MM 8

மாயவனின் மயிலிறகே

அத்தியாயம் 8

வாழ்க்கையில் சில பயணங்கள் சந்தோஷத்தை அள்ளி தரும்.

சில பயணங்கள் கசப்பையும் வேதனையையும் வாரிக் கொடுக்கும்.

சில பயணங்கள் வாழ்க்கையையே அடியோடு மாற்றும்.

சந்தோஷமோ! துக்கமோ! மாற்றமோ! எதுவாயினும் உடன் பயணிப்பவரின் பங்கும் முக்கியமாகிறது. அது வழிப் பயணமாக இருந்தாலும் சரி. வாழ்க்கைப் பயணமாக இருந்தாலும் சரி.

இன்றுதான் சிறகு விரித்த பறவை போல விரிந்த கண்களுடன் இது என்ன? அது என்ன? என ஓயாமல் கேட்டுக் கொண்டே வந்தாள் அந்த ஐந்தடி பதுமை.

இதுநாள் வரை மருத்துவமனையில் இருந்த தாக்கத்தால் சற்று சோபையாக காட்சியளித்தாலும் மாலை நேர சூரியனின் இளஞ்சிவப்பு நிறத்துடன் ஒற்றைக்கு ஒற்றை போட்டியாய் ஜொலித்தவாறு பிரகாசிக்க தொடங்கியது பெண்முகம். காரணம் அவளின் ஜித்து என்று சொல்ல தேவையில்லை.

அவன் மருத்துவமனை வரும்போதே நண்பகல் ஆகியிருந்தது. அதனால் தனது பணிகளை துணை ஆட்சியரிடம் தற்காலிகமாக ஒப்படைத்துவிட்டு அரைநாள் விடுப்பு எடுத்துக் கொண்டான். பின்னே பாப்பு அவனை விட்டால்தானே.

அவளுக்கு அவனிடம் கூற ஆயிரம் குறைகள், கேட்க எண்ணிலடங்கா கதைகள் என நீண்டு கொண்டே சென்றது. “பாப்பு ப்ராமிஸா சாயங்காலம் வரேன்டா ” என நானுற்றி ஐம்பத்தாறாவது முறையாக கெஞ்சி பார்த்து விட்டான். அவளோ சென்றால் வரமாட்டானோ! என்ற எண்ணத்தில் “இல்ல முடியாது” என்ற இரு வார்த்தைகளோடு காது என்னும் கதவடைத்துக் கொண்டாள்.

அதன்பின் அவளுக்கான மருந்துகள், அறிவுரைகள் அனைத்தையும் சந்தேகத்துக்கு இடமின்றி கேட்டு ஜானும்மாவை ஒரு வழியாக்கி கிளம்ப ஐந்து மணி ஆனது.

இதோ இப்போது அவனுடன் அவன் சுய சம்பாத்தியத்தில் வாங்கிய “சுசூக்கி டிசையர்” ல் அவனருகில் இல்லை இப்படி சொல்ல வேண்டுமோ? அவன் தோளில் சாய்ந்து கொண்டே கடந்து செல்லும் ஒவ்வொன்றையும் பார்த்து விளக்கம் கேட்க இவனும் கூறிக்கொண்டே வந்தான்.

சிறிது நேரத்தில் உள்ளே ஏசியின் குளுமையும் அவனின் தோளின் வெம்மையும் மென்மையாக ஒலித்த பாடலும் காலையில் இருந்து ஓய்வெடுக்காததால் அலண்ட உடலும் கெஞ்ச கண்கள் தாமாக மூடிக்கொண்டது பாவைக்கு.

ஒரு சிரிப்புடன் அவளுக்கு பதில் கூறிக் கொண்டே வந்தவன் சத்தத்தை காணோமே என குனிந்து பார்க்க தோளில் பொசுபொசுவென்ற கன்னம் வைத்து அழுத்தியிருந்ததால் ஒட்டியிருந்த உதடுகள் பிடிமானமின்றி பிரிய குட்டி ஜாமுனை உள்ளே திணிக்கும் அளவிற்கு மொட்டு போல் கூம்பிய உதடுகள் அவளை அப்படியே அள்ளிக் கொஞ்சலாம் போல தோன்றியது. நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள்.

அவளின் உறக்கம் தாங்கிய முகத்தை சிரிப்புடன் பார்த்தவன் “செல்ல வாண்டு” என கொஞ்சிக் கொண்டு அதே நிலையிலேயே வீட்டுக்கு சென்றிருந்தான்.

இவனின் கார் சத்தத்தில் இரும்பு திரை பின்வாங்க கார் உள்ளே சென்றது. மாலை நேரமாதலால் தாத்தா, பாட்டி சாய்வு இருக்கையில் அமர்ந்து சத்து பானங்களை அருந்திக் கொண்டிருந்தனர். பொன்னம்மா தண்டல்காரனை போல பக்கத்திலேயே நின்று கவனித்துக் கொண்டிருந்தார். இல்லையென்றால் இந்த யங் கப்புள்ஸ் அவருக்கு போக்கு காட்டி விடுவார்களே.

முகத்தை சுளித்துக் கொண்டு அருந்த ஆரம்பிக்கும் போது தான் கார் வந்தது. முதலில் பேரன் இறங்கவும்” வாடா கண்ணா” என அழைத்தவர்கள் அவன் மறுபுறம் கதவை திறந்து குழந்தையை போல ஒரு பெண்ணை தூக்கி வருவதை கண்டு ஆச்சர்யமும், கூடவே பரபரப்பும் தொற்றிக் கொண்டது.

“யார் பா இந்த பொண்ணு?” என கேட்டவர்களை “ஸ்ஸ்ஸ்” பேச வேண்டாம் கண்களை உருட்டியவன் அவளை உள்ளே கொண்டு சென்று கீழே ஒரு அறையில் தலை அழுந்தாதவாறு ஒருக்களித்து படுக்க வைத்தான். அவனை இறுக பற்றியிருந்த அவள் கையை மெதுவாக விலக்கியவன் தலையனையை அணைவாக வைத்து, கழுத்து வரை போர்த்தி விட்டான்.

குழந்தை போல துயில் கொள்பவளை பார்த்தவனுக்கு இதுவரை அவன் வாழ்வில் காலியாக இருந்த ஒன்று ஏதோ நிறைவதாக தோன்றியது. மெதுவாக தலைவருடியவன் கதவை சாற்றிவிட்டு வெளியே வந்தான்.

அங்கு தன்னையே குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருந்த தாத்தா பாட்டியிடம் சென்றவன் அவர்களை நீள் இருக்கையில் அமர வைத்து தானும் அமர்ந்து கொண்டான். அதற்குள் பொன்னம்மா அவனுக்கு டீ போட்டு கொண்டு வந்திருந்தார்.

டீ கப்பை வாங்கியவன் அவரையும் அங்கேயே கை பிடித்து நிறுத்தினான். “நீங்களும் இருங்கமா” அவன் டீ குடித்து முடிக்கும் வரை யாரும் எதுவும் பேசவில்லை.

காலியான கப்பை வைத்தவன்…மூவரூம் தன் பதிலுக்காக காத்திருப்பதை கண்டு முகத்தை அழுந்த தேய்த்தவாறு ஒரு முடிவுடன் நடந்த அனைத்தையும் கூறலானான். அதோடு தன்னுடைய முடிவான பாப்புவை இங்கு தங்க வைப்பதை பற்றியும் கூறினான். மூவரும் அதிர்ந்து நின்றது சில நொடிகளே பின் அவனை சூழ்ந்து கொண்டனர்.

“ஏன் அபி இவ்ளோ நடந்திருக்கு எங்ககிட்ட ஒன்னும் சொல்லல இந்த கிழவனால என்ன பண்ண முடியும்னு நினைச்சயா” என தாத்தா ஆவேசமாக

“கடவுளே இவ்ளோ பெரிய ஆபத்து வந்திருக்கே! என் பேரன காப்பாத்திட்டப்பா விநாயகா” என பாட்டி அவனை அணைத்துக் கொள்ள,

“எஞ்சாமி கவனமா இருக்க கூடாதாப்பா” என கண்கலங்கினார் பொன்னம்மா.

“ஆஹா இதுக்குதான் எதுவும் சொல்லல பாத்தீங்களா எனக்கு ஒன்னுமில்ல” என அவர்களை சமாதானப்படுத்தியவன்.

பிறகு “என்ன காப்பாத்த குறுக்க வந்துதான் அந்த பொண்ணுக்கு அடிபட்டுச்சு பாவம் அவ தலைல அடிபட்டதுல தான் யாருன்னே அவளுக்கு தெரியல. ஆறு வயசு குழந்தையாதான் இப்ப இருக்கா”

“அதுக்கென்னபா எம்பேரன காப்பாத்தின பொண்ண நாங்க பாத்துக்க மாட்டமா அதுவுமில்லாம வயசு பொண்ணு இந்த நிலமையில இருக்கப்ப எப்படி விடமுடியும். ” என பாட்டி அவனது முடிவை ஆமோதித்தார்.

மேலும் சிலவற்றை பேசிக்கொண்டிருக்கும்போது அறையிலிருந்து முனகலான ஒலி வந்தது. அபிஜித் வேகமாக எழுந்து ஓட என்னவோ என்று இவர்களும் சென்றனர்.

அங்கே கையை உயர்த்தியவாறு “ஜித்து…என்ன ஜித்துக்கிட்ட கூட்டிட்டு போங்க நான் பாக்கனும்” என மெல்லிய குரலில் முனகி கொண்டிருந்தாள்.

அவள் கையை பற்றியவன் “பாப்பு ஒன்னுமில்லடா நீ எங்கூடதான் இருக்க தூங்கு” என தட்டி விட அவன் கையை பிடித்து கழுத்தின் அடியில் வைத்தவாறு மீண்டும் உறங்கி போனாள்.

இதை மூவரும் ஆச்சர்யமாகவும், தன் பேரனா இது என அதிசயித்தும் அவளை பரிவுடனும் பார்த்துக் கொண்டிருந்தனர். தூக்கத்தில் கூட என்னை தேடுகிறாளா! என மனம் இளக, அவள் நன்றாக உறங்கிய பின் கையை விலக்கி கொண்டு வெளியேறினான்.

“ஏன் அபி அந்த பொண்ணுக்கு பழசு ஞாபகம் வராதா டாக்டர் என்ன சொன்னாங்க” தாத்தா வினவ

“தெரியல தாத்தா உறுதியா சொல்லல, ஆனா குணமாகற வரைக்கும் அவ என்னோட பொறுப்பு”

“சரி அபி இங்கேயே இருக்கட்டும் இத்தன பேர் இருக்கோம் பாத்துக்கலாம்” என பாட்டி நம்பிக்கையளித்தார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட வரதராஜ பெருமாள் கோவில் வாசலில் விலை உயர்ந்த கார் ஒன்று நின்றது. டிரைவர் இறங்கி ஒருபுற கதவை திறந்துவிட்டார்.

அதுவரை அங்கு வரும் பெண்களை பாரபட்சமில்லாமல் கமெண்டடித்து சைட்டடித்துக் கொண்டிருந்த காளைகள் சட்டென அமைதியாயினர். அதை அங்கு சாமிக்காக மாலை வாங்கிக் கொண்டிருந்த பெரியவர் ஒருவர் கவனித்து இதுவரை ஆட்டம் போட்ட இளசுகள் அந்த காரை கண்டவுடன் இப்படி அமைதியாகிவிட்டனரே?

அப்படி யாரை கண்டு பயப்படுகின்றனர் என அந்த காரை திரும்பி பார்க்க அதிலிருந்து ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் மறுபுறம் ஒரு இளம்பெண்ணும் இறங்கினர்.

இவர்களை பார்த்தா அமைதியாகினர் என வியந்தவர் பூக்கடை காரரிடம் இதை கூறி விளக்கம் கேட்க..

இது பயமில்லைங்கையா மரியாதை. எங்க ஜமீன் குடும்பத்து மேல இருக்கற மரியாதை, அன்பு. இவங்க எங்க ஜமீன்தாரம்மா காயத்ரி. கூட வரது அவங்க பொண்ணு ஜனனி.

அந்த பெரியவர் அவர்களை பார்த்தார் பார்த்தவுடன் கும்பிட தோன்றும் முகம். “ஏம்பா ஜமீன் குடும்பங்கறீங்க எளிமையாக இருக்காங்க அதுவுமில்லாம துணைக்கு கூட யாரையும் காணோம்”

அவரை சொல்லியும் குற்றமில்லை இதுவரை காட்டிய படங்களில் எல்லாம் ஜமீன் வம்சத்தினர் முழு அலங்காரத்துடன் நான்கு பேர் சுற்றி பாதுகாப்புக்கு இருக்கவே வலம் வருவார்கள்.

“எங்கய்யாவும் சரி, எங்கம்மாவும் சரி எப்பவும் எளிமையாதான் இருப்பாங்க. அப்பறம் இந்த ஊரே அவங்களுக்கு பாதுகாப்புக்கு இருக்கும்போது வேற துணை எதுக்குங்க” என விளக்கினார்.

காயத்ரியும் ஜனனியும் கோவில் பிரகாரத்திற்கு சென்று வரதராஜ பெருமாளை கண்டு கைகூப்பினர். அங்கு வந்த குருக்கள் வணக்கம் ஜமீன்தாரம்மா யார் பேருக்கு அர்ச்சனை செய்யனும்”

“என் பையன் பேருக்கு பண்ணுங்க குருக்களே அபிஜித் சிம்ம ராசி மகம் நட்சத்திரம்.”

பேஷா பண்ணிடலாம் “அபிஜித் நாமதேஸ்யா…” என பூஜை ஆரம்பிக்க “பெருமாளே என் பையன எந்த கெட்டதும் அண்டாம பாத்துக்குங்க அவன் நல்லா இருக்கனும்… சீக்கிரமா என் மேல இருக்கற கோவத்தை விட்டு என்கிட்ட பேசனும்” என மனமுருகி வேண்டிக் கொண்டிருந்தார் அபிஜித்தின் அன்னை.

பூஜையை முடித்த குருக்கள் “புள்ளையாண்டான் ஷேமமா இருப்பான். ராஜா மாதிரி அமோகமா வாழுவான் கவலைபடாதேள்” என அர்ச்சனை பொருட்களை கொடுத்தார் . “நல்லது குருக்களே” என பெற்றுக் கொண்டவர் பிரகாரத்தை சுற்ற ஆரம்பித்தார்.

அபிஜித்தின் பெற்றோர் ரவிசந்திரன், காயத்ரி. ரவிசந்திரன் ஊரே மெச்சும்படி வாழ்ந்து வரும் ஜமீன் வம்சம்.

எங்கும், எதிலும் முதல் மரியாதை பெற்றுக்கொள்ளும் குடும்பம், கோவில்களின் தர்மகர்த்தா, தானம்கொடுப்பதில் அங்க தேசத்து அரசனின் வழித்தோன்றல்கள். பல தலைமுறைகளுக்கான குலப்பெருமை உடையவர்கள்.

அந்த வம்சத்தின் குலக்கொழுந்து ரவிசந்திரன். அந்த காலத்தில் பட்டபடிப்பில் மேற்படிப்பு வரை படித்தவர். ஆனால் சொந்த ஊரை விட்டு செல்ல விருப்பமில்லாமல் தந்தைக்கு ஓய்வளித்து ஜமீன் பொறுப்பை கையில் எடுத்துக் கொண்டார்.

அவருக்கு தங்கை அமிர்தா என்றால் அத்தனை பிரியம். இருவருக்கும் இடையில் ஏழு வருடம் வித்தியாசம். தங்கை பிறந்த போது ஏற்பட்ட சிக்கலால் தாய் இறந்துவிட, அன்றிலிருந்து தங்கைக்கு அன்னையாய் மாறினார். அவள் வாயால் கேட்டு முடிக்கும்முன் அதை செயல்படுத்திவிடும் அளவு அளவில்லா பாசம். கூடவே கண்டிக்கவும் தயங்க மாட்டார். அவளுக்கும் அண்ணன்தான் சர்வமும். பிள்ளைகளின் இந்த பாசப்பிணைப்பில் எப்போதும் கர்வம்தான் தந்தை குணசீலனுக்கு.

ரவிசந்திரன் தன் இருபத்தி மூன்று வயதில் பொறுப்பெடுத்தபின் குணசீலன் தன் நடமாட்டத்தை குறைத்துக் கொண்டார். அனைத்திலும் ரவிசந்திரனையே “இனி இவன்தான் எல்லாம்” என முன்னிறுத்தினார். அதேபோல ஒரு விடிகாலை பொழுதில் தன் மூச்சையும் நிறுத்தி கொண்டார்.

அமிர்தா அப்போது பள்ளிபடிப்பில் இறுதியாண்டில் படித்துக்கொண்டிருந்தாள். தந்தையின் மறைவால் அழுது அழுது மயங்கியவளை தேற்றியவர் ரவிசந்திரனே. ஆயினும் அவள் அவ்வளவு விரைவில் தேறுவதாய் இல்லை. தந்தையின் பிரிவை தாங்க முடியாமல் சோகச்சித்திரமாய் வலம் வரும் தங்கையை நினைத்து வருந்தாத நாளே இல்லை. இதே நிலையில் பள்ளிபடிப்பும் முடிய அவளை கல்லூரியில் சேர்க்க முடிவு செய்தார். அதுவும் வெளியூரில் விடுதியில் தங்கி படிக்க.

அமிர்தாவோ “உன்னை விட்டு செல்ல மாட்டேன்” என பிடிவாதம் பிடிக்க, “இங்கேயே இருந்தால் தந்தையின் பிரிவிலேயே உழலுவாய், ஒரு மாற்றமாக இருக்கும் சென்று வா .” என அனுப்பி வைத்தார்.

புதிய கல்லூரி, புதிய நண்பர்கள் பல புது அனுபவங்களை கற்ற அமிர்தா காதலையும் கற்று தேர்ந்தார். சீனிவாசன் அதே கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவன். கல்லூரியில் அனைவருடனும் இனிமையாக பழகும் கண்ணியமானவன்.

மைவிழிகளோடு மருண்டு விழித்தவாறே முதலாம் ஆண்டில் அடியெடுத்து வைத்த அமிர்தாவால் கவரப்பட்டு காதல் கொண்டார்.

முதலில் அவரை மறுத்த அமிர்தா பின் அவரது நேசத்தில் கட்டுண்டு நேசிக்க ஆரம்பித்தார். அவ்வப்போது பார்வை பரிமாற்றங்கள் கை கோர்த்துக் கொள்ளுதல் என நாட்கள் சர்க்கரையாய் கரைந்தது.

நன்றாகதான் சென்று கொண்டிருந்தது அமிர்தா மூன்றாம் ஆண்டு படிக்கும் வரை. சீனிவாசன் அதே கல்லூரியிலேயே முதுகலை மேற்படிப்பு படித்துக் கொண்டிருந்தார்.

ரவிச்சந்திரன் மாப்பிள்ளை பார்ப்பதாகவும் இந்த வருடம் படிப்பு முடிந்ததும் திருமணம் வைத்துக்கொள்ளலாம் என கூறியிருந்தார். இதில் அமிர்தாவிற்கு பயம் தொற்றிக்கொண்டது. அண்ணன் தன் காதலை ஏற்பாரா என்று. சீனிவாசனும் சிறந்த காதலனாக படிப்பு முடிந்ததும் பெண் கேட்டு வருவதாக நம்பிக்கையளித்தார்.

அதன்பின் நாட்கள் ஒருவித பரபரப்புடனே கடந்தது அமிர்தாவிற்கு. சீனிவாசன் தன் பெற்றோரான பார்த்தசாரதி புவனாம்பிகையிடம் அமிர்தா பற்றி கூற அவர்கள் தன் எதிர்ப்பை அழுத்தமாக தெரிவிக்க அமிர்தா இன்னும் அரண்டு போனார்.

சீனிவாசன் உடனே வெளியூரில் வேலை செய்யும் தன் தமக்கையான காயத்ரியிடம் சிபாரிசுக்காக செல்ல அவர் தன் தம்பியின் ஆசைக்காக பெற்றோரிடம் பேச ஒப்புக்கொண்டு விடுமுறையில் ஊருக்கு வருவதாக கூறியிருந்தார்.

ஆனால் அதற்குள் அனைத்தும் கைமீறியிருந்தது. அவர் வருவதற்குள்ளாகவே காதல் பறவைகள் தன் எதிர்காலத்தை தக்கவைத்துக் கொள்ள பறந்து விட்டிருந்தனர்.

அமிர்தாவிற்கு அனைத்திற்கும் பயம். தங்களை பிரித்து விடுவார்களோ என அஞ்சி முயற்சி எடுக்காமலேயே சீனிவாசன் எவ்வளவு கூறியும் தற்கொலை செய்ய போவதாக மிரட்டாத குறையாக அவரை சம்மதிக்க வைத்து அழைத்து சென்றிருந்தார்.

தன் தங்கைக்கு திருமணத்திற்கு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து ஏற்பாடுகளை செய்த ரவிச்சந்திரனுக்கு அவள் ஒருவனுடன் ஓடிவிட்டாள் என்னும் செய்தியே வந்தது. அப்போதும் அதை நம்பாமல் கல்லூரிக்கே செல்ல அவள் தோழிகளும் இதையே கூறி உறுதி செய்தனர்.

தலையை யாரோ சம்மட்டியால் அடித்தது போல துடித்து போனார் மனிதர். என்னிடம் கூறியிருக்கலாமே என எண்ணி வேதனை கொண்டார்.

பலர் செய்யும் தவறு இதுதான் காதலை கைப்பிடிக்க முயற்சி செய்யாமலேயே முடிவுக்கு வந்து விடுகின்றனர். அமிர்தாவும் இதையே தான் செய்தார். அண்ணன் மேல் பயமா? மரியாதையா? என பிரித்தறியாமல் தேர்வு எழுதாமலேயே துரோகத்தை பரிசளித்து சென்றிருந்தார்.

தங்கை போன பிறகு ரவிச்சந்திரன் ஒடுங்கிவிட தன் ஜமீன்தாரின் இத்தகைய நிலையை காண இயலாத விசுவாசிகள் சிலர் அவரை கேட்காமலேயே பல்லுக்கு பல் என்பதை போல் ஒரு அனர்த்த செயலை நிகழ்த்தியிருந்தனர்.

அமிர்தாவை காதலித்த சீனிவாசனை பற்றி விவரம் திரட்டியவர்கள் அவருக்கு ஒரு அக்கா இருக்கிறார் என்பதை அறிந்து காயத்ரியை கடத்தியிருந்தனர். அவர்களுக்கு நியாயம் அநியாயம் எல்லாம் தெரியாது தன் ஜமீன்தாரின் துன்பத்தை எப்படியாவது போக்குவதாக எண்ணி மேலும் முட்டாள்தனத்தை செய்திருந்தனர்.

தம்பியின் செயலை கேள்விபட்டு இடிந்து போய் அமர்ந்திருந்த தாய் தந்தையை காண பெங்களூரில் வேலை செய்து கொண்டிருந்த காயத்ரி சென்னை வந்திருந்தார்.

அவரை பின்தொடர்ந்த விசுவாசிகள் அவரை திட்டம் போட்டு பெரிய குளத்திற்கு தூக்கி சென்றிருந்தனர். தன் எஜமானரிடம் ஏதோ அதிசயத்தை கொண்டு வந்தது போல காயத்ரியை அவர் முன் காட்டி பெருமையாய் நிற்க. அவர்களை நினைத்து அழுவதா? சிரிப்பதா? என புரியாமல் தலையில் கை வைக்காத குறையாக நின்றார் ரவிசந்திரன்.