Mp15

மோகனப் புன்னகையில் 15

காலையிலேயே அத்தானின் வீட்டிற்கு வந்து விட்டாள் சுமித்ரா. விஜயேந்திரனுக்கு முக்கியமான வேலை இருந்ததால் அவன் வரவில்லை.

“சுமித்ரா! வாங்க வாங்க.” இது ரோஸி.

“வீடெல்லாம் ஓகே வா ரோஸி? வசதியா இருக்கா? குட்டிப் பையன் என்ன பண்ணுறான்?” கேட்டபடியே உள்ளே நுழைந்தாள் சுமித்ரா.

“எல்லாம் நல்ல வதியா இருக்கு சுமித்ரா. ரவி தூங்குறான். புது இடம் இல்லையா? அதால நைட் சரியாத் தூங்கலை. அதுதான் இப்போ தூங்குறான்.”

“அத்தான் எங்கே?”

“அப்பாவும் மகனும் தான் தூங்குறாங்க.”

“ஓ… நான் நேத்து இங்கிருந்து கிளம்பும் போதே அத்தைக்குக் கால் பண்ணிட்டேன். இந்நேரத்துக்குக் கிளம்பி எங்க வீட்டுக்கு வந்திருப்பாங்க.”

“சுமித்ரா…”

“சொல்லுங்க ரோஸி. எதுக்குத் தயங்குறீங்க?”

“இல்லை… ரவியை அங்க நீங்க கூட்டிட்டுப் போறது சந்தோஷம் தான், இல்லேங்கலை. ஆனாலும்…”

“புரியுது ரோஸி. உங்க மனசோட பயம் எனக்கு நல்லாவே புரியுது. இருந்தாலும் யோசிச்சுப் பாருங்க. நீங்களும் அத்தானும் அந்த நொடியை எப்போ இருந்தாலும் சந்திச்சுத் தானே ஆகணும்?‌ எதுக்கு வீணா நாளைக் கடத்தணும்?”

“………….”

“அத்தை ரொம்ப நல்லவங்க ரோஸி. தன் பையன் இப்படிப் பண்ணிட்டானே ங்கிற ஆத்திரம் தானே தவிர அவங்க உங்களையெல்லாம் வெறுக்கலை. முன்னாடியாவது என்னைக் காரணம் காட்டிக் கோபப் பட்டாங்க. இப்போ அதுவும் சொல்ல முடியாதே.‌ சத்தம் போடுவாங்க ஆர்ப்பாட்டம் பண்ணுவாங்க. இல்லேங்கலை. ஏத்துக்குவோம். வேற என்ன பண்ண முடியும் சொல்லுங்க?”

அதற்கு மேல் ரோஸியும் எதுவும் பேசவில்லை. சுமித்ரா சொல்வது நியாயம் தான் என்று அறிவிற்குப் புரிந்தாலும் மனம் கிடந்து அடித்துக் கொண்டது. 

இவர்களின் பேச்சுக்குரலில் குழந்தை விழித்துக் கொள்ள மகனைத் தூக்கியபடி ரூமை விட்டு வெளியே வந்தான் கரிகாலன்.

“குட்மார்னிங் அத்தான்.”

“குட்மார்னிங் சுமி.”

“குட்டிப் பையா குட்மார்னிங். வாங்க வாங்க.” குழந்தைக்காக அவள் கையை நீட்ட இப்போது கரிகாலனின் கழுத்தைக் கட்டிக் கொண்டான் ரவி.

“ஐயையோ! எங்கிட்ட வரமாட்டீங்களா?”

“இப்போ தான் தூங்கி முழிச்சிருக்கான் இல்லையா? அதான், கொஞ்ச நேரம் போனதும் வந்திடுவான். அதை விடு சுமி. உன்னோட அத்தை எப்படி? உங்கிட்ட நல்லாப் பழகுறாங்களா?”

அத்தானின் கேள்வி சுமித்ராவைக் கொஞ்சம் சங்கடப் படுத்தியது. லேசாகப் புன்னகைத்தவள் தலையைக் குனிந்து கொண்டாள். ரோஸியும் கரிகாலனும் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக் கொண்டனர்.

“சுமித்ரா!”

“குறைன்னு எதுவும் சொல்ல முடியாது அத்தான். அரண்மனையோட மருமகள் எங்கிற அந்தஸ்தை அவங்க என்னைக்கும் எனக்குத் தர மறுத்ததில்லை. எல்லாத்துக்குமே என்னைத்தான் முன்னிறுத்துவாங்க. ஆனா, அதைத் தாண்டி வேற எதையும் எதிர்பார்க்க முடியாது.”

“ம்… பேசுவாங்களா?”

“தேவை இருந்தா மட்டும். அவர் கூடவும் பேசுறதில்லை.”

“ஏன்?”

“ரொம்ப நாளாக் கல்யாணம் பண்ணாம இருந்தது. இப்போ அவங்க அப்பாக்குப் பிடிக்காதுன்னு தெரிஞ்சும் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டது.”

“நீ சந்தோஷமா இருக்கியா சுமித்ரா?” இதைக் கரிகாலன் கேட்ட போது சுமித்ராவின் முகம் மலர்ந்து போனது.

“நான் ரொம்பவே சந்தோஷமா இருக்கேன் அத்தான். அவங்க ரொம்ப நல்ல மாதிரி. வீட்டுல வேலை செய்யுற மனுஷங்க கிட்டக் கூட நல்லா சிரிச்சுப் பேசுவாங்க. எந்த வேறுபாடும் பார்க்க மாட்டாங்க.”

“தெரியும் சுமி. படிக்கிற காலத்திலேயே ராஜா அப்படித்தான். நல்லாப் பழகுற ரகம். ஆனா எங்களால தான் ஒரு எல்லைக்கு மேல நெருங்க முடியலை. அது அப்படியே பழகிப் போச்சு.”

“அவங்க அம்மாக்கிட்டக் கூட என்னை விட்டுக் குடுக்க மாட்டாங்க. அவங்க அப்படி இருக்கிறதாலேயோ என்னவோ, எனக்கு என்னைச் சுற்றி இருக்கிற குறைகள் புரிய மாட்டேங்குது.”

“இவ்வளவு பிரச்சினைக்கு நடுவுல எதுக்கு சுமித்ரா ஸ்டீஃபன் விஷயத்துல ராஜா இவ்வளவு அக்கறை எடுத்துக்கணும்?” கரிகாலனின் பேச்சில் திடுக்கிட்ட சுமித்ரா ரோஸியைச் சட்டென்று திரும்பிப் பார்த்தாள். 

ரோஸியையும் வைத்துக்கொண்டு அத்தான் இத்தனை வெளிப்படையாகப் பேசியது அவளுக்கு என்னவோ போல் இருந்தது. ஆனால் ரோஸியின் முகத்தில் எந்த மாற்றமும் தெரியவில்லை. இயல்பாகவே இருந்தாள்.

“உங்களோட வாழ்க்கையில பிரச்சினை வரும்னு தெரிஞ்சும் எதுக்கு இந்த விஷப் பரீட்சை?”

“அப்படியில்லை அத்தான். ஸ்டீஃபன் மேல எந்தத் தப்பும் இருக்கிற மாதிரி எனக்குத் தோணலை. பொண்ணு தான் ஆசைப்பட்டிருக்கு. அதை ஸ்டீஃபனுக்கும் தெரியப்படுத்தி இருக்கு. இது சரியா வராதுன்னு புரிஞ்சிக்கிட்டு ஸ்டீஃபன் புத்திதான் சொல்லியிருக்கார். அதைத் தாங்கிக்க முடியாமத் தான் மாத்திரையை சாப்பிட்டுட்டா.”

“என்ன முட்டாள்த்தனம் இது சுமித்ரா. ஸ்டீஃபன் கிட்டச் சொல்லி என்னால புரிய வைக்க முடியும். ஸ்டீஃபனும் புரிஞ்சுக்கிற பையன் தான். ராஜா இடையில நிக்குறதால என்னால எதுவுமே பண்ண முடியலை.”

“இல்லை அத்தான். நானும் அவங்க கிட்ட பேசிப் பார்த்தேன். ஆனா அவங்க எதையும் ஏத்துக்கிற மனநிலையில இல்லை. அவங்க அனுபவிச்ச வலியை மங்கையை அனுபவிக்க விட மாட்டேன்னு சொல்லிட்டாங்க.”

“இதால உங்க வாழ்க்கையில நிறையப் பிரச்சினைகள் வரும் சுமித்ரா.”

“அதைப்பத்தி அவங்க கவலைப் படவேயில்லை. மங்கைக்கும் வாக்குக் குடுத்திருக்காங்க. இந்தக் கல்யாணத்தை எப்பாடு பட்டாவது நடத்திக் குடுப்பேன்னு.”

“ஓ…” ஒரு பெருமூச்சோடு பேச்சை நிறுத்திக் கொண்டான் கரிகாலன். இதனால் இன்னும் எழப்போகும் பிரச்சினைகள் அவன் கண் முன் வரிசை கட்டி நின்றன. 

‘ராஜா’ என்பதைத் தாண்டி விஜயேந்திரன் இப்போது அவர்கள் வீட்டு மாப்பிள்ளை. அந்த வார்த்தைக்குண்டான மரியாதையைக் கொடுத்துத் தானே ஆகவேண்டும்!

இதுவே வேறு யாருமாக இருந்திருந்தால் முழு மூச்சாக எதிர்த்திருப்பான். ஆனால் முன்னே நிற்பது விஜயேந்திரன் எனும் போது அமைதியாகக் தான் போக வேண்டி இருந்தது.

?????????

“அம்மா… அத்தை…” அழைத்தபடியே உள்ளே நுழைந்தாள் சுமித்ரா. துவாரகா விற்கு வந்திருந்தாள். கையில் ரவிவர்மன்.

“அடடே! சுமித்ரா வா வா. இது யாரு குழந்தை?” சமையலறையிலிருந்து வந்த தில்லைவடிவு ஆச்சரியமாக நின்று விட்டார். சுமித்ராவின் பெற்றோர் மாமா சங்கரன் எல்லோரும் அப்போது வீட்டில் தான் இருந்தார்கள். 

“அதை விடு அத்தை. குழந்தை எப்படி இருக்கான்? அதை முதல்ல சொல்லு.”

“ராஜா கணக்காத்தான் இருக்கான். வெள்ளைக்கார தொரை மாதிரியில்லை இருக்காரு. யாரு குழந்தை சுமி இது?” குழந்தையின் கன்னத்தை வழித்து முத்தமிட்ட வடிவிற்கு ஆச்சரியம் தாங்கவில்லை.

“வெள்ளைக்காரத் தொரை தான் அத்தை. ஏன்னா ஐயா கனடா வில இருந்து இல்லை வந்திருக்காரு.” சுமித்ராவின் வார்த்தைகளில் அத்தையின் முகத்தில் அனல் பறந்தது. வீட்டிலிருந்த மற்றவர்கள் அனைவரும் ஸ்தம்பித்துப் போனார்கள்.

“ஏன் அத்தை ஒன்னும் பேச மாட்டேங்குறே? யார் குழந்தை யார் குழந்தை ன்னு இவ்வளவு நேரமும் கேட்டியே… இந்தக் குழந்தையை முதல் முதலா பார்த்தப்போ எனக்கு உன்னைப் பார்த்த மாதிரித் தான் இருந்தது.” ஓர் நொடி அத்தையின் கண்கள் குழந்தையை ஆசையாகப் பார்த்தது.

“உன்னோட வாரிசு அத்தை. உன்னோட ரத்தம். ரெண்டு வருஷம் ஏற்கனவே வீணாப் போச்சு. இன்னும் மூனு வாரம் தான் இந்தியாவுல இருப்பாங்க.‌ அதுக்குள்ள உன் பேரனைக் கொஞ்சி முடிச்சுக்கோ.” புன்னகையோடு பேசினாள் சுமித்ரா. அத்தையின் முகம் கோபத்தில் சிவந்து போனது.

“வெளியே போடீ!” அத்தையின் சத்தத்தில் குழந்தை பயந்து போய் சுமித்ராவின் கழுத்தைக் கட்டிக் கொண்டது.

“அத்தை! எது பேசுறதா இருந்தாலும் அமைதியாப் பேசு. குழந்தை பயப்பிடுறான் பாரு.” சுமித்ராவும் அமைதியாகவே ஒரு அதட்டல் போட்டாள்.

“எங்கேடீ அவன்? உன்னோட நொத்தான். உன் கையில குழந்தையைக் குடுத்து சமாதானத் தூது அனுப்பிட்டு அவன் எங்கே மறைஞ்சு நின்னு வேடிக்கை பார்க்குறான்?”

“அத்தை, தேவையில்லாமப் பேசக்கூடாது. நான் ரவியை இங்க கூட்டிட்டு வர்றதுக்கே அத்தான் சம்மதிக்கலை. நான் தான் சண்டை போட்டுக் கூட்டிட்டு வந்திருக்கேன்.”

“ஓ! ஐயாக்கு அது வேற பிடிக்கலையோ?”

“வடிவு!” இப்போது சங்கரன் ஒரு அதட்டல் போட்டார். மனைவியின் வார்த்தைகள் தடிப்பது அவருக்குப் புரிந்தது.

“புரிஞ்சுக்கோ அத்தை. அத்தான் பண்ணினது தப்புத் தான், இல்லேங்கலை. அதுக்காக இன்னும் எத்தனை நாளைக்கு அவங்களை ஒதுக்கி வெப்பே? இத்தனை நாளா என் வாழ்க்கையைப் பாழாக்கிட்டாங்கன்னு சொன்னே. இப்போ தான் நான் நல்லா இருக்கேனே. இனியும் எதுக்கு வீணா விரோதத்தை வளர்க்குறே.” 

“ஆமா! விரோதம் தான். எங்க தலையில மண்ணை அள்ளிக் கொட்டிட்டு எவளோ ஒருத்தி தான் பெரிசுன்னு போனவன் மேல மனசு நிறைஞ்ச விரோதம் தான். என்ன பண்ணச் சொல்லுறே? நான் இப்படித்தான்.” ஆங்காரமாக வந்தது வடிவின் குரல்.

ஏற்கெனவே அங்கு நடந்த விவாதத்தால் பயந்து போய் சுமித்ராவின் கழுத்தைக் கட்டிக் கொண்டிருந்த குழந்தை இப்போது வடிவு போட்ட சத்தத்தில் வீறிட்டு அழ ஆரம்பித்தது. 

“ஐயையோ! குட்டிப் பையன் எதுக்கு அழறீங்க? பாட்டி உங்களை ஒன்னும் சொல்லலை கண்ணா. இங்கே பாருங்க.” சுமித்ரா எவ்வளவு சமாதானம் பண்ணியும் குழந்தையின் அழுகை நிற்கவில்லை.

முகம் சிவந்து போய் கண்களில் நீரோடு அழுதபடி இருந்த அந்தப் பிஞ்சு முகத்தைப் பார்த்த போது அங்கிருந்த அத்தனை பேருக்கும் உருகி விட்டது.

எப்போது எப்படி வந்திருந்தால் என்ன? இப்போது இங்கு அழுது கொண்டிருப்பது கரிகாலனின் குழந்தை. அது இல்லையென்று ஆகிவிடுமா?

தமிழ்ச்செல்வி ஓடி வந்து குழந்தையை வாங்கிக் கொண்டார். எத்தனை சமாதானம் செய்த போதும் குழந்தை அழுகையை நிறுத்தவில்லை.

வெளி வேலையாகப் போயிருந்த விஜயேந்திரன் வேலையை முடித்த கையோடு நேராகக் கரிகாலன் வீட்டிற்குத் தான் வந்தான். மனைவியின் குணம் அவன் நன்கறிந்தது என்பதால் அவன் அரண்மனைக்குப் போகவில்லை.

“வாங்க ண்ணா.” ரோஸி தான் ஓடிவந்து வரவேற்றாள்.

“சுமித்ரா எங்கம்மா?”

“ரவியைத் தூக்கிக்கிட்டு அவங்க வீடு வரைக்கும் போயிருக்காங்க.”

“கரிகாலன்?”

“அவங்களும் கூடப் போயிருக்காங்க ண்ணா.” ரோஸியின் முகத்தில் பதட்டமா, கவலையா என்னவென்று புரிந்து கொள்ள முடியாத உணர்வொன்று தெரிந்தது.

“இதுல கவலைப்பட என்ன இருக்கு ரோஸி? எப்ப இருந்தாலும் அங்க போய்த்தானே ஆகணும்?”

“……………”

“நான் பார்த்துக்கிறேன். கவலைப்படத் தேவையில்லை. வீடெல்லாம் சௌகரியமா இருக்கா?”

“இருக்கு ண்ணா.”

“அப்போச் சரி. நான் கிளம்புறேன் ரோஸி.” வந்த வேகத்திற்கு விஜயேந்திரனும் துவாரகா நோக்கி காரைத் திருப்பி விட்டான்.

எவ்வளவோ மறுத்தும் கேளாமல் குழந்தையோடு கிளம்பிய சுமித்ராவைத் தனியே அனுப்ப மனமில்லாமல் கூடவே போனான் கரிகாலன். இருந்தாலும் வீட்டுக்குள் போக தைரியம் இருக்கவில்லை. காரிலேயே அமர்ந்து விட்டான்.

குழந்தையின் அழுகுரல் கேட்டபோதே வெளியே இருந்த கரிகாலனுக்கு உடம்பெல்லாம் பதறியது. கட்டுப் படுத்திக் கொண்டான். ஆனால் அழுகை ஓயாமல்ப் போகவும் அதற்கு மேல் அங்கே உட்கார்ந்திருக்க முடியாமல் வீட்டிற்குள் போனான்.

கரிகாலனை அப்போது அங்கு யாரும் எதிர் பார்த்திருக்கவில்லை. திடுதிடுப்பென்று வந்து நின்ற குழந்தையே அவர்களுக்கு ஆச்சரியம் என்றால், கரிகாலன் வந்து நின்ற போது உறைந்து போனார்கள்.

ஆனால் இது எதுவும் தில்லை வடிவிடம் எடுபடவில்லை. மகனைக் கண்ட மாத்திரத்தில் ஆத்திரம் தலைக்கேற கரிகாலனின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார். அத்தை அறைவதற்கும் விஜயேந்திரன் உள்ளே வருவதற்கும் சரியாக இருந்தது.

“அத்தை!” சுமித்ரா தான் கத்தினாள்.

“வாயை மூடுடி!” பதிலுக்கு தில்லைவடிவும் சத்தம் போட்டார். இது எதையும் கரிகாலன் கண்டு கொள்ளவில்லை. நேராகத் தமிழ்ச் செல்வியிடம் போனவன் குழந்தையை வாங்கிக் கொண்டான். 

அப்பாவைக் கண்டதும் குழந்தை பாய்ந்து தாவிக் கொண்டான். கரிகாலனின் கழுத்தைக் கட்டிக் கொண்ட ரவி அங்கே முகம் புதைத்துக் கொண்ட காட்சியைப் பார்த்த போது செல்விக்குக் கண்கள் கலங்கியது. 

தான் வளர்த்த பையன்… இன்று அவனுக்கே ஒரு குழந்தை இருக்கிறது. கண்கள் கலங்கக் கரிகாலனைப் பார்த்துப் புன்னகைத்தார் செல்வி. கரிகாலனும் பெயருக்குப் புன்னகைத்து வைத்தான். மனதுக்குள் ஒரு புயலே அடித்தது.

“இப்போ எதுக்கு மாப்பிள்ளை இவன் இங்க வந்திருக்கான்?”

“அத்தை! நீ கொஞ்சம் அமைதியாவே இருக்க மாட்டியா?” விஜயேந்திரனிடம் கேட்ட கேள்விக்கு சுமித்ரா பதில் பேசினாள்.

“அம்மா! கரிகாலன் பண்ணினது தப்புத் தான் இல்லேங்கலை. அதுக்காக இன்னும் எத்தனை நாளைக்கு அவனைத் தண்டிப்பீங்க? மறந்துடுங்கம்மா.”

“எதை மாப்பிள்ளை மறக்கச் சொல்லுறீங்க? நம்ம வீட்டுப் பொண்ணு வாழ்க்கை எப்படிப் போனாலும் பரவாயில்லை. எவளோ ஒருத்தி தான் முக்கியம்னு போனானே அதை மறக்கச் சொல்லுறீங்களா? ஊரே எங்களைக் கேள்வியாக் கேட்டப்போ இதோ… இங்க தொங்காம இன்னைக்கு வரைக்கும் உசிரோட நிக்கிறோமே, அதை மறக்கச் சொல்லுறீங்களா?” வீட்டின் உத்தரத்தை நோக்கிக் கையைக் காட்டிப் பேசினார் தில்லை வடிவு.

அத்தையின் பேச்சில் இருந்த நியாயம் விஜயேந்திரனுக்குப் புரிந்தாலும் நிலைமையை இப்போது சமாளிக்க வேண்டுமே. சங்கரனைத் திரும்பிப் பார்த்தான் அரண்மனைக்காரன்.

‘நீங்களாவது கொஞ்சம் பேசக்கூடாதா!’ என்ற இறைஞ்சல் அதில் இருந்தது.

“அவ பேசுறது எல்லாமே நியாயம் மாப்பிள்ளை. நாங்க அவனை வளர்த்ததை விட இதோ… இந்த நம்பி வளர்த்தது தான் அதிகம். வேலைக்காக ஊர் ஊரா அலைஞ்சவன் நான். இந்த நம்பிக்குத் தான் தங்கை பையன் எங்கிற கடமை இருந்தது. இந்தச் செல்விக்கு என்ன தேவை சொல்லுங்க? பெத்த புள்ளை மாதிரி பார்த்துக்கிட்டா. அதுக்கு இவன் பண்ணின கைம்மாறு இதுதானா?” சங்கரனும் தன் பங்கிற்கு நெருப்பைக் கொளுத்திப் போட்டார்.

“விடுங்க அண்ணா! இவ்வளவு காலம் கழிச்சு வீட்டுக்கு வந்த பையனை ஆளாளுக்கு நிக்க வெச்சுக் கேள்வி கேக்குறது நல்லாவே இல்லை. ஆசைப்பட்ட பொண்ணைக் கட்டிக்கிட்டான். அது அவ்வளவு பெரிய குத்தமா?” இது செல்வி.

“ஆமாடியம்மா! இப்போ நீ இதுவும் பேசுவே… இன்னமும் பேசுவே. அன்னைக்கு உம்பொண்ணு வாழ்க்கையைத் தொலைச்சிட்டு நின்னப்போ தலையில அடிச்சிக்கிட்டு ஒப்பாரி வெச்சயே! அது மறந்து போச்சா?”

“எதையும் மறக்கலை அண்ணி. இதே கரிகாலன் அன்னைக்கு என் கண்ணு முன்னாடி வந்து நின்னிருந்தா இன்னைக்கு நீங்க விட்ட அறையை அன்னைக்கு நானே விட்டிருப்பேன். இல்லேங்கலை. அதுக்காக? அந்த வன்மத்தை இன்னும் மனசுல வச்சுக்கிட்டு நம்ம குழந்தையை நாமே வதைக்கிறது நல்லா இல்லை அண்ணி. அந்தச் சின்னக் குழந்தை என்ன பண்ணிச்சு? இவ்வளவு சொந்தம் இருந்தும் யாருமே இல்லாம வளருது. இது பாவம் இல்லையா?”

“நீ என்ன சொன்னாலும் என்னால எதையும் ஏத்துக்க முடியாது செல்வி. முதல்ல அவனை வெளியே போகச் சொல்லு.” வடிவின் முடிவு உறுதியாக இருக்க அம்மாவை ஒரு தரம் திரும்பிப் பார்த்தான் கரிகாலன். அந்த முகத்தில் இருந்த பிடிவாதம் அவனுக்கு லேசான வருத்தத்தைக் கொடுத்தாலும் ஒரு புன்னகையோடு நகர்ந்து விட்டான். இங்கே இதற்கு மேலும் நின்றால் அம்மாவின் கோபம் இன்னும் அதிகமாகும் என்று அவனுக்குத் தெரியும்.

“கரிகாலா!” செல்விக்கு மனது பொறுக்கவில்லை. அழுதழுது பின் அப்பாவின் தோளில் தூங்கி விட்டிருந்த குழந்தையைச் சுமந்தபடி காரை நோக்கிப் போன கரிகாலனின் பின்னோடு ஓடினார்.

“என்னப்பா நீ? இத்தனை வருஷம் கழிச்சு வீட்டுக்கு வந்திட்டு எதுவுமே சாப்பிடாமப் போறே?”

“அத்தை! உனக்கு எம்மேல கோபமே வரலையா?”

“வந்தது கரிகாலா. அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி உன்னைக் கொல்லலாம் போல ஆத்திரம் வந்தது. ஆனாலும் அதைப் பிடிச்சிக்கிட்டுத் தொங்க முடியலை. நீயும் எனக்குப் பிள்ளை தானே? அப்படியிருக்கும் போது எப்படி டா என்னால உன்னை வெறுக்க முடியும்?”

“அத்தை!” கரிகாலனின் கண்கள் கலங்கியது.

“ஏன் உன் வீட்டுக்காரியைக் கூட்டிக்கிட்டு வரலை?”

“அத்தை… அது வந்து…”

“எதுக்கு மென்னு முழுங்கிறே. உங்கம்மாக்குப் பயந்துக்கிட்டு கூட்டிட்டு வரலை. அதுதானே? எனக்கு அது நல்லாப் புரியுது. நாளைக்கு நான் உங்க வீட்டுக்கு வரட்டுமா?” கிசுகிசுப்பான குரலில் கேட்டார் செல்வி.

“வா அத்தை…”

“ஷ்… மெள்ளப் பேசு. உங்கம்மா காதுல விழுந்தது… என்னைத் தொலைச்சிடுவா. ஆமா… உம் பொண்டாட்டியோட பெயர் என்ன?”

“ரோஸி.”

“பிடிச்சது தான் பிடிச்சே. நம்ம ஜாதியில இருந்து ஒரு பொண்ணாப் பார்த்து பிடிச்சிருக்கப் படாது?”

“நான் என்ன பண்ணட்டும் அத்தை? எனக்கு அவளைத் தானே பிடிச்சிருந்தது?”

“ஆமா! விளக்கம் மட்டும் நல்லாச் சொல்லு. எப்படித்தான் இந்தக் காலத்துப் பசங்களுக்கு இதெல்லாம் இத்தனை சுலபமாப் போச்சோ? எனக்கு இதையெல்லாம் ஜீரணம் பண்ணுறது கஷ்டமா இருக்கு கரிகாலா.”

“ரோஸி ரொம்ப நல்ல பொண்ணு அத்தை.”

“ஐயையோ! நான் அந்தப் பொண்ணைத் தப்பாப் பேசலை ப்பா. இன்னொரு மதத்துப் பொண்ணு. அவங்க நடைமுறை, பழக்க வழக்கங்கள் எல்லாம் வித்தியாசமா இருக்கும். நாள், பண்டிகை எல்லாம் வேறையா இருக்கும். எப்படி டா?” செல்வியின் கவலையில் கரிகாலனுக்குச் சிரிப்புத் தான் வந்தது. இருந்தாலும் விவாதிக்காமல் விட்டு விட்டான்.

ரோஸியுடனான அவனது இனிமையான இல்லறம் இவர்களுக்கெல்லாம் தெரிய வரும் போது இந்தக் குறைகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் காணாமல்ப் போகும் என்று அவனுக்குப் புரிந்தது.

“அது சரி… உன்னோட மாப்பிள்ளை எப்படி அத்தை?”

“தங்கம் கரிகாலா.” அவசரமாக வந்தது பதில்.

“எம் பொண்ணை எதுக்கு ஆண்டவா இப்படிச் சோதிக்கிறேன்னு நான் அழாத நாளில்லை. இப்படியொரு மனுஷனோட வாழத்தான் அவ அத்தனை நாளும் காத்திருந்திருக்கா போல.”

“ம்… சந்தோஷமா இருக்காங்க இல்லை அத்தை?”

“மாப்பிள்ளை எம் பொண்ணை சந்தோஷமா வெச்சிருக்காங்க கரிகாலா. மத்ததெல்லாம் எனக்குத் தெரியாது. தெரியவும் நான் பிரியப்படலை.”

“ம்…”

“சரி நீ கிளம்பு. குழந்தை பாவம் தூங்கிட்டான். ரவி ன்னு சுமித்ரா கூப்பிட்டா. வெள்ளைக்காரக் குழந்தை மாதிரி தான் இருக்கான். என் கண்ணே பட்டிருக்கும். வீட்டுக்குப் போனதும் சுத்திப் போடு.”

தலையை ஆட்டியபடி கிளம்பினான் கரிகாலன். வீட்டுக்குள் நடந்திருந்த பிரளயங்களையெல்லாம் தாண்டி இப்போது மனது நிறைந்து போயிருந்தது. 

உடனேயே ரோஸியைப் பார்த்து நடந்தது எல்லாவற்றையும் சொல்ல வேண்டும் போல தோன்றவும் சட்டென்று கிளம்பினான். 

விஜயேந்திரனும் வந்திருப்பதால் சுமித்ரா அந்தக் காரில் போய்க் கொள்ளட்டும் என்று நினைத்தவன் சுமித்ரா வந்திருந்த காரில் போய்விட்டான். 

??????????

புரண்டு படுத்தாள் சுமித்ரா. தூக்கம் வராமல் அவளைப் பாடாய்ப் படுத்தியது. விஜயேந்திரன் வேறு இன்னும் வீடு வந்து சேரவில்லை. 

அன்றைய நிகழ்வுகளை நினைத்த போது மனதுக்கு வருத்தமாகத்தான் இருந்தது. கடைசி வரை அத்தை இறங்கி வரவில்லை. அத்தை தான் அடம் பிடித்தார்கள் என்றால் மாமா வும் அதற்கு ஆதரவாக நின்றது இன்னும் வேதனையாக இருந்தது. ஒரு கட்டத்திற்கு மேல் இவர்கள் இருவரும் கிளம்பி விட்டார்கள். வேறு என்ன தான் செய்வது?

மகன் தங்களுக்குத் தெரியாமல் கல்யாணம் பண்ணிக் கொண்டான் என்பதை விட சுமித்ராவிற்குத் துரோகம் பண்ணி விட்டான் என்ற கருத்தே மேலோங்கி நிற்பது சுமித்ராவிற்கு அத்தனை பிடித்தமாக இருக்கவில்லை.

இத்தனை நாளும் அந்த வருத்தம் இருந்ததில் ஒரு நியாயம் இருந்தது. இப்போதும் என்ன? ‘விஜியை விடவா கரிகாலனால் தனக்கொரு நல்ல வாழ்க்கையைத் தந்து விட முடியும்?’

கதவு திறக்கும் ஓசை கேட்கவும் எழுந்து உட்கார்ந்தாள் சுமித்ரா. விஜயேந்திரன் தான் வந்து கொண்டிருந்தான்.

“விஜி…”

“இன்னும் தூங்கலையா சுமி?”

“சாப்பிட்டீங்களா?”

“அதெல்லாம் ஆச்சு. நீ தூங்கு.”

“தூக்கம் வரலை விஜி.”

“என்னாச்சு?” 

“ஒன்னுமில்லை… நீங்க குளிச்சிட்டு வாங்க.” சொன்னவள் அவனுக்கு டவலை எடுத்து நீட்ட, மனைவியைப் பார்த்த படியே பாத்ரூமிற்குள் போனான் விஜயேந்திரன்.

ரூமிற்குள் இருக்கப் பிடிக்காமல் நந்தவனத்திற்கு வந்திருந்தாள் சுமித்ரா. மடல் விரித்திருந்த மல்லிகைப் பந்தல் மனதை மயக்கியது.

நான்கைந்து பூக்களைப் பறித்தவள் தலையில் சொருகிக் கொண்டாள். நிலவும் அவளைப் போல நட்சத்திரப் பூக்கள் புடை சூழ வானில் உலா வந்து கொண்டிருந்தது. 

பாத்ரூமிலிருந்து வெளியே வந்த கணவன் மனைவியைத் தேடினான். கதவு திறந்திருக்கவும் வெளியே வர சுமித்ரா நந்தவனத்தில் நிற்பது தெரிந்தது. ஒரு புன்னகையோடு நெருங்கியவன் தானும் தன் பங்கிற்கு பூக்களைப் பறித்து அவள்  கூந்தலில் வைத்து விட்டான்.

“விஜி…”

“ம்…”

“வீட்டுல நடக்கிற எதுவும் எனக்குப் பிடிக்கலை.”

“எல்லாம் சட்டுன்னு சரியாகும்னு எதிர்பார்க்கக் கூடாது சுமித்ரா.”

“நான் அதைச் சொல்லலை.” கணவன் புறமாகத் திரும்பினாள் பெண். அவன் ஒற்றைப் புருவம் ஏறி இறங்கியது.

“எதுக்கு இன்னும் அத்தான் கூட என்னைச் சேர்த்துப் பேசுறாங்க? எனக்கு அது பிடிக்கலை.”

“எனக்கும் தான் பிடிக்கலை.” நிதானமாக வந்தது அவன் பதில்.

“அடுத்த முறை அங்க போகும் போது நீங்க சொல்லுங்க விஜி. நல்ல காலம் இன்னைக்கு ரோஸி அங்க இல்லை. இருந்திருந்தா இவங்க பேசுறதைக் கேட்டு அந்தப் பொண்ணுக்கு எவ்வளவு வருத்தமா இருந்திருக்கும், இல்லை விஜி?”

“ம்…” தன் தோளில் சாய்ந்த மனைவியின் தலையைத் தடவிக் கொடுத்தான் அரண்மனைக்காரன்.

“விஜி…”

“என்ன டா.”

“அந்தக் குட்டிப் பையன் எவ்வளவு அழகா இருக்கான் இல்லை!” இப்போது விஜயேந்திரனின் முகத்தில் லேசான புன்னகை வந்தது. மனைவி எதற்கு அடிப்போடுகிறாள் என்றும் புரிந்தது. இருந்தாலும் பிடி கொடுக்காமல் பேசினான்.

“குழந்தைங்க ன்னாலே அழகுதானே அம்மு.”

“அவ்வளவு தானா?”

“வேற என்ன சுமி?” வேண்டுமென்றே கேட்டான்.

“என்னோட சுமித்ரா கேட்டு என்னால எதையுமே மறுக்க முடியாதுன்னு அன்னைக்குப் பெரிய டயலாக் எல்லாம் பேசி ஸ்டீஃபன் கிட்ட சொல்லி அனுப்பி இருந்தீங்க. எல்லாம் போச்சா?”

“நீ எங்கிட்ட எதுவுமே கேக்கலையே சுமி.” குறும்பாக வந்த அவன் குரலை அவள் ரசிக்கவில்லை.

“ஏன்? நான் கேக்கலைன்னா உங்களுக்கு எம் மனசுல என்ன இருக்குதுன்னு புரியாதா?” அவள் குரலில் இப்போது கோபம் இருந்தது. மனைவியின் தோள்களைப் பிடித்துத் தனக்கெதிரே நிறுத்தினான் கணவன்.

“கரிகாலனோட கையைப் பிடிச்சிக்கிட்டு குட்டியா ஒரு பொண்ணு நடந்து வந்தப்போ பாசம் தான் வந்திச்சு. அதே பொண்ணை பாவாடை தாவணியில பார்த்தப்போ தான் கரிகாலனோட மாமா பொண்ணு மட்டும் வளரலை, நாமளும் வளருறோம்னு புரிஞ்சுது. அதே பொண்ணு புடவை கட்டிக்கிட்டு கோயில் தூண் பின்னாடி நின்னு எட்டிப் பார்த்தப்போ காதல் ன்னா என்னன்னு முதல் முதலா புரிஞ்சுது. அந்த உணர்வு என்னன்னு முழுசா புரியுறதுக்கு முன்னாடியே அவ எனக்கு இல்லைன்னு ஆகிப்போயிட்டா. ஆனாலும் அவளை நான் காதலிச்சேன். வலிக்க வலிக்க முழுசா அவளை அஞ்சு வருஷம் நான் காதலிச்சேன். கடவுளுக்கு எம்மேல கருணை இருந்தது. முழுசா அவளை எம்முன்னாடி கொண்டு வந்து நிறுத்தினாரு. அடேய் மடையா! கனவுல மட்டும் காதலிச்சது போதும். இந்தா பிடி, நிஜத்துல காதலி ன்னு எங்கிட்ட உன்னை வந்து கொடுத்தாரு. அந்தக் காதலை இன்னும் கொஞ்ச நாள் அனுபவிக்காம உடனேயே மூட்டை கட்டி வெக்கச் சொல்லுறியா அம்மு?” 

“ம்ப்ச்… போங்க விஜி. நீங்க என்னை ரொம்பவே ஏமாத்திட்டீங்க.” சலிப்போடு சொன்னவள் ரூமை நோக்கிப் போய்விட்டாள்.

போகும் தன் பேரழகையே இமைக்காமல் பார்த்திருந்தான் விஜயேந்திரன். முகத்தில் அழகானதொரு சிரிப்புத் தோன்றியது. 

அவள் கோபம், சலிப்பு, ஏமாற்றம் எல்லாம் ஏனோ அவனுக்கு ரசிக்கும் படியாகத்தான் இருந்தது. 

தான் அத்தனை தூரம் உறுதியாக இருக்கும் தீர்மானங்களை எல்லாம் கூட அவள் ஒற்றை முகபாவம் சரியச் செய்து விடுவதை நினைத்த போது அவன் சிரிப்பு இன்னும் பெரிதானது.

‘இவள் இந்த அரண்மனைக்காரனை ஆட்டிப் படைக்கும் ராட்ஷசி’ ஆனால் அது கூட அவனுக்கு இனித்தது.

 

இன்னும் என்னை வெகுதூரம் கூட்டி செல்லடி…

பண்ணிசையில் பாடங்கள் மாற்றிச் சொல்லடி…

கன்னி உந்தன் மன கூண்டில் என்னை தள்ளடி…

கண் அசைத்து அங்கேயே வைத்துக் கொள்ளடி…