அத்தனை பேரும் கலைந்து போயிருக்க அந்த இடமே ஓய்ந்து போய் அமைதியாக இருந்தது. லேசாக இருள் பரவ ஆரம்பித்திருந்தது. பார்க்கில் மெதுவாக நடை பயின்ற படி இருந்தார்கள் கார்த்திக்கும் மித்ரமதியும்.

கார்த்திக் அவள் முகத்தைத் திரும்பிப் பார்த்தான். லேசான குழப்பம், மெல்லியதாக ஒரு சுணக்கம் என அவள் முகம் சோபையிழந்து கிடந்தது.

“மித்ரா!”

“ம்…”

“என்னாச்சு?”

“ம்ஹூம்… ஒன்னுமில்லை.” தலையைக் குனிந்த படி மெதுவாக முணுமுணுத்தாள். கார்த்திக்கின் இதழ்க்கடையோரம் சின்னதாக ஒரு புன்னகை பூத்தது.

நடையை நிறுத்திவிட்டு அவள் இடையை அணைத்தவன் அவளைத் தன்னை நோக்கி இழுத்துக் கொண்டான். அதீத நெருக்கம் தான். அவன் கட்டை விரல் அவள் கன்னக் கதுப்புகளை லேசாக வருடிக் கொடுத்தது.

“அதான் என்னன்னு கேக்கிறேன் இல்லை. ஒன்னுமே பேசாம இப்படி உம்முன்னு வந்தா என்ன அர்த்தமாம்?” அவன் குரலில் அத்தனை சரசம். ஆனால் அதில் மயங்கும் மனநிலையில் மித்ரமதி தற்போது இல்லை.

“ஒன்னுமில்லை கார்த்திக்.” சட்டென்று சொன்னவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

“அதை எம் முகத்தைப் பார்த்துச் சொல்லு மித்ரா.” அவன் சொல்லவும் அந்தக் கண்களை நேருக்கு நேராக அண்ணார்ந்து பார்த்தாள் பெண்.

அவளை ஆதியோடு அந்தமாக அள்ளி விழுங்கக் காத்திருந்தன அந்த விழிகள்! இருந்தபோதும், அதை உணர்ந்தபோதும் விட்டுக் கொடுக்கவில்லை பெண்.

“சொல்லு பேபி!” அவன் குரல் வெறும் காற்றாகவே வந்தது.

“சொல்ல என்ன இருக்கு? அதான் எனக்கும் சேர்த்து நீங்களே முடிவெடுக்கிறீங்களே.”

“அப்படி இல்லை பேபி…”

“வேணாம் கார்த்திக், விட்டுருங்க. நான் அவ்வளவு சொன்னதுக்கு அப்புறமும் நீங்க உங்க இஷ்டப்படியே எல்லாம் பண்ணுறீங்க. எனக்குக் கொஞ்சம் டைம் வேணும்னு கேட்டேன். அதைக் கூட நீங்க கண்டுக்கவே இல்லை. உங்க பாட்டுக்கு இன்னைக்கு எல்லார் முன்னாடியும் சொல்லிட்டீங்க.”

அவள் குரலில் அத்தனை ஆதங்கம். கார்த்திக் மௌனமாக அவளையே பார்த்திருந்தான். அந்தக் கறுப்பு கவுனில் ஆங்காங்கே பளிச்சிட்ட அவள் வெண்ணிறம் அவனை மயக்கத்தான் செய்தது.

“மித்ரா! உனக்கு என்னைப் பிடிக்கலையா?” நிதானமாக வந்தது அவன் கேள்வி. எதுவும் பேசாமல் அவன் கண்களை நிமிர்ந்து பார்த்தாள்.

“சொல்லு மித்ரா.”

“தெரியலையே கார்த்திக். உங்களை எனக்குப் பிடிக்கும், இல்லேங்கலை. ஆனா… அது கல்யாணம் வரை போறதுக்கும் போதுமா ன்னு எனக்குத் தெரியாது கார்த்திக்.”

“இப்போ எதுக்கு இந்த அளவை நிறுவை எல்லாம் பேபி.” கேட்டபடியே அவன் புன்னகைக்க, அந்தப் புன்னகையை ஒரு நொடி ஆழ்ந்து தன் கண்களுக்குள் நிரப்பிக் கொண்டாள் மித்ரமதி.

“ப்ளீஸ் கார்த்திக். என்னைப் பலவீனப்படுத்தாதீங்க.” அவள் ஒரு சலிப்போடு

சொல்லிவிட்டு முகத்தைத் திருப்ப கார்த்திக் அமைதியாகப் புன்னகைத்தான். அவன் கண்களில் இப்போது கனிவு மட்டுமே நிறைந்திருந்தது.

“ஒரு இடத்துல நீ பலவீனப்படுறே ன்னா, அந்த இடத்துல காதல் இருக்குன்னு தானே அர்த்தம் மித்ரா?”

“கார்த்திக்?”

“லைஃப்ல எங்கேயுமே இதுவரை காதல் வரவே இல்லையா ரதி?” கண்களில் ஒரு எதிர்பார்ப்போடு கேட்டான் கார்த்திக்.

“ம்ஹூம்…”

“ஏனப்படி?”

“ஏனப்படி ன்னா?”

“பசங்க கண்டிப்பா விட்டிருக்க மாட்டாங்களே? இந்த ரிச்சர்ட் மாதிரி.”
ரிச்சர்ட் பெயரைக் கார்த்திக் சொன்னதும் மித்ராவின் முகத்தில் அப்படியொரு மலர்ச்சி. பற்கள் தெரியப் புன்னகைத்தவள்,

“ரிச்சர்ட் என்னோட வெரி குட் ஃப்ரெண்ட்.” என்றாள்.

“அது உனக்கு டா. அவனுக்கில்லை.”

“தப்பு கார்த்திக். ஐயாக்கு அவர் ஒரு ரோமியோ ன்னு நினைப்பு உண்டு தான். ஆறு மாசத்துக்கு ஒரு பொண்ணோட சுத்துவான். ஆனா மித்ரா ன்னு வந்துட்டா அவன் ஒரு பக்கா ஜென்டில்மேன்.”

“ம்…” இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே சடசடவென மழை கொட்ட ஆரம்பிக்க இருவரும் ஓடிப் போய் ஒரு மரத்திற்குக் கீழ் ஒதுங்கிக் கொண்டார்கள்.

அன்று வானிலை அறிக்கையில் மழைக்கான சாத்தியக் கூறுகள் உண்டு என்று இருந்தது அவனுக்குத் தெரியும். சொன்னால் சொன்ன நேரத்திற்கு மழை வரும் என்றும் அவன் அறிவான். எல்லாம் அவன் திட்டப்படியே நடந்தேறிக் கொண்டிருந்தது.

மித்ரமதி ‘கோட்’ ஐ காரிலேயே வைத்துவிட்டு வந்திருந்தாள். அவள் அணிந்திருந்த மெல்லிய கவுன் அந்தச் சில்லென்ற காற்றைத் தாங்கப் போதுமானதாக இருக்கவில்லை.

சிலிர்த்தது அவள் தேகம். மழை வேறு ‘ஹோ’ வென்று கொட்ட இலைகளின் இடுக்குகளிலிருந்து வழிந்த நீர்த்துளிகள் மெல்ல அவளைத் தீண்டியது.

உள்ளங்கையைக் குவித்து அந்த நீரைப் பிடித்து விளையாடியவள் பக்கத்தில் மரத்தின் மீது சாய்ந்தபடி நின்று தன்னையே பார்த்திருந்தவனைப் பார்த்துச் சிரித்தாள்.

“கார்த்திக்! வைரமுத்து கவிதை படிச்சிருக்கீங்களா?”

“ம்ஹூம்… யாரது?”

“ஓ… தெரியாதா? சரி விடுங்க. அவரோட ஒரு கவிதையில ‘ஒழுகும் குடையின் கீழ் ஒதுங்கினோம்’ அப்படீன்னு ஒரு லைன் வரும்.”

“அப்படீன்னா?”

“இந்த மரத்தைத் தான் சொல்லுறார். இது குடையாம். ஆனா ஒழுகுதாம்.”

“ஓ… மித்ராக்கு இவ்வளவு தமிழ் தெரியுமா?” அவன் கேட்க அவள் கலகலவென்று சிரித்தாள்.

“அப்படியெல்லாம் இல்லை, பார்கவி புண்ணியம். ஒரு ப்ரோக்ராம் ல சொன்னாங்க.” சொல்லிவிட்டு மீண்டும் சிரித்தாள் மித்ரமதி. கார்த்திக்கும் அவளோடு இணைந்து கொண்ட போது காற்று கொஞ்சம் பலமாகவே வீசியது.

“ஷ்…” கைகள் இரண்டையும் வயிற்றோடு சேர்த்து இறுக்கிக் கொண்டவள் அந்த இதமான குளிரை ஆழ்ந்து அனுபவித்தாள். அவள் பக்கத்தில் வந்தவன் அவளை இறுகக் கட்டிக் கொண்டான்.

“கார்த்திக்!” மருண்டு விழித்த பெண்மையை அவன் கண்டு கொள்ளவே இல்லை. அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்துக் கொண்டான்.

மித்ரமதிக்கு ஒன்றுமே புரியவில்லை. ஒரு நொடி குழம்பிப் போனவள் மறு நொடி அவனைத் தன்னிடமிருந்து பிரிக்க முயன்றாள். ஆனால் முடியவில்லை.

‘ரதி… ரதி…’ என்று குழறிய படி அவன் முத்தப் பூக்களை அவள் கூந்தல் காடெங்கும் விதைத்த போது திணறிப் போனாள்.

“கார்த்திக்… ப்ளீஸ்…” அவள் வார்த்தைகள் எப்போதும் போல இப்போதும் அவனிடம் எடுபடவில்லை.

சில்லிட்ட அவள் தேகம் சீராகும் வரை அவளை அணைத்த படியே இருந்தவன் நிமிர்ந்து பார்த்த போது மித்ரமதி ஸ்தம்பித்தாள்.

அந்த முரடனின் கண்களில் மட்டுமல்ல, முகமெங்கும் காதல் மலர்ந்து கிடந்தது.
அவளை வீழ்த்துவதாக எண்ணிக் கொண்டு அவன் போடும் திட்டங்கள் அனைத்தும் அவனுக்கே சூனியமாக வந்து முடிவதை அந்த இளவல் அறிந்து கொள்ளவில்லை.

“ரதி… ரதி… ஐ லவ் யூ.” கொட்டும் மழையையும், கும்மிருட்டையும் சாட்சியாக வைத்துத் தன் முதற்காதல் சொன்னான் ‘கார்த்திக் ஹரிகிருஷ்ணனா!’

“ஐ லவ் யூ மித்ரா!” அவள் கண்களையே பார்த்தபடி அவன் சொன்ன காதல், அந்த அந்தி நேரக் குளிரையும் தாண்டி அவள் முதுகுத் தண்டைச் சில்லிட வைத்தது.

* * * * * * *
சக்ரதேவ்வும், பத்மாவும் மித்ரமதியின் வீட்டிற்கு வந்திருந்தார்கள்.‌ முறைப்படி திருமணத்தைப் பேசி முடிவு பண்ண வேண்டும் என்று அவர்கள் கேட்டிருந்த படியால் தேவகியும் எல்லோரையும் அழைத்திருந்தார்.

சக்திவேல், திவாகர், தினகர் என அனைவரும் மனைவியரோடு வந்திருந்தார்கள். வீடே நீண்ட நாட்களுக்குப் பிறகு கலகலப்பாக இருந்தது.

மித்ரமதியின் கண்கள் லேசாக கார்த்திக்கைத் தேடியது. ஆனால் அவன் வந்திருக்கவில்லை. மார்க் உடன் முக்கியமான ஒரு வியாபார விவாதத்தில் அவன் அப்போது இருந்தது இவளுக்குத் தெரியாது.

‘இரவு அத்தனை உருகி வழிந்தவனுக்கு இப்போது இங்கே வர நேரமில்லையாமா?’ இது அவள் மனது.

மழை நிற்பதற்கு முன்னமே அவளை அழைத்து வந்துவிட்டான் கார்த்திக். அவள் தடுத்த போதும் அவன் கேட்கவில்லை. காருக்குள் ஏறுவதற்கு முன்பாக பாதி நனைந்து விட்டார்கள். இருந்தாலும் மேலே அங்கே தாமதிக்க கார்த்திக் விரும்பவில்லை, அனுமதிக்கவில்லை.

வீட்டில் அவளை விட்டு விட்டு ஒரு புன்னகையோடு அவசரமாகப் போய்விட்டான். மித்ரமதி தான் என்னவோ போல உணர்ந்தாள். அவன் அருகாமையில் அவள் உணராத அவன் இருப்பை அவன் பிரிந்த போது முழுதாக உணர்ந்தாள்.

“உள்ள வரலாமா?” அந்தக் குரலில் கலைந்த இளையவள் நிமிர்ந்து பார்க்க ரூம் வாசலில் பத்மா நின்றிருந்தார்.

“வாங்க… உள்ள வாங்க ஆன்ட்டி.” இவள் தடுமாற புன்னகை முகமாக வந்தார் பத்மா. மித்ரமதியை அவர் கண்கள் ஒரு முறை நன்றாகப் பார்த்தது.

“எப்படி இருக்க மித்ரா?”

“நல்லா இருக்கேன் ஆன்ட்டி.” கார்த்திக்கின் சொந்தம் என்ற ஒன்றே அவள் வாய்ப்பூட்டைக் கழட்டி இருந்தது.

“என்னால நம்பவே முடியல மித்ரா! கார்த்திக் இத்தனை சீக்கிரம் கல்யாணத்துக்கு சம்மதிப்பான்னு.” ஏதோ நெடுநாள் பழகியவர் போல பேச்சை ஆரம்பித்தார் பத்மா.

“ஏன் ஆன்ட்டி?”

“இன்ட்ரஸ்ட் இல்லைன்னு சொல்லிட்டான். பொண்ணு பார்க்கவும் சம்மதிக்கலை. இவனை நினைச்சு ரொம்பவே கவலைப்பட்டேன்.” பத்மா பேச ஆச்சரியமாகப் பார்த்தாள் இளையவள்.

இன்ட்ரஸ்ட் இல்லாதவனா இத்தனை போதையோடு காதல் வசனம் பேசுகிறான்? எங்கேயோ உதைக்கிறதே!

“உனக்கே ஆச்சரியமா இருக்கில்லை டா. எனக்கும் இப்படித்தான் இருந்திச்சு. நாலு நாள் முன்னாடி உன்னோட ஃபோட்டோவை அனுப்பி, இதுதான் பொண்ணு… கிளம்பி வாங்கன்னு சொல்லுறான். நான் அப்படியே ஆடிப் போயிட்டேன்.”

உணர்ச்சிக் குவியலாகத் தன் எதிரே உட்கார்ந்து கொண்டு கள்ளமில்லாமல் பேசும் இந்தப் பெண்ணிற்கும் கார்த்திக் ற்கும் நிரம்ப வித்தியாசம் உண்டு என்று தான் மித்ரமதிக்குத் தோன்றியது.

கார்த்திக்கின் அழுத்தத்திற்கும் இவருக்கும் சம்பந்தமே இல்லையே!

“நான் ஒன்னு சொன்னா மித்ரா கோபிக்கக் கூடாது.”

“இல்லையில்லை… சொல்லுங்க ஆன்ட்டி.”

“எனக்கு சில நேரங்கள்ல பயமா இருக்கும் மித்ரா. எங்க ஏதாவது அமெரிக்காக் காரியை இல்லைன்னா சைனாக் காரியைக் கூட்டிக்கிட்டு வந்து இவ தான் உன்னோட மருமகள் ன்னு சொல்லிடுவானோ ன்னு!”

“ஹா… ஹா…”

“அமெரிக்காக் காரின்னாக் கூட பரவாயில்லை. சைனாக் காரி கூட நான் என்ன பாஷைல பேசுவேன் சொல்லு? ஹா… ஹா…” சொல்லிவிட்டு பத்மாவும் மித்ரமதியோடு சேர்ந்து சிரித்தார்.

ஏனோ… அந்தக் கணத்தில் பத்மாவை மித்ரமதிக்கு மிகவும் பிடித்துப் போனது.

“நிறைய கேர்ள் ஃபிரண்ட்ஸ் உண்டா ஆன்ட்டி?” சாதாரணமாகத் தான் கேட்டாள் மித்ரமதி. ஆனால் பத்மாவிற்குத் தான் ஒரு கணம் உலகம் இருண்டது.

“உண்டு தாம்மா. ஏன்? உங்கிட்ட கார்த்திக் சொல்லலையா?” லேசாக நூல் விட்டுப் பார்த்தார். இந்தப் பெண்ணால் தன் மகனின் வாழ்க்கை சீர்பட்டு விடாதா என்று அவர் தாய்மனம் ஏங்கியது.

“பிஸினஸ் பண்ணறாங்க. இதையெல்லாம் தவிர்க்க முடியாது தானே ஆன்ட்டி.” ரிச்சர்ட்டை வைத்து கார்த்திக்கின் பெண் நண்பர்களையும் எடைபோட்டாள் மித்ரா.

பத்மா எதுவும் பேசவில்லை. என்ன பேசுவது என்றும் அவருக்குப் புரியவில்லை.

அமைதியாக மித்ரமதியின் வலக்கரத்தைத் தன் கைகளுக்குள் எடுத்துக் கொண்டார்.

“அப்படி இல்லை மித்ரா. வாழ்க்கை பூரா இனி ஒன்னா இருக்கப் போறீங்க. ஒருத்தரைப் பத்தி இன்னொருத்தர் நல்லா புரிஞ்சுக்கிறது தான் நல்லது. எதுவா இருந்தாலும் கார்த்திக் கிட்ட நீ மனசு விட்டுப் பேசு ம்மா.”

அவர் மனம் கிடந்து அடித்துக் கொண்டது. வார இறுதிகளில் வீடு வராமற் போகும் மகனை அவர் நன்கு அறிவார். அரசல் புரசலாக அவர் காதுகளுக்கும் சில சேதிகள் வந்து சேர்ந்திருந்தன.

இருந்தாலும் பெற்ற மனம் அத்தனையையும் ஏற்க மறுத்தது. தன் பிள்ளையும் நாலு பேரைப் போல பெண்டாட்டி, பிள்ளைகள் என்று வாழமாட்டானா என ஏங்கித் தவித்தது.
அவனை நல்வழிப்படுத்தும் ஒரு பெண்ணை அவன் கண்களில் காட்டு என்று சதா ஆண்டவனை அவர் மனது இறைஞ்சி வேண்டியது உண்மை தான். ஆனால் தான் வேண்டிய அந்தப் பெண் தன் எதிரே வந்த போது, கூத்தாட வேண்டிய மனது கூனிக் குறுகிப் போனது.

தனக்கொரு பெண் இருந்திருந்தால்… தன் மகனையே நிறுத்தக் கூடாத இடத்தில் நிறுத்தி வைத்து ஊமையாய் அழுதது அந்தத் தாய்மனது.

“நம்ம வீட்டுக்குப் போகலாமா மித்ரா?”

“ஆன்ட்டி?”

“கொஞ்சம் பெருசா வீடு வேணும்னு சிட்டியை விட்டுத் தள்ளி வாங்கி இருக்கான். நீ வந்து பார்த்தா எனக்குத் திருப்தியா இருக்கும் மித்ரா. உங்கிட்ட சொன்னானா கார்த்திக்?”

“இல்லை…”

“ஓ… சொல்லலையா! பரவாயில்லை விடு. இங்க எல்லாம் பேசி முடிச்சதும் நாம அங்க போகலாம். நான் உங்க அம்மாக்கிட்ட பேசுறேன்.”

“சரி ஆன்ட்டி.”

எல்லோரும் கூடிப் பேசி இன்னும் ஒரு மாதத்தில் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று முடிவானது. கையோடு மித்ரமதியையும் அழைத்துக் கொண்டு தான் கிளம்பினார் பத்மா.

தேவகியும் ஒன்றும் சொல்லவில்லை. மகள் இத்தனை தூரம் இளகி வந்ததே அவருக்குப் பேரானந்தமாக இருந்தது. கல்யாணத்துக்கான ஏற்பாடுகளை அப்போதிருந்தே பார்க்க ஆரம்பித்து விட்டார்.

***

பச்சைப் பசேலென்று இருந்தது அந்த இடம். சிட்டியிலிருந்து எட்டு மைல் தொலைவில் அமைந்திருந்தது. நகரத்தின் பரபரப்பிலிருந்து சற்றே ஒதுங்கினாற் போல ஓர் அழகான அமைதி.

மித்ரமதி ஒன்றிரண்டு முறை இங்கே வந்திருக்கிறாள். ஆனால் நிறுத்தி நிதானமாக இப்படி இயற்கையை ரசித்ததில்லை.

“ஏரியா ரொம்ப நல்லா இருக்கில்லை மித்ரா?” கார் போனபடி இருந்தது.

“ஆமா ஆன்ட்டி.”

“உனக்குப் பிடிச்சிருக்கா?”

“ம்… பிடிச்சிருக்கு.”

“கார்த்திக்கோட டேஸ்ட் இப்படித்தான். கொஞ்சம் தனிமையை விரும்புற ரகம். பார்த்துப் பார்த்துச் சின்ன விஷயத்தையும் ரசிப்பான்.”

“ஓ…”

“அடிக்கடி இப்படியான இடங்களுக்குப் போவான். சில நேரம் என்னையும் அங்கிளையும் கூட கூட்டிக்கிட்டுப் போவான். ரொம்ப நல்லா இருக்கும். மாக்ஸிமம் என்ஜாய் பண்ணிட்டு வருவோம்.”

“அப்படியா…” இவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே கார் ஓர் கேட்டின் முன் நின்றது. அந்த ஏரியாவிலேயே அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தான் வீடுகள் காணப்பட்டன. ட்ரைவர் இறங்கிப் போய் கேட்டைத் திறந்து விட்டு மீண்டும் வந்து ஏறிக் கொண்டார்.

கேட்டிலிருந்து நூறு மீட்டர் தொலைவில் இருந்தது வீடு. குட்டி பங்களா என்று சொல்லலாம். நல்ல விசாலமான தோட்டம்.

“வீட்டுக்குப் பின்னாடியும் நல்ல பெரிய தோட்டம் இருக்கு மித்ரா. உனக்கு டைம் இருந்தா நீயும் ஏதாவது பண்ணு. முன்னாடி இருந்தவங்க காரெட், உருளைக்கிழங்கு எல்லாம் போட்டிருக்காங்க.”

இளையவள் பார்வையைப் பார்த்துவிட்டு இலவசமாக ஆலோசனை வழங்கினார் பத்மா. மித்ரா வும் புன்னகைத்து வைத்தாள். ஆனால் கண்கள் அவனைத்தான் தேடியது.

“உள்ளே வாம்மா.” வீட்டிற்குள் அழைத்துச் சென்றார் பத்மா.

“வீட்டை நல்லா சுத்திப் பார்த்துட்டு உனக்கு ஏதாவது மாறுதல் பண்ணணும் ன்னா சொல்லு, பண்ணிடலாம் என்ன?”

“ம்…” வாய் சம்மதம் சொன்ன போதும் அந்தக் கண்கள் அலைப்புற்றது. பத்மாவிற்கு மித்ரமதியின் தோற்றம் ஏனோ திருப்தியாக இருந்தது.

‘இந்தப் பெண் என் மகனைத் தட்டிக் கொட்டி சரி பண்ணி விடுவாள்!’ மனதிலிருந்த பாரம் ஒன்று இறங்கினாற் போல இருந்தது.

“மித்ரா! மேலே போய் ரைட் ல திரும்பினா ஒரு ரூம் இருக்கும். அங்க தான் கார்த்திக் இருக்கான். நீ போம்மா.” சொல்லிவிட்டு சட்டென்று நகர்ந்து விட்டார் பத்மா.

அங்கிளும் ஹாலில் ஒரு ஆங்கில நாளிதழுடன் ஐக்கியமாகி விட மேலே போகும் படிகளில் ஏறினாள் பெண். வீடு நல்ல விசாலமாக இருந்தது. இன்னும் முழுதாக ஒழுங்கு பண்ணப்பட்டிருக்கவில்லை.

வாங்கப்பட்ட பொருட்கள் இன்னும் அதன் பெட்டிகளிலேயே உடைக்கப்படாமல் அப்படியே இருந்தது. நல்ல ஆளுயர பெரிய ஜன்னல்கள் வெளியே தெரிந்த பசுமையின் குளுமையை வீட்டிற்குள்ளும் பாய்ச்சின.

பத்மா சொன்ன ரூமில் கார்த்திக் யாருடனோ ஃபோனில் விவாதித்துக் கொண்டிருந்தான். இவள் வந்ததை அவன் கவனிக்கவில்லை. இரண்டு பெரிய ஸ்க்ரீன் கொண்ட கணினிகள் அவன் முன் வீற்றிருந்தன.

ஒன்றின் திரை அமெரிக்க டாலருக்கு சொந்தம் கொண்டாட, இன்னொன்று நான் ஸ்டேர்லிங் பவுண்டுக்கு சொந்தக்காரன் என்றது.

கண்ணாடிக் கதவின் பின்னே அவன் பேசி முடிக்கும் வரை காத்திருந்தவள் மெதுவாகத் தன் ஆள்காட்டி விரலை மடக்கித் தட்டினாள்.

கோபமாகத் திரும்பிய கார்த்திக்கின் முகம் இவளைப் பார்த்ததும் குளிர்ந்து போனது. எழுந்து வந்து கதவைத் திறந்தவன்,

“மித்ரா!” என்றான் ஆச்சரியமாக.

“வேலையைப் பாதியில டிஸ்டேர்ப் பண்ணினா கோபம் வருமோ?” இது மித்ரா.

“நிறைய…” சொல்லிவிட்டுச் சிரித்தான் கார்த்திக்.

“இப்போ கோபமா இருக்கீங்களா என்ன?”

“இல்லையில்லை… வேவையை முடிச்சுட்டேன். ஆமா… நீ எங்க இங்க?”

“இல்லை… பத்மா ஆன்ட்டியோட பையன் சிட்டிக்குப் பக்கத்துல புது வீடு வாங்கி இருக்காராம். அதான் காட்டுறதுக்குக் கூட்டிக்கிட்டு வந்தாங்க.”

“ஏய்…” இப்போது வாய்விட்டுச் சிரித்தான் கார்த்திக்.

“அப்படியில்லை பேபி. வேலை இன்னும் முடியலை. எல்லாத்தையும் ஒழுங்கு பண்ணிட்டு அப்புறமா சர்ப்ரைஸ் குடுக்கலாம்னு நினைச்சேன்.”

“சரி பரவாயில்லை விடுங்க. நல்லாவே சமாளிக்குறீங்க.” சொல்லிய படியே அங்கிருந்த ஜன்னலின் பக்கத்தில் போய் நின்றாள் மித்ரா.

கார்த்திக்கிற்கு மித்ராவின் நடவடிக்கைகள் கொஞ்சம் வித்தியாசமாகத் தெரிந்தது. எப்போதும் கொஞ்சம் ஒதுக்கமாகவே பேசும் பெண் இன்று கொஞ்சம் நெருங்கி வந்தாற் போல தெரிந்தது.

“வீடு பிடிச்சிருக்கா மித்ரா?”

“ம்… நல்லா இருக்கு. ரொம்ப அமைதியா, அழகா, பசுமையா… இட்ஸ் நைஸ்.”

“எப்போ டேட் ஃபிக்ஸ் பண்ணி இருக்காங்க?”

“இன்னும் ஒன் மன்த் இருக்கு கார்த்திக்.”

“ஓ…‌ ஏன்? அதுக்கு முன்னாடி நல்ல முகூர்த்தம் இல்லையாமா?”

“இதுவே கொஞ்ச நாள் தான் இருக்கு. அதுக்குள்ள நிறைய வேலை முடிக்கணும்னு பேசிக்கிட்டாங்க.”

“அப்போ அதுவரைக்கும் நாம என்ன பண்ணுறது மித்ரா?”

“என்ன பண்ணறதுன்னா? வழமை போல தான் கார்த்திக். பிஸினஸைப் பார்த்துக்க வேண்டியது தான்.”

அவளின் குழந்தைத் தனமான பதிலில் புன்னகைத்தான் கார்த்திக்.

“அந்த ஒரு மாசத்துல பண்ணுறதுக்கு நமக்கு முக்கியமான ஒரு வேலை இருக்கு ரதி.” அவன் அவளை ரதி என்று விளிக்கும் போதெல்லாம் அந்தக் குரல் ஏனோ பிசிறடித்தது.

“எ… என்ன வேலை?”

“என்னோட லைஃப்ல நானும், உன்னோட லைஃப்ல நீயும் இது வரைக்கும் பண்ணாத ஒரு வேலை.”

“அது என்ன வேலை?”

“லவ்… லவ் பண்ணலாம்.”

“வாட்?” ஆச்சரியத்தோடு புன்னகைத்தாள் மித்ரமதி.

“ஏன்?‌ பண்ணக்கூடாதா?”

“லவ் பண்ண நினைக்கிறவர் தான் நேத்து அடிச்சுப் பிடிச்சு வீட்டுக்கு ஓடினாரா?” கேட்ட பிறகே தான் கேட்டதன் பொருள் உணர்ந்தவள் நாக்கைக் கடித்துக் கொண்டாள்.

“நேத்து என்னை மிஸ் பண்ணினயா மித்ரா?” கேட்டபடியே இப்போது அவள் பக்கத்தில் வந்திருந்தான் கார்த்திக்.

அவன் கண்களை நேருக்கு நேராகப் பார்த்த அந்தத் தருணத்தில் முழுமையாக அதை உணர்ந்தாள் மித்ரமதி. அவள் மனம் எதிரில் நிற்கும் அந்த முரடனின் பக்கமாக முழுதாகச் சாய்ந்திருந்தது.
மறைத்தாலும், வாதம் செய்தாலும் அது தான் மறுக்க முடியாத உண்மை. அதை அவள் கண்கள் அவனுக்கும் அழகாக எடுத்துச் சொல்லின.

கார்த்திக் மயங்கிப் போனான். காதல் சொன்ன அவள் விழிகள் காந்தம் போல அவனை ஈர்த்தது.

“சொல்லு ரதி!” மீண்டும் அவன் ரதி!

“என்ன சொல்லணும்?”

“என்னை மிஸ் பண்ணுறியா?”

“நீங்க கூப்பிடாமலேயே இங்க வரும் போதே உங்களுக்கு அது புரியலையா?” அவளின் அனுமதி இல்லாமலேயே வந்து வீழ்ந்த வார்த்தைகள் அவனுக்கு வரப்பிரசாதம் ஆகிப் போயின.

“கூப்பிடக் கூடாதுன்னு இல்லை மித்ரா… உனக்கு அது சொன்னாப் புரியாது. அதை விடு, நீ இப்போ சொல்லு.”

“இன்னும் என்ன கார்த்திக் சொல்லணும்?”

“நேத்து நைட் நான் ஒன்னு சொன்னேன் இல்லை… அதை நீயும் இப்போ சொல்லு.”

“எதுக்கு? நைட் நீங்க சொல்லிட்டு ஓடிப்போன மாதிரி இப்போவும் ஓடுறதுக்கா?” மீண்டும் அவள் கேலி பேசினாள். இப்போது அவன் அடிக்குரலில் சிரித்தான்.

“ஓடுறனா இல்லையான்னு கல்யாணத்துக்கு அப்புறமா நான் காட்டுறேன். நீ இப்போ சொல்லு ரதி.”

“………….”

“சொல்லு ரதி!” அவன் குரல் கொஞ்சியதா? கெஞ்சியதா?

அவன் கண்களை அண்ணார்ந்து பார்த்தாள் மித்ரமதி. காதல் பாதி காமம் பாதி என்று கிறங்கி நின்றிருந்தான் கார்த்திக்.

“ஐ லவ் யூ கார்த்திக்! லவ் யூ சோ மச்!” சொல்லி விட்டாள். வாழ்க்கையில் இது வரை தான் யாரையும் பார்த்துச் சொல்லாததை, இனியும் தான் யாரையும் பார்த்துச் சொல்லப் போவதில்லை என்று இறுமாப்போடு இருந்ததை அழகாகச் சொல்லி முடித்திருந்தாள் பெண்.

“ரதி!” கார்த்திக் திக்குமுக்காடிப் போனான். ஒரு பானை வெல்லத்தைக் கவிழ்த்துக் கொட்டியது போல அவன் உடலெங்கும் இனித்தது. அவளை இழுத்துத் தன் கை வளைவிற்குள் நிறுத்திக் கொண்டான்.

“ஆன்ட்டி… தேடுவாங்க.”

“மேல நான் இருக்கேன்னு யாரு சொன்னா?”

“ஆன்ட்டி தான்…”

“அப்போ தேட மாட்டாங்க.”

“கார்த்திக்…”

“நேத்து பயந்து போய்த்தான் ஓடி வந்தேன் மித்ரா.” அவன் முகத்தில் மெல்லியதாக ஒரு சரசப் புன்னகை.

“ஏன்?” அவள் இதழோரம் மெல்லியதாக ஒரு கேலிப் புன்னகை.

“எல்லாம் கை மீறிடுமோன்னு ஒரு பயம்.” இதை அவன் சொன்னபோது இப்போது தலையைக் குனிந்து கொண்டாள் பெண்.

“இதுவரைக்கும் கார்த்திக் கிட்ட இருந்த தைரியம் எல்லாம் அந்த நிமிஷம் காணாமப் போயிடுச்சு.”

“ஏன்?”

“அதுக்கு விடை எனக்கே தெரியலையே! அதனால தான் இன்னைக்கு ஃபங்ஷனுக்குக் கூட வரலை.”

“………….”

“இந்தச் சின்னப் பொண்ணு என்னை ரொம்பவே டிஸ்டர்ப் பண்ணுதோ?” அவன் நெருக்கம் இன்னும் கொஞ்சம் அதிகரிக்க லேசாக நெளிந்தாள் பெண்.

“கார்த்திக்… நான் கீழே போகணும்.”

“இன்னொரு தரம் சொல்லிட்டுப் போ.”

“என்ன சொல்ல?”

“ஐ லவ் யூ சொல்லு.”

“லவ் யூ கார்த்திக்.”

“ம்ஹூம்… இப்படியில்லை.”

“அப்போ எப்படி?”

“முன்னாடி சொன்ன மாதிரி.”

“அது… அது ஒரு தரம் தான் வரும். இன்னொரு தரம் வரணும்னா அது உங்க சாமர்த்தியம்.”

இலகுவாகச் சொல்லி விட்டது பெண். அவன் சாமர்த்தியத்தின் அளவை அவள் அறிந்திருக்க நியாயம் இல்லை. அடுத்த ஐந்து நொடிகளுக்குள் அவள் வாயிலிருந்து அவன் எதிர்பார்த்த வார்த்தைகள் மயக்கத்தோடு வந்து வீழ்ந்தன.

அள்ளிக் கொண்டான் ‘கார்த்திக் ஹரிகிருஷ்ணா.’

நந்தகுமார் அள்ளத் துடித்த அதே வார்த்தைகள்! அள்ள முடியாமற் தோற்றுப் போய் உயிரை மாய்த்துக் கொள்ள வைத்த அதே வார்த்தைகள்!

கார்த்திக் ஹரிகிருஷ்ணா சுலபமாய் சாதித்திருந்தான்!

 

error: Content is protected !!