KYA-27

KYA-27

                                            காலம் யாவும் அன்பே 27

 

வர்மா ரதியை இழுத்துக் கொண்டு உள்ளே புக, ‘எங்கே செல்கிறோம் இப்போது’ என்று கேட்க நினைத்த ரதி கேட்க முடியாமல் போக அந்த ஒளிப் புயலுக்குள் சிக்கிக் கொண்டாள்.

இது இப்போது எங்கு போய் நிற்குமோ என இருவருக்குமே தோன்றாமல் இல்லை. அந்த ஒளிப் பிரயாணம் இப்போது சற்று பழகியது போல இருந்தது.

காற்றில் அடித்துச் செல்லப்படும் சிறு காகிதத் துண்டு போல இருவரும் பறந்து கொண்டிருக்க, இப்போது ஒரு இடத்தில் போய் விழுந்தனர்.

ரதி கிட்டத்தட்ட சோர்ந்து இருந்தாள். பெண்ணுடல் என்பதால் இயற்கையாகவே சற்று வலு குறைந்து இருந்தது. அதுவும் இந்த புயல் பயணம் ஏற்க சற்று சிரமம் தான். கணவன் துணை இருப்பதால் சமாளித்துக் கொண்டிருந்தாள்.

வந்த மயக்கத்தில் விழுந்த இடத்திலேயே சற்று கண் மூடிப் படுத்துவிட்டாள்.

அந்த புது உலகில் இப்போது மாலை நேரம் போலும். கதிரவன் மெல்ல மறைந்து கொண்டிருப்பது அங்கிருந்த மலைகளில் மத்தியில் அழகாகத் தெரிய, சில்லென்ற காற்றும் அவர்களுக்கு இதமளித்தது.

காற்றில் கலந்து வந்த குளிர்ந்த  நீர்ச் சாரலும் முகத்த்தில் பன்னீர் தெளிக்க, அங்கே ஒரு ஆற்றங்கறை இருப்பது அப்போது தான் உணர்ந்தான் வர்மா. ஆனால் ஆற்றில் எப்படி சாரல் அடிக்கும் என குழம்பினான்.

அவனுக்கும் உடல் களைப்பு ஏறப்பட, ரதியின் அருகில் அந்த இடத்தில்  படுத்து கண்மூடிக் கொண்டான்.

எத்தனை நேரம் அப்படிப் படுத்திருந்தார்களோ! கண் விழிக்கும் போது பொழுது விடிந்திருந்தது.

வானம் நீலப் போர்வை விரித்திருக்க, குயில்கள் கீதம் பாட , மெல்லிய சூரிய ஒளி இதம் பரப்ப உடலும் மனமும் உற்சாகமாக இருந்தது.

ரதி எழுந்து அந்த இயற்கையை ரசிக்க, வர்மா படுத்துக் கொண்டே , தலைக்குப் பின்னால் கைகளை வைத்துக்கொண்டு , இயற்கையோடு கலந்த தன் காதலையும் சேர்த்து ரசித்தான்.

ஆற்று நீரில் கால் நனைக்க அது வேகமாக அவள் மேல் அடித்துக்கொண்டு பாய்ந்தது. முகம் கழுவி , முந்தானையால் முகத்தைத் துடைத்தவள், திரும்பி தன் அத்தானிடம் வந்து அமர,

அவனோ ஆறு , மலை, மெல்லிய சூரியன் இவற்றின் முன்னே தேவதை போல் நடந்து வந்து தன் அருகில் அமர்ந்தவளின் பால் முகத்தால் ஈர்க்கப்பட்டு, அந்தக் காட்சி எப்போதும் தன் மனதில் இருக்க, கண் மூடி அவற்றை கிரகித்துக் கொண்டான்.

“என்ன அத்தான் இன்னும் உறக்கமா! வாருங்கள் இது என்ன இடம், நம் மனிதர்கள் இருக்கிறார்களா என்று அறிந்து கொள்வோம்” அவனின் இடையருகே அமர்ந்து அவன் இதயத்தில் கை வைத்து எழுப்பினாள்.

ஏனோ அமர்ந்தது போல அவள் உணரவே இல்லை. அதை யோசிக்க நினைத்தவளை வர்மாவின் குரல் கலைத்தது.

மெல்ல கண் திறந்து, “என்னை விட நீ ஆராய்ச்சியில் இறங்கிவிட்டாய் போல் இருக்கிறதே! ஆனால் எனக்கு நன்றாகப் பசிக்கிறது. எப்போதோ வளவன் வீட்டில் உண்டது…” என வளவனை நினைவில் கொள்ள,

“ஆமாம் அத்தான். இந்த உலகத்தில் எத்தனை ஆச்சரியங்கள் கொட்டிக் கிடக்கிறது. அவற்றை நம்மைப் போன்றவர்கள் அறிந்து கொள்வதில்லை.” அறியாமையை நினைத்து சலிப்பு வர,

“உண்மை தான் ரதி. ஆனால் இவை எல்லா மக்களுக்கும் தெரிந்து விட்டால், இது அமைதியான உலகமாக இருக்காது. மக்கள் சுலபமாக தீங்கு செய்ய வழி வகுக்கும், அதனால் தான் கடவுள் இப்படி வைத்திருக்கிறார்.

கடவுள் என்றதும் ரதிக்கு சிவலிங்கம் நினைவில் வர,

அவனின் இடையில் இருந்த துண்டை அவசரமாக தடவிப் பார்த்தாள்.

நல்ல வேளையாக வைத்த இடத்திலேயே இருந்தது. சற்று நேரத்தில் பயம் தொற்றிக் கொண்டது. இப்போது நிம்மதியாக இருக்க,

“ பத்திரமாக இருக்கிறது ரதி. கவலை வேண்டாம்..” சிரித்துக் கொண்டே சொன்னான்.

“ பரிகாசம் செய்யாதீர்கள் அத்தான். நாம் என்ன தான் இப்படி வெவ்வேறு இடங்களில் சுற்றித் திரிந்தாலும் நமக்கு நம் ஊரும், நம் இடமும் தான் வாழ்வில் நிம்மதியளிக்கும்.” சொந்த இடத்தின் சுகத்தை மனம் தேட கண்மூடி தன் வீட்டையும் தோட்டத்தையும் அவர்கள் இருவரும் அமர்ந்து காதல் பேசும் அந்தக் கயிற்றுக் கட்டிலயும் நினைத்துப் பார்த்தாள்.

அவை கண்முன் தெரிவது போல் இருந்தது.

அவளால் அவனுக்கும் அதே நினைவு வர, சேனா தான் கண் முன் நின்றான். தான் அந்த உலகை விட்டு வந்து என்னவோ இரண்டு நாட்கள் தான் ஆகியிருந்தது. ஆனால் அவனுக்கு நன்றாகத் தெரியும் அங்கே ஆண்டுகள் பல உருண்டோடியிருக்கும் என்று.

இதுவே அவன் ரதியை விட்டு வந்திருந்தால் நிச்சயம்  வளவனை சந்தித்த பின் தன் உலகிற்கு செல்ல வேண்டும் என்று நினைத்தே அந்த காலச் சுழர்ச்சிகுள் நுழைந்திருப்பான்.

இப்போது அவளே அருகில் இருக்க, சுற்றுலா செல்வது போல வேறு ஒன்றை புதிதாக அறிந்துகொள்ளவேண்டும்  என்று நினைத்தே அதனுள் குதித்திருந்தான்.

இப்போது நண்பனின் நினைவு அவனை கவலை கொள்ள வைத்தது. அதனால் அடுத்தது தன் உலகிற்கு செல்ல வேண்டும் என நினைத்துக் கொண்டான்.

சேனாவோ அங்கே பலத்த ஆன்மீகத்தின் இறங்கியிருந்தான். சாப்பாடு தண்ணீர் என்பவற்றை மறந்து சித்தம் மட்டுமே சிறந்தவனாக மாறிக் கொண்டிருந்தான்.

பரஞ்சோதி சித்தர் அவனை சீடனாக ஏற்றுக் கொண்ட பின்னர் , அவனது தூய தெளிவான உள்ளம் கண்டு அவனுக்கு அனைத்தும் எளிதாக வரும் என்று அருளினார்.  இப்போது அவன் அடியோடு மாறியிருந்தான்.இப்போது வயது அறுபது ஆகி இருந்தது.

வர்மாவும் ரதியும் வேறு உலகங்களில் கழித்த இந்த இரண்டரை நாட்கள் அங்கே நாற்பது வருடத்தை கடத்தியிருந்தது.

நினைவுகள் சேனாவிடம் செல்ல, மனம் ஏதோ கனமாக இருப்பதை உணர்ந்தான். ஏதோ ஒரு உறுத்தல் உள்ளுக்குள்ளே இருந்து அரித்தது.

அவன் முகவாட்டம் ரதிக்கு சந்தேகத்தைக் கொடுக்க,

“ அத்தான், ஏன் உங்கள் முகம் வாடி விட்டது?!” அக்கறையுடன் கேட்க,

“ஒன்றுமில்லை ரதி! முதலில் இந்த இடம் எப்படி என்று தெரிந்து கொள்வோம்.” சமாளித்து அவளை அழைத்துச் சென்றான்.

சிறிது தூரம் அங்கிருந்து நடக்க தூரத்தில்  ஒரு வயதானவர் வந்தார். அவர் வயதை நரையை வைத்து கணிக்க முடிந்ததே தவிற, அவரின் உடல் நல்ல திடமாக இருந்தது.

அவர் கையில் ஒரு தண்டம் இருந்தது. ஒரு வேளை இவர் யோகியாகவோ அல்லது சித்தராகவோ இருக்குமோ என்று எண்ணினான் வர்மா.

அவர் இவர்களை நோக்கியே வந்தார். அவர் அருகில் வந்ததும் வர்மாவும் ரதி ஆச்சரியம் அடைந்தனர்.

அங்கு நின்றது வர்மாவின் உற்ற நண்பன் அஷ்டசேனா!!

“ இந்திரா!! எப்படி இருக்கிறாய், தங்கையே காலப் பயணம் உனக்குப் பிடித்ததா!?” சகஜமாக பேசினார்.

‘இத்தனை வயதாகி விட்டதா! ஆண்டுகள் இவ்வளவு கடந்து விட்டதா!’, இருவரும் சேனாவைக் கண்டு வாயடைத்துப் போயினர்.

“ சேனா! நீ இங்கு எப்படி வந்தாய்! உனக்கு இந்த ஆராய்ச்சியில் இஷட்மில்லை என தவிர்த்தாய். இப்போது ….” கேள்வியாக சேனாவைப் பார்க்க,

“ ஆம் இந்திரா. உண்மை தான். இப்போதும் நான் வேறு உலகில் இல்லை. நாம் வாழ்ந்த அதே உலகில் தான் இருக்கிறேன்.” சாதாரணமாகக் கூற,

“ என்ன…! அப்போது நாங்கள் … மீண்டும் நம் உலகத்திற்கு வந்துவிட்டோமா!” ரதி சற்று மகிழ்ச்சியாகக் கேட்க,

“ இல்லை! நீங்கள் இந்த உலகில் இல்லை.” சேனா அவர்களைக் குழப்பினான்.

வர்மாவிற்கு ஓரளவு புரிந்தது. விஷயம் தெரிந்ததும் தான் சேனாவிற்கு மேலே இருப்பது தெரிந்தது.

“ரதி! நாம் இங்கு இல்லை. நாம் இருப்பது நான்காம் பரிமாணம்!” கண்டுபிடித்து விட்டான் வர்மா..

இது அவனது ஆராய்ச்சியின் இன்னொரு மைல் கல்.

 “என்ன அத்தான் சொல்கிறீர்கள். எனக்குப் புரியவில்லை. நாமும் இங்கு தானே நிற்கிறோம்!” என அவள் குனிந்து கீழே பார்க்க,

அவர்கள் பறந்த நிலையில் இருந்தார்கள். சேனா மட்டுமே பூமியில் கால் பதித்து நின்றிருந்தான்.

குழம்பிய ரதி , திரும்பி தாங்கள் படுத்திருந்த இடத்தைப் பார்க்க, அது எங்கோ ஒரு மூலையில் தெரிந்தது. அதன் அருகே இருந்த ஆறு, இப்போது அருவி போலத் தெரிந்தது. அதாவது அவள் ஆறு ஓடிக்கொண்டிருந்ததாக நினைத்தது தவறு. அது மேலிருந்து கீழே கொட்டும் அருவி.

அவர்கள் நிலத்தில் படுத்திருக்கவில்லை. அந்தரத்தில் மிதந்திருக்கிரார்கள். அதனால் தான் கொட்டும் அருவி ஓடும் நதியாகத் தெரிந்தது.

பாகிரதிக்கு தலையே சுற்றியது.

“அத்தான்! எனக்கு ஒன்றும் விளங்கவில்லை..” அவனின் கையைப் பற்றிக் கொள்ள,

“ உனக்கு நான் விளக்குகிறேன் ரதி.முதலில் சேனாவிடம் பேசிவிடுகிறேன்!” என்றான்.

சேனா இவர்களை ஆகாயத்தில் பார்த்துக் கொண்டிருந்தான்.

“ நண்பா! நீ என்னை நினைத்ததால் உன் கண்களுக்குத் தெரிகிறேன். உனக்கு வேறு என்ன தெரிய வேண்டும்..?” அமைதியாகக் கேட்க,

“ எத்தனை ஆண்டுகள் இங்கே கடந்து விட்டது நண்பா!?” வர்மா நண்பனின் தோற்றத்தைக் கண்டு வருத்தம் கொண்டான்.

“நாற்பத்தி இரண்டு ஆண்டுகள் நீ இல்லாமலே கடந்துவிட்டது.” விரக்திப் புன்னகை சேனாவிடம்!

“ இப்போது கூட காலங்கள் ஓடிக்கொண்டிருக்கும் என்று அறிகிறேன். உன் நேரத்தை நான் வீணாக்க விரும்பவில்லை. நான் இன்னும் இதில் ஆராய்ச்சி செய்துவிட்டு நம் உலகிற்கு திரும்பி  வருகிறேன்!” விடை பெரும் விதமாக வர்மா கூற,

“ஆராய்ச்சி முடிந்தவுடன் நீ இந்த உலகிற்கு வந்து சேரும்  இடம் எனக்கு தெரியும். அங்கு வந்து உன்னை சந்திக்கிறேன். உன் வரவிற்காக காத்திருக்கிறேன்.” சொல்லிவிட்டு வர்மாவின் கண்ணிலிருந்து மறைந்திருந்தான் சேனா.

வர்மாவிற்கு அவன் கண்டு பிடித்திருக்கும் விஷயம் பெரியது என்று புரிந்தது.

அதை ரதிக்கு விளக்கினான்.

“ ரதி நாம் இங்கே காணும் யாவும் உண்மை அல்ல. நம் மனம் என்ன நினைக்கிறதோ அதைக் காண்கிறது.” முகத்தில் ஆர்வம் பொங்க அவன் விளக்கினான்.

ரதிக்கு அவன் சொல்வதெல்லாம் கேட்க ஆச்சரியமாக இருந்தது.

அவர்கள் இருப்பது நான்காம் பரிமாணம். இந்த உலகம் என்பது முப்பரிமாணம் (3 dimension). அதைத் தான் அவளுக்கு விளக்கிக் கொண்டிருந்தான்.

“ உனக்கு இன்னும் விளக்கமாகச் சொல்கிறேன். இரண்டாம் பரிமாணம் என்பது நீள அகலம் மட்டுமே! ஒரு இரண்டாம் பரிமாணத்தில் இருக்கும் பொருளால் நாம் இருக்கும் மூன்றாம் பரிமாணத்தை தெரிந்து கொள்ள முடியாது. ஆனால் நமது நிழல் தரையில் விழும் போது அதன் நீள அகலத்தை மட்டும் காண முடியும்.

நாம் இருக்கும் மூன்றாம் பரிமாணம் நீள அகலத்தோடு உயரம் என்ற ஒன்றும் சேர்ந்தது. அதனால் நம்மால் அந்த மூன்றும் உள்ள பொருட்களையோ அல்லது உயிரினங்களையோ காண முடியும்.

இதில் நான்காம் பரிமாணம் என்ற ஒன்றில் நாம் இருக்கிறோம். அதனால் நம்மால் இந்த உலகத்தில் இருக்கும் அனைத்தையும் காண முடியும். நான்காவது என்பது காலம். அந்தக் காலத்தில் பயணம் செய்துதான் நாம் இப்போது வந்துள்ளோம்.

நாம் இருப்பது இந்த உலகத்தின் எதிர்ப்பகுதி என்று வைத்துக் கொள்.

நம்மை இங்குள்ள மக்களால் காண முடியாது. ஆனால் நாம் செய்யும் சில வேலைகளை அவர்களால் உணர முடியும்.

வேறு ஒரு பரிமாணத்தில் நம்மைப் போன்ற உயிரினங்கள் இருக்கலாம். அவர்கள் சில நேரம் மூன்றாம் பரிமாணத்தில் உள்ள நம்மிடம் தொடர்பு கொள்ள நினைக்கலாம்.

அது  நமக்குப் புரிந்து கொள்ள முடியாமல் போகும். அப்படி நடக்கும் சில விஷயங்களை பேய் செய்துவிட்டது, குட்டிச் சாத்தான் வேலை என்று நமக்குத் தெரிந்த வற்றைக் கொண்டு பெயர் வைத்து விடுகிறோம்.

எல்லாவற்றுக்கும் பின்னால் அறிவியல் ஒளிந்திருக்கிறது.” ரதிக்கு புரியும்படி விளக்கம் கொடுத்தான்.

அவளுக்கு வர்மாவை நினைத்துப் பெருமையாக இருந்தது. இருந்தாலும் ஒரு சந்தேகம் எழ,

“ எல்லாம் சரி அத்தான். ஆனால் , அண்ணன் மட்டும் நம்மை எப்படிக் கண்டார். அது எப்படி முடிந்தது?” அதி புத்திசாலியாக கேட்டு வைத்தாள்.

அவளை அருகில் இழுத்து இடையோடு சேர்த்து அணைத்து ,

“ என் காதல் என்னை விட சிந்திக்க ஆரம்பித்து விட்டது என்று மகிழ்ந்தேனே … இப்படி ஒரு கேள்வியைக் கேட்டு வைத்து அது பொய் என்று ஆக்கிவிட்டாய்.” அவளது கழுத்தில் முத்தமிட்டான்.

வெட்கத்தோடு செல்லக் கோபமும் கொண்டாள் அவனது காதல்.

“ம்ம்… எப்போதும் பரிகாசம் தான்..” சிணுங்கிக் கொள்ள,

“எனது நண்பன் இப்போது ஒரு சித்தன். அவனுக்கு எல்லாம் தெரியும்.” மேலும் அவளை இறுக்கிக் கொண்டு கூச்சமூட்ட,

“ ஓ! நீங்கள் சொன்னது போல கண்ணுக்குத் தெரியாத சக்தி! அப்படித்தானே!” அவனை மடக்கி விட்டதாக நினைக்க…

“ இல்லை. சித்தர்கள் செய்வது சித்து வேலை அல்ல. அதற்கு பின்னாலும் நமக்குத் தெரியாத அறிவியல் ஒளிந்திருக்கிறது. கூடு விட்டுக் கூடு பாய்வது கூட ஒரு விதமான யோகப் பயிர்ச்சி. அது போலத் தான் எல்லாம்..” அவளுக்கு அறிவியல் என்னும் அறிவை காதலோடு புரியவைத்தான்.

 

திருவாசகம்:

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்

அளப்பருந் தன்மை வளப் பெருங் காட்சி

ஒன்றனுக்கு ஒன்று நின்றெழில் பகரின்

நூற்று ஒரு கோடியின் மேற்பட விரிந்தன

இல்நுழை கதிரின் துன்அணுப் புரையச் 5

 

சிறிய ஆகப் பெரியோன் தெரியின்

வேதியன் தொகையொடு மாலவன் மிகுதியும்

தோற்றமும் சிறப்பும் ஈற்றொடு புணரிய

மாப்பேர் ஊழியும் நீக்கமும் நிலையும்

சூக்கமொடு தூலத்துச் சூறை மாருதத்து

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

error: Content is protected !!