ESK-15

என் சுவாசம் 15

கதிரின் மனது குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தது.  வரும் தை மாதம் வளர்பிறை முகூர்த்தத்தில் திருமணத்தையும், அவன் புதிதாய் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டின் புதுமனை புகுவிழாவையும், ஒன்றாக வைத்துக் கொள்ளலாம் என்று ஏக மனதாக முடிவு செய்யப்பட்டது.

ராகவனும் அழகரும் மாலையில் வீட்டிற்கு வந்ததும் அமர்ந்து பேசி முடிவு எடுத்தனர். ஒரு நல்ல நாள் பார்த்து சிவரஞ்சனியின் சித்தியையும் நேரில் பார்த்துப் பேசியதும், திருமண தேதியை உறுதி செய்து விடலாம் என்று வாசுகியும்   ராகவனும் முடிவு செய்தனர்.

கதிருக்கு அதில் அவ்வளவாக விருப்பம் இல்லாவிட்டாலும்.  “இத்தனை வருடங்கள் அவள் அங்கு வளர்ந்தவள், அவர்களுக்குச் சொல்லாமல் எதுவும் செய்ய கூடாது” என்று முடிவாக வாசுகி கூறியதும் மறுத்துப் பேசவில்லை கதிர்.

அவளது படிப்பு முடியும் வரை வார நாட்களில் ஹாஸ்டலில் தங்கிக் கொள்ளட்டும், சனி ஞாயிறு இரண்டு நாட்களுக்கு கதிர் போய் அழைத்துக் கொண்டு வந்துவிட்டு, மீண்டும் திங்கள் கொண்டு ஹாஸ்டலில் விடுவது என்று முடிவு செய்யப் பட்டது.

இதைக் கேட்டதும் சற்று சுணங்கியவன்,  அவள் தினமும் கல்லூரிக்குச் சென்று வர சாத்தியப்படாது என்பதால் ஒத்துக் கொண்டான்.

வாசுகி  வேறு, “அப்ப அவ படிப்பை முடிச்சதும், ஒரு வருஷம் கழிச்சு கல்யாணம் வச்சிக்கலாம்.”  என்று ஐடியா கொடுக்க,  தனது உடன் பிறவா சகோதரியைப் பாசமாக முறைத்தவன் வேறு வழியின்றி, திருமணம் முடிந்தும் அவள் ஹாஸ்டலில் தங்க ஒப்புக் கொண்டான்.

எளிமையாக   கோவிலில் வைத்துத் திருமணத்தை முடித்துவிட்டு,  ஏதேனும் ஹோட்டலில் ரிசப்ஷன் வைத்துக் கெள்ளலாம், என்ற கதிரின் வாதத்தையும் ஏற்கவில்லை   ராகவன்.

“அவ்வளவு  பணம் சேர்த்து வச்சிருக்க, வெளிய எடுடா…  செலவே இல்லாம கல்யாணத்தை முடிச்சிடலாம்னு பார்த்தியா?  ஒழுங்கா நல்ல மண்டபம் பிடிச்சுதான் கல்யாணம் பண்ற. சிவா எங்க வீட்டுப் பொண்ணு மாதிரி. அவளுக்கு என்னென்ன செய்யனுமோ அதெல்லாம் நான் செய்வேன்.” என்று முடிவாகக் கூறிவிட மறுக்க முடியவில்லை அவனால்.

ராகவன் வந்ததும் அவரையும் வாசுகியையும் நிற்க வைத்து, கதிரும் சிவாவும் ஜோடியாக ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டனர்.  அழகரிடமும் ஆசிர்வாதம் வாங்கி கொண்டனர்.

அங்கிள் என்று அழைத்த சிவரஞ்சனியை  அழகர்  அப்பா என்று அழைக்கக் கூற,  அது மிகவும் நெகிழ்ச்சியான தருணமாகவும் மனதுக்கு நிறைவாகவும் இருந்தது.

மதியம் அவன் கட்டிக் கொண்டிருக்கும்  வீட்டைப் பார்க்க வாசுகியும் சிவாவும் வந்த போதும், வாசுகியின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு சிவாவைச் சீண்டிக் கொண்டே இருந்தான் கதிர். அவளின் முகச் சிவப்பும் கண்களில் லேசான பயத்துடன் கூடிய மிரட்சியும், காணக் காணத் தெவிட்டவில்லை அவனுக்கு.

தன்னை நினைத்தே வியப்புதான் அவனுக்கு.  ‘எப்படி இருந்த நான்… இப்படி ஆகிட்டேன்’ என்று தன்னைத் தானே கலாய்த்துக் கொள்ளும் அளவுக்கு அவனது சேட்டைகள் கூடியிருந்தது.

அதிலும் வீட்டின் படுக்கையறையை அவளுக்குக் காட்டும் போது உல்லாசத்தின் உச்சத்தில் இருந்தான்.  அவளுக்குத்தான் கதிரின் இந்தப் புதிய பரிணாமத்தைக் கண்டு ஆனந்த அதிர்ச்சியாக இருந்தது.

காலையில் அதிரடியாக முத்தமிட்டுச் சென்றவனின் அடாவடியில் விதிர்விதிர்த்துப் போயிருந்தாள். இயல்புக்கு வரவே வெகு நேரம் ஆனது. பெண்களுக்கே உரிய இயல்பான பயம் உள்ளுக்குள் இருந்தாலும், அந்தக் கள்ளனின் அடாவடியை ரகசியமாக ரசித்தது மனது.

இத்தனை நாட்கள் அந்நியனாக இருந்தவனின் ரெமோ அவதாரம்,  மிகவும் சிலிர்ப்பூட்டுவதாய் இருந்தது அவளுக்கு. திருமணமும் ஒரு மாதத்தில் என்னும் நிலையில் கதிரின் இத்தகைய பிரியம், அவளது மனதின் ஓரத்தில் இருந்த சிறு சஞ்சலங்களைக் கூட விரட்டியது.

வீட்டில் செய்ய வேண்டிய மாற்றங்கள் ஒவ்வொன்றிலும், அவளது அபிப்ராயத்தைக் கேட்டு அவளை அந்த வீட்டின் அரசியாக உணர வைத்தான்.  அவன் அளவுக்கு சகஜமாகப் பழக முடியாவிட்டாலும்,  தயக்கத்தை விட்டு அவனுடன் பேச வைத்தான்.

மறுநாள் காலை சிவரஞ்சனியை ஹாஸ்டலில் கொண்டு விட ரெடியாகி வந்தவனை, வரவேற்றது அழகரும் சுந்தரும்தான்.

“காலையிலயே தலைவர் ஏதோ வேலையிருக்குன்னு கூப்பிட்டாருன்னு கிளம்பி வந்தீங்க, இன்னும் இங்க என்ன  பண்றீங்க?”

“ஆமாம் மாப்ள…  சிவரஞ்சனியை  ஹாஸ்டல்ல கொண்டு விடதான் கூப்பிட்டாரு.”

“நான் கொண்டு போய்  விட்டுக்கறேன்.  நீங்க வேற ஏதாவது கட்சி வேலையிருந்தாப் பாருங்க.”

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது, கிளம்பித் தயாராக சிவரஞ்சனியும், அவளை வழியனுப்ப வாசுகியும் வந்தனர்.

“என்ன இங்க பிரச்சினை?”

“ஒன்னும்  இல்லக்கா…  சிவாவ நான் கொண்டு போய் விட்டுக்கறேன், நீங்க தலைவர் கூட இருங்கன்னு மாமாகிட்ட சொல்லிட்டு இருந்தேன்.”

வாசுகி நமுட்டுச் சிரிப்புடன், “அதெல்லாம் ஒன்னும் வேணாம்.  அழகரும் சுந்தரும் கொண்டு போய் சிவாவ விட்டுட்டு வருவாங்க.  உனக்கு விருப்பம்னா அவங்க கூட போ.  இல்லைன்னா  இங்கயே இருந்துக்கோ.  ஆனா அவங்க கண்டிப்பா வருவாங்க.”

‘இன்னும் ஒரு மாசம்தான, அப்புறம்  என்ன பண்றீங்கன்னு நானும் பார்க்கிறேன்’ என்று தனக்குள் முனுமுனுத்தவன், சிவரஞ்சனியின் பேக்கை வாங்கி வண்டியில் வைத்து அவளை  முன்னிருக்கையில் ஏறி அமரச் சொன்னான்.  அழகரையும் சுந்தரையும் கடுப்புடன் பின்னே ஏறச் சொன்னான்.

வாசுகியிடம் விடைபெற்றுக் கொண்டு வண்டி கிளம்பியதும், வழக்கம் போல கோவிலுக்குச் சென்று ஆஞ்சநேயரையும் பெருமாளையும் வழிபட்டவர்கள்,   மீண்டும் பயணத்தைத் துவங்கினர்.

சற்று தூரத்திலேயே காரை ஓரம் கட்டி நிறுத்தியவன்  அழகர் மற்றும் சுந்தரிடம்,

“மாமா…  சுந்தர் ரெண்டு பேரும் கொஞ்சம் இறங்கி டயர்ல காத்து சரியா இருக்கான்னு பாருங்க.”

“ஏன் மாப்ள?  சரியா செக் பண்ணலையா நீ?”  என்றவாறு அழகர் இறங்க முற்பட.

“அழகர் அண்ணா இறங்காதீங்க…  நாம கீழ இறங்குனதும் நம்மள விட்டுட்டு கதிர் அண்ணன் வண்டிய கிளப்பிட்டு போயிடுவாரு. அன்னைக்கு என்னையும் அப்படிதான் இறக்கி விட்டாரு.”

“சுந்தரு…  ஓவர் அறிவாகிடுச்சி செல்லம் உனக்கு.”

அவனின் பாவனையில் அனைவரும் சிரித்து விட…

“தம்பி…  பாண்டிச்சேரியில பண்ணை நிலம் பார்த்து வச்சியே… சிவாவ கொண்டு போய் விட்டுட்டு, அப்படியே அத இன்னைக்குப் பேசி முடிச்சிடலாம்யா.  தை மாசம் பத்திரம் பதிஞ்சிடலாம். அதுக்குத்தான் நாங்க கூட வர்றோம்.”

“அதுவும் இல்லாம கல்யாணம் முடியற வரை உன்னைத் தனியா விடக் கூடாதாம்.  அந்தக் குமாரு மறுபடியும் ஏதாவது பண்ணுவானோன்னு வாசுகி அக்காவுக்கு பயம்  ண்ணா.”

“அவனாலலாம் எதுவும் பண்ண முடியாது  சுந்தரு. அக்கா வீணா பயப்படுது.”  பேசிக் கொண்டே காரைக் கிளப்பியவன்,

கண்களில் பயத்தைத் தேக்கியவாறு அவனைப் பார்த்து, “இருந்தாலும் நீங்க கொஞ்சம் ஜாக்ரதையா இருங்க”   என்ற சிவரஞ்சனியை புன்னகையுடன் ஏறிட்டவன், ஆறுதலாக “சரிம்மா” என்க.

“இதுக்குதான் மாப்ள உனக்கு கால்கட்டு போடனும்னு வாசுகி சொன்னது.  நாங்க சொல்றத இப்படி சிரிச்சிகிட்டே கேட்பியா நீ.”  அழகர் அவனை ஏகத்துக்கும் வாற  பயணம் இனிமையாக இருந்தது.

கதிருக்கு வெகு நாட்களாகவே விவசாய பண்ணைநிலம் ஒன்று வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.  விவசாயம் செய்வதைப் பற்றி ஒன்றும் தெரியாவிட்டாலும்,  மா, பலா, கொய்யா, தென்னை போன்ற மரங்கள் சூழ்ந்த பண்ணை நிலமும் மத்தியில் ஒரு சிறிய வீடும் இருப்பது போல வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.

குத்தகைக்கு விட்டோ அல்லது ஆள் வைத்தோ பார்த்துக் கொள்ளலாம்,    ஓய்வு கிடைக்கும் போது சென்று தங்கியிருக்கலாம் என்று எண்ணியிருந்தான்

அதற்காக பணமும் சேர்த்திருந்தவன் மிகுதிக்கு வங்கிக் கடன் வாங்கிக் கொள்ளலாம் என்று எண்ணியிருந்தான். பாண்டிச்சேரி இடம்   விலை கொஞ்சம் அவன் எதிர்பார்த்தது போல இருந்தாலும், அவனது  கற்பனையில்  இருந்த பண்ணை  நிலம் போல  இல்லை.

“அந்த இடம் என்னவோ மனசுக்கு அவ்வளவு திருப்தியா இல்ல மாமா.  ஆனா, விலை கொஞ்சம்  படியுது. பார்க்கலாம், இன்னைக்குப் போய் பார்த்துட்டு முடிவு பண்ணுவோம்.”

மேலும் பல  விஷயங்களைப்   பேசிக் கொண்டு வந்தவன்,  முன்தினம் ஸ்ரீதரைச் சந்தித்ததையும் கூறினான்.  ஸ்ரீதர் கூறிய விஷயங்களையும் மேலோட்டமாகக் கூறினான். மாணவர்களுக்கிடையே பரவியுள்ள போதைப் பழக்கத்தை பற்றிக் கேட்டதும், மனம் கனத்துப் போனது அனைவருக்கும்.

“நாடு போற பாதைய என்ன சொல்ல மாப்ள.   எவன் எக்கேடு கெட்டுப் போனா எனக்கென்ன, எனக்குக் காசுதான்  முக்கியம்னு நினைக்கிறவனுங்க இருக்கற வரை, ஒன்னும் சொல்றதுக்கில்லை.”

அலுத்துக் கொண்ட அழகரிடம்,  “நாம அப்படி இருக்கக் கூடாது மாமா.  ஏதாவது செய்யனும்.”

“தலைவர்கிட்ட சொல்லி இதைப் பற்றி  மேலிடத்துல பேசச் சொல்லனும்.  மாணவர்கள் இடையில விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கச் சொல்லனும்.”

பேசிக் கொண்டே கல்லூரிக்குள் நுழைந்திருந்தனர்.  சுந்தரும் அழகரும் காரில் இருந்து கொள்ள,   அவளை அழைத்துச் சென்று ஹாஸ்டல் அறையில் வசதிகள் போதுமான அளவு உள்ளதா என்று பார்த்தான்..

அவளுடைய உடைமைகளை அறையில் வைத்து விட்டு வெளியே அழைத்து வந்தவன், கல்லூரிக்கு அருகில் இருந்த உணவகத்தில் காலை உணவை வாங்கித் தந்தான். கல்லூரி ஆரம்பிக்கச் சற்று நேரம் இருந்ததால்,   கல்லூரி அருகே உள்ள கடற்கரைக்கு, அவளிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்கலாம் என்று எண்ணி அழைத்துச் சென்றான்.

இருவருக்குமே இன்னும் அடுத்த ஐந்து நாட்களுக்குப் பார்த்துக் கொள்ள முடியாது என்ற எண்ணம்  அவர்களை மௌனமாக்கியிருந்தது.

அமைதியாக கடல் அலைகளை வெறித்துக் கொண்டிருந்தவளின் வலது கரத்தைத் தன் கையோடு கோர்த்துக் கொண்டு மௌனத்தைக் கலைத்தவன்,

“நல்லா படி…  இன்னும் ஐஞ்சு நாள்தான்…  வெள்ளிக்கிழமை சாயந்திரம் உன்னைக் கூட்டிட்டுப் போக வந்துடுவேன்.  சரியா.”

ஏனோ அவன் பேசப்பேச அவள் விழிகள் நீரால் நிறைந்தன. சரி என்பது போலத் தலையசைத்தவளின் கரத்தை அழுத்தியவன்,

“ஹேய்…  லூசு…  இரண்டு மணி நேரப்   பயணம்தான். நினைச்சா நடுவுலகூட வந்து பார்த்துட்டுப் போவேன்.  இதுக்குப் போய் அழலாமா?”   என்றபடி தனது சட்டைப் பையில் இருந்து ஒரு மொபைல் ஃபோனை எடுத்தவன் அவளிடம் கொடுத்தான்.

“தினமும் சாயந்திரம் ஃபோன் பண்றேன்.  என் நம்பர் அதுல சேவ் பண்ணியிருக்கேன்.  உனக்குப் பேசனும்னா எப்ப வேணும்னாலும் ஃபோன் போடு. வீடியோ கால் கூடப் பேசிக்கலாம்.  ஐஞ்சு நாள் ஐஞ்சு நிமிஷம் மாதிரி ஓடிடும். சரியா.”

சரி என்றபடி வாங்கிக் கொண்டாள்.  அவளது கையில் சில இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்தவனை கேள்வியாக ஏறிட்டவள்,

“பணம்லாம் வேணாம்.”

“இல்ல…  வச்சுக்கோ,  ஏதாவது செலவிருந்தாத் தேவைப்படும். உனக்குத் தேவையான புக்ஸ் வாங்கிக்கோ.  வேற ஏதாவது வேணும்னா, ஃபோன் போடும் போது சொல்லு.  வரும் போது வாங்கிட்டு வரேன்.”

தனக்குத் தேவையான அனைத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்வதில், அவனுக்குத் தன் மீது   இருக்கும் அளவு கடந்த நேசம்,   தெள்ளத்தெளிவாக தெரிந்தது அவளுக்கு.   இத்தகைய நேசத்தைப் பெற என்ன தவம் செய்திருந்தேனோ என்று எண்ணிக் கொண்டாள்.

ஆதரவுக்குக் கூட ஆள் இல்லாமல் தவித்த நிலை மாறி,  இன்று உனக்குச் சகலமும் நானாக இருக்கிறேன் என்று ஒவ்வொரு நொடியும் உணர்த்துபவனை, கண்களில் காதலைத் தேக்கி ஏறிட்டவள்,

“நீங்களும் ஜாக்கிரதையா இருங்க.  வாசுகி அண்ணி உங்க நல்லதுக்குத்தானே சொல்றாங்க.”

அவளைப் பார்த்து வசீகரமாகச் சிரித்தவன், “கண்டிப்பா…  நான் எல்லாம் பார்த்துக்கறேன்.  நீ எந்த சிந்தனையும் இல்லாம நிம்மதியா படி.”

அவளை அழைத்து வந்து கல்லூரியில் விட்டதும்,  அனைவரும் அவளிடம் விடைபெற்றுக் கொண்டு, வண்டியில் ஏறிப் பாண்டிச்சேரியை நோக்கிப் புறப்பட்டுச் சென்றனர்.

 

 

பாண்டிச்சேரிக்கும் கடலூருக்கும் இடையில் ஒரு கிராமத்தில் இருந்தது அந்த பண்ணை நிலம்.  ஐந்து ஏக்கர் பரப்பளவில் இருந்தது.  ஆனால் கடலோரத்தில் அமைந்திருந்தது.  நிலத்தடி நீர் உவர்நீராக இருந்தது. சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதியாகவும் இருந்தது.

அதனாலேயே கதிருக்கு அவ்வளவு பிடித்தம் இல்லாததாக இருந்தது.  எந்தப் பிரச்சினையும் இல்லாத இடமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணியிருந்தான். ஆனால்   விலை படிவதால் சென்று பார்க்கலாம் என்று நினைத்தபடி சென்றவர்களுக்கு, அதிர்ச்சி காத்திருந்தது.

இவர்களுக்கு முன்பே சகாயம் அந்த இடத்தை, வேறொரு நபருக்கு விலையைக் கூடுதலாக வைத்துப் பேசி முடித்து, அட்வான்ஸ் கொடுக்க வைத்திருந்தான்.

நிலத்தின் உரிமையாளரும் கூடுதல் விலை கிடைப்பதால், இடத்தைப் பதிவு செய்து கொடுக்க முடிவு செய்திருந்தார்.  சகாயத்துக்கு கூடுதலாக கமிஷன் கிடைப்பதாலும், கதிருக்கு மேலும் மேலும் குடைச்சல் கொடுக்க வேண்டும் என்பதற்காகவும், மெனக்கெட்டு இந்த டீலிங்கைப் பேசி முடித்திருந்தான்.

கதிரின் கவனத்திற்கு வராமல் இந்த விஷயம் நடைபெற்று இருந்தது. இவர்கள் சென்ற நேரம் சரியாக சகாயமும் அங்கே இருந்தான்.

கதிர் உறுதியாக எதுவும்  சொல்லி   இருக்காததாலும்,   அட்வான்ஸ் என்று எதுவும் கொடுக்கவில்லை என்பதாலும், நிலத்தின் உரிமையாளரை எதுவும் சொல்ல முடியவில்லை அவனால்.  அவன் கோபம் முழுவதும்  சகாயத்தின் மீதுதான் இருந்தது.

இருப்பினும் தேவையற்ற பிரச்சனை வேண்டாம் என்று, அழகரும் சுந்தரும் கதிரை சமாதானப் படுத்தி திரும்ப அழைத்துச் செல்ல முற்படும் போது, கதிரை ஏளனமாகச் சீண்டியது சகாயத்தின் குரல்.

“இது ஆரம்பம்தான் கதிரு…  ஊருக்குள்ள இனி நீ தொழிலே செய்ய முடியாமச் செய்யறதுதான் என் வேலையே.”

“சகாயம் தேவையில்லாம பிரச்சினை பண்ணாத சொல்லிட்டேன்.”  அழகர் கோபத்தோடு எச்சரிக்க…

“யோவ்…   சொல்லி வை உன் மருமகப்புள்ளைகிட்ட…  ஏதோ அன்னைக்கு ஊர விட்டு ஓடினதால உயிர் பிழைச்சான் .  இல்லைன்னா இன்னேரம் இவனைக் கொன்னு புதைச்சிருப்பாரு எங்கத் தலைவரு. இனிமேலும் எங்க விஷயத்துல தலையிடாம  ஒதுங்கி இருக்கச் சொல்லு.  முடிஞ்சா ஊர காலி பண்ணிட்டு ஓடச் சொல்லு. ஊர விட்டு  ஓடறது ஒன்னும் அவன் குடும்பத்துக்குப் புதுசு இல்லையே.”

சகாயம் பேச ஆரம்பிக்கவுமே, வெறி வந்தவன் போலத் திமிறிய கதிரை, அடக்க முடியவில்லை  அழகராலும் சுந்தராலும்.  இருவரையும் விலக்கித் தள்ளிவிட்டு சகாயத்தின் மேல் பாய்ந்தவன், சரமாறியாக வெளுக்க ஆரம்பித்து இருந்தான்.

“யாரு? யாரடா கொன்னு புதைக்கறது? அன்னைக்கு நான் ஊருக்குள்ள இருந்திருந்தா,   உங்க அத்தனை பேரையும் கொன்னுருப்பேன்னுதான் என்னைய அடக்கி வச்சிருந்தாங்க…

ஒரே தொழில் செய்யறவனாச்சேன்னு நானும் பொறுத்துப் போனா… ரொம்பத் துள்ளுற நீ…”

“யார ஊரை காலி பண்ணிட்டுப் போகச் சொல்லுற?  உங்க அத்தனை பேரையும் பாளையங்கோட்டைக்கோ இல்ல வேலூருக்கோ அனுப்பல நான் கதிர் இல்லடா…”

என்றபடி சகாயத்தைப் புரட்டி எடுத்ததில் அவனது மூக்கு வாயெல்லாம் கிழிந்து ரத்தம் கொட்டியது. முரட்டுத் தனமாக அடித்தவனைத் தடுக்க முடியாமல், சகாயம் மண்டியிட்டு விட.    கதிரை அடக்கி இழுத்துச் சென்றனர் அழகரும் சுந்தரும்.

சுந்தர் வண்டியை ஓட்ட,  கதிர் கோபத்தின் உச்சத்தில் அமர்ந்திருந்தான்.  பின்னால் அமர்ந்திருந்த அழகர்,

“அவன்தான் பைத்தியக்காரன் மாதிரி பேசறான்னா,  உனக்கு ஏன் கதிரு இவ்வளவு கோபம் வருது? படக்கூடாத இடத்துல பட்டு ஏதாவது ஒன்னுகிடக்க ஒன்னு ஆகிப் போச்சுன்னா என்ன செய்யறது?   யாரையும் அடிக்கக் கை நீட்டாதன்னு சொன்னா கேட்கறதில்ல நீ.”

என்று வெகுவாகக் கடிந்து கொள்ள…  சுந்தரும், “அமைதியா இருண்ணா…  இந்த இடம் போனாப் போயிட்டுப் போது.  நாம வேறப் பார்த்துக்கலாம்.”

“ம்ப்ச்…  இடம் பிரச்சனையே இல்ல சுந்தர்.  அவனுங்கத் திமிர அடக்கனும். பார்த்துடறேன் நானா அவனுங்களான்னு.  எல்லாவனையும் ஓட ஓட விரட்டுறேன்.”

மிகுந்த கோபத்தோடு கொந்தளித்தவனைப் பேசிப் பேசி சற்று அமைதியாக்கினர் இருவரும். ஆனால் கதிரின்  மனமோ அடங்காமல் கொந்தளித்துக் கொண்டிருந்தது.  சகாயம் தன்னுடைய குடும்பத்தைப் பற்றித்   தேவையில்லாத வார்த்தையை விட்டது, அவனால் ஜீரணிக்க முடியவில்லை.

மறக்க நினைத்த பழைய நினைவுகள் அனைத்தும், நினைவில் வந்து பேயாட்டம் போட்டன.   தலையும் வெடித்து விடுவது போல வலிக்க ஆரம்பித்தது.  கண்களை இறுக மூடி சீட்டில் சாய்ந்து கொண்டான்.

அழகருக்கும்  அவனது நிலை புரிந்தது.  மேலும் எதுவும் பேசாமல் அமைதியாக வந்தார். ஊருக்குள் வந்ததும்   ராகவனும் அவனிடம் பேசி அவனைச் சற்று சமாதானப் படுத்தினார்.

“பொறுமையா இரு கதிர்.  ஓவரா ஆடுறவனுங்க கண்டிப்பா ஒருநாள் அடங்குவானுங்க.   நானும் இது சம்பந்தமா பேசிகிட்டேதான் இருக்கேன்.  ஸ்ரீதரும் ஊருக்குள்ள வந்தாச்சு. முன்ன மாதிரி அவனுங்களால  சுதந்திரமா இருக்க முடியாது.   இனி சட்ட விரோதமா  என்ன செய்தாலும் சிக்குவானுங்க.”

வாசுகியோ அவன் அடிதடியில் இறங்கியதற்குக் கோபப்பட்டாலும்,  அவனை இயல்புக்குக் கொண்டு வர  வேண்டி,

“டேய்…  எந்த மடையனாவது பொண்டாட்டி கூட டூயட் பாடறதுக்காக வாங்குற பண்ணை வீட்ட, கொதிக்கக் கொதிக்க இருக்கற பாண்டிச்சேரியில வாங்குவானாடா?  நல்லா சிலுசிலுன்னு இருக்கற பொள்ளாச்சி மேட்டுப்பாளையம் பக்கம் வாங்குடா. பக்கத்துலயே ஊட்டி இருக்கு அங்கயும் போயிக்கலாம்.”  என்று கண்களைச் சிமிட்டிக் கூற,  சிரித்தவனோ…

“செம ஐடியாக்கா…  அந்தப் பக்கமே நிலம் பார்க்குறேன்.”

“ஆமாம் மாப்ள,   நாம எல்லாரும் போய் தங்கறதுக்கு நல்லாயிருக்கும்.”

“ஏன் மாமா?  கல்யாணம் முடிஞ்சாலும் என் பொண்டாட்டிய என் கூடத் தனியா விட மாட்டீங்களா?”  என அழுவது போல முகத்தை வைத்துக் கேட்டவனைப் பார்த்து அனைவரும் சிரிக்கச் சூழ்நிலை சற்று மாறியது.

ஸ்ரீதர் டிஎஸ்பியாக பதவியேற்றதும், கடலூர் மாவட்டத்தின் சட்ட ஒழுங்கை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்தான்.  மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் பாதுகாப்பை பலப்படுத்தினான்.

காவல்துறையினரின் கண்களை மீறி, எந்த விதமான சட்ட விரோதப் பொருட்களும் கடத்த முடியாதபடிக் கட்டுக் காவலை அதிகப் படுத்தினான்.

பள்ளிகளுக்கு அருகே இருந்த கடைகள் சோதனைக்கு உட்படுத்தப் பட்டன. போதைப் பொருள் விற்பதைத் தடுக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப் பட்டதில், நிலைமை ஒரளவு கட்டுப் பாட்டுக்குள் வந்தது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊர்களிலும், பள்ளி மாணவர்கள் இடையே போதைப் பழக்கத்தின் தீமையை எடுத்துச் சொல்லும் விதமாக பேரணிகள்,  கருத்தரங்குகள்,  சிறு மேடை நாடகங்கள் ஆகியவை ராகவனின் முயற்சியால், அவரது கட்சி ஆட்களால் நடத்தத் தீர்மாணிக்கப் பட்டது.

சமூக ஆர்வலர்கள்,   மருத்துவர்கள்,  தங்கள் துறைகளில் சாதித்த  சாதனையாளர்கள் சிலரைச் சந்தித்த  கதிர், தனிப்பட்ட முறையில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு வகுப்புகள் எடுக்க வேண்டுகோள் விடுத்தான். ஒவ்வொரு பள்ளிக்கும் வாரத்தில் ஒரு நாள்  மட்டும் வகுப்பு எடுக்க முடிவு செய்யப் பட்டது.

போதை மருந்து கலாசாரத்தை ஒரு நாளிலோ ஒரு வாரத்திலோ கட்டுப் படுத்த முடியாது என்பது அனைவருக்கும் தெரியும்.   ஆகவே இந்தப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று எண்ணிக் கொண்டனர்.

கதிருக்கு அனைத்து வேலைகளோடு கூடுதலாக சிவரஞ்சனியுடன் ஃபோனில் கடலை போடும் வேலையும் சேர்ந்து கொண்டது.  தினமும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவளை அழைத்து, அவளது குரலைக் கேட்டாக வேண்டும் அவனுக்கு.

ஆரம்பத்தில் அவனோடு சகஜமாகப் பேசத் தயங்கியவள்,   போகப் போக சற்று இயல்பாக உரையாடத் துவங்கினாள். வாசுகியும் குழந்தைகளும் தினமும் அவளுடன் பேசிவிட தனிமையை உணரவில்லை அவள். இப்படியே நாட்கள் இனிமையாக நகர்ந்தன.

 

 

உயர் தரமான பார் ஒன்றின் மாடியில், திறந்த வெளி உணவகத்தில்  ஒரு மேஜையைச் சுற்றி அமர்ந்திருந்தனர் மூவர்.  இருவர் நன்றாக போதையில் மிதக்க ஒருவன்  சற்று நிதானமாக இருந்தான்.

அவர்களைத் தவிர வேறு யாரும் இல்லாமல் வெறிச்சோடிப் போயிருந்தது உணவகம். ஒரு வேளை உணவகத்தையே மொத்தமாக புக் செய்திருந்தார்களோ என்னவோ தெரியவில்லை.  போதையில் வாய் குழறி கண்கள் சொருகினாலும் நிதானமாகப் பேசினான் ஒருவன்.

“எப்பப் பறவைகள் வருது?”

“இன்னும் நாலு நாள்ல.”

“எந்த நாட்டுப் பறவைகள்?”

“நார்வே.  வழக்கம் போல கொஞ்சம் வயசான ஜோடிப் பறவைங்க.  அப்பதான் பயம் ஜாஸ்தியா இருக்கும்.”

“எங்க அடைச்சு வைக்கப் போறோம்?”

“இந்த தடவை வழக்கமான இடத்துல வேணாம்.  வேற இடம்தான் பார்க்கனும்.”

“என்னோட கெஸ்ட்ஹவுஸ்ல அடைச்சு வைக்கலாம். இந்த   முறை லாபம் அதிகம்.  கொழுத்த பறவைகள்.  அதனால 20சி டார்கெட்.”

போதையில் சொக்கிப் போயிருந்த மூன்றாமவனின் கண்கள் விரிந்தன. பேராசை பேச்சில் தெறிக்க,

“நோகாம பத்து நாள்ல ஆளுக்கு   நாலு கோடியா?”

“வாய ரொம்பப் பிளக்காதே…   இப்ப புதுசா வந்திருக்கிற டிஎஸ்பி ரொம்பக் கெடுபிடி.  வழக்கமா வர்ற வருமானமே பாதியாக் குறைஞ்சு போச்சு.   ஹார்பர்ல எதுவுமே செய்ய முடியல கண் கொத்திப் பாம்பு மாதிரி கதிர் பார்த்துகிட்டு இருக்குறான்.”

“கவலைப் படாத… இந்த ஆபரேஷன் சக்சஸ் ஆனதும் அந்தக் கதிரை நான் போட்டுத் தள்ளுறேன்.   வெளியூர் ஆளுங்களை வச்சு செய்யறேன்.    ஆக்ஸிடென்ட் மாதிரி செட்டப் செய்யறேன்.  எவனுக்கும் சந்தேகம் வராது.”

தைரியம் சொன்னது ஒரு உருவம்.  போதை வழிய சிரித்தனர் மூவரும்.

“பறவைகளைத் தூக்க இந்த தடவை யார் போறது?”

“நானே போறேன்.  ஏர்போர்ட்லயே வச்சுத் தூக்கறேன்.”

“இடத்தை ரெடி பண்ணிட்டு உனக்குச் சொல்லுறேன்.   மத்த ஏற்பாடு எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன்.”

“இந்த தடவை பணம் எங்க வந்து சேருது?”

“ஒரிசால இருக்கற ஒரு குழந்தைகள் காப்பகத்துக்கு  வருது. அங்க வந்ததும் ரெண்டே நாள்ல நம்ம கைக்கு வந்துடும்.  அங்க நம்ம ஆள் பக்காவா அந்த வேலையை முடிச்சிடுவான்.”

“அப்ப சரி.  ப்ளான் பக்கா தான?   போலீசுக்குப் போயிட மாட்டாங்களே?”

“அது நாம பேசுற பேச்சுல இருக்கு.  போலீசுக்குப் போனா கோழியத் திருகுற மாதிரி தலையைத் திருகி எறிஞ்சிடுவோம்னு மிரட்டுறதுல இருக்கு.  அவங்களுக்கு அந்த பயம் இருக்கற வரை போலீஸ்க்கு போக மாட்டாங்க.”

“ஒரு வேளை போலீசுக்குத் தெரிஞ்சிட்டா?”

“ஒன்னும் பண்ண முடியாது  அவனுங்களால.  ஆந்திரா ட்ரஸ்டுக்கோ ஒரிசா ட்ரஸ்டுக்கோ நாம யார்னு தெரியாது.  நாம இருக்கற இடத்தை அவனுங்களால ட்ரேஸ் பண்ண முடியாது.  கடத்துனவங்களை பத்திரமா  திருப்பி அனுப்பிட்டா, வேற பிரச்சனை வராது.”

“இதுவரைக்கும் கடத்துனதையே அவனுங்களால இப்பவரை கண்டுபிடிக்க முடியல…  அவனுங்கல்லாம் சினிமால கடைசி சீன்ல வர்றதுக்குத்தான் லாயக்கு.” என்று கூறி ஒருவன் சிரிக்க…  மற்ற அனைவரும் உரத்துச் சிரித்தனர்.

பக்காவாகப் பேசி  அனைத்தையும் முடிவ  செய்தவர்கள்.  நன்றாக போதையேறியதும் உணவகத்தில் மூக்குப் பிடிக்கத் தின்றுவிட்டுக் கலைந்தனர்.

—-காற்று வீசும்.