Nammul oruththi 2

காலை சூரியன் உதித்து, பூமி சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பிக்க, அன்றாட பிழைப்பு ஓட்டத்திற்கு மக்களும் தயாராக, கேசவன் வீட்டிலும் விடியல் இயல்பாக ஆரம்பித்தது.

அப்பா, மகன் இருவருக்கும் லட்சுமி சூடாக தோசை ஊற்றி கொடுக்க, இருவரும் அமைதியாக சாப்பிட்டு கொண்டிருந்தார்கள்.

ஹாசினி இன்னும் எந்திருக்கவில்லை. எப்போதும் அவளுக்கு விடியல் லேட் தான்.

முந்தைய நாளின் தாக்கங்கள் அவர்கள் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. அடுத்து என்ன செய்வது என யோசித்தப்படியே சாப்பிட்டு கொண்டிருந்தார்கள்.

கேசவன் சாப்பிட்டு முடிக்கும் நேரம், “அம்மா! டீ” என்றபடி ஹாசினியும் டைனிங் டேபிளில் வந்தமர்ந்தாள். இரவல்லாம் அழுது இருப்பாள் போல், சிவந்த வாடிய கண்கள் காட்டி கொடுத்தது.

அப்பா, அண்ணாவை பார்த்து அவள் புன்னகைக்க, அவர்களும் பதிலுக்கு புன்னகைக்க, ஹாசினியே பேச்சை ஆரம்பித்தாள்.

“பா! இன்னிக்கு திவ்யா மாலுக்கு கூப்பிட்டா… என்ன பண்ண? உங்க கிட்ட கேட்டுட்டு சொல்றேன்னு சொன்னேன்… போகவா? வேணாமா?”

கேசவன், லட்சுமியை பார்த்தார். லட்சுமியிடம் மறுப்பு எதுவும் தெரியவில்லை என்பதால் “ சரி ஹாசினி! பார்த்து போய்ட்டு வா! நம்ம திவ்யாவ பார்த்தா உனக்கும் ரிலாக்சா இருக்கும். பட் சீக்கிரம் வந்துடு… மாலுக்கு போன உடனே அம்மாட்ட சேர்ந்துட்டேன்னு போன் பண்ணி சொல்லிடு.,உனக்கு எதுவும் வேணும்ணாலும் கடையில் வாங்கிக்க… அப்பா பணம் தரேன்” கனிவும், கண்டிப்பும் வார்த்தைகளில் இருந்தது. அளவான சுதந்திரம், அளவில்லா பாசம் காண்பிப்பதில் அவருக்கு நிகர் அவர்தான்.

“இல்லப்பா! மால்ல எல்லாம் காஸ்ட்லி! விண்டோ சாப்பிங் தான்… பணம் இருக்கு போன வாட்டி தந்ததே… சோ வேணாம்… நான் சாப்பிட்டு ரெடியாறேன்”

ஹரிஷ் “அட என்ன ஹாசினி… உனக்கு பணம் வேண்டாம்னா நீ வாங்கி எனக்காவது தந்திருக்கலாம்ல… பிழைக்க தெரியாத பிள்ளையா இருக்க” பொய்யாக சலித்தான்.

“அடப் போண்ணா! வேலைக்கு போனாலும் நீ இன்னும் அப்பாட்ட பாக்கெட் மணி வாங்கறதுலேயே இருக்க”

“அந்த கிக்கே தனி ஹாசினி” சொன்னபடியே அவன் கிளம்ப, ஹாசினியும் மாலுக்கு கிளம்பினாள்.

பரப்பரப்பான அந்த பீனிக்ஸ் மாலின் காபி ஷாப் ஒன்றில் திவ்யாவும், ஹாசினியும் அமர்ந்து இருந்தார்கள். யார் பேச்சை ஆரம்பிப்பது என அவர்களும் யோசித்தப்படி இருக்க, அவர்கள் ஆடர் செய்த காப்பியும் ஆறிக்கொண்டிருந்தது.

மௌனம் கலைத்து ஹாசினியே ஆரம்பித்தாள் “சொல்லுடி! எதுக்கு கூப்பிட்ட”

அவள் கேள்வியில் எழும்பிய கோவத்தை கட்டுப்படுத்தி திவ்யா “எதுக்கு கூப்பிட்டன்னு நிஜமா தெரியாதா? அசால்ட்டா கேட்கிற… எதுக்கு அந்த மாப்பிள்ளையோட அப்பாட்ட போன் பண்ணி உன்னைய பத்தி தப்பா சொல்ல சொன்ன… அழுதுட்டு போன் பண்ணுற நைட்… எனக்கு என்னலாம் தோணுச்சு தெரியுமா? காலையில அந்த மாப்பிள்ளை…! என்ன பெயர் சொன்ன? ஆங்… தேவராஜ்….அவர் அப்பாட்ட பேசும் போது அவ்வளவு பயம் எனக்கு… கையெல்லாம் வேர்த்துட்டு… ஆனாலும் என்னலாமோ உளறினேன்… எதுக்கு கல்யாணம் வேணாம்னு போன்ல கேட்டா சொல்ல மாட்டிக்க… இப்போ இங்க வந்து அசால்ட்டா சொல்லுடினு கேட்கிற” பட படவென பொறிந்தாள் திவ்யா.

அமைதியாக அமர்ந்து இருந்தாள் ஹாசினி…

அவள் மௌனத்தில் மேலும் எரிச்சலடைந்த திவ்யா “யாரையும் லவ் பண்றீயா ஹாசினி”

இப்போது திவ்யாவின் கேள்வியில் எரிச்சலடைந்த ஹாசினி “டி, நீ எனக்கு ஸ்கூல்ல இருந்தே பிரண்ட்… என்னைய பத்தி உனக்கு தெரியாதா? லுசு மாரி லவ் பண்றீயான்னு கேட்க்கிற… மேரேஜ் வேணாம்னாலே லவ் தான் ரீசனா”

“தென் ஒய் அப்படி என்னைய போன் பண்ண சொன்ன…?!”

“பச்… சொன்னா ரொம்ப சில்லியா இருக்கும்டி, மேரேஜ் பண்ணிக்க பிடிக்கல… பயமாயிருக்கு, எங்க வீட்டில நான் தான் பிரின்சஸ்… எல்லாமே அங்க நான் தான்… இன்னொரு வீட்டில என்னால எதும் திங்க்கே பண்ண முடில… மேரேஜ்னால லைப்ல உள்ள குட்டி குட்டி ஹாப்பி எல்லாம் போய்டுமோன்னு பல தாட்ஸ்… சொன்னா உனக்கு புரியாது… இதுல லவ்வான்னு வேற கேட்குற” மௌனம் கலைத்தாள் ஹாசினி.

“கொஞ்சமாச்சு அறிவிருக்கா உனக்கு, இதுக்கா மேரேஜ் வேணாம்ங்கிற… அப்போ இத வீட்டில சொல்லி மாப்பிள்ளை பாக்கிறத தள்ளி போட வேண்டியது தானே”

“திவ்யா! நான் சொன்னா அட்லீஸ்ட் ஒன் இயர் ஆச்சு தள்ளி போடுவாங்க… பட் பார்வதி அத்தைல இருந்து சுற்றியுள்ள யாராச்சு எதாச்சு சொல்லி… எங்க வீட்டில உள்ளவங்க கோவம் என் மேல திரும்புனா… என்னால அத தாங்க முடியாதுடி… அவங்க ஹர்ட் ஆவாங்க… பட் இப்படி நான் தான் பண்றேன்னு எதுவும் தெரியாம… ‘மாப்பிள்ளை வீட்டில தான் என்னைய வேணாம்னு சொல்றாங்க’ இந்த மாதிரி இமேஜ் இருந்தா என்னைய பாவமா பாப்பாங்க… கோவப்பட மாட்டாங்க… நானும் ப்ரீயா இருப்பேன்… அதான் உன்னைய போன் பண்ணி என்னை பத்தி தப்பா சொல்ல சொன்னேன்”

“அப்போ முதல்ல வந்த இரண்டு மாப்பிள்ளை வீடும் கேன்சல் ஆனதுக்கும் நீ தான் ஏதாவது பண்ணியா” கட்டுங்கடங்காத கோவம் வார்த்தைகளில் வெளிப்பட்டது திவ்யாவிற்கு.

“ஹ்ம்… அந்த வீட்டில இருந்து பொண்ணு பார்க்க வரது முன்னாடியே தெரியும்… சோ அவங்க வரதுக்கு முன்னாடியே வெளியே போய், என் நம்பர் தெரிஞ்சிட கூடாதுனு பப்ளிக் பூத்ல போய் பேசுனேன் மாப்பிள்ளை வீட்டுல… அப்படித்தான் கேன்சல் ஆச்சு… பட் இந்த தேவராஜ் வீட்டில இருந்து வரது எனக்கு நைட் தான் அப்பா சொன்னாங்க… சோ என்னால ஒண்ணும் பண்ண முடியல… அதான் உன்ட்ட சொன்னேன்”

அவ்ளோதான் திவ்யாவின் பொறுமை… தோழியின் இந்த செயலை அவள் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை… ப்ளான் போட்டு அல்லவா எல்லாம் செய்து இருக்கிறாள்… தன்னையும் இதில் பயன்படுத்தி கொண்டாளே என்ற ஆற்றாமை வேற… தனக்கு முன்னாடி டேபிளில் இருந்த காப்பியை தூக்கி அவள் முகத்தில் எரிந்து விடலாமா எனக்கூட ஓரமாக தோன்றியது. பின்னே இருக்காதா!… நைட் போன் பண்ணி அழுத ஹாசினியின் குரலை கேட்டு… இவள் அல்லவா பயந்து போனாள்… யாரென்றே தெரியாத அந்த மனிதரிடம் சொந்த தோழியை பற்றி என்னலாம் பேசுற மாதிரி ஆயிற்று… பயத்தில் அவரிடம் இவள் பேசிய வார்த்தைகள் எல்லாம் மனதில் ஓடி என்னலாமோ செய்தது…

ஆனாலும் பொறுமையை வெகுவாக இழுத்து பிடித்து “ஹாசினி, நீ புரிஞ்சு பேசுறீயா இல்லையானு தெரில… பாரு மேரேஜ் பண்றது, தள்ளி போடுறது அது உன் இஷ்டம்… தப்பில்ல… பட் இப்படி மாப்பிள்ளை வீட்டில தப்பா சொல்ல சொல்லி மேரேஜ் நிப்பாட்டுறது… நீ உங்க வீட்டிற்கு செய்ற துரோகம்… பண்றதையும் பண்ணிட்டு வீட்டில ஹர்ட் ஆக கூடாதுனு வேற சொல்ற… நீ என்ன சொல்ல வறேன்னு உனக்கே புரியுதா… அம்மா அப்பா கஷ்டப்பட்டாலும் பரவால… பட் அது என்னாலனு அவங்களுக்கு தெரிஞ்சிட கூடாதுனு சொல்லுற….சொந்த வீட்டிலேயே நடிக்கிற….உனக்கு அப்புறம் தான் கல்யாணம்னு ஹரிஷ் அண்ணா வெயிட் பண்ணிட்டு இருக்கார்… இவ்ளோ பாசமான குடும்பத்தில நீ வேஷம் போடுற… நீ பண்றது ஏமாத்து வேல… என்ன காரணம்னு உன்ட்ட சரியா கேட்காம உன் பேச்சை கேட்டு நானும் போன் பேசிட்டேன்… நான் ஒரு முட்டாள்… உயிர் தோழினு கேட்டானு யோசிக்காம பண்ணேன்ல என்னைய சொல்லனும்… இதோட பின்விளைவுகள் தெரியாமல் விளையாடுற நீ”

கோவத்தில் சிவந்த அவளது முகத்தை பார்த்து… அமைதியாக இருந்தாள் ஹாசினி.

ஹாசினி முகத்திலேயே தான் பேசியது எதுவும் அவளுக்கு மனதில் உரைக்கவில்லை என்பதை உணர்ந்த திவ்யா… மேலும் தொடர்ந்தாள் “ஹாசினி, உன் அண்ணா எவ்ளோ நாள் வெயிட் பண்வான்னு நினைக்கிற… சூழ்நிலை இப்படியே இருக்காது, நாளைக்கே உன் அண்ணாக்கு மேரேஜ் ஆயி அண்ணி வீட்டுக்கு வந்துட்டா… நிறைய மாற்றம் வரும்… மேரேஜ் தள்ளிப்போடு ப்ராப்ளம் இல்ல… பட் கோல்மால் பண்ணாத… சொந்த வீட்டிலேயே சீட்டிங் பண்ணாத”

அவள் வார்த்தைகளில் கோவமடைந்த ஹாசினி “என் அண்ணாக்கு நான் தான் எல்லாம்… நான் பண்ணிக்காம அவன் மேரேஜ் பண்ணமாட்டான்… எங்க வீட்டிலயும் அப்படி பண்ண மாட்டாங்க…….சோ நீ சொன்ன சூழ்நிலை எனக்கு வராது… நீ பண்ண ஹெல்ப்க்கு தாங்க்ஸ்… இத யார்ட்டையும் சொல்லாத”

பேசி புரிய வைக்கும் நிலையில் தன் தோழி இல்லை என்பதை புரிந்து கொண்ட திவ்யா, ”நீ என் க்ளோஸ் ப்ரண்ட்… அதான் நீ அழுது நைட் போன் பண்ணவுடனே, இத யோசிக்காம பண்ணிட்டேன்… நீ பண்ணது தப்புனாலும் என் ப்ரண்ட்டா போய்ட்ட… அந்த பாவத்துக்கு நான் இத யார்ட்டயும் சொல்லல… பட் ப்ளீஸ் இனி என்ட்ட பேசாத” பதிலுக்கு காத்திராமல் கிளம்பிளாள் திவ்யா.

தோழியின் இந்த பரிணாமத்தை எதிர்பார்க்கா விட்டாலும், நம்ம திவ்யா தானே… எங்கே போய்ட போறா… அவளே வந்து பேசுவாள் என தன்னை தானே சமாதானம் செய்து கொண்டால் பெண்.

எல்லாத்தையும் ஈஸியாக எடுத்து கொண்டால் சரிவருமா? பின் விளைவுகள் யோசிக்காமல் ஹாசினி செய்த தப்பினால், இன்று உற்ற தோழியின் எதிரியாகிவிட்டாள்… இனியாவது அவள் உணர்வாளா?