Mayanadhi suzhal Epilogue

Mayanadhi suzhal Epilogue

மாயநதிச்சுழல்
25 மாதங்கள் கழித்து….
மதிமாறனின் வாழ்க்கை அந்த பெங்களூர் தினத்திற்குப் பிறகு வெகுவாக மாறிப் போயிருந்தது. “ஒரு பொண்ணு எப்படி ஏமாத்தியிருக்கா…இதுல பெரிய போலீஸாம்… ப்ரமோஷன் வேறையாம்..”என வீட்டினரின், முக்கியமாக அன்னையின் ஏசல் பேச்சுகளும், கிண்டல் பேச்சுகளும் கேட்டு சகிக்காமல் போனவன், வீட்டிற்குச் செல்வதை வெகுவாக குறைத்துக் கொண்டான்.
“அமுதசுரபி” கேஸின் மூலமாக, நிறைய பப்ளிசிட்டியும், இத்தனை வருடங்களாக நடந்த கடத்தல்களை கண்டுபிடித்தவன் என்ற பெயரும் புகழும் மதிமாறனுக்கு வாய்த்தது. குற்றவாளிகளைப் பிடிக்க இயலாமல் போனாலும், முழு மூச்சாக வேலை செய்து, முடிந்த வரையில் ஆதாரங்களை சமர்பித்ததற்காக பாராட்டுகள் குவிந்தன.
ஒவ்வொரு முறை யாரேனும் பெருமையாக தன்னைப் பேசுவதைக் கேட்கும் போது, “இது நான் கண்டுபிடிக்கலைங்க. பாராட்டெல்லாம் அந்த சுரபிக்குத்தான் போகணும்”என மனதிற்குள் எண்ணிக் கொள்ளவான். உண்மையாக அவனாக இந்த கேஸில் எதையும் கண்டு பிடிக்கவில்லை என்ற எண்ணம் வெகுவாக மதிமாறனின் மனதை ஆக்கிரமித்திருந்தது. அவனது இந்த எண்ணத்தை, தன்னடக்கம் என மேலதிகாரிகள் புகழவும் செய்தனர்.
அவ்வப்போது, தனிமையான நேரங்களில் தலை தூக்கும் சுரபியின் நினைவுகளை எண்ணிப் பார்த்துக் கொள்வான். அவளுடன் தன் வீட்டில் கழித்த அந்த இனிமையான நான்கு தினங்களில் அவன் மனதில் தோன்றிய நிறைவும் திருப்தியும் எப்போது நினைத்தாலும் மதிமாறனின் நெஞ்சை நிறைத்துவிடும்.
“பொண்ணு பார்க்கட்டுமா தம்பி”என வீட்டிலிருந்து அடிக்கடி தொல்லைகள் கிளம்பும். மதி வேண்டாம் என கூறும் நேரங்களில் “இன்னமும் அந்த சிறுக்கியை நினைச்சுட்டு இருக்கேன்னு சொன்ன, உன்னை வெட்டி போட்டிருவேன்…”என அம்மாவின் மிரட்டல்களை கண்டுகொள்ள மாட்டான். “இப்போதைக்கு வேண்டாம். கொஞ்ச நாள் போகட்டும்”என்று தட்டிக் கழிக்கவே முயற்சி செய்வான்.
“இன்னமும் அந்த பொண்ணையே நினைச்சுட்டு இருக்கறது நல்லதில்ல மதி. அவ நல்லவளா இருந்து, திரும்பி வருவான்னு நிலைமை இருந்தா கூட நீ காத்திருக்கறதில ஒரு நியாயம் இருக்குப்பா. இது கை மீறின விஷயம்பா. அப்படியே அவ திரும்பி வந்தாலும், உன்னால உன் வேலையை விட்டுட்டு, அவளை குற்றவாளியாப் பார்க்காம மனைவியா ஏத்துக்க முடியுமா சொல்லு. சட்டத்துக்கு வேணா அவ குற்றவாளின்னு நிரூபிக்க எந்த சாட்சியும் இல்லாம போகலாம்.”
“ ஆனா, அவ பண்ணது எல்லாமே உனக்குத் தெரிஞ்சும் நீ அவளுக்காக காத்திருக்க கூடாதுப்பா. நாங்க பார்க்கற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோ. நடந்ததை எல்லாம் கெட்ட கனவா நினைச்சு மறந்திடு”என பல்வாறாக அன்னையும், தந்தையும் எவ்வளவு முயன்ற போதும் மதிமாறானால் சட்டென சுரபியின் நினைவுகளை துடைத்தெறிய முடியவில்லை.
மனதின் வெறுமையைப் போக்க, வேலையில் கவனத்தை திசைதிருப்பிக் கொண்டான். இந்த இரண்டு வருடத்தில் தங்கை அனுவும் தனது படிப்பை முடித்திருந்த படியால், அன்னை தந்தையின் கவனத்தை அனுவின் திருமணத்தில் திசைதிருப்பியிருந்தான். அனுவிற்கு மாப்பிள்ளை தேடும் ஏற்பாட்டில் பெற்றோர்கள் ஆர்வமாகிவிட, சில காலம் மதிமாறனை அவன் போக்கில் விட்டு வைத்திருந்தனர்.
“அனுவுக்கு கல்யாணம் முடிஞ்சதும், ஆறு மாசத்துக்குள்ள உனக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிருவேன். அதுக்குள்ள உன் மனசில இருக்க ஒட்டடை எல்லாம் தூசுதட்டி வெளிய துரத்திடனும். சொல்லிட்டேன்”என மதிமாறனின் அன்னை சொன்னதை அவ்வளவாக அவன் பொருட்படுத்தவில்லை.
மதிமாறனின் மனம் முழுவதையும் களவாடியவளின் நினைவுகள் அவனை விட்டு லேசில் விலகுவதாக இல்லை. சுரபியின் மீது சட்டரீதியாக குற்றச்சாட்டுகள் இல்லை தான். எந்த ஆதாரமும் நிரூபிக்கப்படவில்லை தான். அதற்காக சுரபி குற்றவாளி இல்லை, என மதிமாறனால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. அவனது மனோதர்மமும், உயிருக்கும் மேலாக மதிக்கும் காவல் வேலையும் சுரபியை மன்னிக்க மறுத்தன.
அதேநேரம், தனிமையில் அமர்ந்திருக்கும் வேளையில், மழை பெய்து முடிக்கும் மாலை நேரங்களில், அதிகாலை நேர தனிமையான ரோந்து பணியின் போது, என மனம் இலகுவாக மாறிப்போகும் காலங்களில், அவனையும் அறியாமல் பனிப்படலம் போல் சூழ்ந்து கொள்ளும் சுரபியின் நினைவுகள். அவளது சின்னச் சிரிப்பும், “மதி”என உரிமையாக அவள் அழைக்கும் குழைவும், கால்காயம்பட்டு மதிமாறனின் வீட்டில் இருந்த போது, இருவருக்கும் இடையில் இருந்த புரிதலும் என பலதையும் மனம் நினைத்து ஏங்கத்தான் செய்யும்.
அப்படி இளகும் காலங்களில், சுரபி சட்டத்தை ஏய்த்து சம்பாறித்தாளே என்ற எண்ணம் தோன்றுமே ஒழிய, தன்னை காதலிப்பது போல் ஏமாற்றி விட்டாளே என நொடிப்பொழுது கூட மதிமாறனின் மனம் வருந்தியதில்லை. ஏனென்றால், சுரபி மதிமாறனை காதலித்தது நிஜம். சுரபின் கண்களின் வழியே மின்னிய காதலை மதிமாறன் எப்போதுமே உணர்ந்துள்ளான். அதனால் தானோ என்னவோ, சுரபியை திட்டவும், கரித்துக் கொட்டவும், அவள் வாழ்க்கை சிறப்பாக அமையக்கூடாது என சபிக்கவும் மதிமாறனால் இயலவில்லை. என்ன ஆன பொதும், தன்னால் நேசிக்கப்பட்டவள், தன்னை நேசித்தவள், நல்ல முறையில் சிறப்பாக வாழவேண்டும் என்றே விரும்பினான்.
எப்போதாவது பொற்றோருக்காகவும், தங்கைக்காகவும் செய்யும் பிரத்தனைகளில் சுரபியையும் சேர்த்துக் கொண்டான். இந்த நேர்மையானவனின் காதலை, ஏற்கும் துணிவு வாய்க்கப்பெற்ற, தன் அன்பால், நேசத்தால், சுரபியின் காதலைக் காட்டிலும் நேசம் பெரியது என மெய்ப்பிக்க எவரேனும் வரும் வரையிலோ, அல்லது தன் உயிரினினும் மேலான உத்தியோகத்தை விடுத்து, சுரபியின் காதல் மட்டுமே தேவை என மதிமாறன் முடிவெடுக்கும் வரையிலோ,  மதிமாறனிடம் இருந்து சுரபியின் நினைவுகளை அவ்வளவு எளிதாக பிரித்துவிட முடியும் எனத் தோன்றவில்லை.
மதிமாறன் சுரபியின் நினைவுகளுடன் தன் நாட்களை நகர்த்திக் கொண்டிருந்த அதே நேரம் ஸ்விசர்லாண்டின் பர்ன் நகரத்தின் மலைபிரதேச கிராமம் ஒன்று அன்றைய தின அலுவல்கள் முடிந்து துயில் கொள்ள தயாராகிக் கொண்டிருந்தது. சூரியன் மறைந்து குளிர் இரவினை நோக்கி நேரம் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது. மலைப்பிரதேசம் என்பதால் சுருக்காக இருட்டிவிட்டிருக்க, கருங்கற்கள் பதித்த அந்த அழகிய சிறிய சாலையின் இருமறுங்கிலும் பூத்திருந்த இரவுப்பூக்கள் மென்மையான சுகந்தத்தைப் பரப்பிக் கொண்டிருந்தன.
சிறிய வீடு போன்றிருந்த அந்த உணவகத்தின் வெளியே எண்ணினாற்போல் நான்கு மேஜைகள், அவற்றைச் சுற்றி, இரண்டிரண்டு நாற்காலிகள் என இரவு நேர வியாபாரத்தை அப்போது தான் முடித்திருந்தது அந்த உணவகம்.
வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் சென்றுவிட, வெளியே நாற்காலியில் அமர்ந்திருந்த அந்த காதல் ஜோடி விடைபெற்று வெளியேறும் தருணத்திற்காக காத்துக் கொண்டு நின்றிருந்தாள் அந்தப் பெண்.
குளிரின் காரணமாக போட்டிருந்த வார்மரை உடலுடன் இன்னமும் இறுக்கிக் கொண்டாள். நாற்காலியில் அமர்ந்திருந்த அந்த காதல் ஜோடியிடம் அவளையும் அறியாமல் கண்கள் அவ்வப்போது சென்று மீண்டு வந்தன. காரணம் அவர்களது வயது. எழுவதை நெருங்கிக் கொண்டிருந்த தாத்தா, தனது அறுபது வயது காதலியிடன் அவ்வளவு மகிழ்வாக பேசிக் கொண்டிருந்தார். முகச்சுருக்கங்களைக் கடந்த பொக்கைவாய் சிரிப்பைக் காண அவளுக்கு அலாதியாக இருந்தது.
அவளையும் அறியாது, உதட்டுடன் வந்து ஒட்டிக் கொண்ட அந்த புன்னகையை தடுக்க இயலவில்லை. அதே போல், என்ன முயன்று கட்டுப்படுத்திக் கொண்டபோதும், கண்கள் கலங்குவதையும் மனம் பாரமாவதையும் உணர்ந்தாள்.
“ராகினி…ஃப்ளவர் வாஸ் கலக்ட் பண்ணுடா…”என உணவகத்தினுள் இருந்து எழுந்த அந்தக் குரலைக் கேட்டதும் இயந்திரம் போல் தன் பணிகளைத் தொடர்ந்தாள். மேஜையின் மீது வைத்திருந்த பூச்சாடியில் மாலை கொய்து அழகுபடுத்திய ஜெரிப்ரா பூக்களையும், ஒவ்வொரு மேஜையிலும் நடுநாயகமாக வீற்றிருக்கும் சிறிய மெழுகுவர்த்தி குடுவயினையும் சேகரித்துக் கொண்டு உணவகத்தினுள் சென்றாள் இறுக்கமாக ஜீன்ஸ் அணிந்த அந்தப் பெண்.
திரும்ப மீண்டும் வெளியே வந்தவளது கண்கள் எதார்த்தமாக, அந்த முதிய காதலர்களின் பால் ரசனையுடன் சென்று வந்தது.கைபாட்டில் வேலையை செய்து கொண்டிருந்த போதும், அந்தப் பொண்ணின் முகத்தில் உணர்ச்சிகள் துடைத்தாற்போல் காட்சியளித்தாள். மேஜை நாற்காலிகளை சீராக வைப்பது, நாற்காலியின் மேலிருந்த சிறிய தலையணைகளை சரிவர அடுக்குவது என எண்ணையிட்ட சக்கரம் போல் அடுத்தடுத்த வேலைகளில் ஈடுபட்டாள்.
அந்தப் பெண்ணையும்,அவளது நடவடிக்கைகளையும் அந்த உணவகத்தின் உள்ளிருந்து ஒரு ஜோடிக் கண்கள் கவனித்தவண்ணம் இருந்தன. சிறிது நேரத்தில் உணவகத்தில் இருந்து விடை பெற்ற மூத்த ஜோடி, கைகளை கோர்த்துக் கொண்டு அந்த சிறிய கல்சாலையில் இறங்கிச் செல்வதை ஆழ்ந்த மூச்சு ஒன்றினை வெளியிட்டபடிக்கு பார்வையிட்டாள் “ராகினி”என்று அழைக்கப்பட்ட அந்தப் பெண்.
ஆம், நம் சுரபியின் நிஜப் பெயர் அதுவே.
உணவகத்தின் வேலைகளை முடித்துக் கொண்டு, கதவினைப் பூட்டிய அவளது தமக்கை “அமுதா”என்று நமக்கெல்லாம் ஏற்கனவே அறிமுகமாகியிருந்த சரஸ்வதி, இருட்டை வெறித்துக் கொண்டு நின்றிருந்த தங்கையிடம் வந்தாள்.
காலி நாற்காலி ஒன்றில் தலையை சாய்த்துப் படுத்திருந்த ராகினி கன்னத்தில் நீர் கோடுகள் தென்படுவதையும், கண்கள் சூனியத்தை வெறிப்பதையும் கண்டவளுக்கு மனம் சஞ்சலமடைந்தது.
“ராகினி…என்னம்மா…”என ஆதரவாக மேஜையின் எதிர்புர நாற்காலியில் வந்து அமர்ந்த தமக்கையைக் கூட சின்னவள் கவனிக்கவில்லை. நீண்ட நேர அமைதிக்குப் பின்னர்,
“எவ்வளோ அழகான ஒரு ஜோடி இல்லையாக்கா?”என வினவியவளுக்கு உடனே பதிலுரைக்காத சரஸ்வதி, மேலே சொல் என்பது போல் அமைதி காத்தாள். சாதாரணமாகவே குளிரெடுக்கும் பர்ன் நகரம், இந்த நவம்பர் மாதத்திற்கு மெல்லிய பனிப்பொழிவைத் துவங்கியிருந்தது. அந்தப் பனிசாரலுக்கு இணையாக சுரபி என்ற ராகினியின் மனதிலும் மெல்லிய பனிப்பரவத் துவங்கிற்று.
ஏன் அழுகிறாள் என அவளுக்கே தெரியவில்லை. மதிமாறனைப் பிரிந்து, இந்தியாவில் இருந்து போலிஸை ஏமாற்றி, யாரும் பிந்தொடர்ந்து வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்து, ஒருவேளை யாரேணும் தேடிவரும் பட்சத்தில் அவர்களை ஏமாற்ற, அங்கே இங்கே என சில மாதங்கள் செலவிட்டு, முகமோ அல்லது கைரேகையோ காட்டிக் கொடுத்துவிடக் கூடாது என சிறிய அளவில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு என சுரபி மற்றும் அமுதாவின் வாழ்வில் எத்தனையோ நடந்து விட்டிருந்த போதிலும், மதிமாறனைப் பற்றிய நினைவுகளையும், அவனது காதல் கணிந்த பார்வைகளையும், அவனது அருகாமை கொடுத்த மனதைரியத்தையும் சுரபியால் மறக்க முடியவில்லை என்பதே உண்மை. இதனை அவளும் சில தினங்களிலேயே உணர்ந்தும் கொண்டாள்.
இரண்டு வருடங்களாக மதிமாறனின் நினைவுகளால் தேக்கி வைத்திருந்த நினைவுக் கோப்பையினை ஒரு சிறிய மயிலிறகு பட்டு உடைத்து விட்டிருந்தது. அந்த முதிய ஜோடியின் அந்நியோன்யத்தையும், அன்பையும், ஒருவரு மீது ஒருவர் கொண்டுள்ள, கரைகடந்த காதலையும் காண நேரிட்ட போது, “இதெல்லாம் இனி வாழ்நாளில் தனக்குக் கிட்டப்போவதில்லையோ” என்ற ஏக்கம் பெரிதளவு எழ, அத்தனை தினங்களும் இல்லாத அதிசயமாக சுரபி பெரிய குரலெடுத்து அழத்துவங்கினாள்.
இன்னது காரணம் என்று அறியாமல், அறிவிக்காமல் ஓஓஓவென பெருமழையாய் கொட்டிக் கொண்டிருந்த சுரபிக்கு என்ன ஆறுதல் கூறினாலும் அது ஏற்புடையதாக இராது என உணர்ந்த அமுதா, பொங்கி அழும் தங்கையை ஒரு கையாலாகத பார்வையுடன் வெறித்துக் கொண்டிருந்தாள். ஒரு பக்கம், சுரபியின் இன்றைய நிலைக்கு தான் காரணமாகிவிட்டோமே என மனம் குற்ற உணர்வால் வெம்பிப் போயிற்று.
என்ன வகையில் ஆறுதல் சொல்ல என்று மனம் வார்த்தைகளைத்  தேடிக் கொண்டு நெடுந்தூரம் சென்றுவிட்டிருக்க, நிர்மலமான இதயமோ, அதன் நினைவுகளை வெளியே கடத்தின.
“ஏன் அக்கா, நமக்கு வாழ்க்கையில எதுவுமே கிடைக்கலை. நாம முழுக்க நல்லவங்க இல்லை தான் ஒத்துக்கறேன்…ஆனா, கொஞ்சமே கொஞ்சம் கூட நாம யாருக்கும் நல்லது செய்யலையாக்கா? எவ்வளோ பேர் அனாதைகளா பொறந்தாலும், நல்ல நிலைமையில இருக்கறதில்லையாக்கா? ஏன் நம்ம அப்பா அம்மா அப்படி பண்ணாங்க…நம்ம எதிர்காலம் அவங்களுக்கு முக்கியமில்லாம ஏன் போயிருச்சு. ஏங்க்கா…”
“சுபி….அழாதடா…இது நாம தேர்ந்தெடுத்த பாதை தானே. இப்போ வருத்தப்படறதில என்ன பிரயோஜனம் இருக்கு சொல்லு…”
“கரெக்ட்…நாம தேர்ந்தெடுத்த பாதைதான். பணம் சம்பாதிக்க நாம கண்டுபிடிச்சவழி இது. நல்ல முறையில நேர்மையா பணம் சம்பாரிக்க தானே நாமளும் தொடங்கினோம். ஆனா காலேஜ் முடிச்சுட்டு வேலை தேட கொஞ்ச நஞ்ச கஷ்டமா பட்டோம். வேலை குடுக்க நினைச்ச சிலருக்கு “அனாதை”ஆஸ்ரம பேக்கிரவுண்ட் இடைஞ்சலா இருந்துச்சு..அதையெல்லாம் மீறி வேலை கிடைச்சபோதும், அதுல கிடைச்ச பத்தாயிரம் சம்பளம்…என்னைக்குமே நமக்குன்னு சொந்தமா எதுவுமே இல்லாம வளர்ந்த நமக்கு, நாலு பொருள் வாங்கக் கூட பயன்படாம, கைக்கு எட்டினது வாய்க்கு எட்டலைங்கறமாதிரி ஒரு கஷ்ட ஜீவனம்.”
“ஏன் ஒரு வாடகை வீடு கிடைக்க நாம எவ்வளோ பாடுபட்டிருப்போம். வாடகைய விட பத்துமடங்கு அட்வான்ஸ். அதுல, யார், என்ன, எந்த ஊர், என்ன படிப்பு, என்ன வேலைன்னு ஆயிரம் கேள்விகள்..முதல்ல நாமளும் உண்மைய சொல்லித் தானேக்கா வீடு தேடினோம், வேலை தேடினோம்..ஆனா, ஒருகட்டத்தில உண்மையவிடவும், நாம சொன்ன பொய்களுக்கு வலிமை அதிகமானப்போ எதுக்கு இவங்ககிட்ட உண்மை சொல்லணும். உண்மை சொன்னா வீடு கிடைக்குதா? இல்லை நம்மளைத் தான் மதிக்கறாங்களா? பொய் சொல்லறதினால என்ன தப்புன்னு யோசிக்க வச்சிது இல்லையா?”
“இப்போ எதுக்குடா பழசை எல்லாம் பேசி, மனசை கஷ்டப்படுத்திக்கற…விடுடா…வா, போய் தூங்கலாம்…”
“தூங்கறதா? ஹ? நான் நிம்மதியா தூங்கி எவ்வளவோ நாள் ஆச்சுக்கா? எல்லாமே இருந்தும் எதுவுமே இல்லாதவங்க நாம. பணம் இருந்தாத்தான் இந்த உலகத்தில மதிப்புன்னு சின்ன வயசிலையே பாடம் படிச்சாச்சு. நேர்மையான வழியில கஷ்டப்பட்டு படிச்சு, உண்மையா நாய் மாதிரி அலஞ்சு திரிஞ்சு வேலை தேடி, வீடு தேடின்னு எல்லாமே செஞ்சு பார்த்து, ஏசலும் அவமானமும் சகிச்சு…இதெல்லாம் வேண்டாம்னு தூக்கித் தூரப் போட்ட அந்த நொடி தான் நம்ம வாழ்க்கைப் பாதையே மாறிப்போச்சு இல்லையாக்கா..”
“அந்தப் பாதைகூடா தானா மாறலை…நாம மாத்திகிட்டோம் சுபி. நல்லவளா இந்த உலகத்தில வாழ்றது ரொம்ப பாதுகாப்பில்லாத விஷயம்னு புரிஞ்சுகிட்டோம். நம்மகிட்ட பேக்கிரவுண்ட் இல்ல, என்ன ஏதுன்னு தட்டிக் கேட்க சொந்தபந்தம் இல்ல, நான் இருக்கேன் பார்த்துக்கலாம்னு தைரியம் சொல்ல நட்பு இல்ல, பிரச்சனைகள் வந்தா சமாளிக்க, பக்கபலமா இருக்க, மனதைரியம் கொடுக்க பணம்ங்கற ஆயுதமும் இல்ல, உனக்கு நான், எனக்கு நீ…நம்ம ரெண்டு பேர்த்துக்கும் எதிரா இந்த உலகம்.”
“அப்படிதானேக்கா இருந்தோம். உனக்கு நான், எனக்கு நீன்னு.. ஆனா எங்கிருந்து இந்தப் பாழாப்போன காதல் வந்துச்சுக்கா. மொதல்ல ஏமாத்தி விஷயம் தெரிஞ்சுக்க தான் இதை ஆரம்பிச்சேன்னாலும், நாள்பட, இந்த காதல் குடுத்த தைரியம், அந்த கரிசனம், அன்பு, நான் இருக்கேன் உனக்குன்னு சொன்ன அந்த பாசம், இந்த உலகமே எதிர்த்தாலும் நான் உன் கூட நிப்பேன்னு தெரியவச்ச மனசை என்னையும் அறியாமையே நான் நேசிச்சேன்கா… மதி ரொம்ப நல்லவங்கா…நான்…நான்…ரொம்ப ரொம்ப கெட்டவ இல்லையாக்கா”
“நாம பணம் சம்பாறிச்ச விதம் தப்பு தான் சுபிம்மா…அதை நான் மறுக்கவே மாட்டேன். அதேசமயம், நீ ஆரம்பத்தில, கேஸ் என்ன நிலைமையில இருக்குன்னு தெரிஞ்சுக்கறதுக்காக மதிமாறனை காதலிக்க ஆரம்பிச்சதும் தப்பு தான். ஆனா உன் காதல் உண்மைன்னு போகப் போக எனக்குப் புரிஞ்சுது. அதனால தான் எப்படியாவது உன்னை மதிக்கு கல்யாணம் பண்ணி வச்சிடணும்னு நான் ரொம்ப ஆசைப்பட்டேன்.”
“நானும் நீயும் ஆசைப்பட்டா மட்டும் போதுமாக்கா? நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்னு சொல்லுவாங்களே…அது என் விஷயத்தில எவ்வளோ நிஜம் தெரியுமா? விளையாட்டா தான் காதலிக்கத் துவங்கினேன். அதாவது காதலிக்கற மாதிரி நடிக்கத் துவங்கினேன். ஆனா, அந்த கொஞ்ச நாள், என் கண்முன்னால மதிமாறன் என்னை நடத்தின விதம், எனக்குக் காமிச்ச வாழ்க்கை, என்னோட நீ வாழ்ந்தா உன் வாழ்க்கை இப்படித் தான் இருக்கும்னு என் கால்ல காயம்பட்ட அந்த நாலுநாள்ல காமிச்சுட்டார்.”
“ம்ம்ம்…மதிமாறனுக்கு நாம பண்ணது எந்த வகையிலுமே சரியில்லை தான் சுபிம்மா. வாழ்க்கையில சில நல்லவிஷயங்களை நாம இழந்து தான் போறோம். சில கேள்விகளுக்கு ஏன்னு பதில் எப்பவுமே தெரியதில்லை. சிருஷ்டி ஸ்கூல்ல அவ்வளவு டீச்சர் இருக்கறப்போ, மதி ஏன் உன்னைத் தேடிவந்து பேசணும்? அதுலையும் ஃபார்மலா ஒரு போலீஸா எங்குவயரி நடத்தாம “உன்னை காதலிக்கறேன்னு”ஏன் சொல்லணும்? அவன் சொன்னதுல இருந்து நாம ஏன் மதிமாறனை வேவுபார்க்கலாம்னு நினைக்கணும்? இப்படி வாழ்க்கையில நிறைய பதில் சொல்ல முடியாத கேள்விகள் இருக்கு…அதுக்கெல்லாம் சிம்பிளா இதெல்லாம் இப்படித்தான் நடக்கணும்னு விதின்னு சொல்லிட்டு விட்டுடனும்டா. ரொம்ப தீவிரமா யோசிச்சா துக்கப்படப் போறது நாம தான் சுபி…”
“புரியுதுக்கா…ஆனா, இதோ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பார்த்தோமே அந்த ஜோடி. அவங்களை பார்க்கறப்போ, அவங்க மனமாற சிரிக்கறதை ரசிக்கறப்போ என் நெஞ்சு மேல பெரிய பாறாங்கல்லை வச்சு அழுத்தின மாதிரி இருந்துச்சு. நம்ம கூடவே துணையா வரதுக்கு, நம்மளை சிரிக்கவச்சு அழகு பார்க்க, சின்ன சின்னதா சண்டைகள் போட, கொஞ்சமா சமாதானப்படுத்தி முத்தம் வைக்க, கைகோர்த்துட்டு நடக்கன்னு இப்படி எதுவுமே நம்ம வாழ்க்கையில இல்லைன்னு நினைக்கறப்போ மனசு என்னமோ பண்ணுதுக்கா…”
“தெரியும்டா சுபி, மதிமாறனை நீ இன்னும் மறக்கலைன்னு உன்னோட ஒவ்வொரு நடவடிக்கையுமே சொல்லுதே..”
“மறக்கறதா? நினைப்பே இல்லைன்னா தானேக்கா மறக்க முடியும். நின்னா, நடந்தா, சும்மா அமைதியா கண்ணை மூடினாக்கூட இமைகளுக்குள்ள எட்டிப்பார்த்து “சுபிம்மா”ன்னு கூப்படற முகத்தை எப்படி எப்போ மறக்கப் போறேன்னு தெரியலைக்கா…என்னைப் பொறுத்தவரைக்கும் என்னோட வாழ்க்கையில நடந்த ரெண்டே ரெண்டு நல்ல விஷயத்தில ஒன்னு நீ எனக்கு கிடைச்சது, ஒன்னு மதிமாறனை கொஞ்ச நாள் காதலிச்சது…ஒவ்வொருத்தர் சாகறப்பவும், பத்து நிமிஷம் அவங்களோட வாழ்க்கை சின்ன திரைப்படம் மாதிரி அவங்க மனசில விரியுமாம். அந்த பத்து நிமிஷ நேரத்தையும் ஆக்கிரமிக்கப் போறது உங்க ரெண்டு பேர்த்தோட முகம் தான்.”
“சுபிம்மா…என்னடா பேச்சு இதெல்லாம். சாவு அது இதுனுட்டு…”
“ம்ம்ஹம்..என்னைப் பொறுத்தவரைக்கும் மதியைப் பிரிஞ்சு வந்த நிமிஷமே, அவங்கிட்ட என்னோட உயிரை கொடுத்துட்டதா நினைக்கறேன். எப்பவோ செத்துட்டேங்க்கா…என்ன புதைக்கத்தான் இன்னும் நாப்பது வருஷம் ஆகும்.”
“சுபிம்மா….”
“ஒருவகையில பார்த்தா இது எனக்கான தண்டனைதாங்க்கா…நாம பண்ண தப்புக்கெல்லாம் கைகூலின்னு வச்சுக்கலாம் இல்லையாக்கா. காட் வர்க்ஸ் இன் டிஃப்ரண்ட் வேஸ்கா. தப்புக்கான கூலிய விதவிதமா தந்துருவார். சிலருக்கு ஜெயில்ல பிடிச்சுப் போட்டு, வாழ்நாள் முழுக்க வாழும் போதே நரகத்தைக் காட்டற தண்டனை. நம்மளை மாதிரி சிலருக்கு, நீ வாழ்றதே பிணம் போலத்தான். உனக்கு இனிமே சந்தோஷம், துக்கம், நட்பு, கோபம், ஆனந்தம், மனநிறைவுன்னு எந்த உணர்ச்சியும் இல்ல.”
“ நீ மனசாற விரும்பினவங்க கூட வாழவும் முடியாம, வாழாம இருக்கவும் முடியாம, ஒவ்வொரு நிமிஷமும் தீயில வேகற தண்டனை. சொல்லப்போனா, ஜெயில் தண்டனை கூட உடம்பளவில பாதிக்கப்படுத்தும், ஆனா இது, உயிரோட இருக்கற நொடி எல்லாத்திலையும், “நீ வாழறது உபயோகமில்லை. உன் வாழ்க்கையில் வெறும் சூனியம் மட்டும் தான்” இருக்குன்னு சொல்லிகிட்டே இருக்கும். இது ஜெயில் தண்டனையை விட பெருசு தெரியுமாக்கா” என்ற சுரபி, என்னவோ திடுமென நினைத்துக் கொண்டு, விக்கி விக்கி பெருகுரலில் அழுதாள்.
செய்வதறியாது பார்த்துக் கொண்டிருந்த அமுதாவிற்கோ, தங்கை அழுவதைப் பார்க்க சகிக்கவில்லை. “சுபி..சாரி…சாரிடா சுபி…ஒருவகையில உன்னோட இந்த நிலைமைக்கு நானும் காரணமாயிட்டேன். மன்னிச்சிருடா….”என தானும் சுரபியின் கைகளை பிடித்துக் கொண்டு அழுதாள்.
“நான் அழுகறதில ஸ்பெஷல் என்ன தெரியுமாக்கா, நான் இந்த அளவு அவனை காதலிச்சேங்கறது கூட அவனுக்குத் தெரியப் போறதில்லை. அவனைப் பொறுத்தவரைக்கும் நான் ஒரு ஏமாத்துக்காரி, கடத்தல் பண்ணவ, குழந்தைகளை ஈவு இரக்கம் இல்லாம கஷ்டப்படுத்தினவ. அவ்வளவு தான். அவ்வளவு மட்டும் தான். என் மனசோ, என் காதலோ, அவன் மேல நான் வச்சிருக்கற அளவு கடந்த அன்போ எதுவுமே அவனுக்குத் தெரியப்போறதில்லை. இது எவ்வளவு பெரிய தண்டனைங்கறது எனக்கு மட்டும் தான் புரியும். “என்றவள் மேஜையின் மேல் தலையை சாய்த்துக் கொண்டு மனம் பொறுக்க முடியாமல் குலுங்கினாள்.
தேற்றுவார் இன்றி தேம்பி அழும் குழந்தையினை என்ன சொல்லியும் சமாதானப்படுத்த இயலாது என்பதை உணர்ந்து, சுரபிக்குத் தேவையான தனிமையை அப்போது அவளுக்கு பரிசளித்த அமுதா, செய்வதறியாது மேஜையில் அமர்ந்திருந்தாள்.
அழுது அழுது தன்னை உறக்கத்தில் ஆழ்த்தியிருந்த தங்கையை கண்கொட்டாமல் சிறிது நேரம் பார்த்திருந்த அமுதா, அடுத்து இன்னது செய்யவேண்டும் என முடிவெடுத்திருந்தாள்.
இப்போது தான் செய்யப்போவது தன் வாழ்க்கையும், முட்டி மோதி சம்பாரித்திருந்த புதிய அடையாளத்தையும் எந்த அளவு பாதிக்கும் என்பது தெரிந்திருந்த போதும், தங்கைக்காக இந்த தியாகத்தைச் செய்வதில் தவறில்லை என அமுதா நினைத்ததில் தவறேதுமில்லை.
இரவு முழுக்க நொடிப்பொழுது கூட உறங்காமல் யோசித்தவளுக்கு, இந்த ஒருவழிதான் தோன்றியது. தினமும் செத்து கொண்டிருக்கும் சுரபியைக் காண சகிக்கவில்லை. தானாக சரியாகிவிடுவாள் என்ற நினைப்பிற்கும் நேற்றைய பேச்சி கொள்ளிவைத்துவிட்டாள். இத்தனை நாட்கள் போட்ட திட்டமும், வாழ்க்கையில் அடைந்திருந்த செல்வ நிலையும் இந்த முடிவினால் சுக்கு நூறாக உடையும் எனத் தெரிந்த போதும், இது ஒன்றே முடிவு எனத் தோன்றியது.
அதிகாலை விடிந்தும் விடியாதிருக்க, அமுதா மெல்ல நடந்து நகரின் மையத்தில் இடம்பெற்றிருக்கும் அந்த அங்காடியினுள் நுழைந்தாள். தான் மனதில் எண்ணியபடிக்கு காரியங்களை நடந்தியவள், நீண்ட நாட்கள் கழித்து மனம் சற்றே நிம்மதியடைய பெருமூச்சு ஒன்றினை வெளியிட்டாள்.
“உனக்காக நான் எதுவும் செய்வேன் சுபிம்மா…உன்னை வாழவச்சுப் பார்க்கறது தான் என்னோட வாழ்க்கை. நான் ஆசைபட்ட வாழ்க்கைக்காக நீ உன்னை தியாகம் பண்ணிகறப்போ, நீ ஆசைப்படற, நியாயமா உனக்கு கிடைச்சிருக்கப் போற வாழ்க்கைக்காக நான் இந்த தியாகத்தைப் பண்ணறது தப்பிலை கண்ணம்மா…சமாளிப்போம்…இது உனக்காக, இந்த தர்ற கடைசி அன்புப் பரிசு”என முனுமுனுத்தவள், நேரே சென்றது, வெளிநாடுகளுக்கு தபால் அனுப்பும் அலுவகத்திற்கு.
இரண்டு தினங்கள் கழித்து சென்னையில்…
“சார், உங்களுக்கு போஸ்ட்” என அறையினுள் நுழைந்த கோபி, சுழற் நாற்காலியில் சாய்வாக அமர்ந்து ஏதோ கேஸ் ஹிஸ்டரியை புரட்டிக் கொண்டிருந்த தனது மேலதிகாரி, குழந்தை கடத்தல் மற்றும் பாதுகாப்புக்கான சிறப்புப் பிரிவு கமிஷ்னர், திரு.மதிமாறனின் முன்பு அந்த பெரிய பொட்டலத்தை பவ்யமாக வைத்தார்.
“என்ன பார்சல் கோபி….பிரிக்கலையா?”
“இல்லை சார். பர்சனல்ன்னு தெளிவா போட்டிருக்கு…”
“சரி, என்னன்னு பிரிங்க…”
“சார்…பர்சனல்னு” என மதிமாறன் கர்ஜிக்க, கோபி சற்றே நடுக்கத்துடன் பொட்டலத்தை பிரிக்கத் துவங்கினான்.
“பாத்து பிரீங்க கோபி……உள்ள பாம் கீம் இருந்து நீங்க பிரிச்சதும் டமால்னு வெடிச்சறப்போகுது…” என வம்பாக உரைக்க, பொட்டலத்தைப் பிரித்துக் கொண்டிருந்த கோபியின் கைகள் அப்படியே அந்தரத்தில் நின்றுவிட்டன.
“யோவ் சும்மா சொன்னேன்யா…உயிர்மேல அவ்வளோ ஆசையிருக்கறவன் எதுக்குய்யா போலீஸ் வேலைக்கு வர்ற…பயப்படாம பிரி. பார்சல் பாம்டிடெக்டரை தாண்டித்தானே ஸ்டேஷனுக்குள்ள வந்திருக்கு..அதனால இன்னைக்கு நீ செத்தறமாட்ட… பிரி”என சின்னச் சிரிப்புடன் மொழிய, கோபி நெற்றியில் பூத்த வியர்வையை துடைத்துக் கொண்டு மெல்ல பார்சலைப் பிரித்தான்.
அழகிய பிரவுன் காகிதம் சுற்றப்பட்டிருந்த அந்த சிறிய பார்சலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறிய துளைகள் இருந்தன. பார்சலை பிரித்துக் கொண்டிருந்த கோபிக்கும் ஆர்வம் மேலிட்டது. ஏனென்றால், மதிமாறனுடன் கடந்த நான்கு ஆண்டுகளாக பணிபுரிகிறார். ஆனால், மதிமாறனின் சொந்த விஷயங்கள் குறித்து எந்த தகவலும் தெரிந்ததில்லை. இரண்டு வருடங்கள் முன்பு ஒரு பெண்ணை காதலித்ததாகவும் அந்தக் காதல் தோல்வியடைந்துவிட்டது எனவும் அரசல் புரசல்களாக காவல் நிலையத்தில் பேச்சுகள் எழும்பும்.
ஆனால் யாருக்கும் விஷயம் இதுதானென்று முழுவதுமாக தெரிந்திருக்கவில்லை. காதல்விஷயத்தை தூக்கி ஏப்பமிடும் வழியாக, குழந்தை கடத்தல் கும்பல் ஒன்றினைப் பற்றி மதிமாறன் துப்புதுலக்கி விசாரனை செய்து அறிக்கைகள் சமர்பிக்க, காதல் விஷயம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, அறிக்கையின் மூலம் மதிமாறன், ஏ.சி.பி பதவியில் இருந்து சிறப்பு கமிஷ்னர் பதவிக்கு ஒரே தாவிக் தாவிச் சென்ற செய்தி முக்கியமாகிப் போனது.
இப்படிப்பட்ட கமிஷனருக்கு என்றும் இல்லாத அதிசயமாக, “பர்சனல்” என்ற குறியிட்ட பொருள் வந்திருக்கிறது என்பதே கோபிக்கு ஆச்சர்யம். அதைவிடவும், பார்சலினுள் இருந்த அந்தப் பொருள் இன்னமும் ஆச்சர்யத்தை அள்ளி வழங்கியது.
துளைகளிட்ட பிரவுன் டப்பாவினுள் இருந்து பிரித்து மேஜை மீது வைக்கப்பட்டிருந்த வஸ்துவை மதிமாறனுமே ஆச்சர்யத்துடன் ஏறிட்டான். நொடிப்பொழுது “என்ன இது?”என்ற சந்தேகம் கூட உதிக்காத வகையில் இன்ன பொருளை இவர் தான் அனுப்பியிருப்பார் என்பது மதிமாறனுக்குத் தெளிவாகத் தெரிந்தது.
மதிமாறனின் மேஜையின் மேல் விற்றிருந்த அந்த போன்சாய் மரத்தினை கண்கள் விரிய ஆர்வமாக நோட்டம் விட்டார் கோபி. அத்தோடு நில்லாமல், மனதில் இருந்த கேள்வி, வார்த்தைகளாகவும் வெளிப்பட்டிருந்தது.
“என்ன சார் இது?”என கண்கள் படபடக்க வினவிய கோபிக்கு இந்த முறை தக்க பதிலைச் சொல்லலாம் என மதிமாறன் முடிவெடுத்திருந்தான்.
“இது என்னன்னு தெரியலையா கோபி….போன்சாய் மரம்…”
“மரமா? மரம் இவ்வளவு சின்னதா இருக்கே சார்”
“சின்னதா இருந்தா தான் அது போன்சாய் மரம் கோபி…”
“யார் சார் அனுப்பியிருப்பா”என ஆர்வமாக வினவிய கோபி, போன்சாய் மரத்தினை அப்புறமும் இப்புறமுமாக ஆட்டிப் பார்த்தான். பிரவுன் கவரிலும் அனுப்புனர் முகவரி ஏதேணும் உள்ளதா என ஆராயவும் செய்தான். கோபியின் செய்கை மதிமாறனின் முகத்தில் சிரிப்பை வரவழைத்திருந்தது.
“பார்சல்ல பேர் இருக்க வாய்ப்பில்ல….மரத்தோட அடியில ஏதாவது எழுதியிருக்கான்னு பாருங்க”என கோபியை ஏவ, அதே போல் மரத்தின் கீழ் பாகத்தில் கோப்பையின் கீழே ஒட்ட வைக்கப்பட்டிருந்தது அந்தச் சிறிய காகிதம். ஐந்தே ஐந்து எழுத்துக்களை உள்ளடக்கியிருந்த போதும், வார்த்தைகளுள் நாலாயிரம் அர்த்தங்கள் உள்ளன என்பதை மதிமாறன் உணர்ந்தான்.
“Save Your Heart. I Surrender” என அழகான கையெழுத்தில் எழுதப்பட்டிருந்த வாக்கியத்தினை திரும்பத் திரும்ப படித்துப் பார்த்த போதும், அதன் பொருள் கோபிக்கு விளங்கவில்லை. ஆனால் உடையவனுக்கு புரிந்து போயிற்று.
“என்ன சார் இது? சம்பந்தமேயில்லாம, குட்டை மரத்துக்கு கீழ ஒரு செய்தி…எனக்கு ஒண்ணுமே புரியலை சார்…”என கோபி தலையை சொறிந்து கொள்ள,
“ஒண்ணும் புரியலை இல்லை கோபி..சரி, உங்களுக்கு ஹைப்போதடிக்கலா ஒரு சிட்யூவேஷன் சொல்லறேன்…அதுக்கு நீங்க எப்படி ரியாக்ட் செய்வீங்கன்னு சொல்லறீங்களா?”
“சார்….நீங்க ஒரு ரெண்டு வருஷம் முன்னாலையும் இதே மாதிரி தான் சார் என்னால புரிஞ்சுக்கவே முடியாத சிட்யுவேஷன் சொன்னீங்க…அதுமாதிரியா சார்…”
“கொஞ்சம் அப்படித்தான். கவனமா கேளுங்க…ஒரு பொருள் நம்மகிட்ட இருந்து தொலைஞ்சு போச்சு. அதாவது, தானாவே அந்த பொருள் உங்களை விட்டுப் போயிடிச்சு. ஆனா, அந்தப் பொருள் நல்ல பொருள் இல்லை, உங்க வாழ்க்கைக்கும் அந்த பொருளுக்கும் சம்பந்தமில்லை. அதே மாதிரி உங்க வாழ்க்கையில அந்த மாதிரி ஒரு பொருளை ஏத்துக்கவும் முடியாது. அப்படிப்பட்ட பொருள் அது…”
“என்ன பொருள் சார் தொலைஞ்சு போச்சு..சொன்னீங்கன்னா எங்கிருந்தாலும் வாங்கிட்டு வர்றேன் சார்”என பாவமாக பதிலளித்த கோபியின் பேச்சை காதில் வாங்காமல் தன் போக்கில் மதிமாறன் பேசத் துவங்கினான்.
“சரி…அந்த பொருள் வேண்டாம், நமக்கு செட் ஆகாதுன்னு நினைச்சேன். ஆனா, அந்த பொருளோட நினைவு மட்டும் எப்பவுமே கூட இருந்துச்சு…அதுக்கு பதிலா எந்த பொருளைப் பார்த்தாலும், அது எவ்வளவு நல்ல பொருளாவே இருந்தாலும், என்கிட்ட இருந்து தொலைஞ்சு போன பொருள் மட்டும் தான் வேணும்னு மனசு சொல்லுது.”
“எங்க சார் தொலைச்சீங்க…ஒண்ணா போய் தேடிப்பார்க்கலாம் சார்”
“இவ்வளவு நாளும் அந்தப் பொருள் இருந்த இடமும் தெரியலை. தொலைச்ச இடத்தில இருந்து அந்தப் பொருள் ரொம்ப தூரம் போயிருச்சு. பொருள் பேர் கூட தெரியாதுன்னா பார்த்துக்கோங்க..”
“பேர் தெரியாத பொருளா….சார், புரியலை சார்…”
“சரி, நமக்கு அந்த பொருள் இந்த ஜென்மத்தில கிடைக்காதுன்னு மனசை தேத்திகிட்டு இருக்கறப்போ, அந்த பொருள் எங்க இருக்கும்னு ஒரு க்ளூ கிடைக்குது.ஆனா அது அந்த பொருளே அனுப்பலை. அந்த பொருளை பாதுகாக்கறவங்க அனுப்பியிருக்காங்க…”
“ஸார்,,,இன்னொருத்தர் பொருளா சார்….அடுத்தவங்க பொருளுக்கு ஆசைப்படக் கூடாதுன்னு எங்க அப்பத்தா அடிக்கடி சொல்லும் சார்..”
“முழுசா கேளுங்க கோபி…எனக்கு சம்பந்தமில்லாத, என்னால வச்சுக்க முடியாத, ஆனா நொடி நேரம் கூட வேற பொருளைப் பத்தி என்னை நினைக்கவிடாம செய்யற இந்த பொருள் எனக்குத் தேவையா?”
“சார்.. நீங்க சொல்லற விஷயம் என்னன்னோ அதுக்கான பொருள் என்னன்னோ எனக்கு சத்தியமா புரியலை சார்…ஆனா, இந்த வேலையில இன்னும் நான் கொஞ்ச நாள் இருந்தா பைத்தியம் புடிக்கும்னு மட்டும் தெளிவா தெரியுது சார்…இந்த சிட்யுவேஷன் கொடுமைக்கு பதிலா, நீங்க அந்த பொருள் என்னன்னு மட்டும் சொல்லுங்க சார், என் சொத்தை வித்தாவது அந்த பொருளை உங்களுக்கு வாங்கித் தர்றேன் சார்….சத்தியம் சார். இது செத்துப் போன எங்க அப்புச்சி மேல சத்தியம் சார்….” என வெளிப்படையாகவே புலம்பத் துவங்கியிருந்த கோபியைக் கண்டு கண்களை குறுக்கிக் கொண்டு சிரித்தான் மதிமாறன்.
“ச்ச்ச் சொத்து கிடக்குது கோபி…அது எங்க போயிரும். மெதுவா என்பேர்ல எழுதிவைங்க…ஆனா அதுக்கு முன்னாடி, அந்த பொருள் கிடைக்கணுமா இல்லையா…அந்த பொருள் இல்லாம, நான் சொத்து சேர்த்தி வச்சு என்ன புண்ணியம். அப்படிபட்ட அந்த பொருள் கிடைக்கணும்னா, ரெண்டு கண்டிஷன் இருக்குன்னு உங்க குட்டை மரம் சொல்லியிருக்கே…”
“மரம் சொல்லுதா….இதெல்லாமா இந்த குட்டை சொல்லுது…எனக்கு ஒண்ணும் கேட்கலை சார்…”
“அதான் சொல்லியிருக்கே, “Save Your Heart I Surrender”ன்னு… சோ, மொதல்ல பொருள் எங்க இருக்குன்னு கண்டுபிடிக்கணும்.”
“எப்படி சார்…”
“குட் இப்போ தான் நீங்க என் மானசோட குழப்பங்களை தீர்க்கற மாதிரி கேள்வி கேட்கறீங்க…இதுக்குத் தான் கோபி, உங்களை நான் எப்பவுமே வேற ஸ்டேஷனுக்கு அனுப்ப மாட்டேன். நீங்க கூட இருந்தாலே நான் ரொம்ப தெளிவா யோசிக்கறேன் இல்ல….சூப்பர் கோபி நீங்க…”என்றவன் இதுவரையிலும் சுழன்றபடிக்கே பேசிக் கொண்டிருந்த நாற்காலியில் இருந்து எழுந்து கோபியின் தோளில் தட்டிக் கொடுத்தான்.
அத்தோடு நிற்காமல், கோபி ங்கே என விழித்துக் கொண்டு கைகளில் பிடித்திருந்த அந்த சிறிய போன்சாய் மரத்தின் இலை ஒன்றினை பறித்து முகர்ந்து பார்த்தவண்ணம், கோபியிடன் பேசினான்.
“இந்த மரத்தை உடனே பக்கத்தில இருக்கற போன்சாய் செடி நர்சரிக்கு கொண்டு போய், இது என்ன மரம், எந்த ஊர்ல வளரும்னு கேட்டு எனக்கு சொல்லுங்க… அப்பறம் இது கண்டிப்பா ஃபாரீன் மரம். எந்த கண்டரின்னு தெளிவா கேட்டுட்டு அந்த நாட்டுக்கு எனக்கு ஒரு டிக்கெட் போடுங்க….முக்கியமா என்னோட பர்சனல் அக்கவுண்டல இருந்து போடுங்க….கவர்மெண்ட் காசில இருந்து இல்ல…”
“எஸ் ஸார்” என கோபி நகர முயல,
”ஒரு நிமிஷம் கோபி..உங்க அறிவை இன்னும் கொஞ்சம் நான் யூஸ் பண்ணிக்கறேன்….சரியா….மொதல்ல, அந்த பொருளைத் தேடிப் போகணும்…இன்னமும் அந்த பொருளுக்கு எங்கிட்ட வர விருப்பம் இருக்காண்ணு தெரிஞ்சுக்கணும்…ஒருவேளை விருப்பம் இருந்தா, பொருளை பாதுகாக்கறவங்களுக்கு தண்டனை குடுத்திட்டு…பொருளை எனக்கு சொந்தமாக்கிக்கணும். ஆனா இது தப்பில்லையா கோபி, பொருளை மட்டும் நான் எடுத்துகிட்டு பாதுகாக்கறவங்களை தண்டிக்கறது. ஏன்னா, பொருளும் சேர்ந்து தானே கோபி தப்பு பண்ணிச்சு..சோ, பொருள் எனக்கு வேணும்னா எனக்கிருக்கற ஒரே வழி, என்னோட  வேலையை நான் விட்றனும். ஆசைஆசையா, கனவு கண்டு, மக்கள் நாலு பேர்த்துக்கு நல்லது செய்யணும்னு நான் கஷ்டப்பட்டு படிச்சு வாங்கின வேலை கோபி. இந்த வேலைய எப்படி நான் விடமுடியும்?”
“நீங்க வேலையை விட வேண்டாம் சார். நான் விட்டறேன்…விட்டற்றேன் என்ன, நீங்க பொருளைப் பத்தி பேச ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்திலையே நான் மனசளவில என் வேலையை விட்டுட்டேன் சார்…சத்தியமா சொல்லறேன் சார், மனுஷன் வாழ்றதுக்கு வேலையை விட உயிர் முக்கியம் சார். உங்க கூட இன்னும் கொஞ்ச நாள் நான் வேலை செஞ்சா என் உயிர நீங்க ஸ்ட்ரா போட்டு சுர்ர்ர்ர்னு உரிஞ்சிருவீங்க சார்….வேலைய விட எனக்கு உயிர் முக்கியம் சார்…” என அழாத குறையாக கோபி பேசிக் கொண்டிருக்க, மதிமாறன், கோபியை தோளுடன் அணைத்துக் கொண்டான்.
“நீங்க நிஜம்மாவே அறிவாளி கோபி…உங்ககிட்ட பேசினாலே நான் ரொம்ப தெளிவாயிடறேன்….வேலையை விட உயிர் முக்கியம் இல்லையா கோபி. வேலையை விட உயிர் முக்கியம். வேலை இல்லைன்னா வேற வேலை கிடைக்கும், ஆனா உயிர் போனா போனது தான்…என்ன தத்துவம் கோபி…ரியலி யூ ஆர் கிரேட்”  என கோபியை கட்டிக் கொண்ட மதிமாறன், கோபி சற்றும் எதிர்பாராத வகையில் அவன் கன்னத்தில் முத்தம் வைக்க, மேலதிகாரி என்று கூடப் பாராமல் மதிமாறனை தள்ளிவிட்டான் கோபி.
“யோவ்…நான் இப்பவே ரிசைன் பண்ணரேன்யா…உன் வேலையும் வேண்டாம் நீயும் வேண்டாம்” என படபடத்த கோபியின் தோளை மீண்டும் மென்மையாக தட்டிய மதிமாறன், “ஹ ஹ ஹ… வேலைய ரெண்டு பேரும் சேர்ந்தே விட்ரலாம் கோபி…அதுக்கு முன்னாடி, இந்த போன்சாய் மரம் எந்த நாட்டு மரம்னு மட்டும் கேட்டுட்டு வந்து சொல்லுங்க….சரியா…அப்பறமா நாம ரெண்டு பேருமே சேர்ந்து வேலையை ராஜினாமா செஞ்சிட்டு, நான் சொன்னனே  அந்தப் பொருளைத் தேடிப் போலாம்….” என மதிமாறன் சிரிக்காமல் மொழிய,
“என்னது….வேலையை விட்டுட்டும் நான் திரும்ப அசிஸ்டெண்டா…யோவ்…என்னை வாழவிடுய்யா…வாழவிடு….உனக்கு புண்ணியமா போகும்….”என அலறிய கோபியை சிரிப்புடனேயே ஏறிட்டான் மதிமாறன். அவனது மனதில அந்தப் பொருளும், அது தந்த நிறைவும் எந்த வேலையும், வேறு மாற்றுப் பொருளோ தரப்போவதில்லை என்பது தெளிவாகப் புரிந்தது. அந்தப் பொருளைத் தேடிப் போய் தனதாக்கிக் கொள்ளும் பயணத்தை மேற்கொள்ள மனதளவில் தன்னை தயாரக்கிக் கொண்டான் சுரபியின் மதிமாறன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!