Anbin mo(vi)zhiyil 12

அன்பின் மொ(வி)ழியில் – 12.

அனைவரும் தூங்கிக்கொண்டு இருந்த அந்த இனிமையான இரவுக்கு ராமின் மீது சிறிதளவும் இரக்கம் இல்லை போல…

ராஜிடம் பேசி அவனை சமாதானம் செய்து தன் அறைக்கு வந்து கட்டிலில் விழுந்தவனுக்கு நித்திரை வரவில்லை.
அவனின் மனம் ஒரு நிலையில் இல்லை.

ராம் என்ன மாதிரி உணர்கிறான் என்று அவனுக்கே தெரியவில்லை.

இந்த மொத்த உலகையே! வென்றது போல மகிழ்ச்சியாக ஒரு நொடி உணர்ந்தான் என்றால், மறுநொடி யாராலும் ஈடு செய்ய முடியாத அளவிற்கு தன் பொக்கிஷமான காலங்களை இழந்த ஏக்கத்தில் வாழ்நாள் முழுவதும் உள்ள வேதனை அனைத்தையும் அடைந்தான்.

ஊஞ்சல் போல் ஆடிய மனநிலையில் அமைதி இழந்து படுத்திருந்தவன் எப்போது கண் அயர்ந்தான் என்பதை அப்போது வெளிவந்த பகலவன் மட்டுமே அறிவான்.

அதி காலையில் வெளியில் விளையாடிய பிள்ளைகளின் சப்தத்தில் உறக்கம் கலைந்து கண்களை விழிக்க முயன்றவள், நேற்றைய இரவு மழையில் நனைந்து பின் அத்தனை நாள் சேமித்து வைத்திருந்த கண்களின் நீர் மொத்தத்தையும் கொட்டித் தீர்த்ததால் தற்போது பிரிக்க முடியாத தன் இமைகளை சிரமத்துடன் மெல்ல திறந்தாள் கயல்.
மழையின் காரணமாகவே, இல்லை மன உளைச்சல் காரணமாகவே, கயலின் மெல்லிய தேகம் காய்ச்சல் கொண்டிருந்தது.

அவளின் உடல் எழுந்து நிற்க முடியாத அளவுக்கு தோய்ந்து போய் இருந்த நிலையில், ரம்யாவை அழைக்க முயன்றவளின் குரல் முனங்கலாக வெளி வந்தது.

கயலின் மெல்லிய அழைப்பை கேட்டு அறைக்குள் வந்த ரம்யா பயந்தே விட்டாள்.

ஒரே நாளில் ஓய்ந்து போய் கிடந்த தோழியின் அருகில் வந்தவள், கயலின் நெற்றிக்கு அருகே கையை கொண்டு செல்லும் போதே அவளின் வெப்பத்தை ரம்யாவினால் உணர முடிந்தது…

அனல் என கொதித்த கயலின் உடலை கண்டவுடன், “என்ன கயல் இவ்வளவு சூடா இருக்கு, நைட் நல்லா தானே இருந்த அதுக்குள்ள எப்படி?” என்று கேட்டவள், அவளின் பதில் கூட அளிக்க முடியாத நிலையை உணர்ந்து சமையல் அறைக்கு விரைந்தாள்.

நீலகிரி மாவட்டத்தில் மிகவும் பின் தங்கிய ஊர் தான் பூம்பொழில், மலைப் பாங்கான அந்த பகுதியில் இன்னும் போதிய அளவில் மருத்துவ வசதிகள் கிடைப்பது இல்லை.

காய்ச்சல், சளி தொல்லை ஆகியவற்றிற்கு அப்பகுதி மக்கள் பெரும்பாலும் செய்வது கை வைத்தியம் தான்.

ஒரு பக்க அடுப்பில் கயல் உண்பதற்கு கஞ்சி வைத்தவள், மற்றோரு பக்கம் கீழா நெல்லி கஷாயம் வைத்தாள்.

அதற்குள் விளையாடிய பிள்ளைகள் இரண்டும் அவளின் அருகில் வந்து இடுப்பை கட்டி கொண்டனர்.

ரவி- “என்ன பேபி செய்ற இவ்வளவு ஏர்லியா?” என்றான் மென்மையான குரலில்.
ஆதியின் கவனம் முழுவதும் ரம்யா சமைப்பதில் இருந்தது, பின் எதையோ யோசித்தவன், “ரமி குட்டி, என்ன தைரியத்தில் குக் பண்ணற, இத போய் யாரு சாப்பிட போறாங்க” என்றான் கேலியாக.

ஆதியின் கேலியை பார்த்தவள் அவனின் காதினை பிடித்துக்கொண்டு “உங்க அம்முக்கு தான் செய்றேன், நான் பண்ணறத சாப்பிட்டு அவள் காய்ச்சல் பறந்து போகும் , அப்ப தெரியும் என்னோட அருமை பெருமை எல்லாம்” என்றவள் வார்த்தைகளில்.

தங்களது அம்முவிற்கு ஜுரம் என்றவுடன் ரமியிடம் எதையும் கேட்காமல் அன்னையிடம் ஓடி வந்தனர் இருவரும்.

சாதாரணமாக பேசி கயலின் நிலையை பிள்ளைகளிடம் உணர்த்த நினைத்தவள், கயல் உண்ண வேண்டியவற்றை எடுத்துக் கொண்டு அவர்களை பின்தொடர்ந்து படுக்கையறைக்குள் சென்றாள்.

காய்ச்சல் மயக்கத்தில் இருந்தவளுக்கு மைந்தார்களின் குரல் கேட்டாலும் அதற்கு எதிர் வினை செய்ய முடியவில்லை.

தங்கள் இத்தனை நேரம் அழைத்தும் அவர்களை பார்க்காத, அன்னையை கண்டு அந்த இரு சிறிய மொட்டுக்களின் முகமும் வாடி, அழுகைக்கு தயாராக இருந்தது.

கண்களில் மெல்லிய நீர் திரையுடன், உதடுகள் பிதுங்கிய நிலையில் அழுகை முட்டிக் கொண்டு வந்தது அவர்களுக்கு.

அறையினுள் வந்த ரம்யாவிற்கு அவ்விரு குழந்தைகளின் நிலையை கண்டு உள்ளம் உருகி விட்டது.

பிள்ளைகளின் அருகில் விரைந்து வந்தவள், கைகளில் இருந்தவற்றை பக்கத்தில் உள்ள மேசையில் வைத்து விட்டு.
ஆதி, ரவி இருவரையும் அணைத்துக் கொண்டவள், “ உங்க அம்முக்கு ஒன்னும் இல்ல பட்டூஸ், லைட் ஆஹ் ஜுரம் , ஈவினிங்குள்ள சரி ஆகிடும், சோ நீங்க இரண்டு பேரும் அவுங்களை தொந்தரவு செய்யாமல் நல்ல குட்டிஸ் ஆஹ் இருக்கனும்” என்றவள்.

பின் மெல்லிய புன்னகையுடன் “நான் அம்முக்கு சாப்பாடு, மருந்து கொடுத்துட்டு வரேன், அவ தூங்கட்டும், கயலை டிஸ்டப் பண்ணாம நாம எல்லாம் வெளில போலாம், சீக்கிரம் ரெடி ஆகுங்க, நேத்து மீட் பண்ண உங்க குயூட் பாட்டி வீட்டுக்கு போயிட்டு வரலாம்”. என்றவள் பிள்ளைகளின் கவனத்தை அவர்களின் அன்னை மீது இருந்து திரும்ப முயன்றாள்.

அவளால் முயல மட்டுமே முடிந்தது, வெற்றி பெற முடியவில்லை, ரம்யாவை அதற்கு தலையால் தண்ணி குடிக்க வைத்தார்கள் கயலின் மைந்தர்கள்.

ஆதி-“ரமி குட்டி, நாம அங்கே போன அம்முவ யார் பாத்துப்பா, நான் எங்கேயும் வரல” என்றான்.

“உங்க அம்மு தூங்கட்டும் செல்லம் அதுக்குள்ள நாம வந்துடலாம்” என்றாள் ரம்யா.

ஆதிக்கும் போகலாம் என்று தோன்றியது, அதோடு ஒரே போல இருந்த (ராஜ், ராம்) அவர்களை பார்க்கும் ஆர்வமும் வந்தது, அதனால் ரமியின் அழைப்பை ஏற்று கொண்டான்.

ரவி எந்த கேள்வியும் அவனின் பேபியிடம் கேட்கவில்லை, அவனின் அம்முவின் அருகில் அமைதியாக இருந்தான்.

எப்போதும் சமாளிக்க முடியாத ஆதியை எளிதாக கூட சமாளித்தவள் திறமை, ரவியிடம் தோற்று தான் போனது.

ரவிவர்மன் எப்பவும் யார், எது சொன்னாலும் பொறுமையாய் கேட்டு கொள்பவன் தான் என்றாலும், அவனின் அம்முவிற்கு ஒன்று என்றவுடன் அன்னையின் அருகில் இருந்து நகர மறுத்து விட்டான்.

அவனின் பிடிவாதத்தை உணர்த்தவள் முயன்று முகத்தினை கடுமையாக வைத்து கொண்டு, “நீ பக்கத்துல இருந்தா, எப்படி அவளுக்கு காய்ச்சல் சரி ஆகும்?, அப்புறம் உனக்கும் உடம்பு சரியில்லாம தான் போகும், இப்ப அவளை ஓய்வு எடுக்க விடு” என்ற ரமியின் அதட்டலில், மனமே! இல்லாமல், ஆதியுடன் அவன் அறைக்கு சென்றான்.

ரவியின் முகத்தை பார்த்த ஆதி, ரவியின் கைகளை பிடித்து அவன் விழிகளை பார்த்து குறும்பாக கண்களை சிமிட்டினான், அதில் என்ன புரிந்ததோ அவனின் இரட்டைக்கு முகம் புன்னகையை ஏந்தி கொண்டது.

பிள்ளைகள் சென்ற பிறகு கயலின் அருகில் சென்றவள், ஈர துணியினை கொண்டு முகத்தினை துடைத்து விட்டாள்.

முகத்தில் ஈரம் உணர்ந்து மெல்ல இமைகளை கஷ்டப்பட்டு பிரித்தவளை, உக்கார வைத்து கஞ்சியினை குடிக்க வைத்த ரம்யா, சிறுது நேரம் சென்று கஷாயம் அருந்த செய்தாள்.

ரம்யா -“எதையும் போட்டு யோசித்து உடம்பை கெடுத்துக்காம தூங்கு கயல், எல்லாமே கூடிய சீக்கிரம் சரி ஆகிடும்… அம்மா எல்லாரையும் காலையில அங்க வர சொல்லி விட்டாங்க, இந்த நிலையில் நீ வர முடியாது, நான் நம்ம பசங்கள கூட்டி போய்ட்டு வந்துடுறேன், நாங்க வர வரை ரெஸ்ட் எடு” என்றவள் வார்த்தைகளில், கயல் தன் கண்களை இறுக மூடிக்கொண்டு தலைஅசைத்தாள்.

இனி எதையும் மாற்ற முடியாத அளவுக்கு நடைபெறும் அனைத்தையும் எண்ணியவளின் உள்ளம் தவிப்புடன் இருந்தது.

காய்ச்சலின் மூலம் ஏற்பட்ட அலுப்பின் காரணமாக விரைவில் தூக்கத்தினை தழுவினாள் கயல்விழி.

அவளின் முகத்தினை பார்த்துக் கொண்டு இருந்த ரம்யாவுக்கு தோழியின் கலக்கத்தை புரிந்து கொள்ள முடிந்தது.

‘இனி நடப்பவை அனைத்தும் தங்கள் அம்முவிற்கு நல்லதாக அமைய வேண்டும்’ என்ற வேண்டுதலுடன் வெளி வந்தவள் மனம் கண்களில் சோபாவில் அமர்ந்திருந்த அந்த அழகிய முயல் குட்டிகள் இரண்டையும் கண்டு நிம்மதி கொண்டது.

பிள்ளைகளினை சமாளித்து, பின் அவர்களுக்கு அழகாக உடை அணிய செய்து, அன்னையை பார்க்க கிளம்பினாள் ரம்யா.

*************************

யாரையும் பார்த்தவுடன் அவர்களை எடை போட்டு விட்டும் தன்மை கொண்ட ஜாஸ்ஸிற்கு, கயலின் மீது எந்த ஒரு சந்தேகமும் இல்லை, காலையில் தங்களை கண்டவுடன் மயங்கிய கயலின் செயல் முதலில் அவருக்கு சாதாரணமாக தான் தோன்றியது.

பிள்ளைகள் இருவரையும் கண்ட பிறகு தான் கயலின் அப்போதைய நிலைக்கு காரணம் விளங்கியது.

யாரும் இல்லாத நிலையில் வளர்ந்த ஒரு பெண்ணுக்கு உண்டான அச்சத்தை மட்டுமே அவளிடம் உணர்ந்தவர், வேறு எந்த வித கள்ளதையும் அந்த பேதை பெண்ணிடம் அவர் காணவில்லை.

எனவே அவரின் மனம் பிள்ளைகளுடன் சேர்த்து எளிதாக அவளையும் ஏற்றுக் கொண்டது.

அந்நிய நாட்டிலிருந்து வந்த பெண் என்றாலும் தன் மகன் அவளின் மீது கொண்டுள்ள காதலை உணர்ந்து, அவளின் தூய உள்ளம் கண்டு, தன் மகன் வேந்தனை அப்பெண்ணிற்கு மணம் முடித்து வைத்த பெருந்தன்மையின் மொத்த உருவான ராஜராமனின் மருமகள் வேறு எப்படி இருப்பார்…

அன்றைய தினத்தில் காலையில் விரைவாக எழுந்த ஜாஸ்ஸுக்கு அதனை மகிழ்ச்சியாக இருந்தது.

அவர்களின் குடும்ப வாரிசுகள் இரண்டும் வீட்டுக்கு வருவதை எண்ணி.

சமையல் செய்பவரிடம் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவுகளை செய்ய சொன்னவர், குளித்து சந்தன நிற புடவை அணிந்து பூஜை அறையில் இருக்கும் வேந்தனின் படத்தின் கீழ் விளக்கை ஏற்றியவர், விழிகள் இரண்டும் தன்னவன் உருவத்துடன் கலந்து கொள்ள அவரின் மௌன மொழி உணர்ந்தது போல், வேந்தன் படத்தில் இருந்து மலர் ஒன்று அவரின் கைகளில் விழுந்தது.

வேந்தன் தங்களுடன் இருந்து அனைத்தையும் பார்த்து கொண்டு இருப்பது போல் எண்ணம் தோன்றியது ஜாஸ்ஸிற்கு.

ஜாஸ்ஸின் மனது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை , மனம் கொள்ளா புன்னகையுடன் வெளி வந்தவரை எதிர்கொண்ட ராஜின் முகமும் பூரித்து போய் தான் இருந்தது.

இவை அனைத்தையும் பார்த்து கொண்டே இருந்த, செல்வம், விஷ்ணு இருவருக்கும் காலை எழுந்தது முதல் அந்த வீடு முழுவதும் பரபரப்பாக இருப்பது போல் தோன்றியது.
ராம் தன்னுடைய அறையில் இருந்து வெளிவரவில்லை, விடியற் காலையில் தான் நித்திராதேவி அவனை அணைத்து கொண்டாள், அதனால் அப்போது உறக்கத்தின் பிடியில் இருந்தான்.

அத்தை, ராஜ் இருவரின் முகமும் ஏதோ புதையலை கைப்பற்றி விட்டது போல் இருப்பதை பார்த்தவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை!.

அப்போது தான் தூங்கி எழுந்து வந்த நிலவுக்கும் ஒன்றும் புரியாத நிலை தான்.

அவர்கள் மூவரின் முகத்தினை பார்த்த ராஜிற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை, வழக்கம் போலவே அவனின் குறும்பு தலை தூக்கியது.

அவர்களிடம் விளையாண்டு பார்க்க எண்ணியவன், புன்னகையுடன் அவர்கள் அருகில் சென்று நிலாவிடம், “ பட்டு நீ போய் குளிச்சுட்டு ரெடியா வா, உனக்கு ஒன்னு இல்லை, இரண்டு சர்ப்ரைஸ் காத்திருக்கு” என்று சொல்லி தங்கையை அனுப்பியவன்.

அத்தை மகன்களின் இடையில் சென்று அமர்ந்து கொண்டு, தண்ணீர் இருக்கும் குவளையை அவர்களுக்கு அருகில் இருக்கும் மேசையின் மீது வைத்து விட்டு “ வினி குட்டி, செல்ல குட்டி, இப்ப இங்க வரப் போற இரண்டு, வி. ஐ. பியை பார்த்து யாருக்கு மயக்கம் வந்தாலும், பக்கத்துல இருக்கவுங்க இதை யூஸ் பண்ணுங்க” என்று நீர் குவளையை காண்பித்தான்.

அவனின் வார்த்தைகளில் வெளிப்பட்ட நக்கலில் கடுப்பான செல்வம் அதே நக்கலான குரலில் “ மொட்டை காத்தான் குட்டையில் விழுந்தான் அப்படிங்குற மாதிரி பேசுறியே மச்சான், நீ எங்கையவது எக்குதப்பா விழுந்து மூளை குழம்பி போயிடுச்சாலே” என்றான் சிரிப்புடன்.

“நல்லத்துக்கே காலம் இல்லை போல , வினி குட்டி யாரு எப்படி நினைச்சாலும் எனக்கு அதை பத்தி கவலை இல்லை, நீ என் செல்ல பேபி, சோ இப்ப இங்க வரவுங்களை பார்த்து, நீ என்னை எதுவும் நினைக்க கூடாது … மீ பச்சை பிள்ளை, நான் இதற்கு பொறுப்பல்ல, இதுக்கு மூல காரணம் உங்க ராம் மச்சான் தான்” என்று கண்களை சிமிட்டி குறும்பாக கூறியவன் வார்த்தைகள் முடியும் முன்னே வாசலில் பால் வெண்மை நிறத்தில் , நீல நிற விழிகளுடன் தங்கள் மாமன் மகன்களை போன்ற சாயலில் இரு குழந்தைகளின் கரம் பற்றி உள்ளே வந்த ரம்யாவை கண்டு திகைத்தனர்.

அவர்களுக்கு ரம்யாவை பற்றி நன்கு தெரியும், அத்துடன் அவள் ராஜ், ராம் இருவருக்கும் தங்கை போன்றவள் என்பதால் அவளை குழந்தைகளுடன் தொடர்பு படுத்தி அவர்கள் யோசிக்கவில்லை, குழந்தைகளை கண்டு அதிர்ந்து நின்றனர்.

செல்வம், விஷ்ணு இருவரின் கண்களும் விரிந்து , வாயை பிளந்து நின்றதை கண்ட ராஜ், சிரிப்புடன் நீரினை எடுத்து அவர்களின் முகத்தில் தெளித்து விட்டு, “உங்க வாய மூடுங்க இல்லனா, ஈ உள்ள போய்டும்” என்றவன், அத்தை பிள்ளைகளின் கைகளில் சிக்காமல் ஆதி, ரவி அருகில் சென்றவன், சின்ன சிட்டுக்கள் இரண்டையும் கைகளில் ஏந்தி கொண்டான்.

தன் மகனுடன் பிள்ளைகளை இணைத்து பார்க்க பார்க்க தெவிட்டவே இல்லை ஜாஸ்ஸிற்கு.

செல்வம், விஷ்ணு இருவரும் சற்று முன் ராஜ் சொல்வதை கவனிக்காமல் இருந்திருந்தால், அவனை நிச்சயம் சந்தேக பட்டிருப்பார்கள்.

அத்தகைய ஒரு உருவ ஒற்றுமை அவர்களுக்குள், ராமின் பிள்ளைகள் என்பதை விஷ்ணு இயல்பாக எடுத்துக் கொண்டான், அவனை பொறுத்த வரையில் அவனின் மாமன் மகன் ராம், சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவன், அவன் எதை செய்தாலும் அதில் சிறிதும் தவறு இருக்காது என்று கண்களை மூடிக்கொண்டு நம்பக் கூடியவன் அதனால் இதை விஷ்ணு அப்படியே ஏற்று கொண்டான்.

செல்வத்தினால் அப்படி ஏற்க முடியவில்லை, மாமன் மகன் என்பதையும் தாண்டி அவனின் உயிர் தோழன் அல்லவா ராம் , அவனிடம் எந்த வித ஒளிவு, மறைவும் செல்வத்திற்கு கிடையாது, அப்படி இருக்கையில், திடீரென இப்போது குழந்தைகளை கண்டதும், ராஜின் வார்த்தைகளும், மிக பெரிய ஏமாற்றத்தை தந்தது அவனுக்கு.

செல்வம்-பிள்ளைகளினை ஆசையாக கண்டு கண்களில் நிரப்பிக் கொண்டவன், மடியில் இருக்கும் ராமின் அறைக்கு விரைந்தான்.

ரம்யாவிடன் பேசிய படி வந்த, ஆதியும், ரவியும் புதிய இடத்திற்குள் நுழையும் போது மிகவும் தயங்கினர், பிள்ளைகளுக்கே உரிய பயம் சிறிது தெரிந்தது அவர்களின் நடையில்.

ரம்யா இருவரிடமும் அவர்களை சகஜமாக்க பிள்ளைகள் விரும்பும் விடயங்களினை பற்றி பேசிக் கொண்டே பெரிய வீட்டினுள் கைகளை பிடித்து அழைத்து வந்தாள்.

உள்ளே வந்த மழலையர் இருவரையும் ஜாஸ் ஆசையாக பார்த்தார் என்றால், ராஜ் அவர்களிடம் விரைந்து சென்று தன் கைகளில் பிள்ளைகளை மகிழ்வுடன் அள்ளிக் கொண்டான்.

புதிய ஒருவர் தங்களை தூக்கி கொண்டதை கண்டு திகைத்த குழந்தைகள் இருவரும் ராஜின் கைகளில் இருந்து திமிறினர்.

“பேபி நாங்க சும்மா குட் பாய்ஸ் ஆஹ் தானே இருக்கோம், வா நாம வீட்டுக்கே போலாம்” என்றான் ரவி சற்று பயந்த குரலில்.

அவர்களின் பயம் உணர்ந்து அவர்களை சோபாவில் அமறவைத்தவன், “ஹாய் குட்டிஸ் நான் உங்க ரமி மாதிரி தான் உங்களுக்கு பிரின்ட் சோ பயப்பட கூடாது” என்று மென்மையாக கூறியவன் பிள்ளைகளின் அருகிலேயே அமர்ந்து கொண்டான்.

அங்கு எதை எதையோ!, எண்ணி கயல் பயந்திருக்க, இங்கு பிள்ளைகளை அவர்கள் கொண்டாடும் நிலை கண்டு ரம்யாவின் மனம் சொல்ல முடியாத அளவுக்கு அமைதி அடைந்தது.

அப்போது தான் ஜாஸ் கயல் வாராததை கவனித்தார், அது அவரின் மனதை உறுத்தினாலும், அது தொடர்பாக எதையும் உடனே ரமியிடம் கேட்கவில்லை.

ராஜும் அதை கவனித்தாலும் அன்னையின் அமைதியினை கண்டு அவனும் மௌனித்து இருந்தான்.

ரம்யாவை உள்ளே அழைத்தவர், ராஜின் அருகில் சென்று பிள்ளைகளில் கன்னத்தில் முத்தமிட்டார்.

அவர்கள் மூவரையும் அமர வைத்தவர், அவரின் கைகளினால் செய்த பாயாசத்தை எடுத்து வந்து கொடுத்து விட்டு பேரப் பிள்ளைகளின் அருகிலே அமர்ந்து கொண்டார்.

கைகளில் பாயாசத்தை வாங்கி கொண்ட ஆதியின் கண்களில் குறும்பு வந்து புகுந்து கொண்டது. அருகில் இருந்த ரம்யாவிடம், “நான் ஏன் தெரியுமா ரமி குட்டி, நீ கூப்புட உடனே வந்தேன்?” என்றான் கிசுகிசுப்பாக.

ரமி-“ஏன் செல்லம்?”.

கண்கள் மின்ன “இல்லனா நீ செஞ்ச கஞ்சியை சாப்புடனும், அந்த கொடுமைக்கு தான்” என்றான் நக்கலாக.

அவனின் வார்த்தைகளை கேட்டவள் வந்த இடத்தில் ஒன்றும் செய்ய முடியாமல் பல்லை கடித்து கொண்டு இருந்தாள்.

மெல்ல பேசிய போதும் அவர்களின் குரல் நன்கு கேட்டது ஆதியின் அருகில் இருந்த ராஜிற்கு, அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

தன்னைப்போல் அனைத்திலும் இருக்கும் அண்ணன் மைந்தனை கண்டு அதனை பெருமை அவனுக்கு.
ஆதியின் அழகிய குண்டு கண்ணத்தில் தன் இதழ்களை புதைத்தவன்.

பின்னர் தானும் அவனுக்கு சளைத்தவன் இல்லை என்பதைப் போல “என்ன ரமி குட்டி நீ குக் பண்ணியா?” என்று போலியாக அதிர்ந்தவன்.

பிள்ளைகள் இருவரை பார்த்து “கிரேட் எஸ்கேப்” என்றான் குறும்பாக.

அதில் பிள்ளைகள் இருவரின் முகம் முழுவதும் மலர்ந்து விட்டது.

ரம்யாவால் அவர்கள் மூவரை பார்த்து முறைக்க மட்டுமே முடிந்தது அப்போது.

ஆதிக்கு புது இடத்திற்கு வந்ததும் அவர்களிடம் அன்பாக இருக்கும் ராஜ், பாட்டி இருவரை கண்டதும் குதூகலமாக இருந்தது.

ரவிக்கு மகிழ்வாக இருந்தாலும் அவனின் கண்களில் உடல் நிலை சரியில்லாத அன்னையின் அருகில் இல்லாத கவலை சிறிது இருந்தது.

சிறிய பிள்ளைக்கு அதை சொல்லி அன்னையிடம் செல்லவும் தெரியவில்லை, எதற்கும் கோபம் காட்டாத அவனின் பேபியின் அதட்டலில் காரணமாக அமைதியாக இருந்தான்.

இப்போது தான் பார்ப்பதால் அவனின் அமைதி அவர்களின் பாட்டிக்கும், சிறிய தந்தைக்கும் வித்தியாசமாக தெரியவில்லை, ரம்யா அதை உணர்ந்தாலும் கண்டுகொள்ளாமல் இருந்தாள்.

ராமின் அறைக்கு வந்த செல்வம் கண்டது இந்த பிள்ளையும் பால் குடிக்குமா! என்ற அளவுக்கு அப்பாவியாக தூங்கி கொண்டிருந்த ராமை தான்.

அதில் அவனின் கோபம் அதிகம் ஆகி படுக்கையின் அருகில் இருந்த குவளை நீர் முழுவதையும் ராமின் மீது ஊற்றினான்.

தன்னை மறந்து தூங்கி கொண்டிருந்த ராம், முகத்தில் விழுந்த நீரில் நனைந்து திடுக்கிட்டு விழித்தான்.

ராமின் பார்வையை கண்ட செல்வம் கடுப்புடன், “குழந்த புள்ள மாதிரி முகத்தை வச்சுக்காதலே! உன்னோட குழந்தை இரண்டையும் இப்ப தான் பாத்துட்டு வரேன், என்கிட்ட எல்லாத்தையும் மறைச்சுட்ட இல்ல”, என்றான் கோபமாக.

செல்வத்தின் வார்த்தைகளில் தன் மைந்தர்கள் வந்துவிட்டதை அறிந்து கொண்டவன்.

நண்பனை தழுவிக் கொண்டு என்னை நம்பு செல்வா, உன்னை பொறுத்தவரை என்னால் எதையும் மறைக்க முடியுமா டா, எனக்கே நேத்து தான் தெரியும்லே, செத்த பொறு இன்னைக்கு ராத்திரி நான் எல்லாம் சொல்லறேன்” என்று சமாதானம் செய்தவன்.

கீழே செல்ல வேகமாக தயாராகினான்.

ராமின் வார்த்தைகளை கேட்டவன் உள்ளம் சமன்பட்டது, தவிப்புடன் கிளம்பி கொண்டிருக்கும் ராமை கண்டவன் மனதில் பல கேள்விகள் இருந்தாலும், மாமன் மகன் மீது உள்ள அன்பினால் அமைதியாக இருந்தான்.

அறையில் இருந்து வெளியே வந்தவன் கண்கள் முதலில் தேடியது அவனவளை தான்.

அவளை காணாத ராமின் முகம் சிந்தனையில் சுருங்கி விட்டது. அத்துடன் ரவியின் முகத்தில் இருந்த வாட்டம் ஏதோ சரியில்லை என அடித்து கூறியது ராமிற்கு.

மேலிருந்து கீழே வந்தவன் ரம்யாவிடம் கேட்ட முதல் வார்த்தையே ‘கயல் எங்கே?’ என்பது தான்.

பிள்ளைகளை ஏற்றுக் கொண்டவர்கள் வந்தது முதல், கயலை பற்றி கேட்காதது கண்டு அதனை நேரம் ரம்யாவின் மனதின் ஒரு மூலையில் இருந்த கலக்கம் ராமின் ஒற்றை கேள்வியில் மறைந்து விட்டது.

அத்தனை நேரம் கயலை குறித்து கேட்க தோன்றிய போதும், அவள் சங்கடமாக இருக்கவும் வரவில்லை போல என்று நினைத்திருந்த ஜாஸ்ஸிற்கு, ராமின் நேரடியான கேள்வி வியப்பை அளித்தது.

அந்த பெண் எந்த அளவுக்கு அவனின் மனதில் இருந்தால், பிள்ளைகளை கண்ட பிறகும் ராமின் எண்ணம் முழுதும் கயலின் மீது நிலைத்திருப்பதை உணர்ந்தவர், அமைதியாக தன் தலை மகனை கவனித்தார் என்றால், ராஜிற்கு அண்ணனின் பரபரப்பை கண்டு உள்ளம் மகிழ்ந்தது.

கயலின் மீது ராமிற்கு உள்ள காதலை தெளிவாக புரிந்து கொள்ளவும் முடிந்தது. அவனுடையதும் நேசம் கொண்ட நெஞ்சம் அல்லவா!.

காதல் என்ற வார்த்தையை அவன் மனம் உச்சரித்த போது, பொன்னியின் பிம்பம் ராஜின் உள்ளத்தில் தோன்றி மறைவதை அவனால் தடுக்க முடியவில்லை, தன்னுடைய உள்ளதை அவள் மனம் உணரும் காலம் எப்போது வரும் என்று எங்கியது அவனின் நேசம் கொண்ட இதயம்.

ராமின் கேள்வியை கண்டு நிம்மதியாக உணர்ந்த ரமி, “ அண்ணா கயலுக்கு ஜுரம் அதிகமா இருக்கு, நைட் நல்ல தான் இருந்தா, காலையில போய் பார்த்தப்ப எழ முடியாம படுத்திருந்தாள் ”. என்று சொல்லி கொண்டு இருந்த ரமியின் அடுத்த வார்த்தைகளை கேட்க ராம் அங்கு இல்லை.