Poo 14
Poo 14
- Posted on
- shanthinidoss
- July 30, 2020
- 0 comments
சற்று நேரத்திலெல்லாம் வெளியே போயிருந்த கவிதா வீடு திரும்பி விட இரு பெண்களும் சமையல் வேலையில் மும்முரமாகிவிட்டார்கள்.
மாதவன் சற்றே ஓய்வெடுப்பதாகச் சொல்லிவிட்டு பல்லவியின் ரூமில் படுத்துவிட்டான்.
“முகம் ரோஜாப்பூ மாதிரி இருக்கு. என்ன? செம ரொமான்ஸோ?” கவிதா கண்ணடித்துச் சிரிக்க,
கைவேலையை விட்டுவிட்டு வந்த பல்லவி கவிதாவை இறுக்கி அணைத்துக் கொண்டாள். அந்த அணைப்பே அவள் சந்தோஷத்தின் அளவைச் சொன்னது.
“ஐயையோ பல்லவி! நான் கவிதா. உங்கன்ட மனுசன் உள்ள தூங்குறார். என்னை அவரென்டு நினைச்சுட்டியளோ?” கேலி பேசிச் சிரித்தது பெண்.
“கண்டி டவுனுக்குள்ள சூப்பரா ஒரு இடம் இருக்கு. ஒன்லி ஃபோர் லவ்வர்ஸ். பின்னேரம் ரெண்டு பேரும் அங்க போயிட்டு வாங்கோ.” திட்டம் போட்டபடி சமையலை முடித்தார்கள் இருவரும்.
சாவகாசமாக உண்டு முடித்துவிட்டு பல்லவியும் மாதவனும் ஒரு மூன்று மணி போல வெளியே கிளம்பினார்கள். கண்டி மாநகரத்தின் சீதோஷ்ணம் பொழுது சாயும் வரைக் காத்திருக்க வேண்டிய தேவையை அவர்களுக்கு வைத்திருக்கவில்லை.
கவிதா சொன்னதுபோல இடத்தைக் கண்டுபிடித்துக் கொண்டு வந்திருந்தார்கள். பிரதான சாலையிலிருந்து பிரிந்து போன ஒரு கிளைச் சாலையில் ஏறிய போது சரியாகத்தான்
வந்திருக்கிறோமா என்று இருவருக்குமே திகைப்பாக இருந்தது. ஏனென்றால் பாதை அவ்வளவு குறுகியதாக இருந்தது. ஆனால் உள்ளே செல்லச் செல்ல விரிந்த அந்த உலகத்தைப் பார்த்து பல்லவி மலைத்துப் போனாள்.
சல்லடை போட்டாலும் தங்களைக் கண்டுபிடிக்க முடியாது என்ற தைரியத்தில் காதலர்கள் உலகம் மறந்து உட்கார்ந்திருந்தார்கள். மாதவன் பல்லவியைப் பார்த்து லேசாகக் கண்களைச் சிமிட்ட அவன் இடது கையைப் பற்றிக் கொண்டவள் அவன் தோளோடு சாய்ந்து கொண்டாள்.
பொடி நடையாக இருவரும் நடந்தார்கள். இந்த நிமிடமே பூமி தன் இயக்கத்தை நிறுத்திவிடக் கூடாதா என்று எண்ணும் வண்ணம் இருவரின் மனதுக்குள்ளும் சுகம் விரவிக் கிடந்தது. மௌனத்தைப் பெண்ணே கலைத்தது.
“நான் இங்கதான் இருக்கேன்னு எப்படித் தெரியும்?” பல்லவி கேட்டபிறகும் கணவனிடமிருந்து பதில் வராமல் போகவே அண்ணார்ந்து பார்த்தாள் பெண். அவளைத்தான் பார்த்தபடி இருந்தான் கணவன்.
பல்லவி வீட்டில் கிருஷ்ணனின் படம் ஒன்று ஹாலில் மாட்டப்பட்டிருந்தது. அதில் கிருஷ்ணனின் குழலை ராதை ஊத, ஒரு மோகனப் புன்னகையோடு ராதையைப் பார்த்திருப்பான் அந்த ஷ்ருங்காரக் கண்ணன்.
அந்த மாயக் கண்ணனின் மயக்கும் புன்னகை எப்போது வந்து இவனிடம் ஒட்டிக் கொண்டது?! மயங்கிய விழிகளால் தன்னைப் பார்த்த மனைவியைப் பக்கத்தில் இருந்த மரத்தின் மறைவில் இழுத்தான் மாதவன்.
“ஐயையோ! என்ன இது?” பதறிக்கொண்டு பல்லவி விலகத் தலையில் அடித்துக் கொண்டான் மாதவன்.
“நீயெல்லாம் டவுனுல படிச்சு அங்கயே வேலைப் பார்த்தேன்னு வெளியே சொல்லிடாதே. வெக்கக் கேடு.”
“டவுனுல படிச்சு வேலைப் பார்த்தா… ஆளில்லாத இடத்துல உங்களைக் கட்டிப் புடிக்கணும்னு சட்டமா?”
“இல்லையா?”
“இல்லை.” முறுக்கிக் கொண்ட மனைவியோடு அந்த மரத்தின் அடியிலேயே உட்கார்ந்து கொண்டான் மாதவன்.
“இவ்வளவு நாள் கழிச்சு பொண்டாட்டியைப் பார்த்திருக்கேன். நிம்மதியாக் கட்டிப்புடிக்கக் கூட முடியலை.”
“அப்பிடியா? அப்பிடி எத்தனை மாசம் கழிச்சு உங்கப் பொண்டாட்டியைப் பார்த்திருக்கீங்களாம்?” கேலியாகக் கேட்டாள் பல்லவி.
அப்போதுதான் அதை மாதவனும் உணர்ந்தான்.
முழுதாகப் பார்த்தால் ஒரு வாரம் கூட ஆகவில்லையே?! அதற்குள் ஏதோ ஒரு ஜென்மமே இவளைப் பிரிந்தது போல ஏன் அப்படி வலித்தது?!
“பல்லவி…” நெகிழ்ந்திருந்த அவன் குரலில் பல்லவியும் இளநகைப் புரிந்தாள். இப்போது இதமாக அவன் மார்பில் சாய்ந்தாள் பெண்.
“ஏதோ வருஷக் கணக்குல பிரிஞ்சிருந்த மாதிரி ஒரு ஃபீலிங் இல்லைங்க?”
“ம்…” சற்று நேரம் இருவரும் பேசவில்லை. ஒருவர் ஸ்பரிசம் மற்றவருக்கு இதமாக இருக்க அந்த அமைதியை ரசித்திருந்தார்கள்.
“நான் கேட்ட கேள்விக்கு இன்னும் நீங்க பதில் சொல்லலை.”
“நீ என்ன கேட்ட?”
“நான் இங்க இருக்கிறது எப்பிடித் தெரியும்னு கேட்டேன்.”
“உன்னை இங்க யாரு அனுப்பினாங்களோ அவங்க சொன்னாங்க.”
“ஓ… எப்பிடி… அவங்களை நீங்க…”
“கண்டுபிடிச்சேன்.”
“அதான் எப்பிடி?”
“அது உனக்குத் தேவையில்லை பல்லவி.”
“ஏன்?”
“விடுன்னு சொல்றேன் இல்லை.” அவன் கொஞ்சம் அழுத்திச் சொல்லவும் பல்லவி அமைதியாகிவிட்டாள். அந்த நேரத்தில் இருவருமே கௌதம் பெயரை உச்சரிக்க விரும்பவில்லை.
“எப்போக் கிளம்பலாம் பல்லவி?”
“………………” இதுவரை கலகலவென்று பேசிக்கொண்டிருந்த பல்லவி சட்டென்று மௌனியாகிவிட்டாள். மாதவன் தனது மார்பில் சாய்ந்திருந்த மனைவியைக் குனிந்து பார்த்தான்.
“ஏய்! என்ன சத்தத்தையே காணோம்?”
“………………..”
“பல்லவி!”
“நான் உங்கக்கூட வரலை. இங்கயே இருந்திடறேன்.”
“என்ன?! என்னப் பேசுற நீ?” சீறினான் மாதவன்.
“நான் உண்மையைத்தான் சொல்றேன். நான் உங்கக்கூட வரலை. இங்கேயே இருந்துடறேன்.”
“நான் இல்லாம நீ இங்க இருந்து என்னப் பண்ணப்போறே?”
“என்னமோ பண்ணுறேன். விடுங்கன்னா விடுங்களேன்.” அவள் எரிச்சலாகச் சொல்லவும் மாதவன் பெருமூச்சு விட்டான் அவன் முகத்திலும் எரிச்சல் பாவம் தோன்றியது.
“பல்லவி! நீ என்னப் பேசுறேன்னு உனக்குப் புரியுதா?”
“நல்லாப் புரியுது.”
“ஓ… ஏன் இந்த முடிவு?”
“இதுதான் எல்லாருக்கும் நல்லது.”
“அந்த எல்லார்ல நானும் அடக்கமா?” சந்தேகமாகக் கேட்டவனைத் தவிப்போடு பார்த்தாள் பெண்.
‘என் எல்லாமும் நீயாக இருக்க என் எல்லோரிலும் நீ அடங்க மாட்டாயா?’ என்று அவனைக் கேள்வி கேட்டது அவள் மலர் விழிகள்.
“இல்லை… எல்லாருக்கும் நல்லதுன்னு சொன்னியா, இதுல எனக்கு என்ன நல்லது இருக்குன்னு எனக்குப் புரியலை. அதான் கேட்டேன்.” இருவரும் சற்று நேரம் பேசவில்லை.
சுற்றியிருந்த அனைவரும் உலகம் மறந்திருக்க இவர்கள் மட்டும் தர்க்கத்தில் ஈடுபட்டிருந்தார்கள். மறந்தும் இருவரும் கௌதம் பெயரை உச்சரிக்கவில்லை.
“யாருக்காவது பயப்பிடுறியா பல்லவி?”
“சில நேரங்கள்ல சில இடங்கள்ல பயப்பிடுறதுதான் புத்திசாலித்தனம்.”
“ஆக… நீ என்னை நம்பல்லை?”
“நான் எந்த விதண்டாவாதத்துக்கும் வரலை. எனக்கு நீங்க சந்தோஷமா இருக்கணும், அவ்வளவுதான்.”
“அது நீ இல்லாம சாத்தியமில்லை.”
“ப்ளீஸ்… புரிஞ்சுக்கோங்க.”
“எதைப் புரிஞ்சுக்கச் சொல்றே? நீயில்லாத ஒரு வாழ்க்கையை வாழுறதைப் பத்தியா?”
“தினமும் நீங்க வெளியே போகும்போது என்னால வயித்துல நெருப்பைக் கட்டிக்கிட்டு இருக்க முடியாது. உங்களுக்குச் சின்னதா ஏதாவது ஒன்னு இயற்கையா நடந்தாக் கூட அது என்னாலதானோன்னு நான் பரிதவிச்சே செத்துப் போயிடுவேன்.”
“இது முட்டாள்தனம் பல்லவி.”
“எப்பிடி வேணும்னாலும் வெச்சுக்கோங்க. நீங்க நல்லா இருக்கணும். எனக்கு அது மட்டுந்தான் முக்கியம். வேறெதைப் பத்தியும் நான் கவலைப்படலை.”
மாதவன் அதற்கு மேல் விவாதிகக்கவில்லை. அத்தோடு விட்டுவிட்டான். புன்னகையோடு கிளம்பிப் போனவர்கள் அதைத் தொலைத்துவிட்டு வீடு வந்து சேர்ந்த போது கவிதாதான் தலையில் அடித்துக் கொண்டாள்.
*
*****************************
தன்வியின் வீடு அன்று பார்த்துப் பார்த்து அலங்கரிக்கப்பட்டிருந்தது. கண்ணை உறுத்தாத வகையில் அதேநேரம் வரும் விருந்தினரைக் கவரும் வகையில் அனைத்தும் நேர்த்தியாக இருந்தது.
கௌதம் வீட்டினர் இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்து விடுவார்கள். முக்கியமான குடும்ப உறுப்பினர்களை மாத்திரம் அழைத்து முறையாக மோதிரம் மாற்றிக் கொள்வதாக ஏற்பாடு ஆகியிருந்தது.
தன்வி கொஞ்சம் நிதானமாக எல்லாவற்றையும் செய்ய நினைத்திருந்த போதும் அவள் தந்தை அதற்கு அனுமதிக்கவில்லை. ஏற்கனவே நெடுநாட்களாக கௌதமின் சம்மதத்திற்காகக் காத்திருந்த மனிதர் அவர். இப்போது அது நிறைவேறி இருக்கவே மளமளவென்று காய் நகர்த்த ஆரம்பித்துவிட்டார்.
மறுப்பதற்கு கௌதமிற்கோ அவன் குடும்பத்திற்கோ எந்தக் காரணமும் இல்லாததால் அத்தனையையும் பெண் வீட்டார் விருப்பப்படியே விட்டு விட்டார்கள்.
தன்வி லேசான பழுப்பு நிறத்தில் தங்கநிற பார்டர் வைத்த ஷிஃபான் சேலைக் கட்டி இருந்தாள். வெள்ளை முத்துக்களும், கற்களும் சேலை முழுதும் பதிக்கப்பட்டிருந்தன.
தலையைக் கொண்டைப் போட்டு மல்லிகைச் சரத்தைச் சுற்றி இருந்தாள். நெற்றியில் ஒற்றை நெற்றிச் சுட்டி. மிக மெல்லியதாகத் தன் இருப்பைக் காட்டியது. கை நிறைய வளையல்கள் குலுங்கியது.
கௌதம் பெண்ணைப் பார்த்தபோது மலைத்து விட்டான். இப்படியொரு திடீர் மாற்றத்தை அவன் தன்வியிடம் எதிர்பார்த்திருக்கவில்லை.
அவளின் நடவடிக்கைகள் எல்லாம் இவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
பெரியவர்கள் பேச்சுவார்த்தையை முடித்துவிட கௌதம் தன்வியின் கையில் மோதிரத்தை அணிவித்து விட்டான். இன்னும் ஒரு மாதத்தில் கல்யாணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று முடிவாகி இருந்தது.
“கௌதம்.”
“ம்…”
“மேல என் ரூமுக்குப் பக்கத்துல இருக்கிற ரூமை உங்களுக்குன்னு ரெடி பண்ணி இருக்கு. எல்லாம் ஓகேயா இருக்கா, இல்லைன்னா இன்னும் ஏதாவது சேன்ஞ் பண்ணணுமான்னு அப்பா கேக்கச் சொன்னாங்க.”
“ஓ…” பெண் அவனை அழைக்கவும் எழுந்து அவள் கூட மாடிக்கு வந்தான் கௌதம். தன்வியின் வீட்டிற்கு முன்பு வந்திருந்தாலும் மாடி வரை அவன் வந்ததில்லை.
“இந்த ரூம்தான்.” அவள் சொல்லியபடி கதவைத் திறந்தாள். கௌதமின் முகத்தில் திருப்தி தெரிந்தது. அவன் ரசனைக்கேற்ப பொருட்கள் எல்லாம் அமைந்திருந்தது.
“குட், ரொம்ப நல்லா இருக்கு தனு. எதுக்கு எனக்குன்னு தனி ரூமெல்லாம்?”
“எல்லாம் அப்பாவோட ஏற்பாடு கௌதம். எங்கிட்ட ஒரு வார்த்தைக் கூட சொல்லலை.” அவள் குறைப்பட்டுக் கொள்ள லேசாகச் சிர்த்தபடி அவள் கன்னத்தில் தட்டியவன்,
“செமையா இருக்க தனு.” என்றான் கிறங்கியபடி.
“தான்க்யூ.” அவள் அழகாக வெட்கப்பட அதற்கு மேல் அங்கே நிற்பது ஆபத்து என்று சட்டென்று ரூமை விட்டு வெளியே வந்தான் கௌதம்.
அவன் கீழே போக எத்தனிக்க,
“கௌதம்.” என்று மீண்டும் அழைத்தாள் பெண். கௌதம் திரும்பிப் பார்த்தான்.
“அது… என்னோட ரூம்.” அவர்கள் பார்த்த அறைக்கு அடுத்த அறையை அவள் சுட்டிக்காட்ட, போன கௌதம் திரும்பி வந்தான்.
“உள்ள வாங்க.” அழைத்தவள் கதவைத் திறந்தாள். கௌதம் நின்றிருந்த இடத்திற்கு நேரெதிரே இருந்த சுவரில் ஆளுயர சைஸில் சிரித்தபடி நின்றிருந்தான்… கௌதம், புகைப்படமாக.
கௌதம் திகைத்துப் போனான்.
தன்விக்குத் தன்னைப் பிடிக்கும் என்று அவனுக்குத் தெரியும். ஆனால் இந்த அளவுக்குப் பிடிக்கும் என்று தெரியாது. பெண்ணே இப்போது பேசியது.
“இத்தனை நாளும் எனக்குச் சொந்தமில்லாத பொருள் எங்கிறதால சின்னதா வெச்சிருந்தேன் கௌதம்.” சிரித்தபடி சொன்னவள் அங்கிருந்த ட்ரெஸ்ஸிங் டேபிளில் சிறியதாக இருந்த அதே புகைப்படத்தைக் காட்டினாள்.
“நேத்துத்தான் என்லார்ஜ் பண்ணி இங்க மாட்டினேன்.” சொன்னவள் அங்கிருந்த கப்போர்டில் இருந்து எதையோ எடுத்தாள். கௌதம் அவள் செய்கைகள் அத்தனையையும் ஒரு அமைதியோடும் ஆச்சரியத்தோடும் பார்த்தபடி இருந்தான்.
“அது என்ன பொல்லாத சம்பிரதாயம் கௌதம். அம்மாவோட ஒரு சண்டையே போட்டேன். எங்க வழக்கப்படி பையன்தான் பொண்ணுக்கு மோதிரம் போடணுமாம். ஏன்? பொண்ணு திருப்பி பையனுக்குப் போட்டா ஆகாதா? கூடாதாம், இதையெல்லாம் யாரு கேக்கப் போறா? நான் வீட்டுல சொல்லாம உங்களுக்கு ரிங் வாங்கினேன்.” சொன்னவள் அவன் கைப் பிடித்து அந்த ஒற்றை வளையத்தை அவன் விரலில் மாட்டினாள்.
“பிடிச்சிருக்கா கௌதம்?”
“ம்…”
“ஏன் ஒன்னுமே பேச மாட்டேங்கிறீங்க?” கேட்டவளின் முகத்தையே ஆழமாகப் பார்த்து நின்றான் கௌதம். பேச வாய் வரவே இல்லை. இந்தப் பெண்ணிற்குத் தான் தகுதியானவன்தானா என்று மனம் கிடந்து அடித்துக் கொண்டது. இந்தக் கள்ளம் கபடமில்லாத அன்பிற்குத் தான் என்ன கைம்மாறு செய்யப் போகிறோம்!
“கௌதம்!” தன்னை நெருங்கி வந்தவளை லேசாக அணைத்துக் கொண்டான் கௌதம். இருவருமே அன்றைய மகிழ்ச்சியான நிகழ்வினால் நெகிழ்ந்து போயிருந்தார்கள்.
தன் அணைப்பில் நின்றபடி தன் முகத்தை அண்ணார்ந்து பார்த்த அவள் விழிகளில் அவனுக்கான தேடல் நிறையவே இருந்தது. கௌதமிற்குப் புரியாமல் இல்லை. ஆனாலும் இப்போது ஏதோவொரு பயம் அவனைத் தடுத்தது.
எந்தவொரு சூழ்நிலையிலும் தன்மீது இவ்வளவு அன்பை வைத்திருக்கும் இந்தப் பெண்ணைத் தான் கேவலப் படுத்திவிடக் கூடாது என்பதில் இப்போது அவன் உறுதியாக இருந்தான்.
“கௌதம்!” மீண்டும் அவள் குரல் அவனை அழைத்தது. அந்தக் கன்னங்களை மெதுவாக வருடியவன் அவள் இதழில் மிக மெதுவாக முத்தமிட்டான்.
“கீழ எல்லாரும் நமக்காக வெயிட பண்ணுவாங்க, போகலாமா?”
“ம்…” அதிருப்தியாக அவள் பதில் சொல்ல அவன் முகத்தில் இப்போது புன்னகை.
“தனு…”
“ம்…”
“இன்னும் ஒரேயொரு மாசம்தான்.” இலகுவாகச் சொன்னான் கௌதம்.
“இன்னும் ஒரு மாசம் இருக்கு கௌதம்.” என்றது பெண் வேறு தினுசாக. கௌதம் இப்போது வாய்விட்டுச் சிரித்தான். சிரித்து மழுப்பினாலும் அந்த இடத்தை விட்டு நகர அவன் தாமதிக்கவில்லை.
****************************
ரூம் முழுவதும் அமைதி நிலைத்துக் கிடந்தது. கணவனின் அணைப்பில் கவலைகளை மறந்து அமர்ந்திருந்தாள் பல்லவி.
மாதவனின் கை அவள் கூந்தலை வருடியபடி இருந்தது.
என்ன பேசுவதென்று இருவருக்குமே தெரியவில்லை. இப்போதெல்லாம் எது பேசினாலும் அது சுமுகமாகவும் முடிவடைவதில்லை. இரண்டு பேரும் இரு துருவங்களாக நின்றிருந்தால் எப்படித்தான் பேச்சுவார்த்தை சுமுகமாக இருக்கும்!
“பல்லவி…”
“ம்…”
“ஒரு வாரம் இங்க தங்கிட்டு நாம ரெண்டு பேரும் கிளம்பலாம்.” மீண்டும் ஆரம்பித்தான் மாதவன்.
“அது சரியா வராதுங்க.”
“பல்லவி! நான் சொல்றதை நீ கேளு.”
“இந்த விஷயத்துல யாரு என்ன சொன்னாலும் நான் கேக்கப் போறதில்லை. இதைப்பத்திப் பேசுறதால நமக்குள்ள வீணான மனஸ்தாபம்தான் வரும். ப்ளீஸ்… விட்டுருங்க.”
“பல்லவி நீ இல்லாம என்னால… எனக்கு எதுவுமே நீ இல்லாம ஓடாதுடி.” கலங்கிய குரலில் மாதவன் சொல்ல பல்லவி அவனை அண்ணார்ந்து பார்த்தாள்.
“இத்தனைக் காலமும் நான் இல்லாமத்தானே நீங்க வாழ்ந்தீங்க. அப்பிடி நினைச்சுக்கோங்க. பல்லவிங்கிற ஒரு பொண்ணு உங்க வாழ்க்கையிலேயே வரலைன்னு நினையுங்க அத்தான்.” அவள் அப்படிச் சொல்லும் போது அவள் குரல் கரகரத்தது. அவள் அத்தான் என்று அழைக்கும் போதெல்லாம் கேலி பேசிச் சிரிக்கும் மாதவன் அன்று வாளாவிருந்தான்.
“யாரைப் பார்த்து நீ பயப்பிடுறே பல்லவி?”
“எனக்கு என்னைச் சுத்தி இருக்கிற எல்லாரையும் பார்க்கும் போதும் பயமாத்தான் இருக்கு.”
“புரியலை.”
“எனக்குன்னு ஒரு கஷ்டம் வந்தப்போ என்னை நிக்க வெச்சு வேடிக்கைப் பார்த்த உறவுகளையெல்லாம் பார்க்கும்போது எனக்கு பயமா இருக்குதுங்க. நான் யாரையும் குத்தம் சொல்லலை.
அவங்கவங்க இடத்துல இருந்து பார்க்கும்போது ஒருவேளை அது நியாயமாக்கூட இருக்கலாம். ஆனா என்னோட நிலைமையை யோசிச்சுப் பாருங்க.”
“………………..”
“விதி என்னை ஓட ஓட விரட்டுது. எனக்குத் துணை நிக்க வேண்டியவங்களே தள்ளி நிக்குறாங்க. சாஞ்சு ஓன்னு அழக்கூட எனக்கொரு தோளில்லை அப்போ…” பல்லவி பேசிக்கொண்டு போக மாதவனின் முஷ்டி இறுகியது.
“மூழ்கப் போறேன்னுதான் நினைச்சேன். எல்லாம் முடிஞ்சு போச்சுதுன்னு புரிஞ்சுது. ஆனா…” அதற்கு மேல் பேச முடியாமல் அவள் நா தழுதழுத்தது.
“சரியா தப்பா, அவங்க செய்யப் போற உதவியை நான் ஏத்துக்கலாமா, கூடாதா? எதுவுமே புரியலை. யோசிக்கவும் நேரம் இல்லை. கிடைச்ச கட்டையைப் பிடிச்சிக்கிட்டு கரை சேந்துட்டேன். நீங்க நல்லா இருக்கணும். அது மட்டுந்தான் அப்போ முக்கியமாப் பட்டுச்சு. இப்பவும் அதுதான் முக்கியமாப் படுது.”
“நான் நல்லாத்தான் இருக்கேன் பல்லவி.”
“இருக்கீங்க… இருக்கணும். ஆனா…” அதற்கு மேல் பல்லவி பேசத் தயங்கினாள். எது எப்படி இருந்த போதிலும் தன்னைச் சுற்றி இருந்தவர்கள் நடந்து கொண்ட முறையை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவே இல்லை.
தன் வீட்டு சொந்தங்களைக் கூட அவள் பெரிது படுத்தவில்லை. பவானியால் எப்படி அப்படி நடந்து கொள்ள முடிந்தது? திருமணமான நாள் முதல் தன்னை ஒரு மகள் போல நடத்திய ஒருவரால் எப்படித் திடீரென்று இப்படி மாற முடியும்?
யாரையும் குற்றம் குறைக் கூற அவள் தயாராயில்லை. ஒரு தாயாக ஒருவேளை அவர் நடந்து கொண்டது சரியாகக் கூட இருக்கலாம். ஆனால் அதே மனிதர்களோடு நடந்தது எல்லாவற்றையும் மறந்துவிட்டு எப்படி ஒன்றுவது? அது உடைந்த கண்ணாடியில் முகம் பார்ப்பது போலல்லவா? யோசனையில் ஆழ்ந்திருந்த அவள் முகத்தைத் தடவினான் மாதவன்.
“இப்போ முடிவா நீ என்னதான் சொல்ல வர்றே பல்லவி?”
“நான் உங்கக் கூட வரலைங்க.”
“நீ வரலைன்னா நான் ஊருக்குப் போக மாட்டேன் பல்லவி.”
“பிடிவாதம் பிடிக்காதீங்க.”
“நான் பிடிவாதம் பிடிக்கலை. நீதான் தேவையில்லாமக் கவலைப் படுறே.”
“நீங்க முதல்ல கிளம்புங்க. நான் அதுக்கப்புறமா வர்றதைப் பத்தி யோசிக்கிறேன்.”
“அது நடக்காது. நீ வரலைன்னா நான் இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன்.” பல்லவி அசையாமல் அப்படியே இருந்தாள். அவள் மௌனமே அவள் பிடிவாதத்தை அழகாக எடுத்துச் சொன்னது.
“வீட்டுல கூடச் சொல்லிட்டுத்தான் வந்திருக்கேன். நீ இல்லாம அந்த வீட்டுக்குள்ள நான் வரமாட்டேன்னு.” இப்போது பல்லவி லேசாக அதிர்ந்தாள்.
“உம் மனசுல என்ன ஓடுதுன்னு எனக்குச் சரியாப் பிடிபடலை பல்லவி. என்னை நினைச்சுப் பயப்படுறேன்னா அது அநாவசியம். எம்மேல கை வைச்சா என்ன நடக்கும்னு காட்டிட்டுத்தான் வந்திருக்கேன். உன்னோட வருத்தம் வேற யார்மேலேயாவது இருந்தா அதை நீ தாராளமா எங்கிட்டச் சொல்லலாம். அதுக்கு நாம தீர்வு காணலாம். அதை விட்டுட்டு நான் வரமாட்டேன்னு சொல்றது நல்லாயில்லை.” இதற்கு என்னவென்று பதில் சொல்வது?
மனதில் கனத்துக் கிடந்த கவலையோடு இருவரும் அமைதியாக இருந்தார்கள். ஆனால் காலம் அவர்களுக்காகக் காத்திருக்கவில்லை. அது நகர்ந்து கொண்டே இருந்தது.