mazhai-23

mazhai-23

மழை – 23

கார் வரும் ஓசைக் கேட்டதும் அணைத்திருந்த மதியை விட்டு விலகிய அரசன் அவளை இருகைகளாலும் குழந்தைப் போல் ஏந்திக்கொண்டே தங்களது காரின் பின்சீட்டில் கிடத்த பயந்துபோனார் அழகேசன்.

அவரை, “சாதாரண மயக்கம்தான் மாமா… வீட்டிற்கு போனால் சரியாகிவிடும்” என்று சமாதானப்படுத்தி கீதாம்மாவிடம் மதி கிடைத்த விடயத்தைத் தெரியப்படுத்தச் சொன்னான்.

பின் அவர்கள் வாணிமாபுரம் அரண்மனை அடைய, கீதா ‘தன் பொண்ணிற்க்கு மட்டும் எங்க இருந்துதான் பிரச்சனை வருதோ?’ என்ற ஆதங்கத்தோடு காத்திருந்தவர் பாய்ந்துசென்று மதியை ஆராய்ந்தார். 

அப்போது பார்த்து மீனாம்பிகை மதியைப் பார்த்துவிட அழகேசனின் தந்தை வீட்டிற்கு அதாவது இவர்களின் சம்பந்தி வீட்டிற்கு சென்றிருப்பதாக சொல்லப்பட்ட பேத்தி இப்படி வரவும் அவரும் பதறித்தான் போனார்.    

மகளுக்கு பெரிதாக எதுவும் இல்லாமல் இருப்பதை பார்த்து ஆசுவாசம் அடைந்தாலும் அரைகுறை மயக்கத்தில் இருப்பவளைக் கண்டு கைத்தாங்கலாய் அழைத்துச் சென்று கீழிருக்கும் அறையில் நுழைந்து அங்கிருந்த தண்ணீரை எடுத்து முகத்தில் தெளிக்க அதற்குள் அழகேசனும் வந்து மதியின் தலையைக் கோதிக்கொடுத்தார்.

“மதி… மதி கண்ணைத் தொறம்மா” என்றவாறு கீதா எழுப்ப கண்ணைச் சுருக்கியவள் நெற்றியில் இருந்த தந்தையின் கையைப் பற்றி கடினப்பட்டு எழுந்து தலையைப் பிடித்தவாறு அமர்ந்தாள்.

“அம்மா… தலை வலிக்குதும்மா முடியல” என்று வலியோடு கூற, “காபி எடுத்துட்டு வரேன்டி. சூடா குடி சரி ஆகிடும்” என்றவர் அருகில் இருந்த கணவரிடம் பார்த்துக்கொள்ளுமாறு கூறிச்செல்ல

வெளியே விக்னேஷ்வரன் தாத்தாவிடம் பேசும் சத்தம் அழகேசனுக்கு கேட்டது. “நீ படுத்துக்கோ மதி நான் விக்னேஷ்கிட்ட பேசிட்டு வரேன்” என்றுவிட்டு அவரும் வெளியேறினார்.

தந்தை சென்றதும் சிறிது நேரம் அவ்வாறே அமர்ந்திருந்தவள் பின் படுக்கையில் சாயப்போக அரசனின் கரம் அவளைச் சாயவிடாமல் பிடித்தது. அரசனை உணர்ந்தாலும் கண்ணைத் திறந்து பார்க்காமலே தாய்தான் காபி கொடுத்தனுப்பியிருப்பார் என்றெண்ணி வாங்கப்போக அவனே தம்ளரை வாயில் வைத்தான்.

சூடாக ஆனால் என்னவோ ஒட்டாத ருசியில் பானம் இறங்க அதைத் தள்ளி விடப்போனாள். சீதா காபி போடுகையில் இவன் அதைத் தடுத்து சில இலைதழைகளைக் கொடுத்து சீரகம் சுக்கு சேர்த்து காபிக்கு பதிலாக இதைச் செய்ய வைத்தது தெரியாதே! 

உண்மை என்னவென்று அறிந்து மீனாம்பிகை தன்னிடம் மறைத்ததற்காக கணவனிடம் காட்ட முடியாத கோபத்தை மகளிடம் காட்ட அவரிடம் சிக்கிக்கொண்டிருந்த கீதாம்மாவிடம் தானே கொண்டு போய்க் கொடுப்பதாகக் கூறி வந்துவிட்டான். 

அவள் குடிக்கமாட்டாள் என்று தெரிந்தே இருந்ததால் அவள் தட்டியதும் ஜாக்கிரதையாக அதனைக் காப்பாற்றியவன் அவளின் இருகைகளையும் தன் ஒரே கையால் பிடித்து வாயில் வலுக்கட்டயமாக ஊற்றிய பின்பேவிட்டான்.

இருவருக்கும் தங்களின் முதல் சந்திப்பு நினைவுக்கு வந்தது. அது மதுவிற்கு கடுப்பைக் கிளப்ப அரசனுக்கோ அழகான அளவான புன்னகையைப் பரிசளித்தது. அன்றுப்போலவே இன்றும் கத்த ஆரம்பித்தாள்.

“எப்போ பார்த்தாலும் இலையும் சாரும் பிழிஞ்சி என் வாயில ஊத்துறதையே பொழப்பா வச்சிருப்பீங்களா? அதுவும் இனிப்பா இல்ல ஒரு டேஸ்ட்டும் இல்லாட்டாலும் பரவால்ல கசப்பா வாந்தி வர மாதிரியே தரது. கொஞ்சம் கூட மனட்சாட்சியே இல்ல” என்று முகத்தை பார்த்து திட்ட, 

அவனோ மாறாமல் அதே போசில் நிற்க இவளுக்குதான் ‘என்னாச்சு மாமாக்கு எருமைமாட்டு மேல மழை பொழிஞ்ச கணக்கா ஈஈன்னு நிற்கிறாரு? இது சரியில்லையே’ என்று யோசனை ஆகியது. 

அவளிற்கு தான் கடத்தப்பட்டது கூட நியாபகத்திற்கு வரவில்லை எனும்போது அதன் பிறகு நடந்ததெல்லாம் எவ்வாறு நினைவுக்கு வரும்.

“படுத்துக்கோ மதி பத்து நிமிசத்துல சரியாகிடும்” என்று கூறிக்கொண்டிருக்கையில் மீனாம்பிகை பாட்டி பேத்தியைப் பார்க்க வர அவனும் இவள் பருகிய தம்ளரோடு வெளியேறினான்.

“அவனைக் கொலை பண்ணுற வெறி இருக்கு ஆனா எனக்கு என் குடும்பம் முக்கியம். அந்த ஒரு காரணத்துக்காக நான் ஒதுங்கிக்குறேன் விக்னேஷ். இதுக்கு மேல அவனுக்கு தண்டனை குடுத்து என்ன ஆக போகுது? கடவுள்ன்னு ஒருத்தர் இருக்காருன்னா அவரே அவனுக்கு தண்டனை குடுக்கட்டும்” என்று விரக்தி கோபம் ஆற்றாமை எல்லாம் கலந்து இன்னது என்றறியா குரலில் அழகேசன் பேச 

அரசனுக்கும் அவர் கூறியது சரியென்றேபட்டது. அதுவும் இன்று மதிக்கு ஏதேனும் ஆகியிருந்தால் என்ற நினைப்பே கிலியை ஏற்படுத்த அந்த கம்பீர ஆண்மகன் காதலுக்காக பாசத்துக்காக தர்மத்தை வெல்ல வைக்கும் முயற்சியை விட்டொழித்தான்.

அரசன் அங்கு வந்ததைப்பார்த்து விக்னேஷ்வரன் அவனிடம், “அரசா பாக்டரில இருக்குற மரங்கள் எல்லாம் கடத்தல் மரங்கள் இல்லை நானே விளைவித்த வேளாண்காட்டில் இருந்து வெட்டிய மரங்கள்தான். அதற்கு பதிலாய் ஒரு லட்சம் மரக்கன்று அதே இடத்துல நடுற வேலை நடக்குதுன்னு அந்த சுதர்சன் பேட்டி குடுத்துட்டு இருக்கான்.” 

“பத்திரம் போனாலும் இதை வச்சி அவனை லாக் பண்ணலாம்தான். நம்மகிட்ட வீடியோ இருக்கு. ஆனா அழகு அது போலின்னு சொல்ல எவ்ளோ நேரம் ஆகும் வேணாம் விட்றலாம்ன்னு சொல்றான் நீ என்ன சொல்ற?” என்று கேட்டார்.

“மாமா சொன்னது தான் ஐயா. எனக்கும் என் குடும்பம் முக்கியம்” என்று ஒற்றை வாக்கியத்தில் தன் மனதைக் கூறி தலைக்குனிந்தான். தன் தந்தையின் நியாபகம் வந்ததோ?

“நான் உனக்கு ஐயா இல்ல அரசா, அழகு உனக்கு எப்படியோ அதே மாதிரிதான் நானும். மாமான்னே கூப்பிடு. ஆனாலும் உன்கிட்ட இருந்து இதை எதிர்பார்க்கலை அரசா. எனிவே அது உன் விருப்பம்தான்” என்று முடிக்கும் முன் 

“அப்படியெல்லாம் விடமுடியாது அங்கிள்” என்ற மதியின் குரல் அந்த நடுக்கூட சுவரில் பட்டு எதிரொலித்தது.

பாட்டி தன்னிடம் விசாரிக்க வந்ததும்தான் தன்னைக் கடத்தியதே நினைவு வந்தது. அதன் பின்னே மசமசவென்று தெளிவில்லாமல் ஏதேதோ தோன்றினாலும் அதனை ஒதுக்கியவள் “பாட்டி வாங்க வெளிய போகலாம்” என்றுவர தந்தை மாமனின் உரையாடல் காதில் விழுந்தது. அவர்களின் பாசம் புரிந்தாலும் இந்த மாற்றம் அவளுக்குத் தலையில் அடிக்கத் தோன்றியது.

அதனால் இடையில் புகுந்து பேச, கீதா பொங்கிவிட்டார். “மதி நீ இதுல தலையிடாத நடந்ததை தெரியாம பேசக்கூடாது. போ போய் படுத்து ரெஸ்ட் எடு” என்று விரட்ட அவளா அடங்குவாள்?

“நீ சும்மா இரும்மா. எப்போப் பாரு பயந்துட்டே மத்தவங்களையும் பயமுடுத்துறது. உன் பொண்ணை கடத்திருக்காங்க அதை பத்தி கவலையே இல்லையா?” என்று வினவி அவர் பதிலுக்கு பேசும் முன் தந்தையிடம் திரும்பியவள்  

“ஏன்ப்பா ஒருத்தன் தன் செல்ல பொண்ண கடத்தி மிரட்டிட்டானே அப்படின்னு இந்த சினிமால காமிக்குற மாதிரி கைல இருந்து நரம்பெல்லாம் அப்படியே கோவத்துல கைல இருந்து தலைக்கு போறது வெளிய தெரிய வேணாம். சரி அதுதான் இல்லைன்னா அவனை சும்மா விடமாட்டேன்னு பழிவாங்க போக வேண்டாம். இப்படியா சின்னப்புள்ளத்தனமா நான் போறேன் ஒதுங்குறேன்னு உளர்றது” எனவும் விக்னேஷ்வரனுக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது. இருக்கும் சூழ்நிலை கருதி அடக்கினார்.

மற்றவர்கள் அவளை முறைத்தனர் என்றால் அரசனோ அடங்க மாட்டிக்குறாளே என்றுதான் பார்த்தான்.

“நீயும் ஒரு அம்மா ஆகுனா என் உணர்வு உனக்கு புரியும்” என்று அழகேசன் கலங்கிய குரலில் பேச, “ஐயோ அப்பா நான் உங்களை தப்பாச் சொல்லல பட் எவ்ளோ தைரியம் இருந்தா என்னையே கடத்திருப்பான்னு ஒரு கோவம்” எனவும் 

கீதா, “அதென்ன என்னையே… நீ என்ன பெரிய இவளாடி… ஒன்னும் தெரியாது ஆனா வாய் மட்டும் எட்டூருக்கு கிழியும். கடத்துனவன் மயக்கத்துல வச்சிருந்ததால ஒன்னும் தெரியாம தூங்கி எந்திச்சி வந்த மாதிரி பேசுற. வாய்லயே நாலு மிதி மிதிச்சிருந்தா இப்படி பேச யோசிப்ப” என்று பொரிந்தார்.

இதற்கு தான் என்ன பதில் சொல்வது என்று யோசிக்க அதன் பின்தான் தான் எதற்காக வெளியே சென்றோம் என்ற காரியம் நினைவு வந்தது.

“அச்சோ” என்று தலையில் அடித்தவள். “அப்பா நான் உங்களுக்கு போன் பண்ணுனேன் நீங்க ஏன் எடுக்கவே இல்லை? அதனால நான் கிளம்பி வெளியே வந்தேன். கார் வெளிய இருக்கேன்னு போய் பார்த்தா தூக்கிட்டான்” பேசிக்கொண்டே வாசலை நோக்கிப் போக, “மதி இப்போ எங்க போற?” என்றவாறு அரசன் எழுந்தான்.

“மாமா என்னோட ஹேண்ட் பேக் கடத்தும்போது கீழ போட்டுட்டேன் அது” எனும் போதே, ஒரு ஓரமாக நடுக்கூடத்தில் கீழே இருந்த தன் கைப்பையை பார்த்துவிட்டாள். மதி கடத்தியதாக சொல்லி டிரைவர் தாத்தா கொண்டு வந்து கொடுத்தும் கீதா அதை அங்கேயே போட்டு அழகேசனுக்கு கால் செய்திருந்தார்.

அதனை திறந்து, “டிங் டாங் டொயிங்” என்று ராகம் எழுப்பியவாறு கற்றை காகிதங்களை விரித்து காண்பிக்க அனைவரின் விழியும் விரிந்து முகமும் அதிர்ச்சி ஆச்சரியம் என்று கலவையான உணர்வை வெளிப்படுத்தியது என்றால் அழகேசனின் முகம் மட்டும் கேள்வியைச் சுமந்திருந்தது.

பின்னே எரித்ததாக சொல்லப்பட்ட பத்திரம் மீண்டும் அவள் கையில் இருந்தால்!

“மதி இது நாம செஞ்ச போலி பத்திரம் தானே” என்று அழகேசன் கேட்க, இப்போது குழப்பத்துடன் அனைவரும் தந்தை மகளை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர். என்ன பேசுறாங்க என்பது போல்.

“இல்லைப்பா இதுதான் ஒரிஜினல். நீங்க கொண்டு போனதுதான் போலி” என்று குதூகலத்துடன் பதில் கூற “என்ன” என்று அழகேசன் எழுந்தே விட்டார். அவர் முகம் சட்டென்று பிரகாசித்தது.

“எஸ்ப்பா… அதை சொல்லத்தான் கூப்பிட்டேன்” என கீதா, “என்ன நடக்குது இங்க? எதுக்கு போலி பத்திரம் அப்பாவும் மகளும் செஞ்சிருக்கீங்க? இதுதான் சென்னைல குசு குசுன்னு பேசுனதா இருக்கும். மூஞ்சே திருட்டுத்தனம் பண்ணுதேன்னு நினைச்சேன். ஏங்க நீங்களும் இவளுக்கு உடந்தையா?” என்று கேள்வியால் துளைத்தெடுத்தார்.

“கீதா அது திருவிழாக்கு முன்னாடி நாங்க முடிவு பண்ணுன பிளான். போலிப் பத்திரத்தை காமிச்சி அவன் வாயாலேயே சக்திவேலை கொன்னது அவன்தான் உண்மை சொல்ல வைக்கணும். கண்டிப்பா பத்திரத்தை எப்படியாவது பிடுங்கிருவான் அப்போ நம்மக்கிட்ட ஒரிஜினல் இருக்கணும்ன்னு நினைச்சி இதெல்லாம் பண்ணுனோம்”

“ஆமா… இந்த ஐடியா நான் சொன்னது ஆனா அப்பா விக்னேஷ் அங்கிள் கிட்ட ஹெல்ப் கேட்பாருன்னு நினைக்கல. பிளான் மாறுனதும் அப்பா போலிப் பத்திரம் வேணாம்ன்னு சொல்லிட்டாரு. இந்த இடத்துல நீங்க என்னை மன்னிக்கணும் அங்கிள். அப்பா நீங்களும்தான். நான் அங்கிளை முதல்ல முழுசா நம்பலை. கொஞ்சம் சந்தேகப்பட்டேன் சோ போலிப் பத்திரத்தை வெளிய விட்டுட்டு ஒரிஜினல் நானே பாதுகாப்பா வச்சிருந்தேன். அப்புறம் இன்னைக்கு நம்பிக்கை வந்து ஒரிஜினல் எடுத்து கொடுக்க நினைச்சேன் பட்… வந்து” இந்த இடத்தில் தடுமாறினாள்.

போலி வெளியே இருக்க உண்மைப் பத்திரம் அவளின் பீரோவில் இருந்தது. ஒரிஜினல் கொடுக்க முடிவெடுத்த அன்று அரசனிடம் காதலைச் சொல்லியிருக்க அதை நினைத்து இதை மறந்துவிட்டாள். அதன் பின் இன்று அரசனின் பதிலைப் பற்றிய சிந்தனையில் தாத்தாவிடம் கொடுக்க அவர் அரசனிடம் கொடுத்துவிடுமாறு கூறவும்தான் மீண்டும் நியாபகம் வந்தது. 

அவளிற்கு அரசனின் பதில் உடனடியாக தெரியவேண்டி இருந்ததால் உள்ளே போய் ஒரிஜினல் எடுக்க வேண்டும் என்று நினைத்தாலும் பதிலை தெரிந்துவிடும் ஆவலில் இருந்தவள். அரசனின் அறைக்குள் புகுந்திருந்தாள். 

அவன் கேள்வியாக பார்க்கவும் பேச்சை ஆரம்பிக்கும் விதத்திற்கு பத்திரத்தை கொடுத்து பதிலைக் கேட்க பேச்சு எங்கெங்கோ முற்றி இதழ் அணைப்பில் முடிய பாத்திரமாவது ஒன்றாவது என்று துலக்கி வைத்தது போல் ஆனது அவளது சிந்தை.

அழுது ஓய்ந்த ஒழுங்காக யோசித்த பின்பே ஒரிஜினல் நியாபகம் மீண்டும் வர அடித்துப்பிடித்து தந்தைக்குப் போன் போட, அவர் எடுக்கவில்லை என்றதும் கிளம்பியிருந்தாள். 

இதைச் சொன்னால் அடி இடி மாதிரி விழாதா? யாரிடம் இருந்து விழும்? எங்கே விழும்? முகத்திலா? முதுகிலா? என்று தெரியாததால் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டி, “ஏதோ டென்ஷன்ல மறந்துட்டேன். இப்போ அதனால என்ன கெட்டுப்போச்சு. நல்லது தானே நடந்திருக்கு?” என்றாள் வான்மதி. மற்றவர்களிடம் சொல்கிறாளா இல்லை தனக்கே சொல்லிக்கொள்கிறாளா என்பது அவளுக்கே வெளிச்சம்.

அழகேசன் விக்னேஷ்வரன் என்ன நினைப்பானோ என்ற கவலையில் மதியைத் திட்ட வாய் திறக்க அதற்கு அவசியம் இல்லை என்பது போல் பாராட்டித் தள்ளி விட்டார் விக்னேஷ்வரன். 

“நியாயப்படி எனக்கு கோபம்தான் வரணும் ஆனா மதியோட முன்னெச்சரிக்கையால கிடைத்திருக்கிற நன்மை ரொம்ப பெருசு. மதி நீ போலீஸ் ஆகுனா எங்கயோ போயிருவ” என்று அவளைத் தவறாய் நினைக்காமல் புகழ்ந்தார்.

‘ம்கும்… இவ பண்ற சேட்டைக்கு போலீஸ் வேலை? விளங்கிரும்’ என்று மனதினுள் புலம்பியது வேறு யாரும் இல்லைங்க நம்ம மதியைப் பெற்றத் தாயேதான். அவருக்கு பயம் எங்கே மீண்டும் கோர்ட் கேஸ் என்று கிளம்பிவிடுவார்களோ என்று. அதற்கேற்றார்ப் போல் அரசனின் மனம் நொடியில் மாறியது.

‘தந்தை பாதுகாத்த பத்திரம், அழிந்ததாக சொல்லப்பட்ட பத்திரம் மீண்டும் கைக்கு வருகிறதென்றால் சக்திவேலின் ஆசையும் ஆசிர்வாதமும் அதில் இருக்கிறது என்று தானே அர்த்தம்?’ என்றெண்ணினான் நிலவரசன்.

“மாமா, கீதாம்மா மதி எல்லாரையும் கூட்டிட்டு நீங்க ஊருக்கு கிளம்புங்க. இங்க தாத்தா பாட்டியை நான் பார்த்துக்கிறேன். ஒருமுறை சறுக்கிட்டோம் இந்த முறை ஜெயிக்கணும். என்ன பண்ணனும்ன்னு சொல்லிட்டா அதை நான் முடிச்சிருவேன். கூடவே உங்க பாதுகாப்பையும் கவனிச்சிக்கோங்க” என்று தன் முடிவை கூற இப்போது அழகேசனும் யோசிக்க ஆரம்பித்தார்.

பெண்கள்தான் மூவரும் பதறினார். மீனாம்பிகை, கீதா இருவரும் பிரச்சனை வேண்டாம் என்று தடுக்க மதிக்கோ தன்னை சென்னைக்குப் போகச் சொல்லிட்டானே இங்கே என்ன நடக்குமோ என்ற பதற்றம். (நீ தானம்மா காலையில கேட்ட? காலேஜ் போகணும்ன்னு)

அரசன் சொன்னபடி இவர்கள் ஊருக்கு சென்ற பிறகு மீண்டும் முயற்சி செய்து பார்ப்பது என்று முடிவாகியது. மதிக்கு ஓய்வு கொடுக்க வேண்டி நாளை சென்னை செல்வதாக ஏற்பாடு ஆகியிருக்க அது வாரக்கடைசி என்பதால் திங்கட்கிழமை வீடியோவை மீடியாவில் வெளியிட்டு அன்றே சுதர்சனிடம் மோதுவது என்று திட்டம்.

இரவு அனைவரும் உணவருந்துகையில் மதியின் பார்வை நொடிக்கும் குறைவான நேரத்தில் அருகில் அமர்ந்திருந்த அரசனை பலமுறை தீண்ட, அதில் அவனால் இயல்பாக உண்ண முடியாமல் போகவே உண்பதை விட்டு மதியை என்னவென்று அவளைப்போலவே புருவத்தை உயர்த்திக்  கேட்டான்.

அதற்காகவே காத்திருந்ததுபோல் மற்றவரின் கவனத்தை கவராமல் நெருங்கி அமர்ந்தவள் கிசுகிசுப்பான குரலில், “மாமா… என்ன முடிவு பண்ணிருக்கீங்க. என்னை ஊருக்கு அனுப்பி பதில் சொல்லாம தப்பிக்கலாம்ன்னு பார்க்காதீங்க” என்றாள்.

அரசனுக்கு உள்ளுக்குள் சிறிது ஏமாற்றமாய்ப் போய்விட்டது. தன் செயல்கள் அவளுக்கு காதலை உணர்த்தவில்லையா என்று. 

பதில் கூறாமல் உண்டுவிட்டு செல்ல, ‘ஒஹ்… நாங்க வாய்விட்டு காதலைச் சொல்லுவோம் தப்பு தப்பு கரடியாய்க் கத்துவோம் பதில் சொல்ல மாட்டாரு. ஆனா இவுங்க வந்து ஒரு ஹக் பண்ணுனதும் அப்படியே புரிஞ்சிக்கனுமோ? மூஞ்சி போகுது பாரு அஷ்டகோணலா… இந்தா வாரேன்’ என்று கங்கணம் கட்டிப் பிறர் கவனத்தைக் கவராமல் மாடியேறினாள். 

ஆம். அவளிற்கு நடந்ததெல்லாம் யோசித்து பார்க்கையில் எப்போதோ நினைவிற்கு வந்துவிட்டது. அரசனின் மாற்றம் ஜிவ்வென்று வானத்தில் பறக்கும் உணர்வை அள்ளித்தர ஆனால் அது மதிக்குப் போதாதே. 

தன்னைப்போல் அவனும் வாய்விட்டுக் கூற வேண்டும் என்று எதிர்பார்த்துச் சீண்டினால், அதில் முகம்வாடிச் செல்பவனை என்னத்தான் செய்ய?

பால்கனியில் வழக்கம்போல் படுத்து இருண்ட வானத்தை வெறித்துக்கொண்டிருந்தவனின் அருகில் மதி வந்தமர, அதை அவன் உணர்ந்தாலும் திரும்பாமல், தன்னை நெருங்கி கண்சிமிட்டாமல் நோக்கும் காரிகையை விடுத்து தொலைவில் இருந்து கண்சிமிட்டிய தாரகையைப் பார்த்திருந்தான்.

அந்த அமைதியைக் கிழித்துக்கொண்டு, “ஏன் மாமா காதலை வெளிய சொல்றது அவ்ளோ பெரிய கௌரவக் குறைச்சலா இல்லை இவளுக்கு எதுக்கு சொல்லணும் எப்படியும் என் பின்னாடித்தான் வருவாங்குற அலட்சியமா?” என்று மனதே கேட்காமல் ஆதங்கத்தில் கேட்க, “வாய மூடு மதி” என்ற அதட்டலுடன் எழுந்திருந்தான் நிலவரசன்.

மழை வரும்…

அரசனே உன்னை அரசாளவே 

விண்ணில் இருந்து மண்ணிற்கு 

மழையாக நான் வரவா?

 

   

 

 

 

      

 

 

error: Content is protected !!