மேகதூதம் 1
“அம்மா ப்ளீஸ் எனக்கு இந்தக் கல்யாணம் வேணாம். சொன்னா புரிஞ்சுக்கோங்க. என்னை ஃபோர்ஸ் பண்ணாதீங்க. இன்னும் மூணே மாசம், ஆன்சைட் கெடச்சிரும். அப்புறம் நான் அங்க போய் கொறஞ்சது ஒரு ரெண்டு வருஷமாவது வேலை பாத்துட்டு வரேன். அதுக்கப்புறம் நீங்க சொல்ற மாதிரி கல்யாணம் பண்ணிக்கறேன்.” தன் வாழ்விற்காக கெஞ்சிக்கொண்டிருந்தாள் அஞ்சலி.
அஞ்சலியின் தாய் காமாட்சிக்கு அவள் மீது கடும் கோபம் இருந்தது. பின்னே இருக்காதா! நான்கு வருடங்களாக அவள் அஞ்சலியிடம் திருமணத்திற்காக கேட்டுக் கொண்டிருக்கிறாள். அஞ்சலியின் பிடிவாதம் அவளை ஒரு அடி கூட முன்னேற விடவில்லை. அவளும் தனியாக எவ்வளவு தான் போராடுவது. கணவன் இரு பிள்ளைகளோடு அவளை விட்டுவிட்டு எங்கோ சென்று விட்டான். அவளுக்கு இருந்த ஒரு தனியார் துறை வேலையை வைத்துக் கொண்டு குடும்பத்தை காத்து வந்தாள்.
மகளுக்கு ஒரு நல்ல இடத்தில் திருமணம் செய்துவிட்டால், அவளது எதிர்காலத்திற்கு ஒரு வழி செய்தது போல ஆகும் என்று ஆசைப்பட்டாள். எல்லா தாய்க்கும் இருக்கும் நியாயமான ஆசை தானே அது! அஞ்சலியோஅதற்குத் தடை போட்டுக் கொண்டே இருந்தாள். காமாட்சிக்கு பொறுமை போய்விட்டது.
“அஞ்சலி இதுக்கு மேல என்னால காத்துட்டு இருக்க முடியாது. உனக்கு இப்போ வயசு இருபத்து ஐஞ்சு. உனக்கு சின்ன வயசுல கல்யாணம் பண்ணி வெச்சு , எனக்கு உடம்புல தெம்பு இருக்கும் போதே பேரக் குழந்தைகளை வளக்கணும்னு ஆசை இருக்கு. இப்படியே நீ தள்ளி போட்டுட்டே இருந்தா , நாளைக்கு உன்னை யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க, என்னைத் தான்.. மகளுக்கு ஒரு கல்யாணம் பண்ண வக்கில்லாதவன்னு பேசுவாங்க. அந்த அவமானத்தையும் நீ எனக்கு குடு. உங்க அப்பாவால ஏற்பட்ட துன்பம் பத்தாது, நீயும் உன் பங்குக்கு ஏதாவது செஞ்சிட்டு போய்டு, அடுத்து உன் தம்பி இருக்கான் அவன் என்ன பண்ணுவானோ! எனக்கு மனசு வலிக்குது டீ. நான் எவ்வளவு தான் தாங்கறது. நிம்மதியா தூங்கி பல வருஷம் ஆச்சு. எல்லா பாவமும் என்னை சுத்தி சுத்தி அடிக்குது.” தலையில் கை வைத்த படி அமர்ந்துவிட்டாள் காமாட்சி.
“அம்மா அடுத்தவங்களுக்காக நாம வாழக் கூடாது. அவங்க என்ன பேசுவாங்க இவங்க என்ன பேசுவாங்கன்னு பாத்துட்டே இருந்தா , நம்ம வாழ்க்கை நம்மளோடதா இருக்காது. என் வாழ்க்கையை நான் ரசிச்சு வாழனும். எனக்கு கல்யாணம் பண்ணிக்கனும்னு தோண்றப்ப நானே உன்கிட்ட சொல்றேன். அப்போ பண்ணி வை.” அஞ்சலி தாயின் அருகில் வந்து அமர்ந்து பொறுமையாக சொல்ல,
“அதுவரைக்கும் நான் உயிரோட இருக்கணுமே” ஆத்திரத்தில் கத்தினாள்.
“அம்மா என்ன பேசற, பயமுறுத்தி பாக்கறியா?” அஞ்சலிக்கும் கோபம் வந்தது.
“உன்ன பயமுறுத்த முடியுமா, நீ தான் ரொம்ப தைரியசாலியாச்சே, எனக்கு தான் பயமா இருக்கு. நாளைக்கு உனக்கு ஒரு நல்லது பண்ணாம கண்ணை மூடிட்டா என் ஆத்மா நிச்சயம் நிம்மதியா இருக்காது. பேயா தான் அலைய போறேன்.” பல்கலைக் கடித்துக் கொண்டு ஆத்திரத்தை அடக்கினாள் தாய்.
“இதுக்கு மேல பேசுனா இன்னிக்கு நைட்டே எனக்கு கல்யாணம் பண்ணி வெச்சுடுவ, எனக்குப் பசிக்குது வந்து தோசை செஞ்சு தா. அப்படியே கடலை சட்னியும்” எழுந்து முகம் கழுவச் சென்று விட்டாள்.
“உனக்கு கொஞ்சமாவது ஈவு இரக்கம் இருக்கா. உனக்கும் நாளைக்கு புள்ளைங்க பொறந்து அதுங்க படுத்தும் போது தான் உனக்கு என் கஷ்டம் தெரியும். யார் யார் கிட்ட எல்லாம் சொல்லி வெச்சிருக்கேன், எவ்வளவு நல்ல வரன் எல்லாம் தட்டி போகுது தெரியுமா. லவ் பண்ணித்த தொலைச்சா அதையாவது சொல்லு, அவனுக்கே உன்னை கட்டி வைக்கறேன்” புலம்பிக்கொண்டே சமலயறைக்குள் நுழைந்தாள் காமு.
காமுவின் கடைசி வரியில் ஒரு நொடி நின்று பின் மீண்டும் முகத்தைத் துடைத்துக் கொண்டு வந்து சோபாவில் அமர்ந்தாள். டிவி யில் தேடிக் கண்டு பிடித்து ஒரு காமெடி படத்தை ஓடவிட்டாள்.
“பிரபு எங்க இன்னும் வரல” என்று தம்பிக்கு போன் செய்ய தன் கைபேசியை கையில் எடுத்தாள். அதற்குள் கதவைத் திறந்து கொண்டு பிரபு வந்தான்.
“அம்மா எனக்கும் தோசை” ஷூவைக் கழட்டி ஸ்டான்ட்டில் கிடத்திவிட்டு, அம்மாவை நோக்கிக் குரல் கொடுத்தான்.
“வரும் போதே மோப்பம் புடிச்சுக்கிட்டே வருவியா டா” தம்பியைக் கிண்டல் செய்ய,
“வேணாம் டீ கொலை பசில இருக்கேன், காண்டாக்காத” அப்படியே வந்து அமர்ந்தான்.
“போய் கைகால் கழுவிட்டு வா டா.”காமு குரல் கொடுத்தாள்.
அலுத்துக் கொண்டு எழுந்து சென்றான்.
டைனிங் டேபிளில் மூவருக்கும் தோசை , சட்னி சாம்பார் தயாராக இருக்க, ஒன்றாக அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தனர்.
“நாளைக்கு எனக்கு டீம் லன்ச் , அதுனால மத்திய சாப்பாடு வேண்டாம்” பிரபு சொல்ல,
“சரி அப்போ எனக்கும் உனக்கும் மட்டும் வெஜிடபிள் ரைஸ் பண்ணிட்றேன்” காமு அஞ்சலியிடம் உரைத்தாள்.
“ம்ம் சரி. எப்படி டா போகுது உன்னோட ப்ராஜெக்ட். ஏதாவது சொல்லித்தரங்களா?” அக்காவாக அக்கறையுடன் விசாரித்தாள் அஞ்சலி. பிரபு வேலைக்குச் செல்ல ஆரம்பித்து ஐந்து மாதங்கள் தான் ஆகி இருந்தது.
“ம்ம் பரவால்ல , கொஞ்சம் சொல்லித் தராங்க, கொஞ்சம் டாகுமெண்ட்ஸ் குடுத்துடறாங்க. போக போக பிக்கப் பண்ணிடுவேன்” சாம்பாரை கையில் ஊற்றிக் குடித்துக் கொண்டே சொன்னான்.
“ம்ம் ஓகே. அப்பப்ப அந்த நரேன் கூட டச் வெச்சுக்கோ.. அவன் சீக்கிரமே மானேஜர் ஆயிடுவான். கொஞ்சம் ஹெல்ப்க்கு வெச்சுக்கலாம்.” தட்டை கழுவச் சென்றாள்.
“அந்த நரேன் உன்கூட வேலை பாத்தவன் தான, நீயே பேசறதில்ல அப்புறம் நான் எப்படி பேசறது” பின்னாலேயே வந்தான் தம்பி.
“அவன் கொஞ்சம் மொக்க போடுவான் டா. அதுனால தான் பேசறதில்ல. எப்பயாச்சும் பேசுவேன் அவ்ளோ தான்.” முடித்துக் கொண்டாள்.
அவர்கள் இருப்பது இரண்டு அறை கொண்ட அப்பார்ட்மெண்ட். பிரபு தனியறை எடுத்துக் கொண்டதால், தாயும் மகளும் ஒரு அறையில் உறங்குவது வழக்கம்.
எப்போதும் ஏதாவது வளவளக்கும் காமு இன்று தனக்குள் யோசனையில் ஆழ்ந்துவிட, அஞ்சலியும் கண்ணை மூடிக் கொண்டு புதைந்து கிடந்த சில நினைவுகளை தோண்ட ஆரம்பித்தாள்.
கண்களை மறந்தும் திறந்து விடாமல் சில நிகழ்ச்சிகளை மீண்டும் மூடிய தன் கண்களுக்குள் ஓட்டிப் பார்த்தாள். கண்ணீர் பெருகி காதுகளுக்குள் வழிய, ஒருக்களித்துப் படுத்து துடைத்துக் கொண்டாள்.
லேசாக விசும்பல் வர, அதை தாய் அறியும் முன்னர், தொண்டையை செருமிக்கொண்டு சமாளித்தாள்.
“தண்ணி வேணுமா?” காமு எழுந்து கேட்க,
“இல்ல வேண்டாம். நீ தூங்கு.” என்றுவிட்டு , பழைய எண்ணங்களை மீண்டும் மனதில் புதைத்துக் கொண்டு உறக்கத்தில் ஆழ்ந்தாள்.
காமாட்சிக்குத் தான் மனதில் பல கவலைகள் ஓடி உறக்கத்தை மறந்து போகச் செய்தது.
அப்போது அஞ்சலிக்கு பதினான்கு வயது பிரபுவிற்கு பதினொரு வயது. வேலை முடிந்து எப்போதும் போல தாமதமாக வந்த கணவனை எந்தக் கேள்வியும் கேட்காமல் உணவருந்த அழைத்தாள் காமு.
அவளை சிறிதும் சட்டை செய்யாமல், ஒரு பெட்டியில் தன் துணிகளையும், அவனுடைய சில முக்கியமான பேப்பர்களையும் எடுத்து வைத்துக் கொண்டார் பாண்டியன்.
அதை கவனித்த காமாட்சி,
“என்னங்க வெளியூர் போகணுமா?” என்று சிறிதும் சந்தேகப் படாமல் கேட்க,
“என்னை விட்டுடு காமாட்சி. நான் எங்கயாவது போறேன். எனக்கு இங்க இருக்கப் பிடிக்கல” என முகத்தை பாராமல் பதில் உரைத்தார்.
“என்ன சொல்றீங்க ? எனக்கு ஒண்ணுமே புரியல!” கண்கள் கலங்க அவரிடம் கேட்க,
“எனக்கு இந்தக் குடும்பம் , பிள்ளைங்க இந்த தொந்தரவு எதுவும் வேண்டாம். உனக்கு வேலை இருக்கு அதா வெச்சு பிள்ளைங்களை பாத்துக்கோ, இல்லனா உனக்கு பிடிச்ச ஒருத்தனை ..” முடிக்கும் முன்னரே
“போதும் நிறுத்துங்க. என் புள்ளைங்கள பாத்துக்க எனக்குத் தெரியும். நீங்க எங்க வேணா போங்க” அதற்கு மேல் அவரைத் தடுக்கவில்லை.
பெற்ற பிள்ளைகளை ஒரு முறை கூட ஏற்றிட்டுப் பார்க்காமல் அங்கிருந்து கிளம்பி விட்டார்.
மறுநாள் பிள்ளைகளுக்கும் ஊராருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் , “அவர் வீட்டுக்கே வரமாட்டேன்னு போன் பண்ணி சொல்லிட்டாரு” என்று மட்டும் கூறினாள்.
தன் கஷ்டத்தை கூறி அழுதால், பிள்ளைகள் மனம் கலங்கும் என்பதற்காக எதையும் காட்டிக் கொள்ளாமல் சிறிது நாளில் வேறு ஊருக்கு மாற்றல் வாங்கி கொண்டு வந்துவிட்டனர்.
பிள்ளைகளை படிக்க வைத்து , அவர்களின் தேவைகள் , கஷ்டங்கள் என ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து வளர்த்தாள் காமாட்சி .
இருவரையுமே தைரியசாலிகளாக வளர்த்தாள்.
அஞ்சலிக்கு ஒருவேலை கிடைத்ததும் அவளுக்கு அடுத்த வருடமே திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்று எண்ணிணாள். ஆனால் அஞ்சலி அதற்கு மறுத்தாள்.
அஞ்சலிக்கு வளர வளர தாயின் மனக் கஷ்டம் புரிய ஆரம்பித்தது. தந்தையின் மீது அதீத வெறுப்பு உண்டானது. எந்த ஒரு ஆணையும் நம்ப மறுத்தாள். அவனை சந்திக்கும் வரை.