mazhai-26

mazhai-26

மழை – 26

இளஞ்சிவப்பு நிறப் பட்டுப்புடவை மதியின் மேனியைப் பாந்தமாய் தழுவியிருக்க அந்நிறம் அவளின் முகத்தில் பட்டு பிரதிபலித்தது போல் முகமும் இளஞ்சிவப்பு நிறம் பூசி ஜொலித்தது.

பார்வையோ தன் முன் நிற்கும் கணவனைத் தவிர பல்வேறு முறை வந்துச்சென்ற அவனின் அறையைச் சுற்றிவர அதையும் முழுதாய்க் காண முடியவில்லை கண்ணைப் பறித்த கட்டிலின் அலங்காரத்தினால். 

அன்றைக்கென்று பார்த்து அவளின் பேச்சும் சதி செய்தது. அரசனிடம் இயல்பாய் பேசவும் ஏன் பார்க்கவும் கூட எங்கிருந்தோ வந்த கூச்சம் தடுக்க என்ன செய்வது என்று தெரியாமல் தாய் கொடுத்து குடிக்கச் சொன்ன பால் சொம்பை டேபிளில் வைத்தவள் அருகில் உள்ள கட்டிலில் படுத்து போர்வை போர்த்த ஆரம்பித்தாள். 

அவ்வளவு நேரமும் அவளின் முகபாவனையை ரசித்திருந்தவன் இப்போது வாய்விட்டு சிரித்தபடி நெருங்கி அவள் என்னவென உணரும் முன்பே போர்வையோடு அலேக்காய்த் தூக்கியிருந்தான் தன் சரிபாதியை.

இதை எதிர்பாராமல் திடுக்கிட்ட மதி, “ஆஆ… மாமா என்ன பண்ணுறீங்க?” என்று கத்த 

“ஷ்… கத்தாத. இதான் என் மதி. அதை விட்டுட்டு பூனைக்குட்டி மாதிரி பதுங்கி ஓடுனா நல்லவா இருக்கு?” என்று பால்கனியை நோக்கிச் செல்ல 

“இன்னும் எத்தனை நாலு கால் ஜீவராசிங்களைத்தான் இழுப்பீங்களோ? முடியல” என்றவள் அவன் போகும் பாதை அறிந்து, “மாமா இன்னைக்குமா அங்க? நான் வரலை என்னை விடுங்க” என்று திமிர ஆரம்பித்தாள்.

“அதென்ன இன்னைக்குமா? ஏன் இன்னைக்கு என்ன?” என்று அரசன் வினவ 

கணவன் போட்டு வாங்குவதை உணர்ந்தவள், “அதெல்லாம் எனக்கு தெரியாது. விடுங்க” என்றாள் கைகளை கழுத்தில் கோர்த்துக்கொண்டே 

“வாய் ஒன்னு சொல்லுது கை வேறொன்னு செய்யுதே மதி…” என்றவாறு அவளைக் கீழே இறக்கி விட போர்வை சரிந்து விழுந்தது.

வானில் முழுநிலவு, ‘ஐயையோ இவங்களா!’ என்று ஒளிய இடம் தேடி முழுதாக இருந்ததால் நகரும் மேகத்துக்குள் ஒளிய இடமின்றி தவிக்க அடுத்து அரசன் செய்த செயலில் ‘ஹப்பாடி!’ என்று ஆசுவாசமடைந்து பிரகாசித்தது.

தன் வேட்டியின் பாக்கெட்டில் இருந்து துணிமடிப்பை எடுத்தவன் அதனை விலக்கி அந்த பொருளை எடுக்க நட்டுவக்காலி பாசியுடன் புலிப்பல் கோர்த்து இன்ன பிற வேலைப்பாடுகளுடன் இருந்தது மலைவாழ் மக்களின் தாலி.

மதிக்கு அதைப் பார்த்ததும் என்றோ காட்டில் பௌர்ணமி இரவில் நடந்த திருமணம் நினைவு வர முகம் புன்னகையைத் தத்தெடுத்தது.

அதைப் பார்க்காமல், “மதி வந்து… நான் இப்போ இங்க வந்துட்டாலும் என்னால அங்க உள்ள பழக்க வழக்கங்களை முழுதா மறக்க முடியாது. கல்யாணம் பண்ணித் தாலி கட்டியாச்சிதான்… நீ என் பொண்டாட்டிதான் ஆனாலும்…” என்று தயங்கியவன் “இதையும் சேர்த்து கட்டிருறேனே” என்று கெஞ்ச

கொஞ்ச நேரம் காணாமால் போயிருந்த மதியின் குணம் மீண்டது. “ஹாஹா மாமா என்னதிது கட்டுறேன்னு கட்டுனா நான் வேணாம்ன்னா சொல்லுவேன்? அதுக்கு போய் கெஞ்சிக்கிட்டு… இதுன்னு இல்லை இன்னும் எத்தனை தாலி இருந்தாலும் சரி. டெய்லி ஒரு தாலினாலும் சரி… நான் வாங்க ரெடி” என்று குறும்பு கொப்பளிக்கும் குரலில் கூற

அரசனுக்கு தோன்றியதெல்லாம் ஒன்றுதான் இவளை எப்போதும் இப்படியே துருதுருப்பு மாறாமல் வைத்துக்கொள்ள வேண்டும் என்று. 

“தினம் ஒரு தாலியா? ஏத்தம்தான்டி உனக்கு” மலைமுருகனை மனதில் நினைத்து அக்னி சாட்சியாக காலையில் தாலி கட்டியவன் இரவில் நிலவைச் சாட்சியாக வைத்து இரண்டாம் முறையாக தாலியைக் கட்டியிருந்தான்.

அதனையேத் தொட்டு உற்றுப் பார்த்த மதி, “மாமா இந்தத் தாலி இங்க எப்படிக் கிடைச்சது? நான் பார்த்ததே இல்லையே” ஆராய்ச்சியாக கேட்க 

“இதை வாங்க நான் ஆறு மாசம் முன்னாடி பத்து நாள்ல வந்துருவேன்னு வீட்டுல சொல்லிட்டு கிளம்புனேன். ஆனா மலை இறங்குறதுக்குள்ள ஐயா மேல வந்துட்டாரு. நம்ம கல்யாணத்துக்கு ஆசிர்வாதம் பண்ணி தாலியை கைல குடுத்துட்டு போய் ஆக வேண்டிய வேலைய கவனி. பத்து நாள் உன் வேலையைத் தள்ளிப்போடாதன்னு அன்னைக்கே இடத்துல மரம் வைக்குறதுக்கும் சம்மதம் தந்துட்டார்” அன்றைய நாளின் நியாபகத்தில் பரவசமாகக் கூறினான்.

“ஒஹ்… என்னையும் கூப்பிட்டிருக்கலாம்ல நானும் ஐயாவ பார்த்திருப்பேன்” கைகள் இன்னமும் பாசிமணியைச் சோதித்துப் பார்த்தது.

“ஆராய்ச்சி பண்ண இன்னும் எவ்வளவோ இருக்க இதையே எத்தனை நேரம் பார்த்துட்டு இருப்பியாம்?” அரசனின் கை மதியின் கையைப் பற்றி இழுத்து பாசிமணிக்கு விடுதலையளித்தது.

“என்ன என்ன ஆராய்ச்சி…?” மதியின் மனதிற்குள் திக் திக். 

“அதை செய்யும்போது சொல்றேன்” என்றபடி அவளின் பூ முகம் நெருங்க, 

“வேணாம் தள்ளிப்போங்க…” அவனைத் தள்ளி விட இந்த முறை அரசன் அசையக்கூட இல்லை.

“கட்டுறேன்னு கட்டினா வேணாம்ன்னு சொல்ல மாட்டல்ல?” அவளின் இடையோடு கைகோர்த்துக் கட்டியணைக்க 

“மாமா… நான் தாலிய சொன்னேன்!” அழாக்குறையாக நெளிந்தாள்.

“எனக்கு எல்லாமே ஒன்னுதான்… இப்போ ஆராய்ச்சி பண்ணப் போகலாமா? கூடவே நிறைய தப்பும்” மதி சுதாரிக்கும் முன் வேட்டியை மடித்துக் கட்டியவன் வந்தது போல மனைவியைக் கைகளில் அள்ளிக்கொண்டான்.  

அவர்கள் கொண்டு வந்த போர்வையோ அனாதையாக பால்கனியை அலங்கரித்து.

நீ நடக்கும் பொழுது நிழல் தரையில் படாது 

உன் நிழலை எனது உடல் நழுவவிடாது. 

பேரழகின் மேலே ஒரு துரும்பும் தொடாது

பிஞ்சு முகம் ஒரு நொடியும் வாடக்கூடாது.

உன்னை பார்த்திருப்பேன் விழிகள் மூடாது

உன்னைத்தாண்டி எதுவும் தெரியக்கூடாது

தாரமே தாரமே வா 

வாழ்வின் வாசமே வாசமே நீ தானே…

************************************************

சேலம் தனியார் கல்லூரி தாவரவியல் துறை 

“மேம் நாங்க ப்ராஜெக்ட்ட அரசன்காட்டுல போய் பண்ணலாம்ன்னு இருக்கோம் சோ ஒரு டூ டேஸ் பெர்மிஷன் தாங்க ப்ளீஸ்…” ஐந்து பேர் இருக்க அதில் ஒரு பெண்ணின் குரல் இது.

“நீங்க எப்படி போவீங்க? யாரும் சாமான்யமா நுழையக்கூடாதுன்னு கோட்டை மாதிரி வெளிவாசல் கட்டிருக்காங்க. உள்ளே இருக்குற காட்டுக்கு விட மாட்டாங்களே. தாவரத்தோட மரபு பற்றி தானே நீங்க எடுத்துருக்கீங்க இங்கயே பண்ணுங்க” என ஹெட் மறுக்க

“மேம் நாங்க உள்ளே போக பெர்மிசன் வாங்கிட்டோம். மார்னிங் போயிட்டு இவினிங் த்ரீக்கு வெளிய வந்துருவோம். ஒரு மணி நேர பயணம்தான்” மற்றொரு பெண்ணின் குரல்.

ஹெட் யோசித்தார். 

“எஸ் மேம். அதுவும் அரசன் சாரே கூட்டிட்டு போறேன்னு சொல்லிருக்கார். எங்களுக்கு அங்க இருக்குற மரத்தோட மரபு பத்தி ஆராய்ச்சி பண்ணத்தான் விருப்பம்… பத்து வருசத்துல இப்படி ஒரு அசுர வளர்ச்சி காடு எப்படி சாத்தியம்ன்னு பார்க்கணும்” மூன்றாவது பெண்.

“எனக்கு அவரைப் பார்த்து ஒரு ஆட்டோகிராப் வாங்கணும். வாட் ய கிரேட் பெர்சன்” புகழ்ந்தாள் அடுத்த பெண்.

கடைசிப்பெண் மனதினுள், ‘இவ ஒருத்தி பழங்காலம்… இன்னும் ஆட்டோகிராப்ல இருக்கா நானெல்லாம் செல்பி எடுப்பேனா இருக்கும்’ என்றாள். (அடுத்து நீயா! மதிக்கு தெரிஞ்சா செத்தமா நீ)

கடைசியில் ஹெட் சம்மதம் கிடைத்ததும் குதித்துக்கொண்டு ஓடினர். இவர்கள் உற்சாகத்திற்கும் காரணம் உண்டு. அரசன் பெரும் காட்டைக் குறுகிய காலத்தில் உண்டாக்கியதால் உலகம் முழுக்க பிரபலம் அடைந்திருந்தான். 

இது போல் காட்டை உண்டாக பலரும் முன்வர அவர்களுக்கு உதவி செய்த கையோடு தண்ணீர் இல்லாத காரணத்தால் அக்காட்டை வாட விடாமல் செழிப்பாக்க யாருக்கும் தெரியாமல் மழை பொழியவும் செய்வான். ஓரளவுக்கு தாக்கு பிடித்துவிடும் என்று தெரிந்ததும் அடுத்த இடம் தேடிப்போவான். இதனால் எல்லாம் அவன் குடும்பத்தைப் பிரிந்திருப்பதில்லை. எங்குச் சென்றாலும் மாலையில் வீட்டில் இருப்பான் இல்லையென்றால் அவனின் பெரிய வாலையும் அவள் பெற்ற இரண்டு சின்ன வாலையும் சமாளிக்க முடியாதே!

ஆம்… மூத்ததாக பையன் பிறக்க தந்தை சக்திவேலின் பெயரையே மகனுக்கும் வைத்துவிட்டான். ஏழு வயதில் பயங்கர பக்குவம் தந்தையைக் கொண்டு ஆனால் அவனும் மாலையில் தந்தையைக் காணவில்லை என்றால் தாயுடன் சேர்ந்துவிடுவான்.

அடுத்து அவனின் தங்கை ஐந்து வயது நிலா. மதியின் நேரடி வாரிசு. அவள் செய்தது செய்யாதது எல்லாம் சேர்த்துச் செய்யும் தந்தை மற்றும் அண்ணனின் செல்லச்சீமாட்டி. தாயிக்கு வம்புக்காரி.

முதலில் காட்டிற்காக ஆழமாக குழி தோண்டி நெருக்கமா காட்டில் இருப்பதை போல் மரத்தை வைத்துவிட்டான். மழையும் நன்றாக பொழியக் கேட்கவும் வேண்டுமா? பத்தாண்டுகளில் ஐம்பது வருடத்திற்கான வளர்ச்சியைப் பெற்றிருந்தது அவனின் காடுகள். அவன் உருவாகியதால் ஆறு ஊர்களின் பெயரும் மறைந்து அவ்விடம் அரசன்காடு ஆனது. 

கூடவே அத்தனையும் ஒன்றாக பாதுகாக்க முடியாது என்பதால் கோட்டைச் சுவர் வேறு பல அடிகள் உயர்ந்திருந்தது. மரங்களோ அதனையும் தாண்டி வானத்தை தொட்டுவிட துடித்துக்கொண்டிருந்தது. 

இத்தனை வருடத்தில் அரசன் இன்னமும் கம்பீரமாகியிருக்க மதி சற்று பூசினார் போல் ஆகியிருந்தாள். அதனால் இப்போது இவர்களைச் சேர்த்துப் பார்த்தாலும் அனைவரும் வியப்படையவே செய்வர் எப்படி இப்படி ஒரு ஜோடி பொருத்தம் என்று அவர்களின் தோற்றத்தில் மட்டுமல்ல செயல்களாலும்தான்.

விவசாயத்தையும் விட்டுவிடாமல் மறுபக்கம் கோலோச்சுக் கொண்டிருக்கிறான் அரசன். பாக்டரி இருந்த இடத்தில் இப்போது இருப்பதெல்லாம் பழ மரங்களே.

அரண்மனையிலே இப்போது எல்லோரும் தங்கிவிட தாத்தா பாட்டிக்கு வயோதிகத்தைத் தவிர வேறு எந்தத் தொந்தரவு இல்லை. கீதா அழகேசனுக்குப் பேரன் பேத்தியைப் பார்க்கவே நேரம் சரியாயிருக்க மதி வெட்டியாக இருக்க மனமின்றி சென்னை கடை மற்றும் கணவன் தொழிலின் கணக்கு வழக்கைக் கையில் எடுத்துக்கொண்டாள். 

விடுமுறை என்பதால் இரண்டு பிள்ளைகளும் வீட்டில் இருக்க அரசனும் எங்கும் செல்லாமல் மனைவி மக்களின் பின் சுற்றிக்கொண்டிருந்தான்.

நடுக்கூடத்தில் நிலா போனில் நோண்டிக்கொண்டிருக்க, “நிலா… எவ்வளவு நேரமா சொல்றேன் அதைக் கீழ வையுன்னு இப்போ வந்தேன்னா பின்னிடுவேன்” லேப்டாப்பில் கணக்கை ஏற்றிக்கொண்டிருந்தவள் மகளைப் பார்த்து கத்தினாள்.

“நீ மட்டும் நோண்டுற? பாரு இப்போ கூட லேப்டாப்பில கேம் தான விளையாடுற?” என்றாள் நிலா தாயிடம்.

அடிங்க… யாரைப் பார்த்து என்னடி சொல்ற உன்னை…” 

அப்போது உள்ளிருந்து வந்த கீதா, “இப்படித்தான் நாங்களும் ஒரு காலத்துல கத்துனோம் காதுல வாங்குனாத்தானே? என்று மகளுக்கு ஒரு கொட்டு வைத்தவர் பேத்தியிடம், “பாட்டி உன்னோட பாரதியார் பாட்டைக் கேட்கவே இல்லைடா… எனக்காக இன்னொரு வாட்டி பாடிக்காமி பார்ப்போம்” என்றார்.

இரண்டு நாட்களுக்கு முன்னே பாரதியார் பிறந்தநாளுக்காக பள்ளியில் பாட்டுப்போட்டி வைத்திருக்க அதில் இரண்டாம் பரிசு வாங்கியிருந்தாள் நிலா. பாட்டி கேட்டதும் தன் மழலைக்குரலில் அன்று பாடிய அச்சமில்லை அச்சமில்லை பாடாமல்,

தந்தை நேற்று இரவு தாயிடம் பாடிய  

“காடு காடு காடு 

காடு இல்லையேல் காடு இல்லையேல் 

நாசமாய்ப் போகும் நாடு நாடு நாடு”

எனவும் அரசன் உதட்டைக் கடித்தான். காதல் பற்றி பாரதியார் கூறியிருக்க அதனைத் தான் மாற்றி மனைவியிடம் பாடிய பாட்டு இது. தமிழ் நூல்களுடன் இத்தனை ஆண்டுகள் நல்ல பழக்கமும் வந்திருந்தது.

கீதா முழித்தார், “ஏண்டா குட்டி… இப்படி ஒரு பாட்டு இருக்காடா. நான் கேட்டதே இல்லையே” என

“அப்படித்தான் அம்மாவும் கேட்டாங்க பாட்டி… அதுக்கு அப்பா, பாரதியார் இப்போ இல்லை. இருந்திருந்தா இப்படித்தான் பாடியிருப்பாருன்னு சொன்னாங்க” என்றாள் பாவனையாய்.

“அடியே அப்போ நைட் நீ தூங்கலை அப்படித்தானே? அப்போ ஏண்டி எழுந்துக்காமல் படுத்தே இருந்த” மகளிடம் அடுத்த சண்டைக்கு தயாராக,

“பிள்ளை தூங்குன பிறகு பேசாம தூங்குறது பெத்தவங்களுக்கு அழகு அதை விட்டுட்டு பாட்டு பாடி ரெண்டு பெரும் எழுப்பி விட்டுட்டு பிள்ளையையும் திட்டுவியா? நீ வாடா நான் உனக்கு பிடிச்ச தேங்கா மிட்டாய் செஞ்சிருக்கேன். நல்லாருக்கான்னு டேஸ்ட் பண்ணிச் சொல்லு” என்றவாறு அழைத்துச் சென்றார்.

செல்லும் முன் நிலா தாயிற்கு வக்கணைக் காட்டிவிட்டுப் பாட்டியின் பின்னால் சமர்த்துப்பிள்ளையாகப் போக பல்லைக்கடிக்கத்தான் முடிந்தது இவளால். 

இத்தனை பிரச்சனையிலும் தலையிடாமல் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த கணவனை மதி முறைக்க, அவனோ கண்ணில் சிரிப்புடன் புருவத்தை உயர்த்தினான்.

அதேநேரம் பின்வாசல் வழியாக வந்த சக்திவேல், “அப்பா… இந்த செடி பாருங்களேன். இது என்ன” என்றவாறு வந்தான். அநேகமாக அது ஒரு மூலிகையாக இருக்கக்கூடும்.

மகளிடம் அப்படிக் கத்தியவள் மகனிடம், “டேய் நீ ஏன்டா நேரம் கிடைச்சா விளையாடாம இப்படி பெரியவனாட்டம் நடந்துக்குற? அப்போ அப்போ நீ என் புள்ளையா இல்ல போதிமரத்தடி புத்தரான்னு டவுட் வருதுடா” என 

மகன் நிஜமாகவே போதிமரத்தடி புத்தராகத்தான் தாயைப் பார்த்து வைத்தான். அதைக் கண்டதும் வாழ்க்கையே வெறுத்தது போல் ஆனது மதிக்கு. “இருங்க மா… இந்த செடி டிபரென்ட்டா தோட்டத்துல இருந்துச்சி. அதைப் பத்தி தெரிஞ்சிட்டு விளையாடுறேன்” பதில் கூறியதோடு தந்தையும் மகனும் பேச்சில் மூழ்கினர்.

“ஒருத்தரும் மதிக்குறதில்லை. போகட்டும் எத்தனை நேரம்ன்னு நானும் பார்க்குறேன். நைட் எல்லாரும் என்கிட்டத்தான் வரணும் அப்போ இருக்கு” மனதினுள் கருவினால் மதி.

இதுதினம் நடக்கும் கூத்துதான். பகலில் எவ்வளவு வெறுப்பேத்தினாலும் இரவில் தூங்க இருவருக்கும் தாய் வேண்டும். மூவருக்கு என்று சொல்ல வேண்டுமோ? பிள்ளைகளுக்கு நடுவில் படுப்பவள் அவர்கள் உறங்கியதும் இவளிற்காக உறங்காமல் காத்திருக்கும் உயிரிடம் சரணடைவாள்.

அன்றும் அப்படித்தான் ஆனது. பிள்ளைகளிடம் என்னத்தான் வம்பிழுத்தாலும் அவளும் ஒரு தாய்தானே. பாசமாக இரவில் அரவணைத்துக்கொள்ள அவர்கள் உறங்கியதும் எழுந்து கணவனைத் தேடி பால்கனி சென்றாள்.

என்ன வேலையிருந்தாலும் பால்கனியில் தனித்திருக்கும் பொழுதுகளை இவர்கள் இழக்கவில்லை. அது அவர்களுக்கே அவர்களுக்கான ஏகாந்தப் பொழுதல்லவா? நேற்று மழை பொழிந்ததால் அறையில் இருந்தே பேச மகளிடம் மாட்டியிருந்தனர்.

இப்போதெல்லாம் மழையை தங்கள் இடத்தில் அழைப்பதே இல்லை… மாதம் மும்மாரி மழைப்பொழிவை காடுகளின் பலத்தால் பெற்றுவிடும் வாணிமாபுரமும் அரசன்காடும்.

தனக்காக காத்திருந்தவனிடம் வந்தவள், “ஷப்பா… நல்ல வேலை வேற எதுவும் கேக்காம இதை மட்டும் கேட்டா உங்க பொண்ணு… இனி அங்க வச்சி பேசுவோம்?” என்றவாறு நெஞ்சில் சாய்ந்தாள்.

“நானும் அதைத்தான் நினைச்சேன்… அப்படியே உன்னை மாதிரில” என்றான். 

“ஆமாம்… பையன் உங்களை மாதிரி இருக்கான் அப்போ பொண்ணாவது என்னை மாதிரி இருக்க வேணாமா?” என்றாள்.

“இருக்கட்டும். யாரு வேணாம்ன்னு சொன்னது?” என்பதற்குள் மழையின் முதல் துளி அன்று போல் மதியின் உதட்டில் பட்டுத் தெறித்தது.

அரசனின் கவனம் இப்போது மதியின் உதட்டிற்குப் போக, மெதுவே அம்முதல் துளியைத் தன் தொண்டையில் சரித்துக்கொண்டான் காதலுடன். 

அதன் பின் பல துளிகள் அவர்களின் மேல் விழுந்தாலும் அவர்களின் காதல் மழையைத் தோற்கடிக்க முடியாமல் அவர்களை நனைத்துச்செல்ல நாமும் அம்மழையில் நனைந்தே நிலவரசன் வான்மதியிடம் விடைபெற்றுச் செல்வோமாக!

மழையில் நனைவோம்…

மழையாக நான் வந்துவிட்டேன்

எனக்குள் நீயும் கரைந்துவிட்டாய்

நீ நான் வேறில்லை… நனைவோம் நாமாக! 

 

   

 

 

 

error: Content is protected !!