mm28
mm28
மயங்காதே மனமே 28
அந்த black Audi வீட்டின் முன்னால் சர்ரென்று வந்து நின்றது. இப்போதெல்லாம் தன் எஜமானே அதைக் கையாள்வதால், அந்த அஃறிணைப் பொருளுக்கும் அத்தனை குஷி.
காரை விட்டு கீதாஞ்சலியும், அபியும் இறங்கினார்கள். ஃபாக்டரியிலிருந்து தான் வருகிறார்கள் என்பதை, அவர்களின் களைத்துப் போன முகமே சொன்னது. அபி காரை லாக் பண்ணவும், பாலகிருஷ்ணனும், அன்னலக்ஷ்மியும் வெளியே வரவும் சரியாக இருந்தது.
“வா அபி, வாம்மா… கோயிலுக்கு கிளம்புறோம். நீங்க உள்ள போய் காஃபி குடிங்க.” தாத்தா சொல்லவும், பாட்டியும் ஆமோதித்தாற் போல புன்னகைத்தார்.
“தாத்தா… ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க. நான் உங்களை கூட்டிட்டுப் போறேன்.” என்றான் அபி.
“எதுக்குப்பா? டயர்டா தெரியுறே. நீ ரெஸ்ட் எடு, நாங்க ட்ரைவர் கூட போய்க்கிறோம்.”
“பரவாயில்லை தாத்தா, ஒரு பத்து நிமிஷம் தான். காஃபி குடிச்சிட்டு வந்திர்றேன்.”
“சரி சரி… நீ ஆறுதலாவே வா. நாங்க வெயிட் பண்ணுறோம்.” சொல்லியபடியே தாத்தாவும், பாட்டியும் சோஃபாவில் உட்கார்ந்தார்கள். கீதாஞ்சலியும் புன்னகைத்தபடியே உள்ளே போனாள்.
கோயிலின் படிக்கட்டில் தாத்தாவும், அபியும் அமர்ந்திருந்தார்கள். பாட்டி தனக்குத் தெரிந்த யாரோ ஒரு பெண்ணுடன், சற்றே அப்பால் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார். அந்த மாலை நேரத்துக் காற்று, அத்தனை இதமாக மேனி தழுவியது.
“தாத்தா…”
“சொல்லு அபி.”
“வைதேகிங்கிறது யாரு?” அபியின் கேள்வியில் பாலகிருஷ்ணனின் நெற்றி சுருங்கியது.
“யாரைக் கேக்குற அபி?”
“பண்ணையூர்…” ஊரைச் சொன்னும், மனிதர் நிமிர்ந்து உட்கார்ந்தார். ஏனென்றால், அது அவரின் பூர்வீகம்.
“உனக்கெப்பிடித் தெரியும்?”
“அவங்க பொண்ணு ரெண்டு நாளைக்கு முன்னாடி, என்னைப் பாக்க வந்திருந்தாங்க?”
“நிஜமாவா சொல்றே?”
“ம்… அவங்க தான் எல்லாம் சொன்னாங்க. என்னால நம்பவும் முடியலை, நம்பாம இருக்கவும் முடியலை. அதான்…” சொல்லிவிட்டு அபி அமைதியாக அமர்ந்திருந்தான். தாத்தாவும் கொஞ்ச நேரம் சிந்தனை வயப்பட்டிருந்தார்.
“எனக்கு… அந்தப் பொண்ணு வைதேகி, ஒரு வகையில தூரத்துச் சொந்தம் தான் அபி. பெருசா சொல்லிக்கிற மாதிரி வசதியான குடும்பம் இல்லேன்னாலும், ஒன்னும் வறுமைப் பட்டவங்க கிடையாது… ஆனா, மதுராந்தகன் குடும்பத்தைப் பத்திக் கனவு கூட அவங்களால காண முடியாது. அந்தப் பொண்ணு… அம்மன் சிலை மாதிரி… அத்தனை அழகா இருப்பா…”
“ம்… அப்புறம் என்ன ஆச்சு?”
“என்ன ஆச்சுன்னு, அந்த ஆண்டவனுக்குத் தான் தெரியும் அபி. அந்தப் பையன் ராஜேந்திரன், பெரிய இடமாப் பாத்து கல்யாணம் பண்ணிக்கிட்டான். அந்தக் காலத்துல, இப்போ மாதிரி ‘காதல்‘ ங்கிறது சாதாரண விஷயம் கிடையாதுப்பா. கொலை பண்ணினவனைக் கூட மன்னிப்பாங்க. ஆனா, காதல் பண்ணுறவங்களை மன்னிக்க மாட்டாங்க. யாருக்கும், எதுவும் தெரியலை. பொண்ணு வீட்டுக் காரங்களும், சரி விட்டது சனியன்னு, வேற மாப்பிள்ளையைப் பாத்து கல்யாணம் பண்ணி வெச்சுட்டாங்க.” சற்று நிறுத்திய பாலகிருஷ்ணன், பெருமூச்சு விட்டார்.
“பையன் அவ்வளவு நல்லவன் கிடையாது போல. கொஞ்சம் சிரமப் பட்டுத்தான் அந்தப் பொண்ணு ஜீவிதம் பண்ணி இருக்கு. அந்தப் பொண்ணோட போதாத காலம், இந்த விஷயம் தெரிஞ்ச யாரோ, அந்தப் பொண்ணோட புருஷன் கிட்ட இதை போட்டுக் குடுத்திருக்காங்க. அதுக்கப்புறம்… நரக வாழ்க்கை தான். என் காதுக்கு விஷயம் வந்தப்போ, நானும் கூப்பிட்டு புத்திமதி சொன்னேன். ஆனா, அவன் கேட்ட மாதிரித் தெரியலை. கடைசியா, அந்தப் பொண்ணை ஆஸ்பத்திரியில சேத்திருக்குங்கிற தகவல் வந்துது. அதுக்கப்புறமும் மதுராந்தகன் கிட்ட இந்த விஷயத்தை மறைக்கிறது தப்புன்னு தோணிச்சு…”
“மதுராந்தகன் தாத்தா அவங்களை போய்ப் பாத்தாங்களா?”
“ம்… அவங்க வந்து பாத்த ரெண்டு நாள்லயே, அந்தப் பொண்ணு இறந்து போச்சு. அவ புருஷன் என்ன ஆனான்னே தெரியலை. குழந்தைகள் ரெண்டும் அனாதையா நின்னப்போ, மதுராந்தகன் ஏத்துக்கிட்டான். தேவையில்லை, நான் பாத்துக்கிறேன்னு எவ்வளவோ சொல்லியும் கேக்கலை.”
“ஓ…!”
“எதுக்கு அந்தப் பொண்ணு உன்னைப் பாக்க வந்துது அபி? ஏதாவது வேலை கேட்டுதா?”
“இல்லை தாத்தா. நடந்த ஆக்ஸிடென்ட் க்கும், அந்தப் பொண்ணோட புருஷனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு சொல்லிட்டுப் போக வந்திருந்துது.”
“ஓ…! அந்தப் பொண்ணுக்கு கல்யாணம் ஆச்சா? மதுராந்தகன் சொல்லவே இல்லையே? ஆமா…? யாரு அந்தப் பொண்ணோட புருஷன்? அந்தப் பையனுக்கும், ஆக்ஸிடென்ட் க்கும் என்ன சம்பந்தம்?”
“மித்ரன்.” அந்த ஒற்றை வார்த்தையில் பாலகிருஷ்ணன் திகைத்துப் போனார்.
“யாரு…? மதுராந்தகன் பேரனா? அவனா அந்தப் பொண்ணை கல்யாணம் பண்ணி இருக்கான். அந்தப் பையனோட அம்மா அதுக்கு சம்மதிச்சிருக்க மாட்டாங்களே அபி?”
“கோயில்ல வெச்சு தாலி கட்டி இருக்காங்க. யாருக்கும், எதுவும் தெரியாது.”
“ஓ…! அந்தப் பையன் அவ்வளவு நல்லவன்… இல்லையேப்பா…”
“ம்… ஆனா இப்போ கொஞ்ச நாளா அடங்கின மாதிரி தான் தெரிஞ்சுது. என்னடா, திடீர் ஞானோதயம்ன்னு நானும் ஆச்சரியப் பட்டேன். இப்போதான் எல்லாம் பிடிபடுது.”
“மதுராந்தகனோட பேசி ரொம்ப நாளாச்சுப்பா. இத்தனைக்கும் ரொம்பவே நட்பா இருந்த குடும்பம் தான். ராஜேந்திரன், உங்கப்பாவோட பகைமை பாராட்ட ஆரம்பிச்ச உடனே, எங்களைப் பாக்க சக்தி இல்லாம ஒதுங்கிட்டாங்க.” நல்லதொரு நட்பை இழந்த சோகம் தாத்தாவின் குரலில் தெரிந்தது.
“அப்பா மேல அப்பிடி என்ன தாத்தா வன்மம் அவருக்கு? வெளியூர்க் காரர் எங்கிறதாலயா?”
“அதெல்லாம் வெளிப் பார்வைக்கு அபி. எனக்கு என்ன தோனுதுன்னா, அந்த ராஜேந்திரனுக்கு வாழ்க்கையில நிம்மதி இல்லை. ஏதோ ஒரு கட்டாயத்துல தான் அந்தப் பொண்ணை கல்யாணம் பண்ணி இருந்திருக்கணும். காதலிச்ச பொண்ணும் கிடைக்காம, கட்டின பொண்ணும் குணவதியா இல்லைன்னா, ஒரு ஆம்பிளை தன் கோபத்தை எங்க காட்டுவான் சொல்லு?”
“அதுக்கு…! எங்கப்பா தான் ஊறுகாயா அவருக்கு?”
“உங்கப்பான்னு மட்டுமில்லை அபி. அவனைப் பத்தி யாருமே நல்ல விதமா சொல்ல மாட்டாங்களேப்பா.”
“அதுவும் சரிதான்.”
“அபி… இத்தனைக்கும் அவன் அவ்வளவு கெட்டவன் கிடையாதுப்பா. நான் பாக்க வளந்த பையன் தானே? பணக்கார வீட்டுப் பசங்களுக்கு இருக்கிற ஒன்னு ரெண்டு கெட்ட பழக்கங்களைத் தவிர, அப்போ அவனையும் குறை சொல்ல முடியாதுப்பா. ஏன் இப்பிடி ஆனான்னே புரியமாட்டேங்குது.” அந்த வார்த்தைகளில் அபி சமாதானம் அடைந்தாற் போல தெரியவில்லை. தூரத்தே தெரிந்த நீல வானத்தை வெறித்த படியே அமர்ந்து இருந்தான்.
°° °° °° °° °° °° °°
இரண்டு வாரங்கள் கடந்திருக்கும்… ராஜேந்திரனின் ரைஸ் மில்களில் ஒன்று, அன்று யானை புகுந்த கடைத்தெரு போல அல்லோல கல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது. காரணம் வேறு ஒன்றுமல்ல…
உணவுப் பாதுகாப்பு, மற்றும் தரக்கட்டுப்பாட்டு வாரியத்தினால், திடீர் ரெய்ட் வந்திருந்தார்கள். முதன்மைத் தரக்கட்டுப்பாடு அதிகாரி, சூப்பர்வைசர்கள், தாசில்தார், என அத்தனை பேரும் கூடி இருக்கவும், ராஜேந்திரன் நிலை குலைந்து போனார்.
எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், திடீரென்று சோதனைக்கு வந்திருந்தார்கள். கொடுக்க வேண்டிய இடங்களுக்கெல்லாம், தாராளமாகக் கொடுத்து விட்டதால், இப்படி ஒன்றை கனவிலும் அவர் எதிர்பார்த்திருக்கவில்லை.
இரண்டு நவீன ரைஸ் மில்களுக்குச் சொந்தக்காரர் ராஜேந்திரன். மற்றைய ரைஸ் மில் வெறும் கண்துடைப்புக்குத் தான். அவரின் தங்க முட்டையிடும் வாத்து, இந்த ரைஸ் மில்தான்.
நெல்லை அவித்து, அரைத்து, அரிசியாக மாற்ற, அரசாங்கத்திற்குச் சொந்தமான அரிசி ஆலைகளைத் தவிர, மேலும் தனியார் ஆலைகளுக்கும் ஒப்பந்த அடிப்படையில், ‘நுகர்பொருள் வாணிபக் கழகம்‘ உரிமை வழங்குகிறது. அந்த உரிமையை மிகவும் பாடுபட்டு தனதாக்கி இருந்தார் ராஜேந்திரன்.
தனியார் அரிசி ஆலைகள், அரசாங்க நெல்லை அரைத்து தரமான அரிசியை கிடங்கிற்கு அனுப்புகிறார்களா? என்பதைச் சோதிக்க, அதிகாரிகள் வருவது வழக்கம் தான். ஆனால் அதற்கு முன்பே இங்கு தகவல் வந்து விடுவதால், எல்லாம் பக்காவாக தயார் நிலையில் இருக்கும். இன்று எல்லாம் தடம் புரண்டிருந்தது.
திடீரென வருகை தந்திருந்த அதிகாரிகள், மில்லின் அனைத்து வாயில்களையும் உடனே தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்ததால், ராஜேந்திரனால் எதுவும் பண்ண முடியவில்லை. குடோனில் இருந்த ரேஷன் அரிசி மூட்டைகளும், இன்னும் சாக்கு மாற்றப் படாமல், அவரைக் காட்டிக் கொடுத்தன.
நவீன அரிசி ஆலைகள் முழுத்திறனோடு அரைத்தால், மாதம் ஒன்றுக்கு 4500 டன் நெல்லை மட்டுமே அரைக்க முடியும். ஆனால் அதிகாரிகளின் துணையோடு கிட்டத்தட்ட பதினாறாயிரம் டன் நெல் வரை அரைத்ததாகக் கணக்குக் காட்டி விட்டு, மீதமுள்ள நெல்லை வெளி மார்க்கெட்டில் விற்பது வியாபாரக் காந்தங்களின் இன்றைய ட்ரெண்ட் ஆக இருந்தது.
வெளி மார்க்கெட்டில் நல்ல விலைக்கு விற்கும் அரிசியை ஈடு கட்ட, ரேஷன் அரிசியைக் கடத்தி, தங்கள் ஆலைகளுக்கே கொண்டு வந்து, வேறு சாக்குகளில் மாற்றி, மீண்டும் அரசின் உணவுக் கிடங்கிற்கே அனுப்பி வைத்தார்கள்.
ராஜேந்திரனுக்கு முதலில் இதற்கெல்லாம் அத்தனை தைரியம் இருக்கவில்லை. காலம் போகப் போக, நெருப்புக் கோழி போல தலையை பிஸினஸுக்குள் புகுத்திக் கொண்டவர், அத்தனையையும் கற்றுத் தேர்ந்தார். கண்மூடித்தனமாக அதிகரித்த பொருளாதாரத் தேவைகளும், கொள்ளை லாபம் ஈட்டித்தந்த இது போன்ற விஷயங்களுக்கு அவரைச் சுலபமாக இழுத்துச் சென்றது.
அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட அரிசி மூட்டைகள் அனைத்தும், ரேஷன் அரிசிதான் என ஊர்ஜிதப் படுத்தப் பட்டபோது, அந்த ரைஸ் மில்லுக்கு சீல் வைக்கப்பட்டது. எதுவும் செய்ய முடியாமல், மில்லுக்குள் அகப்பட்டுக் கொண்ட ராஜேந்திரனும், கைது செய்யப்பட்டார். அன்றைய பத்திரிகைகளின் தலைப்புச் செய்தி, ராஜேந்திரனாகத்தான் இருந்தார்.
°° °° °° °° °° °° °°
அபி காரை லாக் பண்ணி விட்டு வீட்டுக்குள் வந்தான். கீதாஞ்சலி இன்றைக்கு, நாராயணனோடு ரைஸ் மில்லுக்குப் போயிருந்தாள். அங்கிருந்தே வீட்டிற்குப் போவதாகத் தகவல் அனுப்பியிருக்கவும், இவன் கிளம்பி வந்து விட்டான்.
எப்போதும் இப்படிப் பண்ணுபவள் அல்ல. ரைஸ் மில்லுக்குப் போனாலும், அவள் வீடு வர அபிதான் அங்கு போக வேண்டும். அவனோடு தான் எப்போதும் வீடு வருவாள். இன்றைக்கு என்ன ஆனது? சிந்தித்த படியே உள்ளே போனான். சீமா வாசலிலேயே இவனைத் தாளித்தார்.
“இது என்ன புதுப் பழக்கம் அபி? அவளை அவ வீட்டுக்கு கூட்டிட்டுப் போக முடியாத அளவு வேலையா உனக்கு?” அம்மாவின் கோபத்தில் கொஞ்சம் நிதானித்தான் மகன்.
“அம்மா…?”
“இது அழகில்லை அபி. உனக்கு வேலை நிறைய இருந்தா, ஜஸ்ட் அவளை ட்ராப் பண்ணி இருக்கலாம் இல்லை. எதுக்கு தனியா அனுப்புற?”
“பசிக்குதும்மா… ஏதாவது சாப்பிடக் குடுங்க. சாப்பிட்டுட்டு நானும் போறேன்.” பேச்சை மாற்றினான் மகன்.
“ம்…” சொல்லிவிட்டு, சீமா கிச்சனுக்குள் போக… அபி, கீதாஞ்சலியை அழைத்தான். அழைப்பு கிடைக்கவில்லை. ஃபோனை ஆஃப் பண்ணி இருப்பாளோ, என்று அப்போதுதான் எண்ணத் தோன்றியது.
என்ன ஆச்சு? எதுக்கு இப்படிப் பண்ணுறா? சொல்லாமல் கொள்ளாமல் அம்மா வீட்டிற்கு இப்போது எதற்குப் போகவேண்டும்? நேரம் ஏழைத் தாண்டி இருந்தது. டின்னரை முடித்து விட்டே காரை ஸ்டார்ட் பண்ணினான்.
இரண்டு, மூன்று முறை மீண்டும் ஃபோனுக்கு முயற்சித்துப் பார்த்தான். ம்ஹூம்… அழைப்பு கிடைக்கவே இல்லை.
மருமகனைப் பார்த்த மாத்திரத்தில் அறிவழகனும், மஞ்சுளாவும் மகிழ்ந்து போனார்கள். அவர்களோடு கொஞ்சம் நேரம் செலவழித்தவன், கண்களால் கீதாஞ்சலியைத் தேடினான்.
“மேல ரூம்ல தான் இருக்கா மாப்பிள்ளை.” இவன் தேடலைப் புரிந்து கொண்ட மாமனார், அவராகவே தகவல் சொன்னார்.
“ஓ…! தாங்க்ஸ் மாமா.” சொல்லியபடியே மாடி ஏறப் போனவனைத் தடுத்தது, அறிவழகனின் தயங்கிய குரல்.
“மாப்பிள்ளை… ஏதாவது பிரச்சனையா?” அவர் கேள்வியில் அபியின் நெற்றி சுருங்கியது.
“பிரச்சினையா? என்ன பிரச்சினை மாமா?”
“ஓ…! நான் தான் தப்பா புரிஞ்சுக்கிட்டேனா? கீதா திடீர்னு நீங்களும் இல்லாம தனியா வந்ததும், மனசு கொஞ்சம் பதறிடுச்சு மாப்பிள்ளை. நீங்க தப்பா எடுத்துக்காதீங்க.” சங்கடப்பட்ட படி சொன்னவரைப் பார்த்து, வாஞ்சையாகப் புன்னகைத்தான் அபி.
“நோ ப்ராப்ளம் மாமா.” சொல்லிய படியே கட கடவென மேலே வந்தான் அபிமன்யு. இந்த வீட்டிற்கு, விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் அபி வந்திருக்கிறான். அதிகம் வர முடியாத படி, இடையில் ஆக்ஸிடென்ட்டும் நிகழ்ந்து போனது.
லைட் போடாமல், மெல்லிய நிலவொளியில், ஓவியம் போல பால்கனித் தூணில் சாய்ந்து நின்றிருந்த மனைவியை, ஒரு கணம் ஆழ்ந்து பார்த்தான். ஒரு பெருமூச்சு தானாகக் கிளம்பியது. ஏதோ விரும்பத் தகாத நிகழ்வொன்று தன்னைத் தாக்கப் போவதாக, மனக்குறளி ஓலமிட்டது.
எதுவும் பேசாமல், மனைவியைப் பின்னோடு அணைத்துக் கொண்டான்.
“என்னாச்சு அம்மாடி? இங்க வர்றதை எங்கிட்ட சொல்லவும் இல்லை, ஃபோன் வேற ஆஃப் ல இருக்கு. என்னாச்சுடா?” சுமுகமாகவே கேட்ட கணவனுக்கு, அப்போதும் பதில் சொல்லவில்லை கீதாஞ்சலி.
அவன் வருகையை அவள் அறிந்து தான் இருந்தாள். கார் வந்து நின்ற போதே அவளுக்குப் புரிந்தது. இன்னும் கொஞ்ச நேரத்தில், அவன் மேலே தன்னைத் தேடிக் கொண்டு வருவான் என்று. ஆனால் பதில் சொல்லத் தோன்றவில்லை. அவள் மௌனத்தில் கலவரப்பட்டவன், அவளைத் தன் புறமாகத் திருப்பினான்.
“என்னாச்சுடா?”
“என்னாச்சு அபி?”
“புரியலை.”
“இன்னைக்கு ராஜேந்திரனோட ரைஸ் மில்லுல என்ன ஆச்சு அபி?” அந்தக் கேள்வியில், அபி அவளைக் கூர்மையாகப் பார்த்தான்.
“அதுக்கும், நீ இங்க வந்து நிக்கிறதுக்கும் என்ன சம்பந்தம் அம்மாடி?”
“நான் கேட்ட கேள்விக்கு நீங்க இன்னும் பதில் சொல்லலை அபி.”
“இதை ஃபாக்டரியில வச்சுக் கேட்டிருக்கலாமே? எதுக்கு வீடு வரைக்கும் கொண்டு வந்திருக்க?”
“எம் புருஷன் கிட்ட, நான் பேசுறதுக்கு, இடம், பொருள், ஏவல், விலக்கல் எல்லாம் பாக்கணுமா அபி?” அவள் வியாக்கியானத்தில், அபி கொஞ்ச நேரம் எதுவும் பேசவில்லை. ஆழ்ந்து அவள் கண்களைப் பார்த்தான்.
பிடிவாதமாகத் தன் முன் நிற்கும் மனைவி அவனுக்குப் புதிதாகத் தெரிந்தாள். தான் தொட்டால் குழைந்து போகும் கீதாஞ்சலி இவள் அல்ல. பதில் கிடைக்காமல் இவள் ஓய மாட்டாள், என்று நன்கு புரிந்தது. அந்தக் கண்களைப் பார்த்துக் கொண்டு பொய் சொல்லும் சக்தி, அபிக்கும் இருக்கவில்லை.
“உனக்கு என்ன தெரியணும் அம்மாடி?”
“அந்தப் பொண்ணு வந்து போனதுக்கு அப்புறம், ரொம்ப அமைதியா இருந்தீங்க அபி. ஆனா, அது அமைதி இல்லை. நீங்க பாயுறதுக்காகப் பதுங்கி இருந்திருக்கீங்க.”
“ஆமா… முழுசா ரெண்டு வாரம். ராஜேந்திரன் ஜாதகமே என் கைக்கு வந்திச்சு.”
“அந்த ராஜேந்திரன், இப்போ ‘ஐ சி யு‘ ல உயிருக்குப் போராடிக்கிட்டு இருக்காரே… அது தெரியுமா உங்களுக்கு?”
“அந்த ஸ்டேஜ் தாண்டியாச்சு. சிவியர் அட்டாக். வலது பக்கம் இனி இயங்குறது கஷ்டம்னு, டாக்டர்ஸ் சொல்லிட்டாங்க.”
“ஸோ… உங்களுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கு?”
“இதே மாதிரி, இதே ‘ஐ சி யு‘ ல, நானும் உயிருக்குப் போராடிக்கிட்டு இருந்தேனே… அது மறந்து போச்சா அம்மாடி?”
“மறக்கலை அபி. அது மறக்காததால தான், உங்களை கேள்வி கேக்குறேன்.”
“அன்னைக்கு உனக்கும் இதே மாதிரி கோபம் வந்துச்சு அம்மாடி. அவங்களை சும்மா விடமாட்டேன்னு கதிர் கிட்ட நீ சத்தம் போடலை?”
“போட்டேன்… இல்லேங்கலையே. அந்த நேரத்துக்கு அப்பிடி சத்தம் போடலைன்னா, நான் உங்க பொண்டாட்டின்னு சொல்லுறதுல, அர்த்தமே இல்லையே அபி.”
“அப்போ… இப்போ மட்டும் எதுக்கு இந்த குறுக்கு விசாரணை அம்மாடி?”
“நாம எல்லாரும் மனுஷங்க அபி. காட்டு வாசிங்க கிடையாது. ராஜேந்திரனைப் போல தான் நீங்களும் நடந்துக்கப் போறீங்களா? எம் புருஷனும் ஒரு சராசரி பிஸினஸ் மேன் தானா?”
“ஆமா…! நான் சராசரி பிஸினஸ் மேன் தான். மகாத்மா கிடையாது.” சத்தமாகக் குரலை உயர்த்திப் பேசிய கணவனை முறைத்துப் பார்த்தவள், ரூமிற்குள் போய்விட்டாள்.
“அஞ்சலி…!” அபியின் குரலில் கொஞ்சம் ரௌத்திரம் இருந்தது. ‘அம்மாடி‘, ‘அஞ்சலி‘ ஆனதை மனதிற்குள் குறித்துக் கொண்டவள், அவனும் உள்ளே வந்ததும் ரூம் கதவைப் பூட்டினாள்.
“எதுக்கு இப்போ சத்தம் போடுறீங்க? நம்ம ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கிறோம்னு, வீட்டுல உள்ள அத்தனை பேருக்கும் காட்டவா?”
“தப்புத் தப்பாவே பேசிக்கிட்டு இருக்கே அஞ்சலி. நீ சப்போர்ட் பண்ணுற அளவுக்கு, அந்த ராஜேந்திரன் வெர்த் கிடையாது. பண்ணி இருக்கிறது அத்தனையும் அயோக்கியத்தனம்.”
“நானும் இல்லேங்கலையே… இத்தனை நாளும் அவர் பண்ணின அயோக்கியத்தனத்தை எல்லாரும் வேடிக்கை தானே பாத்துக்கிட்டு இருந்தீங்க. இப்போ மட்டும் என்ன, திடீர்னு சமூக அக்கறை?”
அபி கைகள் இரண்டையும் மார்புக்குக் குறுக்கே கட்டிக் கொண்டு, சுவரில் சாய்ந்தபடி மனைவியையே பார்த்திருந்தான். தன் பிடிவாதத்தில் உறுதியாக நிற்பவளை, அத்தனை சுலபத்தில் சமாதானம் பண்ண முடியும், என்று அவனுக்குத் தோன்றவில்லை. அவளே பேசி முடிக்கட்டும் என்று அமைதியாகக் காத்திருந்தான்.
“சரி… அப்பிடியே இருந்திருந்தாலும், உங்க கையிலதான் ஆதாரம் இருந்துதே. அதை வெச்சு அவரை ப்ளாக் மெயில் பண்ணி இருக்கலாமே. எல்லாத்தையும் நிறுத்தலைன்னா, நான் மேலிடத்துக்குப் போவேன்னு பயம் காட்டி இருக்கலாமே. அதை விட்டுட்டு… மில்லுக்கு சீல் வச்சு, அந்த மனுஷனை அரெஸ்ட் பண்ணி… எதுக்கு அபி?”
“இது தான் ‘நான்‘ கீதாஞ்சலி… இது தான் அபி… அபிமன்யு. அப்பனும், மகனும் ரொம்பவே அடாவடித்தனம் பண்ணி இருக்காங்க. ஒதுங்கித்தான் போனேன். அடி மடியிலேயே கைய வச்சிட்டாங்க. இனியும் பாத்துக்கிட்டு சும்மா இருந்தா, நான் வளையல் தான் மாட்டிக்கணும்.”
“ஓ…! உங்க முடிவு இது தானா அபி?” திருமணத்திற்குப் பிறகு அவளை, அவன் ‘கீதாஞ்சலி‘ என்று அழைத்தது மிகவும் அரிது. அதை இப்போது கேட்கவும், கீதாஞ்சலிக்கு என்னமோ பண்ணியது. அவரவர் பிடியில் இருவரும் உனக்கு நான் சளைத்தவன் இல்லை என்று நின்றிருந்தார்கள்.
“பரவாயில்லை அபி. உங்க பழி வெறியை நீங்க நல்லா உரம் போட்டு வளருங்க. நான் தடுக்கலை. ஆனா… இந்த அபி… இந்தக் கொடூரமான அபி… எனக்கும் வேணாம்… என் குழந்தைக்கும் வேணாம்.” அந்த வார்த்தைகளில், அபியின் இமைகள், இமைக்க மறந்தன.