மாயவனின் மயிலிறகே
அத்தியாயம் 14
இதழோடு சேர்த்து அவளையும் அணைத்திருந்தவன் தன் மீது பாரம் ஏறுவதை உணர்ந்ததும் பாப்புவை விலக்கிப் பார்க்க அவள் மயங்கியிருந்தாள்.
அப்பொழுதுதான் அவன் செயலின் வீரியம் உரைக்க தன்னைத்தானே சபித்துக் கொண்டவன்,
“பாப்பு…பாப்பு…” என பதற்றத்துடன் அழைத்தும், அவள் விழிக்கவில்லை என்றதும் பதறியவன் “டேமிட் அபி” என தன்னையே கடிந்து கொண்டு அவளைத் தூக்கியவாறு அவர்கள் பதிவு செய்திருந்த மற்றொரு அறைக்கு சென்றான். அவளைப் படுக்க வைத்தவன் முகத்தில் பல முறை நீர் தெளிக்க மெல்ல கண்விழித்தாள்.
“இங்க பாருடா பாப்பு உனக்கு ஒன்னுமில்லல்ல” என தவிப்புடன் கேட்டவன் அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான். அவன் கைகள் தன் பதற்றத்தை மறைக்க அவள் தலையை வருட சொகுசுப் பூனையாய் மேலும் அவனை ஒட்டிக்கொண்டாள்.
அவளின் ஜித்து என்ற நினைவா? இல்லை சற்று முன் அவன் அளித்த அன்பின் விளைவா? அதனால் உண்டான கன்னி மனதின் குழைவா? அதுவோ இதுவோ எதுவோ இப்போது அவளுக்கு அவன் கைகளுக்குள்ளான பாதுகாப்பும், அணைப்பும் தேவையாக இருந்தது.
ஆனால் இவனுக்கு இப்பொழுதுதான் இன்னும் பயம் பிடித்துக் கொண்டது. முத்தமிட்டதற்கு என்ன செய்வாளோ என்று!
மனதைக் கட்டுக்குள் வைக்க முடியாதவன் என்ன மனிதன் என்று இவனே பலரை சாடியதுண்டு. ஆனால் இன்று அவனே மனதைக் கட்டுப்படுத்த தவறியதேனோ!
இவன் சங்கடத்துடன் மெல்ல அவளை விட்டு அகன்று தள்ளி நின்று கொண்டான். அவளோ, “ஜித்து கார்டன்ல தான இருந்தோம். இங்க எப்படி?” என சுற்றிப் பார்த்துக் கொண்டே மெதுவாக வினவ, ‘தான் அவ்வாறு நடந்து கொண்டது அவளுக்கு ஒன்றும் தவறாய் தெரியவில்லையா’ என எண்ணினாலும், அவள் அருகில் செல்லவோ முகத்தைப் பார்க்கவோ கூசியது அவனுக்கு. அமைதியாக நின்றிருந்தான்.
அவளையே சங்கடத்துடன் பார்த்துக் கொண்டிருந்தவனை, “ஜித்து அவங்கலாம் எங்க?” என்ற குரல்கூட கலைக்கவில்லை.
அவன் பார்வை அவள் இதழிலிலேயே நிலைத்தது. இவன் அன்பின் தாக்கத்தால் இளஞ்சிவப்பிலிருந்து அடர் சிகப்பிற்கு சற்று நிறம் மாறியிருந்தது. மேலும் படபடப்பு வந்து ஒட்டிக் கொண்டது அபிஜித்திற்கு. கண்கள் கூட கலங்கத் தொடங்கியது.
யார் சொன்னது பெண்கள் மட்டுமே சுய ஒழுக்கம் தவறி எல்லை மீறினால் கலங்குவார்கள் என்று!… கண்ணியமான, ஒழுக்கத்தை மதிக்கும் சில ஆண்கள் கூட அந்நேரத்தில் கலங்கக்கூடும். அது ஒருவித பயம்.
“அஅஅஅஅந்த ரூம்ல ….” கலெக்டர், அடைத்தக் குரலில் வார்த்தைகளை சேகரித்து பேசினான்.
“சரி வா போவோம்” கட்டிலில் இருந்து எழுந்து கொண்டாள்.
“பாப்பு…” என அழைத்து அவள் முகம் பார்க்க தயங்கி வேறுபுறம் திரும்பிக் கொண்டான்.
“ம்..என்ன ஜித்து”
எப்படி கேட்பது என அவன் தவித்துக் கொண்டிருக்கும் போதே, பாப்பு இவனருகில் நெருங்கியிருக்க சட்டென்று ஓரடி பின்னடைந்தவன்,
“சாரிடா…அது ஏதோ…. இனி இப்படி நடக்காது. உனக்கு ஒன்னும் கஷ்டமா இல்லையே… இல்ல கஷ்டமாதான் இருந்திருக்கும் வேணும்னா என்ன ரெண்டு அடிகூட அடிச்சிக்கோ” என அவள் கையைப் பிடித்துக் கொண்டு பிதற்ற,
இவனது திடீர் செயலில் அவள் பயந்து கையை அவனிடம் இருந்து உருவிக் கொண்டு, “ஜித்து ஏன் இப்படி பண்ற?” என மருண்டு விழித்தாள்.
“இல்லடா பாப்பு… அது நான்…” என நிறுத்தியவன் அவள் இதழைச் சுட்டிக்காட்டி மேற்கொண்டு எப்படி பேசுவது என தெரியாமல் நின்றான்.
இதே அவள் சுயநினைவில் இருந்து, இது போல நடந்திருந்தால் இவ்வளவு தூரம் பதறியிருக்க மாட்டான்தான். ஏன் அவளும் ஏற்கும் பட்சத்தில் இது தன் உரிமை என எண்ணும் சாதாரண மனிதன்தான்.
ஆனால் குழந்தை மனதுக் காரியிடம் இது தவறல்லவா! அதனால் வந்த குற்றக் குறுகுறுப்பு அவனைக் குன்ற வைத்தது. இனி தன் வாழ்வனைத்தும் அணைக்க அடங்க நெருங்க நெருக்க சுகிக்க அவள்தான் என்று திடமாய் நினைத்தாலும் இன்று நடந்தது தவறென உறுதியாய் எண்ணினான்.
“இங்க என்ன” என தன் இதழைத் தொட்டுப் பார்த்தவள், அவன் முத்தமிட்டது நினைவு வரவும், “அச்சோ! ஜித்து இத யார்கிட்டயும் சொல்லிடாத என்ன?” என வேகமாய் கண்களை உருட்டி ரகசியம் பேசினாள். மேலும் அவளே,
“ஷாலு அக்காதான் சொன்னா இந்த… இந்த மாதிரி பண்ணா வெளில சொல்ல கூடாதாம்” தட்டுத்தடுமாறி கூறியவள் முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டாள். அவன் முகம் பார்க்கவே ஏதுவோ தடுத்தது அவளை! கன்னங்களில் சரசரவென்று எதுவோ பாய, அவள் ஹார்மோன்கள் பூத்துக் கொண்டிருந்தனவோ!
அவள் திரும்பி நின்றிருக்கவும் அவளின் செம்மை இவன் அறியாமல் போனான். அவன் ஒன்று நினைக்க இவள் ஒன்று பேசவும் திகைத்தவன், “ஏன் அப்படி சொன்னா?” அவனுக்கு தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது. காரணமில்லாமல் ஷாலு இப்படிக் கூறியிருக்க மாட்டாள்.
“அது சந்தோஷும் அமலாவும் அப்படிதான் பண்ணாங்க… அத பாத்து நான் ஷாலுகிட்ட கேட்டேனா! அவங்கதான் அங்க காயமாகிருக்கும் அதான் மருந்து போடறான் சொன்னாங்க. அதுவும் நமக்கு பிடிச்சவங்க மட்டும்தான் அப்படி போடனுமாம். வேற யாரையும் விடக் கூடாது. அப்படி மருந்து போடறத வெளியிலயும் சொல்லக்கூடாது சொன்னாங்க” என சற்று இயல்பாகி அவனை பார்த்து அபிநயம் பிடித்தாள்.
இப்போது ஒரளவு புரிந்தது. இவள் ஏடாகூடமாக பார்த்ததை ஷாலு சமாளித்திருக்கிறாள் என்று. இவனுங்க கூட வந்திருக்கவே கூடாது என நொந்து கொண்டான்.
“பார்த்ததையே சொல்லக் கூடாதுங்கறப்ப நாம மருந்து போட்டதை சொல்லிடுவேனா! அதான் நீயும் சொல்லாத சரியா. ஆனா ஜித்து அடுத்த தடவ சொல்லிட்டு மருந்து போடு. திடீர்னு போடவும் நான் பயந்துட்டேன்” என கூறியவள், “ஆமா எனக்குதான் காயமே ஆகலயே அப்பறம் எதுக்கு மருந்து. இனி காயமானாதான் போடனும் சரியா!”
அவளது விளக்கத்தில் இவன்தான் வாயடைத்துப் போனான். அவள் தன்னை தவறாக எண்ணவில்லை என சிறு ஆறுதல். அதே நேரத்தில் இதை வெளியில் சொல்ல மாட்டாள் என சிறு நிம்மதியும் வந்தது. கூறியிருந்தால் நண்பர்கள் முகத்தில் எவ்வாறு விழித்திருப்பான்.
இரவு சரியாக பன்னிரண்டை தொடவும் அபிஜித்திற்கு ஆர்டர் செய்த கேக் வரவழைக்கப்பட்டு நண்பர்களின் வாழ்த்தோடு அதை வெட்ட தயாரானான். ஒரளவு இயல்பு நிலைக்கு திரும்பியிருந்தான். தன் நடத்தை இப்போது தவறு என்றாலும், இவளிடத்தில் தவறில்லை என்பதில் உறுதியாய் இருந்ததால் வந்த தெளிவு அது.
“ஹேப்பி பர்த்டே டூ யு… ஹேப்பி பர்த்டே டூ யு… ஹேப்பி பர்த்டே டூ அபி”
அப்போது அவனருகில் அவனை ஒட்டி நின்றிருந்த, அவனின் பொம்மை அவன் சட்டையைப் பிடித்து இழுக்க கேக்கை வெட்டாமல் என்னவென திரும்பிப் பார்த்தான். வாழ்த்து சத்தமும் நின்றது.
“ஜித்து என்னோட பிறந்தநாள் எப்ப. நான் எப்ப இந்த மாதிரி கேக் வெட்றது” கேக்கை பார்த்தவாறே வினவ ஆழ்ந்த அமைதி அவ்விடத்தில்.
எவரும் இதை எதிர்பார்க்கவில்லை. மற்றவர்கள் அபிஜித்தையே சங்கடமாய் பார்க்க அவனும் ஸ்தம்பித்துதான் நின்றிருந்தான். அனைவரும் என்ன சொல்வது, எப்படி சமாளிப்பது என முகத்தை மாறி மாறி பார்த்துக் கொண்டனர். ஒரு புறம் இவளின் நிலையை நினைத்து வருத்தமாகவும் இருந்தது.
அபிஜித் முதலில் தெளிந்தவன், அவளைத் தோளோடு அணைத்து, “வா நாம சேர்ந்தே இதை கட் பண்ணுவோம். இன்னைக்கே உன்னோட பிறந்தநாளும் கொண்டாடிடலாம்”
“நிஜமாவா!” அவ்வளவு மகிழ்ச்சி அவள் முகத்தில் உடனே சுணங்கியவள் “ம்ப்ச் இதுல என் பேரே இல்லையே இத எப்படி கட் பண்ண” கண்முன் கேக் இருந்தும் கொண்டாட முடியாத கவலையில் கன்னத்தில் கை வைக்க,
உடனே ஷாலு அங்கிருந்த ஃப்ரிட்ஜில் இருந்த கெட்ச்அப்பில் பாப்பு என கேக்கின் மேல் வரைந்து, “இப்ப சரியா, உன் பேர் இருக்கு வா..வந்து வெட்டு” என வாஞ்சையாய் அழைக்க கேக்கின் முன் பிரசன்னமானாள் பாப்பு.
கேக்கை ஒரு பார்வை பார்த்தவள் அனைவரையும் பார்த்து, “ம் பாடுங்க” என்றாள் மகிழ்ச்சி பொங்க!
அனைவரும் சிரித்துக் கொண்டே பாட, ஆர்ப்பாட்டமாக பிறந்தநாள் என்று முடிவு செய்த நாளை கொண்டாடினாள் பாப்பு.
அனைவரும் அபிஜித்தின் பிறந்தநாளை மறந்தவர்களாய், “ஹேப்பி பர்த்டே பாப்பு” என இவளையே வாழ்த்த, அபிஜித்தோ கேக்கில் எழுதியிருந்த “அபிஜித் பாப்பு” என்ற பெயர்களையே பார்த்திருந்தான்.
‘இன்று பெயர் இணைந்ததுபோல் நாளை நாமும் இணைவோம் பெண்ணே’ என அவனுக்குள்ளாகவே உறுதியாக எண்ணிக் கொண்டிருந்த நேரம் அவன் முன் ஒரு கரம் கேக்கோடு நீண்டது.
“சாரி நானே வெட்டிட்டேன்” என முகத்தைச் சுருக்கியவாறே அவனுக்கு ஒரு துண்டு கேக்கை ஊட்ட மடை திறந்த வெள்ளமாய் கண்களில் காதலை வழியவிட்டவாறே வாங்கிக் கொண்டான். இவர்களின் அத்தனை உணர்வுகளையும் ஒரு இயந்திரக் கண் தனக்குள் சேமித்துக் கொண்டே இருந்தது.
அந்த இன்னோவா அமைதியாய் ஊர்ந்து கொண்டிருந்தது. அபிஜித் ஓட்ட பாப்பு முன்இருக்கையை சாய்த்து நன்றாக உறங்கியிருந்தாள். மற்றவர்கள் அவரவர் இடத்தில் இறங்கியிருக்க இவர்கள் மட்டுமே எஞ்சியிருந்தனர். நள்ளிரவில் தொடங்கிய ஆட்டம் காலை வரைத் தொடர, காலையில் அனைவரையும் அள்ளி போட்டுக் கொண்டு வந்திருந்தான் அபிஜித். அத்தனை கொட்டமடித்தனர் பாப்புவோடு சேர்ந்து.
இப்பொழுது இரவு நெருங்கியிருக்க வீடு வந்து சேர்ந்தான். இன்னும் அவள் தூக்கத்தை விடவில்லை. காலையில் உண்டதுதான். மதியம் கூட உறங்கிக் கொண்டே வந்தாள். இரண்டு நாளும் ஒருசில நொடிகளில் கடந்ததுபோல இருந்தது. மறக்க முடியாத பிறந்தநாள்.
கார் சத்தம் கேட்டு வெளியில் வந்த பொன்னம்மா, “அம்மா! பாப்பா! தம்பி வந்துடுச்சு” என குரல் கொடுத்து விட்டு, புன்னகையோடு இவர்களை நோக்கி வர, வாயில் விரல் வைத்து அமைதியாக இருக்கச் சொன்னவன் மறுபுறம் வந்து பாப்புவை கையில் ஏந்தினான்.
“ஓ…பாப்பா தூங்…” என ஆரம்பித்தவரை அவன் மீண்டும் ஒரு பார்வை பார்க்க பொன்னம்மா பேசுவதை நிறுத்தி வாயை மூடியவாறு போ! போ! என சைகை காட்டினார்.
அவரது பாவனையில் சிரித்தவாறே மெதுவாக சென்றவன், உள்ளே நுழைந்ததும் ஆணியடித்தது போல் நின்றான்.
அங்கு தாத்தா பாட்டியுடன் அவனின் தாயும், தங்கையும் இவனை எதிர்பார்த்து நின்றிருந்தனர். ஒரு சில நொடிகள் மட்டுமே நின்றவன், “பாட்டி பாப்புவ ரூம்ல படுக்க வச்சிட்டு வந்துடறேன்” என்று பொதுவாகக் கூறிவிட்டு தங்கையிடம் வரவேற்பாய் சிறு தலையசைப்புடன் நகர்ந்து விட்டான்.
மாடி ஏறும் போதே, “ஜித்து தூங்கனும் விடு” என்ற சிணுங்கலும்,
“அச்சோ முழிச்சிட்டயா! இதோடா ரூம்க்கு போயிடலாம்” என மெல்லிய குரலினால் ஆனாலும் கீழே நின்றிருந்தவர்களுக்கு தெளிவாய்க் கேட்டது அவர்களின் பேச்சுகள்.
அதைக் கேட்ட பெரியவர்கள் இருவரும் சிரித்துக் கொண்டனர் என்றால், காயத்ரி யோசனையுடன் பார்த்தார். ஜனனியோ தன் அண்ணனுக்கு தன்னை விட யாரோ ஒருத்தி முக்கியமாய் ஆகிவிட்டாளா! என்று தேவையில்லாமல் பாப்புவின் மேல் கடும்கோபத்தில் கண்கள் சிவக்க கலங்கி நின்றிருந்தாள்.
அவளும் என்ன செய்வாள் அவளின் பிரிய அண்ணனின் பிறந்த நாளைக்கென்று அவனைக் காண வந்தால் அவன் இல்லை. தாத்தா பாட்டியும் கோவிலுக்குச் சென்றவர்கள் வருவதற்கு மதியம் ஆகுமென்ற நிலையில், மனம் சற்று சோர்ந்தாலும், அறிவிக்காமல் வந்தது தங்களுடைய தவறு எனப் புரிந்து அவனைக் காண ஆவலுடன் காத்திருந்தாள்.
அதனால் அவன் வரும் வரை வாயிலையே அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் வந்துவிட்டான் என்றதும், அவனைக் காண ஓடிவந்தாள். ஆனால் அவனோ! ஒரு பெண்ணை என்னவோ குழந்தையின் உறக்கம் கலையக்கூடாது என தாங்கும் அன்னையைப் போல அல்லவா தனக்குள் சுருட்டியவாறு தூக்கி வருகிறான்! அதைப் பார்த்து அதிர்ந்தாலும், அருகில் வரவர தன்னைக் கண்டதும் முகம் மலர்ந்து விசாரிப்பான் என்று எதிர்பார்க்க, அவன் சிறு சிரிப்புடன் கடந்து விட்டான்.
அவள் ஒன்றை மறந்தாள். அது, அபிஜித்திற்கு ஜனனியின் மீது அளவில்லா பாசமிருந்தாலும் அதிகம் வெளிக்காட்ட மாட்டான் என்பதை. அவன் எப்போதும் போலதான் இருந்தான். ஆனால் அவளுக்குதான் பாப்பு என்னும் பெரிய கோட்டிற்கு முன் ஜனனி என்னும் கோடு சிறியதாக மாறிப்போனதாக தோன்றியது. இது யாரின் பிழை! பிழைக்கு தண்டனை யாருக்கு?
அந்தப் பிரமாண்டமான தங்கும் விடுதியில் ஐந்தாவது தளத்தின் பால்கனியில் அமர்ந்திருந்த வட நாட்டு ஆடவன் தன் முன் பரப்பப்பட்டிருந்த உணவு வகைகளில் கவனம் இல்லாமல் வான வெளியை வெறித்துக் கொண்டிருந்தான்.
அவன் ஷௌரியா. அழகு, அந்தஸ்து, கம்பீரம் அதனால் உண்டான பெரும் அகங்காரம் கொண்ட டெல்லியின் தொழிலதிபன்.
பொறுமைக்கும் அவனுக்கும் வானுக்கும் மண்ணுக்கும் உள்ள தூரம். ஆனால் இருவரிடத்தில் மட்டும் கைப்பொம்மை அவன். அதில்தான் அவனின் விருப்பமும் கூட. இங்கு வந்து இத்தனை நாட்கள் ஆகியும் அவன் டாலியை பார்க்க முடியவில்லை என்று வருந்தினாலும், அவளின் பத்திரம் உறுதியானதால் சற்று மன நிம்மதியாகவும் இருந்தான்.
அவள் டெல்லியை விட்டு நீங்கிய அடுத்த நாள்தான் இவனுக்கு செய்தி கிடைத்தது. உடனே வெளிநாட்டில் இருந்தவன் திரும்பிவிட, அவனால் என்ன முயன்றும் இவளைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.
இன்னும் சற்றுப் பொருத்திருந்தால் தானும் உடன் வந்திருப்பேனே! அதற்குள் என்ன அவசரம்? என அவளைக் கடிய நினைத்தாலும் அவள்தான் இவனின் செல்லமாயிற்றே! அதனால் கோபமும் தவிப்பாகத்தான் மாறியது.
நான்கு நாட்கள் அவள் அழைப்பாள் என்று பொறுத்துப் பார்த்தவன், அவள் அழைக்கவில்லை என்றதும் அத்தனை வேலைகளையும் விட்டுவிட்டு இவளைத் தேடி வந்திருந்தான்.
“நான் வந்துட்டேன்டா டாலி… ஆனா உனக்கு என்னை அடையாளம் தெரியுமா?” என மனதோடு மருகிக் கொண்டிருந்தான். அவளின் விபத்து அதனால் உண்டான பாதிப்பு அனைத்தையும் ஒரு டிடெக்டிவ் அமைப்பின் மூலம் அறிந்திருந்தான். தமிழ் அவனுக்கு அத்துபடி. கற்றுக்கொண்டான் அவளுக்காக. அப்போது அவனது அலைபேசி அதிர்ந்தது.
யாரென்று பார்த்தவன், அதை காதில் பொறுத்தவும், “சார்..சாரி சார் நாளைக்கு அப்பாய்ன்ட்மெண்ட் கிடைக்கல…அவருக்கு டைட் ஷெட்யூலாம் அதனால அடுத்த நாள் மாத்தி கொடுத்திருக்காங்க” என்னும் குரல் பயந்த லயத்தில் ஒலித்தது.
கோபப்படுவான் என்று எதிர்பார்க்க அவன், “சரி” என்றதோடு முடித்துவிட்டான்.
இவனின் இந்த பொறுமை எதிரில் இருந்தவனுக்கு ஆச்சர்யமாய் இருந்தது. “எப்படியோ நமக்கு திட்டு விழல” என்ற ஆசுவாசத்துடன் அவனும் போனை அணைத்தான்.
“அபிஜித் நாம சந்திக்க வேண்டிய நாள் தள்ளிப் போய்ட்டே இருக்கு. நாம சந்திக்கும் போது காலம் நமக்கு என்ன தர காத்திருக்கிறதோ? எதிர்கொள்ள தயாராக இரு” என்று மனதோடு எண்ணிக் கொண்டான்.
அதோடு வேறொரு எண்ணுக்கு போன் செய்து இங்கு நடந்தவற்றை கூறி தான் வர இன்னும் இரு நாளாகும் எனக் கூற, மறுமொழி என்ன வந்ததோ, சிரிப்புடன் “வா..வா நானும் தவிச்சுபோய்தான் இருக்கேன். ரொம்ப நாளாச்சு ஸ்கூலிங் நடந்து. மறந்திருந்தா ஞாபகபடுத்திக்க, இல்லனா பனிஷ்மெண்ட் சிவியரா இருக்கும்…”என பேச்சை வளர்த்துக் கொண்டே சென்றான். பேச்சு முடிந்து போனை அணைக்கும் போது முகம் முழுதும் சிரிப்பு தொற்றிக் கொண்டது அவனுக்கு.
பாப்புவுக்கும் இவனுக்கும் என்ன சம்மந்தம்? போனில் பேசியது யார்? ஷௌரியா அபிஜித்தை சந்திக்கும் நேருக்கு நேர் சந்திக்கும் போது என்ன நடக்கும்?