MEM-2-2

மறந்துபோ என் மனமே(2) – அத்தியாயம் 2:

சுஷீலாவின் புருவங்கள் ஒரு நொடி திகைத்து விரிந்து… பின், “க்ரிஷ்… நீ எங்க இங்க” ஆச்சர்யத்துடன் கேட்க, “தேங்க் காட்… என்ன ஞாபகம் இருக்கே உனக்கு” என்றான் கொஞ்சம் கிண்டல் தொனியில்.

அவனைப் பார்த்து மறுபடியும் ஒரு நொடி முகம் மாறியவள், பின் சாதாரணமாக “சுஷின்னு என்ன கூப்பிடறது நீ மட்டும் தானே. பை தி வே இங்க எப்படி” கேள்வியுடன் பார்க்க, “அஃபீஷியல் ட்ரிப்” என்றான் தோள்களைக் குலுக்கி.

“ஓ” என அவள் மறுபடியும் ஒரு நொடி நிறுத்தி, பின் “இங்க எங்க ஸ்டே?” என கேட்க…

“F602. Airbnb stay, நீ” என்று கேட்டுவைத்தான். அவனுக்குத் தான் தெரியுமே அவள் வீட்டின் எண். இருந்தும் கேட்க, அவளும் சொன்னாள்.

லிஃப்ட் கீழ் தளத்தில் நின்றது. இருவரும் வெளியே வந்தனர். “உன் ஆஃபிஸ் எங்க இருக்கு க்ரிஷ்?”

அவன் “நியூபோர்ட் டவர்” என்றவுடன் “ஹே வி ஆர் சோ கிளோஸ். எந்த ஃப்லோர்?” ஆச்சர்யத்துடன் கேட்டாள்.

“27th… ஏன் சேம் பில்டிங்? உன்னோடது எங்க” என்று கேட்டவன் மனதில் ‘எனக்குத் தெரியாதா சுஷி நம்ப ஆஃபீஸ் கிளோஸ்னு. கேட்டுள்ள வந்துருக்கேன் இங்க’ என்று நினைக்க “எஸ் சேம் பில்டிங். நான் 16th” என்றாள்.

“ஓகே க்ரிஷ். டைம் ஆச்சு. டேக் டௌன் மை நம்பர். நம்ம ஈவினிங் மீட் பண்ணலாம்” என்று அவள் நம்பர் கொடுத்துவிட்டு விருட்டென கார் எடுத்துக்கொண்டு பறந்தாள்.

அவள் சென்று கொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு போன் அழைப்பு வர, “எஸ், நான் பார்க்கிங்ல இருக்கேன்” ஆங்கிலத்தில் சொன்னவுடன் ஒரு கார் வந்தது. அதில் ஏறிக்கொண்டான்.

‘எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு. அவ ஒரு வருஷம் முன்னாடி எப்படி இருந்தான்னு. ராம் கூட இருந்தவரைக்கும் சந்தோஷமா ஹெல்த்தி’யா இருந்தா. ஆனா இப்போ கொஞ்ச நாளா எவ்ளோ மாற்றங்கள் அவகிட்ட’

‘அவளை நான் இந்த நிலைமைக்கு வர விட்டுருக்கக் கூடாது. நான் தப்பு பண்ணிட்டேன்’

‘சின்ன வயசுல இருந்து ரொம்ப பயந்த சுபாவம். ஷி வாஸ் டூ டெலிகேட். அதுனால நான் ஓவர்ப்ரொடெக்ட்டிவ்’வா (Overprotective) இருந்துட்டேன்’

‘அதுவே எங்க ரெண்டு பேருக்கும் இடைல பெரிய விரிசல் ஏற்படுத்துச்சு. அப்புறம் எங்க ஈகோ எங்களை திரும்ப சேரவிடலை’

‘நான் அவளை தனியா விட்டிருக்கக் கூடாது. அவளுக்கு பலமா இருந்துருந்தா மே பி இப்போ இந்த கண்டிஷன்’ல இருந்திருக்க மாட்டா’

“சர்ர்ர்ர்…… வி ஹவ் ரீச்ட் (Sir, we have reached)” என்ற அழுத்தமான குரலைக் கேட்டு நிகழ்வுக்கு வந்தான் கிரிஷ்.

“ஸாரி… தேங்க்ஸ். நான் சாயங்காலம் கூப்பிடறேன்” என்று ஆங்கிலத்தில் அந்தக் கார் டிரைவரிடம் சொல்லிவிட்டு இறங்கி அவன் ஆஃபீஸிற்குச் சென்றான்.

சுஷியின் நினைவுகள் வந்தவண்ணம் முதல் நாளை கழித்துக்கொண்டிருந்தான். ஒருவழியாக அன்றைய தினத்தை முடித்து விட்டு வீட்டிற்கு வந்தவன் சுஷீலாவின் வரவிற்காக எதிர்பார்க்க…

அவள் வராததால், அவளின் மொபைல் எண்ணிற்கு அழைத்தான். அது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதாக பதில் வந்தது. சிறிது நேரம் கழித்துத் தொடர்பு கொள்ள, மறுபடியும் அதே மெசேஜ்.

மணி ஒன்பதைக் கடந்தும் அவள் வராததால் கதவை ஒருக்களித்துச் சாற்றிவிட்டு சோபாவில் சாய்ந்தான்.

காத்திருந்து கண்ணசந்தவன், லிஃப்ட் சத்தம் கேட்டு கண்விழிக்க, சுஷீலா அவன் வீட்டைக் கடந்து சென்றுகொண்டிருந்தாள்.

நிலை தடுமாறி நடப்பவளை, எவனோ ஒருவன் கைத்தாங்கலாக அழைத்துச் சென்று கொண்டிருந்தான்.

அதைப் பார்த்தவன், அவள் அருகே சென்று “சுஷி” என்றழைத்தான்.

அவள் அருகில் இருந்தவன் க்ரிஷை மேலும் கீழும் பார்த்து “ஹூ ஆர் யு?” என கேட்க, அவனிடம் என்ன சொல்வதென்று தெரியாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் க்ரிஷ்.

அவளால் ‘என்ன நடக்கிறது’ என்று கூடப் பார்க்க முடியாத அளவிற்குத் தள்ளாடினாள். அவளை அழைத்து வந்தவன், க்ரிஷைக் கடந்து சென்று அவள் வீட்டின் கதவை திறந்தான் க்ரிஷைப் பார்த்தவண்ணம்.

அவளை அந்தக் கோலத்தில் பார்த்த க்ரிஷ் மனது படபடத்தது…

அப்போது, “டூ யு நோ ஹர்?” என்ற சத்தம் கேட்டுத் திரும்பினான். அங்கே இளம் பெண்… பார்க்க இந்திய முக ஜாடையுடன்.

அவளை எங்கோ பார்த்தது போல் இருந்தாலும், அவளிடம் ‘தெரியும்’ என்பதுபோல் தலையசைத்துவிட்டு, திரும்பி சுஷீலாவின் வீட்டைப் பார்க்க, அவர்கள் இருவரும் உள்ளே சென்றிருந்தனர்.

மீண்டும் அந்தப் பெண் பக்கம் திரும்பியவன் மூளையில் மணியடிக்க, “ஸாரி நான் க்ரிஷ். நீங்க தானே மார்னிங் லிஃப்ட் ஸ்டாப் பண்ணது?” கேட்டான் ஆங்கிலத்தில்.

பதிலுக்கு அவள் புன்னகைத்து “எஸ், ஐம் ப்ரியா” என்று நிறுத்தி “F605” என்றாள் அவள் வீட்டைக்காட்டி

“ஓகே தென்… சி யு ஸம்டைம் லேட்டர்” அவனைக் கடந்து அவள் வீட்டிற்கு சென்றாள் ப்ரியா.

சுஷியை நினைத்துக்கொண்டு வீட்டினுள் சென்றவன் மனது பொறுக்கவில்லை.

‘அட்லீஸ்ட் நீ ராம் கூட பிரேக் அப் ஆனதுக்கப்பறமாவது நான் உன்னோட பேசி இருக்கணும். என் தப்பு… உன்ன தனியா விட்டுருக்கக் கூடாது’ என நொந்துகொண்டான்.

பின் அவன் மனது, அவளுடன் வந்தவனை நினைவுகூர்ந்தது.

‘யாரவன்? எப்படித் தெருஞ்சுக்கறது அவன் நல்லவனா இல்லையான்னு. ஒரு வேல அந்த ப்ரியா கிட்ட கேட்டாத் தெரியுமோ? இந்த நேரத்துல போய் டிஸ்டர்ப் பண்ணா தப்பா எடுத்துப்பாங்களா? ஆனா… அவங்களே தானே பேசினாங்க’

‘அப்போ அவங்களுக்கு ஏதோ தெரியும்… அதான் என்கிட்ட சுஷிய தெரியுமானு கேட்டாங்க. சரி இப்போவே போய்ப் பேசலாம்’ பல கேள்விகள்… அதற்கான பதில்கள் மனதில் தோன்ற, அடுத்த நிமிடம் ப்ரியாவின் வீட்டு காலிங் பெல்லை அடித்தான்.

கதவு திறந்தவுடன், அந்தப்பக்கம் வேறு ஒரு பெண் “எஸ்” என கேள்வியுடன் பார்க்க… “ப்ரியா” என்றான் மறுபடியும் கதவு எண்ணைப் பார்த்து உறுதி செய்துகொண்டு.

சிறி நொடிகளில் ப்ரியாவும் எட்டிப்பார்க்க… “ஹே ஹாய். ப்ளீஸ் கெட் இன்” என்றவள், அவசர அவசரமாக சோபா மேல் இருந்த துணிகளை எடுத்து சுத்தம் செய்தாள்.

“பேச்லரேட் (bachelorette) ஹவுஸ்” என்றாள் புன்னகையுடன். அவனும் புன்னைகைத்தான்.

“ஷி இஸ் சாய்ரா. என்னோட ரூம்மேட்” அவள் தோழியை அறிமுகம் செய்தாள்.

“நீங்க சுஷீலா பத்தித் தெரிஞ்சுக்க தானே வந்துருக்கீங்க?” நேராக பேச்சை ஆர்மபித்தாள் ப்ரியா. அப்போது உள்ளேயிருந்து சாய்ரா…

“ப்ரியா உன் அம்மா போன் பண்றாங்க” என்க

“லீவ் இட் சாய்ரா. அப்புறம் கால் பண்ணிக்கறேன்” சொல்லிவிட்டு க்ரிஷ் பக்கம் திரும்பினாள்.

“ஓ நீங்க தமிழா? ஆமா சுஷீலா பத்தி தான் கேட்க வந்தேன்” என்றான் க்ரிஷ்.

“காலைல நீங்க சுஷீலாகிட்ட தமிழ்ல பேசினதை பாத்தேன்” என்றவள் “உங்களுக்கு எப்படி அவங்கள தெரியும்?” என வினவினாள்.

“நானும் IL (Illinois) தான். நாங்க ரெண்டுபேரும் சைல்ட்ஹூட் ஃபிரண்ட்ஸ் (Childhood friends). இங்க அவள காலைல பாத்தேன். இன்னிக்கி ஈவினிங் மீட் பண்ணலாம்னு சொன்னா. பட் நீங்க தான் பாத்தீங்களே, அவ எப்படி வீட்டிற்கு வந்தானு” என அவன் முடிக்க…

“ஆக்ட்சுவலி நாங்க ரெண்டு பேரும் ஒரே ஆஃபீஸ். அவங்க இங்க வந்தப்ப, நான் தான் இங்க வீடு ரெண்ட்’கு எடுத்து குடுத்தேன்” என்றாள்.

“அவ கூட இன்னிக்கி யாரோ…” அவன் இழுக்க “ஹி இஸ் ஸ்டீவ். எங்க ஆஃபீஸ் தான்” என்றாள் பெரிதாக ஆர்வம் இல்லாமல்.

‘அவன் நல்லவனா இல்ல… அத எப்படி கேக்கறது’ என்று அவன் யோசிக்கும்போது…

“நான் குடிக்க ஏதாச்சும் எடுத்துட்டு வரேன்” என்றவள் ஜூஸ் எடுத்து வந்தாள்.

அவனுக்கு கொடுக்க, “நீங்க சுஷீலா கிட்ட பேசுவீங்களா?” கேட்டான் க்ரிஷ்.

“இப்போல்லாம் அதிகமா பேசறதில்ல. ஆரம்பத்துல நல்லா பேசினாங்க. அவங்களுக்கு ஏதோ ப்ராப்லம் இருக்குனு நினைக்கறேன்” என்றவள் சற்று நிறுத்தி, பின்…

“டெய்லி நைட் கொஞ்சம் அதிகமாவே ட்ரிங்க் பண்ணுவாங்க போல. சிலசமயம் ஓவர் டோஸ் ஆச்சுன்னா ஆஃபீஸ் வரமாட்டாங்க. வீட்ல இருந்தே வேல பாப்பாங்க”

“நிறைய குடிக்க வேணாம்னு சொல்லிருக்கேன். ஆனா அவங்க கேட்கல. என்னோட க்ளைன்ட் அவங்க. அதுக்கு மேல நான் பேசினா நல்லாயிருக்காதுனு விட்டுட்டேன்”

“அதுக்கப்புறம் அவங்க ஸ்டீவ் கூட க்ளோஸ் ஆகிட்டாங்க, எங்களோட அவ்வளவா பேசறதில்ல. சும்மா ஹாய், பை அவ்ளோதான்” என்றாள் பதிலுக்கு.

“ஸ்டீவ் எப்படிப்பட்ட ஆள்?” என்று தயக்கத்துடன் க்ரிஷ் கேட்க

“சரியா தெரில. கூட வேல பார்க்கறப்ப தப்பா ஒன்னும் தெரில. ஸ்டீவ் கூட பேசறதுக்கு முன்னாடி அவங்க ரொம்ப ட்ரிங்க் பண்ண மாதிரி தெரில. பட் அவனோட சேர்ந்ததுக்கப்புறம் அதிகம் ஆயிடுச்சோனு தோணும்” என்றாள்.

அதைக் கேட்டு அவன் மனம் வருந்தியது.

“ஆஃபீஸ்ல இருந்து நேரா வீட்டுக்கு மோஸ்ட்லி வரமாட்டாங்க. வெளிய கூட்டிட்டுப் போய்ட்டு தான் வருவான்”

“ஆரம்பத்துல இதெல்லாம் வேணாம்னு சொன்னேன். அவங்க கேக்கல. நாங்களும் விட்டுட்டோம். உங்களுக்கு அவங்கள தெரியும்ன்னு சொன்னதுனால தான் இதெல்லாம் ஷேர் பண்றேன்” என்று அவள் சொல்லும்போது, மறுபடியும் சாய்ரா அவள் அம்மா அழைப்பதாகச் சொல்ல…

“ஸாரி யு கேரி ஆன். நானும் நியூபோர்ட் டவர்ஸ்’ல தான் வெர்க் பண்றேன். நாளைக்கு டைம் கிடைச்சா மீட் பண்ணலாம்”

அதற்கு ப்ரியா, “கண்டிப்பா” என்றவுடன்… இருவரும் எண்கள் பகிர்ந்துகொண்டனர்.

வீட்டிற்குத் திரும்பியவன் எண்ணம் முழுவதும் சுஷீலா மட்டுமே நிறைந்திருந்தாள்.

‘ப்ரியா சொன்னதை வெச்சுப் பாத்தா அந்த ஸ்டீவ் நல்லவனான்னு தெரில. ஒருவேளை தப்பானவன்னா… எப்படியாவது அவள அவன்கிட்ட இருந்து விடுவிக்கணும்’

‘அப்போ தான் அவளை, அடிக்ஷன்’ல (addiction) இருந்து மீட்க முடியும்’ அவளைப் பற்றியே நினைத்துக்கொண்டு கண்ணயர்ந்தான்.

மறுநாள் காலை சீக்கிரமாக எழுந்து புறப்பட்டவன், அவளை அவள் வீட்டிற்கு சென்று பார்த்துவிட்டு, எப்படியாவது அவளிடம் பேசிவிடவேண்டும் என நினைத்தான்.