mmv1

மொட்டுக்குள் மொட்டு வளர்ந்தது…

அத்தியாயம் – 1

மேற்கு வானம் செவ்வானமாக மாறிக் கொண்டிருக்கும் அந்த அந்திமாலை பொழுதில் மேற்கு வானத்தில் சிவந்த நிலவொன்று குளிர் நிலாவாக மாறி மறந்து கொண்டிருந்தது..

அந்த கடற்கரை மணலில் அமர்ந்திருந்த நிலாவின் கண்கள் இரண்டும் கலங்கியிருக்க அவளின் முகமோ சொல்ல முடியாத துயரத்தில் ஆழ்ந்திருந்தது.

அவளின் பார்வை மறையும் சூரியனின் மீதே நிலைத்திருக்க, ‘இது ஒரு முடிவா..? ஒரு தொடக்கத்தின் ஆரம்பமா..?’ என்ற நினைவில் அவளின் விழிகளிரண்டும் கலங்கியது..

“ஐயையோ இடிஞ்சுப் போச்சே..” என்ற அந்த குழந்தையின் குரல் அவளின் கவனத்தை ஈர்த்தது. அப்பொழுது அவள் அங்கே கண்டகாட்சி அவளின் பார்வையில் சுவாரசியம் கூடியது.

ஒரு ஐந்து வயதை உடைய குழந்தை ஒன்று மணல்வீடு கட்டி விளையாடிக் கொண்டிருந்தது போலும்.. அவள் கட்டிய வீட்டைக் கடலலை அடித்துச் சென்றுவிட அவள் கட்டிய மணல் வீடு இடிந்துவிட்டது. அதற்காகக் கலங்காமல் அந்த குழந்தை மீண்டும் கட்டிய வீட்டை அலைகள் வந்து அடித்துச் சென்றது..

இதுவே மீண்டும் மீண்டும் தொடர அந்த குழந்தையும் தன்னுடைய முயற்சியைக் கைவிடாமல் வீடு கட்டிக்கொண்டு இருந்தது. அந்த செயல் அவளின் மனதில் கேள்வியை எழுப்பிட மெல்ல அந்த குழந்தையின் அருகில் சென்ற நிலா, “பாப்பா மணலில் விளையாடுகிறாயா..” குழந்தையிடம் பேச்சுக் கொடுத்தாள்..

“ம்ம்..” என்ற குழந்தையோ மீண்டும் வீடு கட்டுவதைப் பார்த்து, “இந்த வீட்டையும் கடலலை வந்து அடித்து சென்றுவிடுமே..” குழந்தை வெடுக்கென்று நிமிர்ந்து அவளை பார்த்தது..

அதன்பிறகு, “நான் மீண்டும் கட்டுவேனே..” என்ற குழந்தை மீண்டும் அந்த வீட்டைக்கட்டி முடிக்கும் நேரத்தில் ஒரு பெரிய அலை வந்து அந்த வீட்டை அடித்துச் செல்ல, “நான் சொன்னேன் இல்ல..” அவள் புன்னகைத்தாள் நிலா.

“நான் மீண்டும் கட்டுவேனே..” என்ற குழந்தையோ மீண்டும் தன்னுடைய பணியைத் தொடரவே, சிலநொடி இமைக்காமல் அந்த குழந்தையின் முகத்தையே பார்த்தாள் நிலா..

பிறகு, “நீ கட்டிய வீடு இடிந்துவிட்டதே என்ற கவலையே இல்லையா பாப்பா..” வருத்தத்துடன் அவள் கேட்க, “எதற்கு கவலைப்படனும்?” என்று கேட்டு அவளைத் திகைப்பில் ஆழ்த்தியது அந்த குட்டி வாண்டு தொடர்ந்து,

“இங்கே இவ்வளவு மணல் இருக்கு. வீடு இடிந்தால் மீண்டும் கட்ட இரண்டு கை இருக்கு. என்னிடம் திறமை இருக்கு, முயற்சியும் இருக்கு. அப்புறம் நான் எதற்கு கவலைபடனும்..” அந்த குழந்தையின் பதிலில் திகைத்தாள் நிலா..

“உன்னோட அம்மா வந்து உன்னை வீட்டுக்கு அழச்சிட்டுப் போயிட்டா என்ன பண்ணுவ..” என்றவள் கேட்டதும், “நான் அடுத்தமுறை வரும் பொழுது கட்டுவேன்..” என்றது குழந்தை..

“அடுத்தமுறையும் இடியுமே..” என்றவளின் விழிகள் அவளையும் மீறிக் கலங்கிட, “என்னோட முயற்சியை நான் கைவிட மாட்டேன்..” பிடிவாதமாக கூறியது குழந்தை.

அதற்குள் அங்கு வந்த அந்த குழந்தையின் தாய், “ஏய் வாலு வா போலாம்” என்று குழந்தையை அழைத்துச் சென்றுவிட்டார்..

குளிர்ந்த காற்று அவளின் முகத்தில் மோதிட அவளின் மனதில் ஒரு தெளிவு பிறந்திட, ‘நான் எந்த தவறும் செய்யாத பொழுது, நான் ஏன் கலங்கணும்.’ அந்த இடத்தைவிட்டு எழுந்தாள்..

அவளின் மனதில் ஒரு விடியலுக்கான கதவு திறந்துகொண்டது. அந்த கதவு வழியில் வந்த வெளிச்சத்தைப் பார்த்தவள் புது பறவையாக மாறி சிறகு விரித்துப் பறக்க நினைத்தாள்..

‘கையில் எவ்வளவு பணமிருக்கிறது..?’ என்ற யோசனையுடன் பர்ஸை பார்க்க, இரண்டே இரண்டு இரண்டாயிரம் ரூபாய் நோட்டு அவளைப் பார்த்து சிரித்தது.

ஒரு தெளிவான முடிவுடன் ஒரு கையில் பெட்டியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினாள். ஒரு ஆட்டோ பிடித்து கன்னியாகுமரி ரயில்நிலையம் வந்து சேர்ந்தாள் நிலா..

“காஞ்சிபுரத்திற்கு ஒரு டிக்கெட் கொடுங்க..” என்றவள் டிக்கெட் வாங்கிக்கொண்டு சென்னை செல்லும் எக்ஸ்பிரஸில் ஏறியமர்ந்தாள்.

அதேநேரத்தில் ரயில் நிலையத்தின் முன்னே கார் வந்து நின்றதும், “தேங்க்ஸ் தம்பி.. என்னை சீக்கிரமே கொண்டு வந்து இங்கே விட்டுவிட்டாய்..” காரைவிட்டு இறங்கிய சுமிம்மா டாக்சிக்கு பணம் கொடுத்துவிட்டு ரயில் நிலையத்தின் உள்ளே நுழையப் போனவர்,

மீண்டும் திரும்பி வருவதை வினோதமாக பார்த்த அந்த டிரைவருடன், “தம்பி அம்மாவை ரயில் நிலையத்தில் தான் இறக்கிவிட்டேன் என்று மட்டும் என்னோட பிள்ளைகளிடம் சொல்லாதே..” என்றார் கொஞ்சலாகவே..

“அவர்களிடம் உண்மையைத்தானே சொல்லணும். பொய் சொல்றது தப்பில்ல..” என்றான் டாக்சி டிரைவர்.

“நல்லதுக்காக பொய் சொல்றது தப்பில்ல என்று வள்ளுவர் சொல்லியிருக்கார். அதனால என்னோட நன்மைக்காக நீயும் உன்னோட கொள்கையை கொஞ்சம் காற்றில்விட்டுட்டு இந்த ஒரு பொய் மட்டும் சொல்லுப்பா..” பாவமாகக் கேட்க மனமிறங்கினர் அந்த டாக்சி டிரைவர்..

“என்ன சொல்லணும் என்று சொல்லுங்க அம்மா..” தன்மையாக அவன் கேட்கவே, “என்னை பஸ்டாண்டில் இறக்கிவிட்டேன் என்று சொல்லிவிடு அந்து போதும்..” என்றவரை ஏற இறங்க பார்த்தான் டாக்சி டிரைவர்.

‘இவன் என்ன இந்த பார்வை பார்க்கிறான். நான் என்ன உண்மையா சொல்ல சொன்னே. ஒரே ஒரு பொய்தானே சொல்ல சொன்னேன். அதுக்கு இந்த லுக்கு தேவையாடா..’ என்று மனதிற்குள் நினைத்தார்..

பிறகு, “சரிம்மா..” என்றவன் சொல்ல, “உஸ்ஸ்.. தேங்க்ஸ்டா கண்ணா..” என்றவர் வேகமாக ரயில் நிலையத்திற்குள் நுழைய, “இந்த அம்மா லூசாக இருக்குமோ? பாவம் யார் எல்லாம் இவங்ககிட்ட மாட்டிட்டு முழிக்க போறாங்களோ?” என்று தனியாக புலம்பினான்..

அவர் உள்ளே நுழையவும் ரயில் வரவும் சரியாக இருக்க, ‘ஹப்பாடா சுமித்ரா இனிமேல் கன்னியாகுமரி பக்கம் தலைவைத்துப் படுக்கக்கூடாதுடி..’ என்றவர் ரயிலில் ஏறினார்..

கம்பார்ட்மெண்டின் உள்ளே நுழைந்ததும், அந்த பெண்ணை சிந்தனையுடன் பார்த்த சுமிம்மா அவளின் அருகில் அமர்ந்தார். தன்னருகே யாரோ அமரும் ஆரவாரம் கேட்டு தன் கவனம் களைந்து திரும்பிய நிலா சுமிம்மாவைப் பார்த்துவிட்டு மீண்டும் திரும்பி அமர்ந்தாள்..

நிலாவை போல அழகாக இருந்த வட்ட முகமும், கலங்கிய சிவந்து இருக்கும் விழிகளும், வலதுபுறம் மூக்கில் மின்னும் சின்ன மூக்குத்தி அவளின் அழகிற்கே அழகு சேர்க்கும். அவளின் சிவந்த இதழ்களின் புன்னகை வர மறுத்தது. அவளின் கூந்தல் இடையைத் தழுவிச்சென்றது. அவள் அணிந்திரிந்த புடவை கூட அவளுக்கு பந்தமாக பொருந்தியது.

கொடிபோல இருந்த அவளின் உடல் தோற்றத்தைப் பார்த்தும் அந்த பெண்ணின் வயது குறைந்தது பதினேழு இருக்கும் என்று மனதளவில் எடை போட்டுவிட்டார் சுமிம்மா. அவரின் மனதில் ஏனோ சந்தேகம் எழுந்தது.

ரயில் கிளம்புவதற்கு உண்டான அறிவிப்பு வர ரயில் மெல்லக் கிளம்பியது. அந்தநேரத்தில் கம்பார்ட்மெண்டின் உள்ளே நுழைந்த புதியவனைப் பார்த்தவளின் மனதில் பயம் எழுந்தது.

கிட்டதட்ட ஆறடிக்கும் குறையாத உயரமும், திரண்ட தோள்களும், மாநிறம் கொண்ட அந்த புதியவனை தன் எதிரே திடீரென கண்டதும் திடுக்கிட்டுப் போனாள் நிலா..அதை வெளிக்காட்டாமல் மனதிற்குள் மறைத்தாள்..

அவளின் விழிகளை வைத்தே அவளின் பயத்தை உணர்ந்த புதியவனின் முகத்தில் புன்னகை கீற்றுபோல வந்து சென்றது..

தன்னுடைய சீட் நம்பர் பார்த்து அவளின் எதிரே அமர்ந்ததும், அவள் பார்வையை வெளிப்பக்கம் நோக்கி திருப்பிவிட அவனும் ஒரு ஹெட்செட் எடுத்து காதில் வைத்துப் பாடல் கேட்கத தொடங்கினான்..

“தடக்.. தடக்..” என்ற ரயில் ஓசை கேட்டவண்ணம் அமைதியாக விழிமூடி தன்னை மறந்து உறங்கினாள். பல நாட்களுக்கு பிறகு அவளின் விழிகளைத் தூக்கம் தழுவியது.

அவள் தூக்கத்தில் சுமிம்மாவின் தோள் சாயவே, “நல்லா தூங்கறாப் போல..” என்றவரின் குரல்கேட்டு நிமிர்ந்து பார்த்தான் அவன்.

ஆழ்ந்த தூக்கத்திலிருந்தவளின் குழந்தை முகம் அவனை வெகுவாக கவர்ந்ததுவிட, தன்னுடைய ஹெட்செட்டை காதிலிருந்து எடுத்துவிட்டான்.

அவனின் பார்வை அவளின் மீதே நிலைத்திருப்பதை உணர்ந்த சுமிம்மா, “எத்தனை நாள் தூங்காமலிருந்தாளோ தெரியல..” அவளின் தலையை மென்மையாக வருடிவிட்டார்.

அவரின் அந்த இயல்பான குணம் அவனுக்கு பிடித்துவிடவே, “ம்ம் ரொம்ப சோர்வாக தெரியறாங்க..” என்றதும், “உன்னோட பெயர் என்னப்பா? நீ எங்கே போயிட்டு இருக்கிற?” என்று கேட்டார்.

“என்னோட பெயர் கவிபாரதி அம்மா. நான் ஒரு டாக்டர். ஒரு முக்கியமான பெசண்ட் பார்க்க காஞ்சிபுரம் போயிட்டு இருக்கேன்” என்றவன் புன்னகையுடன்..

“ம்ம் பரவல்ல நல்ல படிப்புதான்”  புன்னகைக்க, “நீங்க அம்மா” என்று இழுத்தான்.

“என்னோட பெயர் சுமித்ரா தம்பி. நான் முன்னாடி தாசில்தாராக இருந்தேன். இப்பொழுது வேலையை ரிஸைன் பண்ணிட்டு காஞ்சிபுரம் போயிட்டு இருக்கேன்..” என்றார்..

“வேலை வேண்டாம் என்று சொல்லிட்டு ஊருக்கு போறீங்க போல. உங்களோட பசங்க எல்லாம் காஞ்சிபுரத்தில் இருக்காங்களா?” என்றதும் எதையோ நினைத்து புன்னகைத்தவர், “இல்லப்பா என்னவோ அந்த ஊருக்கு போகணும் போல இருந்தது அதன் கிளம்பிட்டேன்” என்றார் சுமிம்மா..

“அப்போ வயசாகி போச்சு அப்படியே கோவில் குளம் என்று சுத்தலாம் என்று கிளம்பிட்டிங்க..” கிண்டலடிக்க, “என்னடா தம்பி என்னையே நீ கலாய்க்கிற?” என்று தன் வழக்கமான குறும்புடன் கேட்டார்..

“உண்மையைத்தானே சொன்னேன்..” அவன் விடாமல் வம்புவளர்க்க, “நான் உண்மையை உன்னிடம் சொன்னேனா? சும்மா என்னை வம்பிற்கு இழுக்காதே இது சரியில்லடா கண்ணா..” இயல்பாக அவனுடன் பேச தொடங்கினார்..

“கண்ணா சுமிம்மா பற்றி தெரியாமல் பேசற இது சரியில்ல..” அவரின் மிரட்டலில், “சரிம்மா கோபபடதீங்க..” என்றவனிடம், “உன்னோட போன்ல பட்டுபோட்டுவிடுப்பா..” என்றார் சுமிம்மா.

“சரிம்மா” ஹெட்செட்டை எடுத்துவிட பாடல் ஒலிக்கவிடவே தூக்கம் கலைந்து கண்விழித்தவள் அப்பொழுது தான் சுமிம்மாவின் தோளில் சாய்ந்திருப்பது உணர்ந்தாள்.

“மன்னிக்கொங்க அம்மா. தூக்கக் கலக்கத்தில்..” அவள் இழுக்க, “அதனால் இப்போ என்ன ஆகிபோச்சு. நான் என்ன ஒருப்பக்கம் தேஞ்சு போயிட்டேனா” குறும்புடன் கேட்டார்.

“எனக்கு என்னவோ நீங்க தேஞ்சிட்ட மாதிரி தோணுது அம்மா..” அவளின் உதட்டில் புன்னகை அரும்பிட அவனின் பார்வை அவளின் மீது படிந்தது..

‘நான் என்ன பண்ணிட்டு இருக்கிறேன்..?’ பார்வையைத் திசை திருப்பிட பாடல் மெல்ல ஒலிக்க, மெளனமாக அந்த பாடல் வரிகளை மனதிற்குள் உள்வாங்கிக் கொண்டாள்..

வாடைக்காலம் சென்றிடலாம்..

வேனிற்காலம் வந்திடலாம்..

சோலைத் தென்றல் பாடிடலாம்..

சோகம் நீங்கி ஆடிடலாம்..

நீ பாடக்கூடும் ஓர் புதியராகம்..

ஊர் புதிய ராகம் ஹோ..” பாடலின் வரியினைக்கேட்டு அவளின் முகத்தில் புன்னகை அரும்பியது..

அவளின் புன்னகை ரசித்தவனின் மனதில் முதல் முதலாக ஒரு சலனம் ஏற்றப்பட, ‘என் மனதில் சிறுசலனமா..?’ என்றவன் விழிமூடிக் கொண்டான்.. ஜன்னலோரம் வழியாக வீசிய பூந்தென்றல் அவனுக்கு தாலாட்டு பாடிட தன்னை மறந்து உறங்கிவிட, சுமிம்மாவும் மெல்ல தூங்கிவிட்டார்.

வாழ்க்கையில் வரவிருக்கும் புதிய விடியலுக்கான கதவுகள் விழிமூடாமல் காத்திருந்தாள். மறுநாள் காலைபொழுது அழகாக விடிந்துவிட தன் தூக்கம் கலைந்து விழிதிறந்து பார்த்தவனின் விழிகளில் விழுந்தாள் நிலா.

ரயில் காஞ்சிபுரம் ஜெங்க்சனில் நின்றதும், “காஞ்சிபுரம்  வந்துவிட்டதா?”  தன்னுடைய பெட்டியை எடுத்துகொண்டு கீழ் இறங்கினார் சுமிம்மா.. அவரின் பின்னோடு கலைநிலா, கவிபாரதி இருவரும் இறங்கினர்.

சுமிம்மா எந்தப்பக்கம் போவது என்ற யோசனையுடன் நின்றிருக்க, “அம்மா நானும் இதே ஊரில்தான் இருக்கிறேன். நீங்க ஃப்ரீயாக இருந்தால் ஒருநாள் வீட்டிற்கு வாங்க..” என்று அழைத்தவன் அவரின் கையில் ஒரு விஸ்டிங் கார்டு கொடுத்தான்.

“சரிடா கண்ணா..” என்றதும், “சரிங்க அம்மா நான் கிளம்புகிறேன்” அங்கிருந்து கிளம்பிவிடவே திடீரென்று மழை பொழிந்திட அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தாள் கலைநிலா.

குளிர்காற்று முகத்தில் மோதிட தன்னையே புதிதாக உணர்ந்தவளின் உதட்டில் புன்னகை அரும்பியது. அந்த மழை அவளின் மனதை மயக்கிட அடுத்து என்ன செய்ய போகிறோம் என்ற சிந்தனை இல்லாமல் மழையை ரசித்தாள்.

இதுநாள்வரை அவளின் மனதை அழுத்திய துயரங்கள் எல்லாம் தூரம் சென்றுவிட வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் ரசித்து வாழ வேண்டும் என்ற முடிவுடன் அந்த ஊர் மண்ணில் காலை வைத்தாள் நிலா..

அவளின் அருகில் அமர்ந்த சுமிம்மா, “என்னம்மா வீட்டிற்கு போகாமல் இங்கேயே உட்கார்ந்திருக்கிற? உன்னை அழச்சிட்டு போக யாராவது வருவாங்களா?” என்று கேட்க நிமிர்ந்து அவரின் முகம் பார்த்தாள்.

“ம்ம் ஆமாம்மா அவங்களோட வரவிற்கு தான் காத்திருக்கிறேன்..” என்று பொய் சொல்லிவிட்டு எதையோ நினைத்து சிரிக்க, “உன்னோட பெயர் என்னடா..” என்று கேட்டார்..

“கலைநிலா..” என்று புன்னகைத்தவள், “உங்களை அழச்சிட்டு போக யார் வருவாங்க அம்மா..” என்று இயல்புடன் அவள் கேட்டுவிட, “மழை நின்றதும் நானேதான் போகணும் நிலா. என்னை அழைச்சிட்டு போக யாரும் வரமாட்டாங்க..” என்று புன்னகைத்தார்..

அதற்குள் மழை தூறல் நின்றுவிட, “சரிம்மா நான் கிளம்புகிறேன்..” அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு சுமிம்ம அங்கிருந்து செல்ல, அப்பொழுது பொழுது அங்கே வந்த பெரியவர் ஒருவர் மயங்கி விழுந்தார்..

உடனே பதறியடித்து அவரின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பிவிட, “நன்றிம்மா” என்றார் அந்த பெரியவர்.

“வாங்க நான் உங்களை உங்களோட வீட்டில் கொண்டு போய் விடுகிறேன்” என்றவளிடம், “என்னோட வீடு இங்கேதான்..” என்றார்

“சரி வாங்க நான் உங்களை உங்களோட வீட்டில் விட்டுவிட்டு போகிறேன்” என்றதும் அவர் மறுக்கவே, “நீங்க வாங்க..” அவரை அழைத்துக்கொண்டு சென்றாள்.

ஆளுக்கு ஒரு திசையில் பிரிந்து சென்ற இவர்கள் மூவரும் மீண்டும் சந்திக்க வாய்ப்புகள் அமையுமா?

மொட்டு வளரும்..