NPG-18

கீதாஞ்சலி – 18

மிகவும் உற்சாகமான மனநிலையில் இருந்தான் ராகுல் ரவிவர்மன். சரியாக விமானப் பயணம் மேற்கொள்ளப் போகும் பொழுது அமிர்தா ஒரு ஆடியோ ஃபைலை வாட்ஸ் ஆப்பில் அனுப்பி வைத்திருந்தாள். 

“ரவி, உங்களுக்காக ஒரு ஆடியோ ஃபைல் அனுப்பி இருக்கேன். ஃப்ளைட் ட்ரெவல் முழுக்க நீங்க இதைக் கேட்டுக்கிட்டுத் தான் வரணும். 

நேத்து என்ன சொன்னீங்க? ஏர்ஹோஸ்ட்ரெஸ் எல்லாம் அழகழா இருப்பாங்களா? இதைக் கேளுங்க அதுக்கப்புறம் எப்படி அந்தக் கண்ணு ஏர்ஹோஸ்ட்ரஸ்சை சைட் அடிக்குதுன்னு நானும் பார்க்குறேன்.” என்கிறக் குறுந்தகவலோடு வந்து சேர்ந்தது அந்த ஆடியோ. 

‘ஹம்மாடி பில் டப் எல்லாம் பலமா இருக்கே! அப்படி என்ன அனுப்பி இருப்பா?’ மனதோடு எண்ணிக் கொண்டே ஆர்வம் மேலிட, ‘ஈஸ்’சில் இருந்து பாரிஸ் வருவதற்கான விமானத்தில் ஏறி அமர்ந்ததுமே அந்த ஆடியோவைக் கேட்க ஆரம்பித்து விட்டான் ராகுல்.

இவர்கள் இருவரும் இந்தப் பத்து நாட்களும் பேசியதில் இருந்து, அழகானத் தருணங்களை எல்லாம் ரெக்கார்ட் செய்து வைத்திருந்தாள் அமிர்தா. அதை அப்படியே ராகுலுக்கு அனுப்பி வைத்திருந்தாள். கேட்கத் தொடங்கியதுமே அழகான ஒரு புன்னகை வந்து அமர்ந்து கொண்டது ராகுலின் முகத்தில். கேட்கக் கேட்கத் தெவிட்டவில்லை மெல்லிசைக்காரனுக்கு.

அனைத்து உணர்வுகளும் கலந்துத் தாக்கியதைப் போல் இருந்தது. தானா இவ்வளவும் பேசியது என்று வியப்பு ஒரு பக்கம், அதற்குப் பெண்ணவள் தரும் பதில்களை நினைத்துச் சிரிப்பு ஒரு பக்கம், போனில் ஒரே ஒரு முத்தத்திற்காகப் பெண்ணிடம் கெஞ்சிக் கொண்டிருப்பதை நினைத்து வெட்கம் ஒரு பக்கம் எனக் கலவையான உணர்வு அவனுக்குள்.

அமிர்தா விருப்பப்படியே ஒருவரையும் நிமிர்ந்தும் பாராது தானுண்டு தன் ஹெட்ஃபோன் உண்டு என்று பாரிஸ் வந்து சேரும் வரை அந்த ஒரு மணி நேரமும் தனி உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தான் அவன்.

‘ஹையோ எப்படி இருந்த என்னை இப்படித் தனியா சிரிச்சு வெட்கப்பட வைச்சுட்டாளே, சோனி… இதுக்கெல்லாம் சேர்த்து வைச்சு இருக்குடி உனக்கு. சென்னைக்கு வந்து கவனிச்சுக்குறேன் உன்னை’ திட்டுவதாக எண்ணிக் கொண்டு கொஞ்சிக் கொண்டிருந்தான் அவனுடைய சோனியை.

விமானம் தரையிறங்கியதும் மனமே இல்லாமல் தான் ஹெட்ஃபோனைக் கழட்டிவிட்டு அடுத்ததாகப் பாரிஸ்சில் இருந்து துபாய் வரைச் செல்லும் விமானத்தைப் பிடிக்க விரைந்தான்.

“ஹேய் என்னடா இது ஆச்சர்யமா இருக்கு. ஆர்.வீ சார் நமக்கு முன்னாடி வந்து போர்டிங் கேட்ல வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காரு!” ராகுலுடன் வந்த சவுண்ட் என்ஜினியர்கள் இருவரும் கூட வாயைப் பிளந்தனர்.  

எப்பொழுதும் ஆற அமர ஏர்போர்ட்டை ஒரு முறை வலம் வந்து பிசினஸ் கிளாஸ்சுக்கான லக்சுரி லவுஞ்சில் உள்ள பாரில் சற்று நேரம் இளைப்பாறி விட்டுக் கடைசி ஆளாக விமானத்தில் ஏறுபவன் இன்று விரைவாக செக்கிங் முடித்து துபாய் செல்வதற்கான விமானத்தில் முதல் ஆளாக ஏறியும் அமர்ந்து விட்டான். 

ராகுலுடன் வந்திருந்த சவுண்ட் என்ஜினியர்கள் இருவரும் எகானமிக் கிளாஸ் சென்று விட, பிசினஸ் கிளாஸ்சில் தன்னுடைய சீட் வரை வந்து வழிகாட்டிய ஏர் ஹோஸ்ட்ரெஸ்சுக்கு முகத்தைக் கூடப் பார்க்காமல் ஒரு நன்றியை அவசர கதியில் உரைத்தவன் விரைவாக ஹெட்ஃபோனை எடுத்து மாட்டிக் கொண்டு கண் மூடிச் சாய்ந்து அமர்ந்து விட்டான்.

முகத்தைக் கூடப் பார்க்காமல் கண் மூடிக் கொள்பவனை ஒரு ஆச்சரியப் பார்வைப் பார்த்து விட்டு நகர்ந்தாள் அந்த ஏர் ஹோஸ்ட்ரெஸ் பெண். எதையும் கவனிக்கும் மனநிலையில் ராகுல் இல்லை. அவன் அவனுடைய சோனியுடன் ஐக்கியமாகி இருந்தான்.

தனி உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தவனைக் கலைத்தது ஏர் ஹோஸ்ட்ரெஸ்சின் குரல். சற்றே எரிச்சல் மிகுந்த முகத்தோடு நிமிர்ந்து பார்க்க,

அந்த ஏர் ஹோஸ்ட்ரெஸ்சின் நெற்றியில் துப்பாக்கி முனையை வைத்து அழுத்தியவாறு அவள் கூடவே மற்றொருவனும் நின்றிருந்தான். அதிர்ந்து போய் எழுந்தான் ராகுல்ரவிவர்மன்.

அன்று அந்தப் பிசினஸ் கிளாஸ்சில் ராகுலோடு சேர்த்து வெறும் நால்வர் மட்டுமே இருந்தனர். நால்வரையும் எகனாமிக் கிளாஸ்சுக்கு மாறுமாறு உரக்கக் கத்தினான் துப்பாக்கி ஏந்தியிருந்தவன்.

அதிர்ந்தாலும் எதுவும் பேச, செய்ய முடியாத சூழ்நிலையில் அவன் கட்டளைக்கு உட்பட்டு நால்வரும் எகனாமிக் கிளாஸ்சுக்கு சென்றார்கள். பயணிகள் அனைவரும் திகிலோடு அந்த நபரைப் பார்த்திருக்க, அவனோ அங்கிருந்த ஃபோன் மூலம் பைலட்டுக்குக் கட்டளை இட்டுக் கொண்டிருந்தான்.

ஒரு தீவிரவாத அமைப்பின் பெயரைச் சொல்லித் தன்னை அந்த அமைப்பின் தொண்டனாக அறிவித்துக் கொண்டவன், விமானத்தை பாரிஸ்சின் ஈஃபிள் டவரின் மீது மோதி வெடிக்கச் செய்யப் போவதாகக் கூக்குரலிட்டான்.

பயணிகள் மற்றும் விமானப் பணியாளர் குழுவோடு சேர்த்து மொத்தம் நூற்றி நாற்பது பேரின் உயிரும் இப்பொழுது ஊசலாடிக் கொண்டிருந்தது. ஃபிரான்ஸ் மட்டுமல்லாது அமெரிக்கா, இந்தியா, ரஷ்யா, ஜப்பான் எனப் பல்வேறு நாட்டைச் சார்ந்தவர்களும் அந்த விமானத்தில் இருந்தார்கள். 

விமானம் இன்னும் பறக்கத் தொடங்கி இருக்கவில்லை.  விமானம் புறப்படுவதற்கான அனைத்து விதிமுறைகளும் முடிந்து விமானம் ஓடு பாதையில் ஓடத் துவங்கியே பொழுதே அந்த நபர் துப்பாக்கியோடு எழுந்து விட்டிருந்தான். 

உடனடியாகப் பைலட்டுக்கும் தகவல் தெரிவிக்கப் பட்டிருந்ததால் அவர் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவலைத் தெரிவித்து விட்டு இன்னும் ஓடு பாதையில் தான் விமானத்தை ஓட்டிக் கொண்டிருந்தார்.

உடனடியாக பிரான்ஸ் நாட்டின் தீவிரவாதத் தடுப்புப் பிரிவுக் காவல்துறையான ஜி.ஐ.ஜி.என் பாரிஸ் விமான நிலையத்தைத் தன்னுடையக் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது.

அந்த நேரம் விமானநிலையத்தில் இருந்த மற்ற விமானங்கள் அனைத்தும் சர் சர்ரென்று உயர எழும்பிப் பறக்கத் தொடங்கின. அந்த விமான நிலையத்தில் தரை இறங்க வேண்டிய மற்ற விமானங்கள் வேறு விமான நிலையத்திற்கு மாற்றிவிடப்பட்டன.

முதலில் ஓடு பாதையைச் சுற்றி வந்தக் கடத்தப்பட்ட விமானம் இப்பொழுது ஒரு இடத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. வெளியில் இருந்த காவல்துறை அதிகாரிகளுக்கும் எந்தத் தகவலும் தெரியவில்லை.

விமானத்திற்குள் எத்தனைத் தீவிரவாதிகள் இருக்கிறார்கள்? கைவசம் எவ்வகையான ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள்? என்று எந்த விபரமும் தெரியாத நிலையில் எந்த முயற்சியையும் மேற்கொள்ள ஜி.ஐ.ஜி.என் விரும்பவில்லை. 

விமானத்திற்குள் பிரான்ஸ் மட்டுமல்ல உலகத்திலுள்ள பல்வேறு நாடுகளைச் சார்ந்த மக்கள் சிக்கிக் கொண்டிருப்பதால் இது சர்வதேசப் பிரச்சனையாகப் பார்க்கப்பட்டது. 

காவல்துறையைச் சார்ந்த மனநல ஆலோசனை வழங்குபவர்கள் வரவைக்கப்பட்டு அவர்கள் மூலம் உள்ளே கடத்தலில் ஈடுபட்டிருப்பவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. 

விமானத்திற்குள் இருக்கும் யாரிடமாவதுப் பேசிவிட முடியுமா என்று ஜி.ஐ.ஜி.என் வெகுவாக முயற்சித்துக் கொண்டிருந்த நேரமது.

அதற்குள் இந்த நிகழ்வை உலகுக்கேத் தெரியப் படுத்த வேண்டியப் பொறுப்பை மீடியா கையில் எடுத்துக் கொண்டது. உலகம் முழுவதும் உள்ள அனைத்து நியூஸ் சேனலிலும் இது தான் இப்பொழுது தலைப்புச் செய்தியாக இருந்தது.

*************

நேரம் மதியத்தைக் கடந்து மாலையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. மயங்கிச் சரிந்த அமிர்தாவைக் கவனிக்கும் பொறுப்பை ஒரு மருத்துவராக இருந்து வாசுகி ஏற்றுக் கொள்ள தீப்தி சத்யவதியைத் தாங்கிக் கொண்டாள்.

“கடவுளே இப்பத் தானே சொன்னேன்… இந்தச் சிரிப்பு உன் முகத்துல நிலைச்சு இருக்கணும்மான்னு… அதுக்குள்ள இப்படி ஆகிடுச்சே. பாவி நானே கண்ணு வைச்சுட்டேனே” என்று விடாது அழுது புலம்பிக் கொண்டிருந்தார் சத்யவதி.

மயக்கம் தெளிந்தப் பிறகும் எங்கோ வெறித்தப் பார்வையுடன் இறுக்கமாக அமர்ந்திருந்தாள் அமிர்தவர்ஷினி. அவள் மனம் முழுக்க ‘ரவி… ரவி… ரவி…’ என்று ஓயாது அரற்றிக் கொண்டிருந்தது.

உடனே பாரிஸ் செல்வதற்காகப் புறப்பட்ட கௌஷிக்கைத் தடுத்து நிறுத்தியது அமிர்தாவின் கையிலிருந்ததாகச் சொல்லி அவள் மயங்கி விழுந்த போது தீப்தி வந்து கொடுத்துச் சென்ற அந்த வக்கீல் நோட்டீஸ்.

‘இது என்னப் புதுப் பிரச்சனை? இந்த வக்கீல் நோட்டீஸ்ல இருக்குறத வைச்சுப் பார்த்த அப்போ நிலா அமிர்தாவோட குழந்தை இல்லையா? நித்யாவோட குழந்தையா? இதை எதுக்கு இந்தப் பொண்ணு இத்தனை நாளா சொல்லாம மறைச்சுது?’

வெறும் கேள்விகள் மட்டுமே மனதில் படையெடுக்க விடை தெரியாமல் தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டான் கௌஷிக்.

‘இப்போ நான் இந்த விஷயத்தைப் பார்க்குறதா இல்ல ராகுலைத் தேடி பாரிஸ் போறதா? பாரிஸ் போனாலும் இது உடனே முடியிற விஷயமா? இந்த நோட்டீஸ்ல வேற ஒரு வாரம் தானே டைம் குடுத்து இருக்காங்க. அதுக்குள்ள நான் திரும்ப வர முடியலைன்னா அப்போ நிலாவோட கதி? ராகுல் வந்து இதை எப்படி நீ நடக்கவிட்டன்னு கேட்டா என்ன பதில் சொல்றது நான்?’

தனக்குள்ளேயே போட்டு கௌஷிக் குழம்பிக் கொண்டிருந்த நேரம், ஆபத்பாந்தவனாக வந்து சேர்ந்தார் ருத்ரமூர்த்தி.

“மாப்பிள்ளை என்ன ஆச்சு? பாரிஸ் கிளம்பறேன்னு சொன்னீங்க. இப்போ இப்படி உட்கார்ந்துட்டீங்க. நீங்களே இப்படி இடிஞ்சு போகலாமா? கவலைப்படாதீங்க மாப்பிள்ளை. ராகுலுக்கு ஒன்னும் ஆகாது” சொல்லியவரிடம் அந்த வக்கீல் நோட்டீஸ்சை எடுத்து நீட்டினான் கௌஷிக்.

“அப்போ நிலா அமிர்தாவோட குழந்தை இல்லையா? இதுல போட்டு இருக்குற நித்யவர்ஷினி யாரு?” படித்துப் பார்த்துவிட்டுக் கேட்டார் ருத்ரமூர்த்தி.

“நித்யா அமிர்தாவோட அக்கா மாமா. இந்தப் பொண்ணு எதுக்காக எங்ககிட்ட இந்த விஷயத்தை மறைச்சான்னு தெரியலை மாமா.”

“அக்கா குழந்தையைத் தன் குழந்தையா நினைக்கிறதுல ஒன்னும் தப்பில்லையே மாப்பிள்ளை. சரி, இப்ப இந்த விஷயத்தை விடுங்க. இப்ப இது முக்கியமில்ல. நீங்க பாரிஸ் கிளம்புற வழியைப் பாருங்க.”

“எப்படி மாமா? அந்த நோட்டீஸ்ல ஒரு வார டைம் தானே குடுத்து இருக்காங்க. அதுக்குள்ள எங்களால திரும்பி வர முடியலைன்னா? நிலாவுக்கு எதாவது தப்பா நடந்துட்டா ராகுலுக்கு நான் என்ன பதில் சொல்வேன்?”

“வக்கீல்னு நான் ஒருத்தன் எதுக்கு மாப்பிள்ளை இருக்கேன்? இந்த நோட்டீஸ் விவகாரம் என் பொறுப்பு. நீங்க திரும்பி வர்ற வரைக்கும் நிலாவுக்கோ அமிர்தாவுக்கோ எதுவும் ஆகாம நான் பார்த்துக்குறேன்.

நீங்க முதல்ல பாரிஸ் கிளம்புற வழியைப் பாருங்க. நம்ம ஆளுங்க யாராவது ஒருத்தர் அங்க இருந்தா தான் என்ன நடக்குது ஏது நடக்குதுன்னு நமக்குத் தெரியும். நீங்க தைரியமா போயிட்டு ராகுல் தம்பியோடத் திரும்பி வாங்க மாப்பிள்ளை. மத்ததை எல்லாம் அதுக்கப்புறம் பார்த்துக்குவோம்.”

வெகுவாகத் தயங்கிய கௌஷிக்கைப் பேசிப் பேசியே சம்மதிக்க வைத்து பாரிஸ்சுக்கு அனுப்பி வைத்தார் ருத்ரமூர்த்தி. மறுநாள் அதிகாலையில் கௌஷிக் கிளம்பியிருக்க அதற்குள் தொலைக்காட்சியின் உபயத்தால் விபரமறிந்து ஒவ்வொருவராக ராகுல் இல்லத்தை நோக்கி வரத் தொடங்கினர்.

சொல் பொறுக்காத சோளக்கிளி வம்சத்தவளை சொற்களாலேயே ஆறுதலென்றப் பெயரில் பந்தாடிவிட்டனர். பசி மறந்து, தூக்கம் மறந்து பூஜை அறையே கதியென்றுக் கிடந்தாள் அமிர்தா. குழந்தைகள் இருவரும் நடப்பது எதுவும் புரியாமல் வீட்டில் நிலவும் இறுக்கத்திற்குக் காரணமும் புரியாமல் தீப்தியிடம் இருந்தனர்.

***************

இப்பொழுது ஜி.ஐ.ஜி.என் அதிகாரிகள் தீவிரவாதியுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்தார்கள். சென்ற வருடம் இதே தேதியில் தான் அவர்களுடையத் தீவிரவாத அமைப்பின் முக்கிய பொறுப்பில் இருந்த ஒருவரை பிரான்ஸ் அரசாங்கம் சுட்டுக் கொன்றதாகவும் அதற்குப் பழி தீர்க்கவே இந்த விமானக் கடத்தல் எனக் கூறிக் கொக்கரித்தான் அந்தத் தீவிரவாதி. 

சரியாக அந்தச் சம்பவம் நடைப்பெற்ற அதே நேரத்தில் தான் இந்த விமானத்தை ஈஃபிள் டவரில் மோதி வெடிக்க வைக்கப் போவதாகவும் அந்த நேரம் வருவதற்குத் தான் காத்திருப்பதாகவும் நாளை மதியம் சரியாக மூன்று மணி அளவில் இந்த விமானம் வெடித்தே தீரும் என்றும் சவால் விட்டான்.

விமானத்திற்குள் அத்தனைப் பயணிகள் இருந்த பொழுதும் அவனை ஒருவராலும் நெருங்க முடியவில்லை. அதற்குக் காரணம் முன்பு அவன் கையில் இடம் பெற்றிருந்தத் துப்பாக்கி இப்பொழுது ஒரு ரிமோட்டாக மாறி இருந்தது.

தன் வயிற்றைச் சுற்றி பாம் வைத்திருப்பதாகவும் யாராவதுத் தனக்கு எதிராக எதையாவது செய்ய நினைத்தால் கூட அந்த ரிமோட்டை இயக்கி அப்பொழுதே மொத்த விமானத்தையும் வெடிக்க வைத்துவிடுவதாக மிரட்டி வைத்திருந்தான் அவன். எனவே அமைதியாக இருப்பதைத் தவிர வேறு வழி யாருக்கும் இருக்கவில்லை அப்பொழுது.

அவனின் தாயாரை அழைத்து வந்து அவனுடன் பேச வைத்தார்கள் காவல் துறையினர். தாயார் மட்டுமல்லாமல் மத போதகர்கள், கவுன்சிலிங் அளிப்பவர்கள் என மாற்றி மாற்றி யாரையாவது அவனுடன் பேச வைத்த வண்ணம் இருந்தது காவல்துறை.

பிரான்ஸ் அரசாங்கம் இதைத் தவிர அவன் வேறு எந்தக் கோரிக்கை வைத்தாலும் அதை நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதி அளித்தது. எனவே பேச்சு வார்த்தை ஒரு முடிவில்லாமல் நீண்டு கொண்டே இருந்தது. அது வரையிலும் அதாவது முழுதாக ஒரு நாள் கடந்த பிறகும் விமானமும் கிளப்பப்படாமல் அங்கேயே நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது.

முடிவாக முப்பது மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு ஒரு வழியாகப் பேச்சு வார்த்தை சுமூகமாக முடிவடைந்தது. தீவிரவாதி சரணடைய ஒப்புக் கொண்டுவிட அதன் பிறகுக் காரியங்கள் மளமளவென்று நடந்தேறின.

ஜி.ஐ.ஜி.என் அதிகாரிகள் பலத்தப் பாதுகாப்போடு விமானத்தை முற்றுகையிட்டு முதலில் பயணிகள் ஒவ்வொருவராக வெளியேற்றிய பின் உள்ளே நுழைந்துத் தீவிரவாதியைக் கைது செய்தனர்.

அனைத்து முறைப்பாடுகளும் முடிந்து ராகுல் வெளி வருவதற்கும், கௌஷிக் பாரிஸ் வந்து சேர்வதற்கும் சரியாக இருந்தது. திட்டமிடப்படாதப் பயணமாகையால் கௌஷிக்கின் பயண நேரம் சற்றுக் கூடுதலாக அமைந்துவிட்டது.

ஒருவழியாக நண்பனை முழுதாகக் கண்ணால் பார்த்த பிறகே நிம்மதியாக மூச்சு விட முடிந்தது கௌஷிக்கிற்கு. ராகுலுக்கு, கௌஷிக்குடைய இறுகிய அணைப்பும் குலுங்கிய முதுகும் சொன்னது அவனுடைய இத்தனை நேரப் பரிதவிப்பை. அவனும் கௌஷிக்கை இறுக அணைத்துக் கொண்டான்.

“டேய் கௌஷிக், என்னடா இது? சின்னப் புள்ள மாதிரி. அதான் ஒன்னும் ஆகலை இல்ல. விடுடா.”

“ரொம்ப பயந்துப் போயிட்டேன் ராகுல்.” சொல்லிவிட்டு மீண்டுமாக இறுக அணைத்துக் கொண்டான் கௌஷிக்.

“அவ்வளவு சீக்கிரம் உங்களை எல்லாம் நிம்மதியா இருக்க விட்டுட்டுப் போயிடுவேனா டா. இன்னும் எங்கிட்ட நீங்க எல்லாம் எவ்வளவு பட வேண்டியிருக்கு.” கௌஷிக்கை இலகுவாக்கும் பொருட்டுக் கேலியில் இறங்கினான் ராகுல்.

அவன் வயிற்றிலேயே குத்திய கௌஷிக், “ஏன்டா, நானும் விசாரிச்சேன். ஒரே ஒருத்தன் தான் இருந்தானாமே! ஒரே ஒரு தீவிரவாதியை அடக்க உனக்கு இவ்வளவு நேரமாடா?”

“நான் என்னடா பண்ண முடியும்? அவன் கையில கன் வேற வைச்சிருந்தான்டா. பத்தாததுக்கு உடம்புல வேற எக்ஸ்ப்ளோசிவ்ஸ் வைச்சிருக்கிறதா சொன்னான். நம்ம ஹீரோயிசத்தைக் காட்டி அவன் எதாவது ஏடாகூடமா பண்ணிட்டா… அதான் கொஞ்சம் அடக்கியே வாசிக்க வேண்டியதா போச்சு.”

“நீயெல்லாம் பெரிய மியூசிக் டைர்கடர்னு வெளியில சொல்லிடாதே.”

“நான் எப்படா அப்படிச் சொன்னேன்? சரி அப்படியே இருந்தாலும், மியூசிக் டைரக்டருக்கும் இப்ப நடந்த விஷயத்துக்கும் என்னடா சம்பந்தம்?” விளங்கவே இல்லை ராகுலுக்கு.

“நம்ம ராமராஜன் சார் ஒரு பாட்டு பாடி அவ்வவவளவுப் பெரிய காளை மாட்டையே அடக்கிட்டாரு. உன்னால ஒரு பாட்டுப் பாடி அந்த டெரரிஸ்டை அடக்க முடியாதாடா? அப்புறம் என்ன நீ மியூசிக் டைரக்டர்? சொல்லு” விவரமாக ராகுலை விட்டு நான்கடி தள்ளி நின்று கொண்டே கேட்டான் கௌஷிக்.

“இவ்வளவு தள்ளி நின்னா எப்படிப் பதில் சொல்றது. கொஞ்சம் கிட்ட வா, தெளிவ்வ்வா சொல்றேன்.”

“ஹை… அதுக்கு வேற ஆளைப் பாருடா. எதுவா இருந்தாலும் அங்க இருந்தே சொல்லு.”

“என் கையில மாட்டாமயா போயிடப் போற. அப்ப இருக்கு உனக்கு. சரி, அமிர்தா எப்படி இருக்காடா? ரொம்பப் பயந்துட்டாளா? குழந்தைங்க எப்படி இருக்காங்க? சத்யாம்மா எப்படி இருக்காங்க?” ராகுல் கேள்வி மேல் கேள்வி கேட்க,

“நீ இல்லாம எப்படி டா நாங்க எல்லாரும் நல்லா இருக்க முடியும்? இந்தா நீ முதல்ல அமிர்தா கிட்ட பேசு.” என்று கூறித் தன் அலைப்பேசியை ராகுலிடம் கொடுத்தான் கௌஷிக்.

ராகுல் சற்றுத் தள்ளிச் சென்று அமிர்தாவிடம் பேச, அழுகை, சந்தோஷம், நிம்மதி, ஆசுவாசம் என்றுப் பல்வேறு உணர்ச்சிகளைக் காட்டும் ராகுலின் முகத்தையே ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் பார்த்திருந்தான் கௌஷிக்.

நண்பர்கள் இருவரும் இப்படியே கேலியும் கிண்டலுமாகப் பேசிக் கொண்டே இந்தியா வந்து சேர்ந்த பொழுது ராகுல் கிளம்பிய தினத்திலிருந்து முழுதாக மூன்று நாட்கள் முடிந்துப் போயிருந்தது. நிலா பற்றிய விபரத்தை வீட்டுக்குப் போனதும் சொல்லிக் கொள்ளலாம் என்றெண்ணிய கௌஷிக் அது குறித்து ராகுலிடம் எதுவும் சொல்லவில்லை.

நேரம் நள்ளிரவைத் தாண்டி இருந்தது. ராகுலை வரவேற்பதற்காகக் குழந்தைகள் உட்பட அனைவருமே வாசலில் காத்திருந்தார்கள். ராகுல் வந்ததும் அவனை அமிர்தா குழந்தைகளோடு நிற்க வைத்து ஆரத்தி எடுத்த பிறகே உள்ளே விட்டார் சத்யவதி.

அவர்களுக்கு ஆனந்தக் கண்ணீரின் பொருள் உணர்ந்த நாள் அன்று. ஒருவழியாக இந்த மூன்று நாள் கதையையும் பேசி முடித்த போது அதிகாலை ஆகிவிட்டிருந்தது. குழந்தைகள் இருவருமே ராகுலின் மடியிலேயே உறங்கிப் போயிருக்க,

“ராகுல், போய் கொஞ்ச நேரமாவது ரெஸ்ட் எடுப்பா. விடியவே போகுது. எல்லாரும் கொஞ்ச நேரமாவதுத் தூங்குவோம்.” என்று கூறி சத்யவதி அனைவரையும் கிளப்பிவிட்டார்.

குழந்தை நிலாவைத் தூக்கப் போன அமிர்தாவைத் தடுத்த தீப்தி,

“எதுக்கு இப்போ அவளைத் தூக்குற? சந்தோஷையும் நிலாவையும் நான் பார்த்துக்குறேன். நீ போய் கொஞ்ச நேரம் ராகுல் அண்ணா கூட இரு. அது தான் உனக்கு இப்போ தேவை. மூணு நாளா நீ பட்ட பாடு எனக்கு நல்லாவே தெரியும் அமிர்தா” ரகசியக் குரலில் அமிர்தாவின் காதில் கூறிவிட்டு,

“ராகுல் அண்ணா, போங்கண்ணா போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க. கூட்டிட்டுப் போ அமிர்தா” என்று ராகுலிடம் உரக்கப் பேசி முடித்தாள்.

மாடியில் தங்களது அறைக்கு வந்துக் கதவை மூடிய அடுத்த நொடி அமிர்தா தாவிச் சென்று ராகுலை அணைத்துக் கொண்டாள். இது வரையில் அவள் அடக்கி வைத்திருந்த உணர்வுகள் அனைத்தும் கட்டவிழ்ந்துக் கொண்டது.

“ரவி… ரவி” என்று அவளது உதடுகள் இரண்டும் ஓயாது உச்சரித்த வண்ணம் இருந்தது. கண்களும், கைகளும் அவனைத் தலை முதல் பாதம் வரை வருடியபடியே அவனது நலனை உறுதி செய்துக் கொண்டிருந்தது.

“வர்ஷூ, ரிலாக்ஸ் டா. எனக்கு ஒன்னும் ஆகலைடா. ரொம்பப் பயந்துட்டியாடா? சாரி டா கண்ணம்மா” அவள் கலைந்தக் கூந்தல் ஒதுக்கிக் கண்ணீர் துடைத்து மீண்டும் இறுக அணைத்துக் கொண்டான் மெல்லிசைக்காரன். அவன் கண்களுமே கலங்கித் தான் போனது.

சரியாக அவன் தோள் உயரத்திற்குத் தான் இருந்தாள் பாவை. கண்ணீரோடுக் கணவனை நிமிர்ந்துப் பார்த்து இரு கைகளையும் நீட்டித் தன்னைத் தூக்கிக் கொள்ளுமாறுத் தலையசைத்துக் கூற பூப்போல அள்ளிக் கொண்டான் பூவையை.

அவன் நெற்றி, கன்னம், என்று மாறி மாறி அவன் முகம் முழுக்க முத்தத்தால் அபிஷேகம் செய்தாள். அவளின் இந்த அதிரடித் தாக்குதலில் முதலில் கொஞ்சம் திணறிப் போனாலும், அந்த முத்தாபிஷேகம் இதழ்களை வந்து சேர்ந்த பொழுது அப்பணியைத் தனதாக்கிக் கொண்டவன் அதன் பிறகு மொத்தமாக வேறாகிப் போனான். அவளைத் தனக்குள்ளே சுருட்டிக் கொண்டான்.

தொட்டில் தாலாட்டு மட்டுமே பாடத் தெரிந்தவள் இப்பொழுதுக் கட்டில் தாலாட்டுப் பாடிக் கொண்டிருந்தாள். எப்பொழுதுமே அவள் தாலாட்டில் மயங்கிப் போகிறவன் இப்பொழுதும் ஆதியோடு அந்தமாய் மொத்தமாய் மயங்கிப் போய், அவளுள் நிறைந்து கொண்டிருந்தான் மெல்லிசைக்காரன்.