mazhai-25

mazhai-25

மழை – 25

அன்று கல்லூரியின் கடைசி நாள். அந்நாளுக்கே உரிய ஆர்ப்பாட்டமும் சோகமும் சரி சகவீதமாக மாணவர்களின் முகத்தில் படர்ந்திருக்க பலர் தங்களின் கூடுதேடிச் செல்ல ஆரம்பித்தச் சென்னையின் பொன்மாலைப் பொழுது.

அக்கூட்டத்தில் இருந்துவந்த மதியின் கண்கள் தன்னை அழைத்துச் செல்ல வருவதாகக் கூறிய தந்தையின் காரைக் கல்லூரியின் பார்க்கிங் பகுதியில் தேடியது. அதைக் கண்டபின் அதனை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

ஆம். இன்றோடு வாணிமாபுரத்தில் இருந்து வந்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகி கல்லூரியும் முடிந்துவிட்டது. அரசன் மதியின் காதலும் மெல்ல மெல்ல வளர்ந்தது என்று கூற ஆசைதான் ஆனால் கிடுகிடுவென அசுர வேகத்தில் வளர்ந்து ஆலமரமென ஸ்திரமாகவும் ஆழமாகவும் இருக்கையில் எப்படி மெல்ல வளர்ந்தது என்று சொல்லமுடியும்?

வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியது செல்பேசியே! அன்று சல்லிக்காசிற்காகக் கூட அரசனால் மதிக்கப்படாதது இன்று விலைமதிப்பிலாததாய் உணரப்பட்டது காதலியின் பிரிவினால்.

ஆனால் கடந்த மூன்று நாளாக அரசனிடம் இருந்து அழைப்பு வரவும் இல்லை தான் அழைத்தாலும் எடுப்பதும் இல்லை என்பதால் அவனைக் கண்டாலே கடித்துக் குதறிவிடும் ஆவேசத்தில் சுத்திக்கொண்டிருக்கிறாள். 

‘ஊருக்கு வரவா என்றால் வேண்டாம் கேஸ் முடியுற வரை இங்க வராதன்னு சொல்றான் லூசுப்பையன். அது என்னைக்கு முடிஞ்சி நான் என்னைக்கு போறது? இன்னக்கி வீட்டுக்கு போய் பொட்டிய கட்டிற வேண்டியதுதான்’ என்று எண்ணிக்கொண்டே காரினுள் அமர, அதற்கு அவசியமில்லை என்பது போல் அவள் கடித்து குதற நினைத்தவன் காரினுள் அமர்ந்திருந்து வசீகரமாக புன்னகைத்தான்.

மதியின் கண்கள், இமை, புருவம் எல்லாம் மேலேறிப்போனது வியப்பில். அவன் வந்தது ஒரு காரணம் என்றால் டிரைவர் சீட்டில் ஒய்யாரமாய் சீட் பெல்ட் போட்டு அமர்ந்திருந்தது இன்னொரு காரணம்.

“டேய் அரசு மாமா… என்னடா நடக்குது இங்க? அடுத்த வாரம் தான கேஸ் இருக்கு வரேன்னு சொன்னீங்க?” என்று கேட்க அவனோ முறைத்தான். 

“எத்தனை தடவை சொல்றதுடி உனக்கு? ஒன்னு டேய் சொல்லி கூப்பிடு இல்லை மாமா சொல்லிக்கூப்பிடு ரெண்டையும் கலந்துகட்டி அடிக்காதன்னு?” என்றான்.

எல்லாம் போன் செய்த மாயம்! பேச்சும் வம்பும் சரளமாக வந்தது இவர்களுக்கு.

“ஒஹ்… ஆமாம்டா மாமா. சொன்னீங்கடா மாமா… இனிமேல் பாத்து பேசுறேன்டா அரசு மாமா” என்று வார்த்தைக்கு வார்த்தை டா, மாமாவை வேண்டுமென்றே கலந்தடிக்க 

“ம்கும்… இது சரி வராது. தப்புப் பண்ணிற வேண்டியதுதான்” என்றவாறு சீட் பெல்டை அவிழ்க்கப் போக, “ஹேய் மாமா… என்ன இது எப்போப் பார்த்தாலும் இதையே சொல்றீங்க?” என்று சிணுங்கினாள் மதி.

“வேற என்ன பண்றது அப்போத்தானே நீங்க அடங்கி வழிக்கு வரீங்க…” என

“ஆமா வராங்க வராங்க… நீங்க ஏன் போனே பண்ணல பண்ணுனாலும் எடுக்கல நான் இன்னைக்கி ஊருக்கு கிளம்ப நினைச்சேன் தெரியுமா? அப்புறம் எப்போ நீங்க காரோட்டப் பழகுனீங்க? என்கிட்ட ஏன் அதைச் சொல்லவே இல்ல. நீங்களேவா ஓட்டீட்டு வந்தீங்க? என் காலேஜ்க்கு வழி எப்படித் தெரியும்? ஊருக்கு வரேன்னு கூட சொல்லல” அவனைப் பார்த்த சந்தோசத்தில் கேள்விகள் பீறிட்டு எழுந்தது.

“இரும்மா இரு… மூச்சு விடு மூச்சு விடு அப்புறம் பேசு. ஷப்பா சாமி முடியல” காரை லாவகமாய் திருப்பியவாறு கிண்டல் அடித்தான்.

“மாமா… நீங்க ரொம்ப பேசுறீங்க” 

“அட அதை சொல்றது யாருன்னு பாருடா. அமைதியின் சிகரமா பேசுவது” 

“இன்னக்கி என்னமோ உங்க பேச்சுல முகத்துல பயங்கர குஷி தெரியுது. என்ன விஷயம்?” என்று மதி யூகித்து கேட்க 

“அதுவா… ஊருல அறுவடைன்னு சொன்னேன் இல்லையா? அதுல நல்ல விளைச்சல். நம்ம வீட்டுக்கு ஊருக்கு எல்லாம் குடுத்தது போக மீதி நல்ல விலைக்கு போயிருச்சி. லாபமே கிட்ட தட்ட நாற்பது லட்சம் தொடுது மதி” என்றான்.

ஆனால் சந்தோசப்பட வேண்டியவளோ, “எதுக்கு மாமா இப்படி திடீர்ன்னு முடிவை மாத்துனீங்க? விவசாயம் பண்றதைத் வேணாம்ன்னு சொல்லலை ஆனா காடு ஆக்கணும்ன்னு ஆசைப்பட்டு…” என்று வெகுநாள் கேட்க நினைத்ததை இப்போது இழுத்துக் கேட்க

“ஏன் இவ்ளோ தயக்கம் மதி. அதுவும் என்கிட்ட. யாரு காடு உருவாக்குறதை விட்டது அதெல்லாம் ஒரு பக்கம் நடந்துட்டுதான் இருக்கு. வாணிமாபுரம்ல மட்டும்தான் பயிர் செய்யுறது மத்த ஆறு ஊர்லயும் மரக்கன்று நட்டாச்சும்மா அதுக்கே ஏகப்பட்டது செலவாச்சு. இந்த உலகத்துல எல்லாமே எல்லாத்துக்குமே பணம் தேவைப்படுறப்போ அதையும் எப்படி சம்பாரிக்கிறதுன்னு தெரிஞ்சி வாழ்றது தப்பில்லைத்தானே” அரசன் கூறக்கூற மதியின் முகத்தில் தன் துணையை எண்ணிப் பெருமிதப் புன்னகை தோன்றியதுதான் ஆனால் அடுத்து அவன் கூறியதில் அது மறைந்து புருவம் சுருங்கியது.  

“அதுவும் கூட எனக்கு எதுவுமே தெரியலையோ அப்படிங்கற தாழ்வு மனப்பான்மையும் உன்னைக் காதலிச்சி கைப்பிடிக்குற தகுதி எனக்கு இல்லையோன்னு நினைச்சி தவிச்ச தவிப்பும் இப்போ சுத்தமா இல்லை. ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கேன்” மதியைப் பார்த்ததால் மதி மழுங்கியதோ இல்லை பேச்சு சுவாரசியத்திலோ தன் மனதின் அப்போதைய குழப்பத்தைச் சொல்லியிருந்தான்.

“இது எப்போ நடந்துச்சி?” என்னவோ போல் வந்த மதியின் குரலில் அவளைப் பார்த்தவன் அவளின் யோசனை படிந்த முகப்பாவனையில் தன் உளறலை உணர்ந்துக்கொண்டான்.

“அது… வாணிமாபுரம் வந்த புதுசுல மதி”

“இல்ல… இந்த தகுதி தராதாரம்லாம் எப்போ வந்துச்சி? நான் இல்ல எங்க வீட்டுல யாராவது உங்களைச் சொன்னோமா?” என 

“ஹேய்… நம்ம வீட்டுல யாராவது என்னைச் சொல்வாங்களா? நீ தேவையில்லாம யோசிக்காத நான் ஏன் இங்க வந்தேன் தெரியுமா? நம்ம…”     

“பேச்ச மாத்தாதீங்க… அப்போ நம்ம வீட்டுல யாரும் சொல்லலைன்னா வேற யாரு என்ன சொன்னா? எனக்கு தெரிஞ்சே ஆகணும். நீங்க தானா அப்படி நினைக்குற ஆளு இல்ல. ஏதோ இருக்கு” என்று விடாமல் தோண்டித்துருவ

அதற்கு மேல் மறைக்க வேண்டாம் என்று நினைத்தவன் ரூபிணியின் பேச்சினை மிகுந்த தயக்கத்தோடு எடுத்துரைத்தான். உள்ளுக்குள் நடுங்கியது ‘ஐயோ இவள் எந்த கோணத்துல புரிஞ்சி நம்மளைத் தாக்குவாளோ’ என்று. (ஹாஹா அக்மார்க் புருஷன் ஆகிட்டடா இப்போவே வாழ்த்துக்கள்)

நினைப்பைப் பொய் ஆக்காமல், “அப்போ அவளே மாதிரி நானும் இருப்பேன்னு நினைச்சிட்டு இதெல்லாம் பண்ணிட்டு இருக்கீங்க அப்படித்தானே”

இல்ல மதி…

“இல்லையா அப்புறம் எப்படி? நீங்க நல்லா வாழுறதைப் பார்த்து அவ திரும்ப வருவான்னு நினைச்சீங்களோ” வார்த்தை வரம்பு மீறத் தொடங்க 

“ரொம்ப நாள் கழிச்சி பாக்குறோம் சண்டை போட வேணாம்ன்னு நினைக்குறேன். எனக்கும் கோபம் வரும் மதி… எல்லா நேரமும் அடக்க முடியாது. வார்த்தை விடாத. உன்னை நல்லா வச்சிக்கணும்ன்னு நினைச்சி பண்ணுனதைப் பார்த்து சந்தோஷப்படலைன்னாலும் பரவால்ல கேவலப்படுத்தாத” முகம் இறுக பதிலுரைத்தவன் காரை நிறுத்தி உள்ளேச் சென்றுவிட்டான்.

எங்கே போகிறான் என்று பார்த்தால் வீட்டிற்கே வந்திருந்தான். உள்ளே சென்றதும் கீதா அரசனிடம் பேச்சுக்கொடுத்து பதில் இல்லாமல் போகவே இவளைப் பிடித்துக்கொண்டார்.

“மதி என்னடி உம்முன்னு வர… நானும் சந்தோசத்துல தலை காலு புரியாம தலைகீழ நடந்து வருவேன்னு எதிர்பார்த்தேனே” என 

“அடப் போம்மா… அது ஒன்னு தான் குறைச்சல். அவங்க அடுத்த வாரம் நடக்குற வழக்குக்காக இன்னைக்கே வந்திருப்பாங்க” என்றவாறு அரசனை முறைத்தாள்.

“என்னடி இப்படிச் சொல்ற? அது ஒரு பக்கம் நடக்கட்டும். உனக்காக அவன் அங்கிருந்து வந்ததும் வராததுமா நான் தான் இந்த விசயத்தை மதிக்கிட்ட சொல்லுவேன்னு உங்க காலேஜ்க்கு வழி சொல்லித்தர சொல்லி உங்க அப்பாவையும் கூட்டிட்டுப்போய் அப்புறம் அவரைக் கடைல விட்டுட்டு சந்தோசமாப் போனான். பார்த்தா ரெண்டு பேர் மூஞ்சும் சரி இல்லையே” என 

“என்னம்மா நீயே சொல்லு” ஒரு வித எரிச்சலில் சோபாவில் சாய்ந்தாள் மதி. 

“அரசன் கல்யாண பேச்சை வீட்டுல அப்பா தொடங்கிட்டாங்க போல… இவன் கட்டுனா உன்னைத்தான் கட்டுவேன்னு சொல்லி சம்மதம் வாங்கிட்டு வந்திருக்கான். நீ என்னடான்னா இப்படி சலிக்குற” என்றார் கீதா.

மதியின் மனதில் சிறிது குற்றஉணர்ச்சி உண்டாக தலை தானாக கவிழ்ந்தது. அரசனோ கீதாவைப் பார்த்து முழி பிதுங்கினான் ஏனெனில் தாத்தா கேட்டதே மதியைத் திருமணம் செய்ய சம்மதமா என்றுதான். அப்படியிருக்க அவனின் கீதாம்மா இப்படிப் புளுகினால் அவனும்தான் என்ன செய்வான்.

மறுத்து பேசப்போனவனைக் கண்ணாலே மிரட்டி வாயில் விரலைவைத்து அமைதியாய் இருக்கும் படிச் சொன்னவர் “இன்னும் மூணு மாசத்துல கல்யாணம் பண்ணலாம்ன்னு இருக்கோம் அதுக்கப்புறம் நீயாச்சு அவனாச்சி” என்றுவிட்டுச் சென்றார். அவருக்குத் தெரியும் மகள்தான் பிரச்சனைச் செய்திருப்பாள் என்று இனி சரி ஆகிவிடுவாள் என்றும்.

தாய் சென்றதும் மெதுவாக அரசனின் அருகில் வந்தமர்ந்து தோளில் சாய அரசனுக்கும் விலகிச் செல்ல மனதில்லை. அசையாமல் அவளைத் தாங்கி அமர்ந்திருந்தான்.

“மாமா… சாரி. இனிமே இப்படி பேச மாட்டேன். என் மேல கோபமா” என்று கெஞ்சிக் கொஞ்ச அதற்கு மேல் அரசனும் என்னத்தை இழுத்துப் பிடிப்பானாம்? பதிலுக்கு செல்லச் சமாதானங்களுடன் அவர்களின் ஊடல் முடிவிற்கு வந்தேவிட்டது. (காதலில் இதெல்லாம் சகஜமப்பா)

அதேநேரம் ஏற்காட்டில் தன் வக்கீலிடம் கத்திக்கொண்டிருந்தார் சுதர்சன்.

“அப்போ பாக்டரி கைவிட்டுப் போயிரும்ன்னு சொல்றியா? வேற எதாவது பண்ண முடியுமான்னு பாருய்யா… பல மாசமா சீல் வச்சி எத்தனை கோடி நஷ்டம் தெரியுமா?”

“சார் நான் சொன்னதை ஒன்னுக்கூட நீங்க உருப்படியா பண்ணலை அப்படி இருக்கும்போது என்னால மட்டும் என்ன பண்ண முடியும்ன்னு நினைக்குறீங்க?” என்றார் எரிச்சலில் பின்னே கிட்டதட்ட இருபது வருடமாக ஒரு தோல்வியையும் சந்திக்காதவர் போயும் போயும் இப்போதா மக்களின் பார்வை அதிகம் இருக்கும் கேசில் தோற்பது?

சுதர்சன் வேளாண்காடுகளில் விளைவித்த மரம் என்றும் அனுமதி பெற்றே மரம் கொண்டு வரப்பட்டது என்றும் பேட்டி கொடுத்த அடுத்த நாளே மீடியாவில் அரசன் எடுத்த வீடியோ வெளியாக, அதில் அவர்கள் பேசியதும் துல்லியமாக பதிவாகி இருந்ததால் அதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்து ஏற்காடு செக்போஸ்ட்டில் உதவிய காவலாளியை வேலையை விட்டுத் தூக்கியது காவல்துறை.

கூடவே சுதர்சனையும் கைது என்று மக்களிடம் காண்பித்து ராஜஉபசாரணையோடு ஜாமீனில் அனுப்பி வைத்தது காவல்துறை.

இதற்கிடையில் தொழிற்சாலை வில்லங்கமான இடத்தில் உள்ளது என்று விக்னேஷ்வரன் சிவில் கோர்ட்டில் புகார்ப் பதிவு செய்ய அதுவும் வெளியேக் கசிந்தது. 

பின் என்ன? வழக்கு மீடியாவின் கையில் கிடைத்து தோண்டித்துருவப்பட்டது. 

இடத்திற்கு சொந்தக்காரார் வாணிமாபுரம் ஜமீன்தார் சக்திவேல். இருபத்தைந்து வருடத்திற்கு முன் அவர் விபத்தில் இறப்பு. அது விபத்தா அல்லது திட்டமிட்ட கொலையா? கொலை செய்து சுதர்சன் இடத்தை கையகப்படுத்தினாரா? என்று அலசி ஆராய அது ஒரு பக்கம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதெல்லாவற்றையும் விட முக்கியமானது தன் செயலைத் தனக்கே திருப்பிச் செய்து ஏமாற்றிய அரசனையும் அவர்கள் குடும்பத்தையும் எதிர்த்துச் சுண்டு விரல் கூட அசைக்க முடியாத பரிதாபம். ஏதேனும் செய்யப்போய் மேலும் சிக்கலாக்கிக் கொள்ள விரும்பவில்லை.

பாக்டரியும் தானும் மட்டும் சேதாரமில்லாமல் வெளிவர முயற்சிக்க வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாறியது. கூடவே வழக்கு நடக்கும் காரணத்தை முன்னிட்டுச் சீல் வைக்கப்பட்டது. இப்போதோ ஒரேடியாக கைவிட்டுப் போக வேண்டிய நிலைமை. 

வக்கீல் தொடர்ந்தார், “இதுல உங்க மேல கொலைப்பழி வேற விழுந்திருக்கு. ஆதாரம் கிடைக்காம இருந்தா என்னால உங்களை மட்டுமாவது அபராதம் மற்றும் ஓரிரு ஆண்டுச் சிறைத்தண்டனையோட ஜாமீன்ல வெளிய கொண்டு வரமுடியும். அதுக்கு மேல ஒன்னும் பண்ண முடியாது. இதுக்குமேல அவங்க கூட சுமூகமா போகவும் வாய்ப்பில்லை சோ பெட்டர் நீங்க பாக்டரிய மறந்துருங்க” என்க 

கோபம் ஆற்றாமை மனஅழுத்தம் கூடவே அளவுக்கு அதிகமாக பாக்டரியின் மீதிருந்த பற்று எல்லாம் சேர்ந்து அவரைப் புரட்டிப்போட லேசாக நெஞ்சு வலிக்க ஆரம்பித்தது சுதர்சனிற்கு. 

சென்னை உயர் நீதிமன்றம்.

கிட்டதட்ட ஆறு மாதங்களாக இழுத்தடிக்கப்பட்டு வந்த சுதர்சன் காகித ஆலையின் கேஸ் வெற்றிகரமாக முடியும் நாள். நீதிமன்றம் வந்ததில் இருந்தே சுதர்சன் நிலவரசனை முறைக்க அரசனின் முகத்திலோ அளவான அலட்சியப்புன்னகை. 

அரசனுக்கு நன்றாகத் தெரியும் தந்தையின் இறப்பிற்கு சுதர்சனிற்குத் தண்டனை வாங்கித்தர இயலாது. 

ஆனால் அவரைக் கொன்றதற்கான காரணத்தை ஒன்றும் இல்லாமல் செய்ய முடியும். இதோ பாக்டரி கைக்கு வந்த அடுத்த நொடியே அன்றொரு நாள் நினைத்தபடி அதனை இடித்துத் தரைமட்டமாக்க வேண்டும் என்ற முடிவை எடுத்துவிட்டான். அதற்கான அத்தனை ஏற்பாடும் செய்துவிட்டே வந்திருந்தான்.

அதனைப் பார்க்கும்போதெல்லாம் இதற்காகத்தான் தன் குடும்பம் சிதைந்தது என்ற எண்ணம் தோன்ற அதன் ரணத்தை தாங்கிக்கொள்ள முடியாமலே இந்த முடிவு.

வழக்கம் போல் விசாரித்து நீதிபதி நியாயத்தை வேறு வழியின்றி அதற்கு மேல் தள்ளிப்போட முடியாமல் தர பாக்டரி அரசனின் கைக்கு வந்தது. அதே போல் சுதர்சனிற்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் எழுபத்தி ஐந்து கோடி அபராதமும் விதித்து கோர்ட் தன் கடமையை முடித்தது.

அரசன் அன்றே ஊருக்கு கிளம்ப, அழகேசன் கீதாவுக்கு திருமண வேலைகள் இருப்பதால் மதியை மட்டும் அனுப்பி வைத்தனர். 

கல்யாணம் ஆக போறவங்க இப்படித் தனியா அனுப்பாத என்று கூறிய சொந்தங்களின் வாயை, “அவங்க ஒன்னும் சின்ன புள்ளைங்க இல்ல. என் பொண்ணு எப்படியோ ஆனா அரசன் சொக்கத்தங்கம்” என்ற கீதாவின் ஒற்றை வாக்கியம் அடைத்தது.

அந்த சொக்கத்தங்கம் ஆக்கப்பட்டவனோ அதைக்கேட்டு வாய்க்குள் சிரிப்பை அடக்க மதிக்கு தாயின் அறியாமையை எண்ணி புசு புசுவென கோபம் ஏறியது. உங்க சொக்கத்தங்கம் என்ன செய்யும் தெரியுமா? என்று கேட்க நாக்கு துறுதுறுவென இருந்தாலும் சொல்ல முடியாதே. அமைதியாக கிளம்பத்தான் முடிந்தது.

ஊருக்குள் அந்த அதிகாலை வேளையில் கார் நுழைய இரவு முழுக்க டிரைவர் காரோட்ட அரசனும் மதியும் தூங்காமல் பேசிக்கொண்டே வந்தனர் சிறுபொழுது வாயாலும் பெரும்பொழுது கண்களாலும்.

ஆதவனின் வெளிச்சத்தில் அரசனின் முகத்தில் இருந்து பார்வையை வெளியே திருப்ப முதன்முதலில் வாணிமாபுரம் வருகையில் அவள் பார்க்க ஆசைப்பட்ட பச்சைப்பட்டாடை போர்த்திய வயல்வெளிகள் கண்ணுக்கெட்டிய தூரம்வரை பரவிக் கண்கொள்ளாக் காட்சியளித்து மனதை மயக்கியது.

அதுவும் அதற்கு காரணம் தன்னவன் என்கையில் மயக்கம் சற்றுத்தூக்கலாகவே இருந்ததோ? அரண்மைனைக்கு செல்லும் சாலையில் ஒருபக்கம் முழுதும் நிலக்கடலை பயிர்களும் மறுபக்கம் அறுவடை முடிந்ததால் வைக்கோல் தங்கநிறத்தில் வயல் முழுக்க பரவியிருக்க இருகைகளையும் தன் கன்னத்தில் வைத்து குழந்தையாய் குதூகலித்தாள் வான்மதி.

“எப்படி இதெல்லாம் தெரிஞ்சிகிட்டீங்க மாமா? நான் காட்டில் கூட பார்த்ததே இல்லையே” என்று வினவ, 

“எல்லாம் தாத்தாவோட வழிகாட்டுதல் மதி. கார் ஓட்டுறதுல இருந்து என்ன பயிர் இருக்கு எவ்ளோ போடலாம்ன்னு எல்லாம் அதுக்கான ஆளுங்களை கூட்டிட்டு வந்தாங்க. பயிர் மட்டும் என்னென்ன வகை இருக்குன்னு பார்த்து நானே தான் மூலிகை பச்சிலை வச்சி காட்டுல விளைவித்த மாதிரியே செஞ்சிப் பார்த்தேன். எல்லா பயிரும் போட்டதால செம வேலை. மத்த ஊருல மரமும் வச்சாச்சு. இன்னொரு நாள் அதெல்லாம் காமிக்குறேன்” என

“கண்டிப்பா கூட்டிட்டு போறீங்க மாமா. அதுவும் வண்டில கூட்டிட்டு போகணும். இன்னைக்கே என்றாலும் ஓகே” என்று அரசனுடன் உலா போக அடிப்போட்டு வைத்தாள் மதி.

“இன்றைக்கு வேணாம் எனக்கு வேற வேலை இருக்கு மதி... ஒரு வாரம் கழித்து போலாமா?” என

“என்ன வேலை அதுவும் ஒரு வாரம் ஹான்…”

“அது… பாக்டரி இடிக்க போறேன் அதான்” என்றான் அமைதியாக ஆனால் அழுத்தமாக.

“வாட் இடிக்க போறீங்களா? நேத்துதானே கைக்கு வந்தது. அவன் அவன் சொத்து வந்தா பட்டாசு வெடிச்சு கொண்டாடுவான். நீங்க என்னடான்னா வந்த சொத்தையே இடிச்சி கொண்டாடுறீங்களே நிஜமாத்தான் சொல்றீங்களா?” அதிர்ச்சி என்றால் அப்படி ஒரு அதிர்ச்சி அவளிற்கு.

அரசனின் மனமும் புரிந்தது. தந்தையின் அழிவுச் சின்னமாக நினைக்கிறான் என்பதை நொடியில் கண்டுக்கொண்டாள். 

கிட்டதட்ட பாதி ஊரை வளைத்துக் கட்டிய பிரமாண்ட கட்டிடம் அது. அதை இடிப்பதை நினைச்சாலே மலைப்பாக இருந்தது. தலையை உலுக்கிவிட்டவள், “ஒரு வாரத்துல முடிஞ்சிருமா?” என்று சந்தேகமாக இழுத்தாள்.

“அப்படித்தான் சொன்னாங்க. பார்ப்போம்” என்பதற்குள் அரண்மனை வந்திருந்தது.   

வேகவேகமாகக் காலைக்கடன்களை முடித்து பாக்டரிக்கு வண்டியைக் கிளப்பினான். ஆனால் அவனே எதிர்பார்க்காத விசயமாக இடிக்க ஏற்பாடு செய்திருந்தவர்கள் அவ்வளவு பெரிய கட்டிடத்தை இடிக்க விருப்பமின்றி பழைய முதலாளியான சுதர்சனிற்கு தெரியப்படுத்தியிருந்தார்.

ஜாமீனில் வெளிவந்த சுதர்சனோ எந்த மீடியாவை வைத்து அவரை மாட்டிவிட்டார்களோ அவர்களையே தூண்டிவிட்டு வாணிமாபுரம் கிளம்பச் செய்ய, விளைவு வெளியே கூட்டமாக அரசனிற்காக காத்திருந்தனர்.

வந்ததும் ஒருவன் ஆரம்பித்தான். “என்ன சார்… அவங்க கிட்ட இருந்து வாங்குனீங்க சரி. அதை ஆக்கப்பூர்வமா எதாவது செய்வீங்கன்னு பார்த்தா தரைமட்டமாக்க பார்க்குறீங்க” 

“நான் ஆக்கப்பூர்வமாத்தான் செய்ய போறேன். இதிலென்ன தவற கண்டீங்க” பதில் நிதானமாக வந்தது. நொடியில் அதிர்ச்சியைச் சுதாரிச்சிருந்தான் அரசன்.

“எப்படி? எத்தனை தொழிலாளர்கள் இதை நம்பி இருப்பாங்க தெரியுமா? அவங்க எல்லாரும் எங்கப் போவாங்க?” இன்னொரு குரல். 

“அவங்களை பத்திரமா எங்க மாமா நடத்துற கடைக்கு வேலைக்கு அனுப்பியாச்சு. சந்தேகம்ன்னா விசாரிச்சி பார்த்துக்கோங்க சென்னைலதான் இருக்காங்க” மனம் தன்னைப்போல் மாமனிற்கு நன்றி கூறியது. 

தான் இடிக்க போகிறேன் என்று கூறியதும் சிறிது யோசித்தாலும் வரும் பிரச்சனைகளை முன்கூட்டியே ஆராய்ந்து தொழிலாளர்களை தங்களின் கடையில் வேலைக்கு சேர்த்திருந்தார்.

சிறிது திணறல்… அடுத்து என்ன கேட்பது என்று தெரியவில்லையோ? 

“இதை இடிச்சா எவ்வளவு கழிவு வரும் தெரியுமா? அத்தனையும் என்ன செய்ய போறீங்க மிஸ்டர் நிலவரசன்” ஹப்பாடி கேள்வி கேட்டுவிட்டோம் என்று ஆசுவாசம் அடைவதற்குள், 

“எல்லாம் நான் யோசிக்காம இருப்பேனா? இங்க விவசாயம் தான் செய்ய போறேன். அதுக்கான மாற்று ஏற்பாடு பண்ணியாச்சு. காட்டை அழித்து விவசாய நிலம் ஆக்கும் போதும், அதையும் அழித்து இப்படி பிரமாண்டமா கட்டடம் கட்டும்போதும் கேள்விக்கேட்காத நீங்க கட்டிய கட்டடத்தை அழித்து விவசாயம் செய்யப் போறவனை நிற்கவைத்து கேள்வி கேட்குறீங்களே. இதுதானா உங்க நியாயம்” என்று பட்டென்று கேட்டுவிட,

“சாரி சார்…” உடனடியாக மன்னிப்பை வேண்டியது அந்தக் குரல். “சாரி சார்ர்ர்ர்” பலர் பின்பாட்டுப் பாடிக்கலைந்து சென்றனர்.

“நீங்க இடிக்குறீங்களா இல்லை வேற யாரையாவது பார்க்கட்டுமா?” என்று அங்கு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களிடம் வினவ, ‘வரும் காசை வேணாம் என்பானேன்’ என்றெண்ணி இடிக்கத்தொடங்கினர்.

இந்த வழக்கின் மீதுப் பார்வைப் பதித்திருந்த அனைவரிடமும் அரசனின் செயல் அவன் மீது வெவ்வேறு எண்ணத்தை விதைத்தது. ‘மனுசன்னா இவன் மனுசன்டா’ ஒருவகை என்றால் ‘பொழைக்க தெரியாதவனா இருக்கானே’ வேறொருவகை.

ஆனால் அதைப்பற்றி கவலைப்படுபவனா அரசன்? வான்மதியோடும் குடும்பத்தினரோடும் திருமண வேலைகளில் பங்குபெற்று ஆவலோடு அதை  எதிர்பார்த்திருந்தனர் காதலில் விழுந்த இளநெஞ்சங்கள் இரண்டும்!

“கெட்டிமேளம்! கெட்டிமேளம்!” என்ற ஐயரின் உரத்தக் குரல் அந்த அரண்மனையெங்கும் ஒலிக்க இதுவரை பார்த்திராத அனுபவித்திராத அத்தனை சடங்குகள் செய்தும் மகிழ்ச்சி குன்றாமல் மாங்கல்யத்தை எடுத்து தன் மனம் கவர்ந்தவளின் கழுத்தில் கட்டினான் நிலவரசன்.

வான்மதியின் மனம் பொங்கிவழிய விழிகள் இரண்டும் தனக்கு தாலி கட்டியவனையே விடாமல் ஸ்பரிசித்திருந்தது.

உன் கழுத்தில் மாலையிட உன்னிரண்டு 

தோளைத் தொட 

என்ன தவம் செஞ்சேனோ என் மாமா…

வண்ணக்கிளி கையைத்தொட சின்ன 

சின்னக் கோலமிட

உள்ளம் மட்டும் உன் வழியே நானே… 

மழை வரும்…

உன்னோடு ஓருயிராய் கலந்திடவே 

மழையாக நானும் வந்தேனே! 

  

 

  

 

  

 

error: Content is protected !!