Manmo5

“அண்ணா!”

“சொல்லு நந்து.” புரண்டு படுத்தபடியே ஃபோனைக் காதுக்குக் கொடுத்தான் கார்த்திக்.

“தூங்குறியா என்ன? டிஸ்டேர்ப் பண்ணிட்டேனா?”

“அதெல்லாம் இல்லடா. புதுசா ஒரு பிஸினஸ் பின்னாடி அலையுறேன். அதான் கொஞ்சம் அலைச்சல் ஜாஸ்தி. நீ சொல்லுடா.”

“அண்ணா… பார்கவியை மீட் பண்ணினேன்.”

“ம்… சொல்லு சொல்லு.” உற்சாகமாகப் புன்னகைத்தபடி இப்போது எழுந்து உட்கார்ந்து கொண்டான் கார்த்திக். அண்ணனின் சிரிப்பிற்கு எதிரொலியாக இப்போது நந்தகுமாரும் புன்னகைத்தான்.

“அது… அண்ணா… கல்யாணம் பண்ணலாம்னு முடிவு பண்ணி இருக்கோம்.”

“நந்தூ… சூப்பர் டா.” பக்கத்து ரூமிற்குக் கேட்கும் அளவிற்குச் சத்தம் போட்டான் கார்த்திக்.

“இப்படியொரு வார்த்தை உன் வாயிலிருந்து எப்போ வரும்ன்னு தான் நானும் சித்தியும் இத்தனை நாளாக் காத்துக்கிட்டு இருந்தோம். ரொம்பவே சந்தோஷமா இருக்கு டா.”

கார்த்திக்கின் குரலில் நிஜமான அக்கறை தெரிந்தது.

“அண்ணா! முடிவு என்னவோ எடுத்துட்டேன். ஆனா… சின்னதா ஒரு குழப்பம் இருக்குதுதான் ண்ணா.”

“இதுல நீ குழப்பிக்க ஒன்னுமே இல்லையே நந்து.”

“அது தான் உனக்கு ஃபோன் பண்ணினேன். நீ சரின்னு சொன்னா எனக்கு யானை பலமா இருக்கும் ண்ணா.”

“அண்ணா சொல்லுறேன் நல்லாக் கேட்டுக்கோ. இப்போதான் சரியான முடிவு எடுத்திருக்கே. இதுல இருந்து பின் வாங்கிடாதே. கோ அஹெட் நந்து.”

“எல்லாம் சரியா இருக்கும்ல ண்ணா?”

“எல்லாம் சிறப்பாவே இருக்கும். நீ கவலையே படாதே. நான் சித்திக்கிட்ட பேசட்டுமா?”

“சரி ண்ணா.”

நந்தகுமார் தொடர்பைத் துண்டிக்கவும் ஒரு துள்ளலோடு எழுந்த கார்த்திக் ஜன்னல் திரையை இழுத்து விட்டான். ஆளுயரமாக இருந்த கண்ணாடி ஜன்னல்கள் லண்டன் மாநகரின் காலை நேரப் பரபரப்பை அழகாக எடுத்துக் காட்டியது.

‘மான்ஹட்டன்’ இல் பரபரப்பு இதை விட அதிகமாக இருக்கும் என்று எண்ணிய படி பாத்ரூமிற்குள் நுழைந்து கொண்டான் கார்த்திக்.

‘எஸ் டி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்’ கைக்கு வந்து ஒரு மாதம் ஓடிப்போயிருந்தது. முதல் வாரம் மட்டும் லண்டனில் இருந்தவன் அதன் பிறகு அமெரிக்கா போய்விட்டான். அங்கிருந்த தொழிலையும் கவனிக்க வேண்டுமே.

எல்லாவற்றையும் ஒரு ஒழுங்கிற்குக் கொண்டு வந்த பின்பு அனைத்தையும் மித்ரமதியின் கையில் ஒப்படைத்து விட்டுக் கிளம்பிவிட்டான்.

சும்மா சொல்லக்கூடாது. பெண் படு சூட்டிகையாக இருந்தாள். கார்த்திக் எள் என்னும் முன் எண்ணெயாக நின்றாள். அந்த வேகம் இவனுக்கும் பிடித்திருந்தது.

தன்னை ஒரு வித மயக்கத்துடனே பார்க்கும் பெண் விழிகளையே இதுநாள் வரை பார்த்துப் பழகி இருந்தவனுக்கு, கருமமே கண்ணாக இருக்கும் இந்த விழிகள் விசித்திரமாக இருந்தது.

நிதமும் தொலைபேசியில் தொடர்பு கொண்ட வண்ணம் தான் இருந்தான். இடைப்பட்ட காலத்தில் இரண்டு கொட்டேஷன்கள் அனுப்பி இருந்தார்கள்.

மித்ரமதியின் தலைமையில் அனைத்துக் காரியங்களும் நடந்தாலும், கடைசித் தொகை கார்த்திக்கின் முடிவாகவே இருந்தது.

ஊழியர்கள் யாருக்கும் கொட்டேஷனில் குறிப்பிடப்பட்டிருந்த தொகை எதுவெனத் தெரியாது. ரிச்சர்ட் உட்பட. மித்ரமதிக்கு அதில் லேசான வருத்தம் இருந்தாலும் எதையும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.

இரண்டு ப்ராஜெக்ட்களுமே இவர்கள் கைக்கு வந்திருந்தது. முதல் முறையாக மித்ராவே இவனைத் தொடர்பு கொண்டு தன் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டாள்.

கார்த்திக்கிற்கும் மகிழ்ச்சியாக இருந்தது. சோகத்தை அப்பிக்கொண்டு அந்த ஒரு வாரமும் நடமாடிய முகத்தில் சந்தோஷத்தைப் பார்க்கவே அடுத்த ஃப்ளைட்டில் கிளம்பி வந்திருந்தான்.

எண்ணங்களை அசை போட்டபடி குளியலை முடித்தவன் பாத்ரூமை விட்டு வெளியே வந்தான். நந்தகுமாரைப் பற்றி நினைத்த போது மகிழ்ச்சி கொப்பளித்தது.
லதா சித்தி இந்தத் தகவலை இரண்டு வாரங்களுக்கு முன்பே இவனிடம் சொல்லிவிட்டார். பையன் வாயிலிருந்தே தகவல் வரட்டும் என்று தான் கார்த்திக்கும் காத்திருந்தான்.

இனித் தாமதிக்கத் தேவையில்லை. கல்யாண வேலைகளில் இறங்கி விட வேண்டியதுதான். நந்தகுமாரின் திருமணத்திற்குக் கட்டாயம் இந்தியா போக வேண்டும். இல்லையென்றால் சித்தி கட்டி வைத்து உதைப்பார்.

வாட்ரோபைத் திறந்து தனக்கான ஆடைகளைத் தெரிவு செய்தவன் அதே கையோடு ப்ரேக் ஃபார்ஸ்டையும் ரூமிற்கே வரவழைத்தான்.

இம்முறையும் ஹோட்டல் வாசம்தான். இவன் எதிர்பார்ப்பிற்கு ஏற்றவகையில் இன்னும் வீடு அமையவில்லை. மார்க் அந்த விஷயத்தைப் பார்த்துக் கொள்வதால் இவன் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.
***

நேரம் சரியாகப் பத்து மணி. அந்தக் கட்டடத்தின் ஐந்தாவது மாடிக்கு லிஃப்ட்டில் வந்திறங்கினான் கார்த்திக். அவன் வருகை இம்முறை யாருக்கும் அறிவிக்கப் பட்டிருக்கவில்லை.

“குட் மார்னிங் சார்.” அதிர்ச்சியோடு வந்த காலை வணக்கங்களுக்கு ஒரு புன்னகையோடு பதில் வணக்கம் சொன்னவன் ஒரு முறை கண்களைச் சுழல விட்டான்.

ம்ஹூம்… எங்கேயும் அவளைக் காணவில்லை. கண்ணாடித் தடுப்புகளின் பின்னே தெரிந்த அவள் இருக்கையும் காலியாக இருந்தது.

கான்ஃபரன்ஸ் ரூமின் கதவைச் சட்டென்று திறந்தான் கார்த்திக். உள்ளே விவாதம் கடுமையாக நடந்து கொண்டு இருந்தது. மித்ரமதி, ரிச்சர்ட், இன்னும் இரு ஊழியர்கள்.

“மே ஐ கம் இன்?” முகஸ்துதிக்காகக் கேட்கப்பட்ட அனுமதி அது என்று சொல்லாமலேயே அங்கிருந்த அனைவருக்கும் புரிந்தது.

“குட் மார்னிங் சார்.” விவாதம் தடைப்பட்ட எரிச்சல் முகத்தில் தெரிந்தாலும் வந்திருப்பது முதலாளி என்பதால் எழுந்து வரவேற்றாள் பெண்.

“குட் மார்னிங் மித்ரமதி.” சொன்னவன் உள்ளே வந்து அங்கிருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்து கொண்டான்.

“சூடான விவாதம் ஒன்னு போகுது. எதைப் பத்தின்னு தெரிஞ்சுக்கலாமா?” அவன் கண்கள் மித்ரமதியைக் கேள்வி கேட்டது.

“புதிய ப்ராஜெக்ட் ஒன்னு மார்க்கெட்டுக்கு வந்திருக்கு சார். அதை எடுத்துக்கலாமா வேணாமா ன்னு டிஸ்கஸ் பண்ணுறோம்.”

“ம்ஹூம்…”

“லாண்ட் இருக்கிற இடம் கொஞ்சம் மலைப்பாங்கா இருக்கிறதால இந்த ப்ராஜெக்ட் ல நமக்கு அவ்வளவு லாபம் வர வாய்ப்பில்லை சார்.”

“ஏன் அப்படிச் சொல்லுறீங்க மித்ரமதி?”

“அந்த இடத்தைக் க்ளியர் பண்ணி சாதாரணமான லெவலுக்குக் கொண்டு வர்றதுக்கு நேரம் பணம்னு நிறைய செலவாகும். அதுக்கப்புறம் தான் வேலையை ஆரம்பிக்க முடியும். அதுலயே நம்ம பாதி லாபம் போயிடும் சார்.”

“ஓ…”

“அதனால நம்ம ஸ்டாஃப்ஸ் யாருமே இந்த ப்ராஜெக்ட் ல அவ்வளவு இன்ட்ரெஸ்ட் காட்டலை.” இதை மித்ரமதி சொன்னபோது கார்த்திக் ஒரு தினுசாகச் சிரித்தான்.

“அப்போ… இந்த ப்ராஜெக்ட் ல உங்களுக்கு இன்ட்ரெஸ்ட் இருக்கு… அப்படித்தானே மித்ரமதி?”

“ஆமா சார்…”

“இன்ட்ரெஸ்டிங்க்… மேலே சொல்லுங்க மித்ரமதி.”

“சார்… இந்த கம்பெனி இன்னைக்கு நேத்து ஆரம்பிச்சது கிடையாது. எஸ் டி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் ன்னா இங்க அதுக்குன்னு ஒரு தனி மரியாதை இருக்கு. லாபத்தை மட்டுமே மூலதனமா வச்சு இங்க இவ்வளவு காலமும் தொழில் நடக்கலை. ஒஃப் கோர்ஸ்… லாபம் முக்கியம்தான். இல்லேங்கலை… அதே நேரம் நம்ம இடத்தையும் நாம விட்டுக் குடுக்கக் கூடாதுன்னு நான் நினைக்கிறேன்.”

“குட்… இப்போ என்ன பண்ணலாம்னு நினைக்கிறீங்க?”

“இந்த ப்ராஜெக்ட் ல நமக்கு லாபம் வராது. ஆனா… அதே நேரம் நட்டமும் வரப்போறதில்லை. அதனால இந்தப் ப்ராஜெக்ட்டை எடுத்துப் பண்ணலாம் ங்கிறது என்னோட வாதம்.”

“ம்… உங்க எண்ணம் எனக்குப் புரியுது மித்ரமதி. லாபத்தையும் தாண்டி கம்பெனிக்கு இருக்கிற நல்ல பெயர் ரொம்பவே முக்கியம்னு நீங்க நினைக்கிறீங்க, ரைட்?”

“யெஸ் சார்.”

“கண்டிப்பா, உங்க கருத்தை நானும் ஆதரிக்கிறேன். லாபம் வேணாம். ஆனா கையைக் கடிக்காம பார்த்துக்கோங்க.” சட்டென்று அவன் சம்மதிக்கவும் திகைத்துப் போனாள் பெண்.

“சார்! நிஜமாத்தான் சொல்லுறீங்களா?”

“கார்த்திக் சொன்னா சொன்னதுதான் மேடம்!” அவன் கேலி போல சொல்ல அங்கிருந்த அனைவரும் அத்தோடு கலைந்து போனார்கள். ஆனால் மித்ரமதிக்கு அந்தப் பார்வையும் பேச்சும் வேறு சேதி சொன்னது. தலையை உலுக்கித் தன்னை மீட்டுக் கொண்டாள் பெண்.

அன்று முழுவதும் மித்ரமதியின் நேரம் கார்த்திக் உடனேயே கழிந்தது. அந்த ஒரு மாத காலமாக கம்பெனியில் நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளையும் அவனுக்கு விளக்கினாள்.

வாரா வாரம் கம்பெனி ரிப்போர்ட் அவனுக்கு மெயிலில் அனுப்பப்பட்டது. இருந்தும் கார்த்திக்கிற்கு அவளிடம் கேட்க ஆயிரம் கேள்விகள் இருந்தன. எல்லாவற்றையும் பொறுமையாகக் கையாண்டாள் மித்ரமதி.

காஃபி கொண்டு வந்த ரிச்சர்ட் கூட கேலியாக மித்ரமதியைப் பார்த்துப் புன்னகைத்தான். பல்லைக் கடித்தபடி இவள் முறைக்கவும் நல்ல பிள்ளை போல நழுவி விட்டான்.

“மித்ரா!”

“சொல்லுங்க சார்.” இப்போதெல்லாம் அவன் வாயில் அவள் பெயர் இப்படித்தான் வந்தது.

“இன்னைக்கு ஈவ்னிங் ஃபங்ஷனுக்கு நீங்களும் வர்றீங்க தானே?” கார்த்திக்கின் கேள்விக்கு அவளால் பதில் சொல்ல முடியவில்லை.

கட்டுமானத் தொழிலில் இருப்பவர்களுக்கான வருடாந்திர ஒன்று கூடல் அது. ஒவ்வொரு வருடமும் இவர்கள் கம்பெனி சார்பாக இவளும் ரிச்சர்ட்டும் கலந்து கொள்வது வழக்கம்.

சில நேரங்களில் அபூர்வமாக மாமன்களில் யாராவது ஒருவர் கலந்து கொள்வார்கள்.

ஆனால் இப்போதுதான் நிலைமை தலைகீழாக மாறிவிட்டதே! கம்பெனி உரிமையாளர் என்ற வகையில் கார்த்திக் கலந்து கொள்வது முறை. தான் எப்படிப் போவது? போனாலும் நிறையக் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டுமே!

“என்ன மித்ரா… ரொம்பவே யோசிக்கிறீங்க?”

“இல்லை சார்… நான் எப்படி?”

“ஏன்? போன வருஷம் நீங்க தானே போனீங்க?”

“போன வருஷம் இருந்த நிலைமை வேற சார்.”

“இந்த வருஷம் அப்படி என்ன மாற்றம் வந்திருச்சு மித்ரா?”

“………….”

“இன்னைக்கு நீங்களும் நானும் தான் ஃபங்ஷனுக்குப் போறோம். ஈவ்னிங் சிக்ஸுக்கு உங்க வீட்டுக்குக் கார் அனுப்புறேன். ஹோட்டலுக்கு வந்திடுங்க. அங்க இருந்து நாம ரெண்டு பேரும் போகலாம்.”

முடிவாக அவன் சொல்லவும் தலையை மட்டும் ஆட்டினாள் மித்ரமதி. ரிச்சர்ட்டையும் அழைக்கலாமா என்று கேட்கத் தோன்றியது. இருந்தாலும் அவள் கேட்கவில்லை. சிறு பிள்ளைத்தனமாகத் தோன்றவே விட்டுவிட்டாள்.
***

அந்த ஆடி டிடி ரிச்சர்ட்டின் கைகளில் மிதமான வேகத்தில் போய்க்கொண்டிருந்தது. மித்ரமதி எப்போதும் போல அமைதியாக உட்கார்ந்திருந்தாள்.

ரிச்சர்ட்டின் முகத்தில் அவ்வப்போது வந்து போன புன்னகையை அப்போதுதான் கவனித்தவள் அவனைக் கேள்வியாகப் பார்த்தாள். அவன் கண்கள் எதையோ அவளிடம் சொல்லாமல் மறைப்பது போலிருந்தது.

“என்னாச்சு ரிச்சர்ட்?”

“ஒன்னுமில்லை மேடம்.” இப்போதும் முகத்தைத் திருப்பிக் கொண்டு அவன் சிரிப்பை அடக்கிக் கொள்ளவும் மித்ரமதிக்குக் கோபம் வந்தது.

“ரிச்சர்ட்…”

“ஒகே ஒகே! நான் சொல்லுவேன்… ஆனா நீங்க கோபப் படக்கூடாது.”

“இல்லை…‌ கோபப்பட மாட்டேன். என்னாச்சு?”

“நம்ம ஆஃபீஸ் ல லேசா காதல் வாசனை அடிக்குது மேடம்.”

“வாட்!”

“ஹா… ஹா… ஐ தின்க் ஹி ஹாஸ் அ ஸாஃப்ட் கார்னர் ஃபார் யூ!”

“யோவ்!” மித்ரமதி அடிக்கக் கை ஓங்கவும் காரை ஓரங்கட்டியவன் விழுந்து விழுந்து சிரித்தான்.

“நான் உண்மையாத் தான் சொல்லுறேன் மேடம். அந்தக் கார்த்திக் உங்களைப் பார்க்கிற பார்வையில என்னமோ இருக்கு.”

“ரிச்சர்ட்! ப்ளீஸ்… இப்படிப் பேச வேணாம். எனக்கு இதெல்லாம் பிடிக்காது.” சற்றுக் காட்டமாக வந்தது பெண்ணின் குரல். ஏற்கனவே அவள் மனதிலும் இப்படியொரு சந்தேகம் இருந்ததால் ஏனோ அவள் உள்ளம் படபடத்தது.

“மேடம்… நான் சத்தியமா கேலி பண்ணலை. இன்னும் கொஞ்ச நாள்ல அந்தக் கார்த்திக் உங்க கிட்ட ப்ரப்போஸ் பண்ணலைன்னா எம் பெயரை நான் மாத்திக்கிறேன்.” ரிச்சர்ட் திட்டவட்டமாக அறிவிக்கவும் மிரண்டு போனாள் மித்ரமதி.

“லவ் எங்கிறது அழகான விஷயம் மேடம். அதைப் பார்த்து ஏன் இப்படி நீங்க மிரளுறீங்க?”

“எனக்குப் பிடிக்கலை ரிச்சர்ட்.”

“ஆனா கார்த்திக் உங்களுக்கு நல்ல மேட்ச் ன்னு எனக்குத் தோணுது மேடம்.”

“ஷ்… ரிச்சர்ட்!” அவள் முகம் அஷ்ட கோணலானது.

“இல்லை மேடம். நீங்க கொஞ்சம் உங்க பிடிவாதத்தை இப்போ விட்டுக் குடுத்தா நல்லா இருக்கும் ன்னு எனக்குத் தோணுது. அதுக்கப்புறம் உங்க இஷ்டம்.”

ரிச்சர்ட்டும் அதற்கு மேல் விவாதிக்கவில்லை. மித்ரமதியின் பிடிவாதம் அவன் அறிந்த ஒன்று என்பதால் அத்தோடு விட்டு விட்டான்.
***

சரியாக ஆறு மணிக்குக் கார் அனுப்பி இருந்தான் கார்த்திக். வீட்டின் முன்னால் வந்து நின்ற அந்த உயர் ரக ஜாகுவாரைப் பார்த்த போது மித்ரமதிக்கு சற்று சஞ்சலமாக இருந்தது.

தேவையில்லாத பயணம். அங்கு கூடப்போகும் மனிதர்களை எல்லாம் இவள் நன்கறிவாள். கம்பெனி கை மாறிய செய்தி காட்டுத் தீ போல இந்நேரம் பரவி இருக்கும். ஃபோன் கால்களை முடிந்தவரை தவிர்த்திருந்தாள். இப்போது போய் அவர்களை எல்லாம் சந்திப்பது அத்தனை புத்திசாலித் தனமாகத் தெரியவில்லை.

ரிச்சர்ட் இருந்தாலாவது பரவாயில்லை. ஒரு சிலரை எப்படிச் சமாளிக்க வேண்டும் என்று அவனுக்குத் தெரியும். ஆனால் அதை யார் சொல்வது?

அக்கறையான விசாரிப்புக்களும் உண்டு. இருந்தாலும்…

எல்லாக் குழப்பங்களையும் ஒதுக்கி வைத்து விட்டு காரில் ஏறி அமர்ந்து கொண்டாள் மித்ரமதி. லண்டனின் சாலைகளில் கார் வழுக்கிக் கொண்டு போய் அந்த ஹோட்டலின் முன்பாக நின்றது.

‘ஸ்லோன் ஸ்கொயார்’ இல் வீடு வைத்திருப்பவள் தான். அந்த வீடு அவள் அப்பா வாங்கி இருந்தாலும் அதன் பெறுமதி என்னவென்று அவளுக்கும் தெரியும். ஆனால்… இது போன்ற ஹோட்டலில் எல்லாம் தங்குவதை அவளால் நினைத்தும் பார்க்க முடியாது.

மனதின் பிரமிப்பை மறைத்துக் கொண்டு காரை விட்டிறங்கி உள்ளே நடந்தாள் பெண். வரவேற்பில் கிடைத்த வாழ்த்துக்கு நன்றி சொன்னவள் உள்ளே நடந்தாள்.

பாட்டில் க்ரீன் கலரில் ஷிஃபான் சேலை அணிந்திருந்தாள். எந்த வித அலங்காரங்களும் இல்லாமல் சேலை ப்ளேயின் ஆக இருந்தது. அதற்கு எதிர்மாறாக அவள் அணிந்திருந்த ப்ளவுஸ் கண்ணைப் பறித்தது.

நல்ல அடர் சிவப்பில் இருந்த ப்ளவுஸ் முழுவதும் முத்து, மணி, சம்கி வேலைப்பாடுகள் என அலங்காரங்கள் அமர்க்களமாக இருந்தது.

சேலைக்கு மாட்ச் ஆக சிவப்பு நிறத்தில் வைரங்கள் பதித்த செட் அணிந்திருந்தாள். கழுத்து, கை, காது எங்கிலும் ஒற்றை வரிசையில் வைரங்கள் மின்னின.
புடவையை ஒற்றைப் பட்டாக இடது தோளில் பின் பண்ணி இருந்தாள். உயர்ந்த ஹீல் வைத்த காலனி ‘டக் டக்’ என ஒலி எழுப்ப அவள் நடந்து வந்த போது ஒன்றிரண்டு கண்கள் அவளைத் திரும்பி மெச்சுதலாகப் பார்த்தன.

இவள் உள்ளே வரவும் கார்த்திக் லிஃப்ட் ஐ விட்டு வெளியே வரவும் சரியாக இருந்தது. இவள் லேசாகப் புன்னகைக்க அவன் கண்கள் அவளை ஒரு முறை தழுவி மீண்டது.
“கோர்ஜியஸ்!” அவன் பாராட்டை ஒரு புன்னகையோடு ஏற்றுக் கொண்டவள் அத்தோடு விட்டுவிட்டாள். நன்றி எனும் வார்த்தையை உபயோகிக்கக் கூடப் பயமாக இருந்தது.
“சார்!” அவள் அழைக்கவும் நடையை நிறுத்தினான் கார்த்திக்.

“இப்போவாவது கார்த்திக் ன்னு சொல்லலாமே. ஃபங்ஷன்ல சார் ன்னா நல்லாவா இருக்கும்?” அவன் ஆதங்கம் அவளுக்கும் நியாயமாகத்தான் தோன்றியது.

“கார்…த்திக்!” அத்தனை தயக்கம் அந்தக் குரலில். இருந்தாலும் அவன் கண்டு கொள்ளவில்லை.

“சொல்லுங்க மித்ரா.” மீண்டும் நடந்த படியே இயல்பாகப் பேசினான் கார்த்திக்.
“ரிச்சர்ட்டையும் கூப்பிடலாமா?” அவள் கேள்வியில் அவன் நடை சட்டென்று நின்றது.

கரு நிறத்தில் சூட் அணிந்திருந்தான். நின்ற வாக்கிலேயே அவன் அவளைத் திரும்பிப் பார்க்க, அவன் நின்ற தோரணை பெண்ணை லேசாக அசைத்துப் பார்த்தது.

“எதுக்கு?” நறுக்குத் தெறித்தாற் போல வந்தது அந்த ஒற்றை வார்த்தை.

“இல்லை… வழக்கமா…”

“வழக்கத்தை மாத்தலாம் மித்ரா. இன்னைக்கு நீங்களும் நானும் மட்டும் போகலாமே!”

“ஓகே சார்.” சட்டென்று அவள் சம்மதிக்கவும் அவன் முகத்தில் லேசாக ஒரு புன்னகை தோன்றியது.

“ஓகே வாட்?” அவன் கேட்ட பிறகுதான் தன் தவறை உணர்ந்தவள்,
“ஓகே கார்த்திக்.” என்றாள்.

“குட். அடிக்கடி ஞாபகப் படுத்தாத மாதிரி பார்த்துக்கோங்க.”

முகத்தில் புன்னகையோடு அந்த இளம் ஜோடி ஃபங்ஷன் நடக்கும் ஹோட்டலை வந்தடைந்த போது அங்கே ஏகப்பட்ட வரவேற்புக் கிடைத்தது.

புதிய இளம் தொழிலதிபரை அனைவரும் அன்போடு வரவேற்றார்கள். மித்ரமதி ஏற்கனவே பரிட்சயமானவள் என்பதால் ஸ்நேக பாவமான புன்னகையோடு அவளும் இணைந்து கொண்டாள்.

நடந்த கசப்பான சம்பவத்தை பெரும்பாலானோர் மரியாதை நிமித்தம் மறந்து போக, ஒரு சிலர் உண்மையான அக்கறையோடு விசாரித்தார்கள்.

அவர்கள் விசாரிப்பில் அக்கறை தெரிந்த போதும் மித்ரமதிக்கு லேசாக வலித்தது.
அவள் முகத்தில் வாட்டத்தின் சாயல் தெரிய ஆரம்பித்த உடனேயே என்ன புரிந்ததோ, கார்த்திக் அவளைத் தன் அருகிலேயே வைத்துக் கொண்டான்.

யார் அவனிடம் என்ன கேட்டாலும் அதற்கு மித்ரமதியையும் கலந்து கொண்டே பதில் சொன்னான். அவன் பதில் சொன்னதை விட அவளைச் சொல்ல வைத்தது தான் அதிகம்.

‘கம்பெனி கை மாறி இருந்தாலும் இப்போதும் அனைத்தும் மித்ரமதி வசம் தான்’ என்று அவன் சொல்லாமற் சொல்வது போல தோன்ற மித்ரமதியின் கண்கள் லேசாக நனைந்தது.

நன்றியாக அவனை அவள் பார்க்க அவன் கை அவள் கையை ஆதரவாகப் பற்றிக் கொண்டது. அந்த ஸ்பரிசத்தில் இருந்த ஆதரவு அப்போது மித்ரமதிக்கும் தேவையாக இருக்க ஏற்றுக் கொண்டாள். அந்தக் கை அவளைக் கடைசி வரை விட்டு விடவில்லை.
* * * * * * * *

அந்த இரவின் மெல்லிய நிலவொளியில் தேம்ஸ் நதிக்கரை சில இளவல்களின் உதவியோடு மிகவும் அமைதியாக ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தது. சுற்றிவர இருந்த ரெஸ்டாரன்ட் களில் மக்களின் ஆரவாரம் அற்ற மெல்லிய சிரிப்பொலி மனதை மயக்கியது.

பிஸினஸ் பிஸினஸென்று அலைந்த அப்பாவிற்கு இது போல இடங்களுக்கு எல்லாம் அவளை அழைத்து வர நேரம் இருந்ததில்லை.

ஒரு வயதிற்கு மேல் நண்பர்களோடு இந்த இடங்களைப் பார்க்க அம்மாவும் அனுமதித்ததில்லை. ரிச்சர்ட் அழைப்பதுண்டு. இவளும் போகலாமா என்று நினைப்பாள்.

ஆனாலும், வீணான கற்பனைகளுக்கு அது இடம் கொடுக்கும் என்பதால் தவிர்த்துவிடுவாள். ரிச்சர்ட்டை அத்தனை சுலபமாக மறுத்தவளுக்குக் கார்த்திக்கை மறுக்கும் எண்ணம் ஏனோ வரவில்லை.

“மித்ரா! சின்னதா ஒரு வாக் போகலாமா?” அந்தக் குரல் கேட்டபோது பெண்ணும் மறுக்கவில்லை. சம்மதித்தாள்.

“ஃபங்ஷன் நல்லாப் போச்சுதில்லை மித்ரா?” இயல்பாகவே அவன் பேச்சை ஆரம்பித்தான்.

“ஆமா சார்.”

“மறுபடியும் சாரா? ஏன் மித்ரா?”

“சாரி… அது…”

“பரவாயில்லை விடுங்க. எப்போ இயல்பா வருதோ அப்போ கூப்பிடுங்க. கஷ்டப்படுத்திக்க வேணாம்.” அவன் முகச் சுணக்கம் அவளைச் சங்கடப்படுத்தியது.

“வந்திருந்தவங்க எல்லாரும் அப்பா காலத்துல இருந்தே பழக்கம் ங்கிறதால நாகரிகமா நடந்துக்கிட்டாங்க.” அவள் பேச்சைத் திசை திருப்பினாள்.

“ம்…”

“இல்லைன்னா… கொஞ்சம் கஷ்டமா இருந்திருக்கும்.”

“ம்… ஏன் மித்ரா? இன்னைக்கு வரைக்கும் யார் மேலயும் சந்தேகம் வரலையா?”

“இல்லை சார். அப்படி வந்தா என்னையே நான் சந்தேகப்படுற மாதிரித்தான்.”

“ஓ… அப்பாவுக்கு யாராவது எதிரிகள்?”

“சான்ஸே இல்லை சார். பிஸினஸ் ஒன்னு மட்டும் தான் அவரோட வாழ்க்கை ன்னு வாழ்ந்தவர் தான். ஆனா எப்போவும் குறுக்கு வழி போனது கிடையாது. அதனால எதிரிகள் வர வாய்ப்பே இல்லை.”

“ஓகே… எந்தப் பக்கம் போனாலும் இடிக்குதில்லை. அதுக்கப்புறம்… இந்த அழகான பொண்ணுக்கு எதிரிகள் வர வாய்ப்பில்லை…” அவன் இழுக்கவும் அவள் புன்னகைத்தாள்.

“இந்த ஃபீல்டுல இருக்கிற எல்லாருமே அப்பாவோட நண்பர்கள் கார்த்திக். நான் கம்பெனியை பொறுப்பெடுத்தப்போ என் வளர்ச்சியைப் பார்த்து சந்தோஷப் பட்டிருக்காங்க. தொழில் ன்னு வந்தப்போ என்னைப் போட்டியாத்தான் பார்த்தாங்களே தவிர பொறாமைப் படலை.” அவனைப் பெயர் சொல்லி அழைத்ததைக் கூட உணராமல் பேசிக் கொண்டிருந்தாள் மித்ரமதி.

“ம்…” என்ன பேசுவதென்று புரியாமல் கார்த்திக்கும் அவள் அருகாமையை ரசித்துக் கொண்டிருந்தான்.

புடவைக்கு ஏற்ற வகையில் அவள் அணிந்திருந்த காலணிகள் அந்தக் குறுங் கற்கள் நிறைந்த நதியோரத்தில் நடக்கக் கடினமாக இருக்கவும் லேசாகத் தடுமாறினாள் மித்ரமதி.

“பார்த்து மித்ரா!” பிடிமானத்திற்காகக் கையை அவள் நீட்ட அதைப் பற்றிக் கொண்டான் கார்த்திக்.

“பெபிள்ஸ் ல நடக்கிறது கஷ்டமா இருக்கு.” புன்னகைத்தபடி சொன்னவள் காலணிகளைக் கழட்டிக் கைகளில் ஏடுத்துக் கொண்டாள்.

“கஷ்டமா இல்லையா?”

“பரவாயில்லை. தண்ணியில கால் படுறப்போ சுகமாத்தான் இருக்கு.”
அவள் ரசனை அவன் ரசிப்பிற்குரியதாக இருந்தது. காலில் ஷூ இருந்ததால் அவன் சற்று விலகி நடக்க, நீரின் ஓரமாகப் புடவையை லேசாகத் தூக்கியபடி கால் நனைத்து நடந்தாள் மித்ரமதி.

கார்த்திக் அவளையே பார்த்திருந்தான். அந்தப் பெண்ணை ஏனோ தப்பான எண்ணத்தில் பார்க்க மனம் மறுத்தது. பெண்கள் என்றாலே அவன் போடும் சாதாரணக் கணக்கு முதன் முறையாக மித்ரமதி விஷயத்தில் பிழையானது.

பார்ப்பதற்கு அத்தனை அழகாக இருந்தாள். அன்று அவள் கட்டியிருந்த சேலை அவள் அணியும் மற்றைய எந்த உடையும் காட்டாத ஏதோ ஓர் அழகை இன்று காட்டியது.
ஆடை என்ற பெயரில் எத்தனையோ அலங்கோலங்களைப் பார்த்தவன் தான் அவன். அதையும் ரசித்தவன் தான். ஆனால் இன்று இந்தப் பெண் அவனை ஏதோ ஒரு வகையில் என்னவோ செய்தாள்.

அவன் கண்கள் அவள் முகத்தைத் தாண்டி கீழே இறங்க மறுத்தது. ஆவல் மேலிட்ட போதும் எப்போதும் வராத கண்ணியம் இன்று வந்து சண்டித்தனம் பண்ணியது.

அராபியன் குதிரையை எல்லாம் அசால்ட்டாகக் கையாள முடிந்தவனுக்கு எதிரில் நிற்கும் இந்தச் சின்னப் பெண்ணை நெருங்கும் தைரியம் வரவில்லை.

அவன் கண்களை மட்டுமல்ல… அவன் எண்ணத்தையும் அவள் முகம் தாண்டாமல் கட்டிப் போட்டிருந்தாள் பெண்.

“அம்மா!” மித்ரமதியின் குரலில் கவனம் கலைந்தவன் சுயநினைவிற்கு வந்தான்.
“மித்ரா! என்னாச்சு?”

“கார்…த்தி…க்.” அவள் குரல் வலியோடு வரவும் ஷூ வைச் சட்டென்று கழட்டித் தூரப் போட்டவன் அவளிடம் ஓடினான். கூரான கல் ஒன்று மித்ரமதியின் பெருவிரலைப் பதம் பார்த்திருந்தது.

நிற்கக் கூட அவள் தடுமாறவும் சட்டென்று அவளைத் தூக்கியவன் பக்கத்திலிருந்த ரெஸ்டாரண்ட் ஒன்றின் நாற்காலியில் அமர வைத்தான்.

“வாட் ஹாப்பன்ட்?” அங்கிருந்த எல்லோரும் கூடி விட வேலை செய்யும் ஒருவர் சின்னதாக ஒரு ‘ஐஸ் பேக்’ ஐ கொண்டு வந்து கொடுத்தார்.

தன் பாக்கெட்டில் இருந்த கைக்குட்டையை எடுத்தவன் அவள் காலடியில் உட்கார்ந்து அவள் காலைத் தூக்கித் தன் முழங்காலின் மேல் வைத்துக் கொண்டான்.

“கார்த்திக்… உங்க ட்ரெஸ்…” வலியின் நடுவிலும் கசங்கிய அவள் முகம் அவனுக்காகச் சிந்தித்தது.

அண்ணாந்து அந்தக் கண்களைப் பார்த்தான் கார்த்திக். லேசாகக் கலங்கி இருந்ததோ! வெண் பளிங்கு விரலிலிருந்து சிவப்பாகக் குருதி கொட்டிக் கொண்டிருந்தது.
கைக்குட்டையால் அவள் விரலை அழுந்தப் பிடித்தவன் அதன் மேல் ஐஸ் ஐ வைத்தான். அவன் உள்ளங்கை முழுவதும் சிவப்பாகிப் போனது.

வாழ்க்கையில் முதன்முதலாக ஒரு பெண்ணிற்காகத் துடித்தான் ‘கார்த்திக் ஹரிகிருஷ்ணா’.