மயங்காதே மனமே 29
ஒட்டுமொத்த குடும்பமும், ஹாஸ்பிடலில் கூடி இருந்தது. ராஜேந்திரனை ஸ்பெஷல் வார்டுக்கு மாற்றி இருந்தார்கள். மாஸிவ் அட்டாக், ஆனாலும் மனிதர் பிழைத்திருந்தார்.
போலீசால் கைது செய்யப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே, நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சரிந்தவர் தான். பெரிய புள்ளி என்பதால், உடனேயே ஹாஸ்பிடலில் சேர்த்திருந்தார்கள். வீட்டிற்கும் தகவல் பறக்க, சிகிச்சை சரியான நேரத்திற்கு ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
எல்லோர் முகத்திலும் ஒரு கலவரம் சூழ்ந்திருந்தது. ராஜேந்திரன் பிழைத்துக் கொண்டதை நினைத்து மகிழ்வதா? இல்லை, அவரை இந்த நிலைக்குத் தள்ளியிருக்கும், மில்லை நினைத்து வேதனைப்படுவதா? ஒன்றுமே யாருக்கும் புரியவில்லை. இது போதாததற்கு, போலீஸ் வேறு அடிக்கடி வந்து இம்சை பண்ணிக் கொண்டிருந்தார்கள்.
மதுராந்தகனும், ஜெயந்தியும் நொறுங்கிப் போய் அமர்ந்திருந்தார்கள். சுலோச்சனா கொஞ்சம் வருத்தப்பட்டாலும், ‘அதுதான் ஆபத்தான நிலையைத் தாண்டி விட்டாரே? அடுத்த வேலையைப் பார்க்கலாம்‘ என்று எண்ண ஆரம்பித்திருந்தார்.
அத்தோடு, கொள்ளை லாபம் ஈட்டித் தந்த தொழிலை, எப்படி மீளமைத்துக் கொள்வது என்றுதான் அவர் சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது. சுலோச்சனாவின் தந்தை அரசியல் செல்வாக்கு உள்ளவர். அவரை வைத்துக் காய் நகர்த்த திட்டம் தீட்டிக் கொண்டிருந்தார்.
“அத்தை… நான் வீட்டுக்கு கொஞ்சம் போய்ட்டு வர்றேன்.” சுலோச்சனா சொல்லவும், ஜெயந்தி ஆச்சரியமாகப் பார்த்தார்.
“ராஜேந்திரன் இன்னும் கண்ணு முழிக்கல்லையேம்மா…?” சங்கடப்பட்டுக் கொண்டே கேட்டார்.
“அதான் நீங்க எல்லாரும் இருக்கீங்கல்ல… அது போதும்.” சொல்லிவிட்டு, உடனே கிளம்பிப் போய்விட்டார். மதுராந்தகனும், ஜெயந்தியும் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்துக் கொண்டனர்.
மித்ரன், அனைத்தையும் ஒரு பார்வையாளரைப் போல பார்த்துக் கொண்டிருந்தான். பழைய மித்ரனாக இருந்திருந்தால், அம்மாவின் இந்த நடவடிக்கை அத்தனை தூரம் அவனைப் பாதித்திருக்காது. ஆனால், தாமரையோடு ஒரு முழுமையான, நிறைவான வாழ்க்கை வாழ்பவனுக்கு, அப்பா இதுவரை என்னவெல்லாம் இழந்திருக்கிறார் என்று, இப்போது தெளிவாகப் புரிந்தது.
தாமரை, பொறுப்புக்கள் அனைத்தையும் தனதாக்கி இருந்தாள். காலையிலிருந்து அத்தனை பேரும் ஹாஸ்பிடலில் தான் இருக்கிறார்கள். வேளா வேளைக்கு எல்லோருடைய வயிறும் வாடாமல் பார்த்துக் கொண்டாள். தாத்தாவும், பாட்டியும் பத்தியச் சாப்பாடு என்பதால், வீட்டிலிருந்தே உணவு கொண்டு வந்தாள்.
முதலில் தயங்கிய பெரியவர்களைக் கட்டாயப்படுத்தி உண்ண வைத்தாள். கதிரும் அத்தனைக்கும் கூட நின்றான். வேற்றுமை காட்டாமல் பழகிய அந்த அண்ணன், தங்கையை எஞ்சிய மூன்று பேரும் ஒரு வியப்போடே பார்த்திருந்தார்கள்.
“யாரு கதிர்?” மித்ரனின் கேள்வியில் லேசாக நெளிந்தான் கதிர்.
“சார்… அது… வந்து…”
“பரவாயில்லை சொல்லு… அபியா?” கதிருக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. மீண்டும் முருங்கை மரம் ஏறி விடுவானோ, என்று பயமாக வேறு இருந்தது.
“விசாரிச்ச வரைக்கும்… அப்பிடித்தான் சார்… தெரியுது.”
“ம்… அப்பாவை எதிர்க்கிற தைரியம், அவனைத் தவிர வேற யாருக்கும் வராது.” என்றுமில்லாத நிதானத்துடன் பேசிய தன் முதலாளியை, விசித்திரமாகப் பார்த்தான் கதிர்.
“சார்…!”
“அபி விஷயத்துல, அப்பா மேல நிறைய தப்பு இருக்கு கதிர். அவனாக இருக்கப் போக இதோட விட்டான். நானா இருந்திருந்தா நடக்கிறதே வேற.”
ஆச்சரியப்பட்டுப் போனான் கதிர். பேசுவது மித்ரன் தானா, என்று அவனால் நம்பவே முடியவில்லை. இத்தனை காலமும் ஒரு வேகத்தோடும், அலட்சியத்தோடும் வாழ்ந்த மித்ரன் தானா இவன்?
ஆழ்ந்த பெருமூச்சு ஒன்று மட்டுமே, கதிரிடமிருந்து பதிலாக வந்தது. அபி விஷயத்தில் மட்டுமில்லை, எல்லா விஷயத்திலும் உன் அப்பா மேல் நிறையத் தவறு இருக்கின்றது, என்று சொல்லவா முடியும்? மௌனித்திருந்தான்.
ராஜேந்திரனுக்கு அப்போதுதான் லேசாக விழிப்பு வந்திருந்தது. நர்ஸ் வந்து விஷயத்தைச் சொல்லவும், அண்ணன், தங்கையைத் தவிர அத்தனை பேரும் உள்ளே போனார்கள். குடும்பத்தில் ஒருத்தி என்றாலும், ராஜேந்திரன் விஷயத்தில் தாமரைக்கு இன்னும் ஒரு ஒட்டுதல் வரவில்லை.
நேரம் இரவு எட்டை நெருங்கிக் கொண்டிருந்தது. மகனை முழுதாகப் பார்த்த சந்தோஷத்தில் தாத்தா, பாட்டி இருவருமே மகிழ்ந்து போயிருந்தார்கள்.
“அம்மா தாமரை… ராஜேந்திரன் எங்கிட்ட பேசினான்மா. எம்பையன் எங்கிட்ட பேசினான்மா.” உணர்ச்சி மிகுதியில், கண்கள் கலங்க, தன்னிடம் குழந்தை போலப் பேசிய ஜெயந்தியை தோளோடு அணைத்துக் கொண்டாள் தாமரை.
“கன்ட்ரோல் பண்ணிக்கோங்க பாட்டி. எல்லாம் சரியாகிடும். நீங்க இப்பிடி உணர்ச்சி வசப்பட்டா, உங்களுக்கு ஏதாவது ஆகிடப் போகுது.” தன் பாட்டியை சமாதானப் படுத்தும் மனைவியை, வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தான் மித்ரன். மனம் நெகிழ்ந்தது.
“அத்தான்.”
“என்ன பேபி?” தங்கள் தனிமையில் மட்டுமே அப்படி அழைப்பவன், இன்று அத்தனை பேருக்கும் நடுவில் ‘பேபி‘ என்றவுடன், தாமரைக்குத் தூக்கிவாரிப்போட்டது. ஆனால், அதை மித்ரன் உணரவில்லை. சமாளித்துக் கொண்டவள்,
“தாத்தாவும், பாட்டியும் ரொம்ப டயர்டா தெரியுறாங்க. அவங்களை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகலாம்.”
“சரிடா.” மனைவிக்குப் பதில் சொன்னவன், பாட்டியிடம் திரும்பினான். கதிர் நடப்பது அனைத்தையும், ஒரு குறு குறுப்போடு பார்த்தபடி இருந்தான்.
“எந்திரிங்க பாட்டி… வீட்டுக்குப் போகலாம். அதான் அப்பா கூட பேசிட்டீங்க இல்லை. இனி நான் பாத்துக்கிறேன். நீங்க கிளம்புங்க.” மிகவும் பிரயத்தனப்பட்டு முதியவர்கள் இருவரையும் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போனார்கள்.
தாமரைக்குக் கணவனின் பார்வையில், செய்கைகளில் ஏதோ ஒரு மாற்றம் தெரிந்தது. தன்னையே வருடியபடி இருக்கும், அவனின் ஒவ்வொரு செய்கைகளிலும் கொஞ்சம் கவரப்பட்டிருந்தவள், கஷ்டப்பட்டு கவனத்தைத் திருப்பினாள். வேலைகள் அவளை இழுத்துக் கொண்டன.
~ ~ ~ ~ ~ ~ ~
மனைவியின் வார்த்தைகள் புரிய கொஞ்ச நேரம் பிடித்தது அபிக்கு. வார்த்தைகள் புரிந்தாலும், அதன் ஆழம் அவனுக்கு சட்டென்று பிடிபடவில்லை.
“அஞ்சலி…! நீ… நீ… என்ன சொல்லுற?” ஆனால், அந்த மெல்லிடையாள் உறுதியாக இருந்தாள்.
“மனசுல இவ்வளவு வன்மம் வச்சிருக்கிற அபி எனக்கும், என் குழந்தைக்கும் வேணாம்னு சொன்னேன்.”
“ஹேய்… அப்பிடின்னா… அப்பிடின்னா…?” அதற்கு மேல் அவனுக்கு வார்த்தைகள் வசப்பட மறுத்தன. ஓரெட்டில் அவளை நெருங்க முயன்றவனைக் கை நீட்டித் தடுத்தாள் மனைவி.
“வேணாம் அபி. எம் பக்கத்துல வராதீங்க.”
“அம்மாடி…! என்ன பேசுற நீ?”
“வேணாம்னா… வேணாம்தான்.”
“இங்க என்னடா நடக்குது? ஒன்னுமே ஒழுங்கா சொல்லாம, எதுக்கு என்னை இப்பிடிக் கொல்லுற அஞ்சலி?”
“சந்தேகமா இருந்துது. இன்னைக்குத்தான் செக் பண்ணிப் பாத்தேன். பாசிட்டிவ் காட்டிச்சு.” மனைவியின் பதிலில் கண்கள் கலங்க, இமைக்க மறந்து நின்றிருந்தான் அபிமன்யு.
பெண்கள் பலவீனமானவர்கள் என்று யார் சொன்னது? ஆண்கள் கலங்கும் சமயங்களையும், அசால்ட்டாகச் சமாளிக்கும் திறமை பெண்களுக்கு உண்டு.
“அம்மாடி…!”
“என்னோட சந்தோஷத்தைப் பங்கு போட்டுக்க முடியாம, எம் புருஷன், கறை படிஞ்ச கையோட நிக்குறாரே அபி… இது நியாயமா?”
“அஞ்சலி… நீ மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போட நினைக்குற. அது வேற… இது வேறடா… எதுக்கு பிஸினஸையும், வாழ்க்கையையும் போட்டுக் குழப்பிக்கிற?”
“ஏன்னா… அந்த ரெண்டு இடத்திலேயும் இருக்கிறது, என்னோட அபி.”
“அம்மாடி… சொல்லுறதைப் புரிஞ்சுக்கோ. அந்த விஷயத்தை, நம்ம லைஃபுக்குள்ள கொண்டு வராத. அதை எங்கிட்ட விட்டுரு. இந்த நிமிஷத்தை நாம அனுபவிக்கணும்டா.”
“புருஷன் எப்பிடி வேணாப் போகட்டும்… அவன் கொண்டு வர்ற வைர நெக்லஸ் மட்டும் எனக்குப் போதும்னு நினைக்குற பொண்டாட்டி நான் இல்லை அபி. இந்தக் கணத்தை நாம கொண்டாடுறதும், கொண்டாடாமப் போறதும் உங்க கைல இருக்கு.”
“அம்மாடி…!” ஓய்ந்து போய் நின்றவனை, ஓயாமல் பார்த்தாள் மனைவி.
“நீங்க கேட்டதை நான் குடுத்துட்டேன் அபி.” ஒரு கேவலுடன் சொன்னவள், அதற்கு மேலும் விவாதிக்காமல், அவனுக்கு முதுகு காட்டிப் படுத்துக் கொண்டாள். உடல் கொஞ்சம் சோர்வாக இருந்தது.
அன்று காலையில் இருந்தே, லேசாகத் தலை சுற்றல் இருந்தது கீதாஞ்சலிக்கு. நாராயணன் மில்லுக்கு அழைத்திருந்ததனால், யோசிக்க நேரமில்லாமல் கிளம்பிப் போய் விட்டாள்.
ஆனால், அங்கிருக்கும் போதும் கொஞ்சம் கஷ்டமாக இருக்கவும், லேசாக சந்தேகம் வந்தது. தன் டாக்டர் ஃப்ரெண்டிற்கு ஃபோனைப் போட்டு, விபரங்கள் கேட்டுக் கொண்டாள்.
இப்போதுதான் எல்லாவற்றிற்கும் இலகு வழிகள் ஏராளம் உள்ளதே. ஒரு மணித்தியாலத்திற்குள் அவளது சந்தேகம், ஊர்ஜிதப் படுத்தப்பட்டது. மகிழ்ந்து போனாள். அவள் சந்தோஷத்தை அபியோடு பகிர முன்னமே, முகத்தில் வந்து மோதியது அந்த செய்தி. மிரண்டு போனாள் கீதாஞ்சலி.
நம்பவே முடியவில்லை. என் அபியா? அதுவும், இத்தனை பக்காவாகத் திட்டம் போட்டு…? மீண்டும் நினைக்க நினைக்க, தலை திரும்பவும் லேசாகச் சுற்றியது. மாமனாரிடம் சொல்லி விட்டுக் கிளம்பி விட்டாள். அவரும் கொஞ்சம் இறுகினாற் போலத்தான் தெரிந்தது. ஆனால், அதைக் கவனிக்கும் நிலையில் கீதாஞ்சலி இருக்கவில்லை.
தனக்கு முதுகு காட்டிக்கொண்டு உறங்கும் மனைவியைக் கொஞ்ச நேரம் அப்படியே பார்த்திருந்தான் அபி. பிஸினஸில் ஆயிரம் பிரச்சினைகளை சுலபமாகத் தீர்த்தவனுக்கு, மனைவியை தன் வழிக்குக் கொண்டு வர முடியவில்லை. மனதில் கொலு வீற்றிருந்த பகையுணர்வு, அவனைத் தன் நிலையில் இருந்து இறங்கவும் அனுமதிக்கவில்லை.
கலெக்டர் வரை போய், இலகுவாகத் தமிழ்ச்செல்வனையும், இளமாறனையும் சமாளித்தவனை, தலையால் தண்ணீர் குடிக்க வைத்தாள் அந்தச் சின்னப் பெண். அவளுக்கு அந்தப் புறமாகப் போய், அவனும் கட்டிலில் படுத்துக் கொண்டான்.
கீதாஞ்சலி இன்னும் உறங்கியிருக்கவில்லை. கணவன் தன் தலையை லேசாக நீவிக் கொடுக்கவும், அவள் கண்களில் இருந்து தானாகக் கண்ணீர் வழிந்தது. அவன் ஸ்பரிசத்திற்காக மனது ஏங்கினாலும், அசையாமல் படுத்திருந்தாள். எப்போது இருவரும் உறங்கினார்கள் என்று, அவர்கள் இருவருக்குமே தெரியாது.
~ ~ ~ ~ ~ ~ ~ ~
வீட்டில் ஒரு அசாத்திய அமைதி நிலவியது. தாத்தா, பாட்டியோடு தாமரை வீடு வந்த கொஞ்ச நேரத்திற்கெல்லாம், மித்ரனும் வந்து விட்டான். ராஜேந்திரனோடு யாரும் தங்க, ஹாஸ்பிடலில் அனுமதிக்கவில்லை. போலீஸ் கஸ்டடியில் இருக்கும் போது அட்டாக் வந்தது கூட, அதற்கு ஒரு காரணமாக இருந்தது.
அமைதியாக அமர்ந்த படி, மனைவியின் மேல் ஒரு கண் வைத்திருந்தான் மித்ரன். அவள் இந்த வீட்டின் மீது எடுக்கும் அக்கறை, தாத்தா, பாட்டியைக் கவனித்துக் கொள்ளும் பாங்கு என, அனைத்தும் அவள் மீது பித்தம் கொள்ள வைத்தது.
“அத்தான், சாப்பிட வாங்க.” டைனிங் டேபிளில் எதையோ வைத்த படி, இவனை அழைத்துக் கொண்டிருந்தாள்.
“பாட்டி, கண்டதையும் யோசிச்சு மனசைப் போட்டுக் குழப்பிக்காம நிம்மதியாப் போய்த் தூங்குங்க.” மதுராந்தகனும் ஏதேதோ சிந்தனையில் இருந்தவர், மனைவியை அழைத்துக் கொண்டு ரூமிற்குள் போய் விட்டார். மனதளவிலும், உடலளவிலும் அவர்கள் ஓய்ந்து போயிருப்பதை, அவர்கள் நடையே காட்டிக் கொடுத்தது.
“அத்தான்…!”
“ம்…” மனைவியின் அழைப்பில் நிஜத்துக்கு வந்தான் மித்ரன்.
“என்ன யோசனை? சாப்பிட வாங்க.” அழுத்திச் சொல்லவும், எழுந்து போனவன்,
“நீயும் உக்காரு தாமரை, சேந்து சாப்பிடலாம்.” என்றான். அவன் பக்கத்தில் சட்டென்று உட்கார்ந்தாள் மனைவி. அந்த ஓய்வு அவளுக்கும் தேவையாக இருந்தது. பார்த்துப் பார்த்து பரிமாறும் அவள் கரிசனத்தில், அவனுக்குள் ஏதேதோ மாற்றங்கள் நிகழ்ந்தன. ஏதோ ஒரு இதம் மனதுக்குள் பரவியது. அந்தப் பெண், அவனை கொஞ்சம் கொஞ்சமாக வசியம் பண்ணிக் கொண்டிருந்தாள்.
“எனக்குத் தேவையானதை நான் போட்டுக்குவேன். நீ முதல்ல சாப்பிடு பேபி.” சொல்லிவிட்டு, மட மடவென்று சாப்பிட்டு முடித்தவன், மாடிக்குப் போய் விட்டான். எல்லாவற்றையும் க்ளீன் பண்ணிவிட்டு, மேலே போனாள் தாமரை. அம்மா வீட்டுக்குப் போன சுலோச்சனா வீட்டிற்கு வரவில்லை. அங்கேயே தங்கி விட்டார்.
ரூம் கதவைத் திறந்தாள் பெண். மித்ரன், அந்த ஆளுயர ஃப்ரெஞ்ச் வின்டோவிற்குப் பக்கத்தில் நின்றபடி, தொலை வானை வெறித்திருந்தான். இவள் அவன் அருகில் போகவும்,
“பேபி… நீ இன்னைக்கு உன்னோட ரூம்ல தூங்குடா. எனக்கு… கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு. உனக்கு டிஸ்டர்பா இருக்கும்.”
“சரி அத்தான்.” சொன்னவள், கைக்கு அகப்பட்ட ஒரு நைட்டியோடு பாத்ரூமிற்குள் புகுந்து கொண்டாள். கணவனிடம் ஏதோ ஒரு வித்தியாசம் தெரிந்தது தாமரைக்கு. யோசனையோடே குளியலை முடித்தவள், தூங்கு முன் அவன் ரூமை எட்டிப் பார்த்தாள்.
தான் முன்பு பார்த்த அதே நிலையிலேயே, அப்படியே நின்றிருந்தான். அந்தக் கண்கள் இப்போதும், சூனியத்தை வெறித்தபடியே இருந்தன. வேலை இருப்பதாகச் சொன்னவன், என்ன இந்தக் கோலத்தில் நிற்கிறான்? குழப்பம் மேலிட, அவனருகில் போனாள்.
“அத்தான்… என்ன ஆச்சு?” அவள் குரலில் திரும்பிப் பார்த்தவனின் கண்கள், லேசாகக் கலங்கி இருந்தன.
“அத்தான்…!”
“பேபி… நீ என்னோட லைஃப்ல வரலைன்னா… நான் என்ன ஆகியிருப்பேன்?” அந்தக் கேள்வியில் தாமரை ஆச்சரியப் பட்டுப்போனாள்.
“நான் இல்லைன்னா என்ன அத்தான்? வேற யாரையாவது கல்யாணம் பண்ணி, நீங்க சந்தோஷமாத்தான் இருந்திருப்பீங்க.” சொல்லி முடிக்கும் போது, அவன் அணைப்பில் இருந்தாள் தாமரை.
“இல்லை… இல்லை பேபி… நீ இல்லைன்னா… இன்னைக்கு எங்கப்பாவோட நிலைமைதான்… நாளைக்கு எனக்கும்.” அவன் சொன்னதைக் கேட்டு அவளுக்குச் சிரிப்பு வந்தது. இன்றைய அவனின் பார்வைகளுக்கும், நெகிழ்விற்கும் காரணம் புரிந்தது.
அவன் ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டு இருப்பது தாமரைக்குப் புரிந்தது. வேண்டுமென்றே அவனைச் சீண்டிப் பார்த்தாள்.
“ஓ…! அதான் ஐயா என்னை அந்த ரூமுக்குப் போகச் சொன்னீங்களா? ஏதோ முக்கியமான வேலை இருக்குன்னீங்க? என்ன வேலை அத்தான்?” சொல்லியபடி, கல கலவென்று சிரித்தாள் மனைவி.
“வேணாம் பேபி… போயிரு… அதுக்கப்புறம் சேதாரத்துக்கு நான் பொறுப்பில்லை.” வாய் சொன்னாலும், அவன் கண்கள் மின்னின.
“ஐயையோ…! நீங்க சொன்னதைக் கேட்டு நான் நிறையவே பயந்துட்டேன். ஓ கேயா அத்தான்.” அவள் மேலும் மேலும் கேலி பண்ணவும், அவன் வேறாகிப் போனான். இப்படி ஒரு மித்ரனை, இன்று தாமரை எதிர்பார்க்கவில்லை. அவன் வேகத்தில் சுருண்டு போனாள். அவன் ஒட்டுமொத்த உலகமும் அவள்தான் என்று, அன்றைக்கு நிரூபித்தான் மித்ரன்.
~ ~ ~ ~ ~ ~ ~ ~
காலையில் அபி எழுந்த போது, கீதாஞ்சலி அருகில் இல்லை. ஒரு சலிப்போடு எழுந்தவனை, கீழே கேட்ட கலகலப்பான குரல்கள் ஈர்த்தன. காலைக் கடன்களை முடித்தவன், கீழே போனான்.
“வாடா பயலே…!” தாத்தாவின் குரலை இத்தனை மகிழ்ச்சியாக இதுவரை அபி கேட்டதில்லை. ஈஷ்வரன் எழுந்து வந்து அபியை அணைத்துக் கொண்டார். ஒட்டுமொத்த குடும்பமும் கீதாஞ்சலி வீட்டில் கூடியிருந்தது.
“கன்கிராட்ஸ் மச்சான். இப்போதான் மெஸேஜ் கிடைச்சுது. உடனே கிளம்பி வந்துட்டோம். ரொம்பவே ஹாப்பியா இருக்கு.” மனமார வாழ்த்திய ஈஷ்வரனை, அபியும் அணைத்துக் கொண்டான்.
“நேத்தே ஏண்ணா சொல்லலை? சொல்லியிருந்தா வந்திருப்போம்ல.” ரஞ்சனி குறை பட்டுக்கொண்டாள். எல்லோரும் கலகலப்பாகப் பேசிக்கொண்டிருக்க, அபியின் விழிகள் கீதாஞ்சலியைத் தேடியது.
சோஃபாவில் அமர்ந்திருந்த சீமாவின் தோளில் சாய்ந்திருந்தாள். முகம் வாடிப்போய் இருந்தது. அம்மா கை நீட்டி அழைக்கவும், அவருக்கு அடுத்த பக்கமாகப் போய் அமர்ந்து கொண்டான். எதிரே இருந்த சோஃபாவில், நாராயணனும், அறிவழகனும் அமர்ந்திருந்தார்கள். சூழ்நிலை அத்தனை சந்தோஷமாக இருந்தது. காஃபியை கொண்டு வந்து மஞ்சுளா நீட்டவும், ஒரு புன்னகையோடு வாங்கிக் கொண்டான்.
“அஞ்சலி ஓகே யாம்மா? ஏன் டயர்டா இருக்கா?”
“அது ஒன்னுமில்லை அபி. காலையிலேயே ஒரு தரம் வாமிட் பண்ணிட்டா. அதான் கொஞ்சம் சோர்வா தெரியுறா.” அம்மாவின் பதிலில், அவனுக்கு என்னவோ செய்தது. தன்னிடம் ஒரு வார்த்தை கூடப் பேசாமல், ஒதுங்கி நிற்பவளை என்ன சொல்லி சமாதானம் பண்ணுவது என்றும் புரியவில்லை.
அன்றைக்கு எல்லோரும், கீதாஞ்சலி வீட்டிலேயே டேரா போட்டுவிட்டார்கள். காலை உணவை முடித்திருக்க, தடபுடலாக மதியத்துக்குப் பெரிய விருந்தே தயாராகிக் கொண்டிருந்தது. குடும்பமே குதூகலித்திருக்க… குதூகலப்பட வேண்டியவர்கள், ஆளுக்கொரு திக்கில் நின்றிருந்தார்கள்.
சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம், அபி தொடுத்த அத்தனை பார்வைப் பரிமாற்றங்களையும், தவிர்த்தாள் கீதாஞ்சலி. ஒரு கட்டத்திற்கு மேல், அபி சலித்துப் போனான்.
“அபி…!” நாராயணனின் அழைப்பில் திரும்பிப் பார்த்தவன்,
“அப்பா…” என்றான்.
“கொஞ்சம் எங்கூட வா.” சொன்னவர், சட்டென்று வெளியே போனார். அப்பாவைத் தொடர்ந்தான் அபி.
“சொல்லுங்கப்பா.”
“உனக்கும், கீதாக்கும் என்ன பிரச்சினை?” அப்பாவிடமிருந்து இப்படியொரு கேள்வியை அபி எதிர்பார்க்கவில்லை. திணறிப் போனான்.
“அதெல்லாம்… ஒன்னுமில்லைப்பா.”
“அபி… உன்னோட வயசைக் கடந்து தான் நான் வந்திருக்கேன். ரெண்டு குழந்தைகளுக்கு அப்பா நான். இப்போ உன்னோட முகத்துல இருக்க வேண்டிய சந்தோஷம் மிஸ்ஸிங். சொல்லக் கூடியதா இருந்தா, தாராளமா நீ அப்பாக்கிட்ட ஷெயார் பண்ணிக்கலாம்.”
“அப்பா… அது… வந்து…”
“சொல்லுப்பா…”
“ராஜேந்திரன்.”
“நினைச்சேன்…! ரெண்டு மில்லை நான் வாங்கினதுக்கே, இது சரியா மாமான்னு, என்னையே கேள்வி கேட்ட பொண்ணு அது. நீ இவ்வளவு பெரிய காரியம் பண்ணினா, நிச்சயமா அதை ஏத்துக்க மாட்டாதான்.”
“நான் என்னப்பா தப்பு பண்ணிட்டேன்? அவனைக் கொல்ல நினைச்சேனா? இல்லையே… அதுக்கு ஏம்பா இவ என்னை இந்தப்பாடு படுத்துறா?”
“அபி… பொண்ணுங்க மனசு அப்பிடித்தாம்பா. எல்லாருக்கும் கருணை காட்டுற மனசு. அதுவும், இப்போ கீதா இருக்கிற நிலைமையில, அந்த எண்ணம் இன்னும் அதிகமா இருக்கும்பா. விட்டுக் குடுத்திரு. யார் வீட்டு சாபமும் நமக்கு வேணாம் அபி. கடவுள் கிட்ட பாரத்தைப் போட்டுட்டு, நீ சந்தோஷமா இருப்பா. பிடிவாதம் பிடிக்காத.” தலையைத் தடவிக் கொடுத்த படி, மகனுக்குப் புத்திமதி சொன்ன நாராயணன், உள்ளே போய்விட்டார்.
அபி உள்ளே போனபோது, கீதாஞ்சலியைக் காணவில்லை. அம்மாவின் அருகில் உட்கார்ந்தவன்,
“எங்கேம்மா அஞ்சலி?” என்றான்.
“ரொம்பவே சோர்ந்து போனா அபி. நான்தான் போய் தூங்கும்மான்னு அனுப்பி வெச்சேன்.”
“ஓ…!”
“அபி… ஏதாவது பிரச்சினையாப்பா?” அம்மாவின் கேள்வியில் புன்னகைத்தான் மகன்.
“இல்லைம்மா… அப்பிடியெல்லாம் ஒன்னுமில்லை.”
“அப்பிடின்னா சரிதாம்பா. ரெண்டு பேரோட முகமும் வாடிப் போய் தெரிஞ்சுதா… அதான் கேட்டேன். போ அபி. போய் கீதா கூட பேசு. அவளோட நிறைய நேரம் செலவழிக்கிற மாதிரி பாத்துக்கோ. இந்த மாதிரி நேரத்துல, பொண்ணுங்க அதைத்தான் விரும்புவாங்க. உன்னோட பிஸினஸை எல்லாம் மூட்டை கட்டித் தூரப்போடு.”
“சரிம்மா.” சிரித்தான் அபி.
பால்கனியில் காற்றாட நின்றிருந்த கீதாஞ்சலி, ரூமிற்குள் வந்தாள். லேசாகத் தலை சுற்றவும், சுவரைப் பிடித்துக் கொண்டு நின்றுவிட்டாள். உள்ளே வந்த அபி பார்த்ததெல்லாம், நிற்கவும் சக்தியற்றுத் தடுமாறிய மனைவியைத் தான்.
சட்டென அவளைத் தாங்கிக் கொண்டவன், தோள்களில் சாய்த்துக் கொண்டான். பிடிவாதம் எல்லாம் காற்றில் பறக்க, கணவனை இறுக்கிப் பிடித்தபடி, லேசாக விசும்பினாள் கீதாஞ்சலி. அவள் முதுகை லேசாக வருடிக் கொடுத்தவன், நெற்றியில் இதழ் பதித்தான்.
“ஒரு பொழுது தள்ளியிருக்க முடியலை… இதுல, இந்த அபி எனக்கும் வேணாம், என் குழந்தைக்கும் வேணாம்னு டயலாக் வேற…” அவன் சொன்ன பாணியில், தோளில் லேசாகக் குத்தினாள் கீதாஞ்சலி.
“சொல்லு அம்மாடி… நான் என்ன பண்ணனும்?” அந்தக் கேள்வியில், அவன் தோளில் இருந்து விலகியவள், அவனை விழி விரித்து ஆச்சரியமாகப் பார்த்தாள்.
“போச்சுடா…! கண்ணால வசியம் பண்ண ஆரம்பிச்சுட்டா. இனி நான் எப்பிடிப் பேச?” என்றவன், அந்தக் கண்களில் முத்தம் வைத்தான்.
“சொல்லு அம்மாடி… அந்த ராஜேந்திரன் கால்ல சாஷ்டாங்கமா விழணுமா? இல்லை தொட்டுக் கும்பிட்டாப் போதுமா?”
“ஷ்… அபி… என்ன பேச்சு இது?”
“அப்பாடா…! எம் பொண்டாட்டி எங்கூட பேசிட்டாப்பா…” என்றான் சத்தமாக.
“ஐயோ அபி! என்ன பண்ணுறீங்க?” அவன் வாயை மூடியவளின் கையை விலக்கியவன்,
“சொல்லுடி… என்னெல்லாம் பண்ணணுமோ… எல்லாத்தையும் லிஸ்ட் போட்டுக் குடு, பண்ணுறேன்.” என்றான். அவன் கோபத்தில் பேசுகிறானோ, என்று அவன் முகத்தை அண்ணாந்து பார்த்தாள் கீதாஞ்சலி. அங்கு கோபம் இல்லை. அந்தக் கண்களில் காதல் தான் வழிந்தது.
“அபி…”
“என்னடா…”
“எனக்கு நிக்குறதுக்கு கஷ்டமா இருக்கு, உக்காரலாமா?” அவள் கேட்கவும், அனைத்தையும் மறந்தவன், அவளை அலாக்காகத் தூக்கிக் கொண்டு போய் கட்டிலில் கிடத்தினான்.
“அபி…”
“அம்மாடி…”
“ராஜேந்திரனை… நாம போய்… பாக்கலாமா?”
“சரி அம்மாடி.”
“நீங்க அவர்கிட்ட பேசுங்க அபி.”
“சரி அம்மாடி.”
“மன்னிப்பைப் போல ஒரு மோசமான தண்டனை, உலகத்துல எதுவும் இல்லை அபி.”
“ம்…”
“எம்மேல கோபமா அபி?”
“சீச்சீ… இல்லைடா.”
“அப்போ… இந்தத் திடீர் மனமாற்றம் யாருக்காக? அஞ்சலிக்காகவா…? இல்லை… புது வரவுக்காகவா?” அந்தக் கண்களின் பாஷையில் மயங்கிப் போனான் அபி.
அவள் தன்னை என்றைக்கும், யாருக்கும் விட்டுக் கொடுக்கத் தயாரில்லை என்று புரிந்தது அபிக்கு. அவள் இதழ்களில் கொஞ்சம் அழுத்தமாக முத்தம் வைத்தவன்,
“என்னோட அம்மாடிக்காக…” என்றான். கொடுத்தது, வட்டியும் முதலுமாகத் திரும்பக் கிடைத்தது.