Vanjam 8

Vanjam 8

                                 வஞ்சம் – 8

அன்று ( சென்னை பட்டணம் )

காலையில் எழுந்த காரிகை கண்ணில் பேப்பர் முதல் பாகம் பட கொதித்தெழுந்து விட்டார்…

அவள் கணவனைப் பற்றி நன்கு அறிவாள், அதிலும் நேற்று எங்கு சென்றார் என்பதை வந்தவுடன் கூறிவிட்டார்.. அதே நேரம் காரிகைக்கு ஸ்வேதா மேல் தான் கோபம் வந்தது.. அதை மூர்த்திக்கு காட்டாமல் மறைத்தவர் “ என்கிட்ட உங்க காரணத்தை சொன்னது சரி தான், விஷ்ணுவை போய் பாருங்க “ என அவரை விஷ்ணு பக்கம் திருப்பி விட்டார்…

ஸ்கூல் விட்டு வந்ததும் கோபமாக அறைக்கு சென்றவன் தான் அதன் பிறகு கதவை அவன் திறக்கவே இல்லை…

காரிகை எத்தனையோ நேரம் கதவை தட்டி விட்டார், அசையவே இல்லை விஷ்ணு,

விஷ்ணு அறை வாசலில் போய் நின்ற மூர்த்தி “ கண்ணா “ என்றபடி அழைக்க “ டாடி “ என ஓடி வந்து கதவை திறந்தான் விஷ்ணு…

மகனை தன் கைகளில் தூக்கிக் கொண்டவர் “ சாப்டியாடா கண்ணா “ என்றபடி அவனின் கன்னம் வருடிக் கேட்டார்,

“ நோ டாடி, நான் உங்க மேல கோபமா இருக்கேன் “ என்றபடி     அவரை கழுத்தோடு அணைத்துக் கொண்டான் விஷ்ணு,

அவன் செயலில் அவருக்கு மிகவும் வருத்தமாக இருந்தது, இவன் ஆசையை நிராசையாக மாற்றி விட்டோமே அவரால் தாங்கமுடியவில்லை,  

அவனை டைனிங்க்  டேபிளில் அமரவைத்தவர் “ சாரிடா கண்ணா, டாடி இன்னைக்கு உன் ஸ்கூல் வரலைன்னு ரொம்ப கோபமா இருக்கியா கண்ணா “ என கேட்டுக் கொண்டே அவனுக்கு ஊட்டி விட்டு கொண்டிருந்தார், அவருக்கு அருகில் அமர்ந்திருந்த காரிகை கணவன் மகனை சமாதானபடுத்தும் அழகை முகத்தில் தோன்றிய புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

“ ஆமா டாடி.. எனக்கு அழுகையா வந்திச்சு “ குழந்தையாய் கூறினான் விஷ்ணு..

“ சாரிடா கண்ணா, அப்பா உன் ஸ்கூல் தான் வந்தேன் கண்ணா.., அங்க ஒரு குட்டி பையன் உன்னை மாதிரியே ஸ்கூல் கிளம்பி நின்னான், பார்க்க பாவமா இருந்தது, அவனுக்கு அப்பா வேற இல்லையாம்.. உனக்கு தான் பிக் அப்பா இருக்கேன்ல, அந்த பையன் ஸ்கூல் போக அழுதுட்டே நின்னான், சின்ன பிள்ளைங்களுக்கு ஹெல்ப் பண்ணனும் தானே..? “ அவனிடமே கேட்டார், வேகமாக தலையை ஆட்டினான் அவன்..

“ ஆங், அது தான் அப்பா அவனுக்கு ஹெல்ப் பண்ண போய்ட்டேனாம், சாரிடா கண்ணா “ என்றவர் தொடர்ந்து “ இன்னைக்கு மட்டும் அப்பாவை மன்னிச்சுக்கோ கண்ணா, இனி தினமும் உன்னை நான் தான் ஸ்கூல் அழைச்சுட்டு போவேனாம் “ என கூறினார்.. சிறுவன் அல்லவா, எல்லாம் மறந்து உடனே “ லவ் யூப்பா “ என்றபடி அவரை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டான் அவன்.. யாருக்கு கிடைக்கும் இப்படி ஒரு அருமையான குழந்தை, அப்படியே அவனை அணைத்துக் கொண்டார் மூர்த்தி.

ஆனால் காரிகை மட்டும் அவரை எச்சரித்தார் “ எப்பொழுதும் மகன் மனதில் இருந்து தரம் தாழ்ந்து போகும் வேலையை செய்யவேண்டாம், “ என கூறி மகனை கைகளில் தூக்கிக் கொண்டார்… காரிகை கூறுவதையும் மூர்த்தி ஒத்துக்கொண்டார்…

அவரை பொறுத்தவரை ஸ்வேதாவும், அவரும் நண்பர்கள் மட்டும் தான், அது காரிகைக்கும் நன்கு தெரியும்… அவள் கணவரை அவள் முழுதாக நம்பினாள்..

ஆனால் இப்பொழுது பேப்பரில் வந்திருக்கும் நியூஸ் தன் மகன் கண்ணிலோ, அல்லது கணவர் கண்ணிலோ பட்டால் வீணாக மனஸ்தாபம் தான் ஏற்படும் என எண்ணியவர் அந்த பேப்பரை அப்புறபடுத்தி விட்டார்…

ஆனால் அப்படி விடக்கூடிய விஷயமா என்னும் படியாக, அடுத்தடுத்த நிகழ்வுகள் நடந்தது,

காலையில் பேப்பர் எடுத்து பார்த்த மூர்த்தி நண்பர், மூர்த்திக்கு அழைத்து “ டேய் மூர்த்தி பேப்பர் பார்த்தியா..? என்னடா நடக்குது ” என்றபடி அங்கிருந்து கோபமாக கத்தினார்… அவருக்கும் நன்கு தெரியும் மூர்த்தி பற்றியும், அவரின் நட்பு பற்றியும் அதனால் தான் அத்தனை கோபம் அவருக்கு,

“ டேய் என்ன சொல்லுற, என்ன பேப்பர் “ புரியாமல் கேட்டவர் கட்டிலை விட்டு எழுந்து வேகமாக ஹாலுக்கு வந்து பேப்பரை தேடினார்,

அதுகிடைக்காமல் போக “ காரிகை “ வேகமாக அழைத்தார்,

“ என்னாச்சு “ என்றபடி காரிகை அவர் அருகில் வர,

“ இன்னைக்குள்ள பேப்பர் எங்க “

“ அது.. அது எதுக்குங்க “ தடுமாறினார் காரிகை..

“ எடு “ என்றபடி முறைக்க, காரிகை எடுத்து வந்து அவர் கையில் திணித்தாள்,

பேப்பரை வேகமாக பிரித்து பார்த்தவர் ரௌத்திரமானார், ஒரு குறிப்பிட்ட நம்பருக்கு அழைத்து விட்டு அவர் காத்திருந்தார், அழைப்பு பிஸியாக வர, இங்கு மூர்த்திக்கு டென்ஷன் ஏறியது, மீண்டும் அழைத்தார், காரிகை அவர் முகத்தையே பார்த்திருந்தார்..  மூர்த்தி முகம் அப்படி ஒரு கோபத்தை காட்டியது, இதுவரை இப்படி ஒரு கோபத்தை அவரிடம் காரிகை கண்டதில்லை….

அந்தப்பக்கம் போன் எடுக்க பட ” யோவ்..!! என்னய்யா உன் மனசுல நினைச்சுட்டு இருக்க, நியூஸ் வந்தா என்ன ஏதுன்னு எதுவும் பார்க்காம இப்படி தான் போடுவியா.. யாரை பத்திய நியூஸ் இப்படி எதுவும் யோசிக்க மாட்டியா “

” சார், தெரியாம நடந்துட்டு சார், நானே பாக்கல சார் பசங்க தான் போட்டுருக்காங்க, எல்லாரும் போன் செய்து கேட்டப்ப தான் எனக்கே தெரியும் சார், நாளைக்கே ஒரு மன்னிப்பு நியூஸ் போடுறோம் சார், பெரிசா எடுத்துக்காதீங்க சார், பிளீஸ் சார்  ” பவ்யமானான் அவன்,

இந்த நியூஸ் சென்ற நேரத்தில் இருந்து பல போன்கால்ஸ், சமாளிக்க முடியவில்லை அவனால்…சிறிது யோசித்தவர் “இதோட  எல்லாம் முடிச்சுக்கலாம், இனி என்னோட கார்மெண்ட்ஸ்ல இருந்து எந்த அட்வெர்ட்டிஸ் உன்னோட சேனல்,  நெட்ஒர்க், ப்ரெஸ் எதுக்கும் வராது, உன்னோட அக்கவுண்டரை வந்து கணக்கை முடிக்க சொல்லு “

” பிளீஸ் சார் “

 ” நோ, முடியாது, நீங்க மன்னிப்பு கேட்டா எல்லாம் சரியாப்போகுமா, என்னை விடுங்க ரெண்டு சின்ன குழந்தைங்க மனசை பார்த்தீங்களா.? அந்த பெண்ணை பார்த்தீங்களா..? ” அவரால் தாள முடியவில்லை, புனித நட்பை கூட மதிக்காத சமூகமா நம் சமூகம்..!!

அவரையே பார்த்திருந்த காரிகை, அவரின் தோள் தட்டி ” விடுங்க, நேத்து அவார்ட் பங்ஷன் நியூஸ் கூட இவன் தானே போட்டான், தெரியாம போட்டிருப்பான், ஏதோ திருஷ்டி கழிஞ்சதா விட்டு தள்ளுங்க ” அதோடு முடித்துக் கொண்டார் காரிகை…

அதற்கு மேல் அந்த விஷயத்தை பேசினால் அவர் ஸ்வேதா மேல் மேலும் கரிசனபடுவார், அதை காரிகையால் தாங்க முடியாது, அதனால் தான் அதை இத்துடன் முடித்துக் கொண்டார்,

” டாடி ” என்றபடி விஷ்ணு வர, சமாளித்துக் கொண்டு அவனை தூக்கிக் கொண்டார்,

” டாடி ஸ்கூல் கூப்பிட்டு போறேன்னு சொன்னீங்களே ” நியாபகப்படுத்தினான் மகன்,

“ டாடி, மறக்கலடா கண்ணா “ புன்சிரிப்புடன் கூறியவர் அவனை தூக்கி கொண்டு மாடி ஏறினார்..

அவர்களை பார்த்த காரிகை “ சரியான அப்பா கோண்டு “ புன்சிரிப்புடன் செல்லமாக முனுமுனுத்தவர் தன் வேலையை பார்க்க சென்றார்..  

காலையில் எழுந்து பேப்பர் பார்த்த ஸ்வேதா அப்படியே உடைந்துப் போனார்.. எப்படி யாரை குற்றம் சொல்வது, இது மகன் கண்ணில்பட்டால் மூர்த்தி பிம்பம் மகன் மனதில் இருந்து மிகவும் கீழிறங்கி விடுமே…, இனியும் மகன் இங்கிருந்தால் சரி இல்லை என்று உடனே அவனை வெளியூர் ஹாஸ்டலில் சேர்த்து விட்டாள் ஸ்வேதா,

மகன் இங்கிருந்தால், எப்படியும் மூர்த்தியை அழைப்பான் பேசுவான், மீண்டும் மூர்த்திக்கு இப்படி ஒரு அவபெயரை ஏற்படுத்த அவள்  விரும்பவில்லை…

அவளாலும், அவள் மகனாலும் அவள் நண்பனுக்கு எந்த பாதிப்பு வருவதையும் அவள் விரும்பவில்லை,

அவன் மனைவி, குழந்தையுடன் நீண்ட நாள் வாழ ஆசைக் கொண்டாள் அந்த உயிர் தோழி..,

அடுத்து வந்த நாட்கள் விஷ்ணுவுக்கு மிகவும் கொண்டாட்டம் தான்.. இந்த முறை அவனின் தந்தை அவனை ஏமாற்றாமல் தினமும் ஸ்கூல் அழைத்து செல்கிறார், வீட்டுக்கும் அழைத்து வருகிறார்…

இப்பொழுதெல்லாம் ஸ்வேதா  மூர்த்தியை மிகவும் தவிர்த்து வருகிறார்.. மூர்த்திக்கு வரும் ஆடர்ஸ், ஸ்வேதா கார்மெண்ட்ஸ் – க்கு ஷேர் செய்யும் பொழுது மட்டுமே இருவரும் பேசி கொள்வார்கள்,

அகிலை ஹாஸ்டலில் சேர்த்தது மூர்த்திக்கு பிடிக்கவேயில்லை, சிறு குழந்தை அவன் அவனை எப்படி தனியாக விட மனது வந்தது, அதற்கு அவள் சொன்ன காரணம் அவரை மெய்சிலிர்க்க வைத்தது, நட்பு எவ்வளவு அழகானது…!! யாருக்கும் கிடைக்காத நட்பு அவருக்கு கிடைத்தது..!! மெய்சிலிர்க்க வைத்தது…!!

 

“ என்ன மாதிரியான அன்பு இது “ அத்தனை சந்தோசமாக இருந்தது அவருக்கு, மூர்த்தியின் நல்வாழ்வுக்கு அகிலை ஹாஸ்டலில் சேர்த்திருக்கிறாள்.

“ இங்க பார் ஸ்வேதா நீ செய்தது ரொம்ப தப்பு, எவனோ ஒருத்தன் செய்த வேலைக்கு அவனை எதுக்கு ஹாஸ்டலில் சேர்த்த “

“ உனக்கு தெரியாது மூர்த்தி, அவன் சின்ன பையன், அவன் ஆசைக்காக நான் பார்த்தால் உன் பேரை மீடியா நாறடிக்கும், உனக்கு இப்போ தான்  அவார்ட் வேற கிடைச்சிருக்கு, உன் பேரை கெடுக்க கேமராவோடு தான் சுத்துவாங்க, அதுக்கு தான் அகில் கொஞ்ச நாள் வெளியில் இருந்து படிக்கட்டும், விவரம் தெரிந்ததும் அவனை இங்கு அழைத்துக் கொள்ளலாம் “ என்பதாய் பேச்சை முடித்துக் கொண்டாள்..

ஆனால் அடிக்கடி மகனை சென்று பார்த்து வருவாள் ஸ்வேதா, அவன் ஹாஸ்டல் இருக்கும் பக்கமாய் மூர்த்தி செல்ல நேர்ந்தால் அவனை பார்த்து வருவார்,

சில மாதம் யாருக்கும், எந்த பிரச்சனையும் இல்லாமல் வாழ்க்கை தெளிந்த நீரோடையாக சென்றது, வீட்டுக்கு வந்ததும் இதுவரை இல்லாத அளவு விஷ்ணுவுடன் அதிக நேரத்தை செலவழித்தார், ஸ்வேதா அவள் மகன் தேவ்வை ஹாஸ்டலில் சேர்த்து விட்டாள் என்று பேச்சு வாக்கில் ஒரு நாள் கூறியிருந்தார்..

காரிகை கொஞ்சம் நிம்மதியாக உணர்ந்தார் அந்த பையன் இங்கு இல்லையென்றால் எதுவும் இல்லை பெரிய பாரம் இறங்கியதை போல் இருந்தது….

எல்லாம் விஷ்ணுவின் பிறந்தநாள் வரை தான் போலும், நாளை விஷ்ணு பிறந்த நாள் என்பதால், அவனை அழைத்துக் கொண்டு ஷாப்பிங் சென்றார் காரிகை, மூர்த்தியை அழைத்ததற்கு ” கிளையண்ட் மீட் பண்ணனும் காரிகை, நீ விஷ்ணுவை அழைச்சுட்டு போயிட்டு வா ” என்று கூறி காலையிலையே அவர் கிளம்பிவிட்டார்…

அன்று இரவு வெகு தாமதமாக வந்தார் மூர்த்தி, கேட்தற்கு “ கிளையன்ட் இப்போ தான் கிளம்புனாங்க காரிகை, லேட் ஆகிட்டு “ என்றபடி வந்து படுத்துக் கொண்டார்…

அடுத்த நாள் விடியல் அழகாக விடிந்தது, விஷ்ணுவுக்கு பெரும் சந்தோசம் அவனின் நண்பர்களுடன் ஆட்டம் பாட்டம் என்று ஒரே கொண்டாட்டம் தான்,

மாலை தந்தையின் அருகில் நின்று கேக் வெட்டி மிகவும் சந்தோசமாக இருந்தான் விஷ்ணு, அவனின் புன்னகை முகம் கண்டு காரிகை முகம் தானாக மலர்ந்தது, மகனின் புன்னகை முகம் தான் அவளின் சந்தோஷமே,

இன்றுடன் அவர்களின் சந்தோசம் அழிய போகிறது என்று விதி எண்ணியது போல் அடுத்து வந்த நிகழ்வுகள் அவர்களை சுற்றி நடந்தது..

அன்று அப்படி தான் காரிகையும், விஷ்ணுவும் ஹாஸ்பிடல் போக அங்கு ஸ்வேதாவுடன் மூர்த்தியை பார்த்தார் காரிகை, அங்கிருந்து காரிகை அவர்களை தவறாக எண்ணவில்லை,

ஆனால் வீட்டுக்கு வந்ததும் தொழில் பற்றி பேசிய மூர்த்தி, ஸ்வேதாவை பார்த்தது பற்றி எதையும் கூறவில்லை, முதல் முறையாக மறைகிறார், காரிகை மனதில் முதல் சந்தேக வித்து விழுந்தது, அதை அந்த நேரமே அவர் கேட்டு தெரிந்திருக்கலாம் ஆனால் அவள் கேட்காமலே அவரை கவனிக்க ஆரம்பித்தார், அவர் தயவில் அவள் வாழ்வதாக காரிகை காதுக்கு நியூஸ் வந்தது உடைந்து போனார், இது எதையுமே மூர்த்தி காரிகையிடம் கூறவில்லை,

மூர்த்தி வேண்டும் என்று அவளிடம் மறைக்கவில்ல, காரிகை தன்னை தவறாக எண்ணமாட்டாள் என்று அவளை முழுதாக நம்பினார்,

அதன் பிறகு எத்தனையோ நாட்கள் இருவரையும் ஒன்றாக பார்த்தார் காரிகை, இத்தனை நாளும் சாதாரண கண் கொண்டு பார்த்தார், அப்பொழுது அவருக்கு தவறாக தெரியாதது, இன்று சந்தேக கண்ணோடு பார்த்தார் இருவர் உறவும் அவர் கண்களுக்கு தவறாக தெரிந்தது, அதிலும் அவன் அகில்தேவ் அவரிடம் எடுக்கும் உரிமை அவரை மிகவும் கோபம் கொள்ள வைத்தது, ஆக மொத்தம் மூர்த்தியை வெறுக்க ஆரம்பித்தது அவளின் மூளை.,

அதற்கு தூபம் போடுவதுப் போல் அன்றைய மாலை பேப்பரில் அவரை பற்றிய நியூஸ், இந்த முறை முதல் பக்கத்தில் இல்லாமல் கடைசி பக்கத்தில் தொழிலதிபருக்கான செய்தி உள்ள இடத்தில் “ தொழிலதிபரும்.. தோழியும்.. சலசா.. சல்லாலா “ மிகவும் தரம் தாழ்ந்த வார்த்தைகளில்,

 ஊஞ்சலில் அகில் அமர்ந்திருக்க, பின்னால் நின்று மூர்த்தி அவனை ஆட்டி விட, ஸ்வேதா அருகில் வாயில் கையை வைத்து சிரித்துக் கொண்டிருப்பது போல் படம் போட்டு காரிகை வெறுப்பை மேலும் அதிகமாக்கியது அந்த நியூஸ்,

ஆனாலும் மனதின் ஓரத்தில் சின்ன நம்பிக்கை, பல வளர்ந்த தொழிலதிபர்களை பற்றி இப்படி செய்தி வருவது சகஜம் தான், ஸ்வேதா அவரின் உயிர் தோழி என்று நன்கு அறிந்தவரால் முழுதாக அவரை சந்தேக படவும் முடியவில்லை, படாமல் இருக்கவும் முடியவில்லை, அந்த நேரம் அவரின் மூளை இருவரையும் ஒன்றாக பார்த்த பல நிமிடங்களை நினைவு படுத்தியது, மனதின் நம்பிக்கையை கொண்டு அவரிடம் கேட்க எண்ணினார் காரிகை,

அன்று வெகு தாமதமாக வீட்டுக்கு வந்தார் மூர்த்தி, வந்தவர் சாப்பிடாமல் மகனுடன் வந்து படுத்துக் கொண்டார் அவரையே யோசனையாக பார்த்த காரிகை அவரிடம் எதையும் காட்டவும் இல்லை, பேப்பர் நியூஸ் பற்றி கேட்கவும் இல்லை,

அடுத்து வந்த நாட்கள் மூர்த்தி மிகவும் டென்சனாக இருந்ததுப் போல் இருந்தது, காரணம் கேட்டதற்கு “ ரொம்ப வேலை காரிகை,  சும்மா மனுசனை டென்ஷன் பண்ணாதே “ என்றபடி எரிச்சலாக கண்களை மூடி கொண்டார்,

அடுத்து வந்த நாட்கள் மூர்த்தி வீட்டுக்கு வர வெகு தாமதம் ஆகியது, சில நாள் வீட்டுக்கு வரவும் மாட்டார், ஒருவாரம் நிதானமாக இருந்தார் காரிகை,

ஒரு நாள் சாதரணமாக கேட்பதுப் போல் “ அகில் இப்போ எங்கிருக்கிறான் “ என்று தெரியாததுப் போல் கேட்டாள்,

“ அவன் எங்கிருப்பான் ஹாஸ்டலில் தான் இருக்கான் “ என்றவர் அவளை முறைத்துக் கொண்டே உள்ளே சென்றார்,

அவளுக்கு திடுகென்றது “ நேற்று கூட இவரையும், அகிலையும் சிக்னலில் ஒன்றாக பார்த்தாள் “ அவனை எங்கோ அழைத்து சென்றிருப்பார் போல,

“ அவனை நேற்று பார்த்தேனே, உங்க கூட இருந்… “ பேசவிடவே இல்லை “ என்ன வேவு பாக்குறியா “ அவர் முகம் விகாரமாக மாறியிருந்தது,

“ ஏன் இவ்வளவு கோபம்…! “ அவளுக்கு காரணம் தெரியவில்லை, அப்போ எல்லாம் உண்மையா..? அது தான் இந்த கோபமா..? அவளால் தாங்கமுடியவில்லை, “ சொல்லுங்க அவன் இங்க தானே இருக்கிறான் “ தவிப்புடனே கேட்டாள் பொய்யாக இருக்க வேண்டுமே என்ற வேண்டுதலுடன்,

அவளை முறைத்தவர் அவளை விட்டு செல்ல எத்தனிக்க, “ எனக்கு பதில் சொல்லிட்டு போங்க, அவன் இங்க தான் இருக்கிறானா..? இது எல்லாம் உண்மையா “ கையில் இருந்த பேப்பரை நீட்டினாள், “ அவள் உங்க தயவில் தான் இருக்கிறாளா..? உங்களுக்கு வரும் ஆர்டர் தான் அவளுக்கு கொடுகிறீங்களா..? “ ஆத்திரமானார் காரிகை,

அவளையே உக்ரமாக முறைத்தவர் “ என்னை சந்தேகபடுறியா காரிகை “ கோபமாக கேட்டார், ஆம்..! கோபமாக தான் கேட்டார், அவரையும் அறியாமல் ஏற்பட்ட கோபம் அது, தன்னை நம்பாமல் போனாளே என்ற ஆற்றாமை..!! வலி..!! கோபமாகியது…!!

ஒரே ஒரு நொடி அவளை ஆழ்ந்து நோக்கியவர் “ என்னை நம்பாத யாருக்கும் நான் பதில் சொல்ல தேவையில்லை “ கதவை அறைந்து சாற்றியவர் வேகமாக வெளியேறி சென்றார்…

சென்றவர் நேராக மருத்துவமனை போய் நின்றார், “ அங்கிள் மம்மி எப்போ என்னை பார்ப்பாங்க “ கண்ணீருடன் அவர் கையை பிடித்துக் கொண்டு கேட்டான் அகில் தேவ்..  அவரின் உயிர் தோழி உயிருக்கு போராடிய நிலையில் அங்கு அனுமதிக்கபட்டிருந்தார்,

 

அன்று ( சோளகாடு கிராமம் )

துரைச்சி மிகவும் சோகமாக அமர்ந்திருந்தாள், அவள் கையை பிடித்துக் கொண்டு மருது கெஞ்சிக் கொண்டிருந்தான், ஆம்..!! தன் ஆசை மனைவியிடம் கெஞ்சிக் கொண்டு தான் இருந்தான்..

இன்றுடன் அவனின் விடுமுறை நாட்கள் முடிகிறது, இன்று இரவு அவன் அசாம் கிளம்பவேண்டும், அதற்கு தான் மனைவியை சமாதானபடுத்திக் கொண்டிருந்தான்.

அவளோ அவனை ஏறெடுத்துப் பார்க்காமலே முகத்தை கீழே தொங்க போட்டு அமர்ந்திருக்கிறாள்… அவள் அருகில் தேவேந்திரன் மருதுவை முறைத்து கொண்டு நின்றிருந்தான்..,

தேவ் முறைப்பதை கண்ட மருது “ டேய் நீ எதுக்குடா இப்படி முறைக்க, என் பொண்டாட்டி என்னை முறைக்க ஒரு காரணம் இருக்கு நீ ஏண்டா என்னை முறைகிற “

“ நீ மட்டும் பாப்பாவை விட்டு போற “ கோபமாக முகத்தை திருப்பிக் கொண்டான் தேவ்.. ஆம்..!! பாப்பா தான் துரைச்சி இப்பொழுது நான்கு  மாதம்..

“ அடேய்.. மருமகனே என் பொண்ணை பார்க்க தான் நீ இருக்கியே. அப்புறம் ஏண்டா இப்படி முகத்தை திருப்புற, மாமா பாவம்ல “ முகத்தை பாவமாக வைத்துக் கொண்டான் மருது,

மாமா பாவம் என்றதும் “ சரி, சரி நான் அத்தையையும், பாப்பாவையும் நல்லா பாத்துகிறேன் நீ கிளம்பு “ அவசரபடுத்தினான் அவன்,

“ டேய் என்னடா என்னை கிளப்பி விடுறதிலையே குறியா இருக்க “  

மூவரையும் கன்னத்தில் கைவைத்து பார்த்துக் கொண்டிருந்த ராஜா “ டேய்..! நிறுத்துங்கடா உங்க நாடகத்தை “ கடுப்பானான் அவன், கிட்டத்தட்ட ஒரு மணிநேரமாக இவர்களின் பாச பிணைப்பை பார்த்து கதறிவிட்டான்,

அப்பொழுது தான் முகத்தை மெதுவாக தூக்கிய துரைச்சி : கண்டிப்பா போகணுமா “ பாவமாக கேட்டாள் அவள்….

“ கண்டிப்பா போகணும்மா.. அவசரம் இருக்கத்தினால் தானே என்னை கூப்பிட்டுருக்காங்க, எந்த லீவ் கிடைத்தாலும் உடனே என் பட்டுக்குட்டியை பார்க்கவந்திருவேனாம் ” கொஞ்சிக் கொண்டான்…

அவளையே பார்த்தவன் கனத்த மனதுடன் அசாம் கிளம்பினான். அடுத்த நாளே மருதுவின் அப்பத்தா ” துரைச்சி நீ உன் வீட்டுக்கு போகணும்னா போ ” என்று கூறி அவளை அனுப்பி விட்டார்.. துரைச்சி வீட்டில் இருந்து அப்பத்தாவுக்கும், ராஜாவுக்கும் சாப்பாடு செல்லும்…

காமாட்சியும், பஞ்சாயத்தும் அவளை கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொண்டனர், அதிலும் தங்கம் சொல்லவே வேண்டாம் கூட பிறந்த தங்கையைப் போல் பார்த்துக் கொண்டாள்..

வீட்டுக்கு வந்த ஒரு வாரத்தில் துரைச்சிக்கு மருது போன் ஒன்று  பரிசளித்தான் போஸ்ட் மூலமாக, அன்றில் இருந்து அவர்களின் காதல் அலை வழியாக நடந்தேறியது.. குழந்தை பேறுக்கு மூன்று நாள் முன்னாடியே வருவதாக மருது கூறி இருந்தான், அந்த நாளுக்காக காத்திருக்க ஆரம்பித்தாள் துரைச்சி.

காலை நேரம் துரைச்சி அவர்களின் ஊரை சுற்றி வருவாள், தேவ் பள்ளி விட்டு வந்ததும் அவனுக்கு பாடத்தை சொல்லி கொடுப்பாள், இரவு ஆனால் போதும் தேவ்வை அழைத்துக் கொண்டு மொட்டை மாடிக்கு செல்வாள்..

மாடியில் அமர்ந்திருந்து அந்த வானத்தையே பார்த்திருப்பாள், கிழக்கு பக்கத்தில் இருக்கும் ஒற்றை நட்சத்திரம் அவளுக்கு மருதுவை நினைவுப்படுத்தும் அவனும் அவளை விட்டு தூரமாக தானே இருக்கிறான்… அந்த கிழக்கு ஒற்றை நட்சத்திரம் அவளை நோக்கி பக்கத்தில் வரும் நாளுக்காக காத்திருந்தாள்…

அவளை நன்றாக கவனித்தான் தேவ்.. அவளை கவனிக்கும் பொறுப்பை தேவ் கையில் கொடுத்து சென்றான் மருது, துரைச்சி முகம் சிறிது வாடினாலும் உடனே அவளை அழைத்துக் கொண்டு தோட்டத்தை நோக்கி செல்வான் அவன், தன் அத்தையின் மனதை நன்கு அறிந்தவன்.

அன்று ஆற்றின் அருகில் அமர்ந்திருந்து காலை ஆற்று நீரில் வைத்து மெதுவாக ஆட்டிக் கொண்டிருந்தாள், மெதுவாக சல சலத்து ஓடிய ஆற்றின் குளிர்ந்த தண்ணீர் அவள் காலை குளிர செய்து அவளின் அடிவயிறு வரை பாய்ந்து அவளின் குழந்தையை குதுகலிக்க செய்தது, அன்றில் இருந்தே அவளின் வயிற்றில் இருந்த குழந்தை ஆற்று குளிரை உணர ஆரம்பித்தது…

அப்படியே நடந்து தென்னை தோட்டத்தை அடைந்தவள் அதன் அழகை அப்படியே ரசித்திருந்தாள், மரத்தின் அருகில் வந்து அதன் மேல் கையை வைக்க, மெதுவான சீட்டிகை சத்தத்துடன் கூடிய ஒரு சத்தம் தென்னை மரத்தில் இருந்து எழுப்பி அவளின் காதை நிறைக்க, அவளின் கருவும் அந்த ஓசையை உள்வாங்கியது,

அப்படியே நடந்தவள் பச்சை பசேல் என்று கண்ணை நிறைத்த வயலை நோக்கி சென்றாள் அங்கிருந்த முற்றிய நெல் கதிரோ அவளை வா வா என அழைக்க,

ஆசையுடன் நெற்கதிரை நோக்கி நகர்ந்தாள், அவள் மெதுவாக நடந்து வர, தங்களுக்குள் கையை கோர்த்து அரட்டையில் இருந்தவர்கள் தன் கைகளை அவளை நோக்கி ஆட்டி ஆட்டி அவளை வரவேற்றன,

கையை கதிர்கள் மேல் வைத்து பாசமாக வருடி கொண்டு அவள் வருவதை கண்டவர்கள் தாங்கள் முற்றிய நெல்லை பிரசவிக்க காத்திருப்பது போல் அவளும் பெரிய வயிறுடன் இருக்க சந்தோசத்துடன் அவள் கையில் செல்லமாக முட்டி “ ஸ்..ஸ்ஸ்..ஸ்ஸ்ஸ் “ என்ற சத்தத்துடன் ஆசிர்வதித்தது, அந்த இனிமையான இசையையும் அவளின் கரு அழகாக உள்வாங்கியது,

இப்பொழுதே அவளின் குழந்தைக்கு அவளின் ஊரின் மேல் உள்ள காதலை உணர்த்தினாள்,

எப்பொழுதும் போல் ஊரை சுற்றி வந்தவள் தேவ் வரவும் அவனுக்கு பாடத்தை சொல்லிக் கொடுத்து அவனுடன் மாடியை நோக்கி சென்றாள்,

எப்பொழுதும் அவளை விட்டு தூரமாய் இருக்கும் அந்த ஒற்றை நட்சத்திரம் இன்று அவளை நோக்கி அவள் அருகில் வந்தது, ஆனால் அவள் கண்களுக்கு அதன்  ஒளி குறைந்ததுப் போல் இருந்தது..

கொ(வெ)ல்வாள்….

“ தாலி “ தாயாகி, தாலாட்டுப் பாட கணவன் தரும் பரிசு சின்னம்..!!        “ தோடு “ எதையும் காதோடு போட்டுக் கொள் வெளியில் சொல்லாதே..!              “ மூக்குத்தி “ மூக்கு தான் முதலில் சமையலை அறியும் உக்தி..!!         “ வளையல் “ கணவன் உன்னை வளைய, வளைய வரவேண்டும்..!!        “ ஒட்டியாணம் “ கணவன், மனைவி இருவரும் ஈருடல் ஓருயிராய் ஒட்டியானோம்….!! “ மோதிரம் “ எதிலும் உன் கைத்திறன் காண்பிக்க…!! இதெல்லாம் பெண்ணின் வாழ்வில் இருக்கும் முக்கிய அங்கமாம்… இதையே கணவன் இறந்ததும் அவளிடம் இருந்து பறிப்பது ஏனோ..?  பிறந்ததில் இருந்து அவளின் அணிகலன் இவைகள் தானே..?

error: Content is protected !!