“அஞ்சலி கவலைப் படாத. அவர் எங்க இருந்தாலும் தேடி கண்டு பிடிச்சுடலாம். நாம தங்கி இருந்த அந்த வீட்டு ஓனர் கிட்ட கேட்டுப்பாக்கலாம்.” ரம்யா யோசனையாக சொல்ல,
“அது தான இருக்கற ஒரே வழி. அதை நான் கேட்காம இருப்பேனா. அந்த ஓனர் அவருக்கு எதுவும் தெரியாது, அன்னிக்கு அவர் காலி பண்ணிட்டு போனதோடு சரி சொல்லி முடிச்சுட்டாரு. அதுக்கப்புறம் போன் பண்ணா எரிஞ்சு விழறாரு. ரிஷியோட தூரத்து சொந்தம் அவரு. அவங்கள பத்தி எதுவுமே தெரியாதுன்னு சொல்லிட்டாரு. அவங்க வீட்டு அட்ரஸ் கூட தரல. எனக்கே தெரியாதுன்னு சொல்லிட்டாரு. எத்தனை தடவ போன் பண்ணி திட்டு வாங்கியிருக்கேன் தெரியுமா” அவளின் முயற்சிகளை சொல்ல,
ரம்யா அந்த வழியும் அடைப்பட்டதை நினைத்து வருந்தினாள். ஆனால் அஞ்சலிக்கு தைரியம் சொல்ல,
“நீ கவலைப் படாத நாம வேற யாரையாவது விட்டு கேட்க சொல்லலாம். அப்போ அந்த ஆள் கண்டிப்பா சொல்லுவான்.” என்றாள்.
“சொல்வானா ரம்மி?” ஒரு சிறு வழி கிடைத்தது என்று மகிழ்ந்தாள் அஞ்சலி.
“எல்லாம் சொல்லுவான், ரிஷி கண்டிப்பா உன்னை நினைக்காம இருக்க மாட்டாரு அஞ்சலி.அவரே உன்னை தேடி வருவாரு பாரு” ரம்யா ஆறுதல் கூற ,
“அப்பை நினச்சு தான் நாலு வருஷம் ஓடிடுச்சு. இது அஞ்சாவது வருஷம் ரம்மி. ” மீண்டும் வருந்தி முகத்தை சுருக்க,
“ஹே ஹே, இங்க பாரு ! கண்டிப்பா நீயும் ரிஷியும் கல்யாணம் பண்ணி, சந்தோஷமா இருக்க தான் போறீங்க. என் மனசு சொல்லுது. பீல் பண்ணாத.” அவளது கண்களைத் துடைத்து அனைத்து கொண்டாள் ரம்யா.
“உனக்கு தெரியாது ரம்மி. இத்தனை வருஷமா எவ்வளோ கஷ்டப் பட்டுட்டு இருக்கேன் தெரியுமா. எதை பார்த்தாலும் அவர் ஞாபகம் தான். மனசுக்குள்ளயே வெச்சு புழுங்கிட்டு இருக்கேன். இன்னிக்கு தான் உன்கிட்டயாவது சொல்ல வாய்ப்புக் கிடைச்சுது.” அஞ்சலி கலங்கினாள்.
“நீ பேசமா உங்க அம்மா கிட்ட விஷயத்தை சொல்ல வேண்டியது தான?” ரம்யா கேட்க,
“என்னனு சொல்லுவேன்? இப்படி ஒருத்தர நான் விரும்புனேன் ஆனா அவர் எங்க இருக்காரு, அவங்க வீடு எங்க இருக்குன்னு எதுவும் தெரியாதுன்னு சொல்லவா? இவர் கிட்டேந்து எந்த ரெஸ்பான்ஸும் இல்லாம நான் எப்படி சொல்வேன் ரம்மி.?” அவளது நிலையை அஞ்சலி எடுத்துக் கூற,
“சரி, அவங்க கம்பெனி பேர் உனக்கு தெரியும்ல அதை வெச்சு தேடிப் பார்த்தா என்ன?” ரம்யா அடுத்த வழியை முன் வைக்க,
“இல்ல ரம்மி. அந்த கம்பெனியே மூடிட்டாங்கனு சொன்னாங்க. எனக்கு அதை கேட்டது லேந்து தான் இன்னும் பயமா இருக்கு. கம்பெனிய திரும்ப பெரிய லெவல்ல கொண்டு வரணும்னு தான் அவர் போனதே! ஆனா இங்க லோக்கல்ல இருந்த கம்பெனிய மூடிட்டாங்கன்னு சொன்னாங்க.” கண்களில் நீர் கோர்த்துக்கொள்ள,
“சரி சரி. நமக்கு ஏதாவது ஒரு வழி கிடைக்கும். கவலை படாத. இதெல்லாம் கொஞ்ச நேரம் ஒதுக்கி வெச்சுட்டு வா நாம ஷாப்பிங் போகலாம். உனக்கு என்ன வேணுமோ வாங்கிட்டு வரலாம்” என அவளை திசை திருப்பினாள் ரம்யா.
நேற்று அடித்த போதை தெளிந்துவிட்டாலும் , தலைவலி பின்னி எடுத்தது ரிஷிக்கு. தலையைப் பிடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்தான்.
அருகில் இருந்த தனது செல் போனில் நேரத்தைப் பார்த்தவன், சலிப்பாக எழுந்து சென்றான்.
அவனது மியூசிக் சிஸ்டமில் இளையராஜாவின் எண்பதுகளில் வந்த பாடல்களை ஓடவிட்டான். சற்று தெம்பு வருவது போல இருந்தது . ஒரு பாட்டில் நீரை மொத்தமாகக் குடித்தான். பின்பு தனது டம்பில்ஸ்சுடன் சிறிது நேரம் செலவிட்டுவிட்டு நேரே ஷவருக்குச் சென்றான்.
தலை வலி இப்போது இல்லை.
ஒரு ஏப்றனை கட்டிக்கொண்டு தானே சமைத்தான். சூடாக சாம்பார் வைத்து ரைஸ் குக்கரில் சாதம் வெந்து விட அதை ஊற்றிக் கொண்டு நிம்மதியாக உண்டான்.
அவனது அசிஸ்டன்ட்டுக்கு போன் செய்தான்.
“சொல்லுங்க பாஸ்.” அந்தப் பெண்ணின் குரலில் ஆர்வம் இருந்தது.
” ஷில்பா, நாளைக்கு நம்ம கம்பெனியோட ரெண்டாவது வருஷம் முடியுது. அதுக்கு எல்லாருக்கும் லஞ்ச் அர்ரேன்ச் பண்ண சொன்னேனே, பண்ணிட்டீங்களா?” தன வேலையில் மட்டுமே அவனுக்கு கவனம் இருந்தது.
“பண்ணியாச்சு பாஸ்.
நீங்க எத்தனை மணிக்கு வரீங்க?” அவனிடம் பணிவாகக் கேட்க,
“வரேன். லன்ச் க்கு முன்னாடி அங்க இருப்பேன்” வைத்துவிட்டான்.
சிறிது நேரம் யோசனையில் இருந்தவன், வாழ்வில் இனி தனக்கு என்ன தான் மிச்சம் இருக்கிறது என்று நினைத்துப் பார்த்தான்.
அவனது தந்தை சக்கரவர்த்தியின் பிசினெஸ், காய்கறி மற்றும் மளிகை பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வது. இவன் அதில் கால் பதித்த பிறகு, அதையே பெரிய வகையில் செய்து வந்தான். அவனது தந்தையோ உள்ளூரில் இருக்கும் வியாபாரிகளிடம் மட்டுமே கணக்கு வைத்திருந்தார். ஆரம்பத்தில் நல்ல லாபம் வந்தாலும், சில தேவையற்ற இடங்களில் கையெழுத்து போட்டு வம்பில் மாட்டிக் கொண்டார்.
அவர் கூடவே வேலை செய்த வாசு என்ற ஒருவன் , மொத்த காய்கறி காண்ட்ராக்ட்டும் தனக்குச் சொந்தமானது என்று சொல்லிவிட, இவர் தன்னிடம் கடன் வாங்கி ஏமாற்றியதாக புகார் கொடுத்து, அதில் ரிஷியையும் கோர்த்து விட்டான்.
இந்த அதிர்ச்சியில் அவர் உடல் நிலை சரியில்லாமல் படுத்து விட, அனைத்து பிரச்சனைகளும் ரிஷியின் மேல் விடிந்தது.
அப்பாவின் நிலையைக் கண்டு அவர் கூறும் முன்பே அவனே அனைத்தையும் கையில் எடுத்துக் கொண்டான்.
ரிஷியின் தாய் அம்பிகா அவனிடம் ஒரு விஷயம் மட்டும் சொன்னார்.
“உன்னுடைய கடைமையை திறமையை நீ காட்ட வேண்டிய நேரம் இது தான். நம்ம கவுரவம் எப்பவும் குறையாம பாத்துக்கோ ரிஷி. அப்பாவை நான் பாத்துக்கறேன்.
நீ நம்ம குடும்ப நண்பர் வேதாச்சலத்தோட மகன் கிட்ட பேசு. அவன் பிசினெஸ் டீல்ஸ்க்கு உனக்கு உதவி செய்வான். ” என்று யோசனை சொன்னார்.
அதற்குள் வாசு இவர்களை யோசிக்க விடக் கூடாது என்று போலீசுடன் ரிஷியின் வீட்டிற்கு வந்துவிட்டான்.
சக்கரவர்த்தி கையெழுத்திட்ட வெற்றுப் பத்திரத்தில் இவனது எண்ணப்படி எழுதிகொண்டு வந்து கண்டனை உடனே கட்டாவிட்டால் சிறைக்குச் செல்ல வேண்டும் என வாரென்ட்டுடன் வந்தான்.
அவன் சொன்ன தொகை ஒன்றும் சாதாரண தொகை இல்லை. இவர்கள் சொத்து அனைத்தையும் எடுத்துக் கொண்டாலும் அதையும் தாண்டி இரண்டு மடங்கு கொடுக்க வேண்டும் என்று இருந்தது.
இதைக் கேட்ட அனைவருமே அதிர்ந்து விட்டனர்.
ரிஷி அங்கேயே கொதித்தான். அவனை அடிக்கக் கை ஓங்க, வந்திருந்த இன்ஸ்பெக்டர் அவனைத் தடுத்தார்.
“மிஸ்டர் ரிஷி, அவர் கிட்ட உங்க அப்பா கையெழுத்துப் போட்ட பத்திரம் இருக்கு, உங்களால அதை மீறி ஒன்னும் பண்ண முடியாது. கொஞ்சம் பொறுமையா இருங்க” அவனை நிறுத்தினார்.
“சார், இவன் பொய் சொல்றான். எங்க அப்பாவை ஏமாத்தி இப்போ என்னையும் ஏமாத்தப் பாக்கறான்.
எங்ககிட்ட வேலை செஞ்சுட்டு இப்போ எங்க தலைல கை வைக்க பாக்கறான்.” ரிஷிக்கு கண்கள் சிவந்து அவனை அங்கேயே அடித்து கொல்ல வேண்டும் போல் இருந்தது .
“உங்க அப்பா எந்த வேலையும் செய்யல, மொத்தமா எல்லாத்தையும் நான் தான் பாத்துக்கிட்டேன், உங்க வீட்டு செலவுக்கே அவரு என்கிட்டத் தான் கடன் வாங்கினார். கம்பெனி மட்டும் தான் உங்களோடது , அங்க நடந்துட்டு இருக்கற பிசினெஸ் டீலிங் எல்லாம் என் பேர்ல நடக்குது. நான் எல்லாத்தையும் என்னோட சொந்த கம்பெனிக்கு மாத்திக்க ஏற்பாடு பண்ணிட்டேன். உங்க கம்பெனி ல நீ பாய விரிச்சு படுத்துக்க வேண்டியது தான். உங்க கடனுக்கு கொஞ்சமா இந்த வீட்டை எடுத்துக்கறேன், மீதியை தரியா இல்ல குடும்பத்தோட கம்பி எண்ணப் போறியா?” வாசு தெனாவட்டாக பேசி சிரித்தான்.
ரிஷியின் தாய் இதைக் கேட்டு கொஞ்சமும் கலங்கவில்லை. ரிஷி இதற்கு பதில் தரும் முன்பே அவரே அவனுக்கு பதிலடி கொடுத்தார்.
“உன்னை எப்படி சமாளிக்கறதுன்னு எனக்குத் தெரியும். நீ கேஸ் போட்ருக்க, நாங்க கோர்ட்ல பேசறோம். நீங்க கிளம்புங்க. இன்ஸ்பெக்டர் அர்ரெஸ்ட் வாரென்ட் உங்ககிட்ட இருக்கலாம், என் பையன நீங்க இப்போ கஸ்டடில கொண்டு போக முடியாது. ஒரு நிமிஷம்..” என்று உள்ளே சென்றவர்,
கையில் ஒரு காகிதத்துடன் எளிய வந்தார்.
“இந்தாங்க இது என் மகனுக்காக நான் எடுத்து வெச்சிருக்கற முன் ஜாமீன். பாத்துட்டு இந்த நன்றி கேட்ட நாயா இங்கேந்து கூட்டிட்டு போங்க” என ஒரு வார்த்தையில் அவனை ஏசினார்.
ரிஷிக்கு அவனது தாயின் இந்தச் செயல் ஆச்சரியத்தை தரவில்லை. ஏனெனில் அவர் எப்போதுமே தன்னுடைய கவுரவம் எந்த வகையிலும் குறைந்து விட விடமாட்டார்.
அவர்கள் அங்கிருந்து சென்றதும்,
“அம்மா நாம கோர்ட்ல போய் இவனை பத்தி சொல்லி , இவனோட மோசடியை ப்ரூவ் பண்ணனும்” என கொதித்து எழ,
“அதெல்லாம் இப்போ ஒன்னும் பண்ண முடியாது ரிஷி. அவன் கைல பேப்பர்ஸ் இருக்கு. மொதல்ல நீ நம்ம கம்பெனியை நல்ல நிலைமைக்கு கொண்டு வரணும். நான் நம்ம வக்கீல் கிட்ட பேசி இவனுக்கு கொடுக்க வேண்டிய பணத்துக்கு கொஞ்ச மாசம் டைம் வாங்க சொல்றேன், ஆனா இதை நாம ஒத்துக்கறதா அர்த்தம் இல்லை. இந்த நேரம் அவனை பத்தின உண்மையை எல்லாருக்கும் தெரிய வைக்கறதுக்கு. அதெல்லாம் நம்ம வக்கீல் பாத்துப்பாரு. நீ மொதல்ல அப்பாவோட நண்பர் கிட்ட பேசு. ” என்று ஆணை அனுப்பி வைத்தார்.
ரிஷி அங்கிருந்து கிளம்பிச் சென்று சக்ரவர்த்தியின் நண்பர் வேதாச்சலத்தின் இல்லத்திற்கு சென்றான்.
“நடந்த எல்லாத்துக்கும் காரணம் அந்த வாசு தான். உங்க அப்பா கிட்ட நான் எவ்வளவோ சொன்னேன் ரிஷி, அவனை நம்ப வேண்டான்னு, ஆனா அவனை எல்லா விஷயத்துலையும் கூட வெச்சுகிட்டு இருந்ததால அவன் இப்படி நம்மள ஏமாத்திட்டான். நீ கவலை படாத பா, உனக்கு நாங்க இருக்கோம், சந்தோஷ் இப்போ டெல்லில வியாபாரிகளுக்கு ஐடியா குடுக்கறவனா இருக்கான். எனக்கு சரியா அத இங்கிலிஷ் ல சொல்லாத தெரியல தம்பி” என இழுக்க,
“அட்வைசர் அங்கிள்” ரிஷி சொல்ல,
“ஆங் .. அதே தான். நீ அவனை போய் பாரு. நாளைக்கே நீயும் டெல்லி போய்டு, அவன் உனக்கு ஆறே மாசத்துல நீ பெரிய நிலைக்கு வர உதவி செய்வான்” என அவனது தொலைபேசி எண்ணைக் கொடுத்து அவனுக்கு தெம்பூட்டி அனுப்பினார்.
ரிஷி பல விஷயங்களை யோசித்துக் கொண்டு வீட்டிற்குள் வர, அங்கே வக்கீலும் தனது தாயும் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டு சற்று திணறிப் போனான்.
“அம்மா உங்ககிட்ட எதையும் மறைக்காம நான் சொல்லிடறேன். அந்த சண்டாளன் ரொம்ப நாள் திட்டம் போட்டு ஐயாவை ஏமாத்தி இருக்கான். அதுனால இந்த பாத்திரம் எல்லாம் ரொம்ப பக்காவா வெச்சிருக்கான். ஐயா கையெழுத்துப் போடலன்னு நம்மளால சொல்லவே முடியாது. இப்போதைக்கு பணத்தை கட்டறேன்னு சொல்லிடலாம். அதுக்குள்ள வேற வழில அவனை நாம நடக்கலாம்.
கோர்ட்ல நான் தம்பிக்காக ஒரு நாலு மாசம் வரைக்கும் டைம் வாங்கி தர முடியும், அதுக்குள்ள பணத்தை கட்டல னா தம்பி ஜெயிலுக்கு போக வேண்டி வரும்” சற்று தயங்கித் தயங்கி அவர் சொல்ல,
அம்பிகா கோபமானார். “இதை சொல்லத் தான் வந்தீங்களா? அதைத் தான் அந்த சண்டாளனும் சொன்னான். நீங்க ஒரு வக்கீலா, என் குடும்ப மானம் போக நான் விட மாட்டேன், நான் வேற வக்கீலை பாத்துக்கறேன். நீங்க கிளம்புங்க” என கத்தினார்.
ரிஷி அப்போது உள்ளே வந்தான்.
“அம்மா , வேற யாரா இருந்தாலும் இது தான் நிலைமை. இது பத்திர விஷயம். மனிஷங்களை நம்பறத விட எல்லாரும் ஒரு பேப்பரைத் தான் எல்லாரும் நம்புவாங்க. இந்த நாலு மாசம் எனக்குக் குடுத்த கெடுவா நான் நெனச்சுக்கறேன். அப்டி என்னால சாதிக்க முடியலைன்னா என் வாழ்க்கை ஜெயில்ல கழியட்டும். ஆனா அந்த நிலைமை எப்பவும் வர நான் விடமாட்டேன். என்னை நம்புங்க” என தாய்க்கு ஆறுதல் சொல்லிவிட்டு,
“வக்கீல் சார் நீங்க அதுக்குள்ள ஒரு ஆள் வெச்சு அவனை ரகசியமா ஃபாலோ பண்ண ஏற்பாடு பண்ணுங்க, அவன் இதைப் பத்தி எப்பயாவது யார்கிட்டயாவது பேசுவான், அப்போ அதை நாம ரெக்கார்டு செஞ்சு அவனோட மோசடியை நாம ப்ரூவ் பண்ணிடலாம்.” என அவருக்கு யோசனை கொடுத்தான்.
இவை அனைத்தும் ஒரு புறம் இருந்தாலும், தன்னை நம்பி இருக்கும் அஞ்சலிக்கு என்ன பதில் சொல்வது என்று மனம் பதைத்துக் கொண்டு இருந்தது.
அவளிடம் சீக்கிரம் வந்துவிடுவேன் என்று சொன்னது, இப்போது நடக்குமா இல்லையா என்ற கேள்வி குறியில் நின்றது. ஒரு வேளை தான் சிறைக்குச் செல்லும் நிலைமை வந்துவிட்டால், அவள் தன்னை நினைத்து அவளது வாழ்வை சீரழித்துக் கொள்ளக் கூடாது என்று நினைத்தான்.
மறுநாள் அவளை சந்தித்து அவன் பேசிய அனைத்தும் அவளை வாட்டும் என்று தெரிந்து தான் பேசினான். ஆனால் அவனது எதிர்காலமே அவனிடம் இல்லை என்ற நிலையில் அவன் அவளிடம் எப்படி பேசுவது.
மனதை கல்லாக்கிக் கொண்டு அவளைவிட்டு டெல்லிக்கு புறப்பட்டான்.