KS 11

காதல் சன்யாசி 11

‘தங்கள் மீது தப்பில்லை என்று நிரூபிக்க சிறு துருப்பாவது கிடைக்காதா?’ என்று ராகுலின் மனம் பரிதவித்து கொண்டிருக்க,

ஒரு பெண்மணி முன்னே வந்து, “நேத்து ராத்திரி இவங்க ரெண்டு பேரும் மாடியில இருந்து இறங்கி வந்ததை நானே பார்த்தேனே” என்று நடக்காத சம்பவத்திற்கு சாட்சி கூறினாள்.

ராகுலுக்கு ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது. “உங்க பார்வையில ரெண்டு பேர் நடந்து வந்தா கூட தப்பா?” என்று அவன் குரலை உயர்த்தினான்.

சாருமதி, “ராத்திரியில உங்க ரெண்டு பேருக்கும் மாடியில என்ன வேலை?” தொடர்ந்து அவளும் குரலை உயர்த்தினாள்.

தமிழ்ச்செல்வி, “நீங்க தான மேடம், பைப் லீக்கேஜ்னு… உடனே சரிசெய்ய சொன்னீங்க” அவள் தைரியமும் அவள் குரலைப் போல, சிதில் சிதிலாய் உடைந்து கொண்டிருந்தது.

“உன்ன தான போக சொன்னேன். இவன் ஏன் அங்க வந்தான்?” சாருமதியின் அடுத்த கேள்வி குரூரமாய் வர, தமிழ் பதிலின்றி கலங்கி நின்றாள்.

“நான் ஏன்‌ அங்க போனேன்னு உங்க பொண்ண கேளுங்க. உங்களுக்கு பதில் கிடைக்கும்” ராகுல் அழுத்தமாக சொன்னான்.

இயலாமையால் அவன் முகம் வியர்த்து கண்கள் இரண்டும் எரியும் நெருப்பாய் சிவந்திருந்தன.

நிவேதாவின் கலங்கிய கருமணிகள் இப்படியும் அப்படியும் சுழன்றன.

“அப்ப நீங்க ரெண்டு பேரும் நைட் மாடியில இருந்தது உண்மை. இந்த வீடியோ காட்சியும் உண்மை தான?”
நிவேதாவின் குறுக்கு பதிலில் இருவருமே அதிர்ந்து போயினர்.

ராகுல், “எதுவுமே உண்மையில்ல, நிவேதா, நான் நீயின்னு நினச்சு…”

“இவளை கட்டிபிடிச்சேன்னு சொல்ல போற, அதையும் நான் அப்படியே நம்பிடுவேன். என்னை அவ்வளவு முட்டாளா நினைச்சிட்டு இருக்க இல்ல?”
குறுக்கே புகுந்து வாசகத்தை முடித்த நிவேதா, அனல் கக்கும் பார்வையை அவனிடம் வீசினாள்.

ராகுல் அப்படியே திகைத்து நின்றான்.

‘நிவேதா தன்மீது வைத்திருந்த காதல் இவ்வளவே தானா? இந்த அளவு நம்பிக்கை கூட அவளுக்கு தன்மீது இல்லாமல் போனதா?’ என்று தோன்ற, அவனும் உடைந்தே போனான்.

நிவேதா அனைத்தையும் தர்க ரீதியாகவே சிந்தித்தாள். ஒன்றும் ஒன்றும் இரண்டு என்ற ரீதியில் அவள் கணக்கு சரியாகவே இருந்தது.

ஆனால் அவள் சிந்திக்க மறந்த ஒன்று ஆ, ராகுல் கிருஷ்ணன்!

அவன் மீதான தன் நம்பிக்கையை அத்தனை விரைவாய் பொய்த்து போக விட்டுவிட்டாள் அவள்.

‘அவன் காதல் என்ற பெயரில் தன்னை ஏமாற்றிவிட்டான். தனக்கு துரோகம் செய்து விட்டான்’ என்ற எண்ணமே அவளை சுழற்றி அடித்து கொண்டிருந்தது.

மேலும், தமிழ்ச்செல்வியின் நிலைமை தான் அங்கே பரிதாபத்திற்கு உரியதாய் ஆகி போயிருந்தது.

‘பழி ஓரிடம், பாவம் ஓரிடம்’ என்பார்கள்.

பெரும்பாலும் பழி, பாவத்திற்கு ஆளாவது, ஆண்களை விட பெண்கள் தான்.

அத்திருமண மண்டபம் ஒரு பெண்ணின் பலிபீடமாகவும் மாறிக் கொண்டிருந்தது இன்று.

“செய்ய கூடாத அசிங்கத்தை செஞ்சிட்டு, நடு சபையில எவ்வளவு தைரியமா வந்து நிக்கிறா பாரு” என்று ஒரு நடுத்தர வயது பெண்மணி முகம் சுளித்தாள்.

“இப்படிப்பட்ட பொம்பளைங்களை எல்லாம் நடு ரோட்டுல நிக்க வச்சு சுடணும்” கோர்ட்டும் ஷூட்டுமாக இருந்த ஓர் இளைஞன் அவளை வார்த்தைகளால் சுட்டு பொசுக்கலானான்.

“இப்படிபட்ட பொண்ணுங்களால தான் நல்ல பொண்ணுங்களுக்கும் கெட்ட பேரு” வெள்ளை பட்டு வேட்டி ஒன்று நியாயம் பேசி, ஏசியது.

“இப்படி மானங்கெட்டு வாழறதும் ஒரு பொழப்பா?” கூட்டத்தில் முகங்காட்டி கொள்ளாத குரல், இவளை புழுவாய் அனலில் இட்டது.

சுற்றி எழுந்த கொடூர குரல்கள் எரியும் அம்புகளாய் அவளை துளைத்து எடுத்தன.

அவர்கள் வார்த்தைகள் அவள் காதில் அமிலத்தை பாய்ச்ச, கூனி, குறுகி நின்று கலங்கினாள் அவள்.

‘எல்லாவற்றுக்கும் காரணம் தான் தான்’ என்ற குற்றவுணர்வு ராகுலுக்குள் எழ, அவனும் கலங்கி தான் போனான்.

அவனுக்கு மட்டும் இப்போது நெற்றிக்கண் இருந்திருந்தால், சுற்றி நிற்கும் அனைவரையும் சுட்டெரித்து சாம்பலாக்கி இருப்பான்.

இன்னும், வெறுங்கையை பிசைந்து கொண்டு அவனால் நிற்க முடியவில்லை.

மணமேடையில் இருந்த கலச செம்பை எடுத்து, அப்போதும் ஓடிக் கொண்டிருந்த திரையின் மேல் வீசி எறிந்தான்.

அது திரையில் பட்டு அந்த திரை தூள் தூளாய் உடைந்து விழுந்தது. அதன் அருகிருந்த அனைவரும் வேறு பக்கமாய் சிதறி ஓடினர்.

“என்ன? ஆதாரத்தை அழிக்க பார்க்கறியா? மிஸ்டர் ராகுல் கிருஷ்ணன், எனக்கு துரோகம் பண்ணிட்டு ஏதாவது டிராமா செஞ்சு, இங்கிருந்து எஸ்கேப் ஆக டிரைப் பண்றியா?”

நிவேதாவின் ஆத்திரமான வார்த்தைகள் அவன் ரோஷத்தை உரசி சென்றன.

அவன் முழுவதும் பொறுமை இழந்தவனாய், அடங்காத கோபத்துடன், தன் கைவிரல்களை அழுத்த சேர்த்து மூடி கொண்டு, கண்களையும் இறுக மூடித் திறந்தான்.

தன் கண்முன்னே நடந்தேறும் எதையும் அவனால் ஜீரணிக்க முடியவில்லை. அவன் மீது விழுந்த பழி சொற்களை விட அவனை அதிகம் பாதித்தது. நிவேதாவின் சுடு சொற்கள் தான். அதோடு தன் தோழியின் அவமானத்திற்கும் இவனே காரணமாகி போயிருந்தான்.

இந்த மண்டபத்தில் தன்னை எதிர்த்து நிற்கும் ஆயிரம் பேரையும் அவனால் சமாளித்து விட முடியும், இருவரை தவிர. தன் உயிர் காதலி, தன் உயிர் தோழி தவிர.

என்ன செய்வது? என்ன செய்வது? என்று அவன் யோசனை அலைபாய, அவனுக்குள் தோன்றிய முடிவு, அவனையே திடுக்கிட செய்வதாய்.

இன்னும் அந்த இடம் பேச்சு கலவரத்தில் அல்லோலப்பட்டு கொண்டு தான் இருந்தது. ஆனால், ராகுலின் மனம் இப்போது ஒரு நிலைக்கு வந்திருந்தது.

நிவேதா அவனை வெறுப்புடன் முறைத்து நின்றிருக்க, “நான் உனக்கு துரோகம் செஞ்சிருக்க மாட்டேன்னு உன் மனசுல இம்மி அளவு கூட எம்மேல நம்பிக்கை வரலையா நிவேதா?” என்று இறுதியாக இருந்த ஓர் எச்ச நம்பிக்கையாய் அவளிடம் கேட்டான்.

“உன்ன மாதிரி ஒரு கேவலமானவனை காதலிச்சேன்னு நினைக்கவே எனக்கு அருவருப்பா இருக்கு, எதுக்காக என் காதலோடு விளையாடின நீ?” உதடுகள் துடிதுடிக்க நிவேதா கேட்க,

ராகுலின் இதழில் ஒரு விரக்தி புன்னகை வந்து போனது.

அங்கே முக்கண் தேங்காய் மீது வைக்கப்பட்டிருந்த மாங்கல்யத்தை கையில் எடுத்து கொண்டு நிவேதாவிடம் வர,

அவள் பால் முகம் சிவக்க வெகுண்டு நின்றிருந்தாள்.

“காதல்னா ஏதோ மாய மந்திரம் இல்ல, ஒருத்தருக்கு ஒருத்தர் மேல இருக்குற அசைக்க முடியாத நம்பிக்கை தான் நிவி. எப்போ அந்த நம்பிக்கை உனக்கு எம்மேல இல்லாம போச்சோ, அப்பவே நம்ம காதலும் செத்து போச்சு…!” என்ற ராகுல் தீர்க்கமாய் சொல்ல, ஏனோ நிவேதாவின் மனதின் ஓரம் வலி தெறித்தது.

அவளை தாண்டி நகர்ந்தவன்,

அனலில் இட்ட புழுவாய் துடிதுடித்து நின்று கொண்டிருந்த தமிழ்ச்செல்வியின் கழுத்தில் மஞ்சள் தாலியை சூட்டி மூன்று முடிச்சிட, அவள் பிரமை பிடித்தவளாக நிமிர்ந்தாள்.

நிவேதாவின் கண்களையே அவளால் நம்ப முடியவில்லை. அவள் உடலின் இரத்த ஓட்டமே உறைந்தது போலானது. எந்த பெண்ணாளும் காணக்கூடாத காட்சி அவள் கண் முன்னேயே அரங்கேறியது.

அதுவரை மகனின் நிலை கண்டு தவித்து கொண்டிருந்த பார்வதியும் ஸ்தம்பித்து போனார்.

அங்கிருந்த அனைவரும் ஒன்றே போல அந்த நொடி அதிர்ந்து நிற்க,

அந்த இடத்தில் தடுமாறாமல் திடமாய் இருந்தவன் ராகுல் கிருஷ்ணன் மட்டும் தான்.

“இப்ப, இவ என்னோட மனைவி. இவளை பத்தி இனிமே உங்கள்ல யாராவது ஒரு வார்த்தை தப்பா பேசினா கூட தொலைச்சி கட்டிடுவேன்” என்று சுட்டுவிரல் நீட்டி, குரலை உயர்த்தி மிரட்டலாக பேசினான்.

அவனது அசாத்திய துணிச்சலுக்கு முன், வாய்திறக்க அங்கிருக்கும் யாருக்கும் தைரியம் எழாமல் போனது.

தமிழ்ச்செல்வியின் கரம் பிடித்து, பார்வதியை அழைத்து கொண்டு தீர்க்கமான பார்வையுடன் கூட்டத்தை விலக்கிக் கொண்டு ராகுல் அங்கிருந்து செல்ல முயல, “செக்யூரிட்டி…” என்று சாருமதி யின் குரல் ஆங்காரமாக ஒலித்தது.

அவர்கள் குறுக்கே வந்து காவலர்கள் மரித்து நிற்க, ராகுல் அசறாமல் தன் முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்றான்.

“அவங்க போகட்டும் விடுங்க…”

அதுவரை அங்கு நடப்பதை குழப்பத்துடன் கவனித்து கொண்டிருந்த ராமச்சந்திரனின் குரல் ஆணையிட, காவலர்கள் நகர்ந்து நின்றனர்.

“ராம், அவன் நம்ம நிவிய ஏமாத்தி இருக்கான். நடுசபையில நம்ம கௌரவத்தை குலச்சி இருக்கான். அவனை சும்மா விட சொல்றீங்களா?”

“புரிஞ்சுக்காம பேசாத சாருமதி, நமக்கு இங்க நேர்ந்த அவமானம் போதாதா? இந்த விசயம் பெரிய இஷு ஆகணுமா?”
கணவரின் ஆதங்க கேள்வியில் வேறுவழி தோன்றாமல் மனைவியும் அமைதியானாள்.

மனதில் சிறிதாய் எழுந்த தயக்கத்தை உதறிய ராகுல் திரும்பியும் பாராமல் அங்கிருந்து வெளியேறினான். தன் மனைவி மற்றும் தாயுடன்.

நிவேதா வேரற்ற மரமாய், அப்படியே சரிந்து கீழே அமர்ந்து விட்டாள்.

சுற்றி இருந்தவர்கள் அவளை சமாதானம் செய்ய சொன்னவை எதுவும் அவள் காதுகளை தாண்டி மூளையில் பதிவாகவில்லை.

இந்த புனித நன்நாளில் இத்தனை பேரதிர்ச்சிகளையும், ஏமாற்றங்களையும் தாங்கி கொள்ள முடியாமல் அவள் வெதும்பி தோய்ந்தாள்.

இராமச்சந்திரனின் கண்ணசைவில் அவனருகே ஓடி வந்தான் ராவணன். “இங்க நடந்த எதுவும் மீடியால லீக் ஆக கூடாது. வேண்டியதை சீக்கிரம் முடிச்சிடு” அவர் சொன்னதை உடனே நிறைவேற்ற விரைந்தான் அவன்.

அதுவரை அங்கு நடந்த அனைத்தையும் சுவாரஸ்யமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த உருவம், நிவேதாவின் கலங்கிய தோற்றத்தை கண்டு சிறு இகழ்ச்சி சிரிப்பை உதிர்த்து விட்டு நகர்ந்தது. தான் வந்த‌ சுவடும் தெரியாமல்.

# # #

பார்வதி கதவைத் திறக்க, மூவரும் வெவ்வேறு மனப்போராட்டத்தோடு வீட்டிற்குள் வந்தனர்.

தமிழ்ச்செல்வியின் அதிர்ச்சி விலகாத பார்வை எங்கோ வெறித்திருக்க,
பார்வதி, ராகுலை தனியே இழுத்து சென்றார்.

“என்ன காரியம் செஞ்சிருக்க கிருஷ்ணா?” என்ற அவர் கேள்வியில் பரிதவிப்பு நிறைந்திருந்தது.

“நீங்களுமா என்னை சந்தேகபடுறீங்க ம்மா?” ராகுல் விரக்தியாய் கேட்க,

“நான் உன் அம்மாடா. நான் எப்படி என் மகனை சந்தேக படுவேன். அங்க நடந்தது எல்லாமே தப்பு தான். நான் ஒத்துக்கிறேன். நீ இப்ப பண்ணதும் தப்பு தான் டா” என்றார் ஆதங்கமாய்.

அவன் பதிலின்றி தயங்கி நிற்க, “யார் எது சொன்னாலும் நான் உனக்கு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுக்க மாட்டேனா? போயும் போயும் இந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்க வேண்டிய அவசியம் என்னடா உனக்கு?” அத்திருமணத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவர் பதைபதைத்தார்.

“தமிழ் நல்ல பொண்ணு ம்மா. அவளை ஏன் நீங்க?” அவன் விளங்காமல் கேட்க,

“அவ ரொம்ப நல்ல பொண்ணு தான். ஆனா, அவ நம்ப குடும்பத்துக்கு வேணாம்” அவசரமாய் மறுத்து கூறினார்.

“தமிழ் எல்லாத்தையும் இழந்து ஏதோவொரு நம்பிக்கையில வாழ்ந்துட்டு இருக்கா ம்மா. அங்க, இவ்வளவு நடந்ததுக்கு அப்புறமும் அவ உயிரோட இருப்பான்னு நினக்கிறிங்களா?”

“என்னால தான் அவ மானமும் உயிரும் போச்சுன்ற குற்றவுணர்வோட, எப்படி என்னால நிம்மதியா வாழ முடியும்? வேற எதுக்காகவும் இல்ல, அவளோட மானத்தையும் உயிரையும் காப்பாத்த தான் இந்த முடிவையே எடுத்தேன்” ராகுல் அவன் பக்க நியாயத்தை பொறுமையாக எடுத்து கூறினான்.

“நீ சொல்லறதும் சரி தான் டா. ஆனா, எந்த அம்மாவும் தன் மகனுக்கு கன்னி பொண்ணு தான் மனைவியா வரணும்னு நினைப்பா. ஆனா தமிழ்ச்செல்வி?” பார்வதி வாசகத்தை முடிக்க முடியாமல் நிறுத்த,

அவன் இதற்கு எப்படி பதில் சொல்வது என சற்று குழப்பத்துடன் யோசிக்கலானான்.

அவன் நாசியில் நுழைந்த ஏதோ துர்நாற்றம் அவன் சிந்தனையை கலைக்க, விரலால் நாசியை தடவிக் கொள்ள,

“திடீர்னு கேஸ் வாசனை எங்க இருந்து வருது?” என்று பார்வதியும் தன் மூக்கை தடவிக் கொள்ள, ராகுல் மிரண்டவனாய் சமையலறை நோக்கி ஓடினான்.

சமையலறை கதவு அடைக்கப்பட்டு இருக்க, தமிழ்ச்செல்வி எரிவாயு சிலிண்டரையும் அடுப்பையும் திறந்து தீப்பெட்டியை தேடி கையில் எடுத்தாள்.

ராகுல் தாமதிக்காமல் கதவை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்து, அவள் கையிலிருந்த தீப்பெட்டியை தட்டி விட்டான்.

உடனே எரிவாயு சிலிண்டரையும் அடுப்பையும் அணைத்து விட்டு, அவளை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து வந்தான்.

நல்லவேளையாக அந்த சமையலறை கதவில் உள் தாழ்ப்பாள் இல்லாமல் இருந்தது.

இப்போது தான் நிலைமையை புரிந்து கொண்ட பார்வதி, அங்கிருந்த சன்னல்களை எல்லாம் திறந்து வெளிக்காற்று உள்வர வழி செய்தார்.

“உனக்கென்ன புத்தி கெட்டு போச்சா, தமிழ்?” ராகுல் பதட்டமும் கோபமுமாக கேட்க, அதற்கான பதில் அவன் கன்னத்தில் கிடைத்தது.

ஆவேசமாய் நிமிர்ந்தவள் ராகுலின் முகத்தில் ஓங்கி அறைந்து இருந்தாள்.

அதை பார்த்து பார்வதி பதறி துடித்து போக, ராகுல் குற்றவுணர்வில் இறுகி நின்றான்.

“உனக்கு தான் டா புத்தி கெட்டு போயிருக்கு. எந்த தைரியத்தில என் கழுத்தில தாலி கட்டுன?”

தமிழ்செல்வியின் சிவந்த கண்கள் அவனை தீயிட்டு கொளுத்துவதாய்.

“எல்லாரும் உன்ன தப்பா பேசறதை என்னால கேட்க முடியல தமிழ், அதான்” அவன் குரல் உடைந்து வந்தது.

“நீ மட்டும் என்ன டா? அவங்க சொன்னதெல்லாம் உண்மைன்ற மாதிரி காரியம் செஞ்சிட்டியே” என்று கைகளால் முகம் பொத்தி கதறினாள் அவள்.

அவள் கதறலில் அவன் மேலும் உடைய, “எனக்கு வேற வழி எதுவும் தெரியல தமிழ்” என்றான்.

“இந்த வேலை செஞ்சதுக்கு என்னை அங்கேயே வெட்டி போட்டிருந்தா சந்தோசப்பட்டிருப்பேனே” என்ற அவள் உதடுகள் உலர்ந்து, தொண்டை அடைத்து கொண்டது.

மேலும் அங்கே நிற்க முடியாமல் வேகமாக வெளியே செல்ல,
அவள் குறுக்கே வந்தவன், “எங்க போற?” என்று கேட்க,

“அதை கேட்க நீ யாரு டா?” என்று அவனை தள்ளிவிட்டு நடந்தாள்.

அவளை தடுத்தவன், “அவசரத்தில தப்பா எந்த முடிவும் எடுக்காத” என்றான்.

அவள் ஆத்திரமாய், “ச்சே அதை நீ சொல்றயா? வழிவிடு இல்ல, உன்ன கொல்லவும் தயங்க மாட்டேன்” என்று விலகி சென்றவளின் கை பிடித்து நிறுத்தியவன், ” நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு தமிழ்” என்றான் கெஞ்சுபவனாய்.

“மரியாதையா கைய விடு, விட்றா…”

அவன் பிடி, இரும்பு பிடியோ! உடும்பு பிடியோ! அவளால் தன் கையை விலக்கிக் கொள்ளவே முடியவில்லை.

தமிழ்ச்செல்வி தன் கையை விடுவிக்க போராடினாள், இழுத்தாள், உதறினாள், கத்தினாள், அவனை அடிக்கவும் செய்தாள்.

ராகுல் அவளை சாமாளிக்க முடியாமல் திணறி தான் போனான். இறுதியில் வேறுவழியின்றி அவளை அறைந்து விட,

முன்னமே சோர்ந்து இருந்தவள், அவனடி தந்த அதிர்வின் வேகத்தில் தோய்ந்து நினைவிழந்து கீழே சரிய, அவளை தன் கைகளில் தாங்கி கொண்டான்.

அவளின் போராட்டத்தையும் கதறலையும் கண்டு பார்வதி விக்கித்து நின்றிருக்க, “என்னடா இதெல்லாம்?” இப்போது பதறி கேட்டார் அவர்.

“இப்போதைக்கு இவ நல்லா தூங்கி எழுந்தா எல்லா சரியா போயிடும் ம்மா” என்றவன் அவளை இரு கைகளில் ஏந்தி சென்று கட்டிலில் கிடத்தினான்.

திருமணத்திற்காக வந்திருந்த சொந்த பந்தங்கள் எல்லாம் கோபத்தோடு வீட்டுக்குள் நுழைய,

அவர்களை கவனித்த ராகுல் காரணம் புரிந்தவனாய், தமிழ் படுத்திருந்த அறை கதவை மூடிவிட்டு அவர்களை எதிர் கொண்டான்.

# # #

காதல்காரன் வருவான்…