அத்தியாயம் – 21

இரவு உணவை முடித்துக்கொண்டு சுமிம்மா, அஜய், திவாகர் மூவரும்  தோட்டத்தில் வந்து அமர்ந்தனர். ரேணுவும், ரித்தியும் நிலாவை அலங்காரம் செய்யும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். பிரவீன் அண்ணனை அவனின் அறைக்கு அனுப்பிவிட்டு தோட்டத்திற்கு வந்து சேர்ந்தான்.

“என்னடா பிரவீன் அண்ணாவுக்கு கல்யாணம் முடிந்தது? நீ எப்போ கல்யாணம் பண்ண போற..” என்று சுமிம்மா அவனை வம்பிற்கு இழுக்கவே, “எனக்கு ஒரு ஆள் இருக்கு..” என்றவன் குறும்புடன் கண்சிமிட்டினான்.

“அண்ணா உண்மையைத் தான் சொல்றீங்களா?” என்று ஆச்சர்யத்துடன் கேட்டனர் அஜயும் திவாகரும்! அவன் யார் பின்னாடியும் சுற்றி அவர்கள் இதுவரை பார்த்ததில்லை.

“பொண்ணு எந்த ஊரு பிரவீன்..” என்று சுமிம்மா கேட்க, “கன்னியாகுமரி சுமிம்மா..” என்று குண்டைத்தூக்கி போட்டான் பிரவீன்.. அந்த ஊரின் பெயரைக் கேட்டதும், ‘டேய் உனக்கு வேற ஊர் பெண்ணே கிடைக்கலயா?’ என்றவருக்கு ஆர்மியின் நினைவு வந்தது.

“நீங்க பேசிட்டு இருங்க நான் போய் தூங்கறேன்..” அவர்களிடமிருந்து தப்பிக்க நினைத்து அவர் எழ நினைக்கவே, “அம்மா நீங்கதான் அவங்க வீட்டில் போய் பொண்ணு கேட்கணும்..” என்று அடுத்த குண்டைத்தூக்கிபோட்டான்.

சுமிம்மா கோபத்துடன் அவனை முறைத்தவண்ணம், “அந்த பெண்ணை நீ முதலில் எங்கேடா பார்த்த..?” என்று கேட்டார்..

“ரயில் பயணத்தில் தான் பார்த்தேன். அவப்பேரு சங்கரி. ஊரு கன்னியாகுமரி. நான் ஊருக்கு போனப்போ பன்னிரண்டாம் வகுப்பில் முதலிடம் வாங்கிருந்தா..” என்றவன் தனக்கு தெரிந்த தகவலைக் கூறினான்..

திவாகர் சுவாரசியமாக கதைகேட்க அஜய் தீவிரமான சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். பிரவீன் சொன்ன தகவல்கள் எல்லாம் சங்கரியுடன் ஒத்துபோகவே, ‘அவளாக இருக்குமோ..’ அவருக்குள் பெரிய பூகம்பம் கிளம்பியது.

“ஏண்டா என்னை இப்படி கூண்டுக்கிளியாக மாற்ற பார்க்கிற.. உன்னை..” என்று அவனின் முதுகில் இரண்டு அடிப்போடவே, “ஏன் சுமிம்மா அண்ணாவை அடிக்கிறீங்க..” என்று திவாகர் அவரைத் தடுக்க பிரவீன் பாவமாக அவரைப் பார்த்தான்.

“நான் கன்னியாகுமரி மண்ணில் கால்வைக்க மாட்டேன். பொண்ணு இந்த ஊருக்கு வந்தால் உனக்கு கல்யாணம் இல்ல இப்படியே சாமியாராக போயிரு..” என்று கோபத்துடன் சொல்லிவிட்டு எழுந்து அவரின் அறைக்கு சென்றார்.

சுமிம்மா சென்ற திசையைப் பார்த்தவர்கள் அஜயை திரும்பிப் பார்க்க அவனோ தீவிரமான சிந்தனையில் ஆழ்ந்திருக்க, “இங்கே இவ்வளவு பெரிய பிரச்சனை போயிட்டு இருக்கு.. அதை கவனிக்காமல் இவன் என்ன யோசனை பண்ணிட்டு இருக்கான்..” என்றான் பிரவீன்

“அஜய் என்னடா யோசனை?” என்றவனின் குரல்கேட்டு நிமிர்ந்த அஜய், “அப்பா ஊரிலிருந்து போன் பண்ணிருக்காங்க.. நான் நெதர்லாந்து போகணும் அண்ணா..” என்று பாவமாக சொல்ல அந்த விஷயம் இருவருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது.

“என்ன திடீரென்று இப்படி சொல்ற? கட்டாயம் ஊருக்குப் போகணுமா?” என்று பிரவீன் சிந்தனையுடன் கேட்க அவன் ஒப்புதலாக தலையசைக்க திவாகரின் மனதில் பாரமானது. அதன்பிறகு மூவருமே பேசவில்லை..

வீட்டிற்குள் நுழைந்த சுமிம்மா நிலாவிற்கு இன்னும் அலங்காரம் நடப்பதைக் கண்டு, “நிலாவை சீக்கிரம் அலங்காரம் பண்ணி ரூமிற்கு அனுப்பிவிட்டு வந்து தூங்குங்க..” என்று ரேணுவையும், ரித்துவையும் மிரட் தன்னறைக்கு சென்றார்.

நிலா அமைதியாக அமர்ந்திருக்க, “ஏண்டி நீ என்ன இப்படி உட்கார்ந்திருக்கிற..” என்று கேட்க, “அமைதியாக இருப்பது ஒரு குத்தமா?” முகத்தைப் பாவமாக வைத்துகொண்டு கேட்டாள் நிலா..

அதற்குள் அலங்காரம் முடிந்துவிட, “நீ இதே அமைதியோட பாரதி அண்ணாவோட அறைக்கு போ..” என்றவர்கள் அவளை கொண்டுபோய் அறைக்குள் தள்ளிவிட்டு வந்தனர் ரேணுவும், ரித்துவும்.

இத்தனை நாள் இல்லாமல் மனம் படபடவென்று அடித்துக்கொள்ள தயக்கத்துடன் அறைக்குள் நுழையவே தரையில் அமர்ந்திருந்த பாரதி அவளைப் பார்த்து புன்னகைக்க அவளின் மனதின் படபடப்பு கொஞ்சம் குறைவது போல உணர்ந்தாள்.

அவள் சிலையாக நிற்பதை பார்த்து, “பூனைக்குட்டி ஏன் பதுங்கி பதுங்கி வருது..” என்று கேள்வியாக புருவம் உயர்த்தியவன் அவளை நிமிர்ந்து பார்த்தான். சிவப்பு நிற காட்டன் சேலையில் அளவான ஒப்பனைகளுடன் கையில் பால் சொம்புடன் நின்றிருந்தவளை பார்க்க பார்க்க தெவிட்டவில்லை.

“இது நம்ம ரூம்தான் நிலா.. உனக்கு எந்த சந்தேகமும் வேண்டாம்.. வா வந்து இங்கே உட்காரு..” என்று தரையைக் காட்டினான்.

அதுவரை மனதிலிருந்த கலக்கம் கொஞ்சம் மாறவே திகைப்புடன் அவனைப் பார்த்தவள், “என்ன பாரதி கீழே உட்கார்ந்திருக்கீங்க..” என்று புன்னகையுடன் கேட்டபடியே அவனின் அருகில் சென்று அமர்ந்தாள் நிலா.

“இல்ல நிலா சும்மா உன்னிடம் கொஞ்சம் பேசலான்னு தோணுச்சு.. அதன் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்..” என்றவன் சாதாரணமாக சொல்லவே அதுவரை இருந்த மனநிலை மாறி பெருமூச்சை வெளியிட்டவள்,

“தேங்க்ஸ் பாரதி.. என்னன்னவோ நடக்குமோ என்ற எதிர்பார்ப்பு எதுவுமே இல்லாமல் பயத்துடன் தான் வந்தேன்.. இப்போ கொஞ்சம் பரவல்ல..” என்றவள் நிம்மதி உணர்வுடன் கூறினாள்.

“முதலிரவு என்றால் படிக்கை நிறைய பூ டேக்ரேஷன், மனம் மயக்கும் வாசனைகள், அறைக்குள் நுழைந்ததும் ஒரு சில முத்தங்கள், இன்னும் நிறைய இதெல்லாம் இருக்கணுமா?” என்றவன் ஒரு கப் காபியை அவளின் கையில் கொடுத்தான்

“இது நமக்கான டைம். கொஞ்சம் காபி, கொஞ்சம் பேச்சு இருக்க கூடாதா நிலா?” அவன் புன்னகைக்க நிம்மதியாக கட்டில் சாய்ந்து கால்நீட்டி அமர்ந்தாள்.

“இது ரொம்ப நல்லா இருக்கு பாரதி..” என்றவள் அவன் கொடுத்த காபியை பருகியபடியே, “பாரதி பிரவீன் பற்றி நீ என்ன நினைக்கிற..” என்று அவள் பேச்சிற்கு பிள்ளையார் சுழிபோடவே பாரதியின் முகம் பிரகாசமானது.. அவளிடம் மாறுதலை கொண்டு வர நினைத்தவனுக்கு அவளின் இயல்வு அவனின் முகத்தில் புன்னகையை வரவழைத்தது.

“பிரவீன் ஒரு விளையாட்டு பிள்ளை. அவனுக்கு அப்பா, அம்மா பாசம் சுத்தமா கிடைக்கல.. அவனை சின்ன வயதிலிருந்தே வளர்த்தால் எனக்கு அவன் மகன் மாதிரி..” என்றவன் காபியை பருகியவண்ணம் பதில் கொடுத்தான்..

“பாரதி நீங்க அவரை வளர்த்தது எனக்கு தெரியும்.. ஆனால் உங்களோட அம்மா, அப்பா?” என்று சந்தேகமாக இழுக்க பாரதி கேள்வியாக அவளை நோக்கிட, “அவங்க போட்டோ ஒன்று கூட வீட்டில் இல்ல அதன் கேட்டேன்..” என்று விளக்கத்தை வேகமாக கூறிய நிலா அவனையே இமைக்காமல் பார்த்தாள்.

“என்னோட அப்பா எனக்கு நல்லா அப்பாவாக இல்ல நிலா.. அம்மாதான் எங்களுக்கு நல்லது கெட்டது சொல்லி வளர்ந்தாங்க.. கொஞ்ச நாளில் அவங்களும் இறந்துட்டாங்க.. அப்புறம் தம்பியை கவனிப்பது, என்னோட படிப்பு, வேலை என்று வாழ்க்கையே திசைமாறி போச்சு..” என்றவனின் குரலில் வலி தென்படவே அவனின் முதுகை ஆறுதலாக வருடிவிட்டாள் நிலா..

“ஒவ்வொருத்தர் வாழ்க்கைக்கு பின்னாடியும் ஆயிரம் விஷயம் இருக்கு இல்ல பாரதி..” என்று அவள் சொல்ல, “ம்ம் உண்மைதான்..” என்றவன் பார்வை அவளின் மனநிலையை உணர்த்தியது..

“நிலா நீ என்னைபற்றி என்ன நினைக்கிற..” என்றவன் ஆர்வமாக கேட்க, “பாரதி இந்த வீட்டில் நான் நானாக உணருகிறேன். என்னவோ உங்ககிட்ட இருக்கும் இந்த இயல்பு. இந்த பிராக்டிகல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..” என்று மனதில் பட்ட விஷயத்தை அவள் வெளிப்படையாக கூறினாள்.

“நிலா உனக்கு ரோஜா பூவில் எந்த நிறம் பிடிக்கும்..” அவன் அவளின் ரசனையை தெரிந்து கொள்ளும் முயற்சியில் இறக்கிட, “எனக்கு ஒயிட் கலர் பிடிக்கும்..” என்றாள்.

“உங்களுக்கு எந்த கலர் ரோஜா பிடிக்கும்?” என்றாள்.

“எனக்கு யெல்லோ கலர் பிடிக்கும்” என்றான்.

“சினிமாவின் உங்களுக்கு பிடித்த இயக்குனர்..” அவள் ஆர்வமாக வினாவிட, “பாலச்சந்தர்..” என்று சிரித்தபடியே பதில் கொடுத்தான்.

“எனக்கு டி. அர். படங்கள் ரொம்ப பிடிக்கும்..” என்றாள்.

“அவரோட படங்களில் அண்ணன், தங்கை சென்டிமென்ட் சூப்பராக இருக்கும்..” என்று பாரதி ரசித்தவண்ணம் சொல்ல அவளின் அவளின் மனதில் அந்த சந்தேகம் எழுந்தது..

“பாரதியின் பேரை வெச்சிருக்கீங்க.. உங்களுக்கு பாரதியைப் பிடிக்குமா?” என்று மனதில் பட்ட விஷயத்தை உடனே அவனிடம் கேட்க, “என்னோட பெயரை என்னை கேட்டுட்டா வெச்சாங்க..” என்று கிண்டலடிக்க,

“ஐயோ இப்போ அத்தை இல்லாமல் போயிட்டாங்க..” என்று அவள் பாவமாக சொல்ல, “ஏன் உயிரோட இருந்திருந்தா நீ போய் விளக்கம் கேட்டுட்டு வந்திருப்பாயோ..” அவன் குறும்புடன் கண்ணடித்தான்..

“இந்த முண்டாசு கட்டிய பாரதியை முன்னாடியே ஏன் அத்தை என்னோட கண்ணில் காட்டாமல் விட்டீங்க என்று நிஜமாகவே கேட்டு இருப்பேன்..  ” என்றவள் சீரியசாக ஆரம்பித்து கிண்டலில் முடித்துவிட்டு வாய்விட்டு சிரித்தாள்.

அவளை ரசனையுடன் நோக்கிய அவனின் பார்வையில் மகிழ்ச்சி தவிர வேறு எதுவும் இல்லை. “எங்கம்மா உன்னிடம் விளக்கம் சொல்லிட்டுதான் மறுவேலை பார்ப்பாங்க..” என்ற பாரதியும் அவளுடன் சேர்ந்து சிரித்தான்.

முதலிரவு என்ற எண்ணத்தை முற்றிலும் மறந்து இருவரும் வேறு விசயங்களில் தங்களின் மனதை செலுத்த அங்கே கேலிக்கும், கிண்டலுக்கும் பஞ்சமில்லாமல் போனது. இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள முயற்சித்தனர். நேரம் கடந்து செல்ல வானமோ விடியலை நோக்கி பயணித்தது.

நிலாவின் கண்களை தூக்கம் தழுவிச்செல்ல, “பாரதி எனக்கு தூக்கம் வருது..” என்றவளின் கண்கள் சிவந்திருக்க, “ம்ம் எனக்கு தான் நிலா. வா போய் தூங்கலாம்..” என்றான் பாரதியும் சோர்வுடன்..

“இனி எழுந்திருச்சு கட்டிலில் போய் படுக்கணுமா? என்னால் முடியாது.. நீங்க காலை நீட்டுங்க.. நான் உங்க மடியில் தலைவைத்து தூங்கறேன்..” என்றாள் அவள் தூக்கக்கலக்கத்துடன்.

அவன் காலைநீட்ட அவனின் மடியில் தலைவைத்து படுத்த நிலா,  “தாய்க்கு பின் தாரம் இருக்கும் பொழுது, தந்தைக்கு பின் கணவன் இருக்க கூடாதா?” என்றவள் அவனின் முகத்தை இமைக்காமல் பார்த்தாள்.

“என்னை நானாக உணர முடியும் பாரதி. உன்னோட இந்த பேச்சு, அக்கறை எல்லாமே எனக்கு பிடிச்சிருக்கு..” என்றவள் அவனின் கன்னம் வருடிவிட்டு விழியால் அவனை அருகிலே அழைக்க அவனும் அவள் முகம் நோக்கி குனிந்தான்

அவனின் கன்னத்தில் முத்தமிட்டவள், “தேங்க்ஸ்ப்பா..” என்ற நிலா, “குட் நைட்..” என்றாள். காதல் மட்டும் போதும் என்ற பாரதியின் செயல் அவளின் காயத்திற்கு மருந்தானது.

அவளின் நெற்றியில் முத்தமிட்ட நிமிர்ந்த பாரதி, “குட் நைட்..” என்றவள் விழிமூட உறங்கவே அவளின் கூந்தலை காதலோடு வருடிய பாரதியும் விழிமூடி நித்திரையில் ஆழ்ந்தான்.

இருள் சூழ்ந்த இடத்தில் தனியாக நின்றிருந்தவரை சுற்றி வளைத்தது அந்த கூட்டம். அவர்கள் யாரென்று அவரால் அடையாளம் காண முடியாமல் போகவே, “ஏன் என்னை சுற்றி நிற்கிறீங்க நகருங்க..” என்று அவர்களை விலகி நடக்க தொடங்கினார்..

அவரின் முகம் பயத்தில் வேர்க்க, “டேய் அஜய் எங்கேடா இருக்கீங்க..? ஐயோ இவங்க என்னை பின்தொடர்ந்து வராங்க.. யாருன்னு கேளுங்க..” என்று கத்தினார்..

“டேய் பிரவீன்.. திவாகர்.. எங்கேடா இருக்கீங்க..” என்று அவர் பயத்தில் வேகமாக ஓட அவர்களும் விடாமல் சுமிம்மாவை துரத்தி வந்தனர்..

“ஐயோ இவங்ககிட்ட சிக்காமல் நான் தப்பிக்கனுமே..” என்று புலம்பிக்கொண்டே கண்மண் தெரியாமல் ஓடியவர் ஓரிடத்தில் நின்று மூச்சிரைத்தார்.

“அவர்களிடமிருந்து தப்பிச்சிட்டேன்..” என்றவர் நிமிரும் பொழுது அவரை சூழ்ந்து நின்றவர்கள், “மலையில் தென்றல் பிறந்தது ஒருவருக்காக வா.. இங்கே வா அன்பே இங்கே வா..” என்று ஒருவன் பிடித்து ஒருப்பக்கம் இழுத்தனர்..

“வானம் நிலவைச் சுமந்தது ஒருவருக்காக வா.. இங்கே வா அன்பே இங்கே வா..” என்று மறுப்பக்கம் அவரை பிடித்து இழுத்தான்..

“ஐயோ என்னை விடுங்கடா.. நான் கூண்டு கிளியாக வாழ முடியாது..” என்று அவர் கையை உதறிவிட்டு மீண்டும் ஓட முயற்சிக்க அதற்குள் அவரை சூழ்ந்தது அந்த கூட்டம்..

“மேகம் மழையை பொழிந்தது ஒருவருக்காக வா.. இங்கே வா அன்பே இங்கே வா..” என்று வேறு ஒருவன் அவரை நெருங்க, “இறைவன் உன்னைப் படைத்தது ஒருவருக்காக வா.. இங்கே வா அன்பே இங்கே வா..” என்றவர்கள் வழியை மறித்து நிற்கவே, “என்னை விடுங்கடா..” என்று கத்தினார் சுமிம்மா.

“சுமிம்மா கண்ணை முழிச்சு பாருங்க..” என்ற பிரவீன் அவரை தூக்கத்திலிருந்து எழுப்பும் முயற்சியில் ஈடுபடவே விழிதிறந்த சுமிம்மா  தன்னைச்சுற்றி நின்றிருந்தவர்களின் முகத்தை பார்த்தார்..

“என்ன சுமிம்மா ஆச்சு.. ஏதாவது கெட்ட கனவு கண்டீங்களா..” என்று பிரவீன் அவரின் அருகில் அமரந்தான்..

“அவங்க என்னை..” என்று கோர்வையாக சொல்ல முடியாமல் சுமிம்மா திணற, “இது கனவு சுமிம்மா.. உங்களை கூட்டுட்டு போக நாங்க விடமாட்டோம்.. ஜெஸ்ட் ரிலாக்ஸ்..” என்று அவரை ஆறுதல்படுத்தினான் அஜய்.

ரித்து தண்ணீர் கொண்டுவந்து சுமிம்மாவின் கையில் கொடுக்க அதை குடித்தவர் கொஞ்சம் நிம்மதியாக உணர்ந்தார். ரேணு ஓடிச்சென்று அவருக்கு காபி போட்டு எடுத்து வந்தார்.

அப்பொழுது தான் அது கனவு என்று உணர்ந்தவரின் மனதில் கலக்கம் சூழ்ந்தது.. அந்த கனவு அவருக்கு உணர்த்திய விஷயத்தை நினைத்தவருக்கு நெஞ்சு திக்கென்றது..

“இவனுங்க நம்மள தேடி வர போறாங்களா? சுத்தம் சுமித்ரா இதுக்குமேல் இங்கே இருந்தா உன்னை கூண்டுக்குள் கொண்டு போய் அடச்சு வெச்சிருவாங்க..” என்றவர் வாய்விட்டு உளறவே,

“உங்களை எல்லாம் கூண்டுக்குள் அடைக்க இந்த ஜென்மத்தில் யாராலும் முடியாது சுமிம்மா..” என்ற ரித்து, “கனவுதானே.. அதை கண்டுக்காமல் விடுங்க.. எல்லாம் சரியாகும்..” என்றாள் இயல்புடன். சுமிம்மாவின் மனம் அவர்கள் சொல்வதை நம்ப மறுத்தது.

அதன்பிறகு அவர்கள் யாருமே தூங்கவில்லை.  அந்த இரவு தூங்காத இரவானது.. மெல்ல வானம் செவ்வானமாக மாறிட கிழக்கே தனது பயணத்தை தொடங்கினான் கதிரவன்..

சுமிம்மாவின் கனவு பலிக்குமா?

 

error: Content is protected !!