Manmo7

Manmo7

பொன் மணற்பரப்பில் நடப்பட்டிருந்த குடையின் கீழ் அமர்ந்திருந்தார்கள் சக்திவேலும் திவாகரும். குடும்பமாகச் சுற்றுலா வந்திருந்தார்கள். மிதமான வெயிலோடு கடற்கரை கொஞ்சம் அமைதியாகக் தான் இருந்தது.

தினகர் வரவில்லை. தொழில் ரீதியாக வெளிநாடு போயிருந்ததால் இவர்கள் மட்டுமே வந்திருந்தார்கள்.
“என்னால நம்பவே முடியலை திவா. பையன் திடுதிடுப்புன்னு கேட்கவும் நான் ஆடிப்போயிட்டேன்.” சக்திவேலின் குரலில் கழுத்தைத் தடவினார் திவாகர்.

“எனக்கென்னவோ இது நல்ல விஷயம் ன்னு தான் தோணுது சக்தி.”

“திவா… நிஜமாத்தான் சொல்லுறியா? இது சரியா இருக்குமா?”

“மித்ராக்கு இதை விட நல்ல சம்பந்தம் கிடைக்காதுன்னு தான் எனக்குத் தோணுது சக்தி.”

“விசாரிச்ச வரைக்கும் பையன் கொஞ்சம் உல்லாசி போல தெரியுதேப்பா?” சக்திவேலின் முகத்தில் இப்போது கவலைகளின் சாயல் குடிகொண்டது.

“இப்போ யாரு தான் உல்லாசி இல்லை சக்தி? அப்படியே இருந்தாலும் வெளி உலகத்துக்குப் போடுற வேஷமா இருக்கும். அதை விட கொஞ்சம் முன்னப் பின்ன இருந்தாலும் நான் இப்படித்தான்னு வெளிப்படையா வாழ்றவன் பெட்டர் இல்லையா?”

“நீ சொல்றதும் சரிதான்.”

“சம்மதம் சொல்லிடு.”

“மித்ராக்கிட்ட நான் இன்னும் பேசலை திவா.”

“இதுல பேச என்ன இருக்கு. தேவகி எதுவும் சொல்லப் போறது இல்லை. அப்புறம் என்ன? நாம என்ன கெடுதலா பண்ணப் போறோம்? சட்டுப் புட்டுன்னு வேலையை முடி சக்தி.” இலகுவாகச் சொல்லி விட்டு அவர் மனைவியோடு போய் இணைந்து கொண்டார் திவாகர். சக்திவேல் போகும் தனது நண்பனையே பார்த்திருந்தார்.

திவாகரைப் போல அவரால் அத்தனை இலகுவாக இதற்கு முடிவு கட்ட முடியவில்லை. சந்திரசேகர் உயிரோடு இருந்திருந்தால் இப்படித்தான் தனது மகளுக்கு அவசர கோலத்தில் ஒரு மாப்பிள்ளையைப் பார்த்திருப்பானா?
இத்தனைக்கும் தேவகி வேறு வெகுளி. தங்களையே உலகம் என்று நம்பி இருக்கும் ஜீவன். அந்த நம்பிக்கைக்குத் தான் அவர்களுக்கு நியாயம் செய்ய வேண்டாமா?

திவாகரின் போக்கு கொஞ்ச காலமாக விசித்திரமாகத் தான் தோன்றியது சக்திவேலிற்கு. தொழிலில் திடீர் சரிவு ஏற்பட்ட போதும் இப்படித்தான் நடந்து கொண்டார்.

முதலுக்கு மோசம் வந்து விடக்கூடாது என்று அவர் செய்த வாதத்தில் நியாயம் இருந்ததால் தான் அன்றும் சக்திவேல் எதுவும் பேசவில்லை. ஆனால் இப்போதும் ஏன் இப்படியொரு அலட்சியம்?

ஒரு பெண் பிள்ளையின், அதுவும் தன் நண்பனின் மகள் வாழ்க்கையில் எடுக்கப்போகும் முக்கியமான முடிவு. அதை இத்தனை அலட்சியத்துடன் செய்வதா?

‘ம்ஹூம்… திவா சரிப்பட்டு வரமாட்டான். தினகரிடம் தான் பேச வேண்டும்.’ எண்ணியபடியே சக்திவேலும் எல்லோரோடும் போய் இணைந்து கொண்டார்.
***

தனக்கு முன்னால் அமர்ந்திருக்கும் சக்திவேலையே இமைக்காமல் பார்த்திருந்தாள் மித்ரமதி. அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.‌ காதுக்குள் ‘ஙொய்…’ என்று ஒரு சத்தம் மட்டும் தான் கேட்ட வண்ணம் இருந்தது.

“பார்க்க நல்ல பையன் போலத்தான் தெரிஞ்சுது சக்தி ண்ணா. கொஞ்சம் விசாரிச்சுட்டு உங்க எல்லாருக்கும் திருப்தியா இருந்தா சரி ன்னு சொல்லிடுங்க.” இது தேவகி.

“அம்மா!”

“வாயை மூடிக்கிட்டுச் சொல்லுற பேச்சைக் கேளு மித்ரா. மாமாங்க சொன்னா அது சரியாத்தான் இருக்கும்.”

“அதுக்கில்லை ம்மா…”

“நீ எதுவும் பேசாதே. என்ன பண்ணணும்னு எங்களுக்குத் தெரியும். இங்க யாரும் உன்னோட அபிப்பிராயம் கேட்கலை.” கறாராகப் பேசினார் தேவகி. மகளின் பிடிவாதம் அவர் அறிந்தது தானே.

“தேவகி…‌ எனக்கு உன் கையால ரெண்டு தோசை, மொறு மொறுன்னு… ப்ளீஸ்.” சக்தி கேட்கவும்,
“இதோ…” என்று நகர்ந்து விட்டார் தேவகி. மகளிடம் தனியாகப் பேச அவர் முயல்வது புரிந்தது. ஏதோ… நல்லது நடந்தால் சரிதான்.

“இங்கப்பாரு மித்ரா, உனக்கும் வயசாகுது. உனக்குன்னு ஒரு சில கொள்கைகள் இருக்கலாம், நான் அதைத் தப்புச் சொல்லலை. ஆனா அதுவே உன்னோட வாழ்க்கைக்குப் பாதகமா அமையும் போது அதை எங்களால ஏத்துக்க முடியாது.” தேவகி நகரவும் ஆரம்பித்தார் சக்திவேல்.

“அம்மாவை நினைச்சுப் பாரு. அப்பாவும் இல்லாம தனியா நிக்குறாங்க. வயசுப் பொண்ணை வீட்டுல வெச்சிருக்கும் போது எவ்வளவு கவலை அவங்க மனசுல இருக்கும்?”

“ஏன் மாமா? கல்யாணம் பண்ணாம ஒரு பொண்ணால தனியா வாழ முடியாதா?”

“முடியும் தான். இல்லேங்கலை. ஆனா எத்தனை காலத்துக்கு? நாளைக்கே நாங்க எல்லாரும் போய் சேர்ந்துட்டா உனக்குன்னு யாரிருக்கா?”

“யாரும் தேவையில்லை மாமா.”

“இப்போ அப்படித்தான் தோணும் மித்ரா. ஆனா வயசு போகும் போது புரியும்… வாழ்க்கையில நமக்குன்னு ஒரு துணை எவ்வளவு அவசியம் ன்னு.”

மித்ரமதி தலையைக் குனிந்து கொண்டாள். எதிர்ப்பதால் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்று புரிந்தது.

“நான் நல்லா விசாரிச்சுட்டேன் மித்ரா. எனக்குத் திருப்தியா இருக்கு. கார்த்திக் உனக்கு சரியா இருப்பான்னு எனக்குத் தோணுது. நீ நல்லா யோசிச்சு உன்னோட முடிவைச் சொல்லும்மா.”

மித்ரமதி எந்தவித வாக்குவாதத்திலும் இறங்கவில்லை. இவர்களோடு பேசிப் பயனில்லை என்றே தோன்றியது. சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலிலேயே விழலாம். அதுதான் சரியாக இருக்கும்.

அன்று இரவே கார்த்திக்கை அழைத்தாள் பெண். லண்டனில் அப்போது இரவு ஒன்பது மணியாக இருக்க மான்ஹட்டனில் நேரம் பிற்பகல் நான்கு.

மார்க் உடன் ஏதோவொரு முக்கியமான கணக்கு வழக்கில் ஆழ்ந்திருந்த கார்த்திக்கைக் கலைத்தது ஃபோன்.

“ம்ப்ச்…” ஒரு எரிச்சலோடு அதை எடுத்தவன் நம்பரைக் கூடப் பார்க்காமல் அழைப்பை ஏற்றான்.

“ஹலோ!”

“நான்… மித்ரமதி பேசுறேன்.” ஆவேசமாக அழைத்தவளை லேசாகத் தடுமாற வைத்தது அவள் காதில் வந்து மோதிய அவன் குரல்.

“ஹாய் மித்ரா.” அத்தோடு ஃபைலை மூடி வைத்தவன் நன்றாகச் சாய்ந்து அமர்ந்து கொண்டான். அதற்கு மேல் மார்க் அங்கு நிற்கவில்லை.

இந்தியாவில் நான்கு நாட்கள் தங்கி விட்டுப் போன வாரம் தான் அமெரிக்கா திரும்பி இருந்தான். நந்துவின் கல்யாணம் திருப்தியாக நடந்து முடிந்த நிறைவு அவன் மனதை நிரப்பி இருந்தது.

பார்கவியும் அவன் எதிர்பார்த்தது போலவே அமைந்து விட அவர்கள் குடும்பம் நடத்தும் அழகைக் கண்ணாறப் பார்த்து விட்டு வந்திருந்தான்.

“இன்னும் தூங்கலை? இப்போ என்ன டைம் அங்க?” நிஜமாகவே அவன் குரலில் அக்கறை தெரிந்தது.

“தூக்கம் வரலை.”

“ஏன்? என்னாச்சு? எனி ப்ராப்ளம் மித்ரா?”

“சக்திவேல் மாமா வந்திருந்தாங்க.”

“ஓ… அதுக்கும் நீங்க தூக்கத்தைத் தொலைக்கிறதுக்கும் என்ன சம்பந்தம் மித்ரா?”

“எனக்கு அவர் சொல்லுற விஷயத்துல அவ்வளவு நாட்டமில்லை மிஸ்டர். கார்த்திக்.” தெளிவாக, நிதானமாக வந்தது மித்ரமதி யின் பதில்.

இதுவரை அவளாக அவனைப் பெயர் சொல்லி அழைத்ததில்லை. கார்த்திக் வற்புறுத்தித் தான் அழைக்க வைத்திருந்தான். ஆனால் இப்போது அழுத்தம் திருத்தமாக அவன் பெயரை உச்சரித்தாள் பெண்.

“ம்…” அந்தப் பதிலை ஜீரணிக்கச் சற்று நேரம் எடுத்துக் கொண்டான் கார்த்திக். முதல் நிராகரிப்பு! அதுவும் ஒரு பெண்ணிடமிருந்து. அவன் தன்மானம் அந்த இடத்தில் பலமாகவே அடிவாங்கியது.

“காரணம் என்ன ன்னு நான் தெரிஞ்சுக்கலாமா மித்ரா?”

“பெருசா ஒன்னுமில்லை. கல்யாணத்துல இஷ்டமில்லை.”

“ஓ… ஏனப்பிடி? ஏதாவது… யாராவது காரணமா?”

“சேச்சே! அப்பிடியெல்லாம் இல்லை.”

“அப்புறம் ஏன் மித்ரா?” அந்தக் குரலில் ஒரு கடினத்தன்மை இப்போது வந்திருந்தது.

“இன்ட்ரஸ்ட் இல்லை மிஸ்டர். கார்த்திக்.”

“ஆனா எனக்கு இருக்கே!” கண்கள் நிலைகுத்தச் சற்று அழுத்திச் சொன்னான் கார்த்திக். அந்தக் குரல் அவளை லேசாக பயமுறுத்தியது.

சட்டென்று தன் தவறுணர்ந்து சிரித்தான் கார்த்திக்.

“இது ஃபோன்ல பேசுற விஷயமில்லை மித்ரா. நாம பேசலாம். நிறையப் பேசலாம். அதுக்கப்புறமா நிதானமா முடிவெடுக்கலாமே!”

“இதுல பேச என்ன இருக்கு கார்த்திக்? எனக்கு இந்தக் கல்யாணத்துல எல்லாம் பெருசா அவ்வளவு நாட்டம் இல்லை. இந்தக் காதல் கத்தரிக்காய் எல்லாம் சுத்தப் பைத்தியகாரத்தனம்.”

“சரி சரி… இருக்கட்டும். நான் நாளைக்கே கிளம்பி வர்றேன். நாம பேசலாம் மித்ரா. இப்போ அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வர வேணாம். கொஞ்சம் பிஸியா இருக்கேன், நான் வெக்கட்டுமா?”

“ம்…” அரைகுறையாகவே பதில் சொன்னாள் பெண். ஏனோ கார்த்திக்கை இப்போது பார்ப்பதில் அவளுக்கு அத்தனை விருப்பம் இருக்கவில்லை.

ஆம், இல்லை… இத்தோடு முடிக்காமல் எதற்குக் கிளம்பி வரப் போகிறானாம்? இவன் என்னிடம் நேரிடையாகப் பேசி எதைச் சாதிக்கப் போகிறான்!

மனம் வெகுவாகக் குழம்பிப் போனது. குழப்பங்கள் எப்போது வந்தாலும் மனது தேடுவது நட்பைத்தானே. கை தானாகவே ரிச்சர்ட்டை அழைத்தது.

“சொல்லுங்க மேடம்.”

“டிஸ்டர்ப் பண்ணுறேனா ரிச்சர்ட்?”

“சத்தியமா இல்லை. டிவி தான் பார்க்கிறேன். நீங்க சொல்லுங்க.”

“சக்திவேல் மாமா வீட்டுக்கு வந்திருந்தாங்க.”

“ஓ… ஏதாவது ப்ராப்ளமா மேடம்?”

“இது ப்ராப்ளமா இல்லையான்னு கூட எனக்குத் தெரியலை ரிச்சர்ட்.”

“ஓ… அப்படி என்ன சொன்னாங்க? நீங்களே குழம்பிப் போற அளவுக்கு?”

“கார்த்திக் ஃபோன் பண்ணி இருக்கார் சக்திவேல் மாமாக்கு.”

“என்னவாம்?”

“கல்யாணம் பேசி இருக்கார்.”

“யாரு… சக்திவேல் சார் பொண்ணுக்கா?”

“ரிச்சர்ட்… கேலி பண்ணாத.”

“இது கேலி இல்லை மேடம். அந்தக் கார்த்திக் உங்களைக் கல்யாணம் பண்ண சக்திவேல் சார்க்கிட்ட கேட்டிருக்கார். நான் சொல்றது சரியா?”

“ம்…”

“அதைச் சொல்லுறதுல உங்களுக்கு எதுக்குத் தயக்கம்? நான் தான் இதை அன்னைக்கே சொல்லிட்டேனே?”

“தயக்கம் எல்லாம் இல்லை ரிச்சர்ட். பிடிக்கலை.”

“ஏன் மேடம்?”

“எங்கிட்ட இதுக்குப் பதிலில்லை. பிடிக்கலை… அவ்வளவுதான். அதை நான் கார்த்திக் கிட்டயே சொல்லிட்டேன்.”

“ஓ… இது எப்போ?”

“இப்போதான். உன்னைக் கூப்பிடுறதுக்கு கொஞ்சம் முன்னாடி.”

“எதுக்கு மேடம் இவ்வளவு அவசரப்படுறீங்க? கொஞ்சம் ஆறுதலா யோசிச்சு முடிவு சொல்லி இருக்கலாம் இல்லை.”

“இதுல யோசிக்க என்ன இருக்கு ரிச்சர்ட்? பிடிக்கலை… அவ்வளவுதானே. இப்போ சொன்னாலும், யோசிச்சுச் சொன்னாலும் பதில் ஒன்னுதானே?”

“கார்த்திக் அதுக்கு என்ன சொன்னார்?”

“நீ சொன்ன மாதிரியே தான் பதில் சொன்னார்.”

“ம்…”

“நாளைக்கே கிளம்பி வர்றாராம். நேர்ல பார்த்துப் பேசலாமாம்.”

“மேடம்! நான் இப்பவும் சொல்லுறேன், கார்த்திக் உங்களுக்கு நல்லாவே மாட்ச் ஆவார். நீங்க இந்த விஷயத்தைக் கொஞ்சம் யோசிக்கிறது நல்லதுன்னு எனக்குத் தோணுது.”

“ம்ப்ச்… ரிச்சர்ட்! நீ வேற ஏன் இப்படிப் பேசுறே? எனக்கு இதுல எல்லாம் இன்ட்ரஸ்ட் வரலை.”

“ஆனா உங்களுக்குக் கார்த்திக்கைப் பிடிக்கும் மேடம்.”

“வாட்! கம் அகெய்ன்.” ரிச்சர்ட்டின் பதில் அவளை வெகுவாக ஆச்சரியப் படுத்தியது.

“என்ன பேசுறேன்னு தெரிஞ்சு தான் பேசுறியா ரிச்சர்ட்!”

“மேடம்! உங்களோட கிட்டத்தட்ட ரெண்டு வருஷமா கூடவே இருக்கேன். எனக்கு உங்களைப் பத்தி நல்லாவே தெரியும். அந்தக் கார்த்திக்கை உங்களுக்குப் பிடிக்கும் மேடம்.”

“ரிச்சர்ட்… நீ… என்ன சொல்லுறே?” மித்ரமதிக்குள் இப்போது லேசானதொரு பதட்டம் வந்தது.

எப்படி ரிச்சர்ட்டுக்கு அவளைப்பற்றித் தெரியுமோ, அதேபோல ரிச்சர்ட்டையும் அவளுக்கு நன்றாகவே தெரியும். எப்போதுமே அவள் மேல் மெல்லியதொரு மயக்கம் இருந்தாலும், அதையும் தாண்டிய அக்கறையும் பாசமும் நிறையவே உண்டு அவனுக்கு.

“உங்க கண்ணுல நான் பார்த்திருக்கேன் மேடம். அந்தக் கார்த்திக்கைப் பார்க்கும் போது உங்க கண்ணுல லேசா ஒரு சலனம் வந்து போகும். அதை நான் ரெண்டு மூனு தடவை பார்த்திருக்கேன். இதுக்கு முன்னாடி நீங்க அப்படி யாரையும் பார்த்ததும் இல்லை. இதுக்குப் பின்னாடி அப்படி நீங்க யாரையாவது பார்ப்பீங்கன்னும் எனக்குத் தோணலை.”

“ரிச்சர்ட்!”

“தப்பில்லை மேடம். நமக்கு ஒருத்தங்க மேல இப்படியெல்லாம் தோணும் போது அதை நிறுத்தி நிதானமா ஆராய்றது தப்பில்லை.”

“கார்த்திக் மேல உனக்கு நல்ல அபிப்பிராயம் இருக்கா ரிச்சர்ட்?”

“கார்த்திக் நல்லவனா கெட்டவனான்னு எனக்குத் தெரியாது மேடம். ஆனா… உங்க விஷயத்துல அவன் நல்லவன்னு தான் எனக்குத் தோணுது.”

“ம்… மேல சொல்லு.”

“பிடிவாதக்காரன். தான் நினைச்சதை நடத்தியே ஆகணும்னு நினைக்கிற ரகம். ஸ்ட்ரோங் பர்சனாலிட்டி.”

“ம்…”

“ஆனா பாசத்துக்குக் கட்டுப்படுவான்னு தோணுது. நீங்க அவசரப் பட்டு எந்த முடிவுக்கும் வராதீங்க மேடம். கொஞ்சம் டைம் எடுத்துக்கோங்க. பேசுங்க, பழகிப் பாருங்க. அதுக்கப்புறமா முடிவெடுக்கலாம்.”

“……………”

“எனக்குத் தெரிஞ்சு கார்த்திக் அத்தனை சுலபத்துல உங்களை விட்டுக் குடுக்க மாட்டான் ன்னு தான் தோணுது.”

“நீ என்னைக் குழப்புற ரிச்சர்ட்.”

“எம் மேல உங்களுக்கு நம்பிக்கை இருக்கா இல்லையா மேடம்?”

“இல்லைன்னா இந்த விஷயத்தையே உங்கிட்டப் பேசமாட்டேன் ரிச்சர்ட்.”

“அப்போ நான் சொல்லுறதைக் கேளுங்க. நிம்மதியாத் தூங்குங்க. நாளைக்கு நம்ம ஹீரோ என்ன பண்ணுறார்னு பார்ப்போம். அதுக்கப்புறமா நிதானமா முடிவெடுக்கலாம்.”

“ம்… குட்நைட் ரிச்சர்ட்.”

“குட்நைட் மேடம்.” அழைப்பை மித்ரமதி துண்டிக்க ரிச்சர்ட்டின் உதடுகள் லேசாகப் புன்னகைத்தது.

மித்ரமதியை அவனுக்கு நிறையவே பிடிக்கும். பிடிக்கும் என்று சொல்வதை விட ஒரு மயக்கமே உண்டு என்றால் சரியாக இருக்கும்.

இந்த இளவயதில் அத்தனை பெரிய கம்பெனியைக் கட்டி ஆளும் அவள் கெட்டிக்காரத்தனம் பார்த்து வாய்பிளப்பான் ரிச்சர்ட்.
ஆரம்பத்தில் தனக்கு அவள் மேலிருக்கும் ஈடுபாட்டை வெளிப்படையாகவே காட்டியிருந்தான் ரிச்சர்ட். அதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தோன்றவில்லை அவனுக்கு.

ஆனால், அவள் புறமிருந்து அதற்கு எந்தச் சாதகமானதொரு பதிலும் கிடைக்காமற் போகவே நாகரிகமாக விலகிக் கொண்டான்.

இன்றைக்கும் அந்த அழகான, துடிப்பான இளம்பெண் மேல் ஒரு மயக்கம் அவனுக்குண்டு. ஆனால் அதையும் தாண்டி அவள் மேல் மரியாதையும் உண்டு. அக்கறையும் உண்டு.

தொலைபேசி சிணுங்கவும் எடுத்துப் பார்த்தான் ரிச்சர்ட். டொமினிக்கா அழைத்துக் கொண்டிருந்தாள்.

“ஹாய் டார்லிங்!” அவன் வாழ்க்கையின் புதுவரவு இந்த டொமினிக்கா…
* * * * * * * *

The Dorchester, Park Lane… நேரம் மாலை 7:20
அந்த உலகத்தரம் வாய்ந்த ஹோட்டலின் முன்பாக ப்ளாக் ஆடி புதுப்பெண் போல அன்ன நடை பயின்று வந்து நின்றது.
பச்சை யூனிஃபார்மில் நின்ற சிப்பந்தி காரின் கதவைத் திறந்து விட இறங்கினாள் மித்ரமதி. அனைத்தும் கார்த்திக்கின் ஏற்பாடு.

அன்று மதியமே லண்டன் வந்திறங்கி விட்டான். குறுஞ் செய்தியாக வந்திருந்தது அந்தத் தகவல். அதையடுத்து ஃபோன் சிணுங்கியது. அவன் தான்.

‘மித்ரா! ஈவ்னிங் மீட் பண்ணலாம். எங்கே, எத்தனை மணிக்குன்னு இன்னும் கொஞ்ச நேரத்துல டெக்ஸ்ட் பண்ணுறேன்.”

‘கார்த்திக்…’ பேச்சை அத்தோடு அவன் முடித்துக் கொள்ளப் போக இடை மறித்தாள் பெண்.

‘பேபி… நான் இப்போ ரொம்ப டயர்டா இருக்கேன். அடுத்த வாரம் லண்டன் வர்றதாத்தான் ப்ளான். ஆனா இன்னைக்கே கிளம்பிட்டேன். அதால நேத்து நைட் மார்க்கோட உக்காந்து ஃபுல்லா வேலை பார்த்தேன். ப்ளீஸ் டா.’ அவன் குரல் கெஞ்சியது.

‘ஓகே…’ அதற்கு மேல் மித்ரமதியும் எதுவும் சொல்லவில்லை. இப்படிப் பேசுபவனிடம் என்ன சொல்வது?

சற்று நேரத்திலெல்லாம் இன்னுமொரு குறுஞ்செய்தி அனைத்துத் தகவல்களையும் தாங்கி வந்திருந்தது. அவ்வளவுதான்.
வழக்கம் போல காரும் வந்திருந்தது. அம்மாவிடம் எங்கே போகிறாள் என்று சொல்லிவிட்டுத் தான் கிளம்பினாள் இளையவள். அவர் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி! தலையில் அடித்துக் கொள்ளலாம் போல இருந்தது பெண்ணுக்கு.

அன்றும் புடவை தான் கட்டியிருந்தாள் மித்ரா. அவள் மெல்லிடை வளைத்திருந்த ஆஃப் வொயிட் ஷிஃபானை பின்க் பார்டர் அலங்கரித்திருந்தது. அதே நிறத்தில் வெள்ளி ஜரிகை வேலைப்பாடு நிறைந்த ப்ளவுஸ்.

நகைகளை பெருமட்டிற்குத் தவிர்த்திருந்தாள். காதில் மட்டும் பெரிய, கனமான அணிகலன். நீளமாக அவள் விரித்து விட்டிருந்த முந்தானை நிலத்தைத் தொட அவள் ஒயிலாக நடந்து வந்த போது எதிரே வந்த ஒரு பெண்மணி,

“ப்யூட்டிஃபுல்” என்றார் ரசனையாக. வெள்ளைக் காரர்களுக்கு அந்நியக் கலாச்சாரத்தின் மேல் எப்போதுமே அலாதியானதொரு பிரியம் தான்.

அதுவும் இந்தியக் கலாச்சாரம் என்றால்… சொல்லவும் வேண்டாம். இந்தியர்களின் நேர்த்தியான புடவைக் கட்டும், ஆடை ஆபரணங்களும், செஞ்சாந்துத் திலகமும் அவர்களை எப்போதும் மயக்கும் விஷயம் தான். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமேயில்லை!

அவர்களுக்காக புக் செய்யப்பட்டிருந்த டேபிளில் போய் அமர்ந்தாள் மித்ரமதி. கார்த்திக் இன்னும் வந்திருக்கவில்லை. சுற்றிவரக் கண்களை ஒரு முறை சுழல விட்டாள்.

ஆரவாரம் இல்லாமல் அமைதியாகப் பேசிச் சிரித்தபடி அந்த இடமே கலகலப்பாக இருந்தது. சுற்றி இருந்தவர்களின் சந்தோஷம் அவளையும் தொற்றிக் கொள்ள அவள் முகத்தில் தோன்றிய இளநகை அந்த முகத்திற்கே ஒரு தனிச் சோபையை அளித்தது.

இரவு நேரம் என்பதால் வெள்ளை நிறத்தைத் தேர்வு செய்திருந்தாள் மித்ரமதி. அங்கு மின்னிய மஞ்சள் ஒளியில் ஒரு தேவதை போல அமர்ந்திருந்தாள் ஆயிழை.

காத்திருப்பு கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது. அவளை அதிக நேரம் சோதிக்காமல் தூரத்தே நடந்து வந்து கொண்டிருந்தான் கார்த்திக்.

அழகன் தான். அவள் மனம் அவனுக்காக அவளிடமே பேசியது. நடையிலும் கம்பீரம் தெறித்தது. இவனை வேண்டாம் என்று சொல்ல எந்தப் பெண்ணிற்கும் மனம் வராது.

இன்று அவனும் வெள்ளை சூட்டில் தான் வந்திருந்தான். தொலைவில் வரும்போதே அவன் கண்கள் மித்ரமதியை அளவெடுத்த படிதான் இருந்தது.

“ஹாய் மித்ரா! லேட் பண்ணிட்டேனா?”

“இல்லையில்லை… இப்போதான் நானும் வந்தேன்.” அவள் பேசும் போதே அவளை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்தவன் ஒற்றைப் புருவத்தை உயர்த்தி மயங்கி வீழ்வது போல நடித்துக் காண்பித்தான்.

லேசாக நாணம் மேலிட தலையைக் குனிந்து கொண்டாள் பெண். அந்த நாணம் அவனை வெகுவாகக் கவர்ந்தது.

“சாப்பிடலாமா மித்ரா?”

“பேசலாமே…”

“ம்… பேசலாமே… சொல்லுங்க மித்ரா. எது உங்களை என் பக்கம் வரவிடாம தடுக்குது?”

“அப்படியில்லை கார்த்திக்… எனக்கு இந்த… இந்தக் கல்யாணத்துல எல்லாம் நம்பிக்கை இல்லை.”

“சரி… எம்மேல நம்பிக்கை இருக்கா?” அவன் கேட்கவும் அவள் சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள். அந்தப் பார்வை அவனை என்ன பண்ணியதோ! லேசாகப் புன்னகைத்தான் கார்த்திக்.

“மித்ரா! நாம கொஞ்சம் வெளிப்படையா பேசலாமா?”

“ம்…”

“நீங்களோ நானோ சின்னப் பசங்க கிடையாது. வாழ்க்கையில இனியும் நாம தனிச்சு வாழ நம்ம வீட்டுல இருக்கிறவங்களும் விடப்போறதில்லை. நான் சொல்லுறது சரியா?”

“ம்…”

“அத்தோட… எனக்கு முன்னால இருக்கிற இந்த அழகான பொண்ணு எனக்கு வேணும் மித்ரா. எனக்கே எனக்குன்னு இந்த அழகு வேணும். நாளைக்கு எனக்குப் பொறக்கப் போற குழந்தைகளுக்கு இந்த அழகு, அறிவு எல்லாமே வேணும் மித்ரா.”

“………..” மித்ரமதிக்கு வார்த்தைகள் வசப்படவில்லை. ஆனால் அந்தக் கண்கள் மட்டும் தெறித்துவிடும் போல ஆச்சரியத்தைக் காட்டின.

“பார்த்த முதல் நாள்ல இருந்தே என்னைத் தொல்லை பண்ணுற இந்த முகம் எப்பவுமே என் பக்கத்துல வேணும் மித்ரா!” இப்போது அவன் குரல் லேசாகக் கரகரத்தது.

அவன் கை நீண்டு மேசை மேலிருந்த அவள் கையைப் பற்றிக் கொண்டது. விலக்கிக் கொள்ள முயன்றவளை அவன் அனுமதிக்கவில்லை.

“கார்த்திக்!” அவள் குரல் அவளுக்கே கேட்கவில்லை.

“யெஸ் டார்லிங்! கார்த்திக் தான் கேக்கிறேன். இதுவரைக்கும் எந்தப் பொண்ணையும் பார்த்துக் கேக்காத ஒன்னை இந்த ரதிக்கிட்டக் கேக்குறேன்.”

அவன் கண்களின் மயக்கம் பார்த்து மித்ரமதி வெலவெலத்துப் போனாள். என்ன நடக்கிறது இங்கே? இவன் பேசிப் பேசியே என்னை வசியம் பண்ணி விடுவானோ!

சட்டென்று எழுந்த மித்ரமதி அந்த இடத்தை விட்டு நகரப் போனாள். ஆனால் அதற்கும் அவன் அனுமதிக்கவில்லை. நான்கைந்து எட்டுக்கள் வைத்தவளின் கரம் பிடித்துத் தடுத்திருந்தான்.

இவர்கள் அமர்ந்திருந்த மேசையைச் சுற்றி இருந்தவர்கள் அத்தனை பேரும் இப்போது இவர்களைத் திரும்பிப் பார்த்தார்கள்.

“கார்த்திக்! என்ன பண்ணுறீங்க?” இவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஒற்றைக் காலை மடக்கி நிலத்தில் மண்டியிட்டவன்,

“வில் யூ மேரி மீ பேபி?” என்றான். மித்ரமதிக்கு மயக்கம் வராத குறைதான். இவனுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது!

சுற்றி வர இருந்த அத்தனை பேரும் இந்த நாடகத்தை ஒரு புன்னகையோடு பார்த்தபடி லேசாகக் கரவொலி எழுப்ப பயந்தே போய்விட்டாள் மித்ரமதி.

“கார்த்திக்! ப்ளீஸ்… இப்படி பப்ளிக்ல பிஹேவ் பண்ணாதீங்க.” அவள் கெஞ்சியதையும் அலட்சியம் பண்ணியவன் பாக்கெட்டில் இருந்து ஒரு மோதிரத்தை எடுத்தான்.

“ஓ… ஹௌ ஸ்வீட்… கம் ஆன் யங் லேடி.” பக்கத்தில் இருந்த ஒரு வயதானவர் ரசித்துச் சொல்லவும் திகைத்துத் திரும்பிப் பார்த்தாள் மித்ரமதி.

அங்கு அமர்ந்திருந்த அத்தனை பேரும் இவர்களைத் தான் பார்த்தபடி இருந்தார்கள். உதறித் தள்ளிவிட்டுப் போக ஒரு நிமிடம் போதும். ஆனால் எதுவோ ஒன்று பெண்ணைத் தடுத்தது.

அதுதான் காதல் என்று புரிந்து கொள்ளும் காலம் அவளைப் பொறுத்தவரை இன்னும் வந்திருக்கவில்லை.

“ப்ளீஸ் ரதி!” கண்களில் காதல் வழிய அவன் கெஞ்சிய போது அவள் கை தானாக நீண்டது. ஒரு வெற்றிப் புன்னகையோடு அவள் விரலில் மோதிரத்தை அணிவித்தவன் அந்த விரல்களில் மென்மையாக இதழ் பதித்தான்.

“ஹே…” கூடியிருந்தவர்களின் ஆரவாரம் சற்றே அதிகரிக்க, குழப்பத்தோடே அந்த இடத்தை விட்டு வெளியே வந்தாள் மித்ரமதி.

குளிர்ந்த காற்று முகத்தைத் தீண்டிய போதுதான் நடந்து முடிந்த நிகழ்வின் வீரியம் புரிந்தது அவளுக்கு. அவனும் அவள் பின்னோடே வரவும் காரைக் கொண்டு வந்து நிறுத்தினான் சிப்பந்தி.

மறுப்பது மடத்தனம் என்று புரிந்து காரில் ஏறிக் கொண்டாள் மித்ரமதி. வீடு வந்து சேரும்வரை இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.

அவள் முகத்தை மட்டும் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி காரை ஓட்டிக் கொண்டிருந்தான் கார்த்திக்.

வீட்டின் முன்னால் காரை நிறுத்தியவன் அவள் இறங்கும் முன்பாக இறங்கி, அவள் பக்கக் கதவைத் திறந்து விட்டான்.

“மித்ரா!” எதுவுமே பேசாமல் நகர்ந்து போனவளின் கரம் பிடித்தவன், அவளைத் தன் புறமாக இழுத்தான். அவள் வெற்றிடையில் பதிந்த அவன் கரம் அவளை லேசாக அணைத்தது.

அந்த ஸ்பரிசத்தில் திடுக்கிட்டவள் அண்ணார்ந்து பார்க்க, அவள் முகம் பற்றி லேசாக அந்த இதழில் இதழ் பதித்தான் கார்த்திக்.

நடந்தது, நடப்பது என அத்தனையும் அவளைப் புரட்டிப் போட உள்ளே ஓடிவிட்டாள் மித்ரமதி. கார்த்திக் புன்னகைத்துக் கொண்டான்.

காரை வீட்டின் முன்பாக நிறுத்தும் போதே மித்ராவின் வீட்டு மாடியிலிருந்த திரைச்சீலை விலகுவதை கவனித்திருந்தான் கார்த்திக்.

யாரென்று பார்க்க தேவகி தான் திரையை விலக்குகிறார் என்றும் அவனுக்குத் தெரியும். தெளிவாகக் காய் நகர்த்தினான் கார்த்திக் ஹரிகிருஷ்ணா.

அவன் காய் நகர்த்துவது வியாபாரச் சதுரங்கத்தில் என்றால் அதை இலகுவாக இனங்கண்டிருப்பாள் இளையவள்.

ஆனால்… அவன் காய் நகர்த்தியதோ காதல் சதுரங்கத்தில்! பாவம்… அதன் பாலபாடம் கூட அவள் அறிய மாட்டாளே!

error: Content is protected !!