அவனன்றி ஓரணுவும் – 18

யோகாவில் சமாதி நிலை என்பது எந்தவித எண்ணங்களும் இல்லாது கண்களை மூடி அமர்ந்திருப்பது என்பதாகவே நம்மில் பலரும் புரிந்து கொண்டிருக்கிறோம்.

உண்மையில் சமம்+ ஆதி = சமாதி, அதாவது ஆதியும் அந்தமுமாய் இறைநிலைக்கு சமமான வெறுமையான மனநிலையே சமாதி நிலையாகும்!

பூமிக்கும் வானிற்குமான இடைவெளியே காணாமல் போகுமளவுக்கு அந்த கடலலைகள் மலையாக உயர்ந்து எழும்பிய காட்சியை பார்த்து எல்லோரின் விழிகளும் ஸ்தம்பித்துவிட்டன.

பூமி ஒரு சில வினாடிகள் தன் இயக்கத்தை நிறுத்திவிட்டது போல எல்லோரும் அந்த பயங்கர காட்சியை பார்த்தபடி தங்கள் இயக்கங்களை நிறுத்திவிட்டனர்.

தொலைக்காட்சியில் பார்த்த கூட்டமும் சரி!  நேரில் அந்த ஆக்ரோஷமான அலைகளின் சீற்றத்தை பார்த்து கொண்டிருக்கும் கூட்டமும் சரி! அச்சத்தில் உறைந்தனர்.

எல்லோரின் பார்வையிலும் அப்போது தெரிந்தது அதிர்ச்சி! அதிர்ச்சி! அதிர்ச்சி! மட்டும்தான்.

அந்த பேரலைகளின் அசாதாரணமான வேகத்தின் முன்னே எதுவுமே நிற்க கூட முடியாது. மண்ணோடு மண்ணாகி போவது உறுதி. மிச்சம் மீதியாக அதுவே பாவம் பார்த்து எதையாவது விட்டுவைத்தால்தான் உண்டு. நல்ல வேளையாக அங்கே மனித தலைகள் எதுவும் தென்படவில்லை. இருப்பினும் பொருட்சேதங்களை தவிர்க்க முடியவில்லை.

ஆங்காரமாக சீறிய கடலிற்கு தன் வழி பாதையில் நின்றிருப்பது ஒரு ஆடம்பரமான அழகிய மாளிகை என்றும் தெரியாது. ஒரு ஏழையின் குடிசை என்றும் தெரியாது. அடித்து துவம்சம் செய்துவிட்டு கடந்து சென்று கொண்டேயிருந்தது.

நிறைய மீன்பிடி படகுகள் அந்த அரக்க அலைகளிடம் சிக்கி சின்னாபின்னமாகின. இன்னும் சில படகுகள் தூரமாக தூக்கி வீசப்பட, அது சிலரின் மீது விழுந்து அவர்கள் பரிதாபமாக இறந்த காட்சி மனதை உருக்குவனவாக இருந்தன.

இன்னும் எத்தனை தூரம் தன் எல்லைகளை விஸ்தரித்து கொண்டு வர போகின்றன அந்த கடலலைகள்  என்று மிரண்டு அரண்டு போயிருந்தன அந்த மனித பதர்கள். “முடிந்த வரை என்னை மட்டுமாவது காப்பாற்றிவிடு” அவரவர்களின் விருப்ப தெய்வங்களை மருகி உருகி வேண்டி கொண்டனர்.

எதுவும் நம் கையில் இல்லை. எல்லாமே அவன் கையில்!

நம் சக்திக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் இந்த உலகில் இருக்கின்றன என்று மனிதன் இப்படியான சந்தர்ப்பங்களில்தான் உணர்கின்றான்.

அதுவும் ஏதேனும் பிரச்சனையென்று வரும் போதுதான் மனிதனுக்கு கடவுளின் நினைவு வருகிறது. ஒரு வேளை அதனால்தான் தன்னை எப்போதும் மறந்துவிட கூடாது என்று கடவுள் ஒன்று போனால் மற்றொன்று என்று மனிதனுக்கு பிரச்சனைகளை  தந்து கொண்டே இருக்கிறார் போலும்.

ஆனால் சில பேராபத்துக்கள் உருவாவதற்கு கடவுளின் பங்கு என்று எதுவுமே இல்லை. மனிதனாக சில கண்டுபிடிப்புகளை தன் அறிவுகூர்மை மூலமாக படைக்கிறான். ஆனால் அதன் விளைவுகளை பின்னரே அவன் அனுபவிக்க நேர்கிறது.

கத்தியை எடுத்தவனுக்கு கத்தியால்தான் மரணம் என்பார்கள். இந்த அணு ஆயுதங்களும் அது சார்ந்த ஆபத்தான கண்டுபிடிப்புகளும் கூட அப்படிதான்!

நம் விதியை நாமே தீர்மானித்து கொள்ளும் போது அதில் இறைவனை நொந்து கொண்டு என்ன பயன்?!

******

கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்குள்

சுனாமி வருவதற்கு சரியாக ஒரு மணி நேரம் முன்னதாக…

அப்போது அங்கே நடந்தேறி கொண்டிருந்த எதுவும் சரியாகப்படவில்லை. அணுமின் நிலையத்திலுள்ள ஒரு யூனிட்டில் ஏற்பட்ட இயந்திர கோளாறை கண்டறிய வேலை செய்து கொண்டிருந்த அந்த அறிவியல் நிபுணன் திடீரென்று மயங்கி சரிந்தார்.

அந்த அறிவியலாளரின் உடலை சோதித்த போதோ அவர் அந்த கணமே மரணித்துவிட்டார் என்று தெரிந்தது.

அந்த யூனிட்டிலிருந்த பிரச்சனையை கண்டறியவே அவர் அவசரஆவசரமாக வரவழைக்கப்பட்டார். அதுவும் சூழ்நிலை மிகவும் மோசமாக இருந்தது. சுனாமி எச்சரிக்கையால் எல்லோரின் படபடப்பும் அதிகரித்திருந்தது.

இந்த மாதிரியான சோதனைகள் செய்யும் நபர்கள் இயல்பாக அணுக்கசிவுகள் மூலம் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டுவிட கூடாது என்பதற்காக பாதுக்காப்பு உடையும் முகத்தில் திடமான  மாஸ்க்கும் அணிந்து கொள்வது வழக்கம். ஆனால் அப்படியிருந்தும் அங்கே அவரின் மரணம் நிகழ்ந்துவிட்டது.

அது எப்படி நிகழ்ந்தது? எல்லோருக்குமே அது பெரிய புதிராக இருந்தது. அதீதமான அணுக்கசிவினால் உண்டான பாதிப்பாக இருக்கலாம் என்ற சந்தேகமே அவர்களை அச்சுறுத்தியது.

ஆனால் அவரின் இறப்பு பதட்டத்தினால் உண்டான மாரடைப்பாக இருக்கவே வாய்ப்பிருக்கிறது என்று மேலாளர் பூசி மொழுகிவிட்டார். அதற்கு காரணம் அங்கே நடந்தது இயற்கை மரணம் இல்லையெனில் அந்த பாதுக்காப்பு உடையில் குறையிருக்கிறதா என்ற கேள்வி எழும்.

லஞ்சம் தலைவிரித்தாடும் இந்த தேசத்தில் எதிலும் முதல் தரம் என்று ஒன்று இருக்க வாய்ப்பே இல்லை. அது உயிர் காக்கும் உடையாக இருந்தாலும் சரி. (இராணுவ துறையில்தான் அதிகபட்ச ஊழலே நடக்கிறது.)

ஆனால் அந்த மேலாளர் சொன்ன சாமளிப்பு ஒன்றும் அங்கே வேலை செய்யும் ஊழியர்கள் யாருக்கும் நம்பும்படியாக இல்லை. அதேநேரம் உண்மையான காரணங்களை பற்றி விவாதித்து ஆராயுமளவுக்கு அங்கே யாருக்கும் பொறுமையும் இல்லை. நேரமும் இல்லை.

உடனடியாக அங்கிருந்த புறபட்டு அவரவர்கள் தங்கள் தங்கள் உயிரை காப்பாற்றி கொள்ள வேண்டுமென்று பதைபதைப்பில் நின்றனர்.

அப்படியும் பொறுப்பான சிலர் மட்டும், “இதை பத்தி உடனே தெரிவிக்கணும்… அவசர நிலை அறிவிச்சு… பக்கத்துல இருக்க ஊர் மக்கள் எல்லோரையும் வெளியேற சொல்லணும்” என்று சொல்ல,

அங்கிருந்த தலைமை பொறுப்பில் இருப்பவர், “அப்படி ஏதாவது பண்ணி வைச்சா… அவ்வளவுதான்! நாளைக்கே இங்க எதாச்சும் பெருசா விபத்து நடந்தா… அப்புறம் நடந்த எல்லாத்துக்கும் நம்ம கவனக்குறைவுதான் காரணம்னு சொல்லிடுவாங்க… இப்போதைக்கு நம்ம எல்லோரும் இங்கிருந்து புறப்படுவோம்… அப்படியே இங்க இருந்தாலும் இந்த டென்ஷன்ல  எதுவும் நம்மால பண்ண முடியாது… முதல சுனாமி எச்சரிக்கை நீங்கட்டும் ” என்றார். எல்லோருக்கும் அவரவர்கள் தலை தப்பித்தால் போதுமென்றிருந்தது.

அவரின் வாரத்தைகள் சுயநலத்தின் உச்சமாக இருந்தது. கேட்டு கொண்டிருந்த எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.  தான் எந்த பிரச்சனையிலும் சிக்கி கொள்ள கூடாது என்பதில் தெளிவாக இருந்தார்.

அதேநேரம் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த ஆபத்தை யாரும் தலையில் இழுத்து போட்டு கொள்ள விரும்பவில்லை. அப்படியே ஏதாவது அசம்பாவிதம் நடந்தாலும் அதற்கு சுனாமி பேரலைகள்தன் காரணம் என்று பழி போட்டு தப்பி கொள்ளலாம் இல்லையா?

சரியோ தவறோ? எல்லோருமே அவசர அவசரமாக அந்த இடத்தை விட்டு வெளியேற முடிவெடுத்தனர்.

அப்போது அந்த யூனிட்டை விட்டு வெளியே வந்த டெக்னிஷியன் பார்த்த காட்சி அவனை அப்படியே ஸ்தம்பிக்க செய்தது. சில நொடிகளில் சுதாரித்து கொண்டவன் வெளியேறி கொண்டிருந்த எல்லோரையும் அழைத்து அந்த காட்சியை காண்பித்தான்.

சுயநலமே பிரதானமாக இயங்கி கொண்டிருக்கும் இந்த உலகில், இன்றும்  இங்கே வாழும் ஒவ்வொரு ஜீவன்களுக்காகவும் யோசிக்க, சில அற்புதமான மனிதர்களால் மட்டுமே முடியும் ஒன்று.

கடவுள் எங்கே இருக்கிறான் என்று எந்த மதச்சார்புடையவனை கேட்டாலும் அவன் இந்த பிரபஞ்சம்  எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறான் என்றே பதில் சொல்வாரகள்.

வணங்கும் முறைமைகள் வேறாக இருந்தாலும் அனைத்து மதங்களின் அடிப்படை கருத்துக்களும் ஒன்றுதான். அதே போல எந்த மதத்தில் பார்த்தாலும் மனித ரூபத்தில் கடவுள் இருப்பது போலவே காட்டப்படுகிறது. புத்தர், இயேசு, சிவன், விஷ்ணு என்று!

அப்படியே அரூபமாக வழிப்படப்படும் தெய்வங்களுக்கு கூட அந்த மதத்தை பரப்ப, தெய்வ சக்தி பொருந்திய ஓர் மனித ரூபம்தான் தேவைப்படுகிறது.

கடவுள் மனித ரூபத்தில் இருக்கிறானா என்பது இங்கு கேள்வியல்ல. மனிதன் கடவுளாக பார்ப்பதும் வணங்குவதும் தன் ரூபத்தைதான். அதன் மெய்பொருள் சுட்டிக்காட்டுவது கடவுள் என்ற கண்காணா மாய சக்தி ஒவ்வொருவனுக்குள்ளும் உறைந்திருக்கிறது என்பதுதான்.

தன் உயிரை விடவும் பிற உயிரை அதிகமாக நேசிக்கும் மனிதர்கள்தான் அத்தகைய கடவுள் நிலையை மனதளவில் அடைகிறார்கள். உணர்கிறார்கள்!

தான் தன்னுடையது என்ற அகந்தை நிலையிலிருந்து மீள்கிறார்கள்.

பிரபஞ்சனை பதட்டத்தோடு தேடி வந்த ஷெர்லி, அவனை தேடும் ஆர்வத்தில் வீட்டிலிருந்து நடந்தபடி நேராக கடற்கரைக்கு வந்துவிட்டிருந்தாள்.

அங்கே அவள் பார்த்த காட்சி அவளை உலுக்கிவிட்டது. பிரபஞ்சன் அங்கேதான் இருந்தான். அவ்வப்போது முன்னே வந்து பின்வாங்கி கொண்டிருந்த அந்த கடலலைகள் எப்போது தன் சுயரூபத்தை காட்டி தம் எல்லைகளை கடக்குமோ என்றிருக்க, அவனோ அங்கே பத்மாசன நிலையில் அமர்ந்திருந்தான்.

அவளுக்கு சில நொடிகள் அந்த காட்சியை பார்த்து ஒன்றும் புரியவில்லை. அதிர்ந்து நின்றாள். பின்னர் அவள் நிலைமையின் தீவிரத்தை நினைவில் கொண்டு அந்த மணற்பரப்பில் ஓடிவந்து அவன் முன்னே நின்றாள்.

அவன் அப்படி கடலுக்கு அருகாமையில் அமர்ந்திருப்பதை பார்க்க, அவளுக்கு தன் தாத்தாவின் தற்கொலைதான் நினைவுக்கு வந்தது. கிட்டத்தட்ட பிரபஞ்சன் செய்து கொண்டிருக்கும் காரியமும் அப்படிதான் என்று தோன்ற, அவளுக்கு கோபம் பீறிட்டு கொண்டுவந்தது.

அதோடு அவன் அருகில் வந்து, “பிரபா” என்று அவன் தோள்களை உலுக்க போனவள் மறுகணமே  ஓரடி பின்னே தூக்கியெறியப்பட்டாள்.

அவனை தொட்ட மாத்திரத்தில் மின்சாரம் பாய்ந்தது போன்றிருந்தது அவளுக்கு. அதோடு நெருப்பை போல உஷ்ணமாக இருந்தது அவன் தேகம். கொதி நீரில் கை வைத்தது போன்று துடிதுடித்து போனாள். அதற்கேற்றார் போல் அவள் கைவிரல்கள் கூட சிவந்துவிட்டன.

திடீரென்று ஒரு மனித உடம்பு இந்தளவு உஷ்ணத்தை தேக்கி வைக்க முடியுமா? அசாதாரணமாக இருந்தது அவன் தேகத்தின் வெப்பநிலை! அது இயற்கைக்கு முற்றிலும் மாறான ஒன்று! அவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

அவன் அருகாமையில் போகவே அவளுக்கு பயமாக இருந்தது. ஒரெடி தள்ளி நிற்கும் போதே அவன் உடலின் உஷ்ணத்தின் தீவிரத்தை அவளால் உணர முடிந்தது.

இருப்பினும் அவன் அங்கே இருப்பது ஆபத்து என்றெண்ணி பதட்டத்தோடு, “பிரபா… வாட் ஆர் யு டூயிங் மேன்…  கெட் அப்… நாட் சேப் ஹியர்” என்று அவள் கத்தி கூப்பாடு போட்டாள்.

அவனோ எந்தவித உணர்ச்சிகளுமின்றி அப்படியே மரக்கட்டை போல் விழிகளை மூடி அமர்ந்திருந்தான்.

“பிரபா! பிரபா!” என்ற அவளின் பதட்டம் நிரம்பிய குரல் அந்த அலைகளை மீறி கொண்டு ஒலித்த போதும் அவன் கொஞ்சமும் அசைந்து கொடுக்கவில்லை. அவன் தம் விழிகளை திறக்கவுமில்லை.

அப்படியே உடல் விறைத்தநிலையில் அமர்ந்திருந்தவனை என்ன செய்வதென்று புரியாமல் பார்த்தாள். அக்கபக்கங்களில் உதவிக்கென்று கூட யாருமில்லை.

அந்த கடற்கரையே வெறிச்சோடி கிடந்தது.

ஓர் மலையை போல் உறுதியாக அமர்ந்திருந்தான். கடலைகள் பேரலைகளாக வந்தாலும் அவனை அசைத்துவிடுவது அசாத்தியம்.

பிரபஞ்சன் தீவிரமாக தன் உடலில் உள்ள ஏழு சக்கரங்களாகிய (கீழிருந்து மேலாக மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம் அநாகதம், விசுக்தி, ஆக்ஞை, சஹஸ்ரஹாரம்) சுழல் மையத்தை இயக்கி குண்டலினி சக்தியை புருவ மையத்திற்கு கொண்டு வந்திருந்தான். பிராணயாமம் மூலம் ஏற்கனவே இவ்விதம் செய்ய அவன் பயிற்சி பெற்றிருந்தான்.

அந்நிலையில் பரம்பொருளின் எங்கும் நிறைத்தன்மை உணர்ந்து பரம்பொருளுடன் ஒன்றும் நிலையே சமாதி நிலை எனப்படுகிறது. கொங்கணவர் சித்தர் சமாதி நிலையை ஆறுவகைபடுத்துகிறார்.

அதில் கடைசி உயரிய நிலையான ஆருட சமாதி என்பது, ஒருவன் தானே பிரம்மம், தானே இந்த உலகின் அனைத்து பொருட்களின் ஆதாரம் என்று உயரிய நிலையை அடைவது. அந்த ஆதி முதல்வனான அவன்தான் நான்! நானே அவன்!

தற்காலத்தில் அத்தகைய உயரிய யோகநிலையை யாரும் முயன்றதுமில்லை. முயன்றவர்கள் யாரும் மீண்டும் இந்த லௌகீக வாழ்விற்கு திரும்பியதுமில்லை. யோக நிலையில் இறுதி முடிவான நிலையது!

ஷெர்லிக்கு இதெல்லாம் புரிய வாய்ப்புமில்லை. அவளோ ஹரியிடம் இதை பற்றி தெரிவிக்க எண்ணி, தன் பேக்கெட்டிலிருந்த கைப்பேசி எடுத்து அவருக்கு அழைப்பு விடுத்தாள்.

அவர் அழைப்பை ஏற்றதும், “ஷெர்லி நீ எங்கே இருக்க? இங்கே டிவில ஒரே அல்லோலகல்லோலப்படுது… சுனாமி வந்திருச்சு” என்று அவளை பேசவிடாமல் அவர் பேசி கொண்டிருக்கும் போதுதான் அவள் திரும்பி கடலை நோக்கினாள்.

அவள் வாழ்வில் அப்படியொரு காட்சியை இதுவரை அவள் பார்த்ததேயில்லை. பேசுவதற்கு நா எழவில்லை. அவள் காலுக்கு கீழாக பூமி இருக்கும் உணர்வு கூட இல்லாமல் அவள் தலை கிறுகிறுக்க தொடங்கியது.

****நெருப்பறைத் திறந்த பின்பு நீயும் நானும் ஈசனே!****

 

error: Content is protected !!