mm16

mm16

மயங்காதே மனமே 16

காலை ஏழு மணி. மாடியிலிருந்து கீழே இறங்கி வந்து கொண்டிருந்தாள் கீதாஞ்சலி. அப்போதுதான் பூஜையறையில் ஒலித்த மணியோசை இன்று எல்லோரும் கொஞ்சம் தாமதமாகத்தான் எழும்பி இருப்பதை சொல்லாமல் சொன்னது.

தாத்தா எப்போதும் அதிகாலையிலேயே பூஜை செய்வதைப் பார்த்திருக்கிறாள். அந்தச் சத்தம் கேட்ட பிற்பாடு சோம்பிப் போய் இருக்க கீதாஞ்சலிக்கு மனம் வராது. பாட்டியும் அந்நேரத்திற்கு வீடு முழுக்க சாம்பிராணி காட்டுவார்.

கிச்சனுக்குள் போனவள், இந்த ஒரு வார காலப் பழக்கத்தில் காஃபியைப் போட்டுக் கொண்டிருந்தாள். அந்தப் பக்கமாக வந்த அன்னலக்ஷ்மி, வாய்க்குள் ஏதோ ஸ்லோகங்களை முணுமுணுத்தபடி இவளைப் பார்த்துச் சிரித்து விட்டுப் போனார். பதிலுக்கு கீதாஞ்சலியும் புன்னகைத்தாள்.

தாத்தா, பாட்டி இரண்டு பேரும் தங்கள் பேரனின் மனைவிக்கு மரியாதை கொடுத்தாலும், அத்தனை ஒட்டுதல் இருக்கவில்லை. ஒற்றைப் புன்னகயோடு நகரும் அந்த உறவில், ஒரு இடைவெளியை கீதாஞ்சலியால் உணர முடிந்தது. சீமா அவளோடு சட்டென்று ஒட்டிக் கொண்டதைப் போல அந்த முதியவர்களுக்கு இவளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை போலும்

அப்போதுதான் குளித்து முடித்து கிச்சனுக்குள் நுழைந்தார் சீமா. தனக்கு முன்னால் அங்கு நின்ற மருமகளைப் பார்த்துச் சிரித்தவர்,

எழுந்திட்டியாம்மா? இன்னும் கொஞ்ச நேரம் தூங்கி இருக்கலாமே. நைட் ரொம்ப டையர்டா இருந்துதா, அதான் நானும் கொஞ்ச நேரம் அசந்து தூங்கிட்டேன்.” சொல்லிய படியே அவள் ஆரம்பித்த வேலையை தனதாக்கிக் கொண்டார் மாமியார்.

கீதாஞ்சலிக்கு கிச்சன் வேலைகள் அத்தனை தூரம் வசப்படாது என்று சீமா இந்த குறுகிய காலத்தில் கண்டு பிடித்திருந்தார். ஒரு டீ, காஃபி கூட அவளுக்கு ஒழுங்காகப் போட வராது. அவருக்குப் புரிந்திருந்த அந்த ரகசியத்தை யாரும் தெரிந்து கொள்ளாத வகையில் அவளை சமயோசிதமாக காப்பாற்றி விடுவார். காஃபியை அவள் கையில் கொடுத்தவர்,

இதைக் கொண்டு போய் தாத்தா, பாட்டிக்கு குடுத்துட்டு வாம்மா.” என்றார்.

சரிங்கத்தை.” சொல்லிய படியே நகர்ந்த மருமகளைப் பார்த்தபடியே நின்றார் சீமா.

அந்தப் பெண்ணைப் பார்க்கும் போது சங்கடமாக இருந்தது. அவளுக்கும், அபிக்கும் இடையில் என்ன நடந்தது என்று யாருக்கும் இது வரை தெரியாது. கேட்பது நாகரிகம் இல்லை என்று சீமாவும் வாயை மூடிக் கொண்டார்

அபியின் பேச்சையும், நடவடிக்கைகளையும் பார்க்கும் போது இந்தப் பெண்ணின் மேல் கொள்ளை ஆசை இருப்பது போல் தான் தெரிந்தது. ஆனால் அபி விஷயத்தில் கீதா காட்டிய ஒதுக்கம் அவரை யோசிக்க வைத்தது.

தன் பிள்ளைதான் ஒரு தலையாக ஆசைப்பட்டு விட்டு, ‘சந்தர்ப்பம் கிடைத்ததும் பயன்படுத்திக் கொண்டானோ?’ என்று அவர் மனம் கிடந்து அடித்துக் கொண்டது.

அபியிடம் இருந்து ஒதுங்கிப் போனாலும் தன்னோடு ஒட்டிக் கொண்ட அந்தப் பெண்ணை அவருக்கு அவ்வளவு பிடித்திருந்தது. அபியின் மேல் வெறுப்பு இருந்திருந்தால் இந்த ஒட்டுதல் சாத்தியமில்லை என்று நன்கு புரிந்தது.

திடீரென்று முளைத்த சொந்தங்கள், பரிட்சயமில்லாத கணவன், புதிய இடம், இவை எல்லாம் அந்தப் பெண்ணை எவ்வளவு தூரம் பாதிக்கும் என்று புரிந்ததால், அவரை அறியாமலேயே தன் மருமகளை அரவணைத்துக் கொண்டார்.

ஆனால் நேற்றைய பொழுது முழுவதும் தன் மகனையே தீண்டிய படி இருந்த அவள் விழிகள், சற்று அவருக்கு ஆறுதலைக் கொடுத்திருந்தது. வேலைகளைக் கவனித்த படியே இவர்கள் மேல் ஒரு கண்ணை வைத்திருந்தவருக்கு அத்தனை சந்தோஷம். முடிந்த வரை அவர்களுக்கு தனிமை கொடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார். அவர் சிந்தனையைக் கலைத்தபடி வந்து நின்றான் மகன்.

அம்மா, அஞ்சலி எங்க?”

தாத்தா, பாட்டிக்கு காஃபி கொண்டு போயிருக்காப்பா. நீ இப்போ குடிக்கிறயா? இல்லை ஜாகிங் முடியனுமா?”

முடிச்சுட்டு குடிக்கிறேன்மா.” அபி சொல்லிக் கொண்டிருக்கும் போதே உள்ளே நுழைந்தாள் கீதாஞ்சலி. கணவனைப் பார்த்த மாத்திரத்தில் அந்தக் கண்களில் தோன்றிய நாணம் மகனுக்குக் கிறக்கத்தைக் கொடுக்க, அம்மாவிற்கு அந்தப் பெண்ணின் மேல் கனிவைக் கொடுத்தது. அவளிடம் காஃபியை நீட்டியவர், காலை டிஃபன் செய்ய ஆயத்தமானார்.

 அம்மா அந்தப்புறமாக திரும்பி நிற்கும் தைரியத்தில் மனைவியின் கன்னத்தில் முத்தமிட்டான் அபி. வெலவெலத்துப் போனாள் கீதாஞ்சலி. ஓரடி விலகி நின்றவள் சீமாவின் முதுகைப் பார்த்தாள். அவள் கண்களில் தோன்றிய பயத்தை கவனித்தவன்,

அம்மா.” என்றான்.

என்னப்பா.” திரும்பாமலேயே கேட்டார் சீமா. அம்மாவும், பிள்ளையும் பேச்சை ஆரம்பிக்கவும் நிதானமாக மூச்சு விட்டாள் கீதாஞ்சலி.

நான் அஞ்சலியை கிஸ் பண்ணுறதில உங்களுக்கு ஒன்னும் கோபமில்லையே?”

சேச்சே, எனக்கென்னப்பா இதுல…” சீமா முடிக்குமுன்னே புரையேறியது கீதாஞ்சலிக்கு.

ஐயையோ! என்னாச்சும்மா?” பதறியபடி ஓடி வந்தார் சீமா. முகத்தில் தெறித்திருந்த காஃபியைத் துடைத்து விட்டவர், கேலியாகப் புன்னகைத்தபடி நின்றிருந்த மகனைக் கடிந்து கொண்டார்.

உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா அபி? காஃபி குடிக்கும்போது எதுக்கு சும்மா அவளை சீண்டுற? இப்போ பாரு புரேயேறிடுச்சு.” சத்தம் போட்டபடி மருமகளின் தலையை தடவிக் கொடுத்தார்.

மருமகளை கொஞ்சினது போதும், எனக்கு காஃபி கொடுங்க.”

ஜாகிங் போகலை?” அம்மாவின் கேள்விக்கு சிரித்தவன், அங்கிருந்த சமையல் கட்டில் ஏறி உட்கார்ந்து கொண்டான்.

இல்லை, நீங்க காஃபியைக் குடுங்க.” உல்லாசமாகச் சொன்ன மகனைப் பார்த்து சிரித்தார் சீமா

அடப்பாவி, பொண்டாட்டியை பாத்ததும் ஜாகிங் போகல்லையா? நடத்து.” மகனைக் கலாய்த்த படியே காஃபியை அவன் கையில் கொடுத்தார்.

அம்மா, எனக்கிருக்கிறது ஒரே ஒரு பொண்டாட்டி. அதுவும் கல்யாணம் ஆகி ஒரு வாரம் தான் ஆகுது. ஜாகிங் எப்போ வேணும்னாலும் போகலாம்மா.” அம்மாவிற்குப் பிள்ளை சளைத்தவன் இல்லை என்று காட்டினான். இவர்களின் சம்பாஷனையை வாய்பிளந்து பார்த்திருந்தாள் கீதாஞ்சலி.

இன்னைக்கு என்ன ப்ளான் அபி? கீதாவை எங்கேயாவது வெளியே கூட்டிட்டுப் போகலாமே.” 

இன்னைக்கு நானும், அஞ்சலியும் ஃபாக்டரிக்குப் போகலாம்னு இருக்கோம்மா.” அபியின் பதிலில் முகத்தைச் சுளித்தார் சீமா.

ஐயோ! ஃபாக்டரியா? சுத்த போர். நீ போகாத கீதா. நல்ல மாலாப் பாத்து கூட்டிட்டு போகச் சொல்லு. நல்லா ஷாப்பிங் பண்ணு. கல்யாணம் பண்ணின புதுசுல இப்பிடி அனுபவிச்சத்தான் உண்டு. அனுபவசாலி சொல்லுறேன் கேட்டுக்கோ.” மாமியாரின் பேச்சில் சிரித்தாள் கீதாஞ்சலி.

ஆமா, சும்மாவே வரனுமான்னு கேக்குறா. இதுல நீங்களும் ஏத்தி விடுறீங்களா? விளங்கிரும்.” என்றவன்,

அம்மா, நாங்க இப்போ கிளம்பினா நைட் வர லேட்டாகும். ரொம்பவே லேட்டாசுன்னா காத்திருக்க வேணாம், நீங்க தூங்குங்க.” 

அதெல்லாம் ஒரு காலம் மகனே. கல்யாணத்திற்கு முன், இப்போ கல்யாணத்திற்கு பின். அதுதான் உனக்குன்னு ஆள் வந்தாச்சு இல்லை, இனி அம்மா காத்திருக்க மாட்டேன்.” விறைப்பாகச் சொன்னவரை யோசனையாகப் பார்த்தான் அபி.

…! அப்பிடியா…? அப்போ, இந்த பொங்கல், தீபாவளி வந்தா நான் உங்களுக்கு காஸ்ட்லியா பட்டுப்புடவை எடுத்துக் குடுப்பேனே? அதை இனி என் ஆளுக்கு மட்டும் எடுத்துக் கொடுத்தா போதும்ல? உங்களுக்கு…” மகனை முடிக்க விடாமல் அலறினார் சீமா.

அடேய் மகனே! அடிமடியிலேயே கையை வெச்சுட்டயே. சரி விடு. நீ வாங்கிக் குடுக்கலைன்னா என்ன? எம்மருமக எனக்கு வாங்கிக் குடுப்பா. இல்லையாம்மா?” மகனை விட்டு மருமகளிடம் திரும்பினார் சீமா.

கண்டிப்பா அத்தை.” இந்த நாடகத்தைப் பார்த்தபடி இருந்த கீதாஞ்சலி சிரித்தபடி சொன்னாள்.

பயலோட ஃபாக்டரில நல்ல லாபம் கீதா. நைசா அதை உம்பேருக்கு மாத்தி எடுத்துக்கோ. அதுக்கப்புறம் இந்தப் பொடிப் பயலை நாம வெளியே தூக்கிப் போட்டுடலாம்.” ஐடியாக் கொடுத்த மாமியாரைப் பார்த்து கட்டை விரலை உயர்த்தினாள் கீதாஞ்சலி. எட்டி அந்த விரலை இவன் பிடிக்கப் போக, கையை இழுத்துக் கொண்டாள். திருஷ்டி பட்டுவிடும் போல இருந்தது அந்த கண்கொள்ளாக் காட்சி.

  • °•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°

அந்த black Audi அபியின் எக்ஸ்போர்ட் ஃபாக்டரியை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. காலை முதல் அவளை வேண்டுமென்று சீண்டிய படியே இருந்தான். ‘ட்ரைவ்பண்ணும் போதும் அவன் சேட்டைகள் தொடரவும் ஒரு எல்லைக்கு மேல் கீதாஞ்சலி கோபப்பட்டாள்.

அபி, ட்ரைவ் பண்ணும் போது விளையாடாதீங்க.”

சரி, அப்போ எப்போ விளையாடலாம் சொல்லுங்க.” அதற்கும் கேலியாக பதில் சொன்னாலும், அதன்பிறகு ஒரு இடத்தில் அடங்கி உட்கார்ந்தான்.

அபியின் ஃபாக்டரி ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்தது. ‘அபி கன்ஸ்ட்ரக்ஷ்ன்ஸ்தான் நாராயணனின் பிரதான தொழில் என்றாலும் அபிக்கு புதிது புதிதாக தொழில் பண்ணுவதில் ஆர்வம் அதிகம்

அப்படி ஆரம்பித்ததுதான்நல்லூர்கிராமத்தின் டை ஃபாக்டரியும். ஆனால் அதற்கு தமிழ்ச்செல்வனும், இளமாறனும் எதிப்புத் தெரிக்கவும் நாராயணன் அபியைத் தடுத்து விட்டார். கடைசிவரை மோதிப் பார்க்க நினைத்த மகனின் கைகளைக் கட்டிப் போட்டு விட்டார்.

அந்த முயற்சியை அத்தோடு விட்டவன் கடந்த வருடம் புதிதாக இந்த ஏற்றுமதித் தொழிலை ஆரம்பித்திருந்தான். கடல் உணவுப் பொருட்களை குளிரூட்டி, பதப்படுத்தி அதை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி பண்ணிக் கொண்டிருந்தான்

பிஸினஸ் இப்போது சூடு பிடிக்க ஆரம்பித்திருந்தது. ஏற்றுமதியாகும் பொருட்களில் இறாலுக்கு அதிக கிராக்கி இருந்ததால், இறால் பண்ணை ஒன்று ஆரம்பிக்கும் ஐடியாவிலும் இறங்கி இருந்தான்.

அந்த இடத்திற்கான பிரத்தியேக ஆடை அணிந்து, காலிற்குவெலீஸ்உம் போட்டுக் கொண்டு மனைவியை ஒவ்வொரு செக்ஷ்னுக்கும் அழைத்துச் சென்றான். இதுவரை அவளோடு விளையாடிக் கொண்டிருந்த அபி காணாமல் போயிருந்தான்.

ஒவ்வொரு செக்ஷ்னுக்கும் அவளை அழைத்துச் சென்று எல்லாவற்றையும் விளக்கிச் சொன்னான். மீன், நண்டு, இறால், கணவாய் என அனைத்தும் பதப்படுத்தப்பட்டு பாக்கட்களில் அடைக்கப்பட்டது. தொழிலாளர்களையும் அறிமுகப்படுத்தி வைத்தான். எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து திட்டமிட்டு அவன் செய்திருப்பது கீதாஞ்சலிக்குப் புரிந்தது

ஃபாக்டரியைப் பார்த்து முடிக்கவும் அவளை வெளியே அழைத்து வந்தான். ஃபாக்டரியை அடுத்தாற்போல கொஞ்சம் பொட்டல் வெளி தெரிந்தது. அதைச் சுட்டிக் காட்டியவன்,

அஞ்சலி, இந்த இடத்தை விலை பேசிக்கிட்டு இருக்கேன். கிடைக்கும் போல தான் இருக்கு.” என்றான். அவனே பேசட்டும் என்று அமைதியாக நின்றாள் கீதாஞ்சலி.

எல்லாப் பொருட்களுக்கும் கிராக்கி இருந்தாலும்ப்ரோன்ஸ்க்கு ரொம்பவே மார்க்கட் இருக்கும்மா. அதனால சொந்தமா ஒரு ப்ரோன் ஃபார்ம் ஆரம்பிக்கலாம்னு டிசைட் பண்ணி இருக்கேன்.”

…!”

ஆமா, நமக்குன்னு ஒரு ஃபார்ம் இருந்துதுன்னா இன்னும் லாபம் பாக்கலாம். நம்ம ஊரோட க்ளைமட் அதுக்கு நல்லாவே செட் ஆகுது. ஆனா, ரொம்பவே கவனமா இருக்கனும். ஒரு சின்ன தவறும் பெரிய லாஸ்ட்ல கொண்டு போய் விட்டுடும். அதுக்கான டிஸ்கஷன்ஸ் இப்போ போயிட்டு இருக்கு. கூடிய சீக்கிரம் அதையும் ஆரம்பிச்சுடலாம்.” சொல்லியபடியே அவளை அவனது காபினுக்கு அழைத்து வந்திருந்தான்.

எப்பிடி இருக்கு நம்ம ஃபாக்டரி?” முகத்தில் புன்னகையோடு கேட்டான் அபிமன்யு.

ரொம்ப நல்லா இருக்கு. எவ்வளவு கஷ்டப்பட்டு திட்டம் போட்டு இதை உருவாக்கி இருக்கீங்கன்னு எனக்குப் புரியுது.” சொன்னவளின் முகம் குறும்பாக மாறியது.

மனசுக்குள்ள என்னமோ ஓடுது போல, என்னன்னு சொல்லுங்க மேடம்.”

இல்லை…”

ம்…”

அப்பா நடத்துற தொழிலை மட்டும் பாக்காம, தனக்குன்னு ஒரு அடையாளத்தை உருவாக்கி இருக்கீங்க…”

ம்…”

எம் புருஷனுக்கும் கொஞ்சம் கெட்டித்தனம் இருக்குன்னு நினைச்சேன்…”

ஹாஹா…” தன்னை மறந்து சிரித்தவன், அவளைத் தன்னருகே இழுத்து அணைத்துக் கொண்டான்.

ஐயோ அபி, யாராவது வரப்போறாங்க.” அவள் படபடப்பைப் பார்த்து புன்னகைத்தான் அபி.

இங்க யாரும் வரமாட்டாங்கடா. பரவாயில்லையே, இவ்வளவு நாளும் நான் பாடுபட்டதுக்கு இன்னைக்குத் தான் எனக்கு முழுமையான ரிசல்ட் கிடைச்சிருக்கு.” 

ஏன், கொள்ளை லாபம் வருதாமில்லை? அத்தை சொன்னாங்க.” அவள் குரல் அவனைக் கேலி பண்ணியது.

அடிப்போடி, என் அஞ்சலி சொல்லுற ஒரு பாராட்டுக்கு அந்தப் பணம் ஈடாகுமா?” பேசிக் கொண்டே அவன் காரியத்தில் இறங்க, மெல்ல நழுவியவள் அந்த black Audi தஞ்சம் புகுந்தாள்.

  • °•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°

நேரம் மதியத்தைத் தாண்டிக் கொண்டிருந்தது. கார் சீட்டில் சாய்ந்து உட்கார்ந்திருந்த கீதாஞ்சலி லேசாகக் கண் அயர்ந்திருந்தாள். மிதமாக சியை ஓடவிட்டிருந்த அபி காரை ட்ரைவ் பண்ணிக் கொண்டிருந்தான்.

ஃபாக்டரியிலிருந்து புறப்பட்டு நேராக அவள் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்கள். எங்கு போகிறோம் என்று அபி அவளிடத்தில் சொல்லி இருக்கவில்லை. சர்ப்ரைஸாக இருக்கட்டும் என்று விட்டு விட்டான்.  

அயர்ந்து தூங்கும் தன் மனைவியைத் திரும்பிப் பார்த்தான் அபி. நேற்றைய இரவு கண்முன் நிழலாடியது. அவன் ஆசைகள் அனைத்திற்கும் மறுப்புச் சொல்லாமல் அடிபணிந்திருந்தாள். அத்தனை சுலபத்தில் தன் மனையாள் தன்னோடு கை கோர்ப்பாள் என்று அபி எதிர்பார்த்திருக்கவில்லை. சந்தோஷத்தில் திக்கு முக்காடிப் போனான்.

அந்தப் பெண்ணின் மேல் தனக்குக் காதல் இருப்பது போல, அவளுக்கும் தன்பால் ஒரு ஈடுபாடு உண்டென்று அபிக்குத் தெரியும். அந்த ஈடுபாடு காதலாக மலரு முன்னமே அவளைக் கைப்பிடித்தது தான் அவளின் ஆதங்கம். அந்த ஆதங்கத்தை நிவர்த்தி செய்ய, தான் ரொம்பவே போராட வேண்டி இருக்கும் என்று அபி கவலைப் பட்டிருந்தான்

ஆனால், அவன் கவலை அனாவசியம் என்று சொல்லாமல் சொல்லி விட்டாள் கீதாஞ்சலி. ‘அவளின் மேல் தனக்கு இத்தனை பித்தா?’ என்று நேற்று வரை அபியும் அறிந்திருக்கவில்லை.

வீடு வந்திருக்கவும் காரை நிறுத்தி விட்டு அவள் கன்னத்தை மென்மையாக வருடினான். அந்த ஸ்பரிசத்தில் மெதுவாகக் கண் விழித்தாள் கீதாஞ்சலி. சுற்றி வர கண்களைச் சுழல விட்டவள், தன் வீட்டிற்கு முன் கார் நிற்கவும் ஆச்சரியமாக அபிமன்யுவைத் திரும்பிப் பார்த்தாள்.

அபி…!”

எம் மாமியார் வகை வகையா சமைச்சு வச்சுட்டு காத்துக்கிட்டு இருப்பாங்க. உள்ள போலாமா?” அவன் பேச்சில் மலர்ந்து சிரித்தாள் கீதாஞ்சலி.

சொல்லவே இல்லை.”

அம்மாடி, ரொம்ப பசிக்குது. இறங்குற ஐடியா இல்லைன்னா சொல்லுங்க, நான் தூக்கிட்டு போறேன்.” சொல்லியபடியே அவன் இறங்கவும் அவளும் இறங்கினாள். இவர்கள் வரவு ஏற்கனவே தெரிந்திருந்ததால் வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது

அறிவழகனும், மஞ்சுளாவும் தங்களுக்கு மிகவும் நெருக்கமான ஒன்றிரண்டு சொந்தங்களை அழைத்திருந்தார்கள். விருந்தினர்களும், விருந்தும் என அந்த இடமே அமர்க்களப்பட்டது

அபி எந்த விதப் பாரபட்சமும் பார்க்காமல் எல்லோரோடும் இனிமையாகவே நடந்து கொண்டான். ஆதித்தனும் தன் அத்தானோடு தயக்கமே இல்லாமல் ஐக்கியமாகிக் கொண்டான்.

மாப்பிள்ளை, இன்னைக்கு இங்கேயே தங்கலாமே?” அறிவழகனின் கெஞ்சல் குரலில் சிரித்தான் அபி.

இன்னைக்கு சின்னதா ஒரு ப்ளான் இருக்கு மாமா. எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டேன். இனி அடிக்கடி இங்க வரத்தானே போறோம், அப்போ தங்குற மாதிரி வர்ரோமே.”

சரி மாப்பிள்ளை.” சிரித்தார் அறிவழகன்.

உண்டு முடித்த பின்பு சற்று நேரம் அங்கேயே செலவழித்து விட்டு, மகிழ்ச்சியோடே விடை பெற்றார்கள் புது மணத் தம்பதியினர். இருவரையும் சேர்த்து நிற்க வைத்து திருஷ்டி சுற்றினார் மஞ்சுளா.

நேரம் ஐந்தைத் தாண்டி இருந்தது. வெயில் சற்றே தணிந்து குளுமை கொஞ்சம் பரவவும், சியை நிறுத்திவிட்டு இயற்கைக் காற்றை ஆழ்ந்து சுவாசித்தான் அபி. கார் மலைப் பாதையில் ஏறத் தொடங்கியது. பச்சை வாசம் நாசியை வருடியது.

எங்க போறோம் அபி?” நிதானமாகக் கேட்ட மனைவியைப் பார்த்துச் சிரித்தான். ஆனால் பதிலேதும் சொல்லவில்லை. வழியில் இருந்த ஒரு பெரிய ஹோட்டலில் ஏதேதோ வாங்கிபூட்இல் வைத்தான். ஏற்கெனவே ஆர்டர் பண்ணி இருப்பான் போலும். எல்லாம் தயாராகவே இருந்தது

கார் இன்னும் கொஞ்ச நேரம் மலை மேல் ஏறியது. லேசாக இருள் பரவ ஆரம்பித்திருந்தது. பிரதான பாதையிலிருந்து சின்னதாக ஒரு கிளை பிரிந்து செல்ல அதில் காரைச் செலுத்தினான் அபி. கொஞ்ச தூரம் போனதுமே மெல்லிய அருவி ஒன்று வெள்ளி ஜரிகையாய் வழிந்தது

யாருமற்ற ஏகாந்தம். காரை ஓர் ஓரமாக நிறுத்திவிட்டு அஞ்சலியின் பக்கமாக வந்தவன், அவள் கதவைத் திறந்து விட்டான். விழிகள் வியப்பில் விரிய அவன் கைபற்றி இறங்கினாள்.

பிளேஸ் எப்பிடி இருக்கு பேபி?” கிறக்கமாக வந்த அவன் குரலில் சிலிர்த்தவளை மேலும் சிலிர்ப்பூட்டியது அருவியின் குளுமை. சுற்றிவர நோட்டமிட்டவள் அவன் ரசனையை மனதிற்குள் பாராட்டிக் கொண்டாள்.

காரிலிருந்த பொருட்களையெல்லாம் எடுத்து கடை பரப்பினான் அபி. அவன் செயல்கள் அனைத்தையும் ஒரு வியப்போடு பார்த்தபடி இருந்தாள் கீதாஞ்சலி. சின்னச் சின்ன விறகுகளை ஒன்றன் மேல் ஒன்றாக ஒரு ஒழுங்கில் அடுக்கியவன் ஐந்து நிமிடங்களுக்குள் ஜுவாலை மூட்டி இருந்தான்.

மெலிதாக வீசிய பூங்காற்றிற்கு நாட்டியமாடிய அந்த மஞ்சள் மங்கையைத் தஞ்சமடைந்தாள் பெண். கைகளை நீட்டி அதில் குளிர் காய்வது அத்தனை சுகமாக இருந்தது.

அபி…”

ம்…”

எனக்குமௌன ராகம்மூவி பாக்குற மாதிரி இருக்கு.”

ஹாஹாஅப்பிடியா? வேணாம்ப்பா, அதுல சுத்தி வர பத்துப் பேர் டான்ஸ் பண்ணுவாங்க. நமக்கு அந்தத் தொல்லையெல்லாம் வேணாம்.” சொல்லிவிட்டு அவள் பக்கத்தில் அமர்ந்து கொண்டான். அவன் தோளில் சுகமாக சாய்ந்து கொண்டாள் கீதாஞ்சலி.

இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன் அஞ்சலி.” 

ம்…”

பாடுவியா நீ?”

சுமாரா…”

ஏதாவது பாடேன் டா.” உயிர்வரை தீண்டிய அந்தக் குரலில் கண்களை மூடிக் கொண்டாள் கீதாஞ்சலி.

கண்ணிரண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோன்றும்

ஆனாலும் அனல் பாயும்

நாடியெங்கும் ஏதோ நாத வெள்ளம் ஓடும்

ஆனாலும் என்ன தாகம்

மெய்சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்த்ததென்ன… 

அதற்கு மேல் பாட முடியாமல் முகத்தை அவன் தோள்களில் புதைத்துக் கொண்டாள். அவன் மூட்டிய தீ முழுதாகப் பற்றி ஓய்ந்தது. இருவரும் பேசிக்கொள்ளவில்லை

காரில் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த உணவை அங்கேயே உண்டு முடித்தவர்கள், இன்னும் கொஞ்ச நேரம் இருந்து விட்டுக் கிளம்பினார்கள்.

மலையிலிருந்து இறங்கிய அந்த black Audi ஹைவேயில் வழுக்கிக்கொண்டு போனது. ப்ளேயரில் பாடலை ஓடவிட்ட அபி மீண்டும் அவளைச் சீண்ட ஆரம்பித்தான்

அபி, ட்ரைவ் பண்ணும் போது இது என்ன விளையாட்டு. என்ன ஆச்சு உங்களுக்கு இன்னைக்கு?” அவன் அஜாக்கிரதை அவளை கோபப் படுத்தியது.

ஹேய் பேபி, அங்கொன்னும் இங்கொன்னுமா நாலு கார் போகுது. இதுக்கு இவ்வளவு வொர்ரி பண்ணனுமா?” என்றவன், சீல்ட் பெல்ட்டைக் கழட்டி விட்டு அவள் புறமாகச் சாய்ந்து, அந்தக் கன்னத்தில் முத்தம் வைத்தான்

அடுத்த நொடி, என்ன நடக்கின்றது என்று உணரும் முன்னதாக அந்த black Audi தூக்கி வீசப்பட்டது. வீசப்பட்ட அந்தக் கறுப்புக் குதிரை, நான்கு முறை குட்டிக்கரணம் போட்டு சாலையோரம் நின்ற மரத்தில் மோதி நின்றது.

 

error: Content is protected !!