Mozhi final

அன்பின் மொ(வி)ழியில் – 26

 

அன்றைய பொழுது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக அனுபவத்தை தர காத்திருந்தது…

 

அந்த சிறுவனை கண்டதும் காரில் இருந்து வேகமாக இறங்கிய 

விஜய்யால், எத்தனையோ பெரிய பெரிய ஆட்களிடம் கூட திமிராக பேச முடிந்த போதும்.. வாழ்வில் முதல் முறை அந்த அழகிய குட்டி மலரிடம் ஒரு வார்த்தை கூட சொல்ல முடியாமல் தடுமாறினான்!

 

எதை கண்டும் சுலபத்தில் பயம் கொள்ளாத  அந்த சின்ன சிட்டோ… அவனிடம், “ஹாய் அங்கிள்… ஐ அம் ஆதி… எங்க பாட்டி இந்த பொங்கலை உங்களுக்கு கொடுத்துட்டு வர சொன்னாங்க” என்றவன், “தனியா ஏன் இங்க இருக்கீங்க? என்று கேட்டு விட்டு பின் எதுவோ புரிந்தது போல.. “ஓ உங்களுக்கும் அவரை பார்த்து பயமா…?” என்று கூறி கருப்பனை காட்டி தன் முல்லை பற்கள் தெரிய சிரித்தவன், “நான் இருக்கேன் வாங்க…” என்று விஜய்யின் கைகளை தன் பிஞ்சுக் கரங்களால் பற்றி முன்னே நடந்தான் பெரிய மனிதன் போல்!

 

விஜய்யின் மனதில் அவ்வளவு நேரம் இருந்த வெறுமை மறந்து போக, ‘இளம் கன்று பயம் அறியாது’ என்பதற்கு ஏற்ப தன்னிடம் வந்து முறையாக அறிமுகம் செய்து கொண்டு பேசும் அந்த சின்ன குட்டியை கரங்களில் ஏந்திக்கொள்ள அவனின் மனம் தவித்தது…

 

 

‘ஓ பேபி’  என்று ஆதியின் உயரத்திற்கு ஏற்ற வகையில் முட்டி போட்டு நின்று, “என்னோட நேம் விஜய் டா செல்லம்… நான் உங்களை தூக்கிக்கலாமா?” என்றான் கேள்வியாக…

 

ஆதியின் விழிகள் யோசனையாக தன் வலது கையில் இருந்த பொங்கலை பார்க்க, அதை ஆதிக்கு ஒரு வாய் ஊட்டி விட்டவன், பின் வேகமாக தானும் உண்டு கரங்களை சுத்தப்படுத்தி, அந்த குட்டி தங்கத்தை கரங்களில் அள்ளிக்கொண்டான்.

 

புதிதாக ஏந்திக் கொண்ட கரத்தில் இருப்பது ஏதோ போல் இருக்க சிறிதாகச் சிணுங்கியவன், பின்பு ஏதும்  சொல்லவில்லை…

 

முதல் முதலாக பொன்னியை பார்த்தபோது உடனே பிடித்ததுபோல் ஏனோ விஜய்யை பார்த்தபோதும் ஆதிக்கு உடனேயே பிடித்து விட்டது.

 

நடப்பதை அனைத்தையும் சற்றே தள்ளி நின்று ஜாஸ் மட்டுமே கவனித்து வந்தார்… மற்றவர்கள் அவரவர் வேலையை செய்து கொண்டிருந்த போது, புதிதாக ஒருவன் தங்கள் வீட்டு குலக்கொழுந்தை தூக்கிக் கொண்டு வருவதை வியப்பாக பார்க்க கயல் ஒரு நொடி அதிர்ந்து வேகமாக ராமின் அருகில் சென்று அவளின் கரங்களைப் பற்றி நின்றுகொண்டாள்.

 

ராமிற்கு நன்றாக விஜய்யை அடையாளம் தெரிந்தது, அவனை எதுவும் சொல்வதற்கு முன்பு நடுங்கிய கரங்களால் தன்னைப் பற்றிக் கொண்டு கண்களில் பயத்தை தாங்கியவாறு, ஆதரவற்ற பிள்ளைபோல் நின்றிருந்த மனைவியை முதலில் கவனிக்க வேண்டிய அவசரத்தை உணர்ந்தவன், “அம்மு எதுக்கு இந்த மாதிரி நடுங்குற? உன்ன சுத்தி எவ்வளவு பேர் இருக்காங்க… எல்லாத்துக்கும் மேல நான் இருக்கேன்… கொஞ்சம் மனசை அமைதியா வைச்சுக்கோ கண்ணம்மா…” என்று தன்னவளை மென்மையாக அணைத்தவன், அருகிலிருந்த கல் மேடையில் அமர வைத்து தண்ணீர் கொடுக்க, கைகளில் நடுக்கம் குறைந்தது பெண்ணவளுக்கு!

 

 

அதற்குள் ராஜ் ஏதோ கோபமாக விஜய்யை நோக்கி கூற வர, ஜாஸ்ஸின் “ராஜ்” என்ற அழுத்தமான ஒற்றை அழைப்பு அவனை அப்படியே தேக்கி நிறுத்தியது.

 

 

ஒரு அரசிக்கே உரிய கம்பீரமான நடையுடன் நடந்து வந்து… தன் பேரனை கையில ஏந்தியவாறு ஆறடி உயரத்தில், மாநிறத்திற்கும் குறைவான கருமை கலந்த நிறத்தில் கூர்மையான விழிகளுடன்  பார்ப்பவர்வர்களை மீண்டும் பார்க்கத் தூண்டும் வசீகரத்துடன் நின்றிருந்த விஜய்யை நோக்கி வந்தவர்,

 

“ஹலோ மிஸ்டர் விஜய்,  நைஸ் டு மீட் யு…  ஐ அம் ஜாஸ் வில்லியம்ஸ்…” என்று அவனை நோக்கி தன் கரங்களை நீட்ட…

அவரின் அந்த ஆளுமையில் சற்றே வியப்பாக பார்த்தவன், சிறு புன்னகையுடன் அவரின் கரத்தைப் பற்றி குலுக்கியவாறு… “உங்களை சந்தித்தது எனக்கு ரொம்ப மகிழ்ச்சி மேம்…” என்றுரைத்தான்…

 

 

இதைப்  பார்த்திருந்த ராஜிற்கு தன் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை. எனினும் அன்னைக்கு எதிராகவோ.. அவரின் வார்த்தைக்கு எதிராகவோ.. அவனால் ஒரு சிறு துரும்பைக் கூட கிள்ளிப் போட முடியாது! எனவே, விஜய்யை கூர்மையாக பார்த்தவாறு தன்னை அடக்கிக் கொண்டு நிற்க,

 

ராமிற்கு தன் அன்னையின் செயல் எதையோ உணர்த்த அவனும் அமைதியையே கடைபிடித்து இருந்தான்.

 

தன் அண்ணனை தூக்கிக் கொண்டு நிற்கும் விஜய்யை பார்த்த ரவி, மெதுவாக அவனை நோக்கி தயங்கி நடந்து வந்து  அவனின் அருகில் நிற்க…

 

விஜய்யின்  கவனம் முழுவதும் இப்பொழுது ஆர்வமாக ரவியின் மீதும் படிந்தது.  குழந்தையை நோக்கி குனிந்தவன் “ உங்க பேரு என்ன  குட்டி…?” என்றான் புன்னகையுடன்!

 

அவன் பதில் செல்வதற்குள் சட்டென விஜயின் கரங்களிலிருந்து துள்ளி இறங்கி… ரவியின் தோளில் கைபோட்டு “நான் ஆதித்யன்,  இவன் ரவிவர்மன்” என்றான் கண்களை சிமிட்டி…

 

ஆதி  அவர்களை பற்றி கூறியது அழகு கவிதையாய் இருந்தது. அதில் மயங்கி அவன்  அப்படியே நின்று இருக்க…

 

அவனின் நிலையை கலைக்கும் விதமாக ஜாஸ், “உங்களுக்கு எங்க வீட்டு சின்ன வாண்டுகள் இரண்டையும் ரொம்ப பிடித்திருக்கு போல இருக்கு?” என்றவர், “இந்த பூஜையில் நீங்களும் கலந்துகிட்டா நல்லா இருக்கும்” என்று அழைப்பு விடுத்து, “வாங்க” என்று அனைவரும் இருக்கும் இடத்திற்கு அருகில் அழைத்து சென்றவர், தன் குடும்ப மற்ற உறுப்பினர்களிடம் இயல்பாக அவனை அறிமுகம் செய்து விட்டு மற்ற வேலைகளை கவனிக்க, ராஜை தவிர மற்றவர்கள்  சாதாரணமாகவே  நடந்து கொண்டனர்.

 

 

கயலின் பயத்தை  அவளவனின் அணைப்பு போக்கி விட, செல்வதிற்கோ ரமியை  சைட் அடிக்கும் மா பேரும் பணி காத்திருக்க… பாவம்  ராஜின் கோபத்தை தீர்க்க வழியில்லாமல்  அவனின் அழகிய பால் வண்ண முகம் சிவக்க விஜயை கண்களால் பொசுக்கியவாறு   தனியாக  அமர்ந்திருந்தவன் முகத்தில் இருந்த ஏதோ ஒன்று… அவனின் அருகில்  வந்த  பொன்னியை சீண்டிப் பார்க்க சொல்ல, தன் கொலுசு அணிந்த பாதங்களை மெல்ல தரையில் ஊன்றி அவன் அருகில் வந்தவள், “அத்தான் யாரது, நம்ம ஊர் கலர்ல பார்க்க அம்சமாய் இருக்கிறது?” என்றவள் குரலில் சட்டென திரும்பி அவளை முறைத்தவன்,

 

“அட ச்சி வாயை மூடு…! அண்டங்காகாவுக்கு இன்னும் கருப்பு கலர் அடிச்ச மாதிரி இருக்கவன் உனக்கு அம்சமா தெரியிறானா?” என்று அவளை பார்த்து சீற…

 

அவனின் வார்த்தைகளை பொன்னியாள் கூட பொறுத்து கொள்ள முடியவில்லை!

 

“அந்நியாயதுக்கு பொய் சொல்ல கூடாது என் எரு… சாரி… அருமை அத்தான்!  மாநிறம் தான் அவரு” என்றவள், “இந்த மனுஷனுக்கு முதல கண்ணை செக் பண்ணனும்” என்று கூறி  வம்பிழுக்க,

 

“வேணாம்டி ஏற்கனவே சரி கடுப்புல இருக்கேன்… என்னைய சீண்டாதே… இல்ல நானும் உங்க  ராம் அத்தான் மாதிரி ரெட்ட பிள்ளை பெத்த பிறகு கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணி விடுவேன்” அருகில் நின்றிருந்த அவளின் கரங்களைப் பற்றி இழுத்து பொன்னியிடம் விளையாட்டாக கூற…

அதன் பின் அவள் பேசுவாள்…?

 

இல்லவே இல்லை! ஒரு நொடி கூட அவள் ராஜின் அருகில் நிற்கவில்லை, சிவந்த முகத்தை மறைக்க முடியாமல் அன்னையின் அருகில் வேகமாக சென்று அமர்ந்தவளின் உள்ளம் சிறிது நேரத்திற்கு முன்பு புன்னை மரத்தின் அடியில் தன்னை தழுவிய போது ஏற்பட்ட  உணர்வுகளை எண்ணி தவித்தது…

 

அவளின் ஓட்டத்தை கண்டு புன்னகைத்தவனின் உள்ளத்தில் இதுவரை பால் போல் பொங்கி கொண்டிருந்த கோபம் மெல்ல அடங்க, தனக்குள் சிரித்துக் கொண்டவன் மனமோ சொன்னது.. ‘காண கிடைக்காத பொக்கிஷ குவியல் அவள்!!!’ என்று…

 

விஜய்யோ நடப்பது எதையும் கவனிக்காமல் ஆதி, ரவி இருவருடனும் குழந்தைகளுக்கே உரிய அழகான உலகத்தில் நுழைந்து விட்டான்.

ராஜிற்கு தான் நடப்பதை நம்ப முடியாத நிலை…  மிகவும் கேவலமான எண்ணம் கொண்டவன்  என்று  நினைத்திருந்த விஜயின் இன்னொரு முகத்தை கண்டு…!

 

 விஜய்யே இது வரை அறியாத அவனின் ஆழ் மனதில் இருந்த ஏக்கத்தை அழகாக உணர்ந்த ஜாஸ்… 

அவன் எண்ணங்களை நல்ல வழியில் எதுவும் அறிவுரை கூறாமறே , நேர்த்தியாக மடை மாற்றி இருந்தார்.

 

அழகு குட்டி செல்லம் 

உன்னை அள்ளித் தூக்கும் போது 

உன் பிஞ்சு விரல்கள் மோதி

நான் நெஞ்சம் உடைந்து போனேன் 

ஆளை கடத்திப் போகும்

உன் கன்னக்குழியின் சிரிப்பில் 

விரும்பி மாட்டிக்கொண்டேன் 

நான் திரும்பி போக மாட்டேன்…

 

ஜாஸ்ஸிற்கு தன் பேரப்பிள்ளைகலே உலகமாகிவிட…

மலைகுடிலின் பொறுப்பையும், வேந்தன் மருத்துவமனை நிர்வாகத்தையும் திறமையான நபர்களை வைத்து இங்கிருந்தே கயலும்,ரம்யாவும் பார்த்து கொள்ள…

 

இப்போது எல்லாம் எந்த வித பகையும் இல்லாமல் அவரவர் நிறுவனத்தை திறமையுடன் ராஜும், விஜய்யும் நிர்வகிக்க…

 

மெல்லிய, ஆனால் ஆழமான நட்பு இருவருக்குள்ளும் முளைவிட ஆரம்பித்திருந்தது.

 

இயற்கையை நேசிப்பவனுக்கு நெய்வாசல் சொர்க்கமாக இருக்க செல்வத்துடன் தனது கிராமத்தின் வளங்களை சிறந்த முறையில் பெருக்கி கொண்டிருந்தான்  ராம் வில்லியம்ஸ்.

 

*********************************

 

 

இரண்டரை வருடங்கள் கழித்து…

 

 

 

காலம் எவ்வளவோ மாற்ற மடைந்த பின்பும் கூட, திருவிழா என்றால் பெண்கள் பெரும்பாலும் உடுத்துவது புடவையும்.. பாவடை தாவணியும்.. தான்!

 

“அப்பப்பா… இந்த மாதிரி ஏதாவது விசேஷம் வந்தா தான், கொஞ்சமாவது கண்ணுக்கு குளிர்ச்சியா நாலு விஷயத்தை பார்க்க முடியுது” என்று பெருமூச்சு விட்டான் ராஜ் வில்லியம்ஸ்.

 

அடர்ந்த கரிய விழிகளுடன், சுருள் முடிகள்  தோளில் அசைந்தாட கோதுமை நிறத்தில், அழகிய சிறு பொம்மை போன்ற ராஜின் ஒரு வயது மகள்  நிவேதிதாவை பொக்கிஷம் போல் கையில் ஏந்தியிருந்த விஜய், ராஜ்  பேசியதை கேட்டு அவனின் முதுகில் ஓங்கி ஓர் அடி அடிக்க…

 

“அய்யோ! அம்மா!” என்று கத்தியவன், “ஏன்டா பக்கி இந்த அடி அடிக்கிறே… ஒரு மனுசன் நிம்மதியா  முக்கியமான வேலையை பார்க்க முடியுதா…?” என ஏகத்துக்கு வருத்தப்பட்டவனைப் பார்த்து, 

 

“இது முக்கியமான வேலையா?  ஆளுக்கு முன்னாடி நீ கிளம்பி வரும்போதே…  நினைச்சேன் இப்படி ஏதாவது இருக்குமுன்னு”  என்று முகத்தை  சுழித்த விஜய்யை பார்த்தவன், அருகிலிருந்த விஷ்ணுவிடம், “இதோ பாரு வினி குட்டி ஆரம்பத்திலிருந்தே நல்லவனா இருக்கிறவன் கூட இருக்கிறது ரொம்ப ஈசி… ஆனா  திடீர்னு கெட்டவனாக இருந்து நல்லவனா மாறுறான் பாரு.. அதாண்டா டுவிஸ்சுக்கெல்லாம் டுவிஸ்ட்டு!!! அதுவும் அவன் கூடவே குப்ப கொட்ற நிலம வரும் பாரு… ஷப்பா.. ரொம்ப குஷ்டம்…” என்று கிண்டல் அடித்தவன்  விஜயிடம், ” அப்போ சாமியாராக போக போறியா நீ…?”  என்றான் கேலியாக…

 

அவனின் வார்த்தைகளை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாத விஜய்யின் கவனமெல்லாம் அவனைப் பார்த்து திக்கித் திணறி  “மாம்மா” என்று அழைக்கும் அந்த குட்டி தேவதையின்  மீதே இருந்தது…

 

சில வருடங்களுக்கு முன் இதே குடும்பத்தை பார்க்கும் போது அவன் விழிகளில் தோன்றிய ஏக்கம் எதுவுமே! இப்போது அதில் இல்லை… காரணம் வேந்தனின் குடும்பம் என்றால் மிகையல்ல!!!                                     

 

*********

 

 

“ப்பா நாளைக்கு வாங்கி தந்தியா… அந்த ப்பூ வக்கா வா இண்க ” (அப்பா நேற்று வாங்கி தந்த பூ வைக்கவா இங்க) என்று  தத்தித்தத்தி பேசியது அந்த சின்ன சிட்டு…

 

மகள் பேசுவதை கேட்க கேட்க தெவிட்டவே இல்லை ராமிற்கு… அவனின் அன்பு மனைவி தந்த இன்ப பரிசு அல்லவா? அவர்களின் செல்ல மகள்! மகன்கள் உருவாகி… பிறந்து வளர்ந்தது முதல் அவன் தவறவிட்ட தேவ நொடிகளை அவனுக்கு மீட்டுத்தர வந்த வரம் சுவேதா. ராமிற்கு மட்டும் ‘சுவி குட்டி’

 

“வச்சுக்கோங்க செல்லகுட்டி… திருவிழாவிற்கு போகனுமில்ல…ஏற்கனவே ரொம்ப நேரமாயிடுச்சு… உங்க அம்மு, அண்ணா எப்பவோ.. ரெடி! நம்ம ரெண்டு பேர் மட்டும் தான் பாக்கி.. வாங்க போகலாம்” என்றவன்…  பட்டு பாவாடை அணிந்து பூனை பாதம் வைத்து நடந்து வந்த  அவனின் குட்டி தேவதையை கைகளில் அள்ளிக்கொண்டு கீழே வந்த ராமின் விழிகளிலோ, பட்டு புடவை அணிந்து.. தன் புதல்வர்கள் நடுவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த கயல்விழியின் மீதான கரை காணா காதல் மண்டிக்  கிடந்தது!

 

தன்னவனின் பார்வை தன்னை தீண்டியதை உணர்த்த கயல், தலையை திருப்பி அவனை காண்கையில், ராமின் விழிகளின் மொழியை துல்லியமாக படித்த பெண்ணவளின் முகமோ நாணத்தில் சிவந்தது.

 

**********

 

 

செல்வம் ரமியின் கரங்களை பற்றி மெதுவாக நடந்து வர, நான்கு அடி நடப்பதற்குள் மூச்சு வாங்கியது அவளுக்கு! “ரமி போதும் டா.. ரொம்ப மூச்சு வாங்குது கோவிலுக்கு நடந்து தான் போக்கணும்முனு இல்ல… வண்டில போகலாம் புள்ள…  நெறை மாசம் வேற.. உனக்கு சாமிக்கு தெரியாதா… ஒன்னும் குத்தம் இல்ல” என்றவன் அவளை மேலும் பேச விடாமல் காரை கொண்டு வந்து நிறுத்தி, அவளை அதில் ஏற்றி விட, ரமியின் வழக்கமான குறும்பு தலை தூக்கியது…

 

“ஒரு சூப்பர் ஐடியா சொல்லவா செல்லம்..?” என செல்வத்தை பார்த்தவள் கண்களில் தோன்றிய குறும்புடன், “நான் உங்க புள்ளைய சுமப்பேன்… நீங்க என்னைய சுமந்துகிட்டு வாங்க” என்றாள் கண்களை சிமிட்டி…

 

அதில் ஒரு நிமிடம் செல்வம் அரண்டே விட்டான்…

 

 

பின்னே…? பிள்ளை உண்டாகிய பிறகு, ஏனோ இருமடங்காய் அவள் எடை போட்டுவிட… அவ்வளவு குண்டாக இருந்தாள் ரம்யா!

 

“அடிப்பாவி!!!” என்று அலறியவன், “நடக்குற கதையை பேசு… இதுவரைக்கும் குட்டி யானையை தூக்கி பழக்கம் இல்லை” என்று அவன் நக்கலாக கூற… நங்கென்று அவனின் தலையில் கொட்டியவள்,

 

“புள்ளை பொறந்த பின்ன என்னைய  தூக்குனா தான், அதுக்கப்புறம் உங்களுக்கு எல்லாமே!” என்று விசமமாக சொல்ல…

 

“உன்னைய சரிகட்டுவது எல்லாம் அத்தானுக்கு கைவந்த கலைடா பட்டு… எங்க தட்டி…” என்று விளக்கம் சொல்லிக்கொண்டு இருந்தவனின் வாயை அவளின் கை கொண்டு அடைத்தவளின் முகமோ அந்தி வானத்திற்கு ஈடாய்!!!

 

***********

 

 

ஜாஸ் தன் குடும்பத்துடன் கோயிலை அடைய,  ராஜ் நல்ல பிள்ளையாக பொன்னியின் அருகில் வந்து விட்டான்… அவனின் சேட்டைகள் எல்லாம் பொன்னியை கண்டால் ஓடி ஒளிந்து கொள்ளும்..  யாருக்கும் அடங்காத காளையவனை தன்  வேல்விழியில் கட்டி வைத்திருந்தாள் அவனின் செல்ல மனையாட்டி!

 

அன்பின் மொழிகளை..

விழிகள் உணர்ந்து விட்டால்..

                                       

வாழ்க்கை என்பது அனைவருக்கும் மாபெரும் வரமாகவே அமைந்துவிடும்!!!

 

                                                                  

 

சில ஆண்டுகளுக்கு பிறகு…

 

“ஓடாத தேவா… ஒழுங்கு மரியாதையா என்னோட பேனாவை கொடுத்துடு… இல்ல என்ன பண்ணுவேன்னு தெரியாது பாத்துக்க” என்று  தன் மாமன் செல்வத்தின் மகளை துரத்திக்கொண்டு ஓடி வந்து கொண்டிருந்தாள் நிவேதிதா…

 

“சிறுத்தை சிக்கும்.. சில்வண்டு சிக்காதுடி!!!” என்று அப்போதும் போகிற போக்கில் பழிப்புக்காட்டி விட்டு சிட்டென தோட்டத்தை நோக்கி ஓடி வந்தவள், எதிரே நடந்து வந்து கொண்டிருந்த ஆதியின்  மீது மோதி விட…

 

“ஏய்! குந்தாணி… மல மாடு மாதிரி வந்து மோதுற… அறிவு இல்ல உனக்கு…?” என்றவன் வார்த்தைகள் வெறுப்புடன் வந்து விழுந்தாலும், அவனின் மனமோ மென்மையான பெண்ணின் ஸ்பரிசத்தை  ரசித்துக் கொண்டிருந்தது.

 

அந்த சிறு பெண்ணோ! அவனின் கடினமான வார்த்தையில் அதிர்ந்து நிற்க… “தள்ளி நில்லுடி…  இந்த உரசு உரசுனா கூட உன் கருப்பு கலரு வெள்ளையா மாறிடாது” என்ற அவனின்  வார்த்தைகள் நக்கலாக வந்து விழ…

 

அவனின் வார்த்தைகளின் உஷ்ணம் தாங்காமல் ஆதியின் கரங்களில் இருந்து  துள்ளி விலகியவள் அவனின் முகத்தை பார்க்காமல் வீட்டை நோக்கி சென்றாள்.

 

செல்லும் அவளை பார்த்திருந்தவன், அவனின் பின்னே வந்து இல்லத்தில் நுழையும் பொழுது கண்ட காட்சி நெருப்பில் சுட்டது போல் இருந்தது ஆதிக்கு…

 

அங்கே, ரவியின் அருகில் அமர்ந்து அவனின் தோள்களில் சாய்ந்த நிலையில் கதை பேசிக்கொண்டிருந்தாள் தேவாஸ்வினி..!

 

கல்லூரியில்  தற்போது தான் அடியெடுத்து வைத்திருக்கும் ஆதி, ரவி இருவரும் விடுமுறைக்கு இல்லம் வந்திருக்க,

 

செல்வத்தின் ஒற்றை பெண் தேவா இப்போது தான்  ஆறாம் வகுப்பில் அடியெடுத்து வைத்திருந்தாள்…

 

 

பார்க்கும் போது எல்லாம் வம்பிழுக்கும் ஆதியை விட  மென்மையாக நடந்து கொள்ளும் ரவி என்றால் அவளுக்கு அத்தனை இஷ்டம்!

 

விறு விறு வென நடந்து வந்த ஆதி தேவாவின் அருகே அமர்ந்து அவளை  தன்னை நோக்கி இழுத்து கொண்டவன் பின் ஏதும் அறியாமல் போல் ரவியிடமும் எதிரே இருந்த தான் சித்துவிடமும் பேசிக்கொண்டிருந்தான்..

 

நடப்பது அத்தனையையும் பார்த்து கொண்டிருந்த, ராஜ் வில்லியம்ஸ் ‘பொன்னி என்னை படுத்திய பாட்டை விட அதிகமாய் இந்த குட்டி தங்கம், ஆதியை ஆட்டி வைக்கும்’ என்று எண்ணி தன்னுள் புன்னகைத்தவன், விதி ஆடும் அடுத்த ஆட்டத்தை காண ஆவலுடன் இருந்தான்…

 

 

 

விழியிலே 

மணி விழியில் 

மௌன மொழி பேசும் அன்னம் 

உந்தன விரல் தொடும்

இடங்களில்

பொன்னும் மின்னும்…

                               *****