vav4

vav4

வா… அருகே வா! –  4

பூங்கோதை கதிரேசனிடம் கட்டளையிட்டுக் கொண்டிருக்க, கதிரேசனை ஓர் முதியவர் அழைக்க கதிரேசன் அவரை நோக்கிச் சென்றான்.

“நீ சொல்றதை கேட்காமலா? மிலிட்டரி, ஆல்வேஸ் அட் யுவர் சர்வீஸ் பியூட்டி…” என்று திலக் பூங்கோதையை பார்த்துக் கண்சிமிட்ட, அந்த கண்சிமிட்டல் பல விஷயங்களைக் கூற, பூங்கோதை, கயல் இருவரின் இதயமும் ஓர் நொடி நின்று துடித்தது.

முதலில் சுதாரித்த பூங்கோதை, “என்ன சொன்ன?” என்று தன் காதுகளை நம்பாமல், மீண்டும் கேட்க, “நீ சொல்றதை நான் ஏன் கேட்கணும், ராட்சசின்னு சொன்னேன்.” என்று எங்கோ பார்த்தபடி மீண்டும் மற்றோரு சிகரெட்டை பற்ற வைத்தபடி கேட்டான் திலக்.

“பூங்கோதை இன்னும் வீட்டுக்கு கிளம்பலையா?” என்று கதிரேசனின் குரல் கர்ஜனையாக ஒலிக்க,  “இதோ கிளம்பிட்டேன் அத்தான்.” என்று சிட்டாகப் பறந்தாள் பூங்கோதை.

அவளை ரசிக்கக் கூடாது என்று திலக்கின் அறிவு அவனை எச்சரித்தாலும், அவன் கண்கள் அவளைத் தொடர்ந்தது. ‘முத்தமா ஆச்சி கிட்ட இவன் எப்படி மாட்டாம இருக்கான்? எப்பயாவது ஊருக்கு வர்ரதால சந்தேகம் வரலியா?’ என்று சிந்தித்தபடி தன் நண்பனை நோட்டமிட்டான் கதிரேசன்.

‘திலக் இப்படிப்பட்டவன் இல்லையே! பெண்களிடம் இவன் காட்டும் கண்ணியம், பூங்கோதையை பார்க்கும் பொழுது இல்லையே? இவனிடம் நேரடியாக கேட்டுவிடலாமா?’ என்ற எண்ணம் மனதில் தோன்ற, ‘பூங்கோதை என்ன சொல்லுவாள்?’ என்ற அச்சம் மனதில் தோன்ற ‘இந்த விஷயத்தை கண்டும் காணாமல் விடுவோம். காலம் முடிவு செய்யட்டும். என்ன அவசரம்?’ என்ற யோசனையோடு மௌனம் காத்தான் கதிரேசன்.

பூங்கோதை, கயல்  இருவரும் வீட்டை நெருங்க, “பூங்கோதை… எதோ சரி இல்லை.” என்று கயல் அவளை எச்சரிக்க, மௌனமாகத் தலை அசைத்து வீட்டுக்குள் சென்றாள் பூங்கோதை.

சிறிது நேரம் படித்துவிட்டு, அங்கிருக்கும் குழந்தைகளோடு பாண்டி விளையாடினாள் பூங்கோதை.

தாவணியை இடுப்பில் சொருவிக் கொண்டு, அவள் கல்லைத் தூக்கி எரிந்து நொண்டியிட, அவள் ஒரு காலில் நொண்டியிடும் அழகை திலக் அவர்கள் வீட்டின் மாடியில் நின்று ரசித்துக் கொண்டிருந்தான். அவள் கூந்தல் அங்குமிங்கும் அசைய, திலகின் கருவிழிகளும் அதனோடு அசைந்தது.

‘இன்னும் கொஞ்சம் நாள் தான். திரும்ப வர மாச கணக்காகும்.’ என்ற எண்ணத்தோடு பூங்கோதையை கண்களால் படம் பிடித்துக் கொண்டிருந்தான் திலக். மாடியை ஒட்டி இருந்த மாமரம் திலக்கை முழுமையாக மறைத்து விட, முன் நிற்பவர்களுக்கு அவன் கண்ணில் பட வாய்ப்பில்லை.

அதன் பின் குழந்தைகளோடு, பூங்கோதை கழச்சி கல் விளையாட ஆரம்பித்தாள்.

அவள் விளையாடிய அசூர வேகம் அவனை ஈர்க்க, மாடியில்  இவர்கள் திண்ணையைப் பார்க்க வசதியாக நின்றான் திலக். பூங்கோதை கல்லை எடுத்த வேகம், அவள் அதை மேலே தூக்கி எரிந்து அதை பிடித்த வேகத்தில் அந்த கல்லாகவே மாறிப் போனான் திலக்.

“மூவாடி ஆத்துல ராமர்  வரத்தில…

சீத வனத்திலே…”

என்று பாடிக்கொண்டே பூங்கோதை கல்லை எடுக்க, ‘யாருக்கு தெரியும், நீயும் என் கூட வனத்தில் தான் இருப்பியா என்னவோ?’ என்ற எண்ணத்தோடு புன்னகை மேலோங்க, அவள் பாடப் போகும் பாடலை கவனிக்கலானான் திலக்.

“நாகுத்தி செங்குத்தி

நவா பழங்குத்தி..” என்று பூங்கோதை பாட, ‘உண்மை தான்… உன் உதடு நவாப்பழம் போல தான். ஆனால், என்ன ருசியில் இருக்கும்?’ என்று  திலகின் எண்ணம் தறிகெட்டு ஓட,

“அஞ்சலம் குஞ்சலம்;

தம்பி சிதம்பரம்

தங்கச்சி மாப்பிளை வெண்கலம்..” என்று அடுத்த கல்லைப் போட்டு அவள் பாடிய வரியில் தன்னை மறந்து கலகலவென்று சிரித்தான் திலக்.

அந்த சிரிப்பு சத்தத்தில் அவனைக் கண்டு கொண்ட பூங்கோதை, “ஆச்சி, எனக்கு ராத்திரி தயிர் சாதமும் மாங்காய் ஊறுகாய் வேணும். நீதேன்  சட்புட்டுன்னு செய்வியே. நான் பார்வதி ஆச்சி வீட்டிலிருந்து பறிச்சிட்டு வரேன்.” என்று கூறிக்கொண்டு, ‘இன்னைக்கு உன்னை என்ன பண்றேன் பாரு?’ என்ற எண்ணத்தோடு பார்வதி ஆச்சி வீட்டிற்குச் சென்றாள் பூங்கோதை.

“கிழவி… மாடிக்கு போய் மாங்காய் பறிக்கறேன்.” என்று கூறிக்கொண்டே படியேறி மாடிக்குச் சென்றாள் பூங்கோதை.

பூங்கோதை வருகையைக் கவனித்துக் கொண்டிருந்த திலக்கின் முகத்தில் குறும்பு புன்னகை. “பியூட்டி…” அவன் உதடுகள் உச்சரித்தது.

‘பியூட்டி நம்மை தேடி தான் வருது.’ என்று அவள் வருகையை ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருந்தான் திலக்.

நேராக திலக் அருகே சென்ற பூங்கோதை, “இங்கன என்ன செய்யரீக?” என்று தன் தாவணியைக் கையில் சுற்றியபடி கேட்டாள் பூங்கோதை.

“நான் கேட்க வேண்டிய கேள்வி! என் வீட்டு தட்டடியில் உனக்கென்ன சோலி?” என்று கேள்வியோடு நிறுத்தி, “பியூட்டி…” என்று மெல்லமாக உச்சரித்தான் திலக்.

“நானும் பாக்கறேன்… அப்பவும் பியூட்டின்னு சொன்னீக… உங்க மனுசுல என்னதென் நினைச்சிட்டு இருக்கீக?” என்று பூங்கோதை சண்டைக்குத் தயாராக, “இப்பவும் நான் கேட்க வேண்டிய கேள்வித்தேன்… உன் மனுசுல என்னதென் நினைச்சிட்டு இருக்க ? உன்னை எந்த மடையனாவது பியூட்டின்னு கூப்பிடுவானா? ராட்சசின்னுதென்  சொன்னேன்.” என்று சுவரின் திண்டின் மேல் அமர்ந்து நக்கலாகக் கூறினான் திலக்.

‘இவன் பியூட்டின்னுதென் சொன்னான். ஆனால் ராட்சசின்னு சொல்லி என்னைத் திசை திருப்பறான்…’ என்ற எண்ணத்தோடு பூங்கோதை மௌனம் காக்க, “என் வீட்டு தட்டடியில் உனக்கென்ன சோலி?” என்று அவள் எண்ண ஓட்டத்தைக் கணக்கிட்டபடி மீண்டும்  கேட்டான் திலக்.

“ம்…. மாங்காய் பறிக்க வந்தேன்.” என்று பூங்கோதை கழுத்தை நொடிக்க, “அதுக்குள்ளயா?” என்று அவளைக் கேலி பேசி கண்களை விரித்தான் திலக்.

 

திலக்கின் கேலியில், பூங்கோதை அவனை முறைக்க, ‘இவளிடம் எப்படிப் புரிய வைப்பது? நீ உன் அத்தான் மேல் வைத்திருப்பது பக்தி, அன்பு மரியாதை, அக்கறை,  ஆனால் காதல் இல்லை. அதே போல் உன் அத்தானும் உன் மேல் வைத்திருப்பது அன்பு, அக்கறை ஆனால் காதல் இல்லை. நான் உன் மேல் வைத்திருப்பது தான் காதல். இதை எப்படி இவளிடம் சொல்வது?’ என்ற எண்ணத்தோடு அவளைப் பார்த்தான் திலக்.

“மிலிட்டரி… இந்த ஜன்னல் வழியா பாக்குறது. என்கிட்டே தேவை இல்லாம பேசுறது… இந்த சோலி எல்லாம் நிறுத்திக்கோ. இல்லைனா நடக்கறதே வேறுதேன்!” என்று பூங்கோதை திலக்கை எச்சரிக்க, “நீ என் வீட்டுக்கே வந்திரு… நான் ஏன் உன்னை ஜன்னல் வழியா பார்க்க போறேன்? நீ என்கூடவே இருந்தா…” என்று திலக் தட்டுத்தடுமாறி தன் காதலை வெளிப்படுத்த, பூங்கோதையின் கைகள் அவன் கன்னத்தில் பளார் என்று இறங்கியது.

திலக் நல்லவன். ஆனால், கோபக்காரன். பெண்களிடம் கண்ணியம் மேற்கொள்பவன் தான், ஆனால், சராசரி காதலன்.

பூங்கோதையின் செயலில், அவன் கோபம் சிவ்வென்று ஏற, அவள் கைகளை பிடித்து பின்பக்கமாக மடக்கினான்.

அவன் அவளை தன் அருகே இழுக்க, பூங்கோதை சத்தம் எழுப்ப முயற்சிக்க, “மரத்துக்கு பின்னாடி நிக்கறோம். யாருக்கும் தெரியாத விஷயத்தை, கத்தி ஊரை கூட்டி சொல்ல போறியா?” என்று அழுத்தமாக திலக் கேட்க, பூங்கோதை புத்திசாலித்தனமாக மௌனித்தாள்.

“அம்மா இல்லை. அப்பா இருந்தும் பிரயோஜனமில்லை. கேட்க ஆளில்லைன்னு தானே இப்படி எல்லாம் பண்ற? எங்க அத்தான் கேட்பாக.” என்று அவள் குரல் கம்ம, பூங்கோதையின் நிலை அவன் மனதைத் தொட்டது. ஆனால் அதை வெளிக்காட்டாமல், “நான் பேசிட்டு தானே இருந்தேன். நீ ஏன் கையை நீட்டின?” என்று கோபமாக கேட்டான் திலக்.

“நான் அறஞ்சது, உனக்கு அந்தானைக்கு வலிச்சிருச்சோ? நீ மிலிட்டரி. நீ என்னை பிடிச்சிருந்தது கூடத்தேன் எனக்கு வலிக்கி.” என்று பூங்கோதை முகத்தை திருப்ப, அவள் சொல்லில், திலக் தன் பிடியை தளர்த்தினான். ஆனால் அது அவள் தெரியாவண்ணம்  அவள் பேச்சைக் கண்டுகொள்ளாமல், “என்னை அடிச்சதுக்கு மன்னிப்பு கேள்.” என்று ஆணையிட்டான் திலக்.

“நான் எந்த தப்பும் பண்ணலை. எங்க அத்தான் கிட்ட…” என்று பூங்கோதை பேச ஆரம்பிக்க, “லூசா டீ நீ?  உன் அத்தான் உன்னை ஒரு நாளும், கட்டிக்க மாட்டான். உங்க அத்தை ஒரு நாளும் உன்னை மருமகளா ஏத்துக்காது.” என்று திலக் அவளிடம் கூற, அவள் கைகளை உருவிக் கொண்டு, விலகி நின்றாள் பூங்கோதை.

‘நான் இங்கு வந்திருக்க கூடாது.’ என்று எண்ணியபடி, “ஆச்சி கேட்கும்.” என்று முணுமுணுத்துக் கொண்டு மாங்காயைப் பறித்துக் கொண்டு படி இறங்கினாள் பூங்கோதை.

“பியூட்டி…” என்று அவன் அழைக்க, அந்த அழைப்பில் அவள் பதட்டத்தோடு நிற்க, “ராட்சசியும் நீ தான்… பியூடியும் நீ தான்… என்னை கட்டிக்க போறவளும் நீ தான். உன் அத்தானோட உன் கல்யாணம் ஒரு நாளும் நடக்காது. இதே மாங்காயை என்னால நீ ஒரு நாள் சாப்பிடுவ பியூட்டி…” என்று திலக் சீட்டியடித்தபடி கூறினான்.

“சவாலா?” என்று பூங்கோதை தலை திருப்பி கேட்க, திலக் மேலும் கீழும் தலை அசைத்தான்.

“அப்படி ஒரு நாளும் நடக்காது. நடந்தால், இந்த பூங்கோதை செத்துட்டான்னு அர்த்தம்.” என்று பூங்கோதை அழுத்தமாகக் கூற, “வாய்ப்பே இல்லை. என் பியூட்டி, என்னை விரும்புவா! என்னை மட்டும் விரும்புவா! என் காதலுக்காக ஏங்குவா… நான் உன் மேல் வைத்திருக்கும் அன்பு நிஜம்னா இது கண்டிப்பா நடக்கும். அத்தோட என் கன்னத்தில் அவள் அறைந்த அறைக்கும் மன்னிப்பு கேட்பா!” என்று திலக் கூற, மடமடவென்று அவர்கள் வீட்டை நோக்கி ஓடினாள் பூங்கோதை.

‘இவனுக்கு எப்படி இவ்வளவு தைரியம்…’ என்று பூங்கோதை சிந்திக்க, ‘ஐயோ… அட மடையா! இது தான் காதல் சொல்ற லட்சணமா? துப்பாக்கி வைத்து சுடுற மாதிரி சுட்டு வச்சிருக்க லூசு மாதிரி…’ என்று தன்னை தான் நொந்து கொண்டான் திலக்.

 

ஓரிரு நாளில் கதிரேசனும், திலக்கும் அவர்கள் கல்லூரி  நண்பர்களைச் சந்தித்து அதன்பின்  மேலும் சில இடங்களுக்குச் சென்றுவிட்டு மூன்று நாட்களில்  வருவதாகக் கூறிவிட்டுக் கிளம்பினர்.

 

கதிரேசன் இல்லத்தில், “என்னங்க… பக்கத்து ஊரில், ஒரு பொண்ணு. நல்ல அழகாம்… அதோடு கை ராசியான பொண்ணுன்னு சொல்றாக. நம்ம கதிரேசனுக்கு பார்த்து பேசி முடிச்சிருவோம். அவுக பல வழில சொல்லி விட்டுட்டுத்தேன் இருக்காக. நாம ஒரு எட்டு போய் பார்த்திட்டு வந்திருவோமா?” என்று கதிரேசனின் தாயார் செல்லமா கேட்க, “செல்லமா… நீ பேசுறது கொஞ்சம் கூட சரி இல்லை. நம்ம கதிரேசனுக்குதென் பூங்கோதைன்னு என்னைக்கோ பேசி முடிவு பண்ணியாச்சு.” என்று கைலாசம் கண்டிப்பாகக் கூறிக் கொண்டிருந்தார்.

“கதிரேசனுக்கு இதுல மறுப்பில்லை. அப்புறம் என்ன?” என்று கைலாசம், தன் மனைவியைக் கேட்க, “அது தானே!” என்று கூறிக்கொண்டே உள்ளே நுழைந்தார் முத்தம்மா ஆச்சி.

‘கிழவி இங்கன எதுக்கு வந்திருக்கு?’ என்று மேலும் கீழும் பார்த்தபடி, “வாங்க… காபி, தண்ணீ, எதுவும் குடிகீகளா?” என்று கேட்டுக் கொண்டே, இருந்த இடத்தை விட்டு அசையாமல் அமர்ந்திருந்தார் செல்லமா.

“அதெல்லாம் நான் சாப்பிட்டுட்டுதேன் வரேன். என்ன செல்லமா? என் பேராண்டிக்கு, எனக்கு தெரியாம பொண்ணு பார்க்கலாமுன்னு பாக்கறியா? ஒரு நாளும் நடக்காது. அதுக்கு என் பேரனும் ஒதுக்க மாட்டான்.” என்று தன் மருமகளிடம் பேச்சை முடித்துவிட்டு, தன் மகனிடம் தொடர்ந்தார் முத்தமா ஆச்சி.

“இத பாரு கைலாசம். என்னைய வீடு போ போங்குது… காடு வா வாங்குது… இந்த கட்டை போய் சேரத்துக்குள்ள, என் பேத்தி, பேராண்டி கல்யாணத்தை பார்திறனும். பூங்கோதையை, கதிரேசன் கையில் பிடிச்சி கொடுத்துட்டா, நான் நிம்மதியா கண்மூடுவேன்.” என்று உறுதியாக கூறினார் முத்தமா ஆச்சி.

“இப்ப என்ன அவசரம்?” என்று செல்லமா இழுக்க, “யம்மா… நீ கதிரேசன் ஊரில் இல்லாத, நேரமா செய்யற சோலி எல்லாம் பாத்திட்டுதென் நான் இங்கன வந்திருக்கேன். கைலாசம், சொந்தத்துல கல்யாணம் பண்றதுக்கு… முன்னமே நிச்சயம் எல்லாம் வேணாம். தையில் கல்யாணம். கல்யாணத்தனைக்கே நிச்சயத்தயும் வச்சிப்போம்.” என்று முத்தமா ஆச்சி சட்டப்புட்டென்று திருமணத்தைப் பேசி முடித்தார்.

‘கதிரேசன் ஊரில் இல்லாத நேரம் நான் ஒரு பெண்ணை முடிவு பண்ணனும்னு பார்த்தா, இப்படி ஆகிருச்சே?’ என்று செல்லம்மா செய்வதறியாமல் திகைத்தார்.

இந்த மூன்று நாளில் கதிரேசன், பூங்கோதை விஷயம் ஊர் முழுக்க பரவி இருந்தது.  “அத்தான் இல்லாத நேரத்தில் எப்படி பேசி முடிக்கலாம்?” என்று பூங்கோதை வானத்துக்கும் பூமிக்கும் குதித்தாலும், திலக்கின் பேச்சுக்கு இது எத்தகைய பதிலடி என்று எண்ணி அவள் மனம் குதூகலித்தது.

வேலையை முடித்துக் கொண்டு கதிரேசன், திலக் இருவரும் ஊர் திரும்பினர்.

திலக், கதிரேசனை அவன் வீட்டிற்கு  அழைத்துச் செல்ல, பார்வதி ஆச்சி இருவருக்கும் குவளையில் மோர் கொடுத்தபடி கதிரேசனின் திருமண விஷயத்தைக் கூறினார்.

தன் திருமண விஷயம் தனக்கே, தெரிவிக்கப்படாத அதிர்ச்சியில் கதிரேசன் குவளையை இறுக்கிப் பிடிக்க, கதிரேசனின் திருமண விஷயம் அறிந்த அதிர்ச்சியில் திலக் கைகளில் உள்ளே குவளை கை தவறி கீழே உருண்டோடியது.

நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால்?

வா… அருகே வா!  வரும்….

 

error: Content is protected !!