண்டன் வாசி ஆகிப் போனதால் இந்தத் திருமண பந்தத்தில் அத்தனை கவர்ச்சி ஏற்படவில்லை.

தனது வாழ்க்கையை இன்னொருத்தர் வசம் ஒப்படைக்கும் விசால மனம் இதுவரை அவளுக்கு வரவில்லை. தான் செய்யும் அத்தனை காரியங்களுக்கும் இன்னொருவருக்கு விளக்கம் கொடுக்கவும் அவளால் முடியாது.

ஆனால் தேவகி மகளை இந்தியக் கலாச்சாரத்தில் தான் வளர்த்திருந்தார். அவள் கருத்துகளுக்கு மரியாதை கொடுத்தாலும் மற்றைய விஷயங்களில் அம்மா இன்றுவரை சராசரி இந்தியப் பெண்தான் என்பது மகளுக்கும் தெரியும்.

“சரியாப் பாடல் முடியுற நேரத்துக்கு ஒரு நேயர் வந்திருக்காங்க. அவங்க யாருன்னு பாரத்திடலாம். வணக்கம்! யாரு பேசுறீங்க?”

“டீ கொழந்தே! நான் அம்புஜம் மாமி.”

“மாமி… வாங்கோ வாங்கோ. என்ன ரொம்ப நாளா ஆளையே காணோம்?” இவர்கள் சம்பாஷனையை ஆரம்பிக்க மித்ரமதி யின் முகத்திலும் உற்சாகம் தொற்றிக் கொண்டது.

அம்புஜம் மாமி பார்கவி யின் தீவிர ரசிகை. அடிக்கடி ஃபோன் பண்ணிப் பேசும் அளவிற்கு பார்கவி மேல் அத்தனை அன்பு. அவளும் அந்த மாமிக்கு ஈடுகொடுப்பாள்.

“எங்கேடி ம்மா! உன்னோட ப்ரோக்ராம் ஆரம்பிச்சுட்டா எல்லாரும் ஃபோனைத் தூக்கிடுறா. பின்ன நேக்கு எங்கிருந்து லைன் கெடைக்கிறது?”

“மாமா எங்க மாமி?”

“அந்த மனுஷனுக்கு என்ன? நன்னா வயித்தை ரொப்பிட்டு கட்டையைச் சாச்சுட்டார்.”

“ஐயோ மாமி! சாப்பிட்டதும் உடனே தூங்கக் கூடாது.”

“அதெல்லாம் நீ சொல்றது நேக்குப் புரியுது. அவருக்கு எங்க புரயுறது. அதை விடு. டீ பார்கவி!”

“சொல்லுங்கோ மாமி.”

“நேக்கு அந்த ‘பாவ மன்னிப்பு’ படத்திலேர்ந்து ‘அத்தான் என் அத்தான்’ பாட்டு போடுடீ கொழந்தே. கேட்டே ரொம்ப நாளாச்சு.”

“அம்புஜம் மாமி கேட்டு நான் இல்லைன்னு சொல்லுவேனா? பாட்டு வந்துக்கிட்டே இருக்கு மாமி.”

இவர்கள் பேசி முடிக்க வாய்விட்டுச் சிரித்தாள் மித்ரமதி. இந்தியா போகும்போது இந்த பார்கவியைக் கண்டிப்பாக ஒரு முறை சந்திக்க வேண்டும்.

எண்ணமிட்ட படி காரைப் பார்க்கிங் இல் விட்டு விட்டு லிஃப்ட் ஐ நோக்கிப் போனாள். ஐந்தாவது தளம் முழுவதும் இவர்கள் கம்பெனிக்குச் சொந்தம்.

காலை வணக்கம் வைத்த அனைவருக்கும் பதில் வணக்கம் சொன்னவள் தன் அறைக்குள் நுழைந்தாள்.

“குட் மார்னிங் மேடம்.”

“குட் மார்னிங் ரிச்சர்ட்.” அந்த ஆஜானுபாகுவான வெள்ளைக்காரன் மித்ரமதியின் அசிஸ்டன்ட். மிகவும் நம்பிக்கையானவன்.

அலட்டல் இல்லாத தனது இளம் முதலாளி மீது அன்பு, மரியாதை, ஏன்… லேசாகக் காதல் கூட உண்டு. அதை நாசூக்காகப் பல வழிகளில் தெரியப்படுத்தியும் இருக்கிறான்.

ஆனால், அவன் தன்னை வெளிக்காட்டும் பொழுதுகளில் எல்லாம் கண்டிப்பை மட்டுமே காட்டுபவளிடம் மேற்கொண்டு முன்னேற முடியவில்லை. தோளைக் குலுக்கி விட்டுப் போய் விடுவான்.

பிடிக்கும்… அவ்வளவுதான். அதற்காக தாடி வைக்கும் அளவிற்கு அவன் முட்டாள் அல்ல. அக்மார்க் வெள்ளைக்காரன்.

“ரிச்சர்ட், இன்னைக்குப் ப்ரோக்ராம் என்ன?” அவள் கேட்டதுதான் தாமதம், தன் கையிலிருந்த நவீன தொழில்நுட்பத்தை உயிர்ப்பித்தவன் அன்றைய நிகழ்ச்சி நிரலை மளமளவென்று ஒப்புவித்தான்.

“ம்… பிரிப்பேர் பண்ணின கொட்டேஷனை அனுப்பிட்டீங்களா?”

“யெஸ் மேடம்.”

“குட். அங்கிள் யாராவது இன்னைக்கு ஆஃபீஸ் வர்றாங்களா?” சந்திரசேகரின் நண்பர்கள் யாராவது பங்குதாரர்கள் என்ற வகையில் ஆபீஸுக்கு அவ்வப்போது வருவது வழக்கம்.

“நோ மேடம். இன்னைக்கு யாரும் வரலை.”

“அந்த லைப்ரரிக்கான டிசைன் ரெடி ஆச்சா?”

“வேலை நடந்துக்கிட்டு இருக்கு மேடம்.”

“கொஞ்சம் சீக்கிரமா முடிக்க சொல்லுங்க ரிச்சர்ட்.”

“ஓகே மேடம். இந்த வீக் என்ட் உங்க அம்மாவுக்கு ஹாஸ்பிடல் அப்பாயின்மென்ட் புக் பண்ண சொல்லி இருந்தீங்க. அது டன் மேடம்.”

“தான்க் யூ ரிச்சர்ட்.” இதுதான் ரிச்சர்ட். மித்ரமதியின் வேகத்துக்கு அவனால் ஈடு கொடுக்க முடியும். ஆஃபீஸையும் தாண்டி அவள் மேல் அக்கறை எடுத்துக் கொள்வான், ஒரு நல்ல நண்பனைப் போல.

ஆனால், அதைத் தாண்டிப் போக இவள் நினைக்கவில்லை. அன்றையப் பொழுது வேலைகளோடேயே கழிந்து போனது.

***************

மான்ஹட்டன், நியூயார்க் சிட்டி. வெள்ளிக்கிழமை மாலை ஐந்து மணி.

வானைத் தொட்டுவிடும் நோக்கத்தோடு ஓங்கி உயர்ந்திருந்த அந்த நகரம் வார இறுதிக்காகக் கலகலவென்று ஆயத்தமாகிக் கொண்டிருந்தது.

தனது ஆஃபீஸில் படு பிஸியாக வேலை பார்த்துக் கொண்டிருந்தான் கார்த்திக் ஹரிகிருஷ்ணா. இந்த வாரம் முழுவதும் வேலை செய்த களைப்பு அவன் முகத்தில் தெளிவாகத் தெரிந்தது.

கார்த்திக்கை முதல் முதலாகப் பார்ப்பவர்கள் அவன் பெயரைக் கேட்கும் போது ஆச்சரியப்பட்டுப் போவார்கள்.

“ஆர் யூ அன் இன்டியன்?”

“யெஸ் ஐ ஆம்.” எந்த வித ஒளிவு மறைவும் இல்லாமல் தான் ஒரு இந்தியத் தாய் தகப்பனின் மகன் என்பதைப் பெருமையாகச் சொல்லிக் கொள்வான்.

ஆனால், அவன் பிறந்தது வளர்ந்தது எல்லாமே அமெரிக்கா தான். கார்த்திக்கின் அப்பா சக்ரதேவ் வடநாட்டுக்காரர். அதனால் பார்த்ததும் அத்தனை சுலபத்தில் கார்த்திக்கின் வேர்களை இனங்கண்டு சொல்லி விட முடியாது.

அம்மா பத்மா, சுத்தத் தமிழச்சி. அன்றைய காலத்திலேயே கலப்புத் திருமணம் செய்து கொண்ட காதல் தம்பதியினர். கல்யாணம் முடிந்த கையோடு அமெரிக்கா வந்து விட்டார்கள்.

அதன்பிறகு வாழ்க்கை அப்படியே ஓடி விட்டது. பத்மா எவ்வளவு முயன்றும் கடைசி வரை தாய்நாட்டில் வாழ்வதென்பது கனவாகித் தான் போய்க் கொண்டிருக்கிறது.

எத்தனை முயன்றும் கணவனையும் மகனையும் அமெரிக்காவில் இருந்து பத்மாவால் கிளப்ப முடியவில்லை. கணவனையாவது கொஞ்சம் சரிக்கட்டி விடலாம். மகன்… ஊஹூம்!

அம்மாவைச் சந்தோஷப்படுத்த அவன் செய்யும் ஒரே வேலை, வீட்டில் தமிழ் பேசுவது தான். தஸ்ஸு புஸ்ஸென்று இங்கிலிஷ் இல் பேசினாள் பத்மா கொலை வெறி ஆகி விடுவார்.

ஆவி பறக்கும் காஃபியை கார்த்திக்கின் முன் வைத்தான் மார்க். கார்த்திக்கின் வலது கை, இடது கை எல்லாமே அவன் தான். முதலாளியின் தேவைகள் அனைத்தும்… அனைத்தும் அறிந்த அதி புத்திசாலி.

கார்த்திக்கின் முகம் பார்த்தே அவன் மனம் படிப்பான். ஒரு முதலாளிக்குத் தன் காரியதரிசி ‘ஆஃபீஸ் மனைவி’ என்பது இவனுக்குச் சரியாகப் பொருந்தும்.‌

காஃபியை எடுத்துக் கொண்ட கார்த்திக் நன்றியாகப் புன்னகைத்தான். அடிக்கடி புகைக்கும் பழக்கம் இல்லாததால் இளஞ்சிவப்பு வண்ணத்தில் இருந்தது அவன் உதடுகள்.

அவனை அதிகம் வர்ணிக்கத் தேவையில்லை. கம்பீரமான அழகன். சுண்டினால் ரத்தம் வந்து விடும். ஆனால்… திராவிட நிறத்தில் இருந்திருந்தால் இன்னும் கம்பீரமாக இருந்திருப்பானோ!

கார்த்திக்கின் முன்னால் இருந்த சிஸ்டத்தில் சிசிடிவி யை உயிர்ப்பித்தான் மார்க். ரிசப்ஷன் ஏரியா கனெக்ட் ஆனது. கேள்வியாகப் பார்த்தான் கார்த்திக்.

“சார்… டுடே ஃப்ரைடே…”

“ம்… ஐ நோ…”

“பிஸினஸ் மாகஸின் ல உங்க ஃபோட்டோ வந்த நாள்ல இருந்து…” மார்க் கோணலாகப் புன்னகைக்க, இப்போது கார்த்திக் திரையை நன்றாக ஊன்றிப் பார்த்தான்.

“எவ்வளவு சொல்லியும் கேக்கலை. நீங்க வீக் டேய்ஸ்ல டேட் குடுக்க மாட்டீங்க ன்னு சொல்லியும் புரிஞ்சுக்கலை. ஒரே தொந்தரவு. அதான்… இன்னைக்கு வரச்சொன்னேன்.”

“ஓ…” கார்த்திக்கின் கண்களில் ஒரு சுவாரசியமான பார்வை தோன்ற வாய் லேசாக விசிலடித்தது.

காஃபியைச் சுவைத்தவன் விழிகள் ஸ்க்ரீனில் தெரிந்த அழகையும் சுவைத்தது. அடர் சிவப்பில் ஆடை அணிந்திருந்தாள். தைத்த பின் அணிந்தாளா… இல்லை அணிந்து கொண்டே தைத்தாளா… என்று கேட்கும் அளவிற்கு அவள் அழகுகளை அசிங்கமில்லாமல் எடுத்துக் காட்டியது அவள் ஆடை.

‘ஆள் பாதி ஆடை பாதி’ என்பதில் கார்த்திக்கிற்கு அத்தனை உடன்பாடு உண்டு. தன் எதிரில் இருப்பவரின் மனதை அவர் ஆடைகள் கொண்டு பாதி புரிந்து விடுவான்.

‘இந்த அராபியன் ஹார்ஸ் மனதில் என்ன இருக்கும்?’ எண்ணமிட்ட படி வேலைகளை முடித்தவன் கையை உயர்த்திச் சோம்பல் முறித்தான்.

இப்போது பரபரப்பு மார்க்கைத் தொற்றிக் கொண்டது. ஓடியே போனவன் அந்த இளம்பெண்ணைக் கையோடு அழைத்து வந்தான்.

கார்த்திக்கின் அர்த்தமுள்ள ஒரு பார்வை மார்க்கை ரூமை விட்டு வெளியேறச் செய்தது. அவனுக்குத் தெரியும், தனக்குக் கீழே வேலை செய்பவர்களை எங்கே நிறுத்த வேண்டும் என்று. இல்லையென்றால் இத்தனை பெரிய தொழில் சாம்ராஜ்யத்தைக் கட்டி ஆள முடியாதே!

இவன் கையைக் காட்டவும் நாற்காலியில் அமர்ந்து கொண்டது பெண். கண்களில் அவ்வளவு மயக்கம். கார்த்திக்கிற்குப் படு சுவாரசியமாக இருந்தது.

“ஹாய் ஸ்வீட்டி.” அந்தக் குரலின் கம்பீரம் எதிரிலிருப்பவளை வசீகரித்திருக்க வேண்டும். மனதை முகத்திலேயே காட்டினாள்.

“ஐம் ஜெனி.”

“ம்ஹூம்…” அமெரிக்கப் பெண்களுக்கும் வெட்கம் வருமோ! ஆச்சரியமாக இருந்தது கார்த்திக்கிற்கு. அவனுக்கு இது புதிது.

பெரும்பாலான வார இறுதி நாட்கள் கெஸ்ட் ஹவுஸில் தான் கழிந்திருக்கிறது. பார்த்ததை அவன் திரும்பிப் பார்க்க என்றும் பிரியப் பட்டதில்லை. ஆனால்…‌ இது போல வெட்கத்தை அவன் இன்று வரை பார்த்ததில்லை.

அவன் அந்தக் கண்களை ஆழ்ந்து பார்க்க அதைத் தாங்க முடியாமல் தலை தாழ்த்திக் கொண்டாள். கார்த்திக்கின் கண்கள் லேசாகச் சுருங்கியது.

அந்த நாணம் லேசாக அவனைச் சிந்திக்க வைத்தது. இது இரண்டு நாட்களோடு முடிந்து போவது போல் தெரியவில்லையே!

சிந்தனையைத் தூர வைத்தவன் எதிரில் ஆவலே உருவாக இருந்தவளோடு கை கோர்த்துக் கொண்டான். வார இறுதி அவர்களை அன்போடு வரவேற்றது.

****************

“தேவ்!” நேரம் இரவு பதினொன்றையும் தாண்டவும் பத்மாவின் குரல் உஷ்ணமானது. பக்கத்தில் அமர்ந்திருந்த சக்ரதேவின் முகத்திலும் கலவரம் தெரிந்தது.

“இத்தனை நேரமாச்சு? எங்க உங்க பையனை இன்னும் காணோம்?”

“கூல் பத்மா. எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகுற?”

“பதினொரு மணி ஆச்சு. இன்னும் உங்க பையன் வீட்டுக்கு வரலை. அதை என்னன்னு பார்க்காம என்னை சமாதானம் பண்ணுறீங்களா?” பத்மாவின் குரல் உயர்ந்து கொண்டே போனது.

“என்ன பத்மா? உனக்கும் எம் பையனுக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி பேசுற?” கேலி பண்ணியாவது மனைவியைத் தணிக்க முயன்றார் தேவ்.

“சம்பந்தமே இல்லை தேவ். அவன் என் பையனாவும் இருந்திருந்தா ஒரு அம்மாவா நான் அவனைக் கண்டிச்சப்போ நீங்க அமைதியா இருந்திருப்பீங்களே! அதை நீங்க பண்ணலையே. எப்பவும் கார்த்திக்குக்கே சப்போர்ட் பண்ணினீங்க. இப்போ எங்கே போய் முடிஞ்சிருக்கு பார்த்தீங்களா?”

மனைவியின் பேச்சில் இருந்த நியாயம் அந்தக் கணவனைச் சுட்டது. அமைதியாக வாயை மூடிக் கொண்டார்.

பிறந்தது வளர்ந்தது எல்லாமே அமெரிக்கா என்பதால் ஒரு கட்டத்திற்கு மேல் மகனின் நடவடிக்கைகளை ஒரு தந்தையாக சக்ரதேவ் கண்டிக்கத் தவறிவிட்டார்.

தவறினார் என்று சொல்ல முடியாது. ஆரம்பத்தில் மகனின் செய்கைகள் நாகரிகமாகத் தெரிந்த போது பெருமைப்பட்ட தந்தைக்கு பிற்பாடுதான் அதன் வீரியம் புரிந்தது.

ஆரம்பத்திலேயே கண்டித்த மனைவியின் வார்த்தைகளுக்கான அர்த்தம் காலங்கடந்து புரிந்தது. இனிப் புரிந்து என்ன பண்ண? கை மீறிப் போன மகனை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லையே!

“ஒரு வயசுக்கு மேல தோளுக்கு மேல வளர்ந்த பையனை எதுவும் சொல்ல முடியலை பத்மா. ப்ளீஸ்… புரிஞ்சுக்கோ.”

“அவன் எவ்வளவு தான் வளர்ந்தாலும் நான் பெத்த பையன் தானே? என்னால அவனைக் கண்டிக்க முடியும். நீங்க இனிமேலாவது அமைதியா இருங்க தேவ். எம் பையனை நான் திருத்தும் போது தயவு பண்ணி குறுக்கே வராதீங்க. இவன் அடிக்கிற கூத்தை இன்னும் கொஞ்ச நாள் பார்த்தா நான் போய் சேர்ந்திடுவேன் தேவ்.”

மனைவியின் குரல் கலங்கவும் அவரை இழுத்து அணைத்துக் கொண்டார் கணவன். ஒரு சில வீக் என்டுகளில் கார்த்திக் வீடு வராவிட்டால் இப்படியொரு பிரளயம் வெடிப்பது வழக்கம் தான். ஆனால் இதற்கு மேலும் பத்மா அமைதியாக இருக்க மாட்டார் என்றுதான் அவருக்குத் தோன்றியது.

இது, இங்கே, இப்படி நடந்து கொண்டிருக்க… அங்கே கார்த்திக் அந்த கெஸ்ட் ஹவுஸின் பால்கனியில் கால்நீட்டி அமர்ந்திருந்தான். முன்னால் இருந்த டேபிளில் தங்க நிறத்தில் ஒரு பானம் இரண்டு ஐஸ் க்யூப் கள் மிதக்க அமர்ந்திருந்தது.

ஜன நெருக்கடி இல்லாத அந்த ஒதுக்குப்புறத்தின் சுத்தமான காற்றை ஆழ்ந்து உள்ளிழுத்தான். பச்சை வாசம் நாசியை நிரப்பியது.

தன் கழுத்தைச் சுற்றிய அந்தத் தளிர்க் கரத்தின் ஸ்பரிசத்தில் கவனம் கலைந்தவன் திரும்பிப் பார்த்தான். இப்போது லேசாகக் கலைந்திருந்தது அந்த அராபியன் குதிரை.

லேசாகப் புன்னகைத்தவன் அந்தக் கைகளை விலக்கித் தன்னருகே அமரச் செய்தான். அவனையே பார்த்திருந்த அந்தக் கண்களில் மயக்கத்தையும் தாண்டி இப்போதும் காதல் வழிந்தது.

ஒரு நிமிடம் அவளையே கூர்ந்து பார்த்தவன் சட்டென்று பார்வையைத் திருப்பிக் கொண்டான். முன்னாலிருந்த பானம் கொஞ்சம் உள்ளே இறங்கியது.

அந்தப் பார்வை சொன்ன அர்த்தத்தை அவன் ரசிக்கவில்லை. இந்த விளையாட்டில் காதலுக்கு இடமில்லையே! விதிமுறைகள் தெரியாமல் பெண் விளையாட வந்து விட்டதா?

இரண்டு நாட்கள் தங்கும் தீர்மானத்தோடு வந்தவன் அப்போதே அந்த இடத்தை விட்டு நகர முடிவெடுத்தான்.

சட்டென்று எழுந்தவன் மார்க் ஐத் தொலைபேசியில் அழைத்தான். ஒரு சில கட்டளைகள் இட்டபடி அவன் வெளியேற அந்தக் கண்கள் இப்போது அவனை ஏக்கத்தோடு பார்த்தது.

நின்றுவிடச் சொன்ன மனதை அடக்கியவன் தனது ப்ளாக் ஆடியை நோக்கி விறுவிறுவென்று போய் விட்டான். அந்த அர்த்த ராத்திரியில் அமைதியாக நகர்ந்தது அந்தக் கரும்புலி.

***

கார்த்திக் காரை வீட்டின் முன் நிறுத்தும் போது சரியாக அவன் ஃபோன் சிணுங்கியது. மார்க் அழைத்துக் கொண்டிருந்தான்.

“யெஸ் மார்க்.”

“சார்…”

“சொல்லு… என்னாச்சு?”

“செக் குடுத்தேன். வாங்கலை சார்.”

“வாட்! ஆர் யூ மேட்?”

“வேணாம்னு சொல்லும் போது என்னால என்ன பண்ண முடியும்?”

“ஸ்டுப்பிட்! எனக்கு இதெல்லாம் பிடிக்காது மார்க். ஜஸ்ட் பிஸினஸ்… அவ்வளவுதான்.”

“அந்தப் பொண்ணோட கண்ணைப் பார்த்தா இது ஜஸ்ட் பிஸினஸ் மாதிரித் தெரியலை சார். சம்திங் ரொமாண்டிக்.”

“யோவ்!” மார்க் வாய்விட்டுச் சிரிக்க இப்போது கார்த்திக்கும் புன்னகைத்தான்.

“ஒழுங்கா விசாரிக்க மாட்டியா மார்க்? இதெல்லாம் எனக்கு ஒத்து வராதுன்னு உனக்கு நல்லாவே தெரியும்.”

“இனி ரொம்பவே கவனமா இருக்கேன் சார்.”

“ம்… ஏதாவது கிஃப்ட் மாதிரி அனுப்பிடு. இந்த… ஜுவல்ஸ்… அப்படி…”

“டன் சார். குட்நைட். ஸ்வீட் ட்ரீம்ஸ்.” அந்தக் குரலின் கேலி கார்த்திக்கையும் தொற்றிக்கொள்ள உள்ளே போனான். அவன் திறக்கும் முன்பாக வீட்டின் கதவு திறந்து கொண்டது.

“அம்மா!” கதவைத் திறந்த பத்மாவைப் பார்த்த போது கார்த்திக் திடுக்கிட்டு விட்டான்.

“நீங்க இன்னும் தூங்கலையா ம்மா?”

“அது கொஞ்ச நாளாத் தொலைஞ்சு போச்சு. நீ எங்க போய்ட்டு வர்ற இந்த நேரத்துல?”

“கெஸ்ட் ஹவுஸ் வரைக்கும் போயிருந்தேன்.”

“எதுக்கு?”

“வேலை… வேலை இருந்தது ம்மா.”

“வேலையை ஆஃபீஸ் ல வச்சுப் பார்க்க வேண்டியது தானே? அதுக்கு எதுக்கு கெஸ்ட் ஹவுஸ்?” இந்தக் கிடுக்கிப்பிடியில் கார்த்திக் திணறிப் போனான்.

அம்மா இது வரை இப்படி நேரடியாகத் தாக்கியது கிடையாது. எப்போதும் துணை வரும் அப்பாவை அவன் கண்கள் தேடியது.

“அங்க யாரைத் தேடுற? இனி யாரும் உனக்கு வக்காலத்து வாங்க வர மாட்டாங்க. இன்னைக்கு உனக்குக் கடைசியும் முதலுமாச் சொல்லுறேன் கார்த்திக். இவன் எம் பையன்னு நான் உன்னைப் பெருமையா நாலு பேரு கிட்டக் காட்டணும். அதுக்கு ஏத்தா மாதிரி நடக்கப்பாரு.”

“வொய் நாட் ம்மா? நீங்க நாலு பேரு கிட்ட பெருமையாக் காட்டுற மாதிரித்தான் என் பிஸினஸ் இருக்கு.”

“நான் என்ன பேசுறேன்னு உனக்கு நல்லாவே தெரியும். தெரியாத மாதிரி நடிக்கிற வேலையை எல்லாம் உங்கப்பாவோட நிறுத்திக்கோ. இந்த வீட்டுல இனி நான் இருக்கிறதும் இல்லாமப் போறதும் உன் கைல தான் இருக்கு.”

“ம்மா… ப்ளீஸ். நோ மெலோ ட்ராமாஸ்.”

“ஆமா கார்த்திக். அம்மா இதுவரைக்கும் நாடகம் மாதிரி ஒரு வாழ்க்கை தான் வாழ்ந்துட்டேன். உங்கப்பா பேச்சைக் கேட்டுக்கிட்டு ஊரை விட்டு உறவை விட்டு நாட்டை விட்டு என் வாழ்க்கை ஒரு நாடகம் மாதிரித்தான் போயிடுச்சு. ஆனா இனியும் வேஷங்கட்ட என்னால முடியாது. உள்ளதும் ஒரு புள்ளை நீ. உன்னையே என்னால உருப்படியா வளர்க்க முடியலை ன்னா…” வார்த்தைகள் சிக்கத் தடுமாறினார் பத்மா.

“அம்மா… ப்ளீஸ்.‌ போதும்.”

“இந்த அம்மாவைக் கையாலாகாதவ ன்னு நினைச்சியா கார்த்திக்? வீடு, வாசல், தோட்டம், தொரவு, சொந்த பந்தம் ன்னு அத்தனையும் என்னோட ஊர்ல குமிஞ்சு கிடக்கு. போய்ச் சேர்ர காலம் நெருங்குது. இப்போவாவது நான் தொலைச்ச வாழ்க்கையை வாழ்ந்துட்டு என் சொந்த மண்ணுல சாகுறேன். உனக்கு ஒன்னு மட்டும் சொல்லுறேன் கார்த்திக். அம்மா கடைசி வரை வேணும்னா உருப்படியா வாழப் பாரு. இல்லைன்னா உனக்கு அப்பா மட்டும் தான். நீ இன்னும் இன்னும் சீரழியுறதைப் பார்க்கிற சக்தி எனக்கு இல்லை.”

கோபமாகப் பேசி முடித்த பத்மா உள்ளே போய் விட்டார். கார்த்திக் தலையைக் கோதிக் கொண்டான். மனதில் விரவிக் கிடந்த மகிழ்ச்சி வடிந்து போயிருந்தது.

லேசாகத் தோளைக் குலுக்கிய படி உள்ளே போய்விட்டான். அந்தக் கண்களில் ஒரு அலட்சிய பாவம் வந்து சேர்ந்திருந்தது.

error: Content is protected !!