Mayam 13

Mayam 13

ராதாவும், முத்துராமனும் ஒருவரை ஒருவர் அதிர்ச்சியாக பார்த்து கொண்டு நிற்க மறுபுறம் அனுஸ்ரீயும், தாமரையும் அடுத்து என்ன நடக்கப்போகிறதோ என்ற அச்சத்தோடு அவர்கள் இருவரையும் பார்த்து கொண்டு நின்றனர்.

ராதா தயக்கத்துடன் வீட்டை நோக்கி திரும்பி செல்ல போக அவசரமாக அவர் கை பிடித்த தாமரை
“அம்மா அனுக்கா ஆசையாக கூப்பிட்டாங்கம்மா! ஒரே ஒரு தடவை போயிட்டு வரலாமேம்மா!” என சற்று கெஞ்சலாக கேட்கவும் வாசல் கேட் அருகில் ஆர்வத்துடன் அவர்களை பார்த்து கொண்டு நின்ற அனுஸ்ரீயை ஒரு முறை திரும்பி பார்த்தவர் எதுவும் பேசாமல் அவளை நோக்கி நடந்து வந்தார்.

“வாம்மா போகலாம்” என்று விட்டு ராதா முன்னே நடந்து செல்ல முத்துராமனும் எதுவும் பேசாமல் அவர்களை பின் தொடர்ந்து சென்றார்.

அனுஸ்ரீ மற்றும் தாமரை தாங்கள் நினைத்ததை நடத்தி விட்ட வெற்றி களிப்போடு ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகத்து விட்டு ராதா மற்றும் முத்துராமனை தாண்டி சிறிது இடைவெளி விட்டு அவர்கள் முன்னால் நடந்து சென்றனர்.

அவர்கள் இருவரிலும் இருந்து சற்று தள்ளி அவர்கள் பின்னால் நடந்து வந்து கொண்டிருந்த முத்துராமன் மற்றும் ராதாவுக்கு இடையிலோ கிட்டத்தட்ட ஐந்து அடி இடைவெளியாவது இருந்தது.

இளையவர்கள் இருவரும் தங்களுக்குள் வளவளத்துக் கொண்டு நடந்து சென்று கொண்டு இருக்க அவர்கள் பின்னால் நடந்து வந்து கொண்டிருந்த பெரியவர்களுக்கு இடையிலோ கனத்த அமைதி நிலவியது.

அவர்கள் இருவருக்கும் இடையில் குண்டூசி விழுந்தால் கூட இடி இடித்தாற் போல சத்தமாக இருக்கும்.

அந்த அளவுக்கு அவர்கள் இருவருக்கும் இடையில் அமைதி நிலவியது.

தாங்கள் இருவரும் இவ்வளவு அமைதியானவர்களா? என்று அவர்கள் இருவருக்கும் கூட அன்று தான் தெரியும்.

ஏனெனில் அவர்கள் இருவருக்கும் இடையில் எப்போதும் இப்படி ஒரு அமைதி நிலவியது இல்லை.

பெரும்பாலும் அவர்கள் இருவருக்கும் தனிமை கிடைத்ததில்லை.

கிடைத்ததில்லை என்பதை விட அவர்கள் ஏற்படுத்திக் கொண்டது இல்லை என்பது தான் பொருந்தும்.

அதையும் மீறி தனிமை கிடைத்தால் அங்கு பெரிய வாக்குவாதமே தொடங்கி விடும்.

என்ன காரணம் என்று தெரியாமலேயே பல வாக்குவாதம் அவர்கள் இருவருக்கும் இடையில் நிகழும்.

ஆனால் இன்று இந்த தனிமையும், அமைதியும் அவர்கள் இருவருக்கும் புதிது.

தங்கள் குண மாற்றத்தை எண்ணி அவர்கள் இருவருக்குமே ஆச்சரியமாகவும், அதே நேரம் சிரிப்பாகவும் இருந்தது.

அந்த புன்னகை நிறைந்த மனநிலையோடு ராதா முத்துராமன் புறம் திரும்ப அதே நேரம் அவரும் ராதாவை புன்னகையோடு பார்த்து கொண்டு இருந்தார்.

“என்ன சிரிப்பு?” ராதா தான் தயக்கத்தை உடைத்து முதலில் பேச்சை தொடங்கினார்.

“நீ எதற்காக சிரிச்சியோ அதற்காக தான் நானும் சிரித்தேன்” இயல்பாக பதிலுரைத்து விட்டு தன் பார்வையை வீதியின் புறம் திருப்பிக் கொண்டார் முத்துராமன்.

“ஓஹ்! உங்களுக்கு மைண்ட் ரீடிங் எல்லாம் தெரியும் போல?”

“எல்லோரோட மைண்ட் என்ன நினைக்கும்னு எனக்கு தெரியாது பட் நீ என்ன நினைப்பேன்னு தெரியும்”

“யாரு உங்களுக்கா? அப்படி நான் என் மனதில் என்ன நினைத்தேன்னு உங்களுக்கு ஆரம்பத்தில் தெரிந்து இருந்தால் இப்போ நான் இந்த நிலையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லையே!” சற்று கோபமாகவே கூறினார் ராதா.

“இது தான்! இது தான்! உன் பிரச்சினை நான் ஒண்ணு சொன்னா நீ ஒண்ணு நினைத்து பேசுற இந்த கோபம் தான் உன் பிரச்சினையே!” முத்துராமன் சலித்து கொண்டே கூற

அவரை முறைத்து பார்த்த ராதா
“அப்போ நான் தான் பிரச்சினை? உங்க கிட்ட எதுவும் பிரச்சினை இல்லை அப்படி தானே?” என்று கேட்கவும்

அவரோ
“உன் கூட பேசுறதே வேஸ்ட்” என்று விட்டு தன் முகத்தை திருப்பிக் கொண்டார்.

இத்தனை நேரமாக அவர்கள் இருவருக்கும் இடையில் நிகழ்ந்த வாக்குவாதம் அவர்கள் இருவருக்கும் மாத்திரம் கேட்கும் வகையில் தான் நடந்தாலும் அவர்கள் முன்னால் நடந்து சென்று கொண்டிருந்த தாமரை மற்றும் அனுஸ்ரீக்கு இவை எல்லாம் கேட்காமல் இல்லை.

“என்னக்கா இது? நாம ஒண்ணு நினைத்தா இங்கே வேற ஒண்ணு நடக்குது?” தாமரை கவலையுடன் அனுஸ்ரீயிடம் கேட்க

பதட்டத்துடன் தன் கையை பிசைந்து கொண்டே நடந்த சென்று கொண்டிருந்தவள்
“அது தான் என்ன பண்ணுறதுனு புரியல தாமரை இப்படி எல்லாம் உல்டாவா மாறிடுச்சே! இவங்க சண்டையை மேலே வளர விடக்கூடாது நீ அம்மா பக்கம் போ நான் அவங்க இரண்டு பேருக்கும் நடுவில் வர்றேன் தோட்டத்துக்கு போற வரைக்கும் பேச்சை மாற்றலாம்” என்று விட்டு ராதா மற்றும் முத்துராமனின் நடுவில் வந்து நின்று அவர்களோடு இணைந்து நடந்து சென்றாள்.

தாமரை மற்றும் அனுஸ்ரீ அவர்கள் இருவருக்கும் அருகில் வந்து விட அவர்கள் இருவரும் தற்காலிகமாக தங்கள் வாக்குவாதத்தை நிறுத்தி கொண்டனர்.

ஆனால் இருவர் முகத்திலும் துளியளவும் சந்தோஷம் இருக்கவில்லை.

“என்னக்கா இது?” தாமரை சைகையில் அனுஸ்ரீயை பார்த்து கேட்க

“நான் பார்த்துக்கிறேன்” என அவளைப் பார்த்து கண் சிமிட்டியவள்

ராதா மற்றும் முத்துராமனை திரும்பி பார்த்துக் கொண்டே
“அம்மா நீங்களும் சரி அப்பா நீங்களும் சரி இரண்டு பேரும் கடைசியாக எப்போ நம்ம தோட்டத்துக்கு போனீங்க?” என்று கேட்டாள்.

“கடைசியாகவா?” அனுஸ்ரீயின் கேள்விக்கு நீண்ட நேரமாக அவளது பெற்றோர் யோசித்து கொண்டே நடந்தனர்.

“அய்யோ! என்ன இது இவ்வளவு நேரமாக யோசிக்குறீங்க? நீங்க இரண்டு பேரும் யோசித்து பதில் சொல்றதுக்குள்ள அக்காவோட கல்யாணமே முடிந்துடும் போல இருக்கே!” நக்கலாக சிரித்துக் கொண்டே கூறிய தாமரையைப் பார்த்து புன்னகத்து கொண்ட ராதா

“இன்னைக்கு நேற்று நடந்த விஷயம்னா உடனே சொல்லிடலாம் இது எவ்வளவு காலத்துக்கு முன்னால் நடந்ததுனே எனக்கு ஞாபகம் இல்லையே! கடைசியாக அனுஸ்ரீ பிறந்து இருந்த நேரம் வந்ததுனு தான் நினைக்கிறேன்” என்று கூறவும்

“ஓஹ்!” என அவர் சொன்னதை கேட்டு கொண்ட அனுஸ்ரீ தன் கவலையை மறைத்து கொண்டு

முத்துராமன் புறம் திரும்பி
“அப்போ அப்பா நீங்க?” என்று கேட்டாள்.

“நானும் அப்போ தான் அனும்மா வந்தேன்” முத்துராமன் சற்று சங்கடத்தோடு கூறவும்

“அப்போ கிட்டத்தட்ட இருபத்தைந்து வருஷம் ஆச்சு இல்லையா? பரவாயில்லை இன்னைக்கு நாம எல்லாருமே ஒண்ணா எல்லா இடத்தையும் சுற்றி பார்த்துடலாம்” என்ற அனுஸ்ரீ தன் தாய், தந்தையின் நிலையை எண்ணி மனதிற்குள் முற்றாக நொறுங்கி போனாள்.

‘இத்தனை வருடங்களாக சண்டை மட்டும் தான் இவங்க வாழ்க்கையா?’ மனதிற்குள் எழுந்த கேள்வியை வெளியே கேட்டு அந்த சூழ்நிலையை குழப்பமாக மாற்ற விரும்பாமல் அமைதியாக நடந்து சென்றாள் அனுஸ்ரீ.

நாயகி இல்லத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தள்ளி ஒரு சிறு ஓடை இருக்கும்.

அந்த ஓடையைத் தாண்டி இன்னும் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்தால் அவர்களது மாந்தோப்பு வந்து விடும்.

பல கதைகள் பேசிக் கொண்டே அவர்கள் நால்வரும் இப்போது அந்த மாந்தோப்பை வந்து சேர்ந்து இருந்தனர்.

அந்த மாந்தோப்பின் பின்புறம் இன்னுமொரு ஓடை உண்டு.

அந்த ஓடையில் நீர் சலசலக்கும் சத்தம் எப்போதும் அவர்கள் மாந்தோப்பில் இருக்கும் நேரங்களில் கேட்டுக் கொண்டே இருக்கும்.

நீண்ட நேரமாக நடந்து வந்த களைப்பு போக அவர்கள் நால்வரும் அந்த மாந்தோப்பின் பின்புறமாக இருந்த ஓடையின் அருகில் சிறிது நேரம் ஓய்வாக அமர்ந்து இருக்க ராதா மாத்திரம் அந்த இடத்தை சுற்றிலும் பார்த்து கொண்டு இருந்தார்.

“என்னம்மா ரொம்ப நேரமாக சுற்றி சுற்றி பார்த்துட்டே இருக்கீங்க?” அனுஸ்ரீயின் கேள்விக்கு புன்னகையோடு எழுந்து அவளருகில் வந்து அமர்ந்து கொண்டவர்

“இந்த இடத்தை பார்க்கும் போது எனக்கு என் சின்ன வயது ஞாபகம் நிறைய வருது நீ வயிற்றில் இருந்த நேரம் நானும், உங்க அப்பாவும் என் வளைகாப்புக்காக இங்கே தங்கி இருந்தோம் அந்த நேரம் எல்லாம் பெரும்பாலும் இந்த ஓடையில் தான் நான் வந்து இருப்பேன் உங்க அப்பா மாங்காய் பறித்து கொண்டு வந்து தருவாரு ரொம்ப நல்லா இருக்கும்” என்று ரசனையோடு கூறவும் முத்துராமனும் அந்த நாள் நிகழ்வுகளை எண்ணி புன்னகத்து கொண்டார்.

அவர் கூறியதைக் கேட்டு கொண்டிருந்த அனுஸ்ரீ மற்றும் தாமரை ஒருவரை ஒருவர் அர்த்தமுள்ள பார்வை ஒன்றை பரிமாறிக் கொண்டனர்.

சிறிது நேரம் அவர்கள் பழைய நினைவுகளை எல்லாம் துருவித்துருவி அனுஸ்ரீ கேட்டுக் கொண்டு இருக்க தற்செயலாக ஓடையின் மறுபுறம் திரும்பி பார்த்த தாமரை அங்கு நின்று கொண்டிருந்தவர்களைப் பார்த்து அதிர்ச்சியாக
“அக்கா! அக்கா!” என சத்தமிட்டவாறே அனுஸ்ரீயின் தோளில் வந்து தட்டினாள்.

“என்ன டி உன் பிரச்சினை?” சலிப்போடு கேட்டவளின் அருகில் மண்டியிட்டு அமர்ந்து கொண்டவள் அவள் தாடையைப் பற்றி திருப்பி ஓடையின் மறுபுறம் காட்ட அங்கே ரிஷி, சந்துரு மற்றும் அம்ருதா நின்று கொண்டிருந்தனர்.

தாமரை போட்ட சத்தத்தில் அவளையே பார்த்து கொண்டு இருந்த பெரியவர்கள் இருவரும் அவள் பார்வை இருந்த திசையை பார்த்து விட்டு புன்னகையோடு அனுஸ்ரீயின் அருகில் வந்து
“இதற்கு தான் தோட்டத்துக்கு போகலாம் வாங்கன்னு எங்க எல்லாரையும் கூட்டிட்டு வந்தியா அனும்மா?” என்று கேட்கவும்
அவசரமாக இல்லை என்று தலை அசைத்தவள் அவர்கள் பார்வையில் இருந்த கேலியை தாள முடியாமல் முகம் சிவக்க தன் தலையை குனிந்து கொண்டாள்.

ஓடையை கடக்க போடப்பட்டிருந்த பாலத்தை கடந்து ரிஷி, சந்துரு மற்றும் அம்ருதா அவர்கள் அருகில் வந்து கொள்ள பெண்கள் மூவரும் அவர்களை பார்த்து புன்னகையோடு எழுந்து நின்றனர்.

அதேநேரம் புன்னகையோடு அவர்கள் அருகில் சென்று நின்றார் முத்துராமன்.

“ஹலோ மாமா! வாட் அ சர்ப்பரைஸ்? நீங்க என்ன இந்த பக்கம்?” ஆச்சரியமாக கேட்பது போல ரிஷி கேட்கவும்

சிரித்துக் கொண்டே அவனது தோளில் தட்டி கொடுத்த முத்துராமன்
“அதை நான் கேட்கணும் மாப்பிள்ளை இது அத்தையோட தோட்டம்” எனவும்

“அப்படியா? சொல்லவே இல்லை பார்த்தீங்களா? இந்த சந்துரு தான் ஊர் சுற்றி பார்க்க போகலாம் வா வான்னு சொல்லி ஒரே நச்சரிப்பு அது தான் கூட்டிட்டு வந்தேன் பட் அ கோ இன்ஸிடண்ட் உங்க தோட்டத்துக்கே வந்துட்டோம் பாருங்களேன்” என்று கூற

சந்துருவோ அவன் கூறியவற்றை எல்லாம் கேட்டு
“அடப்பாவி! இப்படி பச்சையா புளுகுறானே!” என நினைத்து கொண்டே அதிர்ச்சியாக அவனைப் பார்த்து கொண்டு நின்றான்.

“ஏன்டா! நான் ஊர் சுற்றி பார்க்க கேட்டேனா? செவனேனு ரூம்ல படுத்துட்டு இருந்த என்னை அடித்து எழுப்பி வெளியில் போக வான்னு கூட்டிட்டு வந்து இப்போ இங்க கதையை மாத்துரியா? நீ எல்லாம் நல்லா வருவடா!” ரிஷியின் காதில் சந்துரு கோபமாக கூறவும்

அவர்கள் இருவரையும் பார்த்து கொண்டு நின்ற முத்துராமன்
“என்ன மாப்பிள்ளை தம்பி என்ன சொல்லுறாரு?” என்று கேட்டார்.

புன்னகையோடு அவரைத் திரும்பி பார்த்த ரிஷி
“அது வந்து மாமா இது உங்க தோப்பு தானே ஒரு மாங்காய் கிடைக்குமானு கேட்டான்” என்று கூற

சந்துருவோ
“துரோகி!” என்று முணுமுணுத்துக் கொண்டே அவனை முறைத்து பார்த்தான்.

“ஒண்ணு என்ன ஒண்ணு ஒரு மூட்டையே பறித்து தர்றேன் உங்களுக்கு இல்லாததா? வாங்க இப்போவே பறித்து தர்றேன்” என்று விட்டு முத்துராமன் முன்னால் செல்ல ராதா மற்றும் தாமரை புன்னகையோடு அவரைப் பின் தொடர்ந்து சென்றனர்.

“மாமா எனக்கும் மெங்கோ வேணும்” அம்ருதா ரிஷியின் கையை சுரண்ட புன்னகையோடு அவள் கன்னத்தில் இதழ் பதித்தவன்

“அம்மு குட்டிக்கு இல்லாததா? டேய் சந்துரு அம்முவுக்கு ஒரு மெங்கோ எடுத்து கொடு” என்றவாறே சந்துருவிடம் அம்ருதாவை கொடுக்க

“அம்மு பேபிக்காக உன்னை விடுறேன் இல்லைனே உன் கதையை முடிச்சுருப்பேன்” என அடிக் குரலில் கோபமாக கூறி விட்டு செல்ல ரிஷியோ அது எதைப்பற்றியும் கவலை இன்றி புன்னகையோடு அனுஸ்ரீயின் அருகில் வந்து நின்றான்.

“எப்படி சொன்ன மாதிரி சப்போர்ட்க்கு வந்துட்டேனா?”

“யாரு நீங்க? எல்லாம் முடிந்த அப்புறம் சப்போர்டா?” தன் இடுப்பில் கை வைத்து முறைத்து கொண்டு அனுஸ்ரீ கேட்கவும்

“என்ன எல்லாம் முடிஞ்சா?” என அதிர்ச்சியாக கேட்டான் ரிஷி.

தாங்கள் வீட்டில் இருந்து புறப்பட்டு முதல் ரிஷி இங்கு வரும் வரை நடந்த விடயங்களை எல்லாம் அவள் கூறி முடிக்க
“ஓஹ்! இவ்வளவு நடந்துச்சா?” என்று ரிஷி கேட்கவும்

“உங்களை!” என கோபமாக அவன் கழுத்தின் அருகில் கை கொண்டு சென்றவள்

“போங்கப்பா!” என்றவாறே அவனை தாண்டி செல்ல போக அவளை நகர விடாமல் அவள் கைகளை பிடித்து கொண்டான் ரிஷி ஆகாஷ்.

“ரிஷி என்ன பண்ணுறீங்க?” அனுஸ்ரீ சற்று கூச்சத்தோடு நெளிந்து கொண்டே அவன் கையில் இருந்து தன் கையை எடுத்துக் கொள்ள பார்க்க அவனது பிடியோ உடும்பு பிடியாக இருந்தது.

“உன்னை பார்த்து இருபது நாளாச்சு நீ என்னடானா இப்படி கோபமாக பேசிட்டு போற கொஞ்சம் சிரிச்சு பேசுனா என்னவாம்?” பேச்சு வாக்கில் அவளை நெருங்கி இருந்தான் அந்த மாயக்காரன்.

“நீங்க இவ்வளவு லேட்டா வந்தா வேற என்ன பண்ணுறதாம்?” வேறு எங்கோ பார்த்துக்கொண்டு அவள் கூற

அவள் தாடையைப் பற்றி திருப்பி தன் பார்வையை அவள் பார்வையோடு கலக்க விட்டவன்
“நான் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்து சொன்னதை செய்வேன் போனில் என்ன சொன்னேன் ஞாபகம் இருக்கா இனி வரப்போகும் நாள் எல்லாம் உனக்கே உனக்காக!” என்று கூற பெண்ணவள் முகமோ அந்தி வானத்தின் நிறத்தை தத்தெடுத்து கொண்டது.

அவள் வெட்கத்தை நேரில் பார்த்து சொக்கிப் போனவன் மேலும் அவளை நெருங்கி நின்றான்.

ஒரு கையால் அவள் கையை பற்றி இருந்தவன் மறுகையால் அவள் இடையை வளைத்து பிடித்து கொண்டான்.

அவன் கை ஸ்பரிசத்தில் அவளது உடலோ கூச்சம் கொண்டது.

அவளது கையை பற்றி இருந்த தன் கையை மெல்ல விலக்கி கொண்டவன் அவள் நெற்றியில் விழுந்து கிடந்த ஒற்றை முடிக் கற்றையை மெல்ல விலக்கி விட்டான்.

அவனது கை விரல் மெல்ல மெல்ல அவள் முக வடிவை அளக்கத் தொடங்க அவள் கைகளோ அவனது தோளை இறுகப் பற்றி இருந்தது.

அவன் விரல் தந்த ஸ்பரிசத்தில் அவள் தன் கண்களை மூடிக் கொள்ள அதையே அவள் சம்மதமாக எடுத்து கொண்டவன் அவள் மூடிய விழிகளில் மெல்ல தன் இதழ் பதித்தான்.

அவனது ஒவ்வொரு தொடுகையிலும் அவளது பெண்மை வெட்கம் கொண்டது அவனுக்கும் நன்றாகவே புரிந்தது.

விழிகள், நெற்றி, கன்னங்கள் என அவன் இதழ்கள் அவள் முகத்தில் கோலம் வரைந்து கொண்டு இருக்க அந்த இடத்தில் அந்த ஓடையின் சத்தம் மாத்திரமே பெருஞ் சத்தமாக கேட்டு கொண்டிருந்தது.

அவள் மனமோ அந்த நிலையை முழுமையாக ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் வேண்டாம் என்று விலக்கவும் முடியாமல் ஒரு நிலையில் தவித்து கொண்டு இருக்க அவன் மனமோ இவள் ஏன்னவள் என்ற உரிமையோடு அவளை மேலும் நெருங்கி செல்ல பணித்தது.

அவள் இதழ்கள் மீது அவன் பார்வை நிலை குத்தி நிற்க அவளோ கண்களை இறுக மூடிய வண்ணம் நின்று கொண்டிருந்தாள்.

மனம் விதித்த கட்டளையின் படி ரிஷி அனுஸ்ரீயின் இதழ்களை நெருங்கப் போக அந்த நேரம் பார்த்து அந்த ஓடையின் ஓரமாக நின்ற தென்னை மரத்தில் இருந்து தேங்காய் ஒன்று விழுந்தது.

அந்த சத்தத்தில் திடுக்கிட்டு தன் கண்களை திறந்து கொண்ட அனுஸ்ரீ தன் முகத்தின் வெரு அருகில் இருந்த ரிஷியைப் பார்த்து விட்டு சட்டென்று அவனை தள்ளி விட்டாள்.

அனுஸ்ரீ திடீரென்று தன்னை தள்ளி விடுவாள் என்று எதிர்பார்க்காத ரிஷி சற்று தடுமாறி கொண்டே விழப் போக சட்டென்று அவனை பிடித்து நிறுத்தியவள் தன் கையை விலக்கி எடுத்து கொண்டாள்.

தன் ஒட்டுமொத்த சந்தோஷ மனநிலையும் வடிந்து போக அவளை அவன் கேள்வியாக நோக்க சற்று சங்கடத்துடன் தன் தலையை குனிந்து கொண்டவள்
“இது எல்லாம் இப்போ வேண்டாம் ரிஷி ப்ளீஸ்” என்று கூறவும்

ஏற்கனவே அவள் தன்னை தள்ளி விட்ட கோபத்துடன் நின்று கொண்டிருந்தவன்
“அப்போ நீ என்னை நம்பல அப்படி தானே?” என்று கேட்டான்.

அவசரமாக அவனை நிமிர்ந்து பார்த்து மறுப்பாக தலை அசைத்தவள்
“அப்படி இல்லை ரிஷி! இப்போ…”

“வேண்டாம் எதுவும் சொல்ல வேண்டாம் உனக்கு என் மேல அவ்வளவு தான் நம்பிக்கை போல நீயும் என்னை நம்பல தானே இனி உனக்கும் எனக்கும் எந்த பேச்சு வார்த்தையும் இல்லை நான் வர்றேன்” இன்னும் சிறிது நேரத்தில் அவளை தன்னிடம் பேச சொல்லி கெஞ்சப் போவது தெரியாமல் கோபமாக அந்த இடத்தில் இருந்து ரிஷி சென்று விட அவனது கோபத்தை பார்த்த அனுஸ்ரீயோ திக்பிரமை பிடித்தாற் போல விக்கித்துப் போய் நின்றாள்…..

error: Content is protected !!