Mayam 14

அனுஸ்ரீ அதிர்ச்சியில் உறைந்து நின்றது என்னவோ ஒரு சில நிமிடங்கள் தான்.

ரிஷி கோபமாக செல்வதை பார்த்து உடனே தன்னை சுதாரித்துக் கொண்டவள்
“ரிஷி! ஒரு நிமிஷம் நில்லுங்க ரிஷி!” என்றவாறே அவனை பின் தொடர்ந்து ஓடிச்சென்றாள்.

அவனது வேக நடைக்கு ஈடு கொடுத்து ஓடி வந்து அவன் முன்னால் வழி மறித்தவாறு வந்து நின்றவள்
“ப்ளீஸ் ரிஷி! கோபப்படாதீங்க நான் உங்க மேல நம்பிக்கை இல்லாமல் அப்படி பண்ணல எனக்கு அதை உடனே ஏற்றுக்க முடியல அது தான் அப்படி பண்ணிட்டேன் நான் உங்களை தள்ளி விட்டது தப்பு தான் ஐ யம் ஸாரி” அவன் கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்து கொண்டே கூற கோபமாக அவள் கைகளை உதறியவன் அவளை முறைத்து பார்த்து விட்டு கடந்து சென்றான்.

அவனது இந்த செய்கையைப் பார்த்து முற்றிலும் மனமுடைந்து போனாள் அனுஸ்ரீ.

அவனது கோபத்தை இதற்கு முன்னர் அவன் ஆபிஸில் இருந்த அந்த ஒரு வாரத்தில் ஒன்றிரண்டு தடவைகள் அவள் பார்த்து இருக்கிறாள்.

அது வேறு நபர்களிடம் அவன் காட்டிய கோபம் ஆனால் இன்று இந்த கோபம் அவன் அவள் மேல் காட்டியது.

அவனை எப்படி சமாதானப்படுத்துவது என்று கூட அவளுக்கு தெரியவில்லை.

அவனது கோபத்தை பார்த்து அவளது கண்கள் கலங்கி இருந்தது கூட அவளுக்கு புரியவில்லை.

“அக்கா இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க? எல்லோரும் அங்கே உங்களுக்காக காத்துட்டு இருக்கும் வாங்க அக்கா” தாமரை அவளருகில் வந்து கூறவும் சட்டென்று தன் தலையை குனிந்து கொண்ட அனுஸ்ரீ சரியென்று தலை அசைத்து விட்டு அவர்கள் எல்லோரும் நின்ற இடத்தை நோக்கி நடந்து சென்றாள்.

ரிஷியின் முகத்தையே அனுஸ்ரீ பார்த்து கொண்டு நிற்க அவனோ மறந்தும் கூட அவளின் புறம் தன் பார்வையை திருப்பவில்லை.

அவனது இந்த பாராமுகம் அவள் மனதை இம்சிக்க கவலையுடன் அவன் முகத்தை பார்த்து கொண்டு நின்றவள் ‘ஒரு முறை திரும்பி பாருங்க ரிஷி ப்ளீஸ்!’ என மனதிற்குள் வேண்டிக் கொண்டு நின்றாள்.

ஆனால் அவளது எந்த வேண்டுதலும் அங்கு செல்லுபடியாகவில்லை.

“சரி மாமா நான் கிளம்புறேன் அக்கா அம்ருதாவை ரொம்ப நேரம் வெளியே வைத்துட்டு இருக்க வேண்டாம்னு சொன்னாங்க அது தான் இப்போவே கிளம்புறோம் தப்பா எடுத்துக்காதீங்க” ரிஷி கூறியதை கேட்டு சந்துரு ஆச்சரியமாக தன் நண்பனை திரும்பிப் பார்த்தான்.

அவனது பார்வையின் பொருளை உணர்ந்து கொண்டாற் போல அவனை பார்த்து சிறு புன்னகை சிந்தியவன்
“நாங்க வர்றோம் மாமா, வர்றோம் அத்தை பாய் சிஸ்டர்” என அனுஸ்ரீயை மட்டும் தவிர்த்து மற்ற எல்லோரிடமும் சொல்லி விட்டு முன்னே நடந்து செல்ல சந்துருவோ குழப்பத்தோடு அவனை பின் தொடர்ந்து சென்றான்.

மறுபுறம் தோட்டத்தில் நின்று கொண்டிருந்த முத்துராமன், ராதா மற்றும் தாமரை அவ்வளவு நேரமும் இயல்பாக பேசி கொண்டிருந்த பழக்கத்தில் அதைப் போலவே இயல்பாக தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்க அதை எதுவும் கவனிக்கும் மனநிலையில் அனுஸ்ரீ இருக்கவில்லை.

முத்துராமனும், ராதாவும் இயல்பாக தங்கள் பழைய நினைவுகளை எல்லாம் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டிருக்க அதை பார்த்து மனம் நிறைந்து போன தாமரை புன்னகையோடு அனுஸ்ரீயை திரும்பி பார்க்க அவளோ அங்கு என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் நின்று கொண்டிருந்தாள்.

“அக்கா! அக்கா! ஏதாவது பிரச்சனையா? உங்க முகமே சரி இல்லை உடம்புக்கு ஏதாவது பண்ணுதா?” தாமரை அவள் தோள் பற்றி உலுக்க

கனவில் இருந்து விழிப்பது போல திடுக்கிட்டு அவளை திரும்பி பார்த்தவள்
“என்…என்ன கேட்ட?” என தடுமாற்றத்துடன் வினவினாள்.

“என்ன ஆச்சுக்கா உங்களுக்கு? அம்மாவையும், அப்பாவையும் பேச வைக்கணும்னு சொல்லி இங்கே கூட்டிட்டு வந்துட்டு அவங்க பேசுறதைக் கூட கவனிக்காமல் நிற்குறீங்க என்ன தான்க்கா ஆச்சு உங்களுக்கு?”

“அம்மா, அப்பா பேசுறாங்களா?” ஆச்சரியமாக தன் பெற்றோரின் புறமாக திரும்பி பார்த்த அனுஸ்ரீ அவர்கள் இருவரும் தங்கள் பிரச்சினைகளை எல்லாம் மறந்து இயல்பாக கதை பேசி கொண்டு நிற்பதை பார்த்து மெய் மறந்து போய் நின்றாள்.

“இதற்கு தானே இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டேன் கடவுளே! ரொம்ப ரொம்ப தாங்க்ஸ்!” மனதிற்குள் கடவுளை மனதார புகழ்ந்து கொண்டவள் புன்னகையோடு தாமரையை திரும்பி பார்த்தாள்.

“நாம நினைச்சது நடந்தாச்சு இல்லை தாமரை!” குரலில் உற்சாகம் பொங்க கேட்ட அனுஸ்ரீயை புரியாமல் பார்த்த தாமரை

“இப்போ எல்லாம் நீங்க என்ன பண்ணுறீங்கனே புரிய மாட்டேங்குது அக்கா! கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி ஏதோ பெரிய பிரச்சினையில் இருக்குற மாதிரி இருந்தீங்க இப்போ அப்படி எதுவுமே நடக்காத மாதிரி இருக்குறீங்க எனக்கு சத்தியமா எதுவும் புரியல!” என கவலையுடன் கூறவும்

அவளது தோளில் தட்டி கொடுத்தவள்
“அதெல்லாம் ஒண்ணும் இல்லை தாமரை அடிக்கடி அப்படி நடக்கும் தான் அதெல்லாம் நீ பெரிசா எடுத்துக்காதே சரி வா நாம அப்பாவையும், அம்மாவையும் கூட்டிட்டு திராட்சை தோட்டத்துக்கு போயிட்டு அப்படியே வீட்டுக்கு கிளம்பலாம் பாட்டி காத்துட்டு இருப்பாங்க” என்றவாறே தாமரையின் முகத்தை பார்ப்பதை தவிர்த்தவாறு முத்துராமன் மற்றும் ராதாவை நோக்கி சென்றாள்.

தாமரையுடன் இன்னும் சிறிது நிமிடங்கள் பேசினால் அவளிடம் தான் இந்த பிரச்சினையை பற்றி ஏதாவது உளறி விடக்கூடுமோ என்ற பயத்திலேயே தற்காலிகமாக அங்கிருந்து விலகி சென்றாள் அனுஸ்ரீ.

“அம்மா, அப்பா வாங்க நம்ம திராட்சை தோட்டத்துக்கு போகலாம் நம்ம ஒட்டுமொத்த கிராமத்தில் நம்ம தோட்டத்தில் மட்டும் தான் திராட்சை தோட்டம் இருக்கு ரொம்ப கஷ்டப்பட்டு வளர்த்து இருக்கோம் தெரியுமா?” தற்காலிகமாக தன் மன ஓட்டத்தை மாற்ற உற்சாகமாக பேசுவது போல தன் பெற்றோரிடம் பேசி கொண்டு அனுஸ்ரீ நடந்து சென்றாலும் அவளை மனம் முழுவதும் சற்று முன்னர் நடந்த ரிஷியுடனான மனஸ்தாபமே வியாபித்து இருந்தது.

அவளது கைகள் அந்த தோட்டத்தில் தன் பாட்டிற்கு வேலை செய்து கொண்டிருக்க அவள் மனமோ ரிஷியின் கோபத்தை எண்ணியே வருந்திக் கொண்டு இருந்தது.

தன் மேல் தவறு எதுவும் இல்லை என்று அவளுக்கு தெரியும்.

ஆனால் அதை எப்படி அவனுக்கு புரிய வைப்பது என்பது தான் அவளுக்கு தெரியவில்லை.

அது மட்டுமின்றி இந்த மனக் குழப்பத்தில் தன் பெற்றோரின் நடவடிக்கை மாற்றம் எதுவும் அவள் கண்களுக்கு படாமலும் போனது.

இப்போது எல்லோர் முன்னிலையிலும் ரிஷிக்கு அழைப்பு மேற்கொண்டு பேச முடியாது என்ற நிலையில் அவள் தவித்து கொண்டிருக்க மறுபுறம் அந்த பிரச்சனைக்கு காரணமானவனோ அவர்கள் வீட்டின் அருகில் இருந்த ஒரு குளத்தின் ஓரமாக அமர்ந்து இருந்தான்.

அவனது மனமும் சற்று நேரத்திற்கு முன்னர் நடந்த நிகழ்வுகளையே அசை போட்டு கொண்டிருந்தது.

தன் தொடுகை ஒவ்வொன்றுக்கும் அனுஸ்ரீ வெட்கம் கொண்டது அவனை போதை கொள்ளச் செய்தது என்னவோ உண்மை தான்.

ஆனால் திடீரென்று அவளிடம் இருந்து வந்த எதிர்ப்பு அவனது ஈகோவை சற்று கிளறி விட்டு இருந்தது.

அந்த நொடி என்ன செய்வது என்று தெரியாமல் அவளிடம் கோபமாக கத்தி விட்டு வந்தவன் அதன் பிறகு வீட்டில் இருந்த யாரிடமும் பேசவில்லை.

போனை கூட தன் அறையில் வைத்து விட்டு இங்கே வந்து அமர்ந்து இருந்தான்.

இன்னொரு புறம் அனுஸ்ரீ தங்கள் தோட்டத்தில் இருந்த ஒன்றிரண்டு வேலைகளையும் அவசர அவசரமாக முடித்து விட்டு வேகமாக தங்கள் வீட்டை நோக்கி நடந்து சென்றாள்.

அவளது அந்த வேகத்தை பார்த்து ராதா கூட பல தடவைகள்
“எதற்கு அனு இவ்வளவு அவசரம் மெதுவாக போம்மா” என்று சொல்லி இருந்தார்.

ஆனால் அது எதுவும் அனுஸ்ரீயின் செவிகளுக்கு எட்டவில்லை.

வீட்டு வாசலில் காத்து நின்ற தெய்வநாயகியைக் கூட கண்டு கொள்ளாமல் வேகமாக தன்னறைக்குள் வந்து நுழைந்து கொண்ட அனுஸ்ரீ அவசரமாக தன் போனை எடுத்து ரிஷிக்கு அழைப்பை மேற்கொண்டாள்.

ஆனால் மறுபுறம் அழைப்பு எடுக்கப்படவே இல்லை.

மீண்டும் மீண்டும் பலமுறை அவள் அழைப்பு எடுத்தும் மறுமுனையில் பதில் இருக்கவில்லை.

“ஸாரி ரிஷி! ஐ யம் ஸாரி!” என பல குறுஞ் செய்திகளை அவள் அனுப்பியும் அதற்கும் அவனிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

தன்னை தவிர்ப்பதற்காகவே இவ்வாறு அவன் நடந்து கொள்கிறான் என்று எண்ணி அனுஸ்ரீ கண்ணீர் வடிக்க பாவம் அவளுக்கு தெரியவில்லை ரிஷியிடம் அவனது தொலைபேசி இல்லை என்பது.

ரிஷியின் தொலைபேசியில் ஏற்கனவே பேட்டரி சார்ஜ் குறைவாக தான் இருந்தது இப்போது பலமுறை அழைப்புகளும், குறுஞ் செய்தியும் வந்து குவிந்ததால் அது மெல்ல மெல்ல துயில் நிலையை நோக்கி சென்று கொண்டிருந்தது.

இது எதுவும் தெரியாமல் அனுஸ்ரீ மீண்டும் அவனது தொலைபேசிக்கு அழைப்பு மேற்கொள்ள இம்முறை அவனது தொலைபேசி எதையும் பார்க்காமல் ஸ்விட்ச் ஆஃப் ஆனது.

ரிஷி தன்னை முற்றிலும் தவிர்த்து விட்டான் என்று எண்ணிக் கொண்டு தாரை தாரையாக கண்ணீர் வடித்த அனுஸ்ரீ தன் கையில் இருந்த போனை கீழே தவற விட்டு விட்டு தான் நின்ற இடத்திலேயே அமர்ந்து முழங்காலில் தன் முகம் புதைத்து தேம்பி தேம்பி அழத் தொடங்கினாள்.

“நீங்களும் என்னை வெறுத்துட்டீங்களா ரிஷி?” கண்ணீரோடு போனில் தெரிந்த ரிஷியின் விம்பத்தைப் பார்த்து அவள் பேசி கொண்டு இருக்க மறுபுறம் ரிஷியோ அப்போது தான் தன் மேல் இருந்த தவறை முழுமையாக உணர்ந்து கொண்டான்.

“ரிஷி நீ பண்ணது தான் தப்பு அவ பாவம் சின்ன பொண்ணு ஏதோ பதட்டத்தில் அப்படி பண்ணிட்டா அவ அமைதியாக இருந்தா நீ உன் எல்லையை மீறிப் போவியா? நீ பண்ண காரியத்துக்கு உன்னை அவ அடிக்காமல் விட்டதே பெரிசு கல்யாணத்துக்கு முன்னாடி இப்படி அத்துமீறி போறது தப்பு தானே? ச்சே! இது புரியாமல் அவசரப்பட்டு அவ மேல சத்தம் வேற போட்டுட்டேன் அனு என்ன நினைச்சாலோ தெரியல தப்பே பண்ணாமல் அவ அவ்வளவு ஸாரி கேட்டா ஆனா நான்! அய்யோ!” தன் தலையில் அடித்துக் கொண்ட ரிஷி

“பர்ஸ்ட் அனு கிட்ட ஸாரி சொல்லலாம்” என்றவாறே தன் போனை தேடத் தொடங்கினான்.

‘எங்க வைத்தேன்’ தன் சட்டைப் பாக்கெட்டிலும், பேண்ட் பாக்கெட்டிலும் தேடி பார்த்தவனுக்கு அப்போது தான் தான் போனை அறையிலேயே வைத்து விட்டு வந்தது நினைவு வந்தது.

“அய்யய்யோ! எத்தனை கால் வந்துச்சோ தெரியலயே!” பதட்டத்துடன் வேகமாக தன்னறைக்குள் ஓடி வந்து சேர்ந்தவன் தன் போனை எடுத்து பார்க்க அதுவோ நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தது.

“ஸ்விட்ச் ஆஃப் வேறயா?” சலித்து கொண்டே போனை சார்ஜில் போட்டவன் ஐந்து நிமிடங்கள் கழித்து போனை எடுத்து ஆன் செய்ய அனுஸ்ரீயிடம் இருந்து முப்பது அழைப்புகளும், நாற்பது குறுஞ் செய்திகளும் வந்து குவிந்து இருந்தது.

“அய்யோ! அனு இத்தனை கால் அன்ட் மெசேஜ் பண்ணி இருக்கா நான்
வேற போனை வைச்சுட்டு போய் அங்கே இருந்துருக்கேன் அனு என்ன நினைச்சாலோ தெரியலயே” என்றவாறே அவசரமாக ரிஷி அனுஸ்ரீக்கு அழைப்பு மேற்கொண்டான்.

தன் அறையில் தன் முழங்காலில் முகத்தில் புதைத்து அழுது கொண்டிருந்த தன் போன் ஒலிக்கும் சத்தம் கேட்டு மெல்ல தன் தலையை நிமிர்த்தி பார்த்தாள்.

திரையில் ஒளிர்ந்த ‘ரிஷி’ என்ற பெயரை பார்த்ததுமே அவசரமாக தன் போனை எடுக்க தன் கையை கொண்டு சென்றவள் சிறிது நேரம் யோசனையோடு தன் போனைப் பார்த்து கொண்டு இருந்தாள்.

“அனும்மா ப்ளீஸ் பிக் அப் டா ப்ளீஸ்! ப்ளீஸ்” என ரிஷி மறுமுனையில் கூறி கொண்டு இருக்க அவளோ அந்த அழைப்பை எடுப்பதா? இல்லையா? என்று சிந்தித்துக் கொண்டு இருந்தாள்.

இரண்டு முறை முழுமையாக அவனது அழைப்பு ஒலித்து முடிந்த பின்னர் தன் கண்களை துடைத்து விட்டு தன் போனை கையில் எடுத்துக் கொண்டவள் இம்முறை அவனது அழைப்பு வந்ததும் அவனை ஏமாற்றாமல் அந்த அழைப்பை அட்டன்ட் செய்தாள்.

“ஹலோ அனு! அனு ஐ யம் ரியலி ஸாரி டா எக்ஸ்ட்ரீம்லி ஸாரி நான் பண்ணது ரொம்ப பெரிய தப்பு அது புரியாமல் நான் உன்னோட கோபப்பட்டு கத்திட்டேன் ஐ யம் ரியலி ஸாரி மா ரியலி ஸாரி”

“……..”

“அனு பேச மாட்டியா?”

“…….”

“அனும்மா ஐ யம் ஸாரி டா நீ போன் பண்ணதோ, மெசேஜ் பண்ணதோ எதுவும் எனக்கு தெரியாது நான் ரூம்ல போனை வைத்துட்டு போயிட்டேன் பேட்டரி வேற லோ அதை கூட நான் பார்க்கல போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருந்திருக்கு இப்போ தான் நான் அதையே பார்த்தேன் எல்லாப் பிரச்சினையும் நான் பண்ணிட்டு உன் மேல கோபப்பட்டுட்டேன் ஐ யம் ரியலி ஸாரி டா ப்ளீஸ் டா அனு பதில் பேசு டா ப்ளீஸ்” கெஞ்சலாக ரிஷி பலமுறை மன்னிப்பு கேட்டும் மறுமுனையில் அமைதி மாத்திரமே நிலவியது.

“அனும்மா இப்படி பேசாமல் இருக்காதேடா! எனக்கு கஷ்டமா இருக்கு இது இது தான் என் பிரச்சினை சட்டு சட்டுன்னு கோபப்பட்டு கத்திடுறேன் ப்ளீஸ் அனு என்னை மன்னிச்சுடும்மா”

“நான் ஒரு ஐந்து நிமிஷம் பேசாததற்கே உங்களுக்கு இவ்வளவு கஷ்டமாக இருந்தால் கிட்டத்தட்ட மூணு மணி நேரம் எந்த தப்பும் பண்ணாமல் என்னை அழ வைத்து கஷ்டப்படுத்துனீங்களே அதற்கு என்ன சொல்லுவீங்க” அனுஸ்ரீயின் கேள்வியில் ரிஷி பதில் பேச முடியாமல் வாயடைத்துப் போய் நின்றான்.

“நான் பண்ணது தப்பு தான் அனு நான் ஏத்துக்கிறேன் இனி இப்படி ஆகாது டா ப்ளீஸ் ஐ யம் ஸாரி இனி இப்படி நான் கோபப்பட மாட்டேன் ஓகே வா?” ரிஷி மெல்ல சமாதானப் பேச்சு வார்த்தைக்கு தாவ

“ப்ராமிஸ் பண்ணி சொல்லுங்க நான் நம்புறேன்” என்று கூறினாள் அனுஸ்ரீ.

“ப்ராமிஸா?” சிறிது நேரம் யோசித்து கொண்டு நின்றவன்

“அது ரொம்ப ரிஸ்க் அனும்மா சின்ன வயதிலிருந்தே இந்த கோபம் எனக்கு இருக்கு சட்டுன்னு மாற்ற முடியாது கொஞ்சம் கொஞ்சமாக தான் மாற்றலாம் நான் இந்த கோபத்தை முழுவதும் இல்லாமல் பண்ணிட்டு வேணா உனக்கு ப்ராமிஸ் பண்ணட்டுமா?” என்று கேட்கவும் அதை கேட்டு அனுஸ்ரீயின் இதழ்களோ புன்னகையில் விரிந்தது.

“ஹேய்! அனு இப்போ நீ சிரிச்ச தானே?” ரிஷியின் கேள்வியில் ஆச்சரியமாக சுற்றிலும் ஒரு முறை நோட்டம் விட்டவள்

‘என்ன இவர் பக்கத்தில் இருந்து பார்த்த மாதிரி சொல்லுறாரு?’ என மனதிற்குள் நினைத்து கொண்டே

அவனிடம் போனில்
“இல்லையே! நான் எதற்கு சிரிக்கணும் நான் உங்க மேல செம்ம கோபத்தில் இருக்கேன்” என்று கூறினாள்.

“ஓஹ்! அப்போ நீ சிரிக்க மாட்ட?” ரிஷியின் கேள்வியில் புன்னகத்து கொண்டவள்

“நோ வே” என்று உறுதியாக கூறினாள்.

“அப்போ சரி இப்போவே நான் கிளம்பி உங்க வீட்டுக்கு வர்றேன் வந்து எல்லோர் முன்னாடியும் உன் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து மன்னிப்பு கேட்கிறேன் அப்போவாது சிரிப்ப தானே?”

“அது!” சிறிது நேரம் தன் கன்னத்தில் தட்டி யோசித்து பார்த்தவள்

“உண்மையாகவே அது நடக்கட்டும்
அப்புறம் பார்க்கலாம்” என்று கூற

“அடப்பாவி! ஒரு பேச்சுக்கு கூட அதெல்லாம் வேண்டாம்னு சொல்லுறாளா பாரு” என வருத்தமாக கூறுவது போல கூறவும் இம்முறை சற்று சத்தமாகவே சிரித்துக் கொண்டாள் அனுஸ்ரீ.

அவளது சிரிப்பு சத்தம் கேட்டதன் பின்பே ரிஷிக்கு சற்று மன நிறைவாக இருந்தது.

“அனும்மா ஸாரி டா இனி இப்படி அகைன் நடக்காது ஓகே ரியலி ஸாரி” சற்று தயக்கத்துடன் ரிஷி கூற

“பரவாயில்லை நான் மன்னிச்சுட்டேன் பட் இன்னொரு தடவை இப்படி ஆச்சுன்னா இப்படி ஈஸியாக நான் எடுத்துக்க மாட்டேன் புரிஞ்சுதா” என்று சற்று கண்டிப்பாகவே கூறினாள் அனுஸ்ரீ.

அதன் பிறகு சிறிது நேரம் அப்படி, இப்படி பேசி அனுஸ்ரீயும், ரிஷியும் ஒரு சகஜ நிலைக்கு வந்து சேர்ந்து இருந்தனர்.

மனதில் இருந்த கவலை சற்று குறைந்தாற் போல உணர்ந்த அனுஸ்ரீ புன்னகையோடு தன் போனை வைத்து விட்டு படியிறங்கி கீழே செல்லும் போது தான் தான் ரிஷியிடம் சொல்ல நினைத்த விடயத்தை நினைத்துப் பார்த்தாள்.

“அய்யோ! இன்னைக்கும் சொல்ல மறந்துட்டேனே!” தன் தலையில் தட்டி கொண்டவள் மீண்டும் தன் அறையை நோக்கி செல்லப் போக

ஹாலில்
“ஹேய்! அனு! வந்துட்டா” என்று கூச்சல் கேட்டது.

தனக்கு பழக்கப்பட்ட குரல்கள் கேட்கவும் அவசரமாக ஹாலை திரும்பி பார்த்தவள் அங்கு கூடியிருந்த தன் நண்பர்களைப் பார்த்ததுமே முகம் மலர
“ஹேய்! வாட் அ சர்ப்பரைஸ்” என்றவாறே துள்ளலோடு அவர்களை நோக்கி ஓடி சென்றாள்.

“ஹேய்! கல்யாணப் பொண்ணு எப்படி இருக்க?”

“முகத்தில் அப்படியே கல்யாணக் கலை தாண்டவம் ஆடுதுலே!”

“ஹேய்! பொண்ணு வெட்கப்படப் போறா! சும்மா இருங்கப்பா” என அவளது நண்பர்கள் எல்லோரும் அவளை சுற்றி வளைத்து பேசிக் கொண்டு இருக்க தன் நண்பர்களைப் பார்த்த சந்தோஷத்தில் அனுஸ்ரீயும் தன்னை மறந்து பேசிக் கொண்டு நின்றாள்.

வெகு நாட்களுக்குப் பின்னர் நண்பர்கள் பட்டாளம் ஒன்று கூட அந்த நாயகி இல்லத்தில் அப்போது தான் உண்மையான கல்யாணக் கலையே குடி கொண்டது.

தன் பேத்தியின் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தைப் பார்த்து மனம் குளிர்ந்து போன தெய்வநாயகி
“இந்த சந்தோஷம் எப்போதும் அனும்மா கூடவே இருக்கணும் கடவுளே!” என்று மனதார கடவுளிடம் வேண்டிக் கொள்ள அவரோ தன் அடுத்த கட்ட திருவிளையாடலை ஆரம்பிக்க நல்ல நேரம் பார்த்து காத்திருந்தார்…..