Mayavan

மாயவனின் மயிலிறகே 17

அபிஜித்தின் டிசையர் தேனியை நோக்கி சென்றுக் கொண்டு இருந்தது. அவன் மனம் முழுவதும் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. பின்னே அவன் பாப்புவை பார்க்கப் போகிறானே!

ஆம்! ஆயிற்று இன்றோடு நான்கு நாட்கள், அனைவரும் தேனிக்கு சென்று, பாப்புவும் கூட! வீடு மீண்டும் வெறுமையை பூசிக்கொண்டது. யாரும் இல்லாத வீட்டிற்கு வரவே பிடிக்கவில்லை அபிஜித்திற்கு.

முன்பு பழக்கப்பட்ட தனிமை. விரும்பிய தனிமையும் கூட. இப்போது எட்டிக்காயாக கசந்ததுதான் கொடுமை. நான்கு நாட்களை எப்படியோ ஓட்டிவிட்டான். இனியும் முடியாது. இன்னும் நான்கு நாட்கள் கழித்து ஊருக்கு திருவிழாவிற்கு செல்ல வேண்டியவன் இப்போதே செல்கிறான். காரணம்! இப்போது அவன் தேனியின் கலெக்டர். இடமாற்றலுக்கான ஆணை இதோ கையில். இதற்கு யார் காரணம் இதையெல்லாம் ஆராயவில்லை. இவனது பதவியில் இதெல்லாம் சகஜமே!

ரவிசந்திரன்தான் இனியும் மகனை தள்ளி நின்று பார்க்க விரும்பாமல் இப்படி ஒரு நகர்வை நகர்த்தினார். இவனது போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கையால் இடமாற்றல் நடவடிக்கை தயாராக, அதை தன் முயற்சியால் தேனிக்கு மாற்றினார். எப்போது மனைவி மூலம் மகன் இளக தொடங்கிவிட்டான் என்பதை அறிந்தாரோ அப்போதே அவனை இங்கு கொண்டு வருவதற்கான வேலையைத் தொடங்கிவிட்டார்.

இரும்பை இளக வைத்துதான் தேவையான வடிவத்தை உருவாக்க முடியும் என்பதற்கேற்ப, இத்தனை நாள் விட்டவர், சமயம் பார்த்து பிடிக்க ஆரம்பித்துவிட்டார்.

கூடவே அன்று நடந்த தாக்குதலில் மகன் மட்டுமல்லாது மகளும் மாட்டவே தனது செல்வாக்கை பயன்படுத்தி உடனே செயல்படுத்தியும் விட்டார்.

கார் ஓட்டிக்கொண்டிருந்த அபிஜித்தின் மனதும் அன்றைய நிகழ்வுகளை நினைத்துப் பார்த்தது. அன்று நடந்த களேபரத்தில் இவர்களைச் சுற்றி சிலர் பாதுகாப்பாக நிற்கவும், முதலில் யார் இவர்கள் குழப்பமானவன் பெண்களை கருத்தில் கொண்டு, அவர்களை சமாதானப்படுத்தி ஓரிடத்தில் பாதுகாப்பாக அமரவைத்துவிட்டு காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க, “தம்பி நீங்க போங்க, பாவம் புள்ளைக பயந்து கிடக்குங்க. இவனுங்கள நாங்க பாத்துக்கறோம். எவ்ளோ தைரியம் இருந்தா எங்க ஐயா புள்ளைங்க மேல கை வைக்க பாப்பானுங்க” என சுற்றி நின்ற ஒரு வெள்ளைவேட்டி அரிவாளுடன் மீசையை முறுக்கியது.

இன்னொருவனோ, “சார் நீங்க மேடம கூட்டிட்டு போங்க. நாங்க பாத்துக்கறோம்” என விரைப்பாய் நின்றான்.

அவனுக்கு குழப்பமானது. ‘துப்பாக்கி குண்டுதான் பாய்ந்தது. அப்பாவின் ஆட்கள் கையில் துப்பாக்கி இல்லை. அப்ப ரெண்டு க்ரூப், ஒன்னு அப்பாவோட ஆளுங்க… இன்னொன்னு?’ என யோசித்தவன் ஏதோ அவர்களிடம் கேட்க நினைக்க அப்போது காவல்துறை வந்து சடுதியில் பொறுப்பை கையில் எடுத்துக் கொண்டது.

குண்டடி பட்டவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்று, மீதி ஆட்களை கைது செய்தனர். அவர்கள் சென்றபின் வெள்ளை வேட்டி கூட்டத்திற்கு நன்றி கூறியவன், இனி தான் பார்த்துக்கொள்வதாக கூற, அவர்கள் தாங்களும் உடன் வருவதாக பிடிவாதம் பிடித்தனர். ஒருவழியாக அவர்களிடம் இவன் பேசி, அவர்கள் ரவிசந்திரனிடம் பேசி அவர் கூறிய பின்பே விட்டுச்சென்றனர்.

மற்றொரு க்ரூப்பை பார்க்க அவர்கள் பெண்கள் இருவருக்கும் பாதுகாப்பாக, அவர்களைச் சுற்றி நின்றிருந்தனர்.

வேகமாக அவர்களிடம் சென்றவன், அங்கு ஒருவன் போனில் பேசிக்கொண்டிருந்ததை செவிமடுத்தான், “நோ சார் அவங்களுக்கு ஒன்னும் இல்ல. ”

“………”

“சாரி சார், நாங்க அலெர்ட்டாதான் இருந்தோம். ஆனா திடீர்னு அட்டாக் பண்ணிட்டாங்க”

“……”

“எஸ் சார், மேடம் அண்டர் அவர் ப்ரோடக்ஷன். ஷி வாஸ் சே…..” பேசிக்கொண்டிருக்கும்போதே அபிஜித் போனை அவனிடம் இருந்து பறித்திருந்தான்.

அந்தப்புறமிருந்து, “ஹலோ…ஹலோ… ஸ்பீக் அவுட் டேமிட்”என கத்திக்கொண்டிருக்க,

“ஹு ஆர் யு” என அபிஜித் இந்தப்புறம் ஆரம்பிக்க, இப்போது அந்தப்புறம் மௌனத்தின் சாயல்.

நிமிட நேர அமைதிக்கு பின் அடக்கப்பட்ட கோபத்துடன், “மிஸ்டர். அபிஜித் ரவிச்சந்திரன். என்னோட டாலு அவ சேர வேண்டிய இடத்துல சேர்ந்துட்டதாலயும், அதோட என்னோட டாலுவ நீ பத்திரமா பாத்துக்குவன்னும் நம்பிதான் அவள உன்கிட்ட விட்டுவச்சிருந்தேன். ஆனா நீ என் நம்பிக்கைய உடைச்சுட்ட. பீ ரெடி டு ஃபேஸ் மீ. அண்ட் அன்னைக்குதான் நீ டாலுவ, அதாவது உன் மொழில சொல்லலும்னா பாப்புவ பாக்கறது கடைசியா இருக்கும். இனி டாலு உங்களுக்கு இல்ல!” தமிழில் தத்தி தத்திப் பேசினான் ஷௌரியா.

எதிர்முனை பேசப் பேச அமைதியாக கேட்ட அபிஜித், கடைசி வரியில் சற்றே புருவம் சுருக்கி விரித்து அவன் எதிரில், பயந்து போய் ஜனனியை கட்டிக்கொண்டு இருந்த பாப்புவை பார்த்தான்.

யார் இவன். பாப்புவுக்கும் இவனுக்கும் என்ன உறவு? அவள் என்னோடு இருப்பது வரை அறிந்தும் நேரில் வராமல் பாதுகாப்புக்கு மட்டும் ஆள் வைத்துள்ளான். அத்தோடு அவள் சேர வேண்டிய இடம் என்று வேறு கூறுகிறான், என்னோடு இருப்பதை கூறுகிறானா இல்லை வேறு எதுவுமா? இப்படி ஒவ்வொரு புள்ளியையும் மனம் சட்சட்டென்று வைக்க இணைக்கும் வழியை இனி கண்டுபிடிக்க வேண்டும் என மின்னல் வேகத்தில் குறித்துக் கொண்டான்.

அத்தோடு எனது பாப்புவை அழைத்து செல்வானா! மனமெங்கும் கோபம் சட்டென உயர, “உன்னோட உளரல் எனக்கு தேவையில்ல. யார் நீ?” என அலட்டிக்கொள்ளாமல் மீண்டும் கேட்டான். அந்த புறத்தவனோ எனக்கும் பொறுமைக்கும் வெகுதூரம் என நிரூபிக்கும் வகையில், “அந்த உளரல் கூடிய சீக்கிரம் நடக்கும் மிஸ்டர், பீ ரெடி.” என சீற அழைப்புத் துண்டிக்கப்பட்டது.

பீப் என்ற துண்டிக்கப்பட்ட ஒலியில் போனை காதிலிருந்து விலக்கியவன் பார்வையெல்லாம் அவளிடத்தில். அவனின் அவளிடத்தில்!

அந்தப் பக்கம் இருந்த ஷௌரியாவோ கொதித்துக் கொண்டிருந்தான். “ஐம் சாரி டாலு. நீ அங்க நல்லா இருப்பன்னுதான் விட்டு வச்சேன். ஆனா! இனி நீ அங்க இருக்க வேண்டாம். சத்தியமாவது ஒன்னாவது, இன்னொரு இழப்பு என்னால தாங்க முடியாது.” என்று வாய்விட்டுக் கூறியவன் தன் எதிரில் இருந்த புகைப்படங்களை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது ஒரு வளைக்கரம் அவனது தோளைத் தொட திரும்பாமலேயே, “தேவையானத பேக் பண்ணு நேனா, நாம தமிழ்நாடு போகனும்” எனக் கூற,

அப்பெண்ணோ முகம் முழுவதும் புன்னகையில் மூழ்கியவாறு, “சச்!(உண்மையாவா)” என தன் கையை நீட்ட, அவளது வெகுநாளைக்குப் பிறகான புன்னகையில் மகிழ்ந்தவன், “ஹான்..ஹான்… உண்மையாதான்.” என உறுதி கூறி அவளை அனுப்பிவிட்டு, “சாரி டேட், உங்க ஃப்ரெண்ட்டோட ஆசைய என்னால நிறைவேற்ற முடியாது.” என எதிரில் இருந்த படத்தில் இருப்பவரிடம் மானசீகமாக உரையாடினான். அவர் அமர்நாத். ஷௌரியாவின் தந்தை.

அந்த நிகழ்வுக்குப் பிறகு அபிஜித் மின்னல் வேகத்தில் செயல்பட்டு குடும்பத்தவர்களை தகுந்த பாதுகாப்போடு தேனிக்கு அனுப்பிவிட்டான்.

பாப்பு முதலில் மறுத்தாலும் கெஞ்சி கொஞ்சி சம்மதிக்க வைத்து அனுப்பினான். தன் குடும்பத்தவர் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை, நீதியை நிலைநாட்டியே தீருவேன் என ரிஸ்க் எடுக்க இவன் ஒன்றும் சினிமா கதாநாயகன் இல்லையே!

குடும்பம் மீது பாசம் வைத்துள்ள சாதாரண மனிதன். அவனால் முடிந்தவரை கொடுத்த பணியை நேர்மையாக செய்துவிட்டான். இனியும் செய்வான். ஆனால் அது தன் குடும்பத்தின் பலியால்தான் நடக்கும் என்றால் அதை எப்படி ஏற்க முடியும்.

மறுநாள் ஷௌரியா வந்தான். ஆனால் அவன் டாலு இங்கு இல்லை. தேனிக்கே போக முடியும்தான். ஆனால் அங்கு சென்று உண்மையை கூறி டாலுவை அழைத்து வருவது இந்த சூழ்நிலையில் கடினமான ஒன்று என்பதை உணர்ந்தவன், அபியை சந்தித்து பல உண்மைகளைக் கூற அபிஜித்தால் அதை கிரகிக்க சற்று நேரம் பிடித்தது.

தான் சில மாதங்கள் சென்னையில்தான் தங்கப் போவதாகவும், டாலு குணமானதும் அவளை அழைத்து சென்று விடுவதாகவும் கூற, என்ன முயன்றும் அபிஜித்தால் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனாலும் அவனது பாப்புவின் வாழ்வில் ஷௌரியாவிற்கான முக்கியத்துவம் அறிந்தவன் அமைதியாகவும், அதே சமயம் தன்னுடைய உரிமையையும் விட்டுக்கொடுக்காமல் பேச ஷௌரியாவும் வியந்துதான் போனான்.

இருவரும் அவரவர் நிலையில் இருந்து இறங்கவில்லை. ஆனால் அவர்களின் பிரிய பெண்ணிற்காக சற்று வளைந்து கொடுத்தனர். அதனால் அபி இப்போது தேனிக்கும், ஷௌரியா சென்னையிலும் தங்களது வாசத்தை ஆரம்பித்தனர்.

காரில் சென்று கொண்டிருந்த அபிஜித்திற்கு பாப்பு யாரென்று அறிந்ததில் மகிழ்ந்தாலும், இதனால் குடும்பத்தில் எதாவது சங்கடம் வருமா என்ற எண்ணம் வராமலும் இல்லை. எதுவாயினும் பாப்புவை இவன் விடுவதாய் இல்லை என உறுதியாக எண்ணினான். இவனைப்போல அவளும் இவனை விடாமல் இருப்பாளா? இல்லை அவனை அதள பாதாளத்தில் தள்ளி விட்டுவிடுவாளா?

அபி வீட்டிற்கு சென்ற போது மதியம் மூன்று மணி ஆகியிருந்தது. வீட்டிற்குள் நுழையும் போதே ஒருவித பரவசம் தொற்றிக்கொள்ள துள்ளலோடு உள்ளே நுழைந்தான். சொந்த மண்ணல்லவா!

அந்நேரம் இவன் வருவது யாருக்கும் தெரிவிக்கப்படாததால் அனைவரும் உணவருந்திவிட்டு குட்டித் தூக்கத்தில் இருக்க, பொன்னம்மா மட்டும் இவனை வரவேற்று உணவு பரிமாறி பசியாற செய்தார். மனதில் பாப்புவைப் பற்றிய தேடல் இருக்க, “எல்லாரும் எங்க போய்ட்டாங்க” என பொதுவில் விசாரித்து வைத்தான்.

பொன்னம்மா கூறிய பதிலில் அவனுக்குண்டான விவரம் கிடைத்ததும் விரைந்து உண்டவன், மேலே தனது அறைக்குச் சென்று தனது உடைமைகளை வைத்துவிட்டு தன் தங்கையின் அறைக்கு பாப்புவைப் பார்க்க சென்றான்.

ஆம்! பாப்பு ஜனனியின் அறையில் அவளோடுதான் தங்கியிருக்கிறாள். தன்னைக் கண்ட மாத்திரத்தில் என்ன செய்வாள்? என்ற எண்ணம் அவனை குறுகுறுக்கச் செய்ய எட்டிநடை போட்டவன் கையில், அவளுக்கான டார்க் சாக்லேட்டும் இருந்தது.

அறை சாற்றியிருக்க மெதுவாக தள்ளி உள்ளே நுழைந்தவன் கண்டது வெற்று அறையையே! அவனின் உணர்வுகள் தண்ணீர் தெளித்த பொங்கும் பாலாய் அடங்க, எங்கே சென்றிருப்பாள் என தேடத்தொடங்கினான்.

அறையை விட்டு வெளியே வர அந்த நீண்ட காரிடரில் இடதுபுறம் முதல் அறை ஜனனியுடையது, அடுத்தது அபிஜித்துடையது, அதற்கடுத்து வலதுபுறம் இன்னும் இரண்டு அறைகள் உள்ளன. அதை தாண்டினால் மேலே மொட்டைமாடிக்கு செல்லும் வழி.

மெதுவாக நடை போட்டவன் காதில் அந்த சத்தம் விழுந்தது, “நாலு… அஞ்சு…ஆறு…ஏழு…எட்டு….ஒன்பது…பத்து…நான் வருகிறேன்” அது அவனது பாப்புவின் குரல்.

இரண்டு அறைகளில் ஒன்றில் இருந்துதான் இந்த சத்தம். என்ன செய்கிறாள் இங்கு என யோசித்தவாறே உள்ளே நுழைய சற்று திண்டாடித்தான் போனான்.

மயக்கும் மோகினியாய் தாவணிப்பாவாடையில் அவள்! சற்றே தோளைத்தொட்ட முடியை காற்றுக்கு உறவாட விட்டு அதில் முழமாய் மல்லிகைப்பூ இரண்டாய் மடித்து, அவளது பொலிவுக்கு முன் தோற்று வாடிப்போயிருந்தது.

என்ன செய்கிறாள் இவள் என நினைக்க, அவளோ பாவாடையை உயர்த்தி கொலுசு சப்திக்காதவாறு மெதுவாக நடையிட்டு எதையோ தேடிக் கொண்டிருந்தாள்.

இவன் வந்ததைக் கவனிக்கவே இல்லை. சற்று நேரம் பொறுத்தவன் அவள் பார்க்கவில்லை என்றதும் செல்லமாக முறுக்கியவாறு மெதுவாக சென்று பின்னிருந்து அவன் தோளை தட்ட, சட்டென்று திரும்பியவள் இவனைக்கண்டதும் கண்களில் மின்னல் தெறிக்க, “ஜித்து” என ஹஸ்கி குரலில் கூறியவாறு அவனை பாய்ந்து அணைத்திருந்தாள்.

அவளது பாய்ச்சலில் தள்ளாடியவன் பிடிமானத்திற்கு அவளையே வளைத்துப் பிடிக்க அவளது அணைப்பு இறுகிக்கொண்டேபோனது. புரிந்தது! தன்னை மிகவும் தேடியிருக்காறாள் என்று.

ஓரிரு நிமிடங்கள் சென்று அவளைப் பிரித்தவன், ” இங்…” பேசமுடியாதவாறு சட்டென அவன் வாயை அடைத்தவள், “ஷ்ஷ்ஷ்…” என வாயில் விரல் வைத்து அமைதியாக இருக்கச் சொன்னாள்.

அவள் இவன் வாயை மூடியதில் கண்கள் மட்டும் பளிச்சென சிரிக்க, ஏன் என புருவத்தை உயர்த்தி கண்களாலேயே கேட்டான்.

சட்டென அவனை வளைத்து அவன் காதோரம், “கண்ணாமூச்சி விளையாடறோம்” என ஹஸ்கி குரலில் கிச்சுக்கிச்சு மூட்டினாள்.

அவளது பதிலில் திருதிருத்தவன் ‘யாரோட விளையாடுறா’ என யோசித்தாலும் வேறு யாரோ இங்கு இருக்கிறார்கள் என்றதில் அவளை தன்னிடமிருந்து பிரித்து நிறுத்தினான்.

காற்றில் ஆடிய கன்னத்து முடியை விலக்கியவாறு, “யார் கூட விளையாடற” என அவனும் ஹஸ்கியில் கேட்க, “என்னோட ஃபிரண்ட்” என்றாள்.

ஒருவேளை ஜனனியாக இருக்குமோ! என நினைத்தவன், “சரி சரி நீ விளையாண்டுட்டு வா” என அவன் ஓரமாய் நின்று கொள்ள, அவள் அங்கிருந்த மூலை முடுக்கெல்லாம் தேடத்தொடங்கினாள்.

அபிஜித்தும் பூனை நடைபோட்டு தேடிக்கொண்டிருந்தவளையே ரசித்து பார்த்திருந்தான். அப்போது, “ஹேய் நான் கண்டுபுடிச்சிட்டேன்… நீங்க அவுட்டு அவுட்டு” என சத்தமிடவும் உயர்த்தி வைத்திருந்த பாயின் பின்புறமிருந்து வந்த மனிதரைக் கண்டவன் அதிர்ச்சியில் சிலையென நிற்க, அங்கிருந்து வெளிவந்த மனிதரோ எதிர்பாராமல் இவனைக் கண்டதும் திருதிருவென முழித்தபடி நின்றிருந்தார்.