உலாவரும் கனாக்கள் கண்ணிலே-15

 

கொல்கத்தாவின் ஜனத்திரளுக்குள் இலாவகமாக தன்னை அழைத்துச் செல்லும் கணவனை ஆச்சர்யமாகவும், ஆர்வமாகவும் பார்த்திருந்தாள், அர்ச்சனா.

கொல்கத்தா நகரம், வடக்குக் கொல்கத்தா, நடுக் கல்கத்தா, தெற்குக் கல்கத்தா என மூன்று பிரிவுகளாக உள்ளது.

தெற்கு கொல்கத்தா இந்தியா விடுதலை அடைந்த பின் உருவாக்கப்பட்ட பகுதியாகும். இப்பகுதி பெரும்பாலும் வசதி படைத்த செல்வர்களின் பகுதியாக காணப்படுகிறது.  கிழக்கு இந்தியாவின் மாநிலங்களுக்கான மண்ணியல் துறைசார் உயர் அலுவலகம் இப்பகுதியில் இயங்கி வருகிறது. இவ்வலுவலகவாசிகளுக்கான  குடியிருப்புகள் மற்றும் தங்கும் விடுதியும் அதே வளாகத்தினுள் அமைக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள விடுதியில் தங்க அர்ச்சனாவுடன் வந்திருந்த அமர், தங்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த விடுதி அறையில் மனைவியை விட்டுவிட்டு அங்குள்ள அலுவலகத்திற்கு சென்று தனது வரவை உறுதிசெய்துவிட்டு அறைக்குத் திரும்பினான்.  அப்பொழுது ஜனதா அழைக்க, தங்கையுடன் பேசிவிட்டு வைத்தவன், யோசனையில் ஆழ்ந்திருந்தான்.

பிறகு அர்ச்சனாவை அழைத்து பேசினான்.

“நாம இங்க வர்றது, நான் சொல்லும்முன்ன உனக்கு யாரு சொல்லித் தெரியும் அர்ச்சனா?”, மனைவியின் பேச்சினை நினைவு கூர்ந்தவன் கேட்டிருந்தான்.

“…”, ‘எதுவும் தெரியாத மாதிரி நாடகமா ஆடுறீங்க ரெண்டு பேரும்’ என நினைத்த அர்ச்சனா அமைதியாக நின்றாள்.

“யாரு உனக்கு சொன்னா?, நீயா எதாவது கற்பனை செய்துட்டு எங்கிட்ட சொல்லாம மறைக்காத…

அதுக்குமேல எதாவது இக்கட்டுல நீ மாட்டிட்டா என்னால ஒன்னும் செய்ய முடியாது.

ஜனதா போன் பண்ணிருந்தது. உன் ஃபேஸ்புக் அக்கவுண்ட் டீடைல்ஸ் எல்லாம் பப்ளிக்கா இருக்குனு சொல்லுச்சு, உன் மொபைலை எடுத்துட்டு வா பாப்போம்”

அமரின் பேச்சைக் கேட்டவளுக்கு நம்புவதா வேண்டாமா என்ற குழப்பம் ஒருபுறம்.  இருந்தாலும் சொல்லிவிடுவோம் என ஆரம்பித்தாள்.

“அவதான் எனக்கு மெசேஸ் பண்ணியிருந்தா”, என்றபடி தனது மொபைலை கணவனிடம் கொடுத்திருந்தாள்.

“யாரு?”, என்றபடி அர்ச்சனாவின் முகம் பார்த்தான், அதில் எனக்கு உண்மையில் யாரென்று தெரியவில்லை அதனால் நீயே சொல், என்ற செய்தி இருந்தது.

கணவனிடம் மெளனிகாவிடம் இருந்து வந்திருந்த மெசேஸை எடுத்துக் கொடுத்தாள்.  அதைப் பார்த்தவனுக்கு கோபம் வரவே, மனைவியிடம்

“இவகூட உனக்கு என்ன பேச்சு, அப்பவே எங்கிட்ட சொல்றதுக்கு என்ன?”, என முகம் சிவக்க கத்தியிருந்தான்.

கணவனின் தோற்றத்தை கண்டு இரண்டாவது முறையாக பயந்தவள், “நீங்க தான்… அன்னிக்கு அவ பேச்ச… இனி பேசுனா…. அதோட உனக்கும்… எனக்கும்… உள்ள உறவு அவ்வளவு தான்னு… எங்கிட்ட சொன்னீங்க, அதனால… தான், இதை எப்டி உங்ககிட்ட கேக்கணு… கொஞ்சம் பயமா… இருந்தது”, என நிதானமான பதட்டத்துடன் பேசியிருந்தாள்.

“உன் ஃபேஸ்புக் ஐடி ஓபன் பண்ணு”, கணவனின் சொல்லைக் கேட்டவள், என்ன நடக்குது என புரியாமல் தனது கணவனை புதிராய்ப் பார்த்திருந்தாள்.

அமர், அர்ச்சனாவின் மொபைலில் ஃபேஸ்புக் கணக்கில் இருந்த மனைவியின் தகவல்களை எடுத்துப் பார்த்தவன், “மொபைல் நம்பர் எல்லாம் எதுக்கு கொடுத்து வச்சிருக்க?”, எனக் கேட்டான்.

“ஏன் கொடுக்கக் கூடாதா?”, என அப்பாவியாக கேட்டவளின் அறியாமையை எண்ணிப் பார்த்தவன்,

எபோட் யுவர் இன்ஃபோவில் உள்ள கான்டாக்ட் அன்ட் பேசிக் இன்ஃபோவின் கீழ் இருந்த காண்டாக்ட் இன்ஃபர்மேஸனில் அர்ச்சனாவின் மொபைல் நம்பர் கொடுக்கப்பட்டு டெக்ஸ்ட் ஆக்டிவேட்டட் பப்ளிக் என இருந்ததை மனைவிக்கு எடுத்துக் காண்பித்தான்.

“இங்க உன் மொபைல் நம்பர் தந்ததே தப்பு, இதுல டெக்ஸ்ட் ஆக்டிவேட்டட் பப்ளிக்னு வச்சா யாரும் உன் மொபைல் நம்பர ஈசியா எடுத்து தப்பா யூஸ் பண்ணலாம், இத வச்சு தான் அவ உன் நம்பர எடுத்திருக்கா”

“அப்ப நீங்க குடுக்கலயா?”, என அர்ச்சனா கேட்க,

“உனக்குத்தான் இப்ப ஒன்னு குடுக்கணும்… நல்லா யோசிச்ச போடீ…”, என்றவன்

“இனி நம்ம போட்டோஸ் எல்லாம் இங்க ஷேர் பண்ணாத, அதே மாதிரி லொகேசன் ஷேரிங்கையும் டீயாக்டிவேட் பண்ணிரு… வீணா ஒரு வம்ப நமக்குள்ள கொண்டு வர நீயே வழி செஞ்சிருக்க, உன்ன…”, என்றவன்

சற்று நேரம் யோசனையில் இருந்தான். அடுத்தடுத்து சில அழைப்புகள் மூலம் சிலருக்கு அழைத்து பேசிவிட்டு வைத்தான்.

 

அதன் பின் கிளம்பி, வளாகத்தினுள் வைக்கப்பட்டிருந்த சிசிடிவிகளுக்கான அறைக்கு சென்று அங்கு பணியில் இருந்த அலுவலரைச் சந்தித்து பேசிவிட்டு அறைக்குள் வந்தவன், அடுத்த நாள் கருத்தரங்கிற்கு தனது பங்களிப்பிற்கான பணிகளை கவனித்தான்.

………………………………………………

நடு கொல்கத்தா பெரும்பாலும் வணிகப் பகுதியாக திகழ்கிறது. அரசு அலுவலகங்கள், தலைமை செயலகம் , தலைமை அஞ்சல் அலுவலகம் , கல்கத்தா உயர் நீதிமனறம்லால் பசார் காவலர் தலைமையகம் மற்றும் பல தனியார் அலுவலகங்கள் இப்பகுதியில் உள்ளன.

மெய்டன் திடல் இப்பகுதியில் அமைந்துள்ள மிகப் பெரிய திறந்த வெளித் திடல் ஆகும். இத்திடலில் பல்வேறு விளையாட்டு போட்டிகளும், பொது நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

கருத்தரங்க கூட்டத்திற்கான ஏற்பாடுகள் உள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பங்கேற்க வரும் மண்ணியல் துறை ஆராய்ச்சியாளர்களின் பெரும்பான்மை எண்ணிக்கையை கருத்தில் கொண்டு மெய்டன் திடலில் அமைக்கப்பட்டிருந்தது.

………………………………………………

 

வளாகத்தினுள் இருக்கும் கேண்டினில் காலை உணவிற்காக அர்ச்சனாவையும் உடன் அழைத்துச் சென்றான், அமர்.

மதிய உணவிற்காக வளாகத்தினுள் இருக்கும் அலவலக கேண்டினில் சென்று உணவருந்தப் பணித்தவன், யார் அழைத்தாலும் வளாகத்தை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என அர்ச்சனாவிடம் கூறினான்.

மனைவியின் மிரண்ட பார்வையில், அர்ச்சனாவின் மொழிப்பிரச்சனையை நினைவு கூர்ந்தவன்… அவளின் நிலையைக் கருத்தில்கொண்டு, அங்குள்ள கேண்டின் நிர்வாகியிடம் பேசினான்.

மதிய உணவை அவர்களின் அறைக்கு கொண்டு வந்து தருமாறும், உணவிற்கான தொகையை தற்போது செலுத்தி விடுவதாகவும் கூறினான். அமரின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டார் கேண்டீன் நிர்வாகி.

அறை எண்ணை கேட்டறிந்து கொண்ட கேண்டின் நிர்வாகி, உணவை அவர்கள் தங்கியிருக்கும் அறைக்கே அனுப்பி விடுவதாகவும், வருத்தம் ஏதுமின்றி அமரின் பணிகளைக் கவனிக்குமாறும் தெரிவித்தார்.  நன்றி தெரிவித்துவிட்டு, அர்ச்சனாவை அறைக்கு அழைத்து வந்தான், அமர்.

அமர் கிளம்பும் முன் அர்ச்சனாவின் அலைபேசியை வாங்கினான்.

“எந்த கால் வந்தாலும் எடு, நிதானமா பேசு,  ஆனா நீ எங்க இருக்கனு உனக்கு அறிமுகமில்லாத யாரும் கேட்டா… இடம் சரியா சொல்லத் தெரியலனு சொல்லு”

“ஏன் சொல்லக் கூடாது?”

“உங்க வீட்ல, எங்க வீட்ல யாராவது கேட்டா சொல்லலாம், உனக்கு அறிமுகமில்லாதவங்க யாரும் கால் பண்ணிக் கேட்டா நான் சொன்னத செய்யி, எல்லாம் அப்புறம் சொல்றேன்”

“ம்… சரி, எனக்கு பயமா இருக்கு”

“உனக்கு பயமா? பயமே உன்னக் கண்டா பயந்து ஓடிரும்”, என்றபடி சிரித்தான் அமர்.

“உங்களுக்கு என் நிலம கிண்டலா இருக்கு”

“எதுக்கும் பயப்படாத, சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்குல்ல?”

“…”, தலையாட்டினாள்.

அர்ச்சனாவின் அலைபேசிக்கு வரும் அழைப்புகளை அமருக்கும், அமரின் அழைப்புகளை அர்ச்சனாவிற்கும் கால் ஃபார்வார்ட் அமைப்பு மூலம் மாற்றி அமைத்தான். புரியாமல் பார்த்த அர்ச்சனாவிடம் தனது அலைபேசியை கொடுத்துவிட்டு, மனைவியின் அலைபேசியுடன் கூட்டம் நடக்கவிருக்கும் இடத்திற்கு கிளம்பினான்.

**********************************************

 

பெரும்பான்மையான மண்ணியல் துறையைச் சார்ந்த மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், பணிபுரிபவர்கள் என எழுநூறுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட கருத்தரங்க கூட்டம் நிரம்பியிருந்தது.  ஆராய்ச்சியாளர்கள் தமது படைப்புகளை வழங்கினர்.  கூட்டம் அமைதியாக நடந்து கொண்டிருந்தது.

சைலண்டில் இருந்த அர்ச்சனாவின் அலைபேசியில் ப்ளூ இன்காக்னிடோ சாட் ரீடரை இன்ஸ்டால் செய்திருந்தான் அமர்.  அதன்பின் வாட்சப்பிற்கு வந்திருந்த செய்திகளை ப்ளூ இன்காக்னிடோ சாட் ரீடரை திறந்து பார்வையிட்டான். இந்தியாவிற்குள் உபயோகப்படுத்தும் ஆனால் இது வரை சேமிக்காத புது எண்ணிலிருந்து செய்தி வந்திருந்தது. அதை மட்டும் திறந்து பார்த்தான்.

“எங்க இருக்க இப்ப?, கொல்கத்தா கான்ஃபரன்ஸூக்கு, அமர் உன்னயுமா கூட்டிட்டி வந்திருக்கான்?

எங்க தங்கியிருக்கீங்க?”

அடுத்து பத்து நிமிடங்களுக்குப் பிறகு,

“மெய்டன்னு லொகேசன் காமிக்குது, உன்னயுமா கான்ஃபரன்ஸ்கு கூட்டிட்டு வந்திருக்கானா?, எங்க உக்காந்து இருக்கீங்க ரெண்டுபேரும்”

“ஆன்லைன்ல மொபைலை வச்சுட்டு யாரு வாய பாத்துட்டு இருக்க அங்க

பாத்துட்டா ரிப்ளை பண்ணு”

மௌனிகாவின் வாட்ஸப் செய்திகளை ப்ளு இன்காக்னிடோ சாட் ரீடரில் பார்வையிட்டவன், வேறு ஒரு நம்பருக்கு மௌனிகாவின் புதிய எண்ணை குறுஞ்செய்தியாக அனுப்பினான்.

அடுத்த வந்த பதினைந்து நிமிடங்களில் காலை முதல் அமர்வு நிறைவு பெற்றிருந்தது.  அங்கிருந்தவர்கள் தேநீருக்காக எழ, அமரும் தனது நண்பர்களுடன் சென்று தேநீர் அருந்தி வந்தான்.

அடுத்த அமர்வு ஆரம்பமாகி இருபது நிமிடங்களில் அதே எண்ணிலிருந்து அழைப்பு வரவே அதை அமர் எடுக்கவில்லை.

 

அதே நேரம் விடுதி அறையில் டிவியின் முன் அமர்ந்திருந்தாலும், நிகழ்ச்சிகளில் மனம் பதியாமல் அமர்ந்திருந்தாள் அர்ச்சனா.  புதிய எண்ணிலிருந்து வந்த அழைப்பை ஏற்றிருந்தாள், அர்ச்சனா.

“ஹலோ அர்ச்சனாவா?”, குரலில் பதட்டம் இருந்தது.

“ம்… ஆமா, நீங்க?”

“நான் ஷர்மா மல்டி ஸ்பெசாலிட்ட ஹாஸ்பிடல்ல இருந்து பேசுறேன், இங்க உங்க ஹஸ்பண்ட்ட அட்மிட் பண்ணியிருக்காங்க, இங்க உடனே கிளம்பி வாங்க”

“நீங்க யாரு பேசுறது?”

“நான் ரிசப்ஷன்ல இருந்து பேசுறேன், உங்க ஹஸ்பண்ட் இங்க கூட்டிட்டு வரும்போது இந்த நம்பருக்கு கன்வே பண்ணா என் வயிஃப் இங்க வந்திருவாங்கனு சொன்னாரு, அதான் கால் பண்ணேன்”

“அய்யோ, அவருக்கு என்ன ஆச்சு, எப்டியிருக்காரு?”

“அவங்க வந்த வண்டி ஆக்ஸிடெண்ட் ஆனதுல உடம்பெல்லாம் அதிகமான காயம், அதான் இப்ப மயங்கிட்டதால ஃபர்ஸ்ட் எய்ட் கொடுக்க ஐசியுவுக்குள்ள கொண்டு போயிட்டாங்க, நீங்க சீக்கிரமா கிளம்பி அர மணி நேரத்தில இங்க வந்திருங்க”

“எனக்கு இந்த ஹாஸ்பிடல் எங்க இருக்குனே தெரியாதே, நான் எப்டி அங்க வரமுடியும்?”, விபத்து செய்தியைக் கேட்டவளுக்கு, கணவன் கூறிச் சென்றிருந்த வார்த்தைகளை மறந்து அழ ஆரம்பித்திருந்தாள், அர்ச்சனா.

“அழாம நீங்க இருக்குற எடத்த சொல்லுங்க முதல்ல, நான் உங்களுக்கு மெகா கேப் புக் பண்றேன்.  கேப்ல ஹாஸ்பிடல் வந்துருங்க”

தனது கணவனின் அலுவலகத்தோடு இணைந்து இருக்கும் விடுதி பற்றி கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்த பிறகும் அழுதபடி இருந்தாள். ஆனால் தனது கணவனின் விபத்து செய்தியை பகிர்ந்த பெண், தன்னுடன் அலைபேசியில் சரளமான தமிழில் உரையாடியதை உணர முடியாதவளாய் மாறியிருந்தாள், அர்ச்சனா.

அர்ச்சனாவிற்கு இருந்த பதற்றத்தில் தமையனுக்கோ, வேறு யாருக்கும் அழைத்து பேசவும் தோன்றாமல் அழுதாள். அர்ச்சனாவால் யோசிக்க இயலவில்லை.

பதற்றத்தில் உடம்பெல்லாம் நடுங்க, கழிவறைக்கு செல்லும் உணர்வு தோன்ற என அவளின் நிலை பரிதாபமாக இருந்தது.  எந்த செயலையும் செய்யும் ஆற்றல் இல்லாதது போன்ற ஒரு மாயநிலையில் இருந்தாள், அர்ச்சனா.

அனைத்து அவயங்களும் வேலை நிறுத்தத்தை மேற்கொண்டதோ எனும்படியாக அர்ச்சனாவின் நிலை இருந்தது. அடுத்த நொடியுடன் உலகே மறையப் போகிறது எனும் செய்தி கேட்ட மனிதனின் மனநிலையில் தனது பணிகளைச் செய்ய இயலாமல் தவித்திருந்தாள், அர்ச்சனா.

சத்தியவாடி, விருத்தாசலம் தவிர வேறு இடங்களுக்கு சென்று பழக்கமில்லாமல் இருந்தவள், திருமணத்திற்குப் பிறகு, தேனிலவு பயணமாக கேரளா சென்று வந்திருந்தாலும் சென்ற இடங்களின் பிரமிப்பை மட்டுமே ரசித்திருந்தாள்.

அதன்பின் ஒரிசா சென்றிருந்தாலும் கணவனுடனான பயணத்தில் அனைத்தையும் அமரே பார்த்துக் கொண்டமையால் எதைப் பற்றியும் அறிந்து கொள்ள ஆர்வம் காட்டவும் இல்லை.

மொழி தெரியாத இடத்தில் வந்து மாட்டிக் கொண்ட தனது நிலையை எண்ணி, இனி நான் என்ன செய்யப் போகிறேனோ? எனும் கழிவிரக்கம் தன் மேல் ஏற்பட அழுகையை நிப்பாட்டவே இயலாமல் அழுதவாறு இருந்தாள், அர்ச்சனா.

அடுத்த இருபது நிமிடத்தில் அதே எண்ணிலிருந்து அழைப்பு மீண்டும் வரவே

“உங்க கேப் வெளியில வெயிட் பண்ணுது”, வண்டி நம்பரைச் சொன்னவள் அடுத்து அழைப்பை துண்டித்திருந்தாள்.

அழுதபடி சென்றவள், அழைப்பில் குறிப்பிட்ட கேப் நம்பர் கொண்ட வண்டியின் பின்புற இருக்கை பக்க கதவைத் திறந்து ஏறியிருந்தாள்.

ஏறிய பின்பு, பின்புறத்தில் பிளாக் ஜீன்ஸ் பேண்ட், டீசர்ட் மற்றும் கோட்டுடன் காருக்குள் கண்ணாடி அணிந்தபடி அமர்ந்திருந்தவளைப் பார்த்தவள், வண்டியின் கதவைத் திறந்து இறங்க முற்பட, உட்கார்ந்திருந்த உருவம் அர்ச்சனாவை இறங்கவிடாமல் பிடிக்க… அதற்குள் வண்டி அங்கிருந்து கிளம்பியிருந்தது.

*************************************************

 

மனைவி வீட்டிற்கு வந்தது முதல் வெளியே எங்கும் செல்லாமல், ஆனால் மனைவியுடன் முன்பு போல இயல்பாக பேசாமல் வீட்டிலேயே இருந்தான், சந்துரு.

காலையில் எழுந்தவுடன் விரைவாக தேநீர் தயாரித்து எடுத்து வந்த ஜனதாவிடம்

“இங்க வந்து உக்காரு”, என அழைத்தான்.

உடலுக்கு வந்தபின் கணவன் மனைவிக்கு இடையே சீனப் பெருஞ்சுவரை விட பெரிய இடைவெளி எழுந்ததாக ஒரு உணர்வு தோன்றியிருந்தது, ஜனதாவிற்கு. கணவன் அழைக்கவும், மனம் சற்று பயந்தாலும் அதை வெளிக்காட்டாமல் வந்தமர்ந்தாள்.

“டாக்டர்கிட்ட காமிக்கற அளவுக்கு உடம்புக்கு உனக்கு என்ன செஞ்சுதுனு எங்கிட்ட இப்பவாவது மறைக்காம எல்லாம் சொல்லுவியா ஜனதா?”, குரலில் வருத்தம் உணர்ந்தாள்.

“…”, கணவன் கேட்கும் வரை அவன் முகம் பார்த்திருந்தவள், தலை குனிந்திருந்தாள்.

“சொல்லமாட்டல்ல… நான் யாரு உனக்கு?”, விரக்தி வார்த்தையில் விளையாடியது.

“உங்ககிட்ட சொல்லாம வேறு யாருகிட்ட சொல்லப் போறேன், அதுக்கு ஏன் நான் யாருனெல்லாம் கேக்குறீங்க?”, பதறியிருந்தாள் பெண்.

“வேற நான் எவ்வளவோ சொல்லியும் அன்னைக்கு அம்மா வீட்டுக்கு போகணும்னு தான சொன்ன? எங்கிட்ட சொல்லிருந்தா நான் உன்ன பாப்பேன்னு இன்னும் உனக்கு எம்மேல நம்பிக்கை வரலல?,

இதுவர, ஆசையா எதுவும் எங்கிட்ட வாங்கித்தான் கேக்க மாட்டீங்கற… இந்த மாதிரி விசயத்தையும் எங்கிட்ட சொல்லலனா நான் உனக்கு யாரோ தான?”, சொல் வாள் கொண்டு வீச, வீரியம் தாங்காமல் ஜனதா அவன் அமர்ந்திருந்த இடம் நோக்கி வந்தவள் கணவனின் மடியில் முகம் புதைத்திருந்தாள்.

தஞ்சம் புகுந்த மனைவியின் தலையை வருடியவனின் செயலில் திருப்தியடைந்தவள், மெதுவாக தனது அன்றைய நிலையை கூற ஆரம்பித்தாள், ஜனதா.

“கோவிலுக்கு போகு முன்ன சாப்பிடாம விரதமா இருனு அத்த சொன்னாங்க, அதனால அன்னிக்கு காலையில இருந்து எதுவும் நான் சாப்பிடல…”, எங்கிட்ட அம்மா ஒன்னும் சொல்லலயே என எண்ணியபடி கேட்டிருந்தான், சந்துரு.

 

“பதினோரு மணிக்கும் மேல கோவிலுக்கு கிளம்பி போயிட்டு, சாமியெல்லாம் கும்பிட்டதுக்கு அப்புறம்… வீட்டுக்கு வரப்போ மணி பணிரெண்டரைக்கும் மேல ஆகிருச்சு, அதுக்கு மேல வீட்டுக்கு வந்தவங்களுக்கு பந்தி பரிமாறுறதுன்னு நேரமாகிருச்சு…

அடுத்தடுத்து வேலை இருந்துட்டே இருந்தது… அதனால என்னால அன்னைக்கு சாப்பிட முடியல… ஆனா நீங்க ஈவினிங் கிளம்பி இங்க வந்துருவோம்னு சொல்லி என்ன அங்க கூட்டிட்டுப் போனீங்களா?…, சரி இங்க வீட்டுக்கு வந்த பின்ன சாப்பிட்டுக்கலாம்னு நானும் இருந்த வேலைய எல்லாம் பாத்துட்டே இருந்தேன்.

ஆனா அன்னிக்கு இங்க வர முடியல… அப்போ கண்ண கட்டுற மாதிரி தோணுச்சு… கொண்டு போயி தள்ளுச்சு, அதோட நைட்டு எதாவது லைட்டா சாப்பிடலாம்னு இட்லி எதாவது கிடைக்குமானு பாத்தா, அங்க சாதம் தான் இருந்தது.

அதோட ரசம் ஊத்தி கொஞ்சம் சாதம் சாப்பிட்டேன். சாப்பிட்ட அரை மணி நேரத்துல வயிறு வலிக்க ஆரம்பிச்சிருச்சு.  நீங்க ஜென்ஸ் கூட இருந்தீங்க… யாருகிட்டயும் போயி சொல்ல எனக்கு ஒரு மாதிரி இருந்தது.

நைட் முழுக்க தூங்கல… அப்பதான் விடிஞ்சிருச்சுனு வா கிளம்புவோம்னு வந்து எங்கிட்ட நீங்க சொன்னீங்க

அதோட வண்டில வரும்போதும் ஒரே மயக்கமா வர மாதிரி கண்ண கட்டுச்சு…

நீங்க ரெண்டு நாளா வேலைக்கு வேறு போகல, இத உங்ககிட்ட சொன்னா அன்னிக்கு வேலையும் கெடும், எதுக்கு உங்கட்ட சொல்லி வேலய கெடுத்துக்கிட்டுனு தான்… அம்மா வீட்ல என்னைக் கொண்டு போயி விடச் சொன்னேன்”, சொல்லி முடித்தவள் நிம்மதியடைந்திருந்தாள், கேட்டவன் நிம்மதியிழந்திருந்தான்.

“ம்… டாக்டர் என்ன சொன்னாங்க?”

“அவங்க எங்க ஃபேமிலி டாக்டர்னால என்ன பத்தி அவங்களுக்கு ஏற்கனவே நல்லா தெரியும், அதான் ரொம்ப உரிமையா கண்டிச்சாங்க”, மறைக்கறதயே ஒரு மாபெரும் வேலய பாக்கறா இந்த ஜனதா என எண்ணியவனாய்,

“டாக்டர் என்ன சொன்னாங்கனு சொல்லுவியா மாட்டியா?”, கட்டாயம் சொல்ல வேண்டும் என்ற பிடிவாதம் இருந்தது.

“இங்க என் சாப்பாடு ஷெட்யூல் பத்தி கேட்டாங்க, நானும் சொன்னேன்”, ‘பெரிய ஸ்டார் ஹோட்டல்ல சாப்பாடு ஷெட்யூல் போட்டு சாப்பிடுறாளாம்’, என நினைத்தவன்

“என்ன சொன்ன?”

“நீங்க காலைல இங்க சாப்பிடற நாளு தவிர மற்ற நாளெல்லாம் நானும் பிரேக்ஃபாஸ்ட் எடுக்காம லன்ஞ் உங்ககூட எடுப்பேன்னு சொன்னேன்”, ‘அடிப்பாவி, இது தெரியாம நான் போற எடத்துல எல்லாம் கை நனச்சேனே’, என யோசித்தபடி கேட்டிருந்தான்.

“பசிச்சா எதுவும் சாப்பிடமாட்டியானு கேட்டாங்க? இல்லைனு சொன்னேன்…

அதுக்கு அவங்க, இத்தனை வயசு வரைக்கும், பசிக்கும் போது ரெகுலரா பூட் எடுத்து பழகின என் உடம்பு செல்கள் எல்லாம்… என் புதுவித உணவு முறைக்கு பழகாம தான் மயக்கம் வரது, கண்ணு கட்டுதுனு சொன்னாங்க, அதான் லோ பிரசரா ஆகுது. அல்சர் ஆரம்ப நிலையில் இருக்கு, அதான் அன்னிக்கு வயிறு வலி அப்டினு எல்லாம் சொன்னாங்க.

இதே நிலை நீடிக்காம இருக்கணும்னா ஒழுங்கா நேரத்துக்கு சாப்பிட சொன்னாங்க”

“ம்…”

“அவ்ளோதான்”

“ம்…”

“நானென்ன கதையா சொல்லுறேன்?”, அவனின் அண்மையில் தைரியம் மீண்டிருந்தது.

“உனக்கு எங்கிட்ட கேக்கணும்னு, நான் உனக்கு இத செய்து தரணும்னு, எங்காவது வெளிய எங்கூட போகணும்னு, இப்டியெல்லாம் இருக்கணும்னு ஆசையெல்லாம் இல்லையா?”

“…”

“ஜனதா, உங்கிட்டதான் கேக்குறேன், என் முகத்த பாத்து சொல்லுடி”, என தனது மடியில் தலை சாய்த்திருந்தவளின் தலையை பிடித்து நிமிர்த்தியிருந்தான்.

“அது எப்டி இல்லாம இருக்கும்?”

“அப்ப கேட்டதே இல்ல இதுவர?”

“இப்ப கேக்கவா?”

“ம்… கேளு”, சிரித்தபடி கூறியிருந்தான்.

“உங்க அத்த பொண்ணுங்க இத்ன பேரு இருக்க நீங்க ஏன் என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க?”, எதிர்பாரா வினாவில் திகைத்தவன், ‘என்ன சொல்லலாம்?’ என யோசித்தான்.

“எங்க அம்மா சொன்னதால உன்ன கல்யாணம் பண்ணிருக்கேன்”

“ம்… அப்புறம்..”, என யோசித்தவள் “மங்கை அண்ணிக்கும், அர்ச்சனாவுக்கும் நீங்க என்ன வேணாலும் செய்யலாம், ஏன்னா அவங்க உங்க கூடப் பிறந்தவங்க…  அதே மாதிரி கல்யாணம் முடிஞ்சு போன உங்க உறவுக்கார பொண்ணுங்களுக்கெல்லாம் நீங்க வாங்கிக் கொடுத்தா உங்ககிட்ட எனக்கு எப்டி கேக்கணும்னு தோணும்?”

“ஏய் சுத்தி வளைக்காம நேரடியா சொல்லுடி…”

“நான் உங்களுக்கு எப்பவும் ஸ்பெஷலா இருந்தா, நானும் உங்ககிட்ட மட்டும் கேப்பேன்.  இல்லனா கேக்க மாட்டேன்”

“அப்ப அவங்களுக்கெல்லாம் நான் வாங்கிக் கொடுக்கக் கூடாதுன்னு சொல்றியா?”

“உங்களுக்கு தோணுற மாதிரி அவங்க ஹஸ்பெண்டும் யோசிப்பாங்கள்ல”

“ஆமா…”

“என்ன ஆமா? எங்க மாமா பையன் என்னை ரொம்ப கேர் எடுத்தா உங்களுக்கு இப்ப சந்தோஷமா இருக்குமா? இருக்கும்னா சொல்லுங்க…”

“அது எப்படி?”

“உங்களுக்கு ஒரு நியாயம், எங்க மாமா பையனுக்கு ஒரு நியாயமா?”

“சரி அடுத்து…”, சோகமாகியிருந்தான்.

“சண்டேயும் வேலைக்கு போறீங்கள்ல, அன்னைக்கு மட்டும் ஃபுல்லா எங்கூட, எனக்காக டைம் ஸ்பெண்ட் பண்ணுங்க”

“ம்… அதுவா?..” என இழுத்தவன், “சரி அப்புறம்”

“உங்க சொந்தக்கார மக்கள பாத்துட்டா… என்னைய அப்படியே மறந்துறாதீங்க…, உங்கள விட்டா வேற யாரு இருக்கா எனக்கு?”, என்ற ஜனதாவின் தயக்கமான… குரல் கம்மிய வார்த்தைகளைக் கேட்டவன், அதற்குமேல் பேசாமல் அமைதியாகி இருந்தான்.

 

error: Content is protected !!