மயங்காதே மனமே 25
அன்று ஞாயிற்றுக்கிழமை. வீடே மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தது. சீமாவைக் கையில் பிடிக்க முடியவில்லை. மகனை மீண்டும் முழுதாகப் பார்த்த ஆனந்தத்தில் இரண்டு வயது குறைந்தாற் போல தெரிந்தார்.
நேற்று ஹாஸ்பிடல் போய்விட்டு, ஃபாக்டரியையும் பார்த்து விட்டு மதியம் போல வீடு வந்திருந்தார்கள் அபியும், கீதாஞ்சலியும். உடம்பில் எந்த விதக் கட்டுக்களும் இல்லாமல் சாதரணமாக இருந்த மகனைப் பார்த்து இப்போதும் சீமா அழுதுவிட்டார்.
“இங்கப் பாரு பொண்ணே, இது சந்தோஷத்துல வர்ற கண்ணீர். அன்னைக்கு மாதிரி இன்னைக்கும் என்னை மிரட்டினே, எம் பையன் கிட்ட உன்னைப் போட்டுக் குடுத்துடுவேன் பாத்துக்கோ.” மிரட்டிய மாமியாரைப் பார்த்துச் சிரித்தாள் கீதாஞ்சலி.
“ம்ஹூம், நான் ஒன்னுமே சொல்லமாட்டேன். நீங்க நல்லா ஆசை தீர அழுதுக்குங்க அத்தை. வேணும்னா உங்க மகனையும் சேத்துக்கோங்க.” சிரித்தபடியே சொல்லிவிட்டு, கீழேயிருந்த அவர்கள் ரூமிற்குள் போய்விட்டாள். அங்கிருந்த அத்தனை பேரும் சிரித்தார்கள். அபியும் புன்னகைத்துக் கொண்டான்.
“அபி, டாக்டர் என்ன சொன்னார்ப்பா?” அன்பாய் விசாரித்த பாட்டியைத் திரும்பிப் பார்த்தான் அபிமன்யு.
“டிஸ்சார்ஜ் பண்ணிட்டாங்க… பாட்டி. இனி… ப்ராப்ளம் இல்லை… பாட்டி.” திக்கித் திணறி மெதுவாகச் சொல்லி முடித்தான் அபி.
“ஆண்டவா! எங் குடும்பத்துக்கு ஒரு குறையும் வராம நீதான் காப்பாத்தணும்.” கண்கலங்க வேண்டுதல் வைத்தார் அன்னலக்ஷ்மி. சிரித்தபடியே அபியும் ரூமிற்குள் போனான்.
“அபி, சாப்பிட்டுட்டு நல்லா தூங்கி ரெஸ்ட் எடுங்க. உங்க முகம் கொஞ்சம் டயர்ட் ஆனமாதிரி தெரியுது.” மனைவியின் கரிசனையில் நெகிழ்ந்தவன்,
“சரிடா.” என்றான்.
மதிய உணவை முடித்து விட்டு தூங்கிக் கொண்டிருக்கும் கணவனின் நிர்மலமான முகத்தை கொஞ்ச நேரம் இமைக்காமல் பார்த்திருந்தவள், மாமனாரைத் தேடிப் போனாள். ஆஃபீஸ் ரூமில் ஏதோ ஃபைல் ஒன்றைப் புரட்டிக் கொண்டிருந்தார் நாராயணன். இவளைப் பார்த்ததும்,
“வாம்மா… உங்கிட்ட கொஞ்சம் பேசணும்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன், நீயே வந்துட்டே.” என்றார்.
“சொல்லுங்க மாமா.”
“புதுசா வாங்கின மில் ரெண்டுலயும் வேலை ஆரம்பிச்சாச்சும்மா. இனி கஸ்டமர்ஸ் கொஞ்சம் கொஞ்சமா வர ஆரம்பிப்பாங்க. அதுதான் அபி ரெடியாகிட்டான் இல்லை, அவன் இனி ஃபாக்டரியைப் பாத்துக்கட்டும். நீ எங்கூட மில்லுக்கு வாம்மா.”
“சரி மாமா. அபி கிட்டயும் சொல்லிடுறேன்.”
“ம்… நீ ஏதோ சொல்ல வந்தியேம்மா…”
“மாமா, அபி மனசுல என்ன இருக்குன்னு எனக்குப் புரியலை…” சொன்ன மருமகளின் முகத்தைக் கூர்ந்து பார்த்தார் நாராயணன்.
“ஏன்? என்னாச்சும்மா?”
“இன்னைக்கு ஹாஸ்பிடல்ல இருந்து நேரா ஃபாக்டரிக்கு போகணும்னு சொல்லிட்டாங்க. அங்க போயும் வெற்றி கூட ஏதோ தனியா பேசினாங்க. அந்த நேரம் என்னைக் கொஞ்சம் தவிர்த்த மாதிரி எனக்குத் தோணிச்சு மாமா.”
“ஓ…!” நாடியை மெதுவாகத் தடவிக் கொண்டு யோசனையில் ஆழ்ந்தார் நாராயணன்.
“அபி மனசுல ஒரு வன்மம் வந்திருச்சோன்னு தோனுது. யாரு என்ன வேணும்னாலும் பண்ணட்டும். அதுக்காக நாமளும் அவங்க மாதிரியே இறங்கி அடிச்சா நல்லா இருக்காது மாமா.”
“ம்…”
“இதை என்னால அபிகிட்ட சொல்ல முடியலை. சொன்னா ஒருவேளை தப்பாகிருமோன்னு எனக்கு பயமா இருக்கு. கொஞ்சம் நீங்க என்னன்னு பாருங்க மாமா.”
“சரிம்மா. நான் என்னன்னு பாக்கிறேன், நீ கவலைப்படாதே.” சொல்லிவிட்டு யோசனையில் ஆழ்ந்தார் நாராயணன்.
அன்று முழுவதும் அபி அடித்துப் போட்டாற் போல உறங்கினான். உடம்பின் பாரமா? இல்லை மனதின் பாரமா? எது இறங்கியது என்று தெரியவில்லை. யாரும் அவனைத் தொந்தரவு பண்ணவும் இல்லை.
இரவு வீடே உறங்கிய பிறகு மாடித் தோட்டத்தில் நிலவை ரசித்தபடி நின்றிருந்தாள் கீதாஞ்சலி. அபி எப்படியும் கட்டாயம் வருவான் என்று தெரியும். அதற்காகவே காத்து நின்றிருந்தாள். பின்னோடு அணைத்தவனின் ஸ்பரிசத்தில் சிலிர்த்தவள், அப்படி, நின்ற வாக்கிலேயே அவன் தோளில் தலை சாய்த்துக் கொண்டாள். அவள் தோளில் முகம் பதித்துக் கொண்டவன்,
“அஞ்சலி…” என்றான்.
“ம்…”
“கொஞ்ச நாளைக்கு முன்னாடி, ஒரு பொண்ணு எங்கிட்ட ஒரு நிலாக்கதை சொன்னா.”
“அப்பிடியா?” அவள் குரலில் சிரிப்பு வழிந்தது.
“ம்… அந்த நிலாவை அவளுக்குப் புடிச்சிருக்காம்… ஆனா, ரொம்பவே தூரத்தில இருக்காம்… அவளால பிடிக்க முடியாத தூரமாம்.” அவன் குரலிலிலும் சிரிப்பு இழையோடியது.
“ம்… அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க?”
“அடிப்போடி… இதெல்லாம் ஒரு தூரமா? கையை நீட்டினா எட்டிப் பிடிச்சுடலாம்னு சொன்னேன்.” கொஞ்சம் கோர்வையாக தடங்கலின்றிப் பேசினான் அபிமன்யு.
“இப்போ நிலாவை அந்தப் பொண்ணு பிடிச்சுட்டாளாமா என்ன?”
“அப்பிடித்தான் நினைக்கிறேன் அம்மாடி.” சொன்னபடியே அவள் இடை வளைத்தான். அவள் கன்னத்தில் தன் கன்னம் வைத்து உரசினான்.
“எங்கிட்ட அந்தப் பொண்ணு வேற கதை சொன்னாளே…” அவள் பேச்சில் அடிக்குரலில் அபி லேசாகப் புன்னகைத்தான்.
“என்ன சொன்னா அம்மாடி?”
“நிலாவோட தூரத்தைப் பாத்து பயந்து போய், இந்தப் பொண்ணு கவலைப் பட்டுக்கிட்டே ஒதுங்கிப் போயிடுச்சாம். ஆனா, அந்த நிலாதான் இந்தப் பொண்ணு மேல பரிதாபப் பட்டு, இந்தப் பொண்ணைத் தூக்கி தன் பக்கத்துல வெச்சுக்கிச்சாம்.” அவள் புனைந்த கதையில் வாய் விட்டுச் சிரித்தான் அபி. அவளைத் தன் புறமாகத் திருப்பியவன்,
“அது பரிதாபப் பட்டு இல்லை அம்மாடி, மயங்கிப் போய்…” என்றபடி அவள் இதழ்களை முற்றுகை இட்டுக் கொண்டான். நீண்ட நாட்களுக்குப் பின்னான அவன் தீண்டலில் கீதாஞ்சலி மயங்கிப் போனாலும், தன்னை சுதாகரித்துக் கொண்டு மெதுவாக விலகினாள்.
“அம்மாடி…?” அந்தக் கேள்வியின் அர்த்தம் புரிந்தாலும், மனைவி தலைகுனிந்து மௌனமே சாதித்தாள். அவன் ஆரோக்கியம் மட்டுமே அவளுக்கு அப்போது பிரதானமாக இருந்தது.
“அஞ்சலி…”
“ம்…”
“நான் ஒன்னு கேக்கட்டுமா?” புன்னகையோடே அவன் முகம் நிமிர்ந்து பார்த்தாள் பெண்.
“கேளுங்க அபி.”
“இல்லைன்னு சொல்லாமக் குடுக்கணும்.”
“உங்களுக்கு இல்லைன்னு சொல்ல எங்கிட்ட எதுவுமே இல்லையே அபி.”
“பேச்சு மாறக் கூடாது.”
“ம்ஹூம்… மாட்டேன்…”
“தருண் மாதிரி ஒரு பொண்ணு எனக்கு வேணும் அஞ்சலி…” வில்லங்கமாக ஏதோ வரப்போகிறது என்று எதிர்பார்த்திருந்த கீதாஞ்சலி, சத்தியமாக இப்படி ஒன்றை எதிர்பார்க்கவில்லை. அவன் மார்பிலேயே முகம் சாய்த்துக் கொண்டாள்.
“என்ன அஞ்சலி? யோசனை பலமா இருக்கு? வேணாமா?”
“வேணும் அபி… கண்டிப்பா வேணும்.”
“அப்புறம் ஏன் பதிலே சொல்லலை?”
“அ… அது… அபி…” அவள் கன்னச் சிவப்பில் அவன் பார்வை மாறிப்போனது. அவளையும் அழைத்துக் கொண்டு ரூமிற்குப் போனவன், கட்டிலில் கால் நீட்டி அமர்ந்து கொண்டான்.
அவன் ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டிருப்பது கீதாஞ்சலிக்கு நன்றாகப் புரிந்திருந்தது. ஏதேதோ கதைகள் பேசி, அவன் சிந்தனையை மாற்ற முயன்றவளின் வாயில் ஒற்றை விரல் வைத்துத் தடுத்தான் அபி.
“நான் ஈஷ்வரன் கிட்ட எல்லாம் கேட்டுட்டேன் அம்மாடி… நோ ப்ராப்ளம்ன்னு சொல்லிட்டார்டா.”
“அபி… இருந்தாலும்…”
“கொஞ்சம் தயவு காட்டு அம்மாடி…” போலியாகக் கெஞ்சியவனைப் பார்த்து பக்கென்று சிரித்தாள் கீதாஞ்சலி.
“போதுமே நடிப்பு… ரொம்பத்தான் நான் சொல்லுறதைக் கேக்குறவர் நீங்க…” அவள் சொல்லவும் மீண்டும் அடிக்குரலில் சிரித்தவன், அதற்கு மேல் பேசவில்லை.
நேற்று நடந்த அனைத்தையும் அசை போட்டபடி குளித்து முடித்து கிச்சனுக்குப் போனாள் கீதாஞ்சலி. சீமா ஏற்கனவே காஃபி தயாரித்துக் கொண்டிருந்தார்.
“குட் மார்னிங் அத்தை.”
“குட் மார்னிங் கண்ணம்மா. அபி எந்திருச்சுட்டானா?”
“இன்னும் இல்லை அத்தை.” மகனின் பெயரைச் சொன்னதும் மருமகள் முகத்தில் தெரிந்த மலர்ச்சியில் சீமாவிற்கே ஆசை வந்தது. கீதாஞ்சலியின் கன்னத்தில் முத்தமிட்டார். அப்போதுதான் வாங்கி வைத்திருந்த பூவை அவள் தலையில் வைத்து விட்டவர், காஃபி ட்ரேயை கையில் கொடுத்தார்.
“நீ அபியோட போய் சாப்பிடும்மா.”
“சரிங்கத்தை.” புன்னகையோடு நடந்து போகும் மருமகளின் பின்னோடு போனது சீமாவின் கண்களும்.
“என்னாச்சு? எதுக்கு இப்பிடியொரு பார்வை?” கேட்டபடியே வந்தமர்ந்தார் நாராயணன். கணவனின் கேள்வியில் புன்னகைத்தார் சீமா.
“அபி இந்தப் பொண்ணு கழுத்துல திடுதிடுப்புன்னு தாலி கட்டினப்போ, கொஞ்சம் வருத்தமா இருந்துதுங்க. யாரு? என்ன? நம்ம குடும்பத்தோட ஒத்துப் போவாளா? இப்பிடி எத்தனையோ கேள்வி இருந்துச்சு. ஆனா, இன்னைக்கு சொல்றேங்க. இந்தப் பொண்ணு இடத்துல வேற யாராவது இருந்திருந்தா என்ன ஆகியிருக்கும்? என்னால நினைச்சுக் கூடப் பாக்க முடியலேங்க.” கனவில் பேசுபவர் போல பேசிக் கொண்டிருந்தார் சீமா. நாராயணனும் தலையாட்டிக் கொண்டார்.
“அபி…” மெதுவாக கணவனை எழுப்பினாள் கீதாஞ்சலி.
“அபி… காஃபி ஆறிடப் போகுது…” மீண்டும் ஒலித்த மனைவியின் குரலில் கண் விழித்தான் அபிமன்யு. எதிரில் தெரிந்த மனைவியின் முகத்தில் விழி பதித்தவன், லேசாகப் புன்னகைத்தான்.
“காஃபி…” அவள் நீட்டவும் வாங்கிக் கொண்டான்.
“அபி… நான் ஒரு விஷயம் உங்க கிட்ட சொல்லணும்.” தயக்கத்தோடே ஆரம்பித்தாள் கீதாஞ்சலி. இத்தனை நாளும் மனதிற்குள் உறுத்திக் கொண்டிருந்த விஷயம். அபியிடம் சொல்லாவிட்டால் மண்டை வெடித்து விடும் போல இருந்தது.
“சொல்லுடா.”
“அன்னைக்கு ஒரு நாள்… மித்ரன் சார் எனக்கு கால் பண்ணினாங்க.” தயங்கியபடியே சொன்னாள்.
“என்னவாம்?” சாதாரணமாகக் கேட்டான் அபி. அவன் கோபத்தை எதிர்பார்த்தவள் அவன் நிதானம் பார்த்து திகைத்துப் போனாள். இருந்தாலும் தொடர்ந்தாள்.
“இந்த ஆக்ஸிடென்ட்க்கும் அவங்களுக்கும் சம்பந்தம் இல்லையாம். ஏதேதோ பேசினாங்க. எனக்கு வந்த ஆத்திரத்துக்கு நானும் மாறி நல்லா திட்டிட்டேன் அபி.”
“ம்… அப்பிடியா… உண்மையிலேயே அதை இவன் பண்ணலைடா.” சிந்தனையோடே சொன்னான் அபிமன்யு. கணவன் பேச்சில் திகைத்துப் போனாள் கீதாஞ்சலி.
“அபி…! என்ன சொல்லுறீங்க? அவங்க தானே உங்களை எதிரி மாதிரி பாத்தாங்க. அப்போ அவங்க தானே பண்ணி…”
“அஞ்சலிம்மா… நாம வேற ஏதாவது பேசலாமே…” அவளை இடைமறித்த அவன் குரலில், சட்டென்று நிறுத்தினாள் கீதாஞ்சலி. முகம் கொஞ்சம் யோசனையைக் காட்டியது.
“மித்ரன் சார் தான் இதைப் பண்ணி இருக்காங்கன்னு நினைச்சு, நான் அவங்களை ரொம்பவே திட்டிட்டேன் அபி.”
“புருஷன் காரன் முதல் முதலா ஆசையா நேத்து நைட் ஒன்னு கேட்டானே, அதுக்கு ஏதாவது வழி பண்ணுவோம்னு யோசிக்காம…” சரசமான அவன் பேச்சில் நிகழ்காலத்துக்கு வந்தாள் கீதாஞ்சலி. சொல்ல வந்தது எல்லாம் மறந்தே போனது.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கண்களைத் திறவாமலேயே பெட்டைத் துழாவினான் மித்ரன். எதிர்பார்த்தது கையில் சிக்கவில்லை. ஒரு சிணுங்கலோடு கண் விழித்தவன், பக்கத்தில் மனைவியைக் காணாத ஏமாற்றத்துடன் மீண்டும் கண்களை மூடிக்கொண்டான். சரியாக அந்நேரத்திற்கு ரூம் கதவு திறந்தது.
பின்க் நிற காட்டன் புடவையில், கையில் காஃபியோடு உள்ளே நுழைந்தாள் தாமரை. புடவையின் ஹெட் பீஸ் நல்ல மஞ்சள் நிறத்தில் ஜொலித்தது. தலை நிறைய மல்லிகைப்பூ. மித்ரன் கண்கள் தெறிக்க அவளையே பார்த்திருந்தான்.
இரவின் மீதங்களே விடியலின் போதும் தொடருமோ, என்று ஒரு பதட்டத்தோடே உள்ளே நுழைந்தவள், அவன் பார்வை பார்த்து ஆச்சரியப் பட்டாள்.
“அத்தான், என்னாச்சு? ஏன் அப்பிடிப் பாக்குறீங்க?”
“தாமரை…! எதுக்கு இப்போ இந்த காஸ்ட்யூம்…”
“புடவைன்னு சொல்லுங்க அத்தான்.”
“யெஸ்… யெஸ்… புடவை. நான் அன்னைக்கு சொன்னதுக்காகவா?”
“ஆமா… நீங்க தானே புடவை நல்லா இருக்கும்னு கட்டச்சொன்னீங்க?”
“அன்னைக்கு கட்டச் சொன்னேன், ஆனா இன்னைக்கு சொல்லலையே பேபி.”
“ஒவ்வொரு தரமும் சொல்லணும்னு அவசியம் இல்லை அத்தான். நீங்க ஒரு தரம் சொன்னாலே நான் புரிஞ்சுப்பேன்.”
“ஓ… எனக்கு… என்ன சொல்றதுன்னு…” அவன் எதையோ சொல்லத் தயங்கவும், காஃபியை அவன் கையில் கொடுத்தாள் தாமரை.
“எதுவா இருந்தாலும் எங்கிட்ட ஷெயார் பண்ணுங்க அத்தான்.” அவன் கண்களைப் பார்த்துச் சொன்னாள்.
“இல்லை பேபி… சில நேரம் தாத்தா எங்கேயாவது வெளியே போய் வர லேட் பண்ணிடுவாங்க. நாங்க எல்லாரும் நேரத்துக்கு சாப்பிட்டிருவோம். ஆனா… பாட்டி சாப்பிடாம வெயிட் பண்ணுவாங்க. எனக்கு அது அப்போ சில்லியா தோணுச்சு… ஆனா… இப்போ நீ காஃபி கொண்டு வரும் போது… புரியுது.”
“என்ன புரியுது அத்தான்?”
“சுகமா இருக்கு பேபி. அந்த ஃபீலிங் ஐ சொல்லத் தெரியலை பேபி…” அவன் பதிலில் புன்னகைத்தாள் தாமரை.
“தாமரை, நீ குக் பண்ணுவியா?”
“சுமாரா பண்ணுவேன் அத்தான். ஏன் கேக்குறீங்க?”
“இல்லைடா, பாட்டிக்கு கிராமத்துல ஒரு பெரிய வீடு இருக்கு. ரொம்ப அழகா இருக்கும். பின்னால தென்னந்தோப்பு இருக்கு. அந்த வீட்டை பாத்துக்க ஒரு ஃபாமிலியை பாட்டி அரேன்ஞ் பண்ணி இருக்காங்க. நாம ரெண்டு பேரும் மட்டும், அங்க போலாமா?” கண்கள் மின்னக் கேட்டான் மித்ரன்.
“போலாம் அத்தான்.”
“தட்ஸ் குட் பேபி. ஒரு டூ, த்ரீ டேய்ஸ் அங்க ஸ்பென்ட் பண்ணிட்டு வரலாம். ஓ கே வா?”
“ம்… அப்போ ஃபாக்டரி?”
“அந்தத் தடியன் என்னத்துக்கு இருக்கான்? பாத்துக்கட்டும்.” சொன்ன மித்ரனை முறைத்துப் பார்த்தாள் தாமரை. அவள் முறைப்பைப் பார்த்த பிறகே, தான் பேசியதன் அர்த்தம் உறைத்தது மித்ரனுக்கு. அவன் பேச்சில் கோபப்பட்டு ரூமை விட்டு வெளியேறப் போனவளையும் அள்ளிக்கொண்டு, பாத்ரூமிற்குள் நுழைந்தான் மித்ரன்.
“சாரி பேபி, வாய் தவறி வந்திடுச்சு. இனி இப்பிடிப் பேச மாட்டேன்…” காற்றில் தேய்ந்தது அவன் குரல்.
மித்ரனும், தாமரையும் ரூமை விட்டு வெளியே வந்தார்கள். மித்ரன் ஃபாக்டரிக்குப் போக தயாராகி இருந்தான். நானும் வருகிறேனே என்று கேட்ட தாமரையைத் தவிர்த்திருந்தான். மேலும் மேலும் அவள் கதிர் விடயத்தில் ஏமாந்து போவதை மித்ரன் விரும்பவில்லை.
நேராக டைனிங் டேபிளை நோக்கிப் போனவர்கள், கொஞ்சம் அதிர்ந்தாற் போல நின்று விட்டார்கள். ஏனென்றால் அங்கே ராஜேந்திரனும், சுலோச்சனாவும் அமர்ந்திருந்தார்கள். தாமரை கணவனைத் திரும்பிப் பார்த்தாள்.
“தாமரை, எனக்கு லேட் ஆகுது. கொஞ்சம் சீக்கிரமா பரிமாறு.” சொல்லிவிட்டு டைனிங் டேபிளில் அமர்ந்தான் மித்ரன். யாரையும் அவன் கண்டு கொள்ளவில்லை. அவளை எதையும் சிந்திக்க விடாமல்,
“இட்லி இன்னும் ஒன்னு வை, சாம்பார் கொஞ்சம் ஊத்து.” இப்படிச் சொல்லியபடியே உணவில் கவனமாக இருந்தான்.
“மித்ரா…” சுலோச்சனா மகனை அழைத்தார். சோஃபாவில் அமர்ந்த படியே பேப்பர் படித்துக்கொண்டிருந்த மதுராந்தகனும், மித்ரனோடு சேர்ந்து அண்ணாந்து பார்த்தார். அம்மாவின் முகத்தைப் பார்த்த போதே மித்ரனுக்குப் புரிந்தது, அவர் ஏதோ வம்பு பண்ணப் போகிறார் என்று.
“இல்லை… இந்தப் பொண்ணு உனக்கு என்ன முறையாகணும்?” சுலோச்சனா கேட்ட கேள்வியில் சாம்பார் பரிமாறிய தாமரையின் கை அப்படியே நின்றது. கிச்சனில் வேலையாக நின்ற ஜெயந்தி கூட சட்டென்று வெளியே ஓடி வந்தார். மதுராந்தகனின் கண்கள் தெறித்து விடும் போல நிலைகுத்தி நின்றன. ராஜேந்திரன் மௌனமாக அமர்ந்திருந்தார். ஆனால், மித்ரன் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை.
“தாமரை சட்னி வை…” என்றவன்,
“ஆங்… என்னம்மா கேட்டீங்க? தாமரை பத்தியா கேட்டீங்க? எனக்குத் தெரிஞ்சு, உங்க புருஷன் உங்க கூட மட்டும்தான் குடும்பம் நடத்தி இருக்காரு. இவங்க அம்மா கூடவும் குடும்பம் நடத்தி இருக்காரான்னு, நீங்க தான் கேட்டு சொல்லணும்.” என்றான்.
மித்ரன் சொல்லி முடிக்கவும் டேபிளில் இருந்த ப்ளேட் பறந்தது. அடித்து வீசியது வேறு யாருமல்ல. ராஜேந்திரன் தான். இத்தனை நாளும் இப்படி நடந்து கொள்ளாத கணவனின் செய்கையில் ஆச்சரியமாகப் பார்த்த படி அப்படியே அமர்ந்து இருந்தார் சுலோச்சனா. கண்களில் கொஞ்சம் குரோதம் வழிந்தது.